avalukkenna11

அத்தியாயம்
11

கடந்து போன கசப்பான நாட்களை எல்லாம் மறந்து, புதுப் பொலிவோடு ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு வரவேற்ற கோவை புதியதாகத் தெரிந்தது, அனன்யாவிற்கு.

கோவையின் புதிய பரிமாணம், சென்னையை நினைவுறுத்தியது.

வந்தவளுக்கு அசதியோடு, அரவணைப்பும் சேர்ந்திருக்க ஓய்வுடன் ஓய்ந்திருந்தாள்.

மாப்பிள்ளை வீட்டாரை எந்த மறுப்பும் இன்றி, பெற்றோர் ஏற்றுக் கொண்டது, எதையோ சாதித்ததுபோல சந்தோசமாக இருந்தது.

எல்லாம் தனக்காகவா? எப்படி? எதனால்? ஏன் எந்த மறுப்பும் இன்றி ஏற்றுக் கொண்டார்கள்? என்று மனதின் ஓரத்தில் ஓடிய விடயம், யோசிக்கச் சொன்னது.

பெற்றோர் இருவரின் தற்போதைய வதனத்தின் சந்தோசச் சாயல் செயற்கை வர்ணம் பூசப்பட்டதல்ல…!

ஆழ்மனதின் அமைதி, ஆனந்தம் அவர்களின் சாயலுக்கான மூலதனம் என்பதை அனன்யாவின் அறிவு சொன்னது.

பம்பரமாகச் சுழன்றாலும், களைப்பினையும் மீறி மிளிரும் தாயின் வதனத்தை, நவீனோடு நிச்சயிக்கப்பட்ட திருமண விழாவிற்கான நாட்களில் எங்கு ஒளித்து வைத்திருந்தார்?

தந்தையின் தற்போதைய மிடுக்கு நடை அப்போது சற்றுக் குறைந்திருந்தாற்போல தற்போது தோன்றுகிறதே! ஏன்?

முன்பை விட அதிகமாக அவர்களைக் கவனிக்கிறேனா? இல்லை என் மனம் சொல்வதுதான் உண்மையா? என தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.

மனம் தீர்க்கதரிசியைப் போலச் சொன்னதை நம்பினாள் அனன்யா.

இருவரும் தற்போதுதான் அதிக மகிழ்வோடு வலம் வருகிறார்கள் என்று… அப்போது இருந்ததை விட, தற்போது இருவரின் ஆர்வம் அவளை யோசிக்கத் தூண்டியிருந்தது.

வந்தது முதலே தோன்றிய விடயம், அடுத்த தினத்தில் இன்னம் வலுத்திருந்தது.

சந்தேகம் இல்லை. ஆனால் இருவரும் புதியதாகத் தெரிந்தார்கள்.

புன்னைகையோடு, புதுப்பொலிவும் சேர்ந்த வதனத்தோடு வலம் வரும் பெற்றோர்களின் இந்த சந்தோசம், நீண்ட நாட்களுக்குப்பின் கோவை வந்த மகளின் வரவாலா?

திருமணத்தை மறுத்து, தங்களோடு இல்லாது, தனித்துச் சென்றிருந்தவள், பழையதை மறந்து தங்களுடன் ஒரே கூட்டிற்கு மீண்டும் வந்ததாலா?
மகளின் வாழ்வு மலருமோ என ஏங்கியிருந்த வேளையில், ஏக இறைவனின் அருளால் திருமணம் கைகூடியதாலா?

சரியாக யூகிக்க இயலாமல் அனன்யா சற்றே குழப்பத்திலும், மணப்பெண்ணுக்கான எந்தப் பரபரப்பும் இல்லாமல் இயல்பாகவே இருந்தாள்.

ஆனால், நவீனுடனான நிச்சயத்தில், அவர்களுக்கு பிடித்திருந்த எதையும் நான் மறுத்திருந்தேனா? அப்படி எதுவும் நினைவில் இல்லையே…!

அதற்குமேலும் போனதைப் பற்றி அதிகமாக யோசிக்க மனம் விழையவில்லை. தனது ஆசைக்காக நவீனை நிச்சயித்திருக்க வாய்ப்பும் இல்லையே?

பெற்றோர் பார்த்து வைத்த வரன்தான் நவீன். அப்படி இருக்க… சென்ற நாட்களில் காணாமல் இருந்த ஒன்று இந்த திருமண நிகழ்வால் இன்று சாத்தியமாகி இருப்பது மகிழ்ச்சியே!

ஆனாலும்… ஏதோ ஒரு காரணம் தொக்கி நின்று, அனன்யாவின் மனதை விக்கச் செய்திருந்தது.

கண்கள் அவர்களின் சந்தோசத்தைக் கண்டு சந்தோஷித்து இருந்தது. அறிவு, ஆய்வுக்கு தயாராக இருந்தது.

ஒரு வாரம் மட்டுமே மகளின் திருமணத்திற்கு இருக்கும் நிலையில், பெற்றோர் இருவரும் தங்களை மறந்து, பணிகளில் இலயித்து இருந்தனர்.

காலையில் எழுந்தவள், நேராக அடுக்களைக்குள் தஞ்சம் புகுந்திருந்தாள், அனன்யா.

“அம்மா, எனக்கு இன்னும் நல்லா சமைக்க சொல்லிக் குடுங்கம்மா!”, சிணுங்கினாள் அனன்யா.

“ஒரு வாரத்துல கல்யாணம். இனிமேல் வந்து நல்லா சமைக்க கத்துக்கப் போறீயா!”, என்று சிரித்தபடியே அங்கிருந்தது அகன்றார் தேவகி.

“என்னம்மா… ஒரு வாரமெல்லாம் எனக்கு அதிகம். எங்க லேப்லலல்லாம் ரெசிப்பி மட்டும் கேட்டு, நாங்களே பக்காவா குக் பண்ணிருவோம்”, என்று தனது படிப்பின் பெருமை பேசினாள் பெண்.

“அப்புறம் என்ன? ரெசிப்பி எழுதி வச்சுக்கோ!”, என்று சர்வ சாதாரணமாக கூறிவிட்டு அகன்ற தாய் வித்தியாசமாகத் தெரிந்தார் அனன்யாவிற்கு.

நவீனின் திருமணம் நிச்சயம் ஆனது முதலே, ‘இப்டி இருக்காதே, அப்டி பேசாதே, அப்டி சமைச்சாதான் உங்க மாமியாருக்கு பிடிக்குமாம். இப்டி உடுத்தினாத்தான் உனக்கு எடுக்கும்னு சம்பந்தி சொல்றாங்க! இது அவங்க வீட்டுப் பக்கம் பழக்கமாம்!’, என்று அடிக்கொரு முறை நவீன் குடும்பத்தாரின் புராணம் பாடிய தாய் நினைவில் வந்து போனார்.

தற்போது மகளாக முன்வந்து சமைக்கக் கற்றுக் கொள்ள வந்தாலும், ரெசிப்பி எழுதி வச்சுக்கோ, குறிப்பு எழுதி வச்சுக்கோனு… இலகுவாகச் கூறிச் சென்றது, தனது ஆய்விற்கு அமைந்த சிறுபொறியாக எண்ணி மனதில் குறித்து வைத்திருந்தாள் அனன்யா.

இதை அறிந்திராத தேவகி அவரது பணிகளைக் கவனித்தவாறே, “அனி, அம்மாவோட ஃபோன் ஹால்ல வச்சிட்டு வந்துட்டேன். கொஞ்சம் எடுத்துட்டு வர்றீயா? கோமதி அத்தை கால் பண்ணுவாங்க… பத்து மணிக்கு மேல கடைக்கு பொன்னுருக்கி விடப் போகணும்”, என்று கூறியபடியே அங்கிருந்த பணிகளில் கவனம் செலுத்தியிருந்தார்.

தாயின் சொல் கேட்டு, ஹாலில் இருந்த போனை எடுத்து வரச் சென்றவள், எடுத்து ஆன் செய்து பார்க்க, மூன்று மிஸ்டு கால்கள்.

எடுத்துப் பார்த்தாள், தாயின் எதிர்பார்ப்பு சரியாக இருந்தது.

ஆம், கோமதிதான் மூன்று முறையும், தேவகியை அழைத்திருந்தார்.

போனை மகளிடம் வாங்கி, தானே கால் செய்து பேசியவர், “சரியா பத்தரைக்கு நான், உங்க அண்ணன், எங்க அம்மா வீட்ல இருந்து எங்க ரெண்டு அண்ணன், அண்ணி எல்லாம் நேரா அங்க கடைக்கே வந்துறோம் அண்ணி!

…. உங்களுக்கு யாரெல்லாம் சொல்லணுமோ அவங்களுக்கெல்லாம் சொல்லி கடைக்கே கூட்டிட்டு வந்துருங்க! மதியம் சாப்பாடு எல்லாருக்கும் இங்கேயே வச்சுக்கலாம்”, என்று கூறி வைத்திருந்தார் தேவகி.

இரண்டாவது பொறி தாயின் பேச்சினை உள்வாங்கியதால் அனன்யாவின் மனதில் வந்து அதுவாகவே அமர்ந்திருந்தது.

‘பொன்னுருக்கி விட மாப்பிள்ளை வீடுதானே கடைக்கு வரணும். இந்த அம்மா எதுக்கு கோமதி அத்தைய கூப்பிடுறாங்க?
நம்ம வீட்டு சார்பில கோமதி அத்தை, மாமாவைக் கூப்பிட்டாலும், அவங்களுக்கு தெரிஞ்சவங்களை அம்மா ஏன் பொன்னுருக்கி விடற எடத்துக்கு கூட்டிட்டு வரச் சொல்லணும்?’, என அனன்யாவின் மனம் யோசித்திருந்தது.

அத்தோடு தான் அடித்து வைத்திருந்த ஃபிரண்ட்ஸ்களுக்கான திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு, உள்ளூரில் தனக்குத் தெரிந்த தோழிகளுக்கு கொடுக்க வெளியே செல்வதாகக் கூறிச் சென்றிருந்தாள், அனன்யா.

ஓரளவிற்கு பத்திரிக்கை கொடுத்து விட்டு, மதியம் இரண்டு மணிக்கு வீடு திரும்பியவளை, கோமதி மற்றும் திருக்குமரன் இருவரும் வரவேற்றிருந்தனர்.

வழமைபோல இருவரும், அனன்யாவிடம் பேசியிருக்க, வித்தியாசம் தோன்றவில்லை அனன்யாவிற்கு.

இயல்பாகப் பேசிவிட்டு, மதிய உணவை உண்டதாகப் பேர் செய்து, தனது அறைக்குச் செல்ல கிளம்பியவளின் கண்ணில் பட்டது அங்கிருந்த திருமணப் பத்திரிக்கைகள்.

தனது பெற்றோர் கொடுத்து எஞ்சியிருந்த பத்திரிக்கைகள் சில, அங்கிருந்த மஞ்சள் பையின் மீது சற்றே சிதறி வீற்றிருந்ததைக் கொண்டாள். தனது அறைக்கு போகும் போதே கையில் பத்திரிக்கை ஒன்றை எடுத்துக் கொண்டு சென்றிருந்தாள்.

எடுக்கும் போதும், வேறு எந்த சிந்தனையும் இன்றி தனது திருமண அழைப்பிதழின் வடிவமைப்பைக் காண எடுத்துச் சென்றிருந்தாள் அனன்யா.

அந்நேரம், தோழி ஒருத்தி அலைபேசியில் அழைத்திடவே, அழைப்பை ஏற்றவள் பதினைந்து நிமிடங்கள் அவளுடன் பேசிவிட்டு வைத்தாள்.

கோவை மருத்துவமனையில் தற்போது பணிபுரிந்து வரும் சிலருக்கு பத்திரிக்கை கொடுக்க, உடன் தோழியை துணைக்குக் கேட்டிருந்தாள்.

நான்கு மணிக்கு செல்லலாம் என்று தோழி கூறியதால், அழைப்பை வைத்ததுடன் கிளம்பியிருந்தாள்.

“இன்னிக்கோட பத்திரிக்கை எல்லாம் குடுத்து முடிச்சிறு அனி. இன்னும் வெளியே அலையாம ரெஸ்ட் எடு”, என்று தேவகி கூறுவதைக் கேட்டவாறே, தனது காரை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தாள் அனன்யா.

தோழியை அவள் கூறிய இடத்தில் பிக்கப் செய்து, மருத்துவமனை சென்றவள், அங்கிருந்த தோழிகள், தலைமை நிர்வாகிகள் சிலருக்கு அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு வீடு திரும்பியபோது மாலை ஆறு மணியாகியிருந்தது.

வந்து தன்னை ரெஃப்ரெஷ் செய்து, களைப்பில் இருந்து மீள படுக்கையில் படுத்தாள். கையில் தட்டுப்பட்டதை எடுத்தவள், எதேச்சையாகத் திரும்ப கண்ணில் பட்டிருந்தது, அவளின் திருமண அழைப்பிதழ்.

தட்டுப்பட்டதை அப்படியே ஓரத்தில் வைத்துவிட்டு, அழைப்பிதழை எடுத்திருந்தாள். முன்புற வடிவமைப்பு அம்சமாக இருக்க, விரித்தவள் மகிழ்ச்சியோடு பார்வையைப் பதித்திருந்தாள்.

இன்னார் மகன் வழிப் பேத்தி, இன்னாரின் மகள் வழிப் பேத்தி, இன்னாரின் மகள் என்று அவளது பெயரை வாசித்தவளின் முகம், தானாகவே புன்னகை பூசிக் கொண்டது.

அடுத்து வந்த இன்னாரின் மகன் வழிப் பேரன், இன்னாரின் மகள் வழிப் பேரனுக்குப் பின் வந்த இன்னாரின் மகனை வாசித்தவள் அவளறியாமல் எழுந்து அமர்ந்திருந்தாள்.

மீண்டும் ஒரு முறை வாய் திறந்து வாசித்திருந்தாள்.

திருக்குமரன் கோமதி தம்பதியரின் புதல்வன் திருநிறைநாட்செல்வன், “கிஷோர் கைலாஷ்”, என்றிருந்ததை மீண்டும் மீண்டும் படித்திருந்தாள்.

‘ஐயோ… ஆண்டவா!’, என்றிருந்தது அவளுக்கு.

கிஷோர், ஏன் முதல் பார்வையிலேயே தனக்கு மிகவும் பரிச்சயமானவனாகத் தெரிந்தான் என்பதற்கான காரணம் தற்போது புரிவது போல இருந்தது.

ஆனாலும், அவனைத் தவிர்க்க தான் கூறிய காரணம் ஏனோ தற்போது முன்வந்து நின்று இம்சித்தபடி இருந்தது.

தனது பெற்றோர் முதலில் அவனுக்கு தன்னைக் கேட்டதை நினைவு கூர்ந்தாள். அவர்கள் கேட்டதற்கு, தான் கூறிய அன்றைய நாளின் காரணம் ஏனோ இன்று அற்பமாகத் தோன்றியது.

‘அண்ணனே… மன்னனா மாறப் போற கதை எனக்குத்தான் இன்று வரைத் தெரியலயா?’, மனம் கேட்க அமைதியாக மீண்டும் படுத்திருந்தாள்.

‘அட ராமா…! இது தெரியாம இவ்ளோ நாளா அம்மாஞ்சியா இருந்திருக்கேனே…!’, என மனம் தன்னையே கடிந்து கொண்டிருந்தது.

‘இந்தப் பைய… கைலாஷிற்கு விசயம் தெரிஞ்சிருந்தா… நம்மகிட்டயும் ஒரு வார்த்தை இப்டி இப்டினு பயபுள்ள சொல்லியிருக்கலாம்ல…!’, என மனம் வாதிட படுத்திருந்தாள்.

தனது ஆய்விற்கான ஒவ்வொன்றிற்கும் ஆதரவான விடைகள் தாமாக வந்து சேர்ந்து கைகுலுக்கியிருக்க, நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தை எண்ணி மனம் ஓய்ந்து படுத்திருந்தாள்.

பெற்றவர்களின் மகிழ்ச்சிக்கு கைலாஷ், கோமதி, திருக்குமரன் மகன் என்பதும் ஒரு காரணமாக தற்போது தோன்றியிருந்தது.

மகள் சமைக்காவிட்டாலும், சமாளிக்கக் கூடிய இடம், கோமதியின் வீடு என்று தனது தாய் தன்னை கண்டிக்காததை கண்டு கொண்டிருந்தாள்.

ஓய்ந்தது உள்ளமா, உடலா எனத் தெரியாமல் படுக்கையில் கிடந்தாள்.

மனித உள்ளம் தனக்குப் பிரியமானதை எவ்வாறாகினும் தனதாக்கிக் கொள்ள முயற்சிப்பதை எண்ணியபடியே படுத்திருந்தாள்.

‘அன்று அண்ணன் என்ற காரணம் கூறி அறவே மறுத்த உள்ளம், இன்று அவனில்லாமல் நானா? என்று யோசித்து அயர்ந்தது.

அனன்யா எனும் ராணியை மணக்கப் போகும் மன்னனாக்கி தன்னவனை அழகு பார்த்திருந்தது. மனம் தொட்டவன்… கரம் பற்றப்போகும் காதலன்… அவனில்லாத வாழ்க்கை வீண்’, என்று உள்ளம் ஓங்கி உரைத்திருந்தது.

நீண்ட நேரத்திற்குப் பின்…
ஒரு கையில் தாங்கள் அடித்திருந்த பத்திரிக்கையுடனும், மல்லார்ந்த நிலையில் படுக்கையில் சிந்தனையில் இருந்த மகளைப் பார்த்து துணிக்குற்ற தேவகி, “என்ன அனி, இந்த நேரம் படுத்திருக்க, எந்திரிச்சு வா…”, என மகளறிந்த விடயம் தானறியாதது போல மகளை வாயிலில் நின்றவாறே அழைத்திருந்தார்.

தாயின் அழைப்பில் அறையை விட்டு வெளி வந்தவள் தாய் கொடுத்ததை வாங்கிப் பருகியவாறே தாயைக் கவனித்தாள்.

தாயின் முகம் எதையும் காட்ட மாட்டேன் என்று முரண்ட, வேறு வழியில்லாமல் தாயிடம் கேட்டுவிட்டாள், அனன்யா.

“ஏம்மா, எனக்கு பாத்த மாப்பிள்ளை கோமதி அத்தை பையன்னு ஏன் எங்கிட்ட சொல்லவே இல்ல”, அனன்யா குற்றம் சாட்டும் தொனியில் கேட்டிருந்தாள்.

“யாருடா கண்ணு… உனக்கு மாப்பிள்ளை பாத்தது…! நாங்களா? இல்லை நீங்களா கண்ணு? கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க!”, என்று மகளிடமே கேள்வியை திருப்பியிருந்தார். அதற்குமேலும் அங்கு நிற்க தேவகிக்கு பைத்தியமா என்ன? அத்தோடு அங்கிருந்து அகன்றுவிட்டார், தேவகி.

மகளின் கேள்விக்கு, உண்மையை தேவகி கூற அதை சட்டென ஏற்றுக் கொள்ள இயலாமல், கோமதியை அழைத்துக் கேட்டாள் பெண்.

“ஏன் அத்தை, உங்க பையனுக்குத்தான் என்னைய பேசி முடிச்சாங்கன்னு நீங்களும் எங்கிட்ட இருந்து மறைச்சிட்டீங்களே”, என்று எடுத்தவுடன் தன்னைக் குற்றவாளியாக்கிக் கேட்டவளுக்கு அமைதியை சற்று நேரம் பரிசளித்திருந்தார் கோமதி.

யோசனைக்குப் பின் கோமதியும், ‘உன்னை கட்டிக்கர போற பையன்… எங்கிட்ட வந்து உங்க வீட்ல போயி பொண்ணு கேக்க சொன்னான் அம்மிணி. நானும் அவன் சொன்னது போல பேசி முடிச்சிட்டேன் கண்ணு. வேற எதுவும் பேசணும்னா உங்க அவர்கிட்டதான்… அதான் என்ர மகன் கிட்டதான் கண்ணு நீ பேசிக்கோணும்’, என்று அதற்குமேல் இதற்கும் எனக்குத் எந்தச் சம்பந்தமும் இல்லை என முடித்துவிட்டார் கோமதி.

கோமதி, தேவகி இருவரும் அவசர அழைப்பில், அனன்யாவிற்கு தெரிந்த விடயத்தைப் பற்றிப் பேசி கைகுலுக்கி விடைபெற்றிருக்க, கோமதி உடனே கைலாஷை அழைத்து விடயம் பகிர்ந்திருந்தார்.

அதே நேரம் அனன்யாவிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்ற கைலாஷை, வீட்டிற்கு நேரில் வருமாறு அழைத்திருந்தாள் அனன்யா.

அழைப்பில் மயங்க மனம் தூண்டினாலும், விடயம் எத்தகையது என்று புத்திக்கு தெரிந்தாலும், புரியாத நிலையில், தாயிக்கு அழைத்து, “எதுக்கு இப்ப அவகிட்ட சொன்னிங்க!”, என்று கடிந்து கொண்டவன், தாயின் பதிலுக்குக் காத்திராமல், அத்தோடு அனன்யாவின் வீட்டிற்கு நேரில் வந்திருந்தான்.

கிஷோர் கைலாஷை வரவேற்று உபசரித்த தேவகி, மகள் அவளது அறையில் இருப்பதாகக் கூறி அனுப்பி வைத்தார்.

எதிர்பார்த்திராத தருணம், எதிர்பார்த்திருந்தவளைக் காண மனம் ஏங்கினாலும், எரிமலைக்குள் நுழைந்ததாக எண்ணி அனன்யாவின் அறைக்குள் பிரவேசித்திருந்தான், கைலாஷ்.

சாளரத்தின் அருகே முதுகு காட்டி நின்றிருந்த அனன்யாவைக் கண்டு கொண்டான்.

‘க்குக்கும்’ என்ற செறுமலோடு அறைக்குள் வந்தவனை உணர்ந்து கொண்டவள், பிடிவாதமாக சாளரக் கம்பிகளை விடாமல் பிடித்தபடியே, அறைக்குள் வந்திருந்தவனை திரும்பி பார்த்தாள்.

எதுவும் பேசாமல் தன்னை நோக்கியவளை உற்று நோக்கி தாளமறிந்தவன், தன்னை இலகுவாக்கி தன்னவளை நெருங்கினான்.

ஆணின் சரசம் தனக்கு பிடித்தவளைக் கண்டவுடனே ஆரம்பித்து விடுகிறது. அதற்கு கைலாஷூம் விதிவிலக்காகாமல் ரதியின் பா(ப)தியாக மாறியிருந்தான். கைலாஷின் மனம் உல்லாச ஊஞ்சலில் ஆடத் துவங்கியிருந்தது.

வந்தவுடன் சண்டை, சச்சரவு இன்னும் எதோ என்ற எதிர்பார்ப்புடன் வந்திருந்தான், கைலாஷ். தனது எதிர்பார்ப்புகளை முறியடித்திருந்தவளை காணும் நோக்கமே மனதில் மாறி அதை அவனது கண்களின் வழியே பிரதிபலித்திருந்தான்.

கடலலை போல வந்தவன் கரையில் நிற்கும் தன்னவளை நோக்கி முன்னேறி நெருங்கியிருந்தான். சாளரத்துடன் சமரசமாகி நின்றவளை, மெதுவாக தன் மார்போடு, அவளின் பின்னோடு நின்று தோளோடு அணைத்திருந்தான்.

ஆணின் அவசியத்தை அதுவரை உணர்ந்திராவதள் தேகம், தீண்டியவன் கை அணைப்பில் குற்றால வீழ்ச்சியின் குளுமையோடு, புதிய உணர்வினை முதன் முறையாக உணர்ந்திருந்தாள்.
‘என்னடா பண்ண… என்னென்னவோ உங்கிட்ட பேசணும், கேக்கணும்னு நின்னுகிட்டு இருந்தவளை ஒரு தீண்டல்ல ஆஃப் பண்ணி நிக்க முடியாம என்னடா செய்த’, என்று பெண்ணவளின் மனம் ஓலமிட வாயைத் திறக்கக்கூட திராணியற்றவள் போல நின்றிருந்தாள் அனன்யா.

அணைத்தவனை மறுக்காமல் அவனோடு இழைந்து இருந்தாள். தேகம் இன்னும் இச்சுகம் வேண்டும், வேண்டும் என்று அவனுள் முழுகத் தயாரானதை, தன்னால் இயன்றவரை கட்டுப்படுத்தியபடி நின்றிருந்தாள்.

மனதின் இதம் வதனத்தில் தெரிய குங்குமமாகச் சிவந்த முகத்துடன், நாணம் மேலிட, “நீங்க கோமதி அத்தையோட பையன்னு ஏன் எங்கிட்ட சொல்லவே இல்ல!”, அவன் தன்னிடம் சொல்லாதது குற்றமாகிப் போனது என்று கேட்டாள்.

தன்னை நோக்கித் தன்னவளைத் திருப்பியவன் நாணத்தால் அவளின் பார்வையில் வந்திருந்த, இதுவரைக் காணாத மாற்றங் கண்டிருந்தான். குங்குமச் சிவப்பு வதனம் சொன்ன செய்தி புரிந்தவன், “சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்ப?”, என தனது கைகளை அவளின் இடையோடு சேர்த்து அனன்யாவை தன்னோடு இழுத்து இறுக அணைத்தபடியே கேட்டான்.

பின்புற அணைப்பு சொன்ன செய்தியை விட, தற்போதைய அணைப்பு தனக்குள் தகிக்க, கைலாஷின் கேள்வியில் மனம் போக முடியாமல் திணறியிருந்தாள் அனன்யா.

அனன்யாவின் திணறலை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டவன், “நான் ஒன்னு எதிர்பார்த்து வந்தேன். ‘புயலோ பூகம்பமோ…’ என அவன் மனம் நினைத்ததைக் கூறாமல், “உல்டாவா… கேள்வியெல்லாம் கேக்குற! நான் வேற லெவல்ல உன்னை கற்பனை பண்ணியிருந்தேன்”, என அவளின் அவன் எதிர்பாரா மாற்றம் பற்றி உணர்ந்து மறைமுகமாகக் கூறியிருந்தான், கைலாஷ் கிஷோர்.

“…”, எதுவும் பேசாமல் அமைதியாக நின்றவளை

“என்ன அன்யா! உன் சின்ன வயசு அண்ணண, பெரிய வயசு கண்ணன… என்ன செய்யறதா உத்தேசம்!”, என சிரித்தபடியே அனன்யாவின் வதனத்தை நிமிர்த்தி… அவள் கண்களோடு தன் கண்களைக் கலக்க விட்டபடியே கேட்டான்.

“தெரியலயே!”, உண்மையில் மனமறிய… கணவனாக மனதில் ஏற்றவனை… இனி என்ன செய்ய…! என்ற குழப்பம் முகத்தில் அப்பட்டமாகத் தெரிய பதில் சொன்னாள்.

“அண்ணன்… உன் கண்ணனாகி ரொம்ப மாசமாச்சு, சோ இனி பேக்கடிச்சு… என்ன அந்நியனா அநியாயமா மாத்திராதடா அம்மு!”, என்று கூறி சிரித்தவனை கண்டு, தனக்குள் எழுந்த நாணம் அவனைக் காண இயலாமல் சண்டித்தனம் செய்திட தலை குனிந்தவள்

“…”, ‘இது எப்டி நடந்துது?’ என தனக்குள் வந்த மாற்றங்களை யோசித்தபடியே பேச இயலாமல் நின்றாள்.

அத்தோடு அவனின் அணைப்பில் இருந்து அவனறியாமல் சற்று விலகியிருந்தாள் அனன்யா.

அனன்யாவின் நிலையை நன்குணர்ந்திருந்தாலும், நாணத்தை தெளிய வைக்க முயன்றிருந்தான் கைலாஷ்.

அருகில் நின்றிருந்தவளை, தன்னை நோக்கி இழுத்து மீண்டும் தன்னோடு அணைத்தபடியே, “சின்னப்புள்ளைல எத்தனையோ பேர உறவுமுறை நமக்கு தெரியாம அண்ணன்னு சொல்லியிருக்கலாம். அதுனால அவங்க எல்லாம் கூடப் பிறந்தவங்களா ஆக முடியுமா?

இல்ல… அத்தான், மச்சான்னு நிஜத்துல இருக்கிற உறவு முறைய… கண்டிப்பா கல்யாணந்தான் செய்துக்க முடியுமா?”, என்று அனன்யாவிடம் கேட்க

“என்ன சொல்ல வர்றீங்க”, என தலையை நிமிர்த்தி கைலாஷின் முகம் பார்த்துக் கேட்டாள் அனன்யா.

அவளின் கேள்வியில் சிரித்தவன், “எங்கம்மா, அப்பாவ அத்தை, மாமானு சொல்லிட்டு, உன்ன யாரு… என்ன அண்ணானு கூப்பிட சொல்லிக் குடுத்தது?”, முகம் சிரித்தபடியே வினவினாலும், கேட்ட விதம் சொன்னது நான் உனது அண்ணா என்ற அழைப்பினால் கோபமாக இருக்கிறேன் என்று.

“உன்ன விட வயசுல பெரிய பையன்னு… நீயா முடிவு பண்ணி அண்ணன்னு கூப்டுட்டு… என்னய டீலுல விடப் பாத்த… ஆனா நான் யாருனே உங்கிட்ட வந்து சொல்லாம… உன்னை எம்பக்கமா சாச்சுட்டேன்ல!”, என அவளிடம் குறைந்த குரலில் கிசுகிசுப்பாகக் கூற

“அப்பவே என்னை யாருன்னு உங்களுக்கு தெரியுமா?”, பெண்புத்தி கேட்கச் சொன்னது.

“ம்…”, என்றபடி சிரித்தவன், “பாத்தவுடனே தெரிஞ்சிரிச்சு… அம்மிணிக்கு என்னைய அடையாளம் தெரியலங்கறதும் தெரிஞ்சுது. ஆனா… உன்ன என் பக்கம் கொண்டு வர ரோமியோ மாதிரியோ, இல்ல வேற எதுவும் சார்ட் ரூட்ல நான் போகல அம்மிணி…!”, என தன்னை தெளிவாக உரைத்தவனை கண்சிமிட்டாமல் பார்த்திருந்தாள்.

“…”, அவன் கூறிய உண்மையை உணர்ந்தவாறே அமைதியாக நின்றிருந்தவளைக் கண்டவன்,

“என்ன யோசிக்கற அன்யா!”, கைலாஷ் கேட்க

“உங்கள எங்கயோ பாத்த மாதிரி இருந்தது. ஆனா நீங்க சென்னைனு நினைச்சதால… ! அங்க எனக்கு தெரிஞ்சவங்க இருக்க வாய்ப்பு இல்லனு… ! நானா என்ன சமாதானம் பண்ணிட்டு இருந்தேன்!”, விளக்கம் அளிக்க தகுந்த தருணமாக எண்ணிக் கூறியிருந்தாள்.

“அத எங்கிட்ட வந்து கேட்ருக்க வேண்டியது தான… அம்மிணி அமுக்குணியா இருந்ததால கடைசிலதான் உண்மை தெரிய வருது, இல்லனா முன்னயே தெரிஞ்சிட்டு இருந்திருக்கலாம்!”, என அனன்யாவின் மீதே குறை என்று கூறிமுடித்திருந்தான்.

“பரவாயில்ல…! இப்ப தெரிஞ்சிட்டுது இல்ல, நான் ஒன்னும் அமுக்குணி இல்ல… நீங்க தான் அமுக்குணி”, என முகம் வாட கோபமாக அவனையே குற்றம் கூறியிருந்தாள்.

“அது பொண்ணதான் அப்டி சொல்லுவாங்க, பசங்களயுமா அப்டி சொல்றாங்க!”, என புரியாதவன் போல கேட்டிருந்தான்.

“எப்டி..!”, என கேள்வியாக நோக்கினாள் அனன்யா.

“அமுக்குணினு!”, என்றபடியே அனன்யாவை விழுங்குவது போல பார்த்தவனைப் பார்த்திருந்தவள், தேகம் தேடிய தேவையை ரத்து செய்ய எண்ணியவளாய்…

“…”, சற்று நேரம் யோசித்தவள், அணைப்பை விடுத்து தன்னைவிட்டு வேகமாகவே கைலாஷை தள்ளினாள்.

“ஏன் இப்டி தள்ளுற அன்யா…!”, அதுவரை தனது அணைப்பிற்குள் அடைபட்டு அமுத உணர்வைத் தந்தவளை ஏக்கத்தோடு கேட்டிருந்தான்.

அவனின் ஏக்கம் நிறைந்த குரல், தனது இதயத்தைப் பிளந்து சென்று ரணமாக்க முயல, என்ன செய்வது என்றறியாமல் பாவ முகம் ஏந்தி தன்னவனை பரிதாபமாகப் பார்த்தாள்.

“… உனக்கு நான் என்ன அடுத்தவனா?”, மீட்டப்படும் வயலினில் அறுந்த போன கம்பியால் இழந்த ராகம் போல கரகரத்த குரலால் கேட்டபடி நின்றிருந்தவனை, மனம் தழுவத் துடித்தபோதும், அறிவு, நாணம் இரண்டும் பெண்ணவளைத் தள்ளி நிற்கக் கூறியது.

“அப்டி சொல்லலயே நான், எனக்கு என்னமோ மாதிரி இருக்கு!”, தனது தேகம், மனம் உணர்ந்ததை உள்ளபடி உரைக்க இயலாமல் உரைத்திருந்தாள்.

“இவ்ளோ நேரம் சும்மா தான இருந்த… அப்றம் என்ன திடீர்னு”, சரியான தருணத்தில் கணித்துக் கேட்டவனை, தனது செயல் தவறோ எனும்படி முகம் வைத்தபடியே பார்த்திருந்தாள்.

“அதுவே நினைவுல வரல… இப்பதான் வந்துது”, ஆனாலும் உண்மை உரைத்திருந்தாள்.

“ம்… என்ன மாதிரி இருக்கு? பிடிக்குதா, இல்ல பிடிக்கலயா?”, என பிடிவாதமாகக் கேட்டிருந்தான்.

“பிடிக்காமத்தான் கல்யாணத்துக்கு சரினு சொன்னேனா?”, எதிர்கேள்வி கேட்டாள்.

“அப்றம் ஏன் தள்ளித் தள்ளி போற!”, கைலாஷ்

“கிட்ட வந்தா நீங்க சும்மா இருக்க மாட்டீங்கறீங்களே! அதான் தள்ளி இருக்கேன். இன்னும் ஒரு வாரம்தான…!”, அவன் சும்மா நிற்பதும் மனதிற்கு ஒப்பவில்லை என்றாலும், மனமறிய பொய்யுரைத்திருந்தாள்.

“இன்னும் வளராம இருக்கியே அன்யா!”, என வருத்தமாகச் சொன்னவனை முறைத்தாள்.

முறைத்தவளின் வதனங்களை தனது இருகைகளால் ஏந்தி தன்னை நோக்கி இழுத்திருந்தான். அவன் செயலால் மயங்கியவள் கண்களை மூடி, உடலெங்கும் பரவிய இன்ப உணர்வை உள்வாங்க, அனன்யாவின் கண்களின் மேல் இதமாக அவள் உள்ளம் தீண்டும் படியாக மென்மையான முத்தம் கொடுத்தான், கைலாஷ்.

கண் திறவாமல் தன்னை விளக்கியவளை, விடாது இழுத்து அணைத்தபடியே, தன்னருகே நெருக்கமாகக் கொண்டு வந்து நின்றவளின் காதருகே “இப்ப இங்க எதுக்கு கிஸ் பண்ணேன்னு சொல்லு. உன்ன விடறேன்!”, என்று அவள் காதில் கூற கண்களைத் திறந்து மலங்க மலங்க விழித்தாள்.

விழித்தவளின் விழி கண்டு சிரித்தவன்,

“ஏன் இப்டி திருவிழாவுல காணாம போனவ மாதிரி முழிக்கிற?”, என கைலாஷ் கேட்க

“அப்டியா முழிக்கிறேன்…! எனக்கு ஒன்னும் அப்டித் தெரியல!”, என்று மிரட்சியாவே கூறினாள்.

“சரி சொல்லு”, விடாமல் கேட்டான்.

“அது பத்தியெல்லாம் எனக்கு ஏ, பி, சி, டி கூட தெரியாது!”, என வருத்தமாக கூறியவளை

“சரி நான் ரீசன் சொன்னா என்ன தருவ?”, பழக்கம், பகடி கேட்டது.

“என்ன வேணும்”, பயம், அபயம் கேட்டது.

“என்ன கேட்டாலும் தருவியா?”, ஆண்களின் இயல்பு மீட்டப்பட்டது.

“நீங்க கேக்கப் போறதப் பொறுத்து….”, என இழுத்தவளை, தன் கைவளைவில் வைத்தபடியே, “எப்போதும் உன்னுடன் இருக்க நினைக்கிறேன்னு, வார்த்தையால சொல்லாம, என் செயலால சொன்னேன்”, என்று தன்னை அவனது இறுகிய அணைப்பிற்குள் வைத்தவாறு காதலோடு கூறியவனை, சற்றும் குறையாத காதலோடு பார்த்திருந்தாள், அனன்யா.

காதல் அங்கு நிறைவாக இருக்க, திருமண நாளை எதிர்நோக்கி இருவரும் ஆனந்தமாகக் காத்திருந்தனர்.
——————————-