avalukkenna7

அத்தியாயம்
7

ஈஸ்வரன் வீட்டில் நீண்ட நாட்களுக்குப்பின் நடக்கும் முதல் சுபநிகழ்ச்சி என்பதால், மகால் பிடித்து பிரமாண்டமாக பூ வைக்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அனன்யா, அவளின் நெருங்கிய கல்லூரித் தோழிகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்திருந்தாள். அகல்யா, நிகழ்ச்சி நடக்கும் நாளுக்கு முன்பே வர முடியாத சூழலாதலால், நிகழ்ச்சி அன்று கலந்து கொள்வதாக கூறியிருந்தாள்.

பூ வைக்கும் விழாவில், பியூட்டி பார்லரின் கை வண்ணத்தில், அனன்யாவின் அழகுக்கு அழகூட்டி அரங்கத்தையே அவள்பால் ஈர்க்கச் செய்திருந்தனர்.

நவீன் மட்டுமல்லாது, அனைவரது கண்களும் அனன்யாவையே சுற்றி வந்தது என்றால் அது மிகையல்ல.

திருமண ஓலை இரு குடும்பத்துப் பெரியவர்களை வைத்து எழுதப்பட்டு, நிச்சயம் மற்றும் திருமண நாள் குறிக்கப்பட்டது.

மூன்று மாதங்களுக்குப் பின் வரக்கூடிய வளர்பிறை சுக்கில பட்ச திதியில் திருமண நாள் குறிக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய தினம் நிச்சயம் வைத்துக் கொள்வதாக வாசிக்கப்பட்டது.

ஓலை வாசித்துக் கொண்டிருக்கும் போது மகாலுக்குள் நுழைந்த அகல்யா, அனன்யாவின் அலங்காரத்தைக் கண்டு மகிழ்ந்திருந்தாள். அத்தோடு, ‘தனக்கும் இது போல செய்தால் எவ்வாறு இருப்போம்!’ என்ற எண்ணம் வந்ததோடு, அனன்யாவின் அருகில் வந்தவள்,

“ஹாய்… அனி! இந்த சாரில இந்திரலோக ஊர்வசி மாதிரி இருக்கடி! என் கண்ண போட்டுட்டேன்டி”, என சிரிக்க,

“வாடி… அகி!

இப்ப தான் ஊருக்கு வர வழி தெரிஞ்சுதா!,

அதெப்படி நீ ஊர்வசிக்கு உறவுக்காரி மாதிரி என்ன பாத்து அப்டி சொன்ன!!!”, என அனி கேட்க

“காசா பணமாடி, தோணுனா சொல்ல வேண்டியதுதான”

“ம்… பயங்கர பிஸியாயிட்டியாடி! எப்போ கால் பண்ணாலும் என்கேஜ்டாவே இருக்கு!”, அனி

“அதல்லாம் எனக்கு வந்த சோதனை, அதல்லாம் எங்க மேலிடம் பண்ற கூத்து, இன்னொரு நாளு நேரம் கிடைக்கிறப்போ சாவகாசமா பேசுவோம், அத பத்தி”, என அகி கூற

“சரிடி… போயி முதல்ல சாப்பிடு… அப்புறம் வந்து நிதானமா பேசலாம்”, என தோழியை காலை ஆகாரத்துக்கு அர்ஜ் செய்தாள் அனி.

“எத மறந்தாலும் சாப்பாடு மட்டும் எப்பவுமே எனக்கு மறக்காது. அதனால நீ சொல்லலனாலும் நான் போயி சாப்பிடத்தான் போறேன். அப்புறம் இந்த சாரி செமயா இருக்குடி!”, என்று எப்பொழுதும் போல அனன்யாவிடம் அகல்யா கூற

“அதெல்லாம் அம்மா செலக்சன் தாண்டி!”

“அம்மா எனக்குனு தனியா எடுக்கலயாடி!”, என அகி வருத்தத்தோடு கேட்பதை அறிந்த அனன்யா

“…”, அகல்யாவின் கேள்வியில் சற்றே மனம் வருந்தி, ‘ஏன் இந்த அம்மா எப்பவும் போல இவளுக்கும் இதே மாதிரி ஒன்னு எடுக்காம விட்டாங்க’, என எண்ணியபடியே

“தெரியலடி, வேணும்னா இந்த சாரிய நீ எடுத்துக்க!”, என்று அகல்யாவிடம் கூறினாள்.

“அப்போ இத எப்ப எங்கிட்ட குடுப்ப!”, என உருவாத குறையாக அகல்யா கேட்க

“இப்போ மாப்பிள்ள வீட்ல சாரி குடுத்து கட்டிட்டு வரச் சொல்லுவாங்க, அது வர என்ன விடு, அதுக்கப்புறம்னா இந்த சாரிய நீயே எடுத்துக்க அகி!”, என தனது தோழியைப் பார்த்து கூறியிருந்தாள் அனி.

“சாரி… கதை இருக்கட்டும். ஏண்டி! உன் ஆளக் காமி முதல்ல”, என மாப்பிள்ளையைக் காணும் ஆவலை குரலில் காட்டினாள், அகல்யா

“அங்க கூட்டத்துல ஜீன்ஸ் பேண்ட், செக்டு சர்ட் போட்டு உக்காந்துருக்காரு பாரு, அவரு தான் மாப்பிள!”, என அகல்யா நவீன் அமர்ந்திருந்த இடத்தைக் காட்டி அடையாளம் கூற

அனன்யாவின் கை போன திசையில், கண்களால் அலாவி கண்டுபிடித்தவள், “எங்கயோ பாத்த மாதிரி இருக்கேடி, ஆனா ஆளு செமயா இருக்காப்ல!”, என்று நவீனுக்கு சான்றிதழ் தந்திருந்தாள், அகல்யா.

“ஏய்… இனி சைட்டிங் வேலயெல்லாம் இங்க வச்சுக்க கூடாது! ஆமா சொல்லிட்டேன்”, மறைமுகமாக கண்டித்திருந்தாள் அனன்யா.

“அப்ப டாக்கிங், சாட்டிங்லாம் ஓகேவா”, விளையாட்டு போலக் கேட்டிருந்தாள், அகல்யா.

“உனக்கு எப்பவுமே விளையாட்டு தான் அகி, நம்ம லாஸ்ட் டைம் ஊட்டி டூர் போகும் போது, வேன் பிராப்ளம் ஆனப்ப… சரி பண்ணிக் குடுத்தாருல்லடி… அவரு தான், இன்னும் உனக்கு ஞாபகம் வரலயா!”

“நீ வேற!, இருக்குற வேலயில என்ன நான் மறக்காம இருந்தா சரி தான்!. எங்க ஆஃபீஸ்ல வச்சு செய்றானுங்கடி என்னை எனக்கே மறந்துரும் போல… அப்டி பெண்டை நிமித்தற அளவுக்கு வேல!

ம்… இப்ப நீ சொன்னவுடனே தான் ஞாபகம் வருது!. அந்த ஹேண்ட்சம் தான் உன் ஆளுன்னு அப்பவே தெரியாம போச்சேடி!”, என வருத்தம் மேலிட சொன்ன அகல்யாவைப் பார்த்து,

“தெரிஞ்சிருந்தா அப்ப என்ன பண்ணிருப்ப?”

“என்ன பண்ணிருப்பேன், வேனுலயே தூக்கிப்போட்டு ஊட்டிக்கு கூட்டிட்டுப் போயி… டூருக்கு கைடாக்கி… கைண்டா என்ஜாய் பண்ணிருப்பேன்!”

“அடிப்பாவி, நீ மட்டும் என்ஜாய் பண்ணிருப்பியா!”, என சிரித்தபடியே கேட்டாள், அனன்யா.

“என்ன மட்டும் என்ஜாய் பண்ண விட்டுட்டு நீங்கள்லாம் அப்டியே சும்மா இருந்திருப்பீங்களாடி!”

“நடக்காத விசயத்தப் பத்தி எதுவும் என்னால சொல்ல முடியாது. வேற எதாவது சொல்லு”, தேவையில்லாததைப் பற்றி பேச பிரியமில்லாமல் கத்தரித்து பேசியிருந்தாள், அனன்யா.

“அப்ப நடக்கிற விசயத்துக்கு வரலாம். வா..!, எப்ப பூ வைக்கிற ஃபங்சனுக்கு ட்ரீட் தரப்போற!”, எது எப்படிப் போனாலும் தனக்கு சோறு முக்கியம் என நின்றிருந்தாள், அகல்யா.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே, அனன்யாவை மேடையில் பேசிக்கொண்டிருந்த பெரியவர்கள் மேடைக்கு வந்து பெரியவர்களுக்கு வணக்கம் தெரிவிக்க வருமாறு அழைத்தனர்.

மேடைக்கு சென்றவளை அமர வைத்து சில சடங்குகள் செய்தனர். அதன்பின், மாப்பிள்ளை வீடு சார்பாக எடுத்து வந்திருந்த புடவை மற்றும் இதர பொருட்கள் அடங்கிய தாம்பூலத்தை அனன்யா கையில் கொடுத்து, புடவையை மாற்றி வருமாறு கூறி அனுப்பினர்.

அனன்யாவை அழைக்கும் முன்பே, மாப்பிள்ளையை அழைத்து பெண் வீட்டு சார்பாக, வேஷ்டி, சட்டை மற்றும் இதர தாம்பூலம் அடங்கியவற்றை கொடுத்திருந்தனர்.

மணமக்கள் இருவரும் அவரவருக்கு என ஒதுக்கட்டிருந்த மாடியில் இருந்த அறைகளில் ஆடைகளை மாற்ற சென்றிருக்க, அகல்யா வந்திருந்த நெருங்கிய கல்லூரித் தோழிகளை வரவேற்று உபசரிப்பு நிகழ்வாக பேசிக் கொண்டிருந்தாள்.

அனன்யாவிற்கு பியூட்டி பார்லரில் இருந்து வந்தவர்கள் உடைமாற்ற உதவி செய்தனர். அதனால் விரைவில் மாப்பிள்ளை வீட்டில் கொடுத்த புடவையை மாற்றிக் கொண்டு அறையிலிருந்து வெளிவந்திருந்தாள்.

அறையிலிருந்து வெளிவந்த அனன்யாவை, நவீனின் தாய் அழைத்துச் சென்று, தங்களின் வகை உறவுகளை அறிமுகம் செய்து வைத்தார்.

பெண் பார்க்கும் வைபவத்தில் மிகச் சிலர் மட்டுமே வந்து சென்றிருக்க, மற்றவர்களை அறிமுகம் செய்து வைத்த வருங்கால மாமியாரோடு அனன்யா சென்றிருந்ததை அகல்யா, தேவகி இருவரும் அறியவில்லை.

இதை அறியாத தேவகி, அகல்யாவை அழைத்து, மணமகள் அறையில் அனன்யா உடை மாற்றி வந்தபின் அறையை பூட்டி சாவியை எடுத்து வந்து தருமாறு பணித்திருந்தார்.

தேவகியின் சொற்கேட்டு மணமகள் அறைக்குச் சென்றாள் அகல்யா. கதவை பூட்டாமல் வெறும் தாழ்ப்பாள் இடப்பட்டிருந்த கதவைத் திறந்து அறைக்குள் சென்றவள், அனன்யா மஹாலுக்கு வரும்போது அணிந்திருந்த சேலையை கழட்டி அங்கிருந்த நாற்காலியில் போட்டிருந்ததைப் பார்த்தாள்.

பார்த்தவளுக்கு அதன்மேல் இருந்த நாட்டத்தில் கதவை பூட்டிக் கொண்டு புடவையை மாற்ற ஆரம்பித்தாள்.

அனன்யாவின் உடையை மாற்றிக் கொண்டு, இறைந்து கிடந்தவற்றை ஒதுங்க வைத்தாள் அகல்யா. அதேநேரம் கதவு தட்டப்பட,

கதவைத் திறந்தவளிடம்,

“உங்கள சீக்கிரமா கீழ கூட்டிட்டு வரச் சொன்னாங்க”, என ஒரு சிறுமி அனன்யா என நினைத்து அகல்யாவிடம் கூற

“இதோ வந்திரேன், நீ போ பாப்பா”, என்றவாறு சிறுமியை அனுப்பிவிட்டு, சாவியை எடுக்க உள்ளே போனவளை

அறைக்குள் நுழைந்தவர் பின்னோடு இதமாக அணைக்க
முதலில் அரண்டு பயந்தவள், ‘யாரு இது, அனன்யா கை மாதிரி இல்லயே, ஹல்க் மாதிரி யாரு பின்னாடி வந்து ஹக் பண்ணி பயமுறுத்தறது!’, என யோசித்தபடியே திரும்ப எத்தனிக்க, அதே நேரம்

“நான் தான், எதுக்கு இந்த பயம்!”, என அகல்யாவின் உடலில் எழுந்த அதிர்வை உணர்ந்த ஆணின் குரல் இதமாக அகல்யாவிற்கு தன்னை எடுத்துக் கூற, பரிட்சயம் இல்லாத, ஆனால் யாரென்று அகல்யா உணர்ந்த போதிலும், அவனைக் காணும் ஆவலில் திரும்பியவள், அங்கு நவீனைக் காண

அனன்யா என நினைத்து அகல்யாவை அணைத்த நவீன், கைவளைவில் தான் நினைத்தவள் இல்லாமல் வேறு ஒரு பெண்ணைக் (அகல்யாவைக்) கண்டு அவனும் பதற

“சாரி… நான் அனன்யானு”, என்று பேச ஆரம்பித்தபோதே வாயிலில் எதிர்பாராமல் வந்து நின்ற அனன்யா… அறைக்குள், நவீனின் கையணைப்பில் இருந்த அகல்யா இருவரையும் காண,

அகல்யாவை அணைத்திருந்ததை உதறிவிட்டு அகன்ற நவீன், அனன்யாவை அறை வாயிலில் கண்டு பதறியபடி, ‘சாரி… நீ.. உடுத்தியிருந்த மாதிரி.. புடவை பாத்து… நீதான் அப்டினு நினச்சு… அவங்..கள… சாரி’ என்று தயங்கியபடி அனன்யாவிடம் கூறியவன், அகல்யாவை நோக்கி மீண்டும், ‘சாரிங்க… அனன்யானு நினச்சு, ஐ’ம் ரியலி சாரி’ என்றவாறு, அறையை விட்டு தலையைக் குனிந்தபடியே இதயம் தடதடக்க வெளியேறி இருந்தான், நவீன்.

அகல்யாவின் சேலை மாற்றிய நிகழ்வால் வந்த எதிர்பாரா அணைப்பு தான் என்பதை உணர்ந்த அனன்யா,

“என்ன அகல்யா, எப்போ இங்கே வந்து ட்ரெஸ் மாத்துன!”, எனக் சாதாரணமாகக் கேட்க

“இல்ல அம்மாதான் இந்த ரூம் பூட்டி… சாவி எடுத்துட்டு வரச் சொன்னாங்க, இங்க வந்தப்போ… இந்த சாரி இருந்தது. உடனே எடுத்து மாத்திட்டேன்”, என குற்றவுணர்வுடன் அகல்யாவும் கூற

“உனக்கு அப்டி என்ன அவசரம்! சரி எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு. என் இன்ஸ்கெர்ட் லூசா கட்டினதால சாரி கீழ இறங்கி நடக்க அன் ஈஸியா இருக்குனு வந்தேன். இங்க வந்து பாத்தா, திறந்த அறையில் ரொமான்ஸ் சீன் ஓட்ற நீ!”, என்று கூறியபடியே அனன்யா இருந்த அசௌகரியங்களைச் சரி செய்துகொண்டாள்.

அகல்யாவும் அனன்யாவிற்கு உதவி செய்தாள். பிறகு, இருவரும் இணைந்து அறையிலிருந்து கீழே வந்தனர்.

அதற்கு மேல் அகல்யாவும் அனன்யாவிடம் எதுவும் பேசவில்லை. தேவகியிடம் சாவி குடுக்கச் சென்ற அகல்யா உடுத்தியிருந்த அனன்யாவின் சேலையைக் கண்டவுடன் தேவகிக்கு கோபம் வந்திருந்தது. அகல்யாவின் அருகே நின்றிருந்த அனன்யாவைப் பார்த்து முறைத்திருந்தார், தேவகி.

‘அகி என் சேலைய உடுத்தினதுக்கே… இந்த அம்மா இந்த முற முறைக்கறாங்க… இப்ப கொஞ்ச நேரம் முன்ன ரூம்குள்ள நடந்த ஹக்கிங் சீன பாத்திருந்தா அம்புட்டுதான்’ என நினைத்தபடியே தாயை விட்டு அகன்றிருந்தாள்.

அடுத்து பெண்ணை மேடைக்கு அழைத்து, நாத்தனார் முறையில் இருந்தவரை அழைத்து தலையில் பூ வைக்கச் செய்தனர். அதன்பின் மாப்பிள்ளையையும் மேடைக்கு அழைத்து ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக் கொள்ள செய்தார்கள்.

சற்று நேரத்திற்கு முன்பு நடந்த நிகழ்வால், முகம் சற்று குழப்பத்தை தத்தெடுத்திருக்க, நவீன் இயந்திரம் போல வந்து நின்றிருந்தான். அனன்யா வழமை போல இயல்பாக இருந்தாள்.

காண்பவர்கள் கண்களை அங்கிங்கு அகற்ற முடியாதபடியான பொருத்தமான ஜோடியாக வந்திருந்தர்களைக் கவர்ந்திருந்தது திருமண ஜோடி. அனைவரும் மனதார வாழ்த்தி பூ வைக்கும் விழாவை நடத்தி, ஆசிர்வதித்திருந்தனர்.

வந்திருந்தவர்கள் அனைவரும் நிறைவாக சென்றிருக்க, திருமண வைபவத்தில் முக்கிய ரோலில் பங்கு பெறும், மணமகன் மற்றும் மணமகளின் தோழியான அகல்யா இருவரும் குழப்பத்துடன் வீடு திரும்பியிருந்தனர்.

அகல்யா அடுத்து வந்த நாட்களில் அவளின் CDPO பணியில் மூழ்கியிருந்தாள். அனன்யா தனது தந்தையுடன் அலுவலகம் செல்வதும், தாயின் விருப்பப்படி ஷாப்பிங் சென்று வேண்டியதை தேர்ந்தெடுப்பதும் என நாட்களை கழித்திருந்தாள்.

நவீன் வழக்கம் போல அனன்யாவிடம் உறையாடினான். திருமணத்திற்கு வேண்டிய ஆடைகள் எடுக்க, நவீன் அனன்யாவை நேரில் வீட்டிற்கு வந்து தனது காரிலேயே அழைத்துச் சென்றான்.

பெரியவர்கள் அனைவரும் தனியே காரில் வந்திருக்க அனைவரும் சேர்ந்து திருமணத்திற்கு வேண்டியவற்றை பார்த்துப் பார்த்து எடுத்திருந்தனர்.

திருமணத்திற்கு பத்து நாட்களுக்கு முன் தோழியை அழைத்தாள், அனன்யா. பலமுறை அழைத்தும் அகல்யா அலைபேசியை எடுக்காததால், வீட்டில் இருந்த காரை எடுத்துக் கொண்டு தோழியைக் காண கிளம்பினாள்.

அகல்யா ஏன் அலைபேசியை எடுக்கவில்லை!…. அவளுக்கென்ன…!
———————————–