Ponnunjal-11
Ponnunjal-11
ஊஞ்சல் – 11
பள்ளி விழாவில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு கொடுப்பதற்காக அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் மைதானத்தில் கூடியிருக்க, மேடைக்கு அழைக்கப்பட்டாள் பத்மாக்ஷினி என்ற பொம்மி.
“பொம்மி என்கூட வா! உனக்கு ப்ரைஸ் குடுக்க போறாங்க” என்று வகுப்பாசிரியை அழைக்க,
“எனக்கு வேணாம்… நான் வரமாட்டேன்” – பொம்மி.
“போட்டோ பிடிச்சுக்கலாம்… எல்லாரும் கிளாப் பண்ணுவாங்க வாம்மா!”
“இல்ல… வேண்டாம்” என்று பிடிவாதம் பிடித்து தன் வகுப்பறைக்கு ஓடப் போக, அவளை அப்படியே தூக்கிக் கொண்டு மேடையில் நிற்க வைத்து விட்டார் வகுப்பு ஆசிரியர்.
“நான் பக்கத்துல இருக்கேன் பயப்படாதே!” என்று அவளை அறிந்தவராய் ஆறுதல் சொல்லி அருகில் நின்றிருக்க, சிறப்பு விருந்தினரின் உதவியாளாராக வந்த ஒருநபர் அவளைப் பார்த்து,
“பாப்பா! எப்படி இருக்க? உடம்பு சரி ஆகிடுச்சா? இப்போ திக்காமா பேசுறியா?” என்று கேட்டபடியே அவள் கன்னத்தை தடவி வாஞ்சையாய் கேட்க, புது மனிதனின் தொடுகையில் பயந்து பின்னடைந்தவள், மீண்டும் ஓடப் பார்க்க அவளை இழுத்து பிடித்து நிறுத்தினான் புதியவன்.
தன்னை தடுத்து நிறுத்தியவன் பிடியில் இருந்து விடுபட எண்ணி அவன் கையை கடித்து வைக்க, அந்த வலியில் அலறியவன்,
“இன்னும் அப்படியே தான் இருக்க போல?” என்று சொல்லிக்கொண்டே பலத்துடன் தன் கையை உதறும் போது மற்றொரு கையால் எதேச்சையாக அவளை தள்ளியிருக்க, மேடையின் விளிம்பில் நின்றிருந்தவள் கீழே தடுமாறி விழுந்தாள்.
கீழே உள்ள கூழாங்கற்களில் தலையின் பின்பகுதி மோதி சிறிய அளவில் சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தமும் வெளிப்பட, விழுந்த அதிர்ச்சியில் மயக்கமாகி இருந்தாள் பொம்மி.
சற்றும் தாமதிக்காமல் ரிஷபனுக்கு அழைத்து பொம்மியின் நிலையை சொல்லிவிட்டு, அடிபட்ட இடத்தில் பஞ்சை வைத்திருந்தனர். முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை எழுப்பி உட்கார வைத்தாலும் சுற்றும்முற்றும் பார்த்து ஒன்றும் புரியாமல் தன் அழுகையை ஆரம்பித்திருந்தாள்.
சின்னாவும் உடனே அங்கே வந்து சமாதனம் சொல்லியும் அவனுடன் பேசவில்லை. பயத்தினால் அழுகிறாள் என்று அவளை அறிந்து கொண்டவன்,
“அழுகாதே பொம்மி!” என்று பக்கத்தில் அமர, அவள் பின்னே சென்றாள்.
“பொம்மி! சீனிப்பாவும் அச்சும்மாவும் இப்போ வந்துடுவாங்க… நான் சின்னையா… என்கிட்டே பேசு…” என்று அவள் போக்கிலேயே சென்று பேசினாலும், அழுகையில் கரைந்து கொண்டிருந்தாள்.
பெற்றோர் வரும்போது பொம்மியை சுற்றி கூட்டம் கூடி விட்டது. அவளை விசாரித்த புதியவனுக்கும் கையில் கடிபட்ட இடத்தில் சற்று வீக்கமும் லேசாக ரத்தமும் வந்திருக்க, மருந்தைப் போட்டுக் கொண்டு அழும் குழந்தையின் அருகில் அமர்ந்திருந்தான்.
பெண்ணைத் தேடிவந்த ரிஷபனையும் அசலாட்சியையும் ஒன்றாய் பார்த்த புதியவன், அசலாவை அடையாளம் கண்டுகொண்டு
“என்னைத் தெரியுதா சிஸ்டர்? உங்க பொண்ணு இருந்த ஹாஸ்பிடல்ல நான்தான் வார்டு செக்ரட்ரியா இருந்தேன். இப்போ பாப்பா எப்படி இருக்கு? ட்ரீட்மெண்ட் கண்டினியயூ பண்றீங்க தானே? உங்க பிரச்சனை எல்லாம் முடிவுக்கு வந்திடுச்சா?” என்று தன்போக்கில் அவன் கேள்விகள் கேட்டுக் கொண்டே போக, அசலா அந்த இடத்திலேயே ஸ்தம்பித்து நின்று விட்டாள்.
தங்களை பற்றி அறிந்தவர்களின் குறுக்கீடுகள் இல்லாமல் இருக்கத்தானே இங்கே வந்து பதுங்கிக் கொண்டது. அதை தகர்த்தெறியும் வண்ணம் இப்பொழுது இவன் கேட்ட கேள்விகள் மீண்டும் அவள் மனதில் இடியை இறக்க, வாயடைத்து நின்று விட்டாள்.
ரிஷபன் அழும் மகளை சமாதானப்படுத்த பார்க்க, அவளோ அவனைத் தொட அனுமதிக்கவில்லை. கீழே விழுந்த அதிர்ச்சியில் என்ன ஏதென்று தெரியாமல், யாரையும் அறிந்து கொள்ளாமல் சத்தம் போட்டு தன் அழுகையை தொடர்ந்து கொண்டிருந்தாள் பொம்மி.
அசலாட்சியும் புதியவன் கேள்வியில் உறைந்து போய் நிற்க, அந்த நேரத்தில் மகளை பார்க்காமல் செயலற்று நிற்கும் மனைவி மீது கோபம் கொண்டு,
“சாலா இவளப் பாரு! அப்புறம் பேசலாம்” என்று கடிந்து கொண்டவன்,
“அம்மு அழாதேரா! உனக்கு ஒன்னுமில்ல… வா போவோம்” என்று அவளை தூக்கிக் கொள்ள அவனிடம் வரவில்லை.
“நான் கூப்பிட்டாலும் பேச மாட்டேங்குறா நாணா! ரொம்ப அழுதுகிட்டே இருக்கா!” என்று சின்னாவும் தன் முயற்சியை சொன்னான்.
கணவனின் அதட்டலில் மகளின் அருகில் வந்த அசலாவும் அணைத்துக் கொள்ள முன்வர, அவளிடமும் வராமல் உட்கார்ந்தபடியே பின்னடைந்தவளை வம்படியாக தோளில் போட்டுக் கொண்டான் ரிஷபன்.
அடிபட்ட இடத்தில் இருந்து வழிந்த இரத்தத்தை அசலாட்சி துடைக்க வர, அதையும் மறுத்து தன் தலையை பலமுறை அசைக்க, அந்த அயர்விலேயே மீண்டும் மூர்ச்சை ஆகி விட்டாள் பொம்மி.
நீண்டநேர அழுகையில் எப்பொழுதும் மூர்ச்சை அடைபவள், இன்று அடிபட்ட அதிர்ச்சியும் சேர்ந்து விட மீண்டும் மயக்க நிலைக்கு சென்று விட்டாள்.
பெற்றவளையும் மறுத்து தன்நிலை தெரியாமல் அழுத குழந்தையை பார்த்து அங்கே உள்ளவர்களுக்கும் மனதில் பெரும் வலியை ஏற்படுத்தியது. அசலாட்சியும் தன் மகளின் நிலையை பார்த்து அந்த இடத்திலேயே அழுகையில் கரைய, “கொஞ்சம் அமைதியா வா சாலா!” என்ற கணவனின் கண்டிப்பில் தன் வருத்தத்தை அடக்கிக் கொண்டு அவனை பின் தொடர்ந்தாள்.
நகரியில் ஏற்கனவே அழைத்து வந்திருந்த பல்நோக்கு மருத்துவமனைக்கே பொம்மியை அழைத்து வந்திருந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் பொம்மிக்கு சிகிச்சை தொடர்ந்து கொண்டிருக்க, வெளியே மொத்தக் குடும்பமும் காத்துக் கொண்டிருந்தது.
அசலாட்சியின் தந்தை சுந்தரராஜுலு தன் கையோடு கொண்டு வந்திருந்த பொம்மியின் மருத்துவக் கோப்புகளை மருத்துவரிடம் சேர்க்குமாறு அங்கே ஒப்படைத்திருந்தார். சொல்லில் அடங்காத இறுக்கங்கள் அனைவரின் முகத்திலும் மனதிலும் ஆட்சி செய்ய யாரும் யாரையும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
ரிஷபனுக்கும் அத்தனை சங்கடம் மனதில் இருக்க, அழும் மனைவியையும் சமாதானப்படுத்துவதை மறந்து அங்கே நின்றிருந்தான். அனைவருடனும் பேசி சகஜமாக்கும் வேலையை சின்னா ஒருவன் மட்டுமே செய்து கொண்டிருந்தான்.
“அழாதீங்கம்மா! பொம்மி சீக்கிரம் கண்ணு முழிச்சுருவா” என்று அசலாவை சமாதானப்படுத்த,
“என்னை பார்த்தா அழுகைய நிப்பாட்டிடுவா! இப்போ பக்கத்துலகூட வராமா இருக்காளே? என்ன ஆச்சோ தெரியலையே?” என்று சொன்னவளின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
அடுத்ததடுத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவர் குழந்தையின் நிலையை விளக்கிய நேரம் மாலைப்பொழுதும் கடந்திருந்தது.
“பயப்படுற அளவுக்கு சீரியஸ் இல்ல மிஸ்டர்.ரிஷபன்… பேபிக்கு கீழே விழுந்த அதிர்ச்சியிலதான் இந்த மயக்கம்… இருபத்திநாலு மணிநேரத்துல கண்ணு முழிச்சுடுவா!” என்று கூறி பெற்றோரின் மனதை அமைதிப்படுத்தியவர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.
“ஏற்கனவே இதே கம்ப்ளைன்டோட இங்கே கூட்டிட்டு வந்தீங்க தானே சார்?” என்று ரிஷபனைக் கேட்க ‘ஆம்’ என்று தலையாட்டினான்.
“பெரிய அளவுல பிரச்சனை இல்ல! பயந்து போய் இருந்திருக்கா… அதோட அடிபட்ட வலி, அதிர்ச்சி எல்லாம் சேர்ந்து அவளுக்கு என்ன எதுன்னு நினைவு கொஞ்சம் மறக்க வச்சுருக்கு… இது சாதாரணமா எல்லாருக்கும் நடக்குற அதிர்ச்சி செயல்தான்… ஸ்கேன் ரிப்போர்ட் எல்லாம் நார்மலா இருக்கு” என்று பெற்றவர்களின் மனதை சாந்தப்படுத்திய வண்ணமே மருத்துவர் குழந்தையின் அந்த நேரத்து நிலையை கூறி,
“பேபியோட பழைய ரிப்போர்ட் பார்த்துட்டேன்! எத்தன நாளா இருக்கு இந்த பிரச்சனை?” என்று மருத்துவர் கேட்க,
“ஒன்ரறை வருஷமா இருக்கு!” என்று பதிலளித்த அசலாட்சி நிமிடத்திற்கு நிமிடம் தணலில் நிற்பதைப் போல் தத்தளித்தாள். பள்ளியில் நடந்த சம்பவத்திற்கே புத்தி பேதலித்து இருந்தவள், சொல்லாமல் மூடி மறைத்த பொம்மியின் நிலையை கணவன் முன்பு மருத்துவர் கேட்டதும் உடலெங்கும் நடுக்கம் ஏற்பட, அவன் முகத்தைப் பார்க்க அஞ்சியே தலை குனிந்தே இருந்தாள்.
இப்படி ஒன்று இருப்பதே ரிஷபனுக்கு தெரியாது… இன்னும் அவனுக்கு தெரியாமல் என்னனென்ன விஷயங்கள் உள்ளனவோ என்று அவனுக்கு யோசிக்கவும் நேரம் கொடுக்காமல் மருத்துவர் இருவரின் கவனத்தையும் தன் பக்கம் திசை திருப்பினார்.
“பேபிக்கு இன்னும் ட்ரீட்மென்ட் கண்டினியூ பண்றீங்களா சார்? என்ன டேப்ளேட் குடுக்கிறீங்க” – மருத்துவர்.
“இல்ல… ரெண்டுமாசமா நைட் குடுக்கிற டேப்ளேட் நிப்பாட்டி இருக்கேன் டாக்டர்” என்று அசலாட்சி பதில் அளித்தாள்.
“டாக்டர் அட்வைஸ்ல நிப்பாட்டினிங்களா?” – டாக்டர்
“இல்ல… பாப்பா நார்மலா இருக்க ஆரம்பிச்சா… அத பார்த்துட்டு நானாதான் நிப்பாட்டினேன்”– அசலாட்சி.
“அப்படி செய்யக் கூடாதும்மா… பொதுவா மன அழுத்தத்துக்கு கவுன்சிலிங் ரொம்ப முக்கியம். தூக்கமின்மை, பதற்றம் இந்த ரெண்டையும் குறைக்கத்தான் ஆரம்ப கட்டத்துல மாத்திரைகள் தேவைப்படுது. தூக்கம் இயல்பான நிலைக்குத் திரும்பிட்டா மாத்திரைகளை நிறுத்திடலாம். ஆழ்நிலை உறக்கம் மட்டுமே மிதமான மனஅழுத்தத்துக்கு நல்ல பலன்களைத் தரும். நீங்க அவசரப்பட்டு இந்த ரெண்டையும் நிறுத்தினதுல, குழந்தையோட மனநிலை இன்னும் பின்னோக்கி போக ஆரம்பிச்சுடுச்சு… அதனோட எதிரொலிதான் பிடிவாதம், மத்தவங்கள தாக்குறதுன்னு அழுத்த நிலைக்கு அவங்க மனம் திசை திரும்பி இருக்கு” என்று அசலாட்சி செய்த தவறினை சுட்டிக்காட்ட இருவருக்கும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
“இத சரி பண்றதுக்கு என்ன வழி டாக்டர்?” என்று மகளின் நிலையில் பதறிய ரிஷபன், சுதாரித்துக் கொண்டு கேட்க,
“ரொம்ப சிம்பிள் சார்… நாங்க கொடுக்குற கவுன்சிலிங், அதோட நாங்க சொல்ற மருந்துகளை தொடர்ந்து சில காலங்கள் எடுக்க வேண்டி வரும். சத்தான உணவு, ஆரோக்கியமான பழக்கவழக்கம், அவங்களுக்கு பிடித்தமான ஒரு விஷயத்துல மனச ஒரு நிலைப்படுத்தி அதுல ஈடுபட வைச்சாலே போதும். ரொம்ப சீக்கிரமா பேபிய நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துடலாம். நீங்களும் உங்க குழந்தையும் கொடுக்குற ஒத்துழைப்புதான் இங்கே முக்கியம்” என்று தீர்வை சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.
“என்னம்மா சொன்னாங்க டாக்டர்?” சுந்தர்ராஜுலு.
“ஒன்னும் பிரச்சனை இல்லன்னு சொல்லிட்டாங்கப்பா!” என்றவள் மருத்துவரின் விளக்கத்தையும் கூறினாள்.
“நல்லா இருக்கான்னு சொன்னியே அசலா! பின்னே எப்படிம்மா இவ்ளோ அழுகையும் பிடிவாதமும் வந்துச்சு” என்று சுந்தரராஜுலு அதிர்ச்சி அகலாமல் கேட்க,
“போனவாரம் தான் ஸ்கூல்ல இவளோட மாற்றத்தை சொன்னாங்க… என்ன செய்யலாம்னு யோசனை பண்றதுக்குள்ள இப்படி ஆகிடுச்சுப்பா!” – சோர்வடைந்த குரலில் அசலாட்சி பதில் அளிக்க,
“என்ன யோசனை பண்ணிருப்ப சாலா? நான் டாக்டர பார்க்கலாம்னு சொல்லறப்ப எல்லாம் வேண்டாம்னு ஒதுங்கிப் போயிட்டு இப்போ உக்கார்ந்து அழுது என்ன பிரயோசனம்?” என்று சமயம் பார்த்து தன் மனத்தாங்கலை சொல்லிக் காட்ட, அசலாவால் பதில் சொல்ல முடியவில்லை.
“அவளோட பிரச்சனைய சரிபண்ண நான் உன்கிட்ட பேசினா, அவளோட ரகசியம் எனக்கு தெரியக்கூடாதுனு நினைச்சே, குழந்தைய ஒரு புள்ளியில நிப்பாட்டி வச்சுட்ட!” என்று தன் குமுறல்களை அடுக்கிக் கொண்டே போனான்.
“நடந்து முடிஞ்சத சொல்லி உன்னையும் சங்கடபடுத்த வேண்டாமேன்னுதான் உன்கிட்ட சொல்லல வாசு!” என்று ரிஷபனின் தந்தை விளக்க முற்பட,
“அப்ப என் குழந்தைய பத்தி தெரிஞ்சுக்க எனக்கு உரிமையில்லையா? இல்ல… அவ்வளவுக்கு அக்கறை இல்லாதவன்னு என்னை நினைச்சுட்டீங்களா?” என்று அனைவரையும் கடிந்து கொண்டவன்,
“என்கிட்டே சொல்லாம விட்டத பத்தி நான் எதுவும் சொல்ல விரும்பல… ஒரு குழந்தையோட எதிர் காலத்தை கேள்விக் குறியாக்கியாக்கினத தான் என்னால ஏத்துக்க முடியல!” என்று சொல்லியவன் குரலில் ஆதங்கத்துடன் கூடிய கோபம் அப்பட்டமாக வெளிப்பட்டது.
“மருந்து கொடுத்திட்டு இருக்கோம் அல்லுடு! அசலா சொல்லலையா?” – சுந்தரராஜுலு
“எனக்கு தெரிஞ்சு உங்க பொண்ணு மருந்து குடுத்து நான் பார்த்ததில்ல” என்று காட்டமாய் பதில் அளித்தான் ரிஷபன்.
“நல்லா இருக்கா… எல்லார் கூடவும் சிரிச்சு பழக ஆரம்பிச்சுட்டான்னு நான்தான் கொஞ்சநாள் நிப்பாட்டி வச்சேன்…” என்று தன் மடத்தனத்தை எண்ணி நொந்தவாறே பலவீனமான குரலில் சொன்னவள்,
“இப்படி என்னை பார்த்தும் பயப்படுவான்னு நான் நினைச்சு பாக்கல” என்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
நிகழ்வுகளின் தாக்கம் அவளை அத்தனை பாடுபடுத்தி இருந்தது. எதையெல்லாம் மறக்க வேண்டும் என்று நினைத்து வந்தாளோ, அவையெல்லாம் இப்போழுது கண்முன்னே நடமாடுவது போன்ற பிரமை தோன்ற, தன்னால் தன் மகளுக்கு ஏற்பட்ட பின்னடைவை சொல்லிச் சொல்லியே மாய்ந்து போனாள்.
“எப்போ என்னோட கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதோ தெரியலையே? எனக்கு பொறந்த பாவத்துக்காக என் பிள்ளையும் என்னவெல்லாம் அனுபவிக்க போறாளோ?” என்று புலம்பியபடியே தரையில் அமர்ந்து கதற ஆரம்பித்து விட்டாள்.
யாருடைய சமாதானமும் அவளை சமன்படுத்தவில்லை. மனைவியின் கதறல்கள் கணவனை வேதனையின் விளிம்பில் தத்தளிக்க வைக்க, கோபத்தை ஒதுக்கி வைத்து அவளை தோளோடு அணைத்துக் கொண்டவன்,
“சாலா! நடந்து முடிஞ்சத நினைச்சு அழுதிட்டு இருக்க இப்போ நேரம் இல்ல… இதுவரை என்ன நடந்ததோ எனக்கு தெரியாது? ஆனா இனிமே நடக்கப்போற எல்லாமே என் பொண்ணுக்கு நல்லதாவே நடக்கும்னு என்னால உறுதி குடுக்க முடியும். என் மேல நம்பிக்கை வை! நம்ம பொண்ண நல்ல படியா வளர்க்க வேண்டிய பொறுப்பு என்னோடது” என்று சூழ்நிலையை கையில் எடுத்துக் கொண்டான். சற்று நேரம் அவளை ஆறுதல் படுத்தியவன், அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்து மனைவியுடன் மருத்துவமனையில் தங்கிக் கொண்டான்.
அந்த நேரத்தில் கோபத்தை வெளிக்காட்டி அனைவரின் மனதையும் அலைகழிக்க ரிஷபன் விரும்பவில்லை. அவனுக்கும் ஆதங்கம் இருக்கத்தான் செய்தது. ஆரம்ப நாட்களில் தன்மேல் நம்பிக்கை இல்லாமல் தன்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டார்களே என்று மனதிற்குள் மருகிக் கொண்டு இருந்திருக்கிறான். ஆனால் அதை எல்லாம் வெளிக்காட்டும் சமயம் இதுவல்ல என்று சூழ்நிலையின் தீவிரத்தை அறிந்தவன் தன்னை அடக்கி கொண்டு அமைதி காத்தான்.
அழுது ஒய்ந்து போயிருந்தவள் இரவின் அமைதியில் கணவனின் தோளில் ஆறுதலாய் தலை சாய்ந்திருக்க, அந்த நேரத்து மௌன நிலையை அவளே உடைத்து பேசத் தொடங்கினாள்.
“என் மேல உங்களுக்கு கோபம் இல்லையா பாவா?”
“எதுக்கு கோபம் வரணும் சாலா?”
“பொம்மிய பத்தி இதுவரைக்கும் நான் உங்ககிட்ட சொல்லாம இருக்குறது உங்களுக்கு வருத்தத்தை தரலியா?”
“உன்மேல மட்டுமில்ல… வீட்டுப் பெரியவங்க மேலயும் எனக்கு கோபம் இருந்தது… புருஷன் மேல நம்பிக்கை இல்லாம இருக்காளேனு உன்மேல ஆதங்கம் வந்தது. ஆனா ஒரு பொண்ணோட அம்மாவா, அவளுக்காக நீ தவிச்ச தவிப்ப பார்க்கும் போது நடந்தது அவ்வளவு சுலபமா எடுத்துக்கிற விஷயம் கிடையாதுனு என்னை நானே சமாதானம் படுத்திக்கிட்டேன். அதனாலதான் உன்னை மறுபடியும் கேட்டு வற்புறுத்தல…” என்று கணவன் சொல்லச்சொல்ல அந்த இடத்திலேயே அவனை கட்டிக் கொண்டு கதறி விட்டாள் மனைவி.
“ஏன் பாவா? அன்னைக்கு என் பக்கத்துல இல்லாம போனீங்க? எதுக்கு கடவுள் அந்த நேரத்துல உங்களை எங்ககிட்ட இருந்து பிரிச்சு வச்சாரு?” என்று அந்த நாளின் நினவிலேயே உழன்று கொண்டிருந்தவள் மறுபடியும் புலம்பத் தொடங்க,
“கொஞ்சம் அமைதியா இரு சாலா! இனிமே பொம்மிய எப்படி பார்த்துக்கணும்னு யோசி! நடந்து முடிஞ்சதா மறக்க பாரு!” என்று இயன்ற வரை ஆறுதல் படுத்தினாலும் அவள் அடங்கவில்லை.
“இனிமே உங்க பொறுப்புல அவ வளரப்போறா! இத விட எனக்கு வேறென்ன நிம்மதி வேணும்? என்னோட வேதனை எல்லாம் உங்கள பத்தி புரிஞ்சுக்காம, நடந்ததா மறைச்சுட்டேனேனு தான் வருத்தப்படுறேன் பாவா!”
“நீ எதிர்கொண்ட கஷ்டங்கள், யாரையும் அவ்வளவு ஈசியா நம்பச் சொல்லியிருக்காது! அதுவுமில்லாம நானும் உனக்கு நம்பிக்கை வர்ற மாதிரி நடக்க தவறி இருக்கலாம்… இனி அதை பத்தி பேசவேணாம் சாலா!”
“இல்ல பாவா… எல்லாத்தையும் சொல்லிட்றேன். அவள பத்தி முழுசா தெரிஞ்சுட்டு உங்க கவனத்தை அவமேல வைங்க” என்று சொன்னவள் தங்களுக்கு நடந்த துயரங்களை சொல்ல ஆரம்பித்தாள்.
“அன்னைக்கு கடைக்கு போற அவசரத்துல பின்வாசலை நான் மூடாம போயிட்டேன் பாவா! என்னோட கெட்ட நேரம் அங்கே இருந்து ஆரம்பிச்சது… திரும்பி வந்து நான் வீட்டுல பாக்குறப்போ என் பொண்ணு… என் பொம்மிக்கு.. எப்படி சொல்வேன்? ஒரு அம்மா தன்னோட பொண்ணை எந்த நிலையில பார்க்கக் கூடாதோ அந்த நிலையில பார்த்து அங்கேயே செத்தும் போயிட்டேன் பாவா…” என்று அரற்றியவளின் மனம் அன்றைய தினத்திற்கு சென்றது.