Avanindri oranuvum – 11

அவனன்றி ஓரணுவும் – 11

13,750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ‘பிக் – பேங்க்’பெருவெடிப்பின் போது வாயுக்கள் உருவாகி பின்னர் அதில் உள்ள அணுக்கள் ஒன்றிணைந்து பிரபஞ்சமும், அதில் உள்ள மற்ற பொருட்களும் உருவானதாக விஞ்ஞானம் கூறுகிறது.

எலெக்டிரான், நியுட்ரான், பிரோட்டான்,என்ற 3 உட்பொருட்களின் சேர்க்கைதான் அணு. பிரம்மா, விஷ்ணு, சிவன் போல!

இதைதான் நம் மெய்ஞானம்,‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்ற வாக்கியத்தின் மூலம் எல்லாம் இறைவனின் செயல் என்று உணர்த்துகிறது.

பிரபஞ்சனின் கைவளைக்குள் இருப்பதை உணர்ந்த ஷெர்லியின் கன்னங்கள் செம்மையேறின. அவனின் அணைப்பும் நெருக்கமும் அவள் ஏற்றியிருந்த போதைக்கெல்லாம் மேலான போதை ஒன்றை அவள் உணர்ச்சிகளுக்குள்  கிடத்திற்று. அதுதான் காதல் போதை!

மனித இனம் பொக்கிஷமாக கருதும் தன் உயிரையும் கூட ஒன்றுமில்லை என்றளவுக்கு போக்கி கொள்ள துணிய வைக்கும் ஆபத்தான போதை அது. அந்த போதைக்குள் அவள் எப்போது சிக்கி கொண்டால் என்று அவளுக்கே தெரியவில்லை.

ஆனால் அதிகம் தெரியாத பழகாத ஒருவன் இருப்பிடத்தில் வந்து தங்குமளவுக்கு தைரியம் கொடுத்திருக்கிறது என்றால் அவள் எந்தளவுக்கு அந்த போதையில் கிறங்கி இருப்பாள்?!

ஷெர்லி அந்த சில வினாடி பொழுதில் பிரபஞ்சனின் பச்சை நிற விழிகளுக்குள் தொலைந்து போய் கொண்டிருந்தாள். ஆழமாக இன்னும் இன்னும் ஆழமாக என்று அவள் காமத்திற்கும் காதலுக்கும் இடையிலான அந்த கோட்டை அழித்து விட வேண்டுமென்று எண்ணி கொண்டிருந்தாள். அப்படியாக அவனுக்கு அவளுக்குமாய் இடையிலிருந்த இடைவெளியையும் கூட!

அது அவளுக்குள் குடியேறிய போதைகளின் தாக்கம். ஒன்று சுயநினைவை கெடுக்கும். இன்னொன்று சுயத்தையே இழக்க வைக்கும்.

இத்தகைய ஆபத்தான மனநிலையிலிருந்த ஷெர்லியின் உணர்ச்சிகளை பிரபஞ்சன் கொஞ்சமும் கவனிக்கவில்லை. ஏன் பொருட்படுத்தவேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அவன் அவளை விழாமால் தாங்கி பிடித்து கொண்டான். அவ்வளவுதானே தவிர அதனால் எல்லாம் அவனுக்குள் எந்தவித காதல் மாற்றங்களும் நிகழவில்லை. உடலோடு உடல் உரசி கொண்டால் காதலும் காமும் பொங்கி பெருகும் என்று அவன் நம்புவதில்லை. அதை காட்டிலும் மேலான ஆயிராமாயிரம் சிந்தனைகள் அவன் மூளைக்குள் சுற்றி சுழன்று கொண்டிருந்தன.

ஆதலால் பிரபஞ்சன் லாஜிக் இல்லாத தமிழ் சினிமா போன்று டூயட் பாட வித்தியாசமான வெளிநாட்டு லொகேஷனுக்கு எல்லாம் பறந்து  செல்லாமல் ஷெர்லியை விடுவித்து தள்ளி நிறுத்தினான். அவன் அப்படி செய்ததில் அவள் முகத்திலோ அத்தனை ஏமாற்றம்.

அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று அவளிடம் பெரும்பாலான ஆண்கள் பலவிதமான வழிமுறைகளில் வலை வீசிய போதும் அவற்றையெல்லாம் அவள் துச்சமாக தூக்கியெறிந்துவிட்டு கடந்து வந்திருக்கிறாள். ஆனால் இன்று அவளை ஒருவன் துச்சமாக தூக்கியெறிவதை அவளால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை.

ஆனால் ஷெர்லிக்கு இப்போது வரை தெரியாது. பிரபஞ்சனின் உணர்வுகளோடு அவள் விளையாடி கொண்டிருக்கிறாள் என்று. எந்த பெண்ணையும் தன் கண்ணியமான பார்வையாலேயே தள்ளி நிறுத்தும் வல்லமை கொண்ட பிரபஞ்சன் ஷெர்லியிடம் மட்டும் விலகி ஓடி கொண்டிருந்தான். அவளிடமிருக்கும் ஏதோ ஒன்று தன்னை வசப்படுத்துகிறது என்பதை புரிந்து கொண்டவன் அந்த நெருக்கத்திலும் அவள் முகத்தை ஏறிட்டும் பார்க்காமல் தள்ளி நிறுத்தினான்.

அவளின் நெருக்கம் அவனை சஞ்சலப்படுத்தாது. ஆனால் அவளின் ஒற்றை பார்வை அந்த காரியத்தை சாதித்துவிடலாம். அதனாலேயே அவள் விழிகளை நேர்கொண்டு பார்க்கவில்லை. அவளை தள்ளி நிறுத்திய அடுத்த கணமே அவளை கடந்து நேராக ஹரிஹரன் படுத்திருந்த சோபாவின் அருகில் வந்தான்.

அவரோ அந்த சோபாவில் முழுவதமாக ஆக்கிரமித்து படுத்து உறங்கி கொண்டிருந்தார். இல்லை! மயக்கம் உறக்கம் இரண்டிற்கும் இடைப்பட்ட கலக்கத்தில் இருந்தார். அவர் உதடுகள் முனகி

கொண்டிருந்தன.

“சார்… என்ன வேலை இதெல்லாம்?” என்று சற்றே ஆவேசமாக அவர் தோள்களை குலுக்கினான் பிரபஞ்சன். அந்த வார்த்தைகளில் அக்கறை கோபம் இரண்டுமே சரிவிகிதமாக கலந்திருந்தது.

“ஏ! பிரபா வந்துட்டியா?” என்று கண்களை உடனடியாக திறந்து போதை நிலையிலேயே கேட்டவர் மீண்டும் சொற்ப நொடிகளில் விழிகளை மூடி உறங்கிவிட்டார்.

பிரபஞ்சனுக்கோ அவர் செய்கையை பார்த்து கோபம் கோபமாக வந்தது. தன்னை இப்படி பிரச்சனையில் சிக்க வைத்துவிட்டாரே என்று கடுப்பில் அவன் நின்று கொண்டு,

“கொஞ்சம் கூட அறிவே இல்ல… ஒரு பொண்ணை வைச்சுக்கிட்டு அதுவும் அவளையே கம்பெனிக்கு வைச்சிக்கிட்டு இப்படி லிமிட்டை தாண்டுற அளவுக்கு குடிச்சிருக்காரே… இவரை” என்று எரிச்சலோடு ஹரியின் நிலையை பார்த்து சத்தமாகவே புலம்பி கொண்டிருந்தான்.

அவன் சொன்னது ஷெர்லியின் காதுகளுக்கு எட்டியது.

அந்த போதை நிலையில் அந்த வார்த்தையின் அர்த்தம் அரைகுறையாக அவள் மூளைக்கு சென்று சேர்ந்தது. அதுவும் அவன் கடிந்து கொண்டது என்னவோ  ஹரியைதான். ஆனால் அது அவளை குறிப்பிட்டு சொன்னது போல் உணர்ந்த நொடி அவளுக்கு சுரீன்று தைத்தது.

“ஸ்டாப் இட்… நான் ஒன்னும் என் லிமிட்டை க்ராஸ் பண்ணல” என்று சத்தமாக அவள் சொல்ல பிரபஞ்சன் அவள் புறம் திரும்பி பார்த்தான்.

இப்படி ஆவேசம் மிகுதியால் சொல்லிவிட்டு அவள் நிற்க தெம்பில்லாமல் மீண்டும் தள்ளாடி விழ போனாள்.

“ஏ! பாத்து ஜாக்கிரதை” என்று அவள் விழுந்து விடுவாளோ என்ற பதட்டத்தில் நெருங்கியவன் உணவு மேஜைக்கு அருகிலிருந்த நாற்காலியை நொடி நேரத்தில் இழுத்து போட்டு அவளை அமர வைத்தான். அவள் கூந்தல் முழுவதும் அவள் முகத்தின் மீது சரிந்தது.

அதனை ஒதுக்கி விட்டபடி அவனை அவள் நிமிர்ந்து பார்க்க,

“இதான் உங்க லிமிட்டா ஷெர்லி?!” என்று கொஞ்சம் கோபமாகவே கேட்டான்.

அந்த வார்த்தையில் அவள் முகம் கன்றி போனது. உதட்டை சுழித்து கொண்டு தலையை சிலுப்பி கொண்டு,

“நான் லிமிட்டோடதான்  டிரிங் பண்ணேன்… நான் ஒரு பெக் ஹரி ஒரு பெக்னு கால்குலேடிவாதான் ஸ்டார்ட் பண்ணேன்… பர்ஸ்ட் ரவுண்ட் தென் செக்ண்ட் தர்டு போனதும்” என்றவள் நிறுத்திவிட்டாள்.

அவன் அவள் சொல்லும் கதைகளை கேட்க பொறுமையின்றி கடுப்போடு நிற்க, அவள் பாட்டுக்கு விரல்களை விட்டு எண்ணி கொண்டே,

“நான் என் லிமிட்டை க்ராஸ் பண்ணி இருக்க மாட்டேன்… பட் ஸ்டில்ல்ல்ல்” என்றவள் இழுத்து யோசிக்கிறேன் பேர் வழி என்று விதவிதமாக அவள் முகத்தில் பாவனைகளை மாற்றி கொண்டிருந்ததை பார்த்த பிரபாவின் உதடுகளில் புன்னகை எட்டி பார்த்தது.

அவன் சுவாரசியமாக அவள் பாவனைகளை ரசித்து கொண்டே, “ம்ம்ம் ஸ்டில் என்ன?” என்று கேட்க,

“ஸ்டில்… என்னால ஸ்டாப் பண்ண முடியல” என்று அவள் நிறுத்தி நிதானமாக உறைத்தாள்.

“ஏன்? பாட்டில் காலியாகலையா?” என்றவன் கேலி புன்னகையோடு கேட்க,

“நோஓஓஓஓ” என்று அவனை ஏறிட்டு பார்த்து,

“ஹரியோட லைப்ல நடந்த ட்ரேஜடி… ஒஎம்ஜி!!! என் லிமிட்டை கிராஸ் பண்ண வைச்சிடுச்சு …  இட்ஸ் ஹார்ரிபிள்” என்று சொல்லியவளின் முகத்தில் ஆழமான வேதனை தெரிந்தது.

அத்தனை நேரம் சிரித்த முகமாக அவள் பேசுவதை கேட்டு கொண்டிருந்தவன் சட்டென்று அவள் அவ்விதம் பேசவும் திகைத்து போனான்.

அவள் மேலும், “ஹரி ரொம்ப பாவம் ஹான்சம்! ஸோ சேட்” என்று சொல்லி வருந்த அவன் வியப்பு அடங்கவில்லை. நெருங்கிய சொந்தங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக இழந்த ஹரிக்கு மற்ற சொந்தங்கள் யாருமே பெரியளவில் ஆறுதலாக இல்லை. எல்லோருமே சொத்துக்காக அவரை சுற்றி வந்தார்களே ஒழிய உண்மையில் அவர் வேதனைகளை பகிர்ந்து கொள்ள விழையவில்லை என்பது பிரபஞ்சனை அவர் தத்தெடுத்த போதுதான் அவருக்கு தெரியவந்தது.

இனி சொத்து கிடைக்காது என்ற கடுப்பில் அவரருகில் இருந்த சொந்தகள் அவரை பலவிதமாக  காயப்படுத்திவிட்டு விலகி சென்றுவிட்டனர். தன் மனவலிகளை அவர் அவனை தவிர இதுவரையில் யாரிடமும் பகிர்ந்து கொண்டதுமில்லை. யாரின் மீதும் அவருக்கு அந்தளவு நம்பிக்கையும் ஏற்படவில்லை.

ஆனால் ஷெர்லியிடம் அவர் மனம் திறந்து தன் வேதனைகளை பகிர்ந்து கொண்டிருப்பது அவனுக்கு ஆச்சரியமூட்டியது. அவளோ வருத்தம் கொண்டதோடு அல்லாமல் கண்ணீரோடு முகத்தை தாழ்த்தி கொள்ள, அடுத்தவர்களின் துயரங்களுக்காக அழும் அவள் புனிதமான மனம் அவன் மனதை நெகிழ்த்திவிட்டது.

அவன் அவள் அருகில் ஓர் இருக்கையை போட்டு அமர்ந்து, “ஷெர்லி இட்ஸ் ஒகே… அதெல்லாம் எப்பவோ முடிஞ்சு போன விஷயம்… இப்போ எதுக்காக அதையெல்லாம் நினைச்சு அழுதுக்கிட்டு” என்று அவளை சமாதானப்படுத்த முயன்றான்.

“பட் பேமிலியை மிஸ் பண்ண பெய்ன் இன்னும் இருக்கும்தானே… உங்களுக்கும் ஹரிக்கும்” என்று அவள் அவன் முகத்தை நேர்கொண்டு பார்க்க, அவன் அதிர்ச்சியானான்.

தன்னை பற்றியும் ஷெர்லியிடம் சொல்லி விட்டாரா? என்ற யோசனையோடு அவன் பார்க்கும் போதே  அவள் அவன் கரத்தை தன் கரங்களுக்குள் எடுத்து கொண்டாள்.

“இட்ஸ் ரியலி வெரி வெரி பேத்தடிக்” என்றவள் வேதனை நிரம்பிய விழிகள் மேலும் அவனை உருகி நெகிழ்த்த, அவன் தவிப்புற்றான். அதுவும் ஹரிக்கு பிறகு தனக்காக பச்சாதாபப்படவும் ஒரு ஜீவன் இருக்கிறதா?

விலக முடியாமல் காந்தமாக அவள் விழிகள் அவனை ஈர்த்து கொண்டிருந்தன. அவளும் வசியம் செய்யப்பட்டவள் போல அவனை அப்படியே பார்த்து கொண்டிருந்தாள்.  அவனின் விழிகளில் அப்படியென்ன மாயத்தை உணர்ந்தாலோ தெரியாது. அவன் நிச்சயம் அசாதாரணமானவன்  என்ற எண்ணம்  தோன்றியது.

அவள் கரங்கள் அவன் கரத்தை அழுந்த பற்றி கொண்டிருக்க, அவள் பார்வையிலும் தொடுகையிலும் வெறும் பரிதாப உணர்ச்சி மட்டும் இல்லை என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

அவன் மனம் அப்போது முந்தைய நாள் அவள் இதழ்களை நெருங்கி முத்தமிட்டது போல் கண்ட கனவை நினைவுபடுத்தி கொண்டுவிட, நெருப்பை தோட்ட பிள்ளை போல வெடுக்கென தன் கரத்தை அவள் கைகளிலிருந்து உருவி கொண்டு எழுந்து நின்றான்.

ஷெர்லி அவனை அதிர்ச்சியாக பார்க்க எங்கோ பார்வையை பதித்து கொண்டு, “லேட்டாகிடுச்சு… போய் மேலே ரூம்ல படுத்துக்கோங்க” என்றான்.

அவனின் இந்த நிராகரிப்பு மீண்டும் அவளை  ரொம்பவும் காயப்படுத்த சில நொடிகள் தாங்க முடியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அவன் மீண்டும், “ஷெர்லி” என்று அழைக்க, அவள் விருட்டென எழுந்து சென்றவள் முதல் படியில் காலெடுத்து வைக்கும் போதே பின்னுக்கு சரிய பார்த்தாள்.

அவள் செல்வதை பார்த்து கொண்டிருந்த பிரபஞ்சன் பதட்டமாகி “ஷெர்லி” என்று அவளை பிடித்து கொண்டான்.இதற்கு மேல் அவளால் திடமாக நடக்க முடியாது என்பது புரிந்தது. அவள் விழுந்து வாரி மண்டையை உடைத்து கொண்டால் அதுவும் தனக்குத்தான் பிரச்சனையாக விடியும் என்று எண்ணி கொண்டவன், அவனே அவள் கரத்தை பிடித்து மேலே அறைக்கு அழைத்து சென்றான்.

சற்று முன்பு அவன் அவள் கரத்தை உதறிவிட்டு விலகி சென்றான். இப்போது அவனே அவள் கரத்தை பற்றுதலாக பிடித்து கொண்டு மேலே அழைத்து வருகிறான். அவன் செய்கை அவளுக்கு வியப்பாக இருந்தது. வெறும் அவன் தன் பால் கொண்ட அக்கறைதான் இது என்று ஏற்க மறுத்த அவள் மனம் அவன் மீது தான் கொண்டிருக்கும் தன் உணர்வையாவது அவனுக்கு புரிய வைத்துவிட வேண்டுமென்று அப்போது சற்றே விவகாரமாக யோசித்து கொண்டிருந்தது.

அவன் அறை வாசலிலேயே நிறுத்திவிட்டு, “நீங்க ரூம்ல போய் படுத்துகோங்க ஷெர்லி” என்று சொல்லி அவளுக்காக கதவை திறந்துவிட்டுவிட்டு அவன் திரும்பி செல்ல எத்தனித்தான்.

ஷெர்லி விடாமல் அவன் கரத்தை அழுந்த பற்றி கொள்ள, அவன் புரியாமல் அவளை பார்த்தான். அந்த நொடியே தாமதிக்காமல் அவள் அவனை இறுக அணைத்து கொண்டு அவன் இதழ்களின் மீது தன் இதழ்களை மூடி கொண்டாள்.

கனவில் அத்தனை நெருக்கமாக அவள் இதழ்களை பார்த்த போது ஏற்பட்ட அதே உணர்வு. ஆனால் அது நடந்துவிடும் என்று அவன் இம்மியளவு கூட யோசிக்கவில்லை. நடக்க வாய்ப்பேயில்லை என்றவன் நினைத்த விஷயம் நடந்தேறிவிட்டது. அவனை ஸ்தம்பிக்க செய்தது. அவளை விலக்கிவிட வேண்டுமென்ற எண்ணம் கூட இல்லாமல்.

ஷெர்லிக்கோ விலகும் எண்ணமே இல்லை. அவளின் இத்தனை நாள் தேடலாக அவள் நாயகனாக இனம் கண்டு கொண்டது பிரபஞ்சனை மட்டும்தான். அதுவும் இத்தனை நாட்களாக தான் நேசிப்பவனை மட்டும்தான் இதழோடு முத்தமிட வேண்டுமென்று அவளுக்குள் உறுதியோடு இருந்தாள். அப்படியொரு தருணம் கிடைக்கபெறும் போது அவள் சுலபமாக அதை விட்டுவிட எத்தனிப்பாளா?

அதுவும் எதிர்வினையோ எதிர்ப்போ எதுவுமின்றி அவன் சிலையாக சமைந்திருக்க, அவள் அதரங்கள் அவனோடு லயித்து திளைத்து கொண்டிருந்தன. நொடிகள் தேய்ந்து நிமிடங்கள் சில கடந்த போது அவளாக மூச்சை இழுத்துவிட்டு கொண்டு அவனை விலகி நின்றாள்.

அதிர்ச்சியில் எங்கோ வெறித்து கொண்டிருந்த அவன்  விழிகள் உயிரற்று பார்வையோடு அவள் விழிகளை நோக்கியது.

அவளோ அதன் பின் எதுவும் பேசி கொள்ளாமல் அறைக்குள் சென்று படுக்கையில் சுருண்டு வீழ்ந்தாள்.

அவனுக்கு ஏனோ அவள் மீது கோபமோ அல்லது வேறு எந்தவித உணர்ச்சியோ வரவில்லை. அவள் அந்த முத்தத்தின் மூலமாக தன் காதலை சொல்ல எத்தனித்தால் என்பதை விட விதி அவனின் இயலாமையை சுட்டிகாட்டிவிட்டு சென்றது என்பது போல்தான் அவனுக்கு தோன்றியது.

விதி விளையாடும் விளையாட்டில் கை பொம்மையாகவே நாம் இருக்கிறோம் எதுவுமே நம் கட்டுப்பாட்டில் இல்லை. நடக்க போகும் எதையுமே யாராலும் தடுக்க முடியாது என்பதை புரிய வைத்ததோ?

அப்படியெனில் அடுத்ததாக தான் கனவாக கண்ட கோர சம்பவத்தையும் காண போகிறோமோ? பல்லாயிரம் உயிர்களின் மரணம்  தன் கண்கள் முன்னாலேயே நிகழ போகிறதா? இதுதான் அப்போதும் அவன் எண்ணத்தில் ஓடி கொண்டிருந்தது.

காதுகளில் ஈனமாக ஒலித்த அந்த ஓலங்கள் இப்போது ரொம்பவும் அருகாமையில் கேட்டது போன்றிருந்தது. காதுகளை அழுத்தமாக அவன் மூடி கொண்ட போதும் அந்த ஓலங்கள் விடாமல் கேட்டன.

எரிச்சலுக்கும் மனஉளைச்சலுக்கும் ஆளாகியபடி எதையோ யோசித்து கொண்டே அறைக்குள் வந்தவன் மேஜை மீதிருந்த பொருட்கள் அனைத்தையும் ஆவேசமாக தட்டிவிட்டான். தலையை அழுத்தி பிடித்து கொண்டு அங்கிருந்த இருக்கையில் சரிந்தான்.

ஷெர்லி போதையில் உறங்கிவிட்டதால் அவளுக்கு அவன் உருவாக்கிய சத்தங்கள் எதுவும் கேட்கவில்லை. அவனுக்கும் அந்த நிலையில் அவள் அந்த அறையிலிருப்பது நினைவில் இல்லை. அப்படியே தலையை பிடித்து கொண்டு மேஜை மீது தலை சாய்த்து கொண்டவன், இரண்டொரு நாட்களாக சரியாக உறங்காத காரணத்தால் அப்படியே உறங்கியும் போனான்.

விடிந்து சில நிமிடங்களில் ஷெர்லியின் முகத்தில் பட்ட சூரிய வெளிச்சம் விழிப்பை உண்டாக்க, கண்களை திறக்க முடியாமல் திறந்தவள் நெற்றி பொட்டில் சுருக்கென்று உள்ளுக்குள் குத்தியது போல் வலியால் அவதியுற்றாள். அந்த நொடியே படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தாள். தலையை நன்றாக தேய்த்து விட்டு கொண்டு சுற்றும் முற்றும் பார்க்க பிரபஞ்சன் அதே அறையில் மேஜையில் தலைசாய்த்து உறங்கி கொண்டிருந்தான்.

கனவிற்கும் நினைவிற்கும் இடையில் இரவு நடந்த நிகழ்வுகள் காட்சிகளாக விரிய, தலைவலி இருந்த இடம் தெரியாமல் போனது. மெலிதாக புன்னகைத்து கொண்ட அவள் உதடுகள், அந்த முத்தத்தை எண்ணி மனதார ரசித்து கொண்டது.

அவள் அப்படி வெட்க புன்னகையோடு அமர்ந்திருக்க, ஹரிஹரன் அறைக்கு வந்தார். பிரபாவும் ஷெர்லியும் ஒரே அறையில் இருப்பதை பார்த்து அவர் வாசலிலேயே ஸ்தம்பித்து நிற்க, ஷெர்லி அவரை பார்த்து, “ஹாய் ஹரி” என்று சிரித்த முகமாக கையசைத்தாள்.

அவர் பார்வை கீழே சிதறி கிடந்த பொருட்களை பார்த்து, “என்னாச்சு பியுட்டி? இதெல்லாம் என்ன?” என்று கேட்க,

“உஹும் ஐ டோன்ட் நோ… நானும் இப்பதான் எழுந்தேன்” என்று சோம்பல் முறித்தாள்.

அவர் ஒன்றும் புரியாமல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பிரபாவை பார்த்து, “ஆமா பிரபா எப்போ வந்தான்” என்று குரலை தாழ்த்தி கேட்க,

“நீங்க புல்லா ட்ரன்க் பண்ணிட்டு ப்ளேட் ஆன பிறகு” என்றாள்.

“ஐயோ!” என்று இதயத்தை பிடித்து கொண்டவர், “எழுந்தா திட்டுவானே!” என்று அதிர்ச்சியுற்ற அதே நேரம் பிரபாவை எட்டி ஒரு பார்வையை பார்த்துவிட்டு,

“அவன் ஏன் இங்க இப்படி படுத்திருக்கான்… குடிச்சது நம்ம இரண்டு பேர்தானே?” என்று கேட்க, அவள் உதட்டை பிதுக்கி தோள்களை குலுக்கி, “ஐ டோன்ட் நோ” என்றாள் அதற்கும்!

ஹரி அதன் பிறகு மேலே எதுவும் கேட்காமல் கீழே கிடந்த பொருட்களை எடுத்து அடுக்கி வைக்க எத்தனிக்க, “லெட் மீ டூ இட்” என்று அதனை எடுத்து கொண்டிருந்தாள். விழுந்து கிடந்தவை எல்லாம் அவள் லேப் டாப் பேகிலிருந்த பொருட்கள்தான். பேக் திறந்திருந்த காரணத்தால் அதிலிருந்த பொருட்கள் யாவும் சிதறி விட்டன. மேஜை மீதிருந்து பேக் சரிந்திருக்க கூடும் என்று அவள் எண்ணி கொண்டாள்.

ஹரியோ பிரபா உறங்கி கொண்டிருப்பதை வியப்பாக பார்த்துவிட்டு பின் தன் யோசனையிலிருந்து மீண்டு,

“சரி பியுட்டி… நான் போய் நமக்கு காபி எடுத்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு அவர் அகன்றுவிட, “ஓகே” என்று அவள் தன் பொருட்களை எடுத்து வைப்பதில் மும்முரமாக இருந்தாள்.

அந்த சிறு சலசலப்பில் பிரபாவின் உறக்கம் களைந்துவிட தலையை உயர்த்திவிட்டு முகத்தை துடைத்து கொண்டான். ஷெர்லி அவன் எழுந்ததை பார்க்கவில்லை. ஆனால் அவன் ஷெர்லி குனிந்து பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருப்பதை பார்த்தான்.

இரவு அவள் செய்த காரியத்திற்கு இப்போது அவன் கட்டுகடங்கா கோபத்தோடு, “ஷெர்லி” என்று அழைக்க,

அவள் சிரித்து கொண்டே தலையை நிமிர்த்தி பார்த்துவிட்டு, “எழுந்துட்டீங்களா ஹென்சம்?” என்று கேட்டு விட்டு,

“வெரி குட் மார்னிங்”  என்றவள் தன் காரியத்தில் கண்ணாக இருந்தாள். சிதறியிருந்த தாள்களை எடுத்து கொண்டிருந்தாள்.

“இவளை” என்று உள்ளுர அவனின் உள்ளம் எரித்தழலாக தகிக்க, “ஷெர்லி” என்று மீண்டும் அழைத்து அவள் கரத்தை பிடித்து தூக்கி நிறுத்த அவள் கையிலிருந்த பக்கங்கள் யாவும் மீண்டும் சிதறிவிட்டிருந்தன.

“ஒ மை காட்!” அவள் கீழே சிதறிய பக்கங்களை பார்க்க,

“நேத்து நைட் ஏன் அப்படி நடந்துக்கிட்டீங்க ஷெர்லி” என்று பிரபஞ்சன் கேள்வி எழுப்பினான்.

அப்போது அவனை நிமிர்ந்து நேராக பாரத்தவள், “எப்படி?” என்று புருவத்தை உயர்த்தி அசட்டையாக கேட்டாள்.

அவளை அவன் ஏறஇறங்க ஒரு பார்வை பார்க்க அவளே யுகித்தபடி, “ஒ! டிரிங் பண்ணதை கேட்கறீங்களா?” என்றாள்.

“அது இல்ல”

“தென் வாட்?” என்று அவள் அசராமல் அவனை பார்க்கவும், “எதுக்கு என்னை கிஸ் பண்ணீங்க?” என்று நேரடியாகவே கேட்டான்.

“ஒஎம்ஜி! அப்போ அதெல்லாம் என் ட்ரீம் இல்லையா? ஸோ சாரி… நான் ட்ரீம்ன்னு நினைச்சேன்” என்று அவள் பேசி கொண்டிருந்ததை கேட்டு அவள் கன்னத்தில் அரைய வேண்டுமென்று தோன்றிய எண்ணத்தை அரும்பாடுப்பட்டு அடக்கி கொண்டான்.

அதற்கு மேல் அவளிடம் என்ன பேசுவதென்று யோசித்தவன், “இனிமே என்கிட்ட இப்படி நடந்துக்காதீங்க”  அழுத்தமாகவும் கண்டிப்பாகவும் சொல்லிவிட்டு அவளை கடந்து செல்ல பார்க்க,

‘உங்ககிட்ட இல்லாம வேற யார்க்கிட்ட ஹென்சம்’ என்று ஷெர்லி குறும்புத்தனமாக புன்னகைத்தபடி மனதில் எண்ணி கொண்டாள்.

நேற்று ஹரியும் ஷெர்லியும் பக்கம்பக்கமாக பேசியது பிரபஞ்சனை பற்றிதான். அவனை பற்றி கேட்க கேட்க அவள் மனதிலிருந்த ஈர்ப்பு முழுவதுமாக வேறு பரிமாணத்தை அடைந்ததன் விளைவுதான் இரவு நடந்த சம்பவம்.

அப்போது பிரபஞ்சன் வெளியேறாமல் கீழே கிடந்த சிகரெட் பேக்கெட்டை கையிலெடுத்து குழப்பமாக பார்க்க ஷெர்லி அதனை பார்த்து, “இட்ஸ் மைன்” என்று அதனை வாங்கி தன் பேகிற்குள் திணித்தாள்.

ஏதோ சொல்ல வாயெடுத்தவன் பின் அவள் என்ன செய்தால் தனகென்ன வந்தது என்ற எண்ணி கொண்டு வெளியே செல்ல பார்த்தான். வாசலில் பறந்து வந்திருந்த பக்கங்களை ஒரு நொடி இறங்கி பார்த்துவிட்டு கடந்து செல்லும் போது மீண்டும் நின்று அதனை கைகளில் எடுத்தான்.

அந்த முதல் தாளில் டிசேஸ்டர் என்ற வார்த்தை அவனை ஸ்தம்பிக்க செய்த அதேநேரம் அந்த தாளின் கீழே கிறிஸ்டோபர் எட்வர்ட்ஸ் என்ற எழுதியிருந்ததை பார்த்து வியப்போடு மீண்டும் அறைக்குள் நுழைய,

ஷெர்லி தரையில் இருந்த பக்கங்களை எடுத்துவிட்டு சுற்றிலும் எதையோ தேடி கொண்டிருந்தாள்.

“இதையா தேடுறீங்க?” என்று அவன் கேட்டு அந்த பக்கங்களை நீட்ட,

“எஸ் எஸ்” என்று அவள் அதனை பெற்று கொள்ள எத்தனித்த போது,

“இது என்னது?” என்பது போல் கேள்வி எழுப்பினான்.

“இது என் கிரேன்ட் பா எழுதினது” என்றாள்.

“உங்க கிரேன்ட் பா நேம் என்ன?”

“கிறிஸ்டோபர் எட்வர்ட்ஸ்… அதுலயே இருக்குமே” என்று சொன்ன மறுகணம் அவன் ஆச்சரய்மாக அவளை பார்த்தான்.

“நேச்சரலிஸ்ட் கிறிஸ்டோபர் எட்வர்டஸ்… பரிணாம வளர்ச்சி பத்தியும் நேச்சர் பத்தியும் நிறைய புக்ஸ் எழுதி இருக்காரே அவரா?” என்று சந்தேகத்தோடு கேட்க,

“ஹம்ம் எஸ்” என்று பெருமிதமாக தலையசைத்து விட்டு, “டூ யு நோ ஹிம்?” என்ற கேள்வியை கேட்க, அவன் அதற்கு பதில் சொல்லவில்லை.

அவர் புத்தகங்களை அவன் நிறையவே படித்திருக்கிறான். அவனின் மதிப்புக்குரியவர்கள் பட்டியலில் அவருக்கு தனிப்பட்ட இடம் உண்டு. அவனுக்கு உண்மையில் பிரமிப்பாக இருந்தது. தன்னருகில் நிற்கும் ஷெர்லி அவன் வியக்கும் ஒரு மாமனிதரின் பேத்தி என்பதை அவனால் நம்பவே முடியவில்லை.

கயாஸ் தியரிதான் அவன் நினைவுக்கு வந்தது. சம்பந்தமே இல்லாத அவர்கள் இருவரையும் விதி எப்படி சம்பந்தப்படுத்துகிறது.

ஷெர்லியின் கைகளில் இருந்த பக்கங்களை கேட்டு வாங்கிய பிரபா அதனை பிரித்து முதல் சில பக்கங்களை படித்த போதுதான் தெரிந்தது. டிசேஸ்டர் என்பது கிறிஸ்டோபர் தன் வாழ்க்கையின் கடைசி காலத்தில் எழுதி கொண்டிருந்த அவரின் சொந்த வாழ்க்கை வரலாறு.