avav2

அரிவை விளங்க .. அறிவை விலக்கு  – 02

“தம்பதி சமேதரா போயி சாப்பாட்டை முடிச்சிட்டு வாங்கோ “

என்று புரோகிதர் அனுப்பி வைக்க. இருவரும்

உணவு உண்ணவென மேல் தளத்திற்கு சென்றவர்கள், அங்கிருந்த கூட்டத்தை பார்த்து த்ரிவிக் மலைத்து நிற்க, நங்கை இயல்பாய் உள் நுழைந்தாள். மணமக்களாதலால் சட்டென ஒரு பரபரப்பு வர, இருக்கைகள் கிடைத்து அமர்ந்தனர். சரசரவென இல்லை போட்டு…. பரிசாரகர்கள் பரிமாற, கலர் கலராய் உணவும் அதன் மணமும், நங்கைக்கு உமிழ்நீர் சுரப்பியை உசுப்பி விட்டது.

திரும்பி தன்னவனை நோக்கினாள்.. அவனோ, வேற்றுகிரஹ வாசிபோல தன இலையை பார்த்து கொண்டிருந்தான். அவன் மைண்ட் வாய்ஸ் :: ஓ மை காட் ?, ஒரு ஆளுக்கா இவ்வளவு சாப்பாடு ? ஃபுல் ஆஃப் fat …இந்த கலோரி இறங்கணும்னா, நான் இன்னும் ஒரு மாசத்துக்கு 10 ரவுண்டு அதிகமா ஜாக் பண்ணனும்.. நோ வே”, என்று அதிரிபுதிரியாய் யோசித்தான்.

இது எப்படி நங்கைக்கு தெரிந்ததோ தெரியாது, “ஆஹா .. இவர் சைவ சாப்பாட்டையே இந்த பார்வை பாத்தா, கறி விருந்த எப்படி பாப்பாரு? நிச்சயமா சாப்பிட விட மாட்டார் போல இருக்கே ? “, என்று முக்கியமானதொரு சந்தேகம் மண்டையில் உதிக்க…. அவள் வயிற்றுக்குள் எலி கண்ணாமூச்சி ஆடியதால், “நங்கை.. நமக்கு முக்கியம் சோறு… டாட்..மத்ததெல்லாம் அப்பறம் யோசிக்கலாம் “, புத்திசாலித்தனமாய் முடிவெடுத்தவள், வேக வேகமாய் சாப்பாட்டை உள்ளிறக்கினாள்.

அதற்குள் புகைப்படகாரர்கள் வர, “மேம் கொஞ்சம் சாருக்கு ஊட்டி விடுங்க. ஒரு ஷாட் ப்ளீஸ்…”, எனவும்… அவள் திருதிருத்தாள். மெதுவாய் ஜாமூனை கையில் எடுக்க…. “நோ நோ நோ , இது என்ன அபத்தமா ஒரு ஃபார்மாலிட்டி?”, அவன் குரலை குறைத்திருந்தால், நங்கைக்கு மட்டும் கேட்டது.

அவள் திகைத்து விழிக்க…, சட்டென தன் தவறு தெரிந்து….”அது … அதுல ரொம்ப ghee இருக்கு… வேற ஏதாவது fat கம்மியா ……”, த்ரிவிக் – கின் குரல், நங்கையின் கண்டனமான பார்வையில் தேய்ந்தே போனது… “என்னடா இது இந்த முறை முறைக்கறா? சரியான ராங்கியோ?, போட்டோ பார்த்து தப்பா முடிவெடுத்துட்டோமோ?”, என்று மிகச்சரியாய், சரியாய் சந்தேகப்பட்டான், இரண்டுவார தாமதமாய்.

இவனது சற்றே வெளிறிய முகத்தை பார்த்து பெருமூச்சு விட்டவள், பாதுஷாவை கையில் எடுத்து, வாயசைக்காமல் “லைட்டா கடிங்க.. போட்டோ எடுத்துட்டு போயிடுவாங்க.. அப்பறம் உங்க இஷ்டத்துக்கு சாப்பிடுவீங்களாம்… “. என்று கூறி ஒருவழியாய் புகைப்பட கலைஞருக்கு போஸ் கொடுத்து அனுப்பி வைத்தனர். கூடவே வேலையோடு வேலையாய் உணவினையும் முடித்திருந்தனர்.

எழ நினைக்கும் நேரம், டெஸெர்ட் என்று பெயரில் ஐஸ்க்ரீம் மிதக்க, பாதம் பிஸ்தா கிஸ்மிஸ் தூவிய ஃபலூடா வர, த்ரிவிக்ரமன் மனதுக்குள்ளே அலறினான், ” இவங்க ஒரே வேளை-ல என்னோட சிக்ஸ் பாக் -கை , சிங்கிள் பாக்-கா மாத்திடுவாங்க போல இருக்கே??”, என்று நிமிர… அவனின் சகதர்மிணி நங்கை நல்லாள், சிறு தேக்கரண்டியால் ஃபலூடாவை ஆனந்தமாய் உள்ளே தள்ளிகொண்டுருந்தாள்.

“இவளுக்கு சாப்பாடு போடவே நான் பார்ட் டைம் வேலை பாக்கணும் போல இருக்கே? ஆண்டவா எல்லாரையும் காப்பாத்து.. கூடவே என்னையும் கொஞ்சம் ஸ்பெஷலா பாரு”, எப்பொழுதும் நகைச்சுவையாய் வைக்கும் பிரார்த்தனையை,  இன்று அர்த்தம் உணர்ந்து சொன்னான். கூடவே, தேக்கரண்டியையும் கையில் எடுத்து கிஸ்மிஸ் பழ துண்டுகளை எண்ண ஆரம்பித்தான், பின்னே? நங்கை பலூடா-வை முடிக்கும்வரை அங்கேதானே இருந்தாக வேண்டும்?

இத்தனை ஆர்ப்பாட்டம், கூச்சல் அனைத்திற்கும் மேலாய் ‘எள்ளு போட்டா எண்ணை எடுக்கலாம்’ என்ற சொலவடைக்கு ஏற்றாற்போல் இருந்த… நங்கையின் அத்தனை உறவுகள்… அவனுக்கு பழக்கமில்லாதவை. வீட்டிற்கு ஒற்றைப் பிள்ளையாய் வளர்ந்தவன், பெற்றவர்கள் வேலைக்கு செல்பவர்களாய் இருக்க, குடும்பமாய் பேசும் நேரம் மிகக்குறைவே, அப்போதும் தெளிவான திட்டமிட்ட அமைதியான அளவலாவல்களே. எனவே, அவனது வீடு எப்போதும் நிசப்தமாய். பெரிதாய் சொல்லிக்கொள்ளும் அளவு சொந்தங்களும் இல்லை.

இங்கேயோ ஒன்றுவிட்ட இரண்டு விட்ட சொந்தங்கள் கூட மிக நெருக்கமாய் கூடி பேச, இன்னமும் இலையை நிரப்பவா என பயமுறுத்த.. அவர்களின் கிடா மீசையும், புலிநகச் சங்கிலிகளும் கண்டு அவர்களை வில்லன்களாகவே உவமைப் படுத்திக்கொண்டான்

சாப்பிட்டுக்கொண்டிருந்த நங்கையை பார்த்தான். புலனம் [வாட்ஸப்]மூலம் புகைப்படம் அனுப்பினர், பார்த்ததும் பிடித்தது, சரியென்று விட்டான், இரண்டு மூன்றுமுறை சேட் செய்ததோடு சரி.

காரணம் இவனது தொழில். இவனுக்கு கீழே ஏழெட்டு பொறியாளர்கள் இருந்தாலும்…. எந்த நிறுவனங்களுக்கு என்ன மாதிரியான மென்பொருள் தேவை, அவர்களது நோக்கம் என்ன?, எதை மையப்படுத்தவேண்டும்? என்று முக்கியமான முடிவுகளை இவனே எடுக்கவேண்டுமென மெனக்கெடுவான். மொத்தத்தில் மென்பொருள் கட்டுமானத்தின் ஆரம்பப்புள்ளி இவன், வாடிக்கையாளரின் தேவையை சரியாய் நாடிபிடித்து அறிவதில் வித்தகன்.

இடைவிடாது நங்கையையே பார்த்தான். ‘என் தேர்வு சரிதானா? இவள் இப்படி ஒரு பட்டிக்காடாய் இருக்கிறாளே?’ , என்பதாய் அவன் எண்ணம். எண்ணெய் வைத்து படிய வாரிய தலையும், அவளது பூ அலங்காரமும், கை பிடியளவு போட்டிருந்த நகைகளும் [மொய்/ மாமன் முறை செய்ய வந்தவர்கள் பிடிவாதமாய் போட்டுவிட] , கழுத்தில் மட்டும் மூன்று நெக்லஸ்கள் தொங்கின, தவிர வளை , மோதிரம், செயின்கள் என அவை தனி. இதைக்கொண்டு நங்கையை பட்டிக்காடாய், த்ரிவிக்கின் பார்வைக்கு காட்டியது.

அவளின் நிறமும் கறுப்பே. ஏனோ …. மனதுக்குள் அலுவலகத்தில் வேலை செய்யும் …. நுனி நாக்கில் ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி, குஜராத்தி பேசும் ஷில்பா நினைவில் வந்தாள். அவள் கேட்டது ஒருமுறை மனதில் வந்தது, “ஏன் என்னை பெண்ணாய் ஒரு முறை கூட நீ பார்க்கவில்லை? அத்தனை தகுதியில்லாதவளா நான் ?”என்று அவள் குமைந்ததும் நினைவடுக்ககத்தில் வந்தது.

இப்போது இத்தனை அருகில் புத்தம் புது தாலி சுமந்து நங்கை இருக்க.. அவளைப்  பார்த்து,  “இவளா என் மனைவி?”, என்று மீண்டும் அதே கேள்வி தோன்றியது.

சாப்பாட்டினை முடித்து மீண்டும் சில பல சடங்குகள், இருவருக்கும் சற்றே கண்ணயர்ந்தால் போதும் என்ற ஒரு மன நிலை. ஒரு வழியாய் அனைத்து சம்பரதாயங்களும் முடிந்து, மணப்பெண்ணின் வீட்டிற்கு செல்வதாய் முடிவாகியது. த்ரிவிக்கின் பெற்றோர், வீட்டிற்கு சென்று ஓய்வெடுப்பதற்காக கூற, இவனும் சரியென்றுவிட்டான்.

போக்குவரத்திற்கென பெரிய பேருந்துகளையே பதிவு செய்திருந்ததால், மணமக்களுக்கு தனிமை என்பதே கிடைக்கவில்லை. எனவே பேச்சும் பெரிதாய் இல்லை. ஒருவழியாய் வீடு வர, அது தனி பங்களா என்றுதான் சொல்லவேண்டும். நல்ல பெரிய மூன்று கிரவுண்டில் கட்டிய தனி வீடு.

ஆரத்தி எடுத்து இருவரையும் உள்ளே அழைத்து, இரவு விருந்து என்று மாமாக்களில் ஒருவர் கேட்க, இவன் மனதுக்குள் தெறித்து ஓடினான். மறுபடியும் முதல்லேர்ந்தா?. கண்டிப்பாக வேண்டவே வேண்டாம் என்று கூறி, “நான் கொஞ்சம் காலாற நடந்துட்டு வர்றேன்’, என்று கிளம்ப..

‘கூட நானும் வாரேன் மாப்ள, புது இடமில்ல ? ஏதாவது காத்து கருப்பு அடிச்சிட்டா ?”, என்று இவளது இரண்டு விட்ட அண்ணன் துணைக்கு வந்தான்.

த்ரிவிக் -கிற்கோ, ஒரு சிகரெட் அடிக்க வேண்டும் போல ஒரு உந்துதல். எங்கே போய் முட்டிக்கொள்வது எனத் தெரியாமல், தலையில் கைவைத்து , “சரி வாங்க”, என்று செருப்பினை போட்டு நடக்க ஆரம்பித்தனர்.

தெரு திரும்பியதும், “மாப்ள, இந்தாங்க, உங்க ப்ராண்ட் சிகரெட்”, என அவர் தர,

“எப்படி தெரியும் ?”, என்று கேட்டான் ஆச்சர்யமாய்.

“நீங்கதான் மாப்ள-ன்னு முடிவான உடனே, உங்க ஜாதகத்தையே அத்துட்டோம்ல”, என்று பதிலுரைத்து சிரித்தார் நங்கையின் அண்ணன் .

“நீங்க பேர் சொல்லியே கூப்பிடுங்க, கிட்டத்தட்ட நாம ஒரே வயசுதான்”

“இப்போ உடனே முடியாது, கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கறேன் “, என்று அவர் கூறியது  த்ரிவிக்ரமனை வெகுவாய் கவர்ந்தது,

“உடம்பு வலிதான் செம்மையா இருக்கு.”

“ஏன் என்னாச்சு?”

“அட கிட்டத்தட்ட ரெண்டு மாசமா தொடர்ச்சியா ட்ராவெல்லிங், முந்தாநாள்தான் நெதர்லாண்ட் லேர்ந்து வந்தேன்.”

“அது வந்து மாப்ள… தப்பா எடுக்க கூடாது. வலி போகணும்னா ஒரு கிளாஸ் சரக்கு , ஊர்ல நாமளே காச்சினது பதனியோட எடுத்துக்கறீங்களா?”

“வலி போகுமா,?” ,

“கண்டிப்பா”,

“அப்போ குடுங்க”, விசில் போல ஒரு சங்கேத பாஷை நங்கையின் அண்ணன் தர .. மெதுவாய் சைக்கிளில் ஒருவன் வந்து சின்னதாய் ஒரு பாட்டிலை கொடுத்து சென்றான்.

மடக் மடக் என அதையும் வாங்கி குடித்தான்.

இருவரும் வீட்டிற்கு வந்து அமைதியாய் அவரவர் அறைக்கு செல்ல.. , இவனது மாமனார் மட்டும், “மாப்ள, நல்லாள் ரூம்பு மாடில இருக்கு ” என்றார்.

விக்ரமன் பதிலாய் ஒரு தலையசைப்பை தந்து, “சரி மாமா, நீங்க படுங்க “, என்று மேலே ஏறினான்.

எதோ படங்களில் வருவது போல, சர்வாலங்கார பூஷிதையாய் பட்டுடுத்தி, பூவைத்து, பால் பழம், அகர்பத்தி சூழ, கண்ணில் பயம் கொண்டு, நகம் கடித்து காத்திருப்பாள் அருமை சஹி என்று நினைத்து இவள் அறைக்குள் போக.. அவளோ அருமையாய் நைட்டி உடுத்தி, இவனுக்கும் ஷார்ட்ஸ், டீஷர்ட்-டினை டேபிளில் எடுத்து வைத்து, அந்த இரட்டைக்கட்டிலில் சுகமாய் உறங்கியிருந்தாள்.

மனம் விட்டு பேச வேண்டும் என்று நினைத்தவன், அதை நாளைக்கு ஒத்திப்போட்டு.. குளித்து, உடை மாற்றி, படுத்து நிம்மதியாக தூங்கினான். சில மணித்துளிகளில் நங்கை கால்களை இவன் மேல் போட.. அரண்டு பிரண்டு தூக்கம் விழித்தான். ஆம், சிறு வயதில் இருந்தே எதன் மீதாவது கால் போட்டு படுப்பது நங்கையின் பழக்கம், நேற்று வரை தலையணை [இனி அதன் தேவை.. கேள்விக்குறியே ]. மொத்தமாய் அவனுடன் ஈஷியவாறு படுத்திருந்தாள் மனையாள். இரவு விளக்கின் வெளிச்சமும், அவளுக்கே அவளுக்கான பிரத்யேக வாசமும், உள் சென்றிருந்த தீர்த்தமும் இவனை அலைக்கழிக்க.. அவளை கலைக்க ஆரம்பித்தான், முதலில் தூக்க கலக்கத்தில் இருந்தவள் விழித்து ..அவன் பார்வையில் விழித்து .. நாணம் மேலிட .. விழி தாழ்த்தினாள்.

இன்னமும் இரு வாரத்தில் அவளே….அவன் கழுத்தில் கத்தி வைக்கப்போவதை உணராமல்…. பள்ளியறை பாடத்தினை கற்க தலைப்பட்டாள் திருமதி.நங்கை நல்லாள் த்ரிவிக்ரமன்..

அரிவை அறிவானா?