அரிவை விளங்க.. அறிவை விலக்கு – 03

மறுநாள் .. விடிகாலை வேளை …

நங்கை .. தலையோ கணவனின் தோள் வளைவில்…. சற்றே நலுங்கியிருந்தாலும் புன்னகை உறைந்த முகம்.. மிக அமைதியான உறக்கம். அதிகாலை எழும் வழக்கமுள்ள விக்ரமனுக்கோ சொல்லொண்ணா புத்துணர்வு , உடலில் அசதி இருந்தாலும் காற்றில் மிதப்பதுபோல் ஒரு நூதன நிலை. பஞ்சுப்பொதி போல் கைகளில் உறங்கும் தன்னவளை விலக்கி எழுந்து செல்ல மனமின்றி … மேலும் தனக்குள் பொதிந்து கொண்டான். அப்போது … கதவு மெதுவாய் தட்டப்பட்டு, “நல்லா, நல்லா”, சன்னமாய் குரல் கொடுத்தாள், இவளது ஒன்று விட்ட அண்ணி.

அவர் குரலில் தூக்கிவாரிப்போட எழுந்த மனைவியை, சட்டென அணைத்து, “ஹே மெதுவா”, என்றான் கணவன். அவன் முகம் பார்த்த நங்கை, சின்னதாய் சிரித்து “ம்ம்”, என்றாள். இரவின் நிஜங்கள் நினைவில் அணிவகுக்க … சன்னமாய் வெட்கம் மேலிட தலை கவிழ்ந்தாள். மெதுவாய் கட்டிலில் இருந்து இறங்கி கதவருகே சென்று “எழுந்துட்டேன் தோ வர்றேண்ணி”, என்று பதிலுரைத்தாள். கட்டிலின் அருகே வந்து, “மணியாச்சு , நான் குளிச்சு கீழ போறேன்.”, நிமிரக்கூட இல்லை, மின்னலாய் மொழிந்து குளியலறைக்குள் புகுந்தாள்.

படுத்திருந்த விக்ரமனுக்கு கலவையான எண்ணங்கள்…. எப்படி இப்படி ஆனேன்?, அவன் திட்டமிட்டதென்ன? இங்கு நடந்ததென்ன? நிதானமாய் தன சகதர்மிணியுடன் பேசி, புரிந்து, காதலித்து, அவளையும் காதலிக்க வைத்துப் பின்தான் வாழ்க்கையை துவங்கவேண்டும் என்று நினைத்திருக்க, உணர்ச்சி மிகுதியால் அவசரப்பட்டு விட்டோமோ? என்று ஒரு எண்ணம்.

இவளின் இரண்டு விட்ட அண்ணன், கையில் கிடைத்தால் இரண்டு கன்னத்திலும் அறைவோமா? – என்பதுபோல் அவனை நினைத்ததும் கோபம் வந்தது, என்ன ஊற்றி கொடுத்தானோ, இவனுக்கு இன்னமும் உடல் மிதப்பது போலத்தான் இருந்தது. ஆனால், மறு நிமிடம், இவனது உவகை கொண்ட உடல், ‘குமரனுக்கு [இ .வி . அண்ணன் ] நன்றி சொல்’, என்று கூறியது.

தூக்கம் முழித்துவிட்டபோதும் வெறுமனே படுத்திருந்தான். ஆனந்தமாய் சிந்தனைகள் … தூங்கி எழுந்த நங்கையின் முகம் முதலில் மனதில் தோன்ற .. அவள் பார்த்ததென்னவோ சில நொடிகள்தான், அதில் அவள் காட்டிய பாவனைகள், விழிகள் காட்டிய மயக்கம், இதழோர மந்தகாச புன்னகை, நீ என்னவன் என்ற அந்த சொந்தமான பார்வை.. அவளின் சம்மதத்தை கட்டியங்கூற, தன்னை அறியாது, தலைகோதிய இவனுக்கும் வெட்கப்புன்னகை. வெட்கம் பெண்களுக்கே அழகென்று யார் கூறியது?

இது பெண்மையை அறிந்த / பெண்மையை வென்ற/ பெண்மையை மயக்கிய ஆணின் மமதையான புன்னகை… அந்த நொடியில், விக்ரமனின் அனுமதியின்றி மனைவியாய் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டாள் நங்கை நல்லாள். இனி அவன் சிந்தையில் எந்த ஷில்பாவும் ஒப்புமைக்குக்கூட வரமாட்டார்கள் என்பது திண்ணம்

அடுத்தது என்ன ? என்று த்ரிவிக் யோசித்து, காலைக்கடன்களை முடித்து குளியலறையிலிருந்து வெளியே வரவும், நங்கை காஃபியுடன் அவர்களது அறையில் நுழையவும் சரியாய் இருந்தது. அவன் சட்டையின்றி ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்திருக்க, சங்கோஜமாய் தலை திருப்பி “காஃபி “, என்று மனையாள் நீட்ட… முழுதாய் ஒரு நிமிடம் ஆகியும் நீட்டிக்கொண்டுதான் இருந்தாள். அவன்தான் வாங்கவேயில்லையே !. மெல்ல தலைதிருப்பி பார்த்தவள், த்ரிவிக்கின் கைகட்டி நின்ற தோரணையில், நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

கண்களில் கேள்வி தொக்கி நிற்க.. அவனோ, அவனது வலது தோள்பட்டையை காண்பித்து “நைட் ஃபுல்லா இங்கதான தலைவச்சு படுத்திருந்த? என்னை அங்க இங்க அசையவிடாம காலை போட்டு அரெஸ்ட் பண்ணி வச்சிருந்த.. இப்போ என்ன வெக்கவெக்கமா வருதோ?”, என்று சீண்ட…, மொத்த இரத்தமும் முகத்திற்கு வர சிவந்தாள், பெண்.

காஃபியை டேபிளில் வைத்து, ஓட்டமாய் ஓட … கதவருகில் நின்றவள், “குலதெய்வம் கோவிலுக்கு போகணும், குளிச்சிட்டு ரெடியா இருங்க.”, இன்னமும் அவனை எப்படி கூப்பிடுவதென முடிவு செய்யவில்லை. மாமா, அத்தான் எல்லாம் எதோ போல இருக்க.. இப்போதைக்கு அதை தள்ளிப் போட்டாள்.

ஒரு அடி எடுத்து வைத்தவள், “காலைல என்ன சாப்புடுவீங்கன்னு தெரியல, இட்லி அவிச்சு, கோழி குழம்பு வச்சிருக்காங்க, இடியாப்பம், குருமா, தேங்காப்பால், குழிப்பணியாரம் சட்னி ரெடியா இருக்கு”, என அவள் கூற…

த்ரிவிக்கிற்கு தலை சுற்றியது.

த்ரிவிக் , வாரம் நான்கு நாட்கள் வெளிநாட்டில் அல்லது வெளியூரில் சுற்றுபவன், அவனைப் பொறுத்தவரை இலகு சாப்பாடே எல்லா இடத்திற்கும் வசதி என்று பழகியவன். அவனது இரவு மயக்கம் சட்டென தெளிந்தது, ‘ஐயோ!! சாப்பாடா?,இவங்கள இப்படியே விட்ட இது சரி வாராது’ என்று யோசித்தவன், “நாலு சான்விச் பிரட் டோஸ்ட் பண்ணி.. முடிஞ்சா கொஞ்சம் ப்ரோக்கோலி வேகவைச்சு கொடு, அதுதான் என் ரெகுலர் பிரேக்பாஸ்ட்”, என்றவனை…. திரும்பி நின்று அதிர்ச்சியோடு விழிவிரித்துப் பார்த்தாள் நங்கை. அவளது பாவத்தை [bhaavam] பார்த்த த்ரிவிக் சிரிக்க ஆரம்பித்தான், “ஹே நான் சட்டை போடலைன்னு, அந்த வால் [சுவர்] பாத்து பேசின? இப்போ வெக்கம் போச்சா?”, எனக் கேட்க.. அவளுக்கு முகத்தில் ஈயாடவில்லை… இவன் பேசியது கேட்டதா என்பது கூட தெரியவில்லை.

“நீ…. நீங்க நிஜமாத்தான் சொல்லறீங்களா? ஒருவேளை காப்பியோட பிரெட் சாப்பிடுவீங்களோ?”, பாதி சந்தேகமாய் கேட்ட மனைவியிடம், “இல்லம்மா. இல்ல.. நான் எடுத்துகிற ப்ரேக்பாஸ்ட்டே அதுதான். கொஞ்சம் ஹெவியா வேணும்-னு தோணினா, ரெண்டு ஹாஃப் பாயில் சேர்த்துப்பேன்”, என்றவனை மேலிருந்து கீழாய் புதிதாய் பார்ப்பது போல பார்த்தாள். காரணம் அவனது உடல்வாகிற்கும், அவன் கூறிய உணவிற்கும் சம்பந்தம் இருப்பதுபோல அவளுக்கு தோன்றவில்லை. ‘இப்படி சாப்பிட்டு எப்படி சிக்ஸ் பாக் வச்சிருக்காங்க?, இதுல முட்டை சாப்பிடுறத கூட சொல்றாங்க? ‘ , என்று யோசித்தாள். காரணம் இவர்கள் வீட்டில் முட்டையை கணக்கிலேயே கொள்ளமாட்டார்கள். முதன்முதலாய் ஒரு பயப்பந்து அடிவயிற்றில் உருண்டது. ‘நாம எப்படி இவரோட குப்பை கொட்ட போறோம்? ‘

அவன் குளிக்க செல்ல, நங்கை மெதுவாய் கீழிறங்கி சமயலறையில் வந்து நின்றாள்.

“என்ன கண்ணு கால சாப்பாடு பத்தி கேட்டியா ?”, என காலையில் நங்கையை எழுப்பிய அண்ணி , கோமதி கேட்க…

“நாலு பிரெட் போதும்னு சொல்லிட்டார் அண்ணி.”, சுரத்தில்லாமல் பதில் இவளுரைக்க…

“ஆங்…. ?” என்று அதிர்ந்து தாவாங்கட்டையில் கை வைத்தார் அவர். பின் அவருக்குள்ளாகவே சமனாகி, நங்கையின் மண்டையில் குட்டி.. “ஏண்டி கூறுகெட்டவளே? காப்பித்தண்ணியோட வேணும்னு கேட்டதைப்போயி காலை சாப்பாடுனு நினச்சியாக்கும்?”, என்று இவளை வார… முறைத்தாள் நங்கை.

நாத்தியின் அந்த கோபமான முறைப்பு… அவள் கூற்று உண்மைதான் என்று கூற, “நிசமாத்தான் சொல்றியா புள்ள?”, மறுமுறையும் கேட்டு…, பெண்ணவளை சந்தேகமாயும், கொஞ்சம் சங்கோஜமாயும் ஏற இறங்க பார்த்து.. “நைட் எல்லாம் சுமுகமாதான இருந்தீங்க?”, என்று ஒருவித ஆராய்ச்சி பார்வையோடு கேட்க…

‘இந்த மனுஷன் பண்ற வேலைக்கு என் மானம் போகுது’, “அண்ணீ … ” என்று பல்லைக் கடித்தாள்.

“அப்பயுமா பசிக்காதக்கி இருக்கும்?”, என்ற அண்ணியின் கேள்விக்கு, சுவற்றில் முட்டிக் கொள்ளத் தோன்றியது.

நங்கை, “நம்ம லோக்கல் மார்க்கெட்ல ப்ராக்கோலி கிடைக்குமா? தெரிலையே?, “ஆன்லைன் -ல்ல ஆர்டர் பண்ணினா கூட ரெண்டு மணி நேரம் ஆகுமே?”, என்ற சிந்தனை ஓடியது.

லோக்கல் மார்க்கெட்டில் கிடைக்காது என்பதை கேட்டறிந்து, பிக்பாஸ்கெட்-டில் தேடி தருவிக்க எண்ணினாள், இவள் நேரமோ என்னவோ, அதிலும் ப்ரோக்கோலி ஸ்டாக்-கில் இல்லை.

கூடவே கோமதி அண்ணி, த்ரிவிக் ப்ரோக்கோலி கேட்டதை சின்ன அண்ணியிடம் சொல்லி .. இன்ன பிற சந்தேகங்களும் கேட்டு அங்கலாய்க்க.. இவளுக்கு என்ன செய்வது என தெரியவில்லை..

அதற்க்குள் மாடியில் இருந்து “நங்கை”, என்று த்ரிவிக் குரல் கேட்க.., அதில் இருந்த உரிமை இவளுக்கு நிரம்ப பிடித்தது. நேராக மேலே சென்றவள்.. “ம்ம் … க்கும்.. கூப்டீங்களா?”, என்று அவனருகில் சென்று நிற்க..

“ப்ரேக்பாஸ்ட ரெடியா?”, புன்முறுவலுடன் கேட்டான்.

சட்டென அண்ணி பேசியதெல்லாம் நினைவுக்கு வர .. சற்று கடுப்பாக… “ஆங்…. நீங்க கேட்டதெல்லாம் போட்ட கோழி இன்னமும் பிறக்கவே இல்லயாம். அதான் அது இல்லாத கோழியை புடிச்சு சமைச்சு வச்சிருக்கோம். அதை ரொட்டி-ல வச்சு சாப்பிடுவீங்களாம். வாங்க…”, என்று நொடித்தாள்.

இவனோ “ஞ்ங்கே”, என்று விழித்தான். அவன் புரியாது விழிப்பதை பார்த்து .. இதழ்க்கடையில் வெளிவரவா என்று நிற்கும் குறும்பு சிரிப்புடன் மனைவியை கண்டவன்.. மீண்டும் அவள் பதிலை ரிவைண்ட் செய்து பார்த்து .. சற்று தாமதமாய் அர்த்தம் புரிந்து கொள்ள….

அவள் குறும்பை ரசித்து … சிரிப்பை மென்றுகொண்டே அவளருகில் வந்து நின்று, ” அப்போ அது போட்ட வேற ஏதாவது கிடைக்குமா? … “, சரசமாய் வினவ…., திகைத்து, “க்ஹூ….ம்”, மூச்சை உள்ளிழுத்தவள் வெளிவிட மறந்து, விழி விரித்து கலவரமாய் அவனைப் பார்த்தாள்.

அவள் முகம் முழுதும் கண்களாயினவோ என்பதுபோல் இருக்க.. “தொபுக்கடீர்”, என அதில் விழுந்தவன், மேலும் தவிர்க்க முடியாது அவளை இடையோடு இழுத்தணைத்து.. முகத்தில் ஊதினான். “மூச்சை விடுடி.., மயக்கம் போட்டு விழப்போற “,நகைத்தவன், “நான் முட்டை கிடைக்குமா-ன்னு கேட்டேன். நீ என்னன்னு நினைச்ச?”, என்று கேட்க…

“ம்ம்ஹூம் “, தலையசைத்தவள், மேலும் அவனை சமாளிப்பது இயலாது என்றுணர்ந்து, “கீழ அப்பா அண்ணா-ங்க எல்லாம் வெயிட் பண்றாங்க.. கோவிலுக்கு வேற போகணும்”, வாய் மொழியாய் வார்த்தைகள் வந்தாலும், அவனைவிட்டு நகர்ந்தாள் இல்லை. மயக்கமும் தேவையும் இருபாலார்க்கும் பொதுவானதுதானே?

ஆனால், த்ரிவிக், இவளது சொந்தங்கள் இவர்களுக்காய் காத்திருப்பதை எண்ணி, நச்சென மணவாட்டியின் நெற்றியில் இதழ் பதித்து விலகினான், அவனுக்கே தெரியும் மேற்கொண்டு தொடர்ந்தால், அப்போதைக்கு கீழே போகமுடியாதென்று .. எனவே மனதை கடிவாளமிட்டு வெளியேறினான்.

“வா போகலாம்”, என்று கூறி கம்பீரமாய் வேட்டியின் நுனியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு  படியில் இறங்கும் தன்னவனை, கண்களில் நிரப்பினாள், அவனது மங்கை.. நங்கை நல்லாள்.

நேற்றுபோல எந்தவித அலப்பறையும் செய்யாது, பிரட் டோஸ்ட்-டினை ஜாம் சாஸ் தொட்டு சாப்பிட்டு, குடும்பத்தினருக்கு ஏமாற்றமளிக்காமல், இரண்டு இட்லியையும், குழம்புடன் சாப்பிட்டு நல்ல மாப்பிள்ளை என்ற பெயரை தக்க வைத்தான்.

அவர்களின் குலதெய்வமான திருநீர்மலை எம்பெருமான் கோவில் சென்று , அன்னவர் நின்ற, அமர்ந்த, சயனித்த திருக்கோலத்தை கண்டு, அனைவரும் மனம் லயித்தனர். இவர்களுக்கென சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க..  பிராட்டியுடன் உலகலந்தானின் தரிசனம். புது மணமக்கள் இருவருக்கும் ஒரே வேண்டுதல். “இவருடனான/இவளுடனான என் இல்வாழ்வு செழிக்கவேண்டும்”, என்பதே.

கோரிக்கையை ஏற்றானா எம்பெருமான்??

error: Content is protected !!