avav5

avav5

AVAV 05

வார்த்தைகள் வீரியம் மிக்கவை, மிக விசேஷமானவை. அவற்றின் கணபரிமாணம், அதை பேசுபவருக்கு தெரியாது, ஆனால், அதைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும், வெவ்வேறு அர்த்தத்தையும், புரிதல்களையும் தரும் வல்லமையுடையவை. ‘ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்’, எனவே அவைகளை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.

அதுவும் மனைவியுடன் பேசும்போது இன்னமும் அதிக கவனம் தேவை. காரணம் உலகளாவிய மனைவிகள் அனைவருக்கும் ஒரு வியாதி உண்டு. ‘அம்னீஷியா’ எனும் நோய் அவர்களை அணுகுவதேயில்லை, குறிப்பாக அவரவர் கணவர்கள் மொழிந்திருந்தால்/தொடர்புடையதென்றால், அவ்வார்த்தைகளை, குறிப்புகளை, செயல்களை அவர்கள் .. மரிப்பது வரை மறப்பதேயில்லை.

பத்து நாட்கள் .. புது மணதம்பதிகளுக்கு மிக இணக்கமான, இன்பமான, முக்கியமாக, அடுத்தவர் தொந்தரவில்லாத தனிமையான நாட்கள். ஊரிலிருந்து வந்த முதல் நாளில் .. நங்கைக்கு சின்னதாய் ஏற்பட்ட சுணக்கம் கூட பின்னுக்கு போயிருந்தது. கணவனாய் த்ரிவிக்ரமன் காட்டிய வேறொரு உலகம், காந்தமாய் இழுக்க.. மயங்கித்தான் போனாள், மங்கையவள். இவளின் ஒத்துழைப்பில், அவன் கள்ளுண்டவனாக மாற… இருவரும் ஒருவர் மீது ஒருவர் பித்தம் கொண்டே அலைந்தனர், எனக் கூறலாம்.

இவர்களின் மயக்கத்தையும் மீறி, நங்கை செய்த காரியம்.. அவள் அப்பாவிற்கு, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சரியாய் இரவு ஏழு மணிக்கு ஸ்கைப்பில் பேசுவதுதான். ஆரம்பிப்பது என்னவோ இவளாயிருந்தாலும், அங்கே அப்பாவில் ஆரம்பித்து அண்ணிகள், [1 அ 2 விட்ட] நாத்திகள் கடைசியாய் அவ்வீட்டின் நண்டு சிண்டு வரை பேச்சு நீளும். இவன் அவளருகில் அமர்ந்து, பேசும்போது விதவிதமாய் மாறும் அவள் முக பாவங்களை பார்த்து ரசித்திருப்பான். ‘இமோஜி கண்டுபுடிச்சவன் இவ முகத்தை பார்த்திருந்தா … இவளையே மாடலாக்கி இருப்பான்’, என்று அவன் மனதில் தோன்றும். ம்ம்ம்…அவ்வாறு தோன்றுவதை அவளிடம் சொல்லி இருக்கலாம், “நீ அழகுடி”, என்பது ஒரு மந்திர வார்த்தை. அழகில்லாத பெண்ணையும், வசீகரிக்கும் கூடவே வசீகரமாயும் ஆக்கும். அத்தனை சாமர்த்தியம், இந்த மெத்தப்படித்த மேதாவிக்கு தெரியவில்லை.

நங்கை.. பிறந்தகத்துக்கு பேசிய பின் மாமியாரிடம் பேசுவாள். சமையலில் கடுகு தீய்ந்து போனதில் இருந்து, சாந்தினிசவுக்-ல் கிடைத்த சாண்டிலியர் வரை அனைத்தையும் ஒப்புவிப்பாள். இவன் கூட, “எங்கம்மாகிட்ட எப்படி இவ்வளவு ஃபிரீ-யா பேசற நீ? எனக்கு உன்கிட்ட கூட ரெண்டு நிமிஷத்துக்கு மேல பேச விஷயமே இருக்கறதில்ல? நீயும் பேசறதில்ல?”, ஆச்சர்யமாய் கேட்டான்.

திரும்பி அவனை நேர்பார்வை பார்த்து “ஏன்னா அவங்க கேக்கறாங்க, எனக்கு பேச வருது.”, என்றாள். கேட்டவனுக்கு அவள் சொன்னது புரிந்தது. ஆனால்… சொல்லாமல் விட்டது புரியவில்லை. வரிகளுக்கிடையே படிப்பது ஒரு கலை, அது தெரியாத த்ரிவிக், ஒரு தோள் குலுக்கலுடன்அமைதியானான்.

மறுநாள் ஞாயிறு, த்ரிவிக் -கிற்கு விடுமுறை நாள். தம்பதிகள் டெல்லியில் ஓரளவு அனைத்து இடங்களையும் பார்த்து விட்டனர் என்றாலும், இன்னமும் ஆக்ரா செல்லவில்லை. அங்கு, இன்று கூட்டிச் செல்வதாய் நங்கையிடம் முன்தினமே கூறியிருந்தான். காலை சிற்றுண்டி கூட வெளியே பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்ததால், நங்கை காலையில் கிளம்பி தயாராக த்ரிவிக்ரமனோ, ஹாலில் நேற்று நின்று போன சுவர்க்கடிகாரத்தின் பேட்டரியை மாற்றுகிறேன் என்று ஆரம்பித்து இருந்தான். வெளியே செல்ல தயாராகிக் கொண்டிருந்த மனையாளை பார்த்தவன்… , “ஜஸ்ட்2 மினிட்ஸ்தான்டா. தோ பாட்டரி மாத்திட்டு கிளம்பிடலாம்” என்று கூறி, அதனோடு மல்லுக்கட்டிக்கொண்டு இருந்தான் காரணம் , அதன் பேட்டரியை மாற்றிய பின்னும், கடிகாரம் வேலை செய்யவில்லை. என்ன பிரச்சனை என்று பார்த்துக்கொண்டே இருந்ததில், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆக … ஒருவழியாய் வெற்றிகரமாக அதனை ஓடவும் வைத்து விட்டான்.

ஒரு சின்ன ஸ்ப்ரிங் சரியாய் மாட்டிக்கொள்ளாமல் இத்தனை நேரத்தினை சாப்பிட்டு இருந்தது. அதை அவளிடம் சொல்ல நங்கையிடம்திரும்பியவன் கண்டது… அந்தோ பரிதாபம்!வெளியே கிளம்ப மொத்தமும் தயாராகி சோஃபாவிலேயே தூங்கி இருந்தாள். வெளியே சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று சொன்னதால் அவள் எதையும் தயார் செய்யவும் இல்லை, சாப்பிடவும் இல்லை.

பசித்த வயிறு …மணி பார்க்கச் சொல்ல…, அது பத்தரையை காண்பித்தது. ‘ம்ப்ச்.. கிளம்பலேட்டாகும்னு தெரிஞ்ச உடனே ஏதாவது டிபன் செஞ்சிருக்கலாம் இல்ல இவ?.. கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது. வீட்டு வேல தானசெஞ்சுட்டு இருந்தேன்?’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவன், நங்கையை எழுப்பினான். “நங்கை எழுந்துக்கோ ஏதாவது டிபன் ரெடி பண்ணு ரொம்ப பசிக்குது.”, என்க .. இவனின் குரலுக்கு அரக்கபரக்க எழுந்தவள், அவன் சமைக்க சொன்னதில் கோபமானாள்.

ஒன்றும் பேசாமல், விடுவிடுவென்று சமையலறை சென்றவள், தோசைமாவைபிரிட்ஜ்-லிருந்து எடுத்து வெளியே வைத்தாள்.

தோசைக்கல்லைநங்-கென்றுகாஸ் அடுப்பில் வைத்தவள், நிமிடத்தில் தோசைகளை வார்த்து தட்டில் வைத்து சாப்பாட்டு மேஜையில் வைத்தாள். மிளகாய்ப்பொடியும், எண்ணெய் கிண்ணத்தையும் அருகில் வைத்து, குடிக்க தண்ணீரை எடுத்து வர உள் சென்றாள்.

“நங்கை… எனக்குதான் பொடி புடிக்காது-ன்னு உனக்கு தெரியுமே, ப்ளீஸ் சட்னி அரைச்சிடு.”, வார்த்தையில்தான்ப்ளீஸ் இருந்தது, ஆனால் அவன் த்வனிஅதிகாரமாய்த்தான் வந்தது.

“லேட்டாயிடுச்சு, தேங்காய துருவி போட்டாத்தான் நீங்க சட்னி சாப்பிடுறீங்க, அவ்வளவு நேரமில்லை, இன்னிக்கிஅட்ஜஸ்ட்பண்ணிக்கோங்க.”, என்று கூறி சட்னி கோரிக்கையை கத்தரித்தாள்.

இங்கு வந்த இத்தனை நாளில், நங்கை எதிர்த்து பேசி கேட்டறியாதவன், இந்த அவளின் கோபத்தில் சுதாகரித்தான். ‘சரி போகுது இன்னிக்கு ஒருநாள் அட்ஜஸ்ட் பண்ணுவோம்.’, மனதை தேற்றியவாறு சாப்பிட்டவன் , “நகி .. இப்போ ஆக்ரா போக டைமும்இல்ல, எனக்கு மூடும் இல்ல. சோகொஞ்சமாபிளானைமாத்தி… மளிகை சாமான் இல்ல, வாங்கணும்னு சொன்ன இல்ல? .. வாங்கிட்டு.. வெளில லஞ்ச்முடிச்சிட்டு வரலாம். ஓகே? நீயும் ரெடியாத்தானே இருக்க… ” வாஷ்பேசின் மேலே தொங்கிய தூவாலையில் கையை துடைத்தபடி பேச..

அப்பொழுதான்இவளுக்கான இரண்டாவது தோசையை தட்டில் போட்டு டேபிளுக்கு வந்தாள்.

“ஓஹ் .. நீ இப்போதான் சாப்பிடுறஇல்ல? ஓகே ஒரு பைவ்மினிட்ஸ். நான் டிரஸ் மாத்திட்டுவந்துடறேன்.”, சொல்லி அறைக்குள் மறைந்தான்.

நங்கை தட்டை வெறித்துபார்த்திருந்தாள், அவள் வீட்டில் தோசைக்கு குறைந்தது மூன்று வகையாவது தொட்டுக்கொள்ளவென இருக்கும். தவிர பொடி தனி. கண்ணைக் கரித்தது. எதுவும் பேசாமல் இரண்டே நிமிடத்தில் தோசையை விழுங்கியவள் மனதில், ‘நான் சாப்பிட்டேனாஇல்லையான்னு கூட இவருக்கு தெரியாதா?’, என்ற எண்ணம் சிக்கிமுக்கி கல்லாய் நெஞ்சில் உரசியது. இப்போது நங்கையின் பிரச்சனை தோசைக்கு தொட்டுக்கொள்ளும் பதார்த்தத்திலா? அல்லது கணவன் சாப்பிட்டாயா என்று கேட்காததிலா?

கடந்த /நிகழ்/எதிர் காலத்தைக் கணிக்கும் வல்லமையுடைய விதியை கேட்டால், அது, “அதுக்கும் மேலே”, என்று பதிலுரைத்து சிரிக்கும் .

கணவன் யோசனைப்படியே இருவரும் சூப்பர் மார்க்கெட் செல்ல, ஆளுக்கொரு பையை கையில் பிடித்தவாறு இருக்க.. நங்கை, “நீங்க இந்த மளிகை லிஸ்ட்-ஐ வாங்கிட்டு வாங்க. நான் காய்கறி, டைரி’ஸ் [பால் பொருட்கள்] எல்லாம் வாங்கறேன். முடிச்சிட்டா பில்லிங்-ல நிக்கும்போது கால் பண்ணுங்க. “, என்று சொல்லி காய்கறி பகுதிக்கு சென்றாள்.

அனைத்தையும் முடித்து வர அரை மணி நேரத்திற்கும் மேலானது. முன்னதாய் வந்த த்ரிவிக், நங்கைக்கு அழைக்க.., அவளும் வர.. பொருட்கள் விலை போடப்பட்டது. அதில் முகத்தை நிறமாக்கும்க்ரீம்கள், லோஷன்கள் என இவள் லிஸ்ட்-ல் இல்லாத பொருட்கள் இருக்க, திரும்பி த்ரிவிக் -கைப் பார்த்தவள், “நான்தான் இதெல்லாம் யூஸ்பண்ணமாட்டேன்னு உங்களுக்கு தெரியுமே? ஏன் வாங்குனீங்க?”, எனக் கேட்க…

“ஒருதடவை ட்ரைபண்ணிப் பாரு, ஆயுர்வேதிக் ப்ரொடக்ட்., எங்க ஆபிஸ் ஷில்பா கூட, ஆய்லி ஃபேஸ்-க்குநல்லா இருக்கும்-ன்னு சொன்னா..”, என்றான்.

வேறேதும் பேசாமல் அவைகளையும் சேர்த்து பில் போட்டு, வெளியே வந்து காரில் அமர்ந்ததும், நங்கை கேட்டது, அவனை தூக்கிவாரிப் போட வைத்தது, “எனக்கு ஆய்லிஃபேஸ்-ன்னு அவங்களுக்கு எப்படித் தெரியும் ?”, கேட்டாள் நங்கை. சொன்னவன் முழித்தான்.

மனசுக்குள் ….

சஸ்…  சஸமே..  சஸமே.. சஸமே.. டீடிங் ..

சஸ்…  சஸமே..  சஸமே.. சஸமே.. 

சஸ்…  சஸமே..  சஸமே.. சஸமே.. [23ம்புலிகேசி BGM, DTS ல் ] கேட்டது.

க்ராஸ்டாக் ::

தேவலோகம் [அனைத்து தேவர்களும்/கடவுள்களும் இங்கே வாசம், அதாவது இந்திர லோகம், ப்ரம்ம லோகம், வைகுண்டம், கைலாசம் போன்ற எல்லா ஏரியாவும்இங்க தான் இருக்கு, நமக்கென்ன புஷ்பகவிமானமா இருக்கு? போயிட்டுபோயிட்டு வர? இல்ல யாராவது பெட்ரோல் அலவன்ஸ்தாராங்களா?அதனால… எல்லாரையும் ஒரே ஏரியாவுக்குமாத்திட்டேன்.]

தேவகுரு “சுக்கிரா… எங்கே இத்தனை வேகமான ஓட்டம்?”, அதிவிரைவாக சென்று கொண்டிருந்த அசுரகுருவான சுக்கிரனைப் பார்த்து கேட்க,

“சுபமாய்அமர்ந்திருக்கும் ஒரு இளைஞனை பார்க்க சனி பகவான் சென்று கொண்டுருக்கிறார். அவனுக்கு திருமணம் ஆகி பத்து இருபது நாட்களேயாகிறது.. இன்றிலிருந்து, சனைஸ்சரயனின் பார்வை அவன் மேல் படப்போகின்றது. பாவம், புது மணமக்களாயிற்றே என்று அவரிடம் ஒரு வேண்டுகோள் வைக்கத்தான் இத்தனை வேகம் ..”

“ஹா ஹா .. அவரிடம் வேண்டுகோளா? சரி சரி, சென்று வாரும், பின்னால் பாப்போம்.”

வேகமாய் தன்வாகனமான குதிரையை விரட்டியவர், காகத்தில் ஏறப்போன கூர்மங்கனை நிப்பாட்டினார்.

“சனி ப்ரோ. கொஞ்சம் நில்லுங்கப்பா… “

“வாரும், சுக்கிரனே, நானே மெதுவா காக்கா மேலபோறேன், உமக்கென்னவோய்… குதிரை வைத்திருக்கீர்… நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு செல்ல. போகட்டும் என்ன இத்தனை அவசரம் ?”

:எல்லாம் நேற்று பேசிய விஷயம்தான்ப்ரோ. என் ஆதிக்கம் அவனுக்கு அதிகமுண்டு, நீர் ரொம்ப விளையாடிட்டா என் பேர் கெட்டுடும்.”

“இன்னிக்கு தானப்பாபாக்கப்போறேன்? அதுக்குள்ள ரெக்கமண்டேஷனா?”

“நீர் போக பிரயத்தனம் செய்யும்போதே அவங்க முட்டல்ஸ் ஆரம்பமாயிடுச்சே?”

“ஊடல் இல்லாத கூடல் இனிக்காது ஓய்.. அனைத்தும் விதிப்பயன், சிவனே என்று இரும், எதற்கும் குருவை அடிக்கடி த்ரிவிக்ரமனைபார்க்கச் சொல்லும். நீரோ அவன் ஜாதக கட்டத்தில் ஆட்சியில்இருக்கிறீர், உங்கள் இருவரையும் மீறி நான் என்ன செய்துவிடப்போகிறேன்?”, என்று சிரித்தவாறு காகத்தின் மீதேறி பறந்தார் சனீஸ்வரர்.

“நாங்க ரெண்டு பேர் கொடுக்கறதை அனுபவிக்க முடியாதபடி செய்ய உம்மஒத்தை பார்வை போதுமே ஓய்?”, புலம்பிய சுக்கிரன் அவரது இல்லம் சென்றார்.

அரிவை அறிவானா ?

error: Content is protected !!