avav6

avav6

அரிவை விளங்க … அறிவை விலக்கு  – 06

மனைவி கேட்ட கேள்வியில் திகைத்து விழித்தவன், “ஏய்… அவ யார் கூடவோ போன்ல பேசினது, தற்செயலா என் காதுல விழுந்தது. கடை-ல அந்த ப்ராடக்ட் பாத்தோடனே, உனக்கு வாங்கலாமேன்னு தோணுச்சு, இதுக்கு ஏன் இல்லாத கற்பனையெல்லாம் பண்ற?”, என்று எரிந்து விழுந்தான்.

“ஓஹ் .”, என்று நிறுத்தி, “ஆனா எனக்கு அதிலேல்லாம் நம்பிக்கையில்லை. அண்ட் சேராதும் கூட, தவிர, நானா நினைச்சுப்பேன் ‘அப்படி அந்த க்ரீம் லோஷன்-லாம் கலரை மாத்தும்ன்னா, நம்ம நாட்ல முக்கால்வாசிப் பேர் வெள்ளையா இல்ல ஆகிருப்பாங்க?'”, சமாதானம் போல காரணம் கூறினாள்

“ஓஹோ ” .. இதுல அப்படி ஒரு வியூ இருக்கோ?”, என்று யோசித்த த்ரிவிக், சட்டென அவள் கேள்விக்கு தாவினான். “சரி அதை விடு. ஒரு விஷயம் க்ளியரா தெரிஞ்சுக்கோ. நான் வீட்டு விஷயம்லாம் ஆபிஸ்-ல பேசமாட்டேன். சொல்லப்போனா யார்கிட்டயும் பேசவே மாட்டேன். அதுவுமில்லாம, அந்த பொண்ணு நாலைஞ்சு மாசம் முன்னாடி என்னைப் ப்ரொபோஸ் பண்ணினா. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். அவகிட்ட, உன்ன இறக்கி பேசுவேனா? இனி, உன் டவுட் எதுவா இருந்தாலும் நேரடியா என்னை கேட்டுடு, நீயா கெஸ் பண்ணாத? ஓகே? “, ஸ்ட்ரிக்ட் ஆபீசராய் சொன்னான்.

“ம்ம்”,என ஒரு சின்ன தலை அசைப்பு வந்தது நங்கையிடமிருந்து. அவளது முகம் தெளிவாக.. நிம்மதியாக காரை கிளப்பினான்.

அறிதலுக்கும், அர்த்தப்படுத்திக் கொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. நங்கை அறிவதற்காகவென த்ரிவிக் சொன்ன அந்த சின்ன விஷயத்தில், அவள் மனம் கீழ்க்கண்டவாறு அர்த்தப்படுத்திக் கொண்டது:

ஷில்பா, என்று ஒரு பெண், இவனுடன்/ இவனுக்கு கீழே வேலை பார்க்கிறாள் ; ஏற்கனவே இவனிடம் காதல் சொல்லி இருக்கிறாள் ; அதை த்ரிவிக் நிராகரித்தும் இருக்கிறான் ; ஆனாலும் அவள் இன்னமும் இங்கே வேலையில் இருக்கிறாள்; அவள் கேபினில் இருந்து பேசினால் கேட்கும் தூரத்தில்தான் இவர்கள் இருவரின் இருக்கைகள். அனைத்திற்கும் மேலே, அவளுக்கு எண்ணெய் வடியும் முகம் இல்லை; த்ரிவிக்-கிற்கு  வீட்டு விவகாரங்களை அலுவலகம் /வெளியே சொல்லும் வழக்கம் இல்லை. அடுத்தவர் முன் கீழிறக்கி பேச மாட்டான். கடைசியாக, நினைத்தது, ‘அந்தப் பெண்ணை வேண்டாம்-ன்னு என்னை தேர்ந்தெடுத்து இருக்கார், சோ அவளை விட நான் பெஸ்ட்-டாத்தான் இருக்கணும்.’, என்று முடிந்து வைத்தது.

பின்னர் பிரபல தென்னிந்திய உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, வீட்டின் அருகிருந்த பார்க்கில் சிறிது நேரம் பொழுதைக் கழித்து, அங்கு பாட்டியுடன் வந்திருந்த ஒரு ஐந்து வயது குழந்தை கருத்தைக் கவர, அதனுடன் விளையாடி .. கதையளந்தாள். அதன் குண்டு கன்னமும், கிள்ளைப் பேச்சும், நங்கைக்கு அவள் அண்ணன் மகவுகளை நினைவுறுத்த, கிட்டத்தட்ட ஒருமணி நேரத்திற்கும் மேலாய் அதனிடம் நேரத்தினை செலவளித்தாள் .

கூடவே, பக்கத்தில் இருந்த அதன் பாட்டியிடம் பேச்சு கொடுத்து இருந்ததில், குழந்தையின் பெயர் தீபிகா கவுர் என்பதையம், அவர்[பாட்டி] நாளை, சிகாகோவில் இருக்கும் இன்னொரு பெண் வீட்டிற்கு செல்லவிருப்பதாகவும், இவளை பார்த்துக் கொள்ள இன்னமும் ஆள் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

‘எப்போது வருவீர்கள் ?”, என்ற கேள்விக்கு, அவர் ஆறு விரலை காண்பித்து, ஆறு மாதம் ஆகும் என்றார். அங்கு இரண்டாவது மகளுக்கு பிரசவம், போக வேண்டிய கட்டாயம் என்பதையும் கேட்காமலே புலம்பினார்.

வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, மெத்தப் படித்து, வேலையும் கிடைத்தாலும் , க்ரீன் கார்டு கிடைக்க நாய் படாத பாடு பட வேண்டும். வீட்டு வேலைகளை பகிர ஆள் இல்லாமல் , அம்மாவையும் மாமியாரையும் ஆறு மாதத்துக்கு ஒருமுறை மாற்றி மாற்றி வரவழைத்து அவர்களை வயதான காலத்தில் படுத்தும் பிள்ளைகள். இருந்தாலும் மக்களுக்கு, இந்த வெளிநாட்டு மோகம் தீர்ந்தபாடில்லை. “என் பேத்தி என்னம்மா இங்கிலிஷ் பேசுவோ தெரியுமோ?”, என்ற பெருமையடிக்கும் கூட்டத்திற்கும் குறைவில்லை. வெள்ளைக்காரன் தேசத்தில் ஆங்கிலம் பேசாமல், தெள்ளுத்தமிழில் திருவாசகமா பாட முடியும்? என்ன பெருமைகளோ?, என்ற எண்ணம் நங்கையின் மனதில் தோன்றி மறைந்தது.

“காடாறு மாதம், நாடாறு மாதம்” பாட்டி விடைபெறும் முன் , அவரிடம் என்ன தேவையென்றாலும் அழைக்குமாறு அலைபேசி எண்ணை பகிர்ந்து கொண்டாள் நங்கை. பின் அந்திசாய, இருவரும் இல்லம் திரும்பினர்.

இலகு உடைக்கு மாறிப் பின் த்ரிவிக் தொலைக்காட்சியில் மூழ்க, நங்கை சாமான்களை அலமாரியிலும் , குளிர்சாதன பெட்டியிலும் அடுக்கிவிட்டு, இரவு உணவினை தயார் செய்திருக்க.. வேலைகளை முடித்து, இவளும் டிவி யில் மூழ்கினாள்.

நேரம் செல்லச் செல்ல… பசியை உணர்ந்து, இருவரும் உணவருந்தி, உறங்கச் சென்றனர். முடிந்தவரை இரவு உணவினை, இருவருமாய் சேர்ந்து உண்பதை பழக்கமாக்கி இருந்தாள்.

உல்லாசமாய் கூடிக் களித்து, கண்ணுறங்கும் நேரத்தில்… அவன் தோள்வளைவில் இருந்த நங்கை, இருட்டில் தெரிந்த அவன் முகத்தின் வரிவடிவம் நோக்கி, “விக்கி…”, என்றழைத்தாள் .

“ம்ம் “, அரைத்தூக்கத்தில் இருந்தான்.

” விக்ரமா”, மனைவி குழைந்தாள். இப்படி நங்கை கூப்பிடுவது மிகப் பிரத்யேக தருணங்களில் மட்டுமே.

“சொல்லுடா”, என்றவனிடம் …

“என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?”, என்றாள் .

விழி திறவாமல், “ரொம்ப ரொம்ப்ப. யூ ஆர் தி பெஸ்ட் இன் மை life”.

“நான் நாளைலேர்ந்து அந்த லோஷன்-ல்லாம் யூஸ் பண்ணலாம்னு இருக்கேன்.”

“ஏன்டா?, அதான் உனக்கு சேராதுன்னு சொன்னல்ல ?”,

“பரவால்ல, அதான் ஆயுர்வேதிக்ன்னு சொன்னீங்களே?..இது நங்கை.

“ம்ம். சரி”, என்றான் பாதி தூக்கத்தில்.

ஐந்து நிமிடத்தில்… “விக்கி…”, என நங்கை அழைக்க….

“ம்ம்.. தூங்கலியாடா ?”, கரகரத்த குரலில் த்ரிவிக் பதிலுரைக்க…

“நான் கருப்பா இருக்கேன்ன்னு ஃபீல் பண்றீங்களா?”, என்க …..

மொத்தமாய் விழித்துக் கொண்டான்.. “ஏய்.. தெரியாத்தனமா ஒன்னு ரெண்டு க்ரீம் வாங்கினதுக்கு இத்தனை லொள்ளாடி பண்ணுவ?, ஒன்னரை மணிக்கு மேல ஆகுதுடி.. மனுஷனை கொஞ்சமாவது தூங்கவிடு..”, கிட்டத்தட்ட கெஞ்சினான்.

நறுக் கென , அவன் கன்னத்தை கடித்து, “ஐ லவ் யு சோ மச் டா”, என கணவனை இறுக்கிக் கொண்டாள்.

த்ரிவிக் “ஆ.. “, என்ற அலறலுடன், அவளை சிறை செய்து, நங்கையின் காதோடு பாடினான்.

” கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு

உன் கண்ணு ரெண்டும் என்ன மயக்கும்

தவுசண்ட் வாட்சு பவரு

கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு

சாமி கருப்பு தான் சாமி சிலையும் கருப்பு தான்

யானை கருப்பு தான் கூவும் குயிலும் கருப்பு தான்

உன்ன ஆச பட்டு கொஞ்சும் போது குத்துற

மீசை கருப்பு தான் அசத்தும் கருப்பு தான்

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

மறுநாள் வழமையாய் செல்ல, அதற்கு அடுத்த நாள் காலை அலுவலகம் செல்லும் வரை யாருக்கும் எந்த தடங்கல்களும்/பிரச்சனைகளும் இல்லை.

த்ரிவிக் சென்றபின், நங்கையின் அலைபேசி அழைக்க, தெரியாத எண், ஆனாலும் எடுத்தாள், பேசியது பார்க்கில் சந்தித்த தீபிகாவின் அம்மா. வெளியே நிற்பதாக கூறவும், சென்று கதவை திறந்து, என்ன விஷயம் என்று விசாரித்தாள். வாசலில் நின்ற அந்த மத்திம வயதிற்கும் சற்று கீழே இருந்த பெண்மணி, மரியாதையான தோற்றத்தில் இருக்க, தீபிகா கையை பிடித்திருந்தாள். நங்கையை பார்த்தவுடன், ஸ்நேகமாய் சிரித்தாள் குழந்தை.

இருவரையும் உள்ளே வரச் சொன்னவளிடம், தீபிகாவின் அம்மா சொன்னது “அவர்களது பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்மணிக்கு உடல் நலம் சரி இல்லை என்றும், அவர்களை கூப்பிட்டுக் கொன்டு மருத்துவமனை செல்வதாலும், தீபிகாவுடன் மற்றொமொரு குழந்தையை , அவர்கள் திரும்பி வரும் வரை பார்த்துக் கொள்ள வேண்டுமாயும் கேட்க.. “கண்டிப்பா பாத்துக்கறேன், நீங்க மெதுவா டென்ஷனில்லாம போயிட்டு வாங்க”, வாக்குறுதி கொடுத்து, பிள்ளையையும் வைத்துக்கொண்டு விட்டாள் . அடுத்த பத்து நிமிடத்தில் இன்னொரு குழந்தையும் வந்து சேர, இருவருடனும் நன்றாய் பொழுது போனது நங்கைக்கு.

௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰௰

த்ரிவிக்கிற்கோ அப்படியே தலைகீழ். அவன் அலுவலகத்தின் அருகே இருந்த மின்மாற்றி அப்போதுதான் பழுதடைந்திருந்தது. மின்சார ஊழியர்கள் எத்தனை வேகமாய் செய்தாலும், தற்போதைக்கு பணி முடியாது. ஆபிஸ் யு.பி.எஸ். மதியம் வரை மட்டுமே தாங்கும். என்ன செய்வது என்று யோசித்து, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைத்தான்.

வட இந்தியாவில், வீட்டிற்கு வேலையாட்கள்/நண்பர்கள் அனைவரையும் அழைத்து, பார்ட்டி கொண்டாடுவது என்பது ஒரு வழமை. அதிலும் வார இறுதி நாட்கள் அதகளப்படும்.

இன்னமும் இரண்டு நாட்களில் த்ரிவிக் வெளியூர் செல்லவிருப்பதால், இன்றே மதிய விருந்தை முடித்து, மாலை இந்தியா கேட் சென்று இரவு டின்னருக்கு, அனைவரையும் வெளியே அழைத்துச் செல்லலாம் என பிளான் செய்தான். ஒரு பதினோரு மணி அளவில், அதை அனைவருக்கும் தெரிவித்து, அவர்கள் சம்மதம் பெற்று, இத்தகவலை அவரவர் வீட்டில் தெரிவிக்குமாறும் அறிவித்தான்.

நங்கைக்கு, இத்தனை பேர் வருவார்கள், மதிய விருந்துக்கு அவளால் முடிந்ததை செய்யுமாறும், பிரியாணி முதலான வகைகளை வெளியில் வாங்கித் தயாராய் வைத்திருக்குமாறும் …. தெரிவிக்கவென வாட்சாப்-இல் பதிவு செய்தான். அவள் பதிவை பார்த்தது போல.. இரண்டு நீலக் கோடுகள் தெரிய… அவனது வேலையில் மூழ்கினான்.

த்ரிவிக் -இன் வாட்ஸப் பதிவு வந்த போது, அலைபேசி தீபிகாவிடம் இருந்தது. அக்குழந்தை என்ன செய்தாளோ? த்ரிவிற்கிற்கு பதிவினை படித்தது போல காண்பித்தது அலைபேசி.

***************

த்ரிவிக் அவனது அலுவலக பணியாளர்கள் அனைவரையும் , அலுவலக வண்டிகளில்/வாடகைக் கார்களில் கூட்டிக்கொண்டு வர , சிலர் தத்தமது வண்டிகளில் வருவதாக கூற, [அவர்களிடம் முகவரி தந்திருந்தான்], சரியாய் மதியம் ஒன்று இருபதிற்கு, அனைவரும் த்ரிவிக்கின் வீட்டின் கீழ் தளத்தில் குழுமி இருந்தனர்.

கடைசி நபரையும் வரவேற்று, “ஏன் கீழயே நிக்கறீங்க?, வாங்க போகலாம். ப்ளீஸ் கம் இன்”.

மின்தூக்கி நேராய் ஐந்தாவது மாடி சென்றது, லிப்ட் அருகே தான் இவனது ஜாகை. த்ரிவிக் அழைப்பு மணியை அடிக்க.. “கோன் ஹை ?”, நங்கை குரல் கொடுத்தாள். அவளின் ஹிந்தி பேச்சில் சின்னதான சிரிப்பு வர, “நகி ….” என்றழைத்தான்.

“ஹே … சீக்கிரம் வந்துடீங்க? “, என்று உள்ளிருந்தே குதூகலமாய் கூறியவள், “வாங்க வாங்க அங்கிள் வந்திருக்காரு, வெல்கம் பண்ணலாம்”, என்று குழந்தைகளிடம் கூறி, கதவைத் திறந்தாள் நங்கை நல்லாள்.

நலுங்கிய உடை, வாராத தலை, அதில் செருகி இருந்த இரண்டு ஸ்கெட்ச் பேனாக்கள், ஹாலெங்கிலும் இறைந்திருந்த காகிதங்கள், தரையெங்கும் வண்ணக்கோலங்களாய் இரண்டு பிள்ளைகளின் கிறுக்கல்கள், அனைத்திற்கும் மேல்.. விழிகள் வெளியே தெறித்து விழுமோ எனும் அளவிற்கு சாசராய் விரித்த கண்களுடன் நங்கை..

இவளுக்கு சற்றும் குறையாத திகைப்புடன் த்ரிவிக்ரமன், இமைக்கவும் மறந்திருக்க.. சபை நாகரிகம் கருதி, யாரும் எதையும் காண்பிக்காது, “நமஸ்தே பாபிஜி”, என்று ஆண்களும், “நமஸ்தே தீதி”, என்று பெண்களும் முகமன் கூற, தம்பதிகள் இருவரும் தெளிந்தனர். இருவருக்கும் அடுத்தவர் மீது கழுத்தளவு கோபம் பொங்க .. அதைக் காண்பிக்கும் நேரமா இது?

“வெல்கம் டு அவர் ஸ்வீட் ஹோம்”, என்று விளித்து, நங்கையை ஒரு பார்வை பார்த்தான். அவன் குரலில் திகைப்பு நீங்கியவள் , “வாங்க, உள்ள வாங்க”, என்று வீட்டுப்பெண்ணாய் வரவேற்றாள். இரண்டு பெண்களிடம், “கொஞ்சம் இவங்களை பாத்துக்கோங்க, இரண்டே நிமிஷம்”, என்றவள் முதலில் எடுத்தது வாரியலை. மளமளவென கூட்டி வரவேற்பறையை சரி செய்து, ஏசி-யை உயிர்ப்பித்து அனைவரையும் சரியாய் அமர வைத்து, குளிர் பணம் எடுத்து வந்தாள். ஒரே நிமிடத்தில் முகம் துலக்கி, உடை மாற்றி… மின்னலாய் மாறியிருந்தாள்

சமையலறைக்கு சென்றவள்.. அடுத்த அரைமணியில், எக்ஸ்பிரஸ் டெலிவரியில் உணவுகள் வருமாறு அலைபேசியில் பேசி ஏற்பாடு செய்து, அங்கிருந்தவர்களுடன் பிள்ளைகளை பேச வைத்து, அனைவரைப்பற்றியும் பேசி தெரிந்து கொண்டு… எப்படியோ அனைத்தையும் சமாளித்து உணவினை பரிமாறி …

உஷ்…… அப்பாடா என்று அமரும்போது மணி நான்கு.

இவர்களின் இந்தியா கேட் செல்லும் திட்டத்தினை கேட்டவள் , குழந்தைகளை விட்டு செல்ல முடியாதென்ற காரணத்தைக் கூற, த்ரிவிக்ரமனின் மனதில் பொங்கிய எரிமலைக்கு கொஞ்சம் அதிகமாய் நெய் வார்த்தாள்.

த்ரிவிக் பல்லைக்கடித்து கோபத்தினை விழுங்கினான்.

கூடவே, “பரவால்ல… தீதி தயாரா இருக்கும்போது, இன்னோரு நாள் போகலாம், ஆனா, நான்தான் அவங்களுக்கு மெசேஜ் கொடுப்பேன்”, என்று ஷில்பா வேறு கூற.. நங்கைக்கு அந்த AC குளிரிலும் வியர்த்தது.

அரிவை அறிவானா?

error: Content is protected !!