Chakkarai-Nilavu1

சர்க்கரை நிலவே…!

நிலவு – 1

இனிப்பில்லா தேநீரிலும்

சுவை அதிகம் உணர்ந்தேன்

எனை மயக்கிய தித்திப்பான

மனைவியின் முத்தங்கள்…

சர்க்கரையை கடந்த இனிப்பு

தேநீரீலும்… எனக்குள்ளும்…

 

அன்றைய முழுமதி தன் நகர்வலத்தை வானில் நடத்திக் கொண்டிருக்கும் இரவின் உச்ச வேளை. சிறியவர்களும் பெரியவர்களும்,தங்களது தினப்பொழுதுகளை கடந்து சுகமாய் துயில் கொள்ளும் இராக்காலம். சின்னஞ்சிறு பறவையும் அலைந்து திரிந்த மனிதனும், தனது ஆசைகளை, தாபத்தை தன் இணையிடம் கொட்டித் தீர்க்கும் பின்னிரவுப் பொழுது.

சென்னை கிண்டியில் உள்ள மாடிவீட்டின் பத்துக்கு பத்து அறையில், அந்த நள்ளிரவு நேரத்தில் அலைபேசியின் வழியாக எஃப்‌எம் ரேடியோ மிகச் சன்னமாகப் பாடிக் கொண்டிருந்தது.

உச்சியில் தேன் விழுந்து

என் உயிருக்குள் இனிக்குதடி

மண்ணகம் மறந்து விட்டேன்

என்னை மாற்றுங்கள் பழையபடி

உன் வாசத்தை சுவாசிக்கிறேன்

என் ஆயுள் நீளும் படி….

பாடலைக் கேட்கக் கேட்க அத்தனை சிலிர்ப்பு தயானந்தனுக்கு… ‘இப்படித்தானே இருந்தோம் சற்று முன்பு வரை’நினைத்தவனின் முகத்தில் உல்லாசப் புன்னகை பூத்தது.

நேரம் நள்ளிரவை தாண்டியிருக்க, சற்று முன் நடந்த கூடலில் உடல் களைத்துப் போயிருந்தாலும், மனம் புத்துணர்ச்சியை மீட்டுக் கொண்டிருந்தது. நாள் முழுவதும் எதிர்கொண்ட மன உளைச்சல்கள் எல்லாம் சென்ற இடம் தெரியவில்லை.

மீட்டுக்கொண்ட உற்சாகத்தில் மனைவியை எதிர்பார்த்து வாசல் நிலையை பார்த்துக் கொண்டிருக்க, மிதுனா சிறிய வராண்டாவைத் தாண்டிய குளியல் அறையில்இருந்து வெளிப்பட்டு கணவனின் அருகே வந்தமர்ந்தாள்.

“உனக்குள்ள ஹைவோல்டெஜ் பவர் ஸ்டேஷன் வச்சிருக்கியா, மித்துக்குட்டி? உன்னை தொட்டாலே,அவ்ளோ எனர்ஜி பாஸ் ஆகுது எனக்கு” சிரிப்புடன் கூறிய தயானந்தன்,

“சாரிடி…உன்கூட இருக்குற நேரத்துல என்னை, என்னாலேயே கண்ட்ரோல் பண்ணிக்க முடியல, ரொம்ப கஷ்டமா இருக்கா?” கண்களைச் சுருக்கியபடி மென்மையான குரலில் கூறியவன், மனைவியின் முகம் மற்றும் கழுத்தில் இருந்த சிவந்த தடங்களை வருடிக்கொண்டே, “ரொம்ப வலிக்குதா மிது…” பாவமாய் கேட்க, கணவனின் பேச்சில் முகம் மலர்ந்து சிரித்தாள் மிதுனா.

தன் கணவன், தன்னிடம் மயங்கிய கதையை தன்னிடமே, பெருங்குறையாக பிதற்றி வைக்கிறானே என்று கோபம் கொள்வதா? அல்லது எனக்கானவன், என்னிடம் வீழ்ந்த கதையை எண்ணிப் பெருமைப்படுவதா என்ற வேறுபாடான நினைப்பில், அவளது உள்ளம் சிரித்துக் கொண்டதை, உதடும் வெளிப்படுத்தியது.

மனைவியான ஒவ்வொரு பெண்ணிற்கும், கணவனிடமிருந்து இப்படியான பேச்சுக்களைக் கேட்பதில் அத்தனை சந்தோஷம் இருக்கும் என்பதை, திருமணம் முடிந்த இத்தனை நாட்களில் உணர்வுப் பூர்வமாய் அறிந்து வைத்திருந்தாள்.

கணவனின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த பெண்களுக்கு, இது போன்ற உணர்வுகள் கிடைக்குமா, கிடைக்காதா என்ற பட்டிமன்ற விவாதம் எல்லாம் இந்த நேரத்தில் தன் மனதில் வலம் வந்தாலும், அவை அத்தனையையும் ஒதுக்கி வைத்து, கணவனைப் பார்த்து மீண்டும் சிரித்தாள்.

“என்னடி திரும்பத் திரும்ப என்னைப் பார்த்து சிரிச்சு வைக்கிற? என் கேள்விக்கு பதில் சொல்லு, இல்ல உன் சிரிப்புக்கு விளக்கத்தை சொல்லு செல்லக்குட்டி”  சொல்லியபடியே தன் விரலால், அவள் கன்னத்தில் கோலமிட்டான் தயானந்தன்.

“கொஞ்சுறேன்னு உங்க புலம்பல இன்னும் ஆரம்பிக்கலையே? மறந்தாச்சு போலன்னு நெனைச்சேன்… ஸ்டார்ட் பண்ணிட்டீங்க தயா,என்ன ஆச்சு மிச்ச சொச்சமெல்லாம்?”புருவத்தை ஏற்றி இறக்கி,கணவனைப் பார்த்து கேலியுடன், மிதுனா கேள்வி கேட்க,

“அதுக்கென்ன பஞ்சம் மித்துகுட்டி, நீதான் என் செல்லகுட்டி, இந்த ஆறு மாசமா,உன் சுண்டுவிரல்ல என்னை சுத்தி வச்சுருக்கிற அம்முகுட்டி, மனசுக்குள்ள உன்னை நினைக்கும் போதே இனிச்சுபோற வெல்லக்கட்டி, எல்லா உணர்ச்சியையும் உன் மொகத்தில கரைச்சு, நிமிசத்துல சகஜமா சிரிக்கிற,என் சக்கரகட்டிடி நீ”என்றவனின் குரலில் உல்லாசமும் உற்சாகமும் கரை புரண்டு ஓடியது.

ஒருகை விரல் கோலத்தைப் போட, மறுகையால் அமர்ந்தாவாறே மனைவியை, தன் தோள் வளைவிற்குள்வைத்துக் கொண்டான். சமீபத்தில் திருமணம் முடிந்த தம்பதிகளின் ஆசையையும் அன்பையும் விளக்கவும் வேண்டுமோ?தன் ஆசைகள் அத்தனையையும் அவனது கொஞ்சல் பேச்சில் வெளிப்படுத்தினான் தயானந்தன்.

“வரவர நேம் லிஸ்ட் நீண்டுகிட்டே போகுது, என் பேர எனக்கே மறக்க வச்சுருவீங்க போல… நான் தூங்கப் போறேன்” என்றவள் தன் படுக்கைக்கு செல்ல,

“மிது நாளைக்கு லீவ் தானே?”ஆசைப்பேச்சினை அவன் தொடர,

“இதென்ன கேள்வி தயா? நாளைக்கு சண்டே, லீவ் தான்!”

“அப்படின்னா… இன்னும் ஒருமணி கூட ஆகல… உனக்கு ஒகேன்னா…” வார்த்தைகளை இழுத்தவன், கன்னத்தில் வரைந்த கோலத்தை, அவளது இடையிலும் தொடர்ந்தவன், முடிந்த அத்தியாத்தை, கமா வைத்து மீண்டும் ஆரம்பிக்க அழைத்தான்.

“அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி, வலிக்குதா, கஷ்டமா இருக்கான்னு என்னை பார்த்து, பாவம் போல கேட்டவர், எங்கே போனாரு தயா?” மனைவியின் சீண்டல் கேள்வியில் அசட்டுப் புன்னகை சிந்தியவன்,

“அது… எப்பவும் அப்படிதானேடி கேக்குறேன், இன்னைக்கு மட்டும் புதுசா என்ன? ஆனாலும் மனசும் உடம்பும் திருமப வேணும்னு கேக்க வைக்குதே!” தன் நியாயத்தை கூறி, காதல் பாடத்தை அரங்கேற்றம் செய்ய அவசரம் காட்டினான்.

“இப்படி அவசரமா, உங்க அவஸ்தையஎதுக்கு இறக்கி வைக்கணும்? அப்புறம் என்கிட்ட ஏன் பாவம் போல கேக்கணும்”சாதாரணமாய் பேச ஆரம்பித்தவள், குத்தலாய் கணவனிடம் முடித்து வைக்க,

“என்னை என்னதான்டி பண்ணச் சொல்ற? என்னோட நெலமைய, ஒபனா சொல்லிட்டேன். இதுக்கும் மேல விளக்கம் சொல்ல என்கிட்ட வார்த்தை இல்ல” என சலித்துக் கொண்டவன், கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொள்ள, அதை தாங்க இயலாதவள்,

“உண்மையச் சொன்னா கோபம் வருது உங்களுக்கு, ஆசையா அனுசரணையா இருந்தா, எனக்கு ஏன் இந்த கஷ்டம் வருது? என்னைக்கோ ஒரு நாள் வந்து பாய்ஞ்சா, இப்படித்தான்” நடப்பைச் சொல்ல,

“என்னைச் சொல்றவ, நீ மட்டும் என்ன பண்ற? வாரம் முழுசும் போர்த்து படுத்துட்டு, மறுநாள் லீவுன்னு கன்ஃபார்மா தெரிஞ்ச பிறகுதானே, இன்னைக்கு சீக்கிரம் வாங்கன்னு மெசேஜ் பண்ற, சண்டே டுயிட்டி வந்துட்டா இதெல்லாம் மறந்துதானே போகுது, உனக்கு” மாறாத கோபத்துடன் மனைவியின் செயலில்குற்றம் கண்டுபிடித்தான்.

“நீங்க தள்ளி நிக்கிறதுக்கும், என்னைத்தான் காரணம் சொல்வீங்களா?” மிதுனா எதிர்கேள்வி கேட்க,

“பின்ன இல்லையா?ஒருநாளாவது நான் வர்ற வரைக்கும் முழிச்சிருக்கியா? இல்ல சிரிச்சு பேசியிருக்கியா? காலையில உனக்கு முன்னாடி போறவன், நீ தூங்கின பிறகுதான் வீட்டுக்கு வர்றேன். அப்டி இருந்தும், நாள் முழுசும் நடந்தே நீ டயர்ட் ஆகிருப்பன்னு உன்னை, நான் தொல்லை பண்றதில்ல… உனக்கு எந்த கஷ்டமும் குடுக்க கூடாதுன்னு, நான் ஒதுங்கிப் போனா, அதுக்கும் என்னையே குத்தம் சொல்ற” நீளமாய் மனைவியின் கேள்விக்கு பதில் அளித்தான். ஆக மொத்தம் இருவரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குற்றம் சொல்லிக் கொண்டனர்.

“கடவுளே! நான் சொன்ன அர்த்தமே வேற? எதுக்கு இப்டி தப்புதப்பா புரிஞ்சு வைக்கிறீங்களோ? மனசுல இத்தனை அழுத்தம் இருக்கப்போய் தான், எதுலயும் நிதானம் இல்லாம இருக்கீங்க…” சொல்லியபடியே தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டாள்.

“அப்படி நிதானம் இல்லாம என்ன பண்ணிட்டேனாம்? எத்தனை பேர கஷ்டப்படுத்தினேனாம்?”மனதில் இருந்த உல்லாசங்கள் விடை பெற்று, கோபம் மட்டுமே அங்கே ஆட்சி செய்தது.

“எத்தனையோ தடவ சொல்லிட்டேன் கொஞ்சம் ரிலாக்ஸா இருங்க, உங்களுக்காக டைம் ஸ்பெண்ட் பண்ணுங்கன்னு…  எங்கே? நான் சொல்றது கேட்டா தானே? எப்பபாரு வேலை, அம்மா, தங்கச்சி, அக்கா, கடன் இப்படியே போட்டு மனச உலப்பிட்டு இருக்க வேண்டியது. ஒருநாள் ஒரு பொழுதும் பொண்டாட்டிய நினைச்சுப் பாக்கிறது கிடையாது. நாங்களா கூப்பிட்டு, இப்போ வாங்கியும் கட்டிக்க வேண்டியிருக்கு” தனது மனத்தாங்கலை அமைதியுடன் சொல்ல,

“உன்னோட நினைப்பு இல்லாமயா, நீ கூப்பிட்டதும் ஓடி வர்றேன். இன்னைக்கு கணக்ககூட முடிக்காம வந்துருக்கேன். நாளைக்கு இருக்குற வேலையில, இந்த வேலை இன்னும் அரைமணிநேரம் இழுத்து வைக்கும், லயனுக்கு போயி, டெலிவரி குடுக்க லேட் ஆகிடும். உனக்கென்ன? நீ ஹாயா வீட்டுல உக்காந்துட்டு லீவ கொண்டாடிட்டு இருப்ப…” மறுநாளின் வேலை பின்னடைவை எல்லாம் ஒரே மூச்சில் சொன்னவன், அவளையும் குத்திக் காட்டிப் பேச, அவன் பேச்சிற்கு காதை மூடிக் கொண்டவள்,

“இந்த கருமத்துக்குதான், வாரம் ஒருநாள் பிரீயா இருங்கன்னு சொல்றேன்… உங்களுக்கு நான் வீட்டுல இருக்குறது பிடிக்கலன்னா, எங்க அம்மா வீட்டுல போயி இருக்கேன் உங்க கண்ணுக்கு உறுத்தாம இருக்கும்” அவளுக்கும் கோபம் தெறிக்க ஆரம்பித்திருந்தது.

“ஆமா… அப்டியே ஏழு கடல், ஏழு மலை தாண்டி இருக்கு பாரு, உங்கம்மா வீடு… கீழ் போர்சனுக்கு போயி, உக்கார்றதுக்கு உனக்கு நல்லா சாக்கு கிடைக்குதுடி” முகத்தை அஷ்டகோணலாக்கி பேசிவிட,

“ஹலோ… அங்கே எங்கம்மா இல்லைன்னாலும், நான் போயி உக்காரதுக்கு ரைட்ஸ் இருக்கு… இன்னைக்கு வரைக்கும் அந்த வீட்டுக்கு நான்தான் வாடகை குடுத்திட்டு வர்றேன். என்னை கேக்காம அங்கே எதுவும் செய்ய முடியாது” வாய்வார்த்தைகள் நீண்டு கொண்டே போயின.

“ஏன் உன் தம்பிய குடுக்கச் சொல்ல வேண்டியது தானே? அது முடியுமா உன்னால? நீ சம்பாதிக்கிறேன்னு தான் பேரு, இதுவரைக்கும் ஒத்த பைசா இங்கே குடுத்திருக்கியா? இல்ல  உன் பணத்துல ஏதாவது ஒரு பொருள்.. அட அதுகூட வேணாம்! ஒரு கிலோ பருப்பு வாங்கிப் போட்டுருக்கியா? ஒரு மாசம் உன் சம்பளப் பணத்தை உங்கம்மாகிட்ட குடுக்காம இருந்து பாரு… உனக்கு, அங்கே என்ன மாரியாதை கிடைக்குதுன்னு தெரிஞ்சு போயிரும்” மேலும் மேலும் அவளது பலவீனத்தை சொல்லிக் காண்பிக்க, மிதுனா பொங்கி விட்டாள்.

“எதுவும் செய்யாம நான் ஒண்ணும், உங்க வீட்டுல தண்டச்சோறு சாப்பிடல… வீட்டுக்கு மருமகளா முடிஞ்ச வரைக்கும் எல்லா வேலையும் இழுத்து போட்டுட்டு செய்றேன், அதுபோக உங்களுக்கு பொண்டாட்டியா,உங்க பாய்ச்சல்லஆகுற சேதாரத்தை எல்லாம், பல்ல கடிச்சிட்டு பொறுத்துகிட்டு இருக்கேன்” விடாமல் அவனை பேசினாள்.

“அப்ப புருஷன் பொண்டாட்டின்னு நமக்குள்ள எதுவுமே இல்லையாடி… எல்லாம் பதிலுக்கு பதில்தானா? ஏதோ வார்த்தை தவறி நான் பேசினா, இப்படிதான் பதில் பேசுவியா? வரவர உன்கூட பேசவும் நிறைய யோசிக்கணும் போலயே மிது” கோபமிறங்கிய குரலில் கூறியவன், அத்துடன் பேச்சை முடித்தவனாக மறுபுறம் திரும்பி படுத்து விட்டான். அவன் மனதில் ஆயாசம் தானாக வந்து ஒட்டிக்கொண்டது.

மனம் பச்சதண்ணி தான் பெண்ணே

அதை பற்ற வைத்தது உன் கண்ணே

என் வாழ்க்கை என்னும் காட்டை எரித்து

குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே…

கவிதை பாடின கண்கள்

காதல் பேசின கைகள்

கடைசியில் எல்லாம் பொய்கள்

இந்த பிஞ்சு நெஞ்சு தாங்குமா…

எஃப்‌எம் தன்போக்கில் பாடிக் கொண்டிருந்தது.

அவன் பேசியதற்கு பதில் சொல்லாமல் இருந்தால் அவள், அவனது மனைவி இல்லையே!

“என் சம்பளத்தை குடுக்க முடியாதுங்கிற கண்டிஷன்லதானே, என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க… இப்ப என்ன புதுசா இந்த பிரச்சனைய இழுத்து வச்சு பேசுறீங்க?அப்பிடியே உங்களுக்கு என்னோட பணம் தேவைப்பட்டா, நீங்களே உங்க தங்கச்சிகிட்டயும் தங்கச்சி புருசன்ங்கிட்டயும், எனக்கு பதிலா  வாடகைய  குடுக்கச் சொல்லி, கேட்டுத்தான் பாக்குறது, அது முடியலே! உங்களுக்கு சுயநலம்… உங்க பாசமலருக்கு பணக்கஷ்டம் வந்திடுமோன்னு அங்கே வாய மூடிட்டு, என்கிட்ட வெட்டிப் பேச்சு பேசுறீங்க…” மிகப்பெரிய பேச்சுதான், பேசி விட்டாள் அவன் மனைவி.

பணயக் கைதிக்கு கூட காலம் நேரம் என்று நிர்ணயித்து விடுவித்து விடுவர். ஆனால் இவளுக்கோ பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி இவளது வேலை மற்றும் வருமானம் ஒன்றே அதிமுக்கியமாகிப் போக, தனது வாழ்க்கைப் பாதை தளர்த்த முடியாத முடிச்சுகளில் பயணிப்பதை தவிர்க்க முடியவில்லை.

“உன் தம்பின்னு கூட சொல்ல வாய் வரலயா மிது? அவன்கிட்ட இப்போ பணம் கேக்க சொல்றியே? கொஞ்சம் அவன் நெலமைய யோசிச்சுப் பாரு… நிறைமாசமா பொண்டாட்டி வீட்டுல இருக்கும் போது, அவள கவனிக்க வேணாமா? நல்ல வேலைக்கு ட்ரை பண்ணிட்டு இருக்குறவன்கிட்ட எப்படி நான் சொல்ல முடியும்”இவனும் ஆதங்கமாக பேசிவிட,

“ஆரம்பிச்சது நீங்கதான்,உங்க அகராதியில பொண்டாட்டிய கவனிக்கணும்னா, அவ கர்ப்பமா இருக்கணுமா? தெரியாமதான் கேக்குறேன்… அவனா பிரசவம் பாக்கப்போறான்? தலைபிரசவம் நீங்கதானே செய்யப்போறீங்க! இப்போ போற பார்ட்டைம் ஜாப்ல வர்ற வருமானத்தை எல்லாம் அவன் என்ன பண்றானாம்?உங்க மாமியாரும்இதெல்லாம் கேக்க மாட்டாங்க? மத்தவங்களையும் கேக்க விட மாட்டாங்க… மகளுக்கும் இப்போதான் புதுசா கல்யாணம் முடிஞ்சிருக்கு, அவளோட பாரத்தை இறக்கி வைக்கணும்னு கொஞ்சமாவது நினைச்சு பாக்குறாங்களா?”மடை திறந்த வெள்ளமாய் வார்த்தைகளை கொட்டி விட்டாள். இப்பொழுது அவள் பேசியதெல்லாம் அவளின் உறவுகளைப் பற்றிதான்.

மனதில் உள்ள ஆதங்கத்தை எல்லாம் கணவனிடம், இறக்கி வைக்க அவளுக்கும் இந்த நேரம்தான் கிடைக்கின்றது.   உள்ளுக்குள்ளேயே கனன்று கொண்டிருந்த நெருப்பு இப்பொழுது புகையாக வெளிவரத் தொடங்கி இருந்தது.

“உன் பார்வைக்கு புருசனா நாந்தான் குற்றவாளியா தெரியுறேன்னா, பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்ச உங்க அம்மாவையும் அந்த லிஸ்ட்ல சேர்த்துட்டியா?போதும், இத்தோட நிறுத்திட்டு தூங்கு மிது! காது ஜவ்வு கிழிஞ்சுரும் போல எனக்கு” இரவின் அயர்ச்சி கணவனின் பேச்சில் தெறித்தது.

“என் அம்மா, என் புருஷன் நான் சொல்லக்கூடாதா? எனக்கு உரிமையில்லையா?”நிமிடத்தில் பேச்சில் சகஜத்தை கொண்டு வந்தவள், உரிமைக்கொடிதூக்க,இந்த முறை அவன் காதை பொத்திக்கொண்டு, மறுபக்கம் திரும்பிக் கொண்டான்.

“உன்னை புரிஞ்சுக்க எந்த ஸ்கூல்ல போயி படிக்கிறதுன்னு தெரியலடி” என்றே முனுமுனுக்கவும் ஆரம்பித்திருந்தான்.

மெத்தையுடன் கூடிய இரட்டை கட்டில் அல்ல இவர்களது படுக்கை. பாய் விரித்து, தரையில் நிச்சிந்தையாய் உறங்கும் மிகச் சாதாரண வாழ்க்கையை வாழ்பவர்கள். எட்டுக்கு பத்து அளவிலான சமையலறையில் தயானந்தனின் அன்னை மரகதம் படுத்துக் கொள்ள, சற்றுப் பெரிதான இந்த அறையில் இவர்களது அந்தப்புரம். இருவரும் தங்களின் காதல் பாடத்தை அரங்கேற்றம் செய்யும்மிக சொற்ப நாட்களில் மட்டும், புதிது புதிதான தர்க்கங்களுடன் அந்த அறை களைகட்டும்.

“கோபத்துல, செய்ய வேண்டிய வேலைய மறந்திட்டு தூங்கியாச்சு…” மீண்டும் கணவனை சீண்ட ஆரம்பித்தாள் மிதுனா. கணவனிடமிருந்து பதில் வராமல் போக, மெல்ல தன் கால்களை எடுத்து, அவன் கால்களின் மேல் போட்டவள்,

“சுத்தமா மறந்தே போயாச்சா?” வெளிப்படையாக அவள் தேவையை சுட்டிக்காட்ட,

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல… முடியாது போடி” மனைவியிடம் முறுக்கிக் கொண்டு, அவள் புறம் இவன் திரும்பாமல் இருக்க,

“அப்ப எனக்கும், இதை விட்டா வேற வழி தெரியல…” என்றவள் சற்றே உருண்டு, அவன் மேல் ஏறிப் படுத்து விட்டாள்.

“என்னைப் பார்த்தா பாவமா இல்லையா மிது? இன்னைக்கு ஒரு நாள் எனக்கு லீவ் குடுக்கக் கூடாதா?” தன் மேல் படுத்தவளை விலக்கி விடாமல் அணைத்தபடியே கேட்க,

“நீங்களா ஆரம்பிச்சு விட்ட பழக்கம்… எனக்கு போதையா மாறிப்போச்சு, பிளீஸ் தயா… இனிமே லேட் நைட்ல இந்த மாதிரி தொந்தரவு பண்ண மாட்டேன், என் சக்கரகட்டியாம் நீங்க”பேசியே அவன் மனதை மாற்றி விட்டாள்.

அவளது உத்தரவிற்கே பொம்மையாய் தலையாட்டுபவன், அவளது கெஞ்சலுக்கும் கொஞ்சலுக்கும் செவி சாய்க்காமலா இருப்பான்?,“உன் காரியம் ஆகுறதுக்கு என்னவெல்லாம் செய்றடி…” சிரித்தபடியே சொன்னவன் அவளை இறக்கி விட்டு, தைலத்தை எடுத்து வந்தான்.

நாள் முழுவதும் நடந்து கொண்டே இருக்கும் மருமகளுக்கு, கால்வலி, அழற்சி வராமல் இருக்கவும்,உடலில் எண்ணைய் சத்து சேர்ந்து எலும்புகள் பலப்படவும் என மரகதம் தாயாரித்து கொடுத்த மருந்து அது. (நல்லெண்ணெய், கடுகு எண்ணைய், வேப்ப எண்ணைய், விளக்கெண்ணெய் எல்லா சேர்த்து காய்ச்சிய பிறகு, சூடான எண்ணெயில், பச்சை கற்பூரம் போட்டு வைக்கவேண்டும்)

தினந்தோறும் வேலை முடித்து வருபவன், மனைவி உறங்கி இருந்தாலும், அவளின் கால் முட்டியில் இருந்து பாதம் வரை தைலம் தடவி நீவிவிட்டு, விரல்களை சொடுக்கி விடுவதையும் செய்ய மறப்பதில்லை தயானந்தன். சொல்லப்போனால் அவனது அன்னையின் அன்புக் கட்டளை அது.

“நாளபின்ன கர்ப்பம், பிரசவம்னு வரும்போது, அதை தாங்கிக்க பொம்பளபிள்ளைக்கு உடம்புல நல்லா சத்து இருக்கணும் ஆனந்தா… இவ கொரிக்கிறது எந்த மூலைக்கும் பத்தாது. நம்ம வீட்டு வாரிச பெத்துக் குடுக்கப் போறவகிட்ட, கௌரவம் பாக்காம இப்போ இருந்தே அரவணைச்சுப் போகப் பழகு. ஊரான் வீட்டு பொண்ணு நம்ம மேல பாசமா இருக்கணும்னா,நாமதான் மொத அதுங்ககிட்ட அக்கறை காட்டனும். கௌரவம் பார்த்து பகுமானமா சுத்திட்டு இருந்தா, அவளும் பத்து அடி நம்மள தள்ளிதான் வைப்பா, அது புருசனா இருந்தாலும் சரி மாமியாரா இருந்தாலும் சரி”

திருமணம் முடிந்த இரண்டாம் நாள், மகனை தனியாக அழைத்து வாழ்க்கைப் பாடத்தை எடுத்து விட்டார் அந்த கிராமத்துப் பெண்மணி. புது மனைவியின் மோகத்தில் இருந்தவனுக்கும், தன் அன்னை சொல்வதில் தவறொன்றும் இல்லை எனத் தோன்ற, அன்றிலிருந்து வீட்டில் இருக்கும் சமயங்களில் எல்லாம் இவன் அவளின் சேவகன்தான்,அவளும் அவனது தேவையை அறிந்தவள்தான்.

தைலத்தை கைகளில் எடுக்கப் போனவனை மீண்டும் தடுத்தவள்,

“என்மேல கோபமா தயா? இன்னைக்கு நான் ரொம்ப பேசிட்டேனோ?” இறங்கிய குரலில் கேட்க,

“என்கிட்ட பேசாம வேற யார்கிட்ட பேசுவ மிது,” என்றவன் நடந்த விவாதங்களை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், அவளின் இரவு உடையை முட்டி வரை மேலேற்றி விட முயற்சிக்க,

“அதே மாதிரி உங்க ஆசைக்கெல்லாம் நா ஒருத்திதான்னும்  தெரியுமில்ல… நான் பேசிட்டேன்னு எதுக்கு அமைதியா இருக்கீங்க? உங்க தேவைய என்கிட்ட உரிமையா கேக்கலாம் தயா” தீர்க்கமாக கூறிய மனைவியின் பேச்சில் மதி மயங்கியவன், ஒரு நிமிடம் பேச்சு வராமல் அவளைப் பார்த்திருக்க,

“எல்லாத்துக்கும் நான்தான் துண்ட போட்டு ரிசர்வ் பண்ண வேண்டியிருக்கு, எப்போ வளரப்போறீங்க?” பொய்யான சலிப்புடன் ஆசையாய் தன் கணவனை இழுத்துக் கொண்டாள்.

அவனது தேவைகளும் இவளது சேவைகளும் முடிய, நேரம் இரண்டை தாண்டிக் கொண்டிருந்தது. “என்ன பேச்சு பேசினாலும் நிமிசத்துல மறக்க வச்சு எனக்குள்ள, உன்னை கரைச்சுக்குற சக்கர கட்டிடி நீ” மீண்டும் தன் பாட்டை ஆரம்பித்தான் தயானந்தன்.

தங்கக்கட்டில் போடு என்னை கையில் சேரு

மூச்சினில் தீ மூட்டு வா வா வா

வண்ண சிற்பம் பார்த்து கண்கள் பசி ஆச்சு

தாமதம் ஆகாது வா வா வா

நீ வேண்டவும் விரல் தீண்டவும்

ஒரு பூவானேன் வா

உன் மடியிலே வந்து இரவிலே

நான் கண் மூட வா

உன் தோள்கள் ரெண்டும் கிளையாக

நான் பஞ்சவர்ண கிளியாக

சுக கதைகள் சொல்ல அருகே நீ வா…

எஃப்‌எம் தன் சேவையை பழுதில்லாமல் செய்து கொண்டிருந்தது.

மனப் பொருத்தம், ஜாதகப் பொருத்தம் என்றெல்லாம் பார்க்காமல், வீட்டுச் சூழ்நிலை, பெரியவர்களின் நிர்பந்தம் போன்றவைகளால் உண்டான நல்லுறவு இவர்களது திருமண வாழ்க்கை. இருவரின் குடும்பங்களிலும் இவர்களை நம்பி,மலைபோல் எழுந்து நிற்கும்குடும்பத்தளைகள், அவர்களின் தோள்களில் சுமத்தப்பட்ட பொறுப்புகள் இவையாவும் இருவருக்கும் வெகு பொருத்தமாய் இருந்தன.

சம்பாத்தியம் செய்யும் நிலையில் இருபத்தியெழு வயது தயானந்தன் மட்டுமே அவர்கள் வீட்டில் இருந்தான். அதேபோல இருபத்தியைந்து வயது மிதுனாவும் தனது தாய் வீட்டின் ஆணிவேறாய் இருந்தாள். இருவரின் தந்தைகளும் தங்களின் பங்கிற்கு கடன் என்ற பெரும் சுமையை இரு குடும்பங்களின் மீதும் ஏற்றி வைத்து, தங்கள் கடமை முடிந்ததென மேலுலகம் சென்றிருக்க, அந்த பாரச் சுமையை இழுக்கும் செக்கு மாடுகளாக தயானந்தனும் மிதுனாவும் மாறியிருந்தார்கள்.

இருவரும் தங்களின் வயதிற்குறிய ஆசைகள், கனவுகள் எல்லாவற்றையும் மனதிற்குள் புதைத்து வைத்து, தங்கள் கடமையை செய்து வருபவர்கள். மொத்தத்தில் இவர்கள் உழைக்கப் பிறந்தவர்கள் என்று சொல்வதை விட, உழைத்தே ஆக வேண்டும் என்று சபிக்கப்பட்டவர்கள் என்று சொல்வதே  சரியாக இருக்கும்.

திருமணம் ஆன இந்த சில மாதங்களில் சராசரி பெண்ணிற்குரிய தன்குடும்பம், தன் கணவன் என்ற நினைவு மிதுனாவின் மனதில் வேர்விட ஆரம்பிக்க, அந்த ஏக்கங்கள் எல்லாம் மலையளவு வெறுமையாக மனதிற்குள் ஆக்கிரமித்து விட்டது.

தனது நியாயமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள, கணவனின் உதவியை நாடவும் முடியாத பேதையாகி இருந்தாள் மிதுனா. தான், மூச்சு விடுவதே தனது குடும்பத்திற்காகத்தான் என்று வாழும் கணவனிடம், என்ன சொல்லி தன்மனதில் உள்ளதை வெளிப்படுத்திக் கொள்வது என்றே தெரியவில்லை.

மிதுனா, தன்மனதில் தனிக்குடித்தனம் என்ற பெரியமனக்கோட்டையை எல்லாம் கட்டிக் கொள்ளவில்லை. வாரத்தில் ஒருநாள்,கணவன் தன்னுடன் இருந்தால் போதும், அவளது உணர்வுகளை புரிந்து கொண்டு தினமும் பத்துநிமிடம் அவளுக்கென ஒதுக்கி, தனது சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டால் போதும் என்றே நினைப்பவள்.

மொத்தத்தில் இருவரும் ஒளிவு மறைவு இல்லாத, மனம் நிறைந்த வாழ்வை வாழ வேண்டும் என்று ஆசையை, தன் உள்ளத்தில் பெரிய விருட்சமாக வளர்த்து வருகிறாள். ஆனால் இங்கோ தினப்படி ஒரு பத்து நிமிடம் அமர்ந்து பேசுவதே குதிரைக்கொம்பாக உள்ள நிதர்சனத்தை அறிந்து மனம் சுணங்கித்தான் போகிறாள்.

இவளது எண்ணத்தில் உதித்த ஆசைகளை லேசுபாசாக சொல்லியும் பார்த்து விட்டாள். ஆனால், அதைச் செய்ய இயலாது என்று கணவன் சொல்லும் காரணம் என்னோவோ இவளும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

“இந்த மாசக் கடைசியில, பெரிய அக்காவோட சின்ன பொண்ணுக்கு காதுகுத்து வச்சுருக்காங்க மிது. சீர் செய்யனும், டிரஸ் எடுக்கணும் அதுக்கே எக்ஸ்ட்ராவா ரெண்டு லயனுக்கு போக பிளான் போட்டு வச்சுருக்கேன். இந்த ஃபங்சன் முடிஞ்சதும் நீ சொல்றமாதிரியே வேலைய குறைச்சுட்டு, சீக்கிரம் வரப் பாக்கிறேன். வாரம் ஒரு நாள் லீவ் எடுக்குறேன்” அவளது எண்ணத்திற்கு தடை சொல்லாமல், சூழ்நிலையை காரணம் சொல்லி தவிர்த்தான்.

தயானந்தன் சொல்லியபடி அடுத்த மாதமும் வந்தது. அதோடு அவனது சின்ன அக்காவின் பிள்ளைக்கு பிறந்தநாளும், அவளின் நாத்தனாருக்கு திருமணமும் வந்து விட, அதற்கு செலவு செய்ய, ஊருக்கு போய்வர என்று அதிகப்படி வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தான்.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கடமை வந்து சேர, அதோடு கழுத்தை இறுக்கிக் கொண்டு நிற்கும் கடனை அடைக்க பாடுபடுவனின் தவிப்பும் துடிப்பும்,கண்முன்னே பார்த்தவள், தன் ஆசைகளை மூடி மறைத்து ஊமையாகிப் போனாள்.

தங்களுக்கான வாழ்க்கை என்று,மனதிற்குள் பூட்டி வைத்த இவளது ஆசைகள் யாவும் கானல் நீரினைப் போல், இவளுக்கு போக்கு காட்டி ஏமாற்றத்தை ஏற்படுத்த, மனதளவில் மிகவும் நொந்து போனாள்.

அதனால் சமீப நாட்களாய் அப்படிச் சொல்வதையும் நிறுத்தி விட்டாள். இருவருக்கும் தங்களது வயதிற்கேற்ற வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஆசைதான். ஆனால் அதை செயல்படுத்த முடியாதபடி குடும்பத் தளைகள் கழுத்தை சுற்றிய பாம்பாக நெறிக்கும் போது, இருவருமே வாய் வார்த்தையில் தங்கள் ஆதங்கத்தை கோபத்தை, ஒன்றாக இருக்கும் சமயங்களில் வெளிப்படுத்தி விடுகின்றனர்.

இருவரும் தங்களுக்கான வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார்களா? தங்களைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள தளைகளை அறுத்துக் கொண்டு வெளியே வருவார்களா?இவர்களின் ஒவ்வொரு இரவும் சர்க்கரையாக இனிக்குமா? இனிவரும் பதிவுகளில் காண்போம் தோழமைகளே!!!