Chocolate pakkangal 7

அத்தியாயம் ஏழு

மேகங்கள் எனை மூட

அழவேண்டும் போலிருக்கிறது

சாதகமாய் இல்லை வானிலை!

-டைரியிலிருந்து

ஆதிரைக்கு உலகமே இருண்டு விட்டதாய் தோன்றியது… அவளுடைய ஒரே பற்றுகோல்… எங்கு சென்றானோ? இல்லையென்றால் யாராவது கடத்தியிருப்பார்களோ? பணத்துக்காகவா அல்லது வேறெதற்குமா? தினம் தினம் செய்திதாள்களிலும் தொலைகாட்சியிலும் பார்த்த கேட்ட கேள்விப்பட்ட நிகழ்ச்சிகளெல்லாம் அவளது நினைவுக்கு வந்து ஆதிரையை நடுங்க வைத்து கொண்டிருந்தது…

வருண் டிரைவரை அழைத்து கொண்டு பிருத்வியை தேட போயிருக்க… வள்ளியம்மையும் குழந்தைகளும் உடன் இருந்தாலும் இருவருக்குமே பயம் பீடித்திருக்க… ரோஷனையும் ரக்ஷாவையும் இழுத்து பிடித்து வைத்து கொண்டு அவர்களை சமாதானப்படுத்தி கொண்டிருந்தாள் வள்ளியம்மை!

“ம்மாஆஆ… ”எங்கிருந்தோ கேட்ட பிருத்வியின் குரலில் சுய உணர்வு அடைந்தவள்… தனது மகன் எங்கே என்று மட்டுமே கண்களை சுழற்றி பரபரப்பாக பார்த்தாள்…

“அண்ணி… பிருத்வி குரல் கேட்டதே… ” அருகில் இருந்தவளிடம் பதட்டமாக கூறி அந்த பிஞ்சு முகத்தை தேட… யாருடைய கையிலிருந்தோ பிருத்வி துள்ளி இறங்குவதை பார்த்தவளுக்கு உலகம் மறந்தது… சுற்றம் மறந்தது…

கண்களில் கண்ணீர் பெருக

“பிருத்வி குட்டி… ” வில்லிலிருந்து பாய்ந்த அம்பாக விரைந்து அவனை வாரி கொண்டவளுக்கு அந்த பிஞ்சு மட்டுமே கண்களுக்கு தெரிந்தான்…

அவனை அணைத்து கொண்டு கண்ணீர் விட்டவள்… மகனது முகமெங்கும் முத்தமழை பொழிந்தாள்…

“ம்மா… ச்சீ… எச்சி… ” கன்னத்தை துடைத்த அந்த வாண்டின் குறும்பில் மனம் நிறைந்தவளுக்கு அப்போதுதான் சுற்றுப்புறம் உணர்வுக்கு வந்தது… அப்போதும் முழங்காலிட்டு மகன் முன்னர் அமர்ந்து கொண்டிருந்தவளுக்கு நிமிர்ந்து பார்க்க தோன்றவில்லை…

“அண்ணி… அண்ணி… ” எதிரில் நின்று கொண்டிருந்தவனை பார்த்த வள்ளியம்மை கிசுகிசுப்பாக ஆதிரையை உலுக்க… ஆதிரை அவற்றையெல்லாம் கவனித்தால் தானே… அவளது கவனம் முழுவதும் அவளது மகனின் மீதே இருக்க… வள்ளியம்மை சங்கடமாக நிமிர்ந்து அவனை பார்த்தாள்… அவனது முகமோ கல்லென இறுகியிருந்தது!

“எங்கடா போன? எத்தனை தடவை சொல்லிருக்கேன்… இப்படி ஓட கூடாதுன்னு… குட்டி பிசாசு… ” அதுவரை இருந்த மனநிலை மாறி குழந்தையின் மேல் கோபம் வந்து ஆக்கிரமிக்க… பட்டென்று முதுகில் ஒன்று வைத்தாள்…

“ம்மாஆஆ… ”

ஆதிரையின் முகத்தையே பார்த்து கொண்டிருந்த அந்த வாண்டு முதுகில் அடி விழவும் உதட்டை பிதுக்கி கொண்டு அழ ஆயத்தமாக… சட்டென ஒரு வலிய கரம் பிருத்வியை இழுத்து கொண்டது! அந்த நேரத்தில் தாயின் அடிக்கு தப்பி குருவி குஞ்சென அவனிடம் தஞ்சம் புகுந்த அந்த குழந்தையின் தன்மை அவனை வெகுவாக இளக்க… அது அவளிடம் கோபமாக திரும்பியது…

“பொறுப்பா பார்த்துக்க தெரியாது… ஆனா அடிக்க மட்டும் தெரியுதா?” கோபமாக அவன் கேட்க… நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்து பின்னே நகர்ந்தாள்!

பிருத்வியை இறுக பற்றி கொண்டு கெளதம்… அவளை உறுத்து விழித்தபடி!

ஆதிரை அதிர்ந்ததும் ஒரு நொடியே! பொறுப்பை பற்றி இவன் சொல்லி கொடுப்பதா? அதற்கும் இவனுக்கு என்ன பொருத்தம்?

“பொறுப்பை பற்றி நீங்க பேச கூடாது சர்… அதுக்கும் உங்களுக்கும் ரொம்ப தூரம்… ” கடுகடுப்பில் அனலாய் வெளி வந்தது வார்த்தைகள்!

“நான் பேசாம வேற யார் பேச முடியும்? நீயா?உன்னோட ரொம்ப பொறுப்பான அம்மாவா? இல்ல… ரொம்ப ரொம்ப பொறுப்பான உன்னோட மாமாவா?” பிருத்வியை இறுக பற்றி கொண்டு அவன் கேட்ட தொனியில் ஆதிரையின் தன்மானம் தூண்டிவிடப்பட…

“உங்களுக்கு முன்னாடி நாங்க எல்லாருமே ரொம்ப சின்னவங்க… இப்போ அவனை விடறீங்களா?” என்று தன் மகனை பற்றி இழுக்க…

“முடியாது… ” பிருத்வியை தன் புறம் இழுத்து கொண்ட கௌதமின் மனதில் அவள் கூறிய அந்த”நாங்க”என்ற வார்த்தை பெரும் கசப்பை விதைத்தது! அந்த இடத்தில் கூட்டமில்லை என்றாலும் போவோர் வருவோரின் கவனத்தை கவர்ந்த இருவரையும் பார்த்தவாறே ஒரொருவர் செல்ல… வள்ளியம்மை சங்கடமாக பார்த்தாள்!

“அண்ணா… ப்ளீஸ் சீன் ஆகுது… இங்க பேச வேணாம்… ” கெஞ்சலாக கூறியவளை பார்த்தவனின் கண்களில் ஏதேதோ கேள்வி தொக்கி நிற்க… வள்ளியம்மையால் அந்த கேள்விகளை எதிர்நோக்க முடியவில்லை…

“அம்மை… என்னை அப்படி கூப்பிடாதன்னு சொல்லிருக்கேன்… ” இறுகிய இரும்பாக அவன் கூற…

“நான் என்ன ண்ணா தப்பு பண்ணேன்? நீ எனக்கு அண்ணன் தானே? அப்படி கூப்பிட கூடாதுன்னு சொல்ல உனக்கே ரைட்ஸ் கிடையாது… நான் அப்படிதான் கூப்பிடுவேன்… உங்க பிரச்சனை எல்லாத்தையும் உங்களோட வெச்சுக்கங்க… ” மிகவும் கறாராக அவள் கூறிவிட்டு… ஆதிரை புறம் திரும்பியவள்…

“அண்ணி… கிளம்பு நீ… இங்க இருந்து எல்லாருக்கும் படம் காட்டிகிட்டு இருக்கனுமா?… ” என்று பிருத்வியை அழைக்க பார்க்க… அவனை இறுக பிடித்து கொண்டான் கௌதம்! சுற்றியும் பார்த்தபடி மெல்லிய குரலில் மற்றவர் கவனத்தை கவராதவாறு… ஆனால் வெகு திண்மையாக…

“அம்மை எனக்கு பேசியே ஆகனும்… என் மகன் விஷயமா… ”அவனால் விட்டுவிட முடியாதென பிடிவாதமாக நிற்க… ஆதிரையின் முகத்தில் கேலி சிரிப்பொன்று வந்தது!

“அண்ணி… என் மகனுக்கு அப்பா யாருன்னு நான் தான சொல்லணும்… ” ஏளனமாக அவள் கூறிய தொனியில் கடுப்பானவன்…

“ஏய் என்ன திமிரா?”

“ஆமாம்… திமிர் தான் அதுக்கென்ன?”அவனுக்கு சரிக்கு சரியாக நின்று கொண்டு கேள்விகளை கேட்டாள்… ஐந்து வருட வன்மம் அவளது வார்த்தைகளில் மண்டி கிடந்ததை உணர முடிந்தது அவனால்…

“பையனை இனிமே உன் கிட்ட விட்டு வெச்சா தானே… அவன் என் மகன்… நான் அழைச்சுட்டு போறேன்… ” என்று பிருத்வியை தன்னோடு இறுக பிடித்து கொள்ள… அந்த வாண்டோ பெரியவர்களுக்குள் நடக்கின்ற சண்டையை பார்த்து இன்னமும் உதட்டை பிதுக்கியது! ஆதிரைக்கோ கோபம் கரை கடக்க துவங்கிற்று!

“ஊர்ல போறவன் வர்றவனை எல்லாம் அப்பான்னு சொல்ல முடியுமா… அவன் உங்க மகன்னு சொல்ல என்ன ஆதாரம் இருக்கு?” அவளது வார்த்தைகள் அவனது நெஞ்சை சுட… கண்களில் வலியோடு அவளை பார்த்தான்… குனிந்து பிருத்வியை பார்த்தவனுக்கு மனம் குமைந்தது… தான் கூறிய வார்த்தைகள் அனைத்தும் தன்னை நோக்கியே பாய்வதை தடுக்கவியலாமல் தடுமாறினான்!

“அண்ணி… என்ன பேசற நீ?”

வள்ளியம்மை அதிர்ந்த முகத்தோடு கேட்க… அவளை கையமர்த்திய கௌதம்… அவளை பார்த்து…

“ஆதி… உன்னை நீயே கேவலப்படுத்திக்காத… ”தடுமாறி அவன் உரைக்க… அவனது முதல் தடுமாற்றத்தை பார்த்தவளுக்கு மனதில் பூமாரி பொழிந்தது!

என்றைக்கும் நீ மட்டுமே வெற்றியடைந்து கொண்டிருந்தால் அந்த விளையாட்டில் சுவாரசியமிருக்காதே கௌதம்… இனி நான் அடிப்பேன்… உன்னை வலிக்க வலிக்க அடிப்பேன்… நான் பட்ட காயங்களை பார்த்து கொண்டே உன்னை காயப்படுத்துவேன்… மனதில் சூளுரைத்து கொண்டிருந்தாள் ஆதிரை!

“அட என் பெயர் கூட தெரிஞ்சுருக்கே… ஆனா உங்களை யாருன்னே எனக்கு தெரியாதே… ” காயம் பட்ட புலி தன் காயங்களை தானே கீறி கொள்வதை போல ஆதிரை மீண்டும் அவனது வார்த்தைகளை அவனுக்கே படித்து காட்ட…

“உன்னை பற்றி எனக்கு கவலையில்லை… நீ எனக்கு தேவையுமில்லை… எனக்கு என் மகன் வேணும்… ” பிடிவாதமாக அவன் நிற்க…

அவன் கூறிய வார்த்தைகள் அவளது வெறுப்பென்னும் நெருப்பை இன்னும் விசிறி விட… நீ தேவையே இல்லை என்ற அவனது வார்த்தைகள் குத்தீட்டியாய் அவளை காயப்படுத்த… அவனை மேலும் காயப்படுத்த கூறியது அவளது மனது!

“மகன் மகன்னு சொல்றீங்களே… நீங்க மட்டும் தான் எனக்கு பழக்கமா என்ன? உங்களுக்கு முன்னாடி எத்தனை பேரோ? பின்னாடி எத்தனை பேரோ… உங்க ஓவர் கான்பிடன்சை நினைச்சா எனக்கு சிரிப்பு வருது ஜிகே!” புன்னகை முகமாக அவள் கூற… லட்சம் பாகமாக அவனது மனது உடைந்தது!

பேசுவது ஆதிரையா என்று சந்தேகம் வந்தது… தன்னையே ஆட்டுகுட்டியாய் சுற்றி வந்து… எதை கூறினாலும் எதிர்கேள்வி கேட்காமல் அவனது காதலை மட்டுமே சுவாசித்து கொண்டிருந்த ஆதிரையா இவள்?

நியுட்டனின் மூன்றாம் விதி தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது…

‘for every action there is an equal and opposite reaction’

அன்றைய நாளை ஆதிரை அணுவளவும் மறக்கவில்லை என்பதை உணர்ந்தவனின் கைகள் தாமாக தளர்ந்தன…

தளர்ந்த அவனது கைகளிலிருந்து மகனை கிட்டத்தட்ட பறித்து கொண்டு போக… கௌதமை விட்டு போகவும் முடியாமல் அவனுக்கு ஆறுதல் கூறவும் முடியாமல்… கண்களில் நீரோடு அவனுக்கு அருகில் வந்த வள்ளியம்மை…

“ண்ணா… வீட்டுக்கு வாண்ணா… நடந்தது எதையுமே நினைக்காதண்ணா… ப்ளீஸ்… ” ஆதரவாக அழைக்க… அதே இடத்தில் ஆணியடித்தது போல,தன்னை விட்டு போகும் தன் மகனையே பார்த்து கொண்டிருந்தவனுக்கு,பிருத்வியை தவிர வேறுதுவும் தெரியவில்லை…

தன் மகன்… தன் உதிரம்… தனது பிம்பம்!

“ஐ ஹேவ் நோ பப்பா அங்கிள்… ”பிருத்வி கூறியது அவனது நெஞ்சை அறுக்க… அவனது விதியை நினைத்து மருகினான்!

“நான் உன்னோட அப்பாடா கண்ணா… ”என்று கூறி அந்த பிஞ்சை அணைத்து கொள்ள வேண்டும் போல மனம் பரபரத்தது… ஏன் மறைத்தாள்? மறைக்க கூடிய ஒன்றா இது?

பிருத்வி பிறந்த போது எப்படி இருந்தான்? என்றும் அறியாமல்… அவனுக்கு என்ன பிடிக்கும் எது பிடிக்கும் என்று கூட தெரியாமல்… ஏன் இந்த நிலை? எதற்கு இந்த வாழ்க்கை?

வேண்டாம் என்று மறுத்து போனது அவள் தானே!

அவள் என்றால் அதற்கு காரணம் என்ன என்று மனசாட்சி கேள்வி கேட்க அவனால் அந்த சுமையை தாள முடியவில்லை!

“அண்ணா… அண்ணா… ” வள்ளியம்மை அவனை உலுக்க… சுய உணர்வு பெற்றவன் அவளை பார்த்த பார்வையில் பரிதவிப்பு தெரிய… அவளது கண்களில் கண்ணீர் தேங்கியது!

“என்ன அம்மை?”அவளை அழகாக அம்மை என்று அழைப்பவன் அவன் ஒருவனே… மற்றவர்கள் அம்மு என்றே அழைத்து பழகியிருந்தனர்! அதனால் வள்ளியம்மைக்கு கௌதமின் அந்த அழைப்பு வெகு ப்ரியமானது… எவ்வளவோ பிரச்சனைகள் இரு குடும்பத்திற்கு நடுவில் இருந்தாலும் கௌதமையும் வருணையும் என்றுமே பிரித்து பார்த்தது இல்லை வள்ளியம்மை…

“வீட்டுக்கு வாண்ணா… பழசை மறந்துடு… ” மீண்டும் கூறிய வள்ளியம்மையை உணர்வற்ற பார்வை பார்த்தான்… அந்த பார்வையின் அர்த்தம் புரிந்த அவளோ திரிசங்கு சொர்கத்தில் தவித்தாள்!

வந்த வேலையையும் மறந்து விட்டு வீட்டிற்கு போவதையும் மறந்துவிட்டு அங்கேயே அமர்ந்தவனுக்கு அவனது மகனை நினைத்து மனம் வெதும்பி கொண்டிருந்தது…

சற்று தொலைவில் நின்று கொண்டு பார்த்திருந்த வருணின் கண்களில் வெற்றி குறியீடு ப்ளஸ் வெகுவான திருப்தி…

*******

சட்டென விழிப்பு வந்தது அபிராமிக்கு… ! ஏதோ மனதை ரணமாக்கும் கனவுகள்… அவரது பேரனை பார்த்தது முதல் உயரத்தில் பறந்து கொண்டிருந்த அவரது உணர்வுகளுக்கு மகன் சற்றும் இடம் கொடாமல்… வாய்ப்பே இல்லாமல்… கீழிறக்கி இருந்தான்… ஆனாலும் அப்படியே விட்டுவிடத்தான் முடியுமா என்ன?

யோசித்து கொண்டிருந்தவர் தலையை உயர்த்தி கடிகாரத்தை பார்த்தார்…

ஒரு மணியை தொட்டு கொண்டிருந்தது முள்!

அவனிடம் பேசுவதற்காக ஹாலில் அமர்ந்திருந்தது… அப்படியே உறங்கிவிட்டது புரிந்தது… உணவும் அப்படியே இருக்க இவ்வளவு நேரம் செய்ய மாட்டானே… ! மகனுக்கு என்னவாயிற்றோ என்று பதறி செல்பேசிக்கு அழைக்க… அவ்வழைப்பு எடுக்கப்படாமல் போய் கொண்டே இருந்தது…

கிட்டத்தட்ட பத்து முறை முயற்சித்து பார்த்தவருக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது… இதுவரை இப்படி ஆனதில்லையே! ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தவருக்கு புரிந்து தானிருந்தது… எப்படியும் மகன் வந்துவிடுவானென்று… ஆனாலும் உள்ளுக்குள் உருண்டது பயபந்து,…

செல்பேசியை எடுத்து அவர்களது டிரைவருக்கு அழைத்து காத்திருந்தார்…

“சொல்லுங்கம்மா… வேலு பேசறேன்… ”அவர்களது டிரைவர் மரியாதையாக கேட்க…

“வேலு… தம்பி எங்க போயிருக்காரு? தெரியுமா?”

“தெரியலைம்மா… நான் கூட போகலையே… அப்போவே என்னை அனுப்பிடாருங்க… ”

“இப்போ எங்க இருப்பாருன்னு தெரியுமா?”கேட்கும் போதே மனம் ஏனோ வலித்தது… ஒரு தாய் கேட்க கூடியதா இவையெல்லாம்? ஆனாலும் வேறு வழி இல்லையே… அவரை பொறுத்தவரை!

“தெரியுங்கம்மா… ”என்று தயங்கி கொண்டே கூற

“கொஞ்சம் போய் பார்த்துட்டு வந்துடு வேலு… வண்டிய எடுத்துட்டு போப்பா… ” மனம் வலிக்க வேலுவை அனுப்பி விட்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்தார்… கண்முன் தெரிந்த இருண்ட வாழ்க்கை அவரது மனக்கலக்கத்தை அதிகரிக்க செய்ய… எதையும் செய்ய தோன்றாமல் வாசலை பார்த்து கொண்டே இருந்தார்…

தடுமாறி வேலுவை பிடித்து கொண்டு வந்து கொண்டிருந்தான் கௌதம்!

“எப்பவும் இருக்க இடத்துல தான் மா இருந்தாரு அய்யா… ஆனால் சுத்தமா நிதானத்தில் இல்லம்மா… நல்ல வேலை வண்டிய அவரே எடுக்கல… நீங்க சொன்னது நல்லதா போச்சுங்கம்மா… ” என்று கூறி விட்டு கீழே இருந்த அறையிலேயே கௌதமை படுக்க வைக்க… அபிராமி வேலுவிடம் கௌதமை விட்டுவிட்டு சமயலறைக்கு விரைந்தார்…

பாலை எடுத்து வந்து கௌதமை தூக்கி பிடித்து வேலுவின் உதவியோடு புகட்டியவருக்கு கண்களிலிருந்து கண்ணீர்!

சாவியை வாங்கிகொண்டு வேலுவை அனுப்பி விட்டு மகன் பக்கத்தில் அமர்ந்தவருக்கு மனமெங்கும் ரணம்!

உள்ளே சென்ற பால் போதையை சற்று இறக்க… அரை குறை மயக்கத்தில் உளறஆரம்பித்தான் கௌதம்… அருகில் தாய் இருப்பதை உணர்ந்து அவரது மடியில் தலை வைத்து படுத்து கொண்டவன்…

“ம்மா… இன்னைக்கு பார்த்தேன் ம்மா… ”

அவனது தலையை தடவி கொடுத்தவாறே…

“யாரை கண்ணா?”

“என் மகனைம்மா… என்னோட மகனை… ”சொல்லும் போதே அவனது குரல் உடைய… அவரது மடியில் படுத்திருந்த கௌதமின் முதுகு குலுங்கியது…

அழுகிறானா? நம்ப முடியாமல் பார்த்தார்… பிருத்வியை பார்த்திருக்க வேண்டும்… அதனால் தான் உடைந்து விட்டான் போலும்… அவரது கண்களிலும் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டார்…

“என்னோட வாரிசும்மா… என் கிட்டவே சொல்றான்… ஐ ஹேவ் நோ பப்பா அங்கிள்ன்னு… நினைச்சு பார்க்கும் போதே செத்துடலாம்ன்னு இருக்கும்மா… ” அவனது முதுகு இன்னமும் குலுங்க… அவரை நிமிர்ந்து பார்க்காமல் மடியில் முகம் புதைத்து அழுபவனை எப்படி சமாதானப்படுத்த?

அவரால் முடியவில்லை…

“எப்படியெல்லாம் வளர வேண்டியவன்? அவனும் இப்படி? என்னால முடியலம்மா… வலிக்குது… ” அவன் உடைந்து கூறி கொண்டிருக்க… அந்த நிலையை நினைத்து குமைந்து கொண்டிருந்தார் அபிராமி…

“அப்பா இருந்தும் இல்லாம இருக்கற கொடுமை அவனுக்கும் எதுக்கும்மா? நானாச்சும் என் பிள்ளைய கொண்டாடி இருக்கணுமே… இப்படி என்கிட்டவே சொல்ற நிலைமைல அவனை நான் வெச்சுட்டேனே… ”

போதையில் அவனது வேதனையை கொட்டி கொண்டிருந்தவனை அதே வேதனையோடு பார்த்தார் அபிராமி!

காரியங்களின் காரணங்கள் அவரை நோக்கிய மையபுள்ளியாக இருக்கையில் என்னவென்று சொல்ல? ரிஷி மூலம் நதிமூலம் எப்போதுமே ரசிக்கத்தக்கதாக இருப்பதில்லையே!

கடைசியாக அவன் கூறிய உடைந்து போய் கூறிய இந்த வார்த்தைகள் அவரை உலுக்க… அதற்கு மேலும் அடக்கி வைக்க முடியாமல் கண்ணீர் அருவி உடைப்பெடுத்தது… அவரது கண்களில்!

error: Content is protected !!