CN 17

CN 17

சின்ன நெஞ்சிலே-17

“நிலா, நான் ஒண்ணு கேட்பேன், மாட்டேன்னு மட்டும் சொல்லக் கூடாது.”

பீடிகையுடன் ஆரம்பித்தாள் நிவி. அவளிடம் பேசி நிறைய நாள் ஆனதே என்று நிலானியே தான் அப்போது அவளை போனில் அழைத்திருந்தாள்.

“அப்படி நான் மாட்டேன்னு சொல்லாத அளவுக்கு எதுவாயிருந்தாலும் கேளு நிவி.”

“ஹேய் என் டார்லிங் அப்படியெல்லாம் சொல்லக் கூடாதடி என் தங்கம்!”

“யம்மா தாயே ஆத்தா வேற வெட்டியா பேசிகிட்டிருக்கேன்னு நினைச்சு ரொம்ப நேரமா என்னையே முறைச்சிட்டு நிக்கிது. நீ சீக்கிரமா விஷயத்தை சொல்லு”

“வந்து…அந்த…வந்து…உங்க பிரபோசல் சீனை கொஞ்சம் ஃபீல் பண்ணி எனக்கு இன்னொரு தடவை சொல்லேன். நானும் இது வரை நாலு வாட்டி அதை அழுச்சி அழுச்சி எழுதிட்டேன், சரியா வர மாட்டேங்கிது டி!”

“போட்டேன்ன தெரியும் உனக்கு நிவி! நிஜமா என் கிட்ட ஒரு நாள் செம உதை வாங்கப் போற நீ. என் வாழ்க்கை உனக்கு விளையாட்டா இருக்கா நிவி?”

“நிலானி ப்ளீஸ் மா, கதையில் முக்கியமான கட்டம் இப்ப. என் வாழ்க்கையில் குத்துவிளக்கை ஏத்தி வை டி என் தங்கமே! நான் உன் ஃபிரண்டு தானே, என் கிட்ட இதை கூட சொல்ல மாட்டியா!”

“நீ ஊருக்கே சொல்ற ஐடியாவில் இருக்கியே ராசாத்தி, அதனால் சொல்லமாட்டேன். திரும்ப திரும்ப கேட்காதே. இப்பவரை நீ பேசினது போதும் போனை வைடி!”

கோபமாய் சொன்னது போல் சொல்லிவிட்டாள், இல்லையானால் நிவி இவளிடம் விஷயத்தை வாங்காமல் விட்டிருக்க மாட்டாள்.

நிவியின் தற்போதைய பேச்சினால் வந்த விளைவு, நிலானி அந்த பழைய நாட்களுக்கு இழுத்து செல்லப்பட்டாள். நிலானியின் மனம் அவளும் இந்திரனும் சந்தித்த இடத்தின் சூழ்நிலையை என்றுமே மறக்காது!  மறக்க நினைத்தாலும் முடியாது. அதெல்லாம் நிவியின் புத்தகத்திற்காக அவளால் சொல்ல முடியாத விஷயம். நிலானி தன் மன பெட்டகத்தில் பொக்கிஷமாய் பூட்டி பத்திரமாக வைத்திருப்பவை! அவள் மாத்திரமே மீண்டும் மீண்டும் அதனை ரசித்து பாதுகாத்துக் கொண்டிருக்கிறாள் இன்றளவும்.

அவனை பற்றிய கற்பனைகளும் ஆசைகளும் அளவுக்கு அதிகமாய் முற்றி மோதிக் கொள்ள ஆரம்பித்திருந்த சமையம் அது. தன்னால் என்றுமே இந்திரனை மறக்க இயலாது என்று உணர்ந்த தருணமது. அவனுக்கும் அதே போல் அவளிடம் எண்ணமுண்டு என்பதையும் அவள் நன்கு அறிவாள்.

அவனை அன்று சந்தித்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் இந்திரனுக்கு போன் செய்து அந்த குறிப்பிட்ட இடத்திற்கு வரச் சொல்லியிருந்தாள் நிலானி! எப்படி தன் விருப்பத்தை அவனிடம் சொல்ல போகிறோம் என்பது தெரியவில்லை அவளுக்கு, பலவிதமாய் ஒரு படபடப்பு.

அவனுக்கு முன்பே இவள் போய் அங்கே காத்திருக்க ஆரம்பித்திருந்தாள். வரேன் என்றவன் சொன்ன நேரத்தை விட அரைமணிநேரம் கடந்தே வந்தான். இவன் ஆபிஸில் வேலை பார்ப்பானா என்று இவள் வியக்கும் அளவுக்கு படு ஃபிரஷாக வந்திருந்தான், முகத்தில் களைப்புமில்லை ஒன்றுமில்லை.

நிலானிக்கு தான் அவள் நினைத்து வைத்திருந்த வார்த்தைகள் எல்லாம் மறந்து போயிருந்தது. எப்படி சொல்ல? என்னவென்று அவனுக்கு விளக்க! இத்தனை சீக்கிரத்தில் காதல் வருமா என்றெல்லாம் கேட்டுவிடுவானோ!

ஏக சிந்தனைகள் அவளுக்கு.

“என்ன நிலானி வர சொல்லியிருந்தீங்க? எனி பிராப்ளம்?” என்றவன் சாதாரணமாய் வந்து அவள் பக்கம் அமர,

“யெஸ் பிராப்ளம் தான் இந்திரன்”

அவன் முகத்தை பார்த்து சொல்லிக் கொண்டிருந்தவள், இப்போது அவனின் கண்களை சந்திக்க முடியாமலிருந்தாள்.

“சொல்லுங்க நிலானி, உங்களுக்கு என்ன பிரச்சனை?”

அவனுக்கு அவளின் தற்போதைய எண்ணம் புரிந்திருந்ததோ, அவளுக்கு தெரியவில்லை!

“இந்திரன், நான் உங்களை விரும்புறேன். யெஸ் ஐயம் இன் லவ் வித் யூ.”

சொல்லிவிட்டவள் அவனை பாராமல் தலைகுனிந்தபடி அப்படி அமர்ந்திருந்தாள். இந்திரன் யோசித்தது எல்லாம் சற்று நேரம் தான்.

அவள் கைமேல் தன் கைகளை வைத்தவன்,

“ஐ லவ் யூ டூ நிலானி” என்றவன் அவளை பார்த்து ஒரு புன்னகை புரிய அதில் முழுவதுமாய் வீழ்ந்துவிட்டாள் நிலானி.

“என்னாட்டி பகல் கனவு கண்டுட்டிருக்க, விரசா வேலையை முடிச்சா தான் என்னவாம். கொஞ்சம் கூட உனக்கு பொறுப்பே இல்ல நிலா புள்ள”

ஆத்தா திட்டிய திட்டுக்களில் நிகழ்காலத்துக்கு வந்தாள்.

அவனும் தன்னை விரும்புகிறான் என்றதும், பாட்டியின் சம்மதத்திற்கு கூட காத்திராமல் அவனை திருமணம் வரைக்கும் இழுத்து சென்றதில் எல்லாம் அவளுக்கும் பங்குண்டு.

ஆனால் அவனை மாத்திரம் திட்டியிருக்கிறாள், தன்னை ஏமாற்றிவிட்டான் என்று சாடியிருக்கிறாள்.

முன்தினம் பாட்டி தன் மகனிடம் பேசியவை ஏனோ சட்டென்று நினைவுக்கு வந்தது அவளுக்கு. ஆத்தா இப்போது எல்லாம் மறந்து போயிருக்க அதைப் பற்றி பேசி அவர் மனதை புண்படுத்த கூடாது என்பதில் தெளிவாய் இருந்தாள் நிலானி!

மாமனை பற்றி சிந்திக்க ஆரம்பித்தாள். எதற்காகவோ அவர் மனம் மாறியிருக்கிறது, அவர் சொன்ன வழியே துணை போக அவரின் இரத்த சொந்தங்கள் கூட விரும்பவில்லை! தனியே அவ்வழியே போயே தீருவேன் என்று அவரும் இன்றளவும் போய்க் கொண்டிருக்கிறார்! இது சரியா தவறா என்பதை அவருக்கு காலம் உணர்த்தும்! அதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் எடுக்கும் எனபது பெரிய கேள்வி! தாமு மாமா இன்று வரை மாறவில்லை இனியும் மாறமாட்டார் என்று நினைத்துக் கொண்டாள்!

தாமு போல் எத்தனையோ பேர், வந்த பாதை மறந்து போகிற பாதை புரியாமலும் இருக்கிறார்கள்! ஆனால் ஆவுடை பாட்டி வீட்டில் இப்படி ஒன்று நடக்காமல் இருந்திருக்கலாம்!

‘பாவம் ஆத்தா’ என நினைத்தவள் தன் அடுத்த காரியங்களில் மூழ்கிவிட்டாள்.

இந்திரனோ அந்த வீட்டில் எந்த ஒரு விஷயமும் நடக்கவில்லை என்பதுபோல் தன் கல்லூரி கதைகளை தன் அன்னையிடமும் பாட்டியிடம் இப்போது அளந்து விட்டுக் கொண்டிருந்தான். சமையலறையில் இருந்தபடி அவன் மீது ஒரு பார்வை வீசியவள்,

‘இவனை வைத்துக் கொண்டு! இந்த ‘டீடெயில்ஸ்’ எல்லாம் அவங்களுக்கு இந்த வயசில் எதுக்காம்!’

“எங்கையாவது வெளியே போலாமா?” தாங்கமாட்டாமல் அனைவரிடமும் கேட்டாள்!

“தெனமும் என்னட்டி வெளியே சுத்திகிட்டு! இன்னிக்கு சும்மா வீட்டுலேயே இருப்போம்!”

வழக்கம் போல் அதிகாரமாய் பேத்தியிடம் சொன்ன ஆவுடை பாட்டி, அடுத்த நிமிடம் இந்திரனிடம் திரும்பி,

“பெறவு என்ன லே ஆச்சு? மீதி கதையை நிப்பாட்டாம சொல்லுலே”

பேரனின் மீது தன் மொத்த பார்வையையும் திருப்பிக் கொண்ட பாட்டியை பார்க்க நிலாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது! இப்போதெல்லாம் சதா சர்வ காலமும் இந்த ‘புது’ பேரனுடனே சுற்றிக் கொண்டிருக்கிறாள்!

“ஆத்தா இன்னும் ஒரு வாரத்தில் நீ ஊருக்கு கிளம்பணும், உனக்கு அது நியாபகமிருக்கா? இந்திரன், ஒருத்தங்க கிடைச்சா இப்படி தான் அவங்க காதை ஓட்டையாகுற அளவுக்கு பேசுவியா! இப்ப வெளியில் கூப்பிட்டு போறியா இல்லையா!”

இந்திரன் என்ன நினைத்தானோ! மனைவிக்கு ஏற்றார் போல் இப்போது ஒத்து ஊதி, ஒரு வழியாய் பெரியவர்கள் இருவரையும் கிளப்பி விட்டான்.

அவள் அனைவரையும் அழைத்து வந்தது அதே இடம்! அவர்கள் இருவராலும் என்றுமே மறக்க முடியாத இடம். அவள் தன் காதலை சொன்ன இடம். கல்யாணம் செய்ய வேண்டும் என்று அவனிடம் யாசித்த இடம்.

இந்த தரணியில், பரப்பளவில் பெரிய நாடு என நாம் எண்ணியதை கூட சின்ன துகள்களாய் காண்பிக்கும் சாட்டிலைட் புகைப்படங்களெல்லாம் நமக்கு ஒரு அத்தாட்சி, மனிதன் எத்தனை சிறியவன் என்பதற்கு!

அப்படி இருக்கும் ஒவ்வொரு மனிதனின் சின்ன நெஞ்சிலும் எத்தனை கோடி ஆசைகள்! அதில் பாதிக்கு மேல் நிறைவேறினாலும், நிறைவேறாமல் போனவற்றை நினைத்தும், வருந்தியும், வன்மம் வளர்த்தும் எத்தனை காலங்களை வீணாகின்றன!

ஆவுடை பாட்டிக்கு தன் பேத்தியின் நல்வாழ்வுக்கு ஆசை, இந்திரனுக்கு தன் மனதுக்கு இனியவளான நிலானியுடன் காலம் முழுவதற்கும் வாழ ஆசை, தாமுவுக்கு தன் குடும்பத்தினர் தன் வழியை மட்டுமே பின்பற்ற வேண்டுமென்ற ஆசை! ஆண்டவன் பார்வையில் எவரின் ஆசை நியாயமானதோ அவை மட்டுமே நிறைவேறக் கூடும் சாத்தியக்கூறுகள் அதிகம்! வம்படியாய் சிலவற்றை பொருள் பலத்தாலோ, அதிகாரம் கொண்டோ நிறைவேற்றிக் கொள்பவர்களுக்கு தெரியாது அதன் ‘அல்பாயுசை’ பற்றி!

அது ஜப்பானின் இலை உதிர் காலம்! ஒரே இடம் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு அழகில் இருக்கும் என்பதை நிலானி அறிந்திருந்தாலும் இன்று ஏனோ அதை புதிதாய் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் மெய் மறந்தும் போயிருந்தாள்.

ஆவுடைபாட்டிக்கும் அந்த இடம் மிகவும் பிடித்திருந்தது.

“எல்லாமே இந்த ஊரில் அழகு தான். ரசிக்கலாம் அதிலேயே ஐக்கியம் ஆகிட முடியாது, ஆகிடவும் கூடாதுட்டி நிலா!” என்றாள் பேத்தியிடம்.

“அதெல்லாம் எனக்கும் தெரியும் ஆத்தா!”

இருவருக்கும் நடுவில் இருந்த இந்திரன் கிடைத்த வாய்ப்பை விடாது,

“பெரியவங்க சொல்றதுக்கு இப்படிதான் பதில் சொல்லுவியா நிலா, சரி பாட்டின்னு மரியாதையா சொல்லு!”

அவளை பார்த்து கண்ணடித்து சொன்னவனை கிழவி கவனிக்கவில்லை.

“தேனு வளர்ப்பு சரியாத்தேன் இருக்கு! நான் தாய்ன் சரியா வளக்கலை, அதிகமா செல்லம் கொடுத்தேன் போலிருக்கு” பேத்தியிடம் தன் முகத்தை நொடித்துக் கொண்டாள் பாட்டி.

தனிமை வேண்டும் என்பதுபோல் இந்திரன் நிலானியை தனியே அழைத்துக் கொண்டு போனான். ‘உர்’ ரென்று இருந்தவளின் கன்னத்தில் சட்டென்று முத்தமிட்டவன்,

“இதையெல்லாம் கண்டுக்காதே டி பொண்டாட்டி” என்றவாறு அவள் தோளில் கைப்போட,

அந்த கைகளில் இரண்டு அடி வைத்தவள்,

“நீங்க இரண்டு பேரும் சமரசம் ஆக என்னை ஏன் டா டேமேஜ் செய்யுது அந்த ஆத்தா!”

“சத்தியவான் சாவித்திரி கதையெல்லாம் படிச்சிருக்கியா நீ? அவங்க எல்லாம் கட்டின கணவனுக்காக என்னவெல்லாம் செஞ்சாங்க தெரியுமா! எனக்காக ஒரு சின்ன இன்சல்ட், அதுவும் வளர்த்த பாட்டி கிட்ட வாங்க மாட்டியா என் நிலானி குட்டி!”

அவன் கொஞ்சியதில் சமாதானமானவள் அவனுடன் கைகோர்த்துக் கொள்ள,

“என்ன இன்னிக்கு நிலானிக்கு என்ன ஆச்சு! எனக்கு எதுவுமே புரியலையே!”

கணவனை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன நல்லா பார்த்துப்பியா இந்திரன்! உனக்காக நான் என் பாட்டியை கூட விட்டிட்டு வந்திருக்கேன்!

சண்டை எல்லாம் போட மாட்டியே!”

“புருஷன் பொண்டாட்டின சண்டை இல்லாமலா! அதெல்லாம் போடத் தான் செய்வேன்!

“நீ இல்லாம என்னால வாழ முடியும்னு இன்னுமா நினைக்கிறே இந்திரன்?”

அவள் ஒரு நிலையில் இல்லை இன்று.

“நான் எங்கே டி நினைச்சேன்! நீ தான் அடிக்கடி இப்படியெல்லாம் உளறிகிட்டு இருக்கே!”

அவளை பலவாறு சமாளித்தவன் மற்றவர்கள் இருந்த பக்கம் அழைத்து வந்தான்!

இரு பெரிய மலைகளின் ஊடே ஒரு காட்டாறு! அது பாய்ந்து செல்லும் பாதையின் இரண்டு பக்கமும் மரங்கள்! மரம் பச்சை நிறம் என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும் நம்மவர்களுக்கு கொஞ்சம் சிவந்த இலையும், கொஞ்சம் மஞ்சள் நிறமும் சேர்ந்திருந்தது நிரம்பவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது! அந்த காட்சியை பார்த்து ரசிப்பது போல் இருந்த மர பெஞ்சில் அமர்ந்திருந்த பாட்டியும் தேன்மொழியும் அதில் மெய்மறந்திருந்தனர்!

இந்திரன் அங்கே வந்ததை கண்டவர்,

“எம்புட்டு அழகு லே! இயற்கையை பத்திரமா பாதுகாக்க தெரிஞ்சவங்க கிட்ட தான் அதுவும் தங்கும்! இந்த மக்களுக்கு அது நல்லா தெரியுதுலே!” பேரனிடம் தன் எண்ணத்தை சொல்லிக் கொண்டிருந்தார் ஆவுடை பாட்டி.

“ஆமா பாட்டி!”

“நம்ம ஊரிலும் மாற்றம் வரும்லே! இப்ப எல்லாம் பட்டம் படிச்சிட்டு சம்பாதிச்சிட்டு தான் பயலுக விவசாயம் செய்ய வந்திடுறாங்க லே! பழைய மாதிரி நஷ்டத்துக்கு செய்யாம லாபமும் பாக்காய்ங்க!”

“ஆமா பாட்டி!”

“என்ன லே எல்லாத்துக்கும் ஆமா போடுதே! இந்திரா…”

பாட்டியால் அமர்ந்தபடியே திரும்பி தன் பேரனின் முகத்தை பார்க்க முடியவில்லை, வயதின் வேலை! தேன்மொழி மகனை பார்க்க அவன் சற்று தள்ளி நின்றிருந்த நிலானியின் மீது கவனமாய் இருந்தான்!

“ஏலேய் இந்திரா…” பாட்டி மறுபடியும் அதட்ட.

அதற்கு அந்த ஆமாம் கூட வரவில்லை.

தன் அத்தையை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்து கொண்டார் தேன்மொழி!

இந்திரனும் நிலானியும் ஆவுடைப்பாட்டியின் ஆசிகளுடன் நீண்ட நாட்கள் நீடூழி வாழ்க வளமுடன்.

error: Content is protected !!