cp 36

cp 36

அத்தியாயம் 36

அழுதுவிடு

எனக்கும் அதுதான் ஆறுதலாய் இருக்கிறது

பிரிவின் வேதனையோடு நீ உதிர்க்கும்

புன்னகையை விட!

_டைரியிலிருந்து

அன்று காலை கிளம்பியது முதலே வருண் தன்னை எங்கு அழைத்து போகிறான் என்பது புரியாமல் அவனை ஒரு வழியாக்கி கொண்டிருந்தாள் ஆதிரை… அவன் தன்னுடைய திருவாயை திறக்காமல் இருந்திருந்தாலேனும் அவள் ஏதுமறியாமல் இருந்திருப்பாளோ என்னவோ? ஆனால் காலை உணவு வேளையின் போதே,

“ஆதி… கெட் ரெடி… இன்று முதல் உனக்கு பீல்ட் ட்ரைனிங்… இன்னொரு அலுவலகத்தில்… இன்னும் மூன்று மாதங்களுக்கு நீ அங்கு தான் வேலை கற்று கொள்ள வேண்டும்… ” காலை உணவை உள்ளே தள்ளி கொண்டே வெகு இயல்பான குரலில் கூறியவனை குழம்பி போய் பார்த்தாள். பீல்ட் ட்ரைனிங்கா? ஏன் திடீரென்று? அதை கேட்கவும் செய்தாள்!

“என்ன திடீர்ன்னு… பீல்ட் ட்ரைனிங்னா எப்படி சொல்றீங்க? அதுவும் வேறு அலுவலகத்திலா?”

“கொஞ்சம் வெயிட் செய் ஆதி… அதுக்குள்ளே இத்தனை கேள்வியா?”

“ஆனா வருண் மாமா… ” குழப்பத்தோடு தொடர்ந்தவளை கையமர்த்தினான்.

“ஆதி… ” அவனது ஒற்றை அழுத்தமான வார்த்தையில் அவளது குரல் அடங்கிவிட…

கைப்பேசி அழைத்தது!

அவனது கைப்பேசியில் பதில் அளித்தபடியே காரை செலுத்தினான்.

“ம்ம்ம்… வந்துட்டே இருக்கோம்டா… நியரிங் நுங்கம்பாக்கம்… ”

“… ”

“ஓகே… சியூர்… ” கைப்பேசியை அமர்த்தியவன் அவளை ஓரப்பார்வை பார்த்தான்… நேராக பார்த்து கொண்டிருந்தாலும் பார்வையில் குழப்பம் தெரிந்தது…

“ஆதி… நான் உனக்கு எது செய்தாலும் உன்னுடைய நன்மைக்குத்தான் என்பதை நம்புகிறாய் அல்லவா… ” கூர்மையான குரலில் கேட்டவனின் கண்களிலும் அதே கூர்மை.

“கண்டிப்பா… ”

“அப்போ கேள்வியே கேட்க்காம போய் வேலையில் சேர்… உனது எதிர்காலத்துக்கான அடிப்படை பயிற்சி… என்னை காட்டிலும் உனக்கு சரியான இடம் இதுதான்… ” தீர்மானமான அவனது வார்த்தைகளில் அவள் கொண்ட உறுதி நுங்கம்பாக்கத்தில் அவன் நிறுத்திய அலுவலகத்தை நிமிர்ந்து பார்த்தபோது சுக்குநூறாக தகர்ந்தது.

ஜிகே ஸ்கொயர்!

கௌதமுடைய அலுவலக தலைமையகம்!

இறங்கியவள் அதிர்ந்து வருணை பார்க்க… அவனோ அவளை சற்றும் பாராமல் விரிந்த புன்னகையோடு யாரையோ எதிர்கொண்டான்… அவனது பார்வை சென்ற திக்கை பார்த்தவளுக்கு அதிர்வில் உடல் நடுங்கியது.

முகம் கொள்ளா புன்னகையுடன் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது கௌதம்…

இருவரையும் ஒரு சேர பார்த்தவளுக்கு தலை சுற்றியது!

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்து விட்டானா என்ன?

“ஹாய் ராமநாதன் குமாரசுவாமி… ” அதே பளீரென்ற புன்னகையோடு வரவேற்றவனின் இந்த அழைப்பில் பழைய குத்தலில்லை… அதை கேட்ட வருணும் முகம் கடுக்கவில்லை… மாறாக அதை ஏற்றவன்…

“ஹாய் கௌதம் குமாரசுவாமி… ” என்று அதே புன்னகையோடு அணைத்து கொண்டான்…

இது என்ன மாயம்!

எப்படி இது சாத்தியமானது?

ஆனால் தான் காண்பது ஒன்றும் கனவில்லையே!

தன்னை தானே கிள்ளி பார்த்து கொண்டவளுக்கு வலித்தது… ஆக உண்மைதான்! காண்பது அத்தனையும் பொய் இல்லை… ஆனாலும் அவளால் அந்த காட்சிகளை உண்மையென்று ஒப்புக்கொண்டு ஜீரணிக்க முடியவில்லை…

அவளது அதிர்வினை வருண் அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்த்து கொண்டாலும் கௌதம் அவள் புறம் சற்றும் திரும்பவில்லை… அவளை என்னவென்றும் கேட்கவில்லை… அவனது கவனமனைத்தும் வருணிடம் கலந்துரையாடுவதில் மட்டுமே மையம் கொண்டிருக்க.. அந்த இடத்துக்கு தான் மட்டுமே அதிகப்படியோ என்று எண்ணினாள் ஆதிரை… எப்போதுமே கௌதமை மாமன் வீட்டினர் ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருந்தது அவளுக்கு தெரியுமென்பதால் வருணின் இந்த மாற்றம் அவளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது…

தவறை ஒப்புகொள்ளாத நேர்மையாளனாகவே பார்த்து பழக்கப்பட்டு விட்டவனை இவனோடு ஒன்றாக காண்பதற்கும் ஆதிரைக்கு பிடிக்கவில்லை…

பேசிக்கொண்டே அவனது அறைக்கு சென்றிருந்தவனை தொடர்ந்து வேறு வழியில்லாமல் அவளும் சென்றாள்… அவளையும் அறியாமல்!

“ஆதி… ” சுற்றுப்புறம் மறந்து தன்னை மறந்து நின்றிருந்தவளை கலைத்தது வருணின் குரல்.

உறுத்து விழித்தாள்… எரிச்சலோடு!

அவள் பேசாமல் முறைப்பதை சட்டை செய்யாமல்,

“லுக் ஆதி… இன்னும் மூன்று மாதத்துக்கு உனக்கு கௌதம் பீல்ட் ட்ரைனிங் கொடுப்பான்… நல்லா கற்றுக்கொள்… ” இயல்பு போல கூற… எரிச்சலாக இடையிட்டாள் ஆதிரை!

“இவன் கிட்ட போய் நான் ஒர்க் பண்ணனுமா? மாமா கொஞ்சமாவது யோசித்து தான் செய்யறீங்களா?”

“யோசிக்காம செய்வேனா ஆதி… உன்னோட பீல்ட்டுக்கு என்னை விட கௌதம் தான் நல்லா ட்ரைன் பண்ண முடியும்… சொன்னா சொன்ன பேச்சை கேட்கனும்… முதலிலேயே என்னோட கண்டிஷன் எல்லாவற்றுக்கும் ஒப்பு கொண்டாய் தானே ஆதி?”

கோபமாக அவன் கேட்க மௌனமாகினாள்!

“போக சொல்ற இடத்துக்கு போகணும்… செய்ய சொல்ற வேலைய செய்யணும்… அப்போ தான் வேலையை கற்று கொள்ள முடியும் என்பது தான் என்னோட முதல் கண்டிஷனே… புரிந்ததா?” நிதானமாக கூறினாலும் எதிர்த்து பேச முடியாத பாவனை… வருணுடைய கண்டிஷன்களை ஆராயாமல் ஒப்புக்கொண்ட தன்னை எண்ணி நொந்து கொள்ளத்தான் முடிந்தது…

இதற்கு எப்படியும் வீட்டில் தனக்கு ஆதரவு இருக்க போவதில்லை… இவர்களே தனக்காக தன்னுடைய வாழ்க்கை பற்றிய முடிவுகளை எடுத்தால் தனக்கென்று மனம் இல்லையா? தன்மானம் இல்லையா? இவனை பார்க்கவும் பிடிக்காத போது… அவனிடம் வேலை செய்வது என்பது எப்படி சாத்தியம்?

ஆதரவற்ற நிலையில் உள்ளது போன்ற தோற்றத்தில் அவளது மனம் கழிவிரக்கத்தில் ஆழ்ந்தது… அவளையும் அறியாமல் அவளது கண்களில் கண்ணீர் சூழ… இருவருக்கும் தெரியாமல் தலை குனிந்து கண்ணீரை மறைத்தாள் ஆதிரை!

“வருண்… கத்துக்குட்டிங்களை எல்லாம் என் தலைல கட்டிட்டு போக பார்க்கறியே… இது உனக்கே நல்லா இருக்கா? ஏன் டா உனக்கு இந்த கொலைவெறி?”

கேலியாக ஒலித்த கௌதமின் குரல் அவளது கோபத்தை தட்டி எழுப்பியது… சட்டென நிமிர்ந்தவள் ,அவளது சுயமரியாதையை சீண்டி விட்டவனை எரிப்பது போல முறைத்தாள்… என்ன திண்ணக்கம் இவனுக்கு?

“கௌதம்… உன் நாக்குல சனி உட்கார்ந்துட்டு குத்து டான்ஸ் ஆடிட்டு இருக்கார் போல… வேண்டாம் ப்ரோ… பியுச்சர்ல கஷ்டப்படனும்… ” ஆதிரைக்கு கேட்காத வண்ணம் அவனது காதில் முணுமுணுத்த வருணை பார்த்து கண்ணை சிமிட்டியவன்…

“கண்டுக்காதே… ” என்று கிசுகிசுப்பாக கூறி விட்டு…

“ஏன் வருண்… உன்னால சமாளிக்க முடியாத கத்துக்குட்டிங்களுக்கு ட்ரைனிங் கொடுக்கறதா நான் என்ன இங்க போர்ட் மாட்டி வெச்சுட்டு உட்கார்ந்துட்டு இருக்கேனா?”

அவனது சீண்டலை எரிச்சலாக பார்த்தவளால் அதற்கும் மேல் பேசாமல் இருக்க முடியவில்லை… வருண் புறம் திரும்பியவள், அவனை முறைத்து கொண்டே…

“வருண் மாமா… கேட்டேனா? நான் கேட்டேனா? இவன் கிட்ட எல்லாம் நான் ட்ரைனிங் எடுக்கறேன்னு கேட்டேனா?இவன் பெரிய இவனாட்டம்… ” பேசிக்கொண்டே போக… வருணின் முகத்தில் இருந்த புன்னகை காணமல் போய் ஏதோவொரு இறுக்கம் வந்தமர்ந்தது…

“ஆதி… கௌதம் என்னை விட பெரியவன்… ஒழுங்கா மரியாதையா பேச ட்ரை பண்ணு… இதே பழக்கம் தான் எல்லா இடத்திலும் வரும்… ” எரிச்சலாக கூறியவன்… கௌதமை நோக்கி…

“கௌதம்… இவளை கொண்டு வந்து விட்டுட்டேன்… மூன்று மாதத்துக்குள் இவளை நல்லா ட்ரைன் பண்றது உன் வேலை… ” முடிக்க பார்க்க… ஆதிரைக்கு கோபம் தலைக்கு ஏறியது! இது என்ன ஆதிக்கம்? தன்னுடைய கருத்துக்கு மதிப்பே இல்லையா?

“முடியாது மாமா… இவன் கிட்ட என்னால வேலை செய்ய முடியாது… ” பிடிவாதமாக கூறியவளை என்னதான் செய்வதோ என்று தோன்றியது…

“வருண்… தேங்கா மாங்காய்க்கு எல்லாம் நான் வேலை கற்று கொடுக்க முடியாது… ” கௌதம் அவனது பங்குக்கு முறுக்கி கொள்ள… அவளது கோபம் அனைத்தும் அவன் புறம் திரும்பியது… இவனென்ன பெரிய இவன் என்ற ஆற்றாமையில்!

“யாரு மாங்கா?” இப்போது நேரடியாக கௌதமை பார்த்து கேட்க… பார்த்து கொண்டிருந்த இருவருக்குமே உள்ளுக்குள் சிரிப்பு பொங்கியது…

“வேற யாரு இங்க இருக்கா? ஒன் அன்ட் ஒன்லி நீதான்… வெறும் மாங்கா இல்ல மண்டைக்குள்ள ஒண்ணுமே இல்லாத மக்கு மாங்கா… ” வேண்டுமென்றே அவளை வம்பிழுக்க… வருணோ உள்ளுக்குள் சிரித்து கொண்டே…

“ஓ மை கடவுளே… ஆதியை மக்குன்னு சொல்லிட்டியா? ஹவ் டேர்… ” எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்க்க… ஆதிரையின் முகம் கோபத்தில் கோவை பழமானது!

“யார்? யார் மக்கு? நானா? லண்டன் ஸ்கூல் ஆப் பிசினெஸ்ல டிஸ்டிங்கஷன் வித் ரேன்க்ல பாஸ் பண்ணிருக்கேன்… என்னை பார்த்து… யூ… ” கடும்கோபத்தில் அவனை பார்த்து கூறினாலும் அவனது முகத்தை பார்க்க கூட பிடிக்கவில்லை… அவ்வளவு வெறுப்பாக இருந்தது அவன் மேல்!

“அங்க ரூபாய்க்கு நாலுன்னு வித்துட்டு இருக்காங்க போல இருக்கு வருண்… ” விடுவேனா என்று வம்பை வளர்க்க… அதற்கு மேலும் அவனிடம் பேச்சை வளர்க்க பிடிக்கவில்லை அவளுக்கு!

“வருண் மாமா… இப்போ உங்களுக்கு என்ன வேண்டும்? இவனிடம் நான் வேலை கற்க வேண்டும்… அவ்வளவுதானே… எனக்கு ஒன்றும் ப்ராப்ளம் இல்லை… ஆனால் அதை சாக்காக வைத்து கொண்டு தேவை இல்லாமல் இது போல வம்பை இந்த மனிதர் வளர்க்க தேவையில்லை… ” வருணிடம் கறாரான குரலில் ஆங்கிலத்தில் படபடத்துவிட்டு திரும்பிய ஆதிரை… அவனது முகத்தை நேராக பார்த்து… சிறிதும் தடுமாறாமல்…

“உன்னை வெறுத்தது வெறுத்தது தான்… இனியும் என்னிடம் எந்த மென்மையையும் எதிர்பார்க்காதே… அளவுக்கு மீறி ஒரு வார்த்தை பேசினாலும் உன்னுடைய மரியாதை உனக்கு இல்லை… ” அழுத்தமான குரலில் ஆங்கிலத்தில் வெகு தெளிவாக கூறியவளை அதே அழுத்தத்தோடு எதிர்கொண்டான் கௌதம்… அவனது கேலியும் குறும்பும் காணாமல் போய்விட்டது!

வருணுக்கு தர்மசங்கடமாக இருந்தது… ஆனால் கற்சிலை போல நின்ற கௌதமோ ஆதிரை கூறியதை சற்றும் பொருட்படுத்தாமல்…

“இங்கு நீ வந்தது வேலை கற்று கொள்ள… அதுவும் நான் இதை செய்வது வருணுக்காக!… அதை தாண்டி என்னிடம் எந்தவொரு சலுகையையும் எதிர்பாராதே… நான் வேலையில் மிக மிக கறார்… அதை காட்டிலும் இங்க நான் பாஸ்… அதை மனதில் வைத்து கொள்… ” அழுத்தம் திருத்தமாக சற்றும் தடுமாறாமல் ஆங்கிலத்தில் கூறியவனை வெறித்து பார்த்தாள் ஆதிரை…

எதுவும் பேசாமல் வருணை திரும்பி பார்த்தவளின் பார்வையில் இருந்த ஏதோ ஒன்று இருவரையுமே பாதித்தது!

எனக்கென்று யாருமே இல்லையா? என்பது போன்ற பாவனை… எனக்காக பேச இருந்த நீயும் இப்படி செய்கிறாயே என்ற குற்றம் சாட்டுதலும் இருந்த அந்த பார்வை அவனது மனதில் குற்ற உணர்வை உண்டாக்கியது…

ஆனால் வருணை பொறுத்தமட்டில் அவனுக்கு வேறு வழிகள் இல்லை… அவன் மருத்துவனது கத்தியை எடுத்தாக வேண்டும்… ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் சரி செய்தேயாக வேண்டும் என்று மிகத்தீவிர கட்டாயத்தில் இருக்கும் போது ஆதியின் இந்த உணர்வுகளை உள்வாங்கிக்கொள்ள அவனுக்கு அவகாசம் என்பது இல்லை… மெளனமாக கௌதம் அருகில் சென்றவன் அவனது தோளை அணைத்து கொண்டு சற்று தள்ளி அழைத்து வந்தான்… அந்த நெருக்கம் ஆதிரையின் மனதை மேலும் காயப்படுத்தியது…

சற்று தள்ளி வந்தவன் அவனிடம் கிசுகிசுப்பாக…

“டேக் கேர் கௌதம்… தப்பையெல்லாம் சரி செய்யத்தான் ட்ரை பண்ணிட்டு இருக்கோம்… அவளுக்கும் டைம் கொடு… நீயும் உன்னோட ஈகோவை விடு… ” மெல்லிய குரலில் கூறியவனை நிமிர்ந்து அவனது கண்களை பார்த்தான் கௌதம்…

“ஈகோவை விடுன்னு சொன்னது எனக்கு மட்டுமா வருண்?… உனக்கு இல்லையா? சௌமினிகிட்ட நீ ஈகோவை விட்டுட்டு பேசிடுவியா?” அழுத்தமாக அதே சமயம் குரலை சற்றும் உயர்த்தாமல் அவன் கேட்க… வருணுக்கு அடிபட்ட உணர்வு… எதுவும் கூறாமல் அவனை அதே உணர்வோடு பார்க்க…

“உன் பிஏ பொண்ணுக்கூட நீ பழகினது எதுக்காகன்னு எனக்கு தெரியும் வருண்… ” என்று இடைவெளி விட…

“நீ அனுப்பி வைத்த பெண் தானே… அவள் தான் இப்போது என்னோட ஆபீஸ்ல இல்லையே… ரிசைன் செய்துட்டாளே… அதுவும் உன்னோட கைங்கர்யம்ன்னு எனக்கு தெரியும்… ” சிறு முறுவலோடு வருண் கூற…

“ச்சே ச்சே… நான் எதுவும் பெரிய அளவில் செய்யலை… மேரேஜுக்கு அவள் வீட்டில் நெருக்கடி கொடுப்பது போல செய்து விட்டேன்… ஒரு வசதியான வரனை பார்த்தவுடன் அவளும் பேசாமல் போய்விட்டாள்… அவ்வளவுதான்… நான் ஆரம்பித்து வைத்ததை நானே தானே முடித்து வைக்க வேண்டும்… ”

“நீ அவளை மிரட்டவே இல்லை… அவளுடைய குடும்பத்தையும் மிரட்டவே இல்லை… அதற்கு பயந்தெல்லாம் அவர்கள் அவளுக்கு அவசரமாக திருமணம் செய்ய ஏற்பாடு செய்யவில்லை… இல்லையா கௌதம்… ” புன்னகை மாறாமல் கேட்க… அவனும் அதே தொனியில்…

“அவள் சொன்னாளா?” என்று கேட்க…

“இல்லை… என்னதான் இருந்தாலும் நான் உன் சகோதரன் இல்லையா? உன்னோட அறிவில் பாதி கூடவா இருக்காது? நானும் உன்னை கண்காணிக்க மாட்டேனா?” சிறு சிரிப்போடு கூறியவனை சற்று வியந்த பார்வை பார்த்தான்…

“ம்ம்ம்… கொஞ்சம் வருண்… ஆனால் மென்மையாகத்தான்… ஒரு பெண்ணை என் தகுதிக்கு கீழ் இறங்கி தேவையில்லாமல் மிரட்ட மாட்டேன் என்பது உனக்கும் தெரிந்திருக்கும்… என்னதான் இருந்தாலும் நான் உன்னை அடிப்பேன்,நீ என்னை அடிக்கலாம் ஆனால் இன்னொருவர் நடுவில் வர கூடாதல்லவா… ”

வருணுடைய பார்வையில் வியப்போடு பாராட்டும் சேர்ந்து கொண்டது… அவன் நிஷாந்திடம் கூறிய அதே வார்த்தைகள்… இதுதான் ரத்தபந்தம் என்பதா? மனம் நெகிழ்ந்தது…

இப்போதும் இதே வார்த்தைகளை கூறி ஸ்ருதியை தான் மிரட்டியதும் அவனது கண் முன்னே வந்து போனது… இரு புறமும் வந்த நெருக்கடி தாளாமல் தான் அவள் தப்பித்து சென்றதும்!

“கௌதம்… ” அவனது தோளை சுற்றி கைபோட்டு தன் தோளோடு சேர்த்து அணைத்து கொண்டவன்…

“என்ன? உன் வழியிலேயே போய் உன் ஆளை காலி செய்யலாம்ன்னு நினைத்தேன்… அதற்குள்… ” என்று அவன் கூறிக்கொண்டிருக்கும் போதே…

“என்ன என் ஆளா? வருண்… ” அலறாத குறையாக அதிர்ந்தவனை சிரிப்போடு பார்த்த வருண் ,

“ஆஹா… நீ ஏற்பாடு செய்த ஆள் ப்பா… போதுமா… ” அதே சிரிப்போடு அவன் கூற…

“ஹும்ம்ம்… பக்கத்தில் இவளை வேறு வைத்து கொண்டு நீ இன்னொரு ஏழரையை இழுத்து விடாதே… ”ஆதிரையை கண்ணால் காட்டி அவன் கிசுகிசுக்க…

“நான் ஏழரையை இழுத்து விடுகிறேனா? டேய் குழந்தை கூட நம்பாது இதை… அதற்கு ஹோல்சேல் ப்ரோப்ரைட்டர் நீ தான்… ” சிறு சிரிப்போடு அவனை கிண்டலடிக்க… அதை அவனும் புன்னகையோடு எதிர்கொண்டு…

“இப்படியெல்லாம் என்னை பேச்சை மாற்றாதே வருண்… சௌமினிக்கு ஒரு பதில் சொல்… ” விடாக்கண்டனாக கேட்க… அதுவரை இருந்த மனநிலை மாறியது… தீவிர முகபாவத்தோடு…

“கொஞ்சம் எனக்கு டைம் கொடுடா… உங்க பிரச்சனைகளை முடித்து கொள்கிறேன்… ”

“எங்களது பிரச்சனைகளை நான் பார்த்து கொள்வேன் வருண்… அதை பற்றி நீ கவலைப்படாதே… நீ அவளைப்பார்… ” அழுத்தமாக முடித்து விட்டவனை முகம் கொள்ளா முறுவலோடு ஏறிட்டான் வருண்…

“அடப்பாவி… கொண்டு வந்து விட்டதோட என்னை துரத்துறியா? இரு மகனே… அவள் அடித்தால் அதற்கு பஞ்சாயத்துக்கு நான் தான் வர வேண்டும்… ” வருண் கிண்டலாக கூற… முகத்தை திருப்பி ஆதிரையை கீழ் பார்வையாக பார்த்தான் கௌதம்…

“பேசாமல் வாங்கிட்டு போறதை விட்டுட்டு அதற்கெல்லாம் நான் பஞ்சாயத்து கூட்டுவேனா? எங்க கணக்கை எல்லாம் நான் தான் தீர்க்க வேண்டும்… போதும் இத்தனை வருடங்கள் என் மகனை பிரிந்து இருந்தது… ” குறும்பாக ஆரம்பித்து கரகரத்த குரலில் முடிக்க..

“ஆதியும் பாவம் தான் கௌதம்… ” மகனுக்காக மட்டும் பார்க்காதே… அவளுக்காகவும் பார் என்று மறைமுகமாக கூறிய வருணை மெளனமாக ஆழ்ந்து பார்த்தான்… அதன் அர்த்தத்தை வருணால் முழுவதுமாக உணர முடியவில்லை…

அந்த பார்வையில் ஓராயிரம் அர்த்தம் இருப்பதை மட்டும் அவன் உணர்ந்தான்… ஆதிரையை திரும்பி பார்த்தான்… அவள் தலையில் கை வைத்தவாறே எங்கோ வெறித்து கொண்டிருந்தாள்… அந்த பார்வையில் இருந்த வெறுமை அவனது மனதை வருத்தியது… அதே வெறுமையோடு கௌதமை திரும்பி பார்க்க… அவளுக்கு சற்றும் குறையாத வலி அவனது கண்களிலும்!

error: Content is protected !!