cp35

cp35

அத்தியாயம் 35

இலையேறி பிழைத்து கொள்ள

நதியில் நீரில்லை

கரையில் மரமுமில்லை!

-டைரியிலிருந்து

கண்களில் எப்போதும் போல கூலர்ஸ்… உதட்டில் வழிந்த சிறு புன்னகை… அட்டகாசமாக காரிலிருந்து இறங்கினான் வருண்… உடன் பிருத்வி! பிடிவாதமாக வந்தே தீருவேன் என்று நின்ற ஆதிரையை வீட்டிலிருத்திவிட்டு அவனை மட்டும் அழைத்து கொண்டு வந்திருந்தான் பள்ளிக்கு… பதினைந்து நாள் விடுமுறைக்கு பின்னர்!

மருத்துவமனையில் இருந்தவரை முழு நேரமும் மகனுடனே இருந்த கௌதம்… பிருத்வி டிஸ்சார்ஜ் ஆனபோது வாய் திறந்து ஆதிரையை தன்னுடன் அழைத்து கொள்ளவில்லை… அவளும் என்ன செய்வதென்று யோசிக்கவும் இல்லை…

அவனாக அழைப்பானென்று சௌமினியும் அபிராமியும் இருவரின் முகத்தையும் மாற்றி மாற்றி பார்க்க… கௌதமும் ஆதிரையும் அதை பற்றிய சிந்தனையே இல்லாதது போல வளைய வந்தது அனைவருக்குமே கோபத்தை கிளப்பியது… ஆனால் கோபப்பட்டால் என்னவாகிவிட போகிறது என்ற ஆற்றாமையில் ஒவ்வொருவருமே மௌனத்தை கடைபிடிக்க… மகனை தன்னோடு அழைத்து கொண்டு வந்து விட்டாள் ஆதிரை!

யாரேனும் ஒருவர் பேசினாலும் பிரச்சனை முடிந்துவிடும் என்ற நிலையில் இருவருமே மெளனமாக இருந்தது அபிராமியின் நம்பிக்கையை தகர்த்தது! மனதுக்குள் மகனை வைதாலும் அவனை விட்டுகொடுத்துவிடத்தான் முடியுமா?தனக்காக அவனது வாழ்க்கையை பணயமாக வைத்து தொலைத்து நிற்கும் மகனை காணும் போது அவரது மனதில் வேதனை மிகுந்தது!

ஆனால் அன்றைய நிலையிலிருந்த கௌதமன், ஆதிரை ஒரு பார்வை பார்த்தாலே போதுமென்று இருப்பவன் என்பதை யாரும் உணரவில்லை… அவனும் உணர்த்தவில்லை!

அவளது சம்மதமான பார்வை மட்டுமே போதும்… எத்தகைய சூழ்நிலையையும் கடந்து அவளை அழைத்து வந்து விட முடியும் அவனுக்கு… அவனுக்கு மறுக்கப்பட்ட அந்த பார்வையும்… முன்னர் நடந்து முடிந்து போன தாக்குதல்களின் தாக்கமுமே அவனை மௌனிக்க வைத்தது என்பதை யாரும் அறியவில்லை…

அதே போல ஆதிரைக்கும் சூழ்நிலைகளை கடந்து வந்த தாக்கமும் அதற்கு காரணமானவன் மீதான அடிப்படை தார்மீக கோபமும் அதோடு தன்னிலையை விட்டு இனியும் இறங்கி அவமானப்படகூடாது என்ற பாதுகாப்பின்மையால் விளைந்த ஈகோவும் மட்டுமே!

அவன் அழைப்பான் என்று இவள் பார்க்க… இவள் பார்ப்பாள் என்று அவன் பார்க்க… நடுவில் அன்னையையும் தந்தையையும் பிரித்து பார்க்க முடியாத குழந்தை பிருத்வி இருவருக்குமிடையில் அல்லாடினான்!

பத்து நாட்கள் மருத்துவமனையில் பிருத்வி இருந்தவரை எங்கேயும் அகலாமல் அவனை அடைகாத்த கௌதம்… ஆதிரை அழைத்து கொண்டு போய்விட்டதால் இரண்டு நாட்களிலேயே தவித்தான்… ஆனால் எதையும் கூறாமல் தன்னிடமும் எதையும் கேட்காமல் சென்று விட்டவளை எங்கனம் கடிவது? அதற்கு தனக்கு என்ன உரிமை இருக்கிறது என்ற அடுத்த கேள்வியில் சகலமும் அடங்க… மகனை நினைத்து மருகினான்!

மருத்துவவிடுப்பு முடிந்து அவன் மிகவும் நன்றாக இருக்கிறான் என்பதை உறுதி செய்து கொண்டு வருண் பிருத்வியை பள்ளிக்கு அழைத்து வந்திருந்தான்…

“மேடம்… ப்ரின்சிபாலை பார்க்கணும்… குழந்தை பிப்டீன் டேஸ் மெடிக்கல் லீவ்… அவங்களை பார்த்து மெடிகல் சர்டிபிகேட் கொடுக்க சொல்லியிருந்தாங்க டியுட்டர்… ” கூலரை ஷர்ட்டில் சொருகியபடி ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கேட்டு கொண்டிருந்தவனை அறைக்குள்ளிருந்து பார்த்த இரு விழிகளில் அதிர்வு!

“இவனா? அவ்வளவு எளிதில் இங்கு வந்ததில்லையே… ” குழம்பியபடி பார்த்தாள்… எதிரில் அமர்ந்து மகனுக்காக காத்து கொண்டிருந்த கௌதம் சௌமினியின் முக மாறுதலை பார்த்தபடி வெளியே பார்க்க… குட்டி பட்டாம்பூச்சியாக பிருத்வி… வருணுக்கு அருகில்!

மூன்று நாட்கள் கழிந்து அவனை பார்த்த சந்தோஷம் கௌதமின் முகத்தில்… அதே போல அந்த வாண்டின் முகமும் மலர்ந்தது… தன்னுடைய தகப்பனை பார்த்து!

அதனுடன் முதுகில் புத்தக மூட்டையை சுமந்திருந்தாலும் பதினைந்து நாட்கள் கழித்து நண்பர்களை பார்த்து விளையாடப்போகும் ஆர்வம் அந்த குட்டி கண்களில்!

“என்ன ஸ்கூல் நடத்துற சௌமி?… பிள்ளைங்களுக்கு இவ்வளவு ஹெவியாவா புக்ஸ் கொடுப்பீங்க… ச்சே ச்சே இண்டியன் சிஸ்டம் ஆப் எஜுகேஷன்இஸ் ஒர்ஸ்ட்… ” என்று படபடக்க… அவனை பார்த்த சௌமினியின் முகத்தில் குறும்பு புன்னகை…

“டேய்… இந்நேரம் வரைக்கும் ஒழுங்கா தானேடா இருந்த… இப்போ என்ன திடீர்னு சோசியல் ரிபார்மர் ஆகிட்ட?… உன் பையனுக்குன்னா இண்டியன் சிஸ்டம் ஆப் எஜுகேஷன் வரைக்கும் இழுப்பியா?” சிரித்தபடி கேட்டுகொண்டே ரிஷப்ஷனை நெருங்கியவள்… வருணை இயல்பாக எதிர்கொள்ள பெரிதும் தவித்து போனாள்!

மருத்துவமனையில் இருந்தவரை தினமும் பார்த்தவள் தான் ஆனால் அதுவே அவளது காதலெனும் பெருநெருப்பை ஊதி பெரிதாக்கி கொண்டிருப்பதை அவளும் அறியவில்லை… ஆனால் இடையில் ஸ்ருதி எனும் அந்த பெயர் தொண்டையில் சிக்கிய முள்ளாக இருந்ததை என்னவென்று கூற?

வயது முதிர்ச்சியை தந்திருந்தாலும் உள்ளிருந்த காதல் அவனை கண்டதும் படபடவென அடித்து கொண்டது… ஆனால் அவனிடம் அவள் பார்க்காத பிரதிபலிப்பு அவளது ஈகோவை தட்டியெழுப்பி நான் ஒன்றும் குறைவில்லை என்று கூற சொன்னது…

அவளது தவிப்பை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டிருந்தான் கௌதம்… அவனுக்கு மனம் பிசைந்தது… இனியாவது சௌமினியின் வாழ்வு மலருமா என்று மனதினுள் ஏக்கம்கொண்டான்… அவனுடைய வாழ்வே அந்தரத்தில் இருப்பதை எண்ணி கசப்பான புன்னகையொன்று மலர்ந்தது!

“எஸ்… வாட் கேன் வி டூ பார் யூ?”உணர்வுகளை காட்டிகொள்ளாத அலுவலக குரலில் கேட்ட சௌமினியை திரும்பி பார்த்து புன்னகைத்தான் வருண்!

மென்மையான காட்டன் புடவையில், கழுத்தை மறைத்த ப்ளவுஸ் அவளுக்கு மிகவும் மரியாதையான தோற்றத்தை கொடுத்திருக்க… கொண்டையை எதிர்பார்த்து அவளது பின்புறத்தை பார்க்க முயல… சௌமினி முறைத்தாள்!

“சர்… வாட் ஈஸ் யுவர் ப்ராப்ளம்?” மிகவும் பிரயத்தனப்பட்டு அழுத்தமான குரலில் கேட்க முயன்றவளை மிகவும் சீரியசாகவே பார்த்தவன்… அருகில் இருந்த கௌதமை மேல் பார்வையாக பார்த்தான்… அவன் இருவரையும் கண்டும் காணாமல் உதட்டில் வழிந்த புன்னகையோடு அவனது மகனோடு ஐக்கியமாகி இருந்தான்…

“கொஞ்சம் திரும்பினா நல்லா இருக்கும்… இப்போ இதுதான் என்னோட ப்ராப்ளம்… ” சிரிக்காமல் கூறியவனை மேலும் முறைத்தாள் சௌமினி… அவனோ அதை கண்டுகொள்ளாமல் அவளை ஒரு சுற்று சுற்றியவன்… அங்கிருந்த ரிசப்ஷன் டேபிளில் கையூன்றி கொண்டான்…

“பரவால்ல… முடியை நல்லா வளர்த்துட்டீங்க போல இருக்கு… ” சிறுபுன்னகையோடு கூறியவனின் குரலில் குறும்பு வழிந்ததோ? இத்தனை நாட்களில் தெரியவில்லையா இவனுக்கு? எத்தனை முறை பார்த்து இருக்கிறான்? இவனுக்கு தான் குடும்பம் அருகில் இருந்தால் தன்னை கண் கொண்டு பார்க்க முடியாதே என்ற சுய இரக்கம் வேறு சூழ்ந்து கொண்டது!

ரிசப்ஷனிஸ்ட் அருகே அமர்ந்திருக்க… காலை நேரத்தில் பள்ளி பரபரத்து கொண்டிருக்க… பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்து கொண்டும் வந்து கொண்டிருக்க… இவனுக்கு இந்த நேரத்தில் முடியை பற்றிய ஆராய்ச்சியா என்ற கோபத்தில் அவளது முகம் சிவந்தது…

அதிலும் அன்றைக்கு என தலைக்கு குளித்து தளர வாரிய கேசம் இடையை தொட்டு கொண்டிருக்க,சௌமினிக்கு கடந்த காலத்தில் இந்த தலைமுடிக்காக வருண் தன்னை கடிந்து கொண்டதெல்லாம் நினைவுக்கு வந்து அவளது வேதனையை மேலும் அதிகரிக்க செய்தது…

“சர்… உங்களுக்கு என்ன வேண்டும் என்று கூறினால் நன்றாக இருக்கும்… ” கோபத்தை வெளிக்காட்டாமல் அவனிடம் பல்லை கடித்து கொண்டு கேட்க…

“நீங்க தான் மேடம் வேண்டும்… ”

மிகவும் பொறுப்பாக கூறுவது போல தோன்றினாலும் அவனது குரலில் இருந்த கிண்டலை உணர்ந்தவள் அருகில் இருந்த ரிசப்ஷனிஸ்ட்டை அவசரமாக பார்த்தாள்… அந்த பெண் அவசரமாக உதட்டோர புன்னகையோடு தலையை குனிந்து கொள்வது தெரிய… அந்த பெண்ணின் அருகில் நின்று கொண்டிருந்த ஆசிரியையும் அவசரமாக தலை குனிந்து கொண்டார்… அந்த சூழ்நிலை சௌமினியை சங்கடப்படுத்தியது…

“என்ன… விளையாடுறீங்களா?”அதிர்ந்து கேட்க…

“ச்சே ச்சே… எனக்கு விளையாடவெல்லாம் தெரியாது மேடம்… அதெல்லாம் உங்களுக்கும் உங்களது ப்ரெண்டுக்கும் மட்டும் தான் தெரியும்… ”

அருகில் இருந்த கௌதமை சுட்டி காட்டி வருண் பேச… அதை கவனித்த கௌதம் கவனிக்காததை போலவே காட்டி கொண்டு மகனை ரிசப்ஷன் டேபிளில் அமர வைத்து அவனை பேச விட்டு ரசித்து கொண்டிருந்தான்…

“வருண்… ” கோபத்தில் சிவந்த அவளது முகத்தை ரசித்தான்… அவன் ரசித்து பேசி கொண்டிருந்ததை கௌதமும் ரசித்து சிரித்து கொண்டான்… இந்த ஊடலுக்குள் இனி அவன் தலையிடுவதாக இல்லை…

“அட என் பெயர் கூட நினைவிருக்கா? கிரேட்… !” சற்று நக்கலாக கூறியவனை மீண்டும் முறைத்தவள்…

“ப்ச்… எதற்கு இந்த தேவை இல்லாத பேச்சு?என்னை பற்றி வேண்டுமானால் பேசிக்கொள்… என் ப்ரெண்டை பற்றி நீ ஒன்றும் பேச வேண்டாம்… ”

கோபமாக அவள் கூறியதை சற்றேனும் சீரியசாக அவன் எடுத்து கொண்டதை போலவே தெரியவில்லையே என்ற குழப்பத்தில் அவனை பார்க்க… அதை போலவே அவனது முகம் புன்னகையில் மலர்ந்து இருந்தது… மேலும் குழம்பினாள் சௌமினி!

பன்மையை கைவிட்டு பள்ளி காலத்தை போல ஒருமைக்கு தாவி விட்டதை அப்போதுதான் உணர்ந்தவள்… சட்டென்று நாக்கை கடித்து கொண்டு கண்களை மூடி திறந்தாள்…

பாவி… இதற்காகத்தான் இப்படி சிரித்து வைக்கிறான் போல என்று எண்ணியவளுக்கு தன்னை எண்ணியே அவமானமாக இருந்தது…

சிவந்த அவளது முகத்தை ரசித்து பார்த்து கொண்டிருந்தான் வருண்… தளைகள் விட்டவிழ்ந்த தாமரை மொட்டு ஆதவனை நோக்கி மலர்ந்து சிரிப்பதை போன்ற நிலை அவனுக்கு! தாமரை ஆதவனை மட்டுமே நோக்கும் ஆனால் கட்டுப்பாடுகளால் கட்டப்பட்ட மலரானது அதுவரையில் ஆதவனை நோக்க முடியாமல் தவித்திருந்ததை அந்த மலர் மட்டுமே உணரும்!

ஆனால் ஆதவனுக்கோ மலர் தன்னை கைவிட்டு விட்டதாக எண்ணி மேகத்தின் நடுவே மறைந்து கொள்ள… மலரோ கிரகணம் எப்போது விலகும் ஆதவனின் கதிர் எப்போது தன்னை தீண்டும் என்ற ஏக்கத்தில் இருந்தது!

சௌமினி இருபத்தி ஒன்பதை தாண்டிய நிலையில் இருந்தாலும் தோற்றம் இருபதின் ஆரம்பத்தையே உணர்த்த,வருண் அவளை ரசித்து பார்த்து கொண்டிருந்ததை கண்ணுற்றவள் எரிச்சலடைந்தாள்… ஸ்ருதியோடு அவனிருந்த நிலை அவளது கண் முன் வந்து சென்றது… அவளையும் அறியாமல் மனதில் கோபச்சூடு!

அவனோடு தான் கொண்ட காதல் எல்லாம் கடந்த காலம் ஆகிவிட்ட நிலையில், ஸ்ருதியோடு அவனுக்கிருந்த உறவை நேரிலும் கண்டுவிட்ட பின்னும் அவளால் துடிக்கின்ற மனதை சமாதானப்படுத்த முடியவில்லையே…

பத்து பேரை காதலித்து விட்டு பதினோறாவதாக வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு குழந்தைகளையும் பெற்று கொண்டு சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தும் தன் தோழிகளை நினைத்து பார்த்தாள்… மனம் குமைந்தது…

தான் செய்த தவறு தான் என்ன? வருண் மேல் தான் கொண்ட காதல் இந்த அளவு தன்னுடைய மனதை இவ்வளவு நாட்களுக்கு பிறகும் அறுக்கும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லையே… பிரிவை அறிவித்த அவனோ அதை பற்றி கொஞ்சமும் நினைக்காமல் ஸ்ருதியோடு…

மனம் அழுதது!

அவளது மன உளைச்சல் அவளது முகத்தில் பிரதிபலித்ததோ?… வருண் அவனது குறும்பை கைவிட்டான்… கௌதமால் அவளது உணர்வுகளை உள்வாங்கி கொள்ள முடிந்தது… அவனது மனமும் ஒரு முடிவுக்கு வந்தது!

“ஓகே செமி… சாரி… சௌமினி… குழந்தை பதினைந்து நாட்களாக லீவ் இல்லையா… அதற்காக உன்னை… சாரி… உங்களை பார்த்து மெடிக்கல் சர்டிபிகேட் கொடுத்து சொல்லி விட்டு போகலாம் என்று தான் வந்தேன்… ” ஒருமைக்கும் பன்மைக்குமாக தாவித்தாவி ஒருவாறு கூறி முடித்து விட்டு அவளது முகத்தை பார்க்க… அவளோ தன்னுடைய மன ரணத்தை விடுத்து பிருத்வியின் முகத்தை ஆதூரமாக பார்த்தாள்…

“இப்போ முகம் தெளிவா இருக்கு கௌஸ் உன் பையனுக்கு… இதையே எப்படியாவது நல்லபடியா கொண்டு போடா… ” பிருத்வியை பாசமாக பார்த்தபடியே கூறியவள் நண்பனை ஓரத்தில் கடிந்து வைக்கவும் தவறவில்லை… மகனை பார்த்த மகிழ்ச்சியில் மென்மையை தத்தெடுத்து இருந்தவனின் முகம் கடினமுற்றது…

மகனது கன்னத்தில் அழுத்தமான முத்தமிட்டு அவனது வாசத்தை பிடித்தவன்… அவனது தோளில் ஸ்கூல் பேகை மாட்டி விட்டு…

“நீ கிளாஸ் போடா குட்டி… ” என்று அனுப்பி வைத்தான்…

“ப்பா… ஈவினிங் கண்த்திப்பா வரணும்… ஷ்தேயாப்பா வர்த்த மாதிதி… ”

தனது வகுப்பு தோழியின் அப்பா அழைத்து கொண்டு போவது போல கௌதமையும் அழைத்த பிருத்வியின் தொனியில் அவன் மனம் உள்ளுக்குள் கனத்து போனது… தனது பிள்ளை எதற்ககெல்லாம் ஏங்கி கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்தவனுக்கு அந்த நொடி கசப்பாக இருந்தது… ஏனென்றால் இதற்கெல்லாம் அவனும் ஏங்கி இருக்கிறானே!

ஆனால் பிள்ளையின் வாசமே சிறிது நாட்களான பரிச்சயம் தானே!

தன்னை போலவே தனது பிள்ளையுமா? தான் அனுபவித்த துரோகத்தின் வலியை எந்த வித குற்றமும் செய்யாமல் தனக்கு பிள்ளையாக பிறந்த ஒரே காரணத்தால் இவனும் அனுபவிக்க வேண்டுமா? மனமெங்கும் வலி!

“அப்பா கண்டிப்பா வர்றேன் பிருத்விகுட்டி… இப்போ கிளாஸ் போவீங்களாம்… சரியா?” அவனுக்கு இணையாக இறங்கி அவன் பேச… அந்த காட்சி, பார்த்து கொண்டிருந்த இருவரையுமே இளக்கியது! வருணை நிமிர்ந்து பார்த்த சௌமினியின் கண்களில் லேசாக நீர் கோர்த்திருக்க… அவளை கண்களால் ஆற்றுபடுத்தினான்!

“வர்தேன்னு சொல்லிட்டு வத மாத்த… ” முகத்தை சுருக்கி கொண்டு கூறிய அந்த மழலையின் வார்த்தைக்காக நரகத்துக்கு கூட செல்வானே! ஒப்புதலே இல்லாத அவனது தந்தையின் வீட்டிற்கும் சென்றவன் இங்கு வர மாட்டானா?

“கண்டிப்பா வருவேன்டா பட்டு குட்டி… செல்லகுட்டிய பார்க்காம அப்பாவால இருக்கவே முடியாது… அதான் குட்டிய பார்க்க ஓஓஓடி வந்துட்டேன்… ஈவினிங்கும் கண்டிப்பா வந்துடுவேன் செல்லம்… ” முதுகில் பையை மாட்டியவாறே உதட்டை பிதுக்கி கொண்டு நின்ற மகனை கெஞ்சி கொஞ்சி தாஜா செய்து கொண்டிருந்தான் கௌதம்… தந்தைக்கு முத்தமிட்டுவிட்டு…

“என் ப்தெண்ட்ஸ் எல்லாமே அவங்க அப்புப்பா கூதத்தான் தூங்கதாங்கப்பா… நீ வந்து தூங்க வெச்சாத்தான் நான் தூங்குவேன் இன்னைக்கு… ” கையாட்டி விட்டு கிளம்பினான்… அவன் கூறியதில் இருந்த பிடிவாதத்தை விட அவனது தந்தைக்கான ஏக்கமே வெளிப்பட… போய் கொண்டிருந்த மகனையே பார்த்து கொண்டிருந்தான் கௌதம்… புள்ளியாகி விட்ட பின்னும் கண்களை நகர்த்த பிரியப்படவில்லை அவன்!

கண்களில் மெலிதான நீர்படலம்…

“கெளதம்… ” அவனது உறைந்த நிலையை கண்டு சற்று பயந்த சௌமினி அவனை பின்னிருந்து அழைக்க… வருண் அவளது கையை பிடித்து இதமாக அழுத்தினான்… அந்த அழுத்தம் அவனது அக்கறையை கூற…

“நான் பார்த்துக்கறேன்… ”என்று அவளுக்கு தைரியமளிப்பதாக பட்டது அவளுக்கு!

அந்த அக்கறையை மீறியும் ஏதோ ஒன்றை உணர்ந்தாள் சௌமினி… அவனை தொட்டதே இல்லை என்றெல்லாம் கூற முடியாது… அவர்களுக்குள் காதலித்த நேரத்திலும் அதற்கு முன்னரும் கூட தொடுகை மிக இயல்பான ஒன்று தான்… ஆனால் இப்போதைய அவனது தொடுகை அவளுக்குள் நடுக்கத்தை பரவ செய்தது… வெகு நாட்களுக்கு பிறகான தொடுகை!

அது சில நொடிகளுக்கு தான் என்றாலும் அவளது கைகள் நடுங்கி இதயம் படபடத்தது… சட்டென்று சௌமினி கையை உருவிக்கொள்ள… வருண் அவளை உணர்வற்ற பார்வை பார்த்தான்… அவன் வெகு தூரம் தனியாக பயணம் செய்து வந்தது போன்ற களைப்பு!

வகுப்பு ஆரம்பித்து விட்டதற்கான அறிவிப்பாக மணி ஒலிக்க… கடந்து சென்று கொண்டிருந்தவர்கள் காணமல் போக ஆரம்பித்து இருந்தனர்…

மெளனமாக தன் மகன் போன திசையை முழங்காலில் அமர்ந்தவாறே பார்த்து கொண்டிருந்த கௌதம்…

“என் மகனோட சின்ன ஆசையை கூட நிறைவேற்ற முடியாத பாவியா இருக்கேன்ல… ?” இருவரையுமே பாராமல் பொதுவாக அவன் கேட்ட கேள்வியில் சௌமினி கலங்கினாள் என்றால் வருண் சற்று யோசனையாக கௌதமை பார்த்தான்…

அவனுக்கும் அந்த நிலை மனதை உடைத்தது… மூச்சை உள் இழுத்து வெளியே விட்டான்… தனக்குள் ஒரு முடிவினை எடுத்து கொண்டு இனியும் இந்த வேதனைகள் வேண்டாம் என்று முடிவு செய்தான்… அது அவன் முன்னமே செய்த முடிவு தான் என்றாலும் அவை அனைத்தும் யாரும் அறியாமல் பின்னணியில் மட்டுமே இருந்து வந்தது… இப்போதோ நேரடியாகவே இறங்க முடிவு செய்தவன் கௌதமை ஆழ்ந்த பார்வை பார்த்து…

“கௌதம்… ” என்று அழைக்க … திரும்பி வருணை ஆழ்ந்து பார்த்தாலும் அந்த பார்வையில் வேதனையே மிதமிஞ்சி இருந்தது … வாழ்க்கை முழுவதற்குமான வேதனைகளை ஒரே பார்வையில் ஆழ்ந்து வெளிப்படுத்த முடியுமா? முடியும் என்று நிருபித்து கொண்டிருந்தான் கௌதம்…

ஒவ்வொரு நிலையிலும் எவை எல்லாவற்றையுமோ இழந்து இருந்தாலும் அந்த இழப்பையும் கம்பீரமாக ஏற்று போராடி கொண்டிருந்தாலும் ….அந்த போராட்டத்தில் சறுக்கி மேலும் இழப்புக்களை சந்தித்தாலும்,நிமிர்ந்து நின்று எதிர்த்து வந்த கம்பீர ஆண்மகனைத்தான் வருண் இதுவரையில் கண்டான் …… ஆனால் தன் மகன் தன்னை இழந்து தவித்து கொண்டிருந்த அந்த தவிப்பை அவனால் சற்றும் தாள முடியவில்லை என்பதை முழுவதுமாக அந்த கணத்தில் உணர்ந்தான் வருண்…

அந்த பாசமும் அவனது கம்பீரத்தை அதிகப்படுத்தியதே அன்றி சற்றும் கீழிறக்கவில்லை …

அந்த தவிப்பின் முன் தங்களுடைய எதுவுமே ஈடு கொடுத்து எதிர்த்து நிற்க போவதில்லை என்பதையும் உணர்ந்தான் … கொண்டு வந்ததும் என்ன? கொண்டு போவதும் என்ன? சிதம்பரத்தின் மகன் என்ற அடையாளம் தாயால் காட்டப்பட்டது … அது தான் கொண்டு வந்தது அல்ல… விதி! அது மட்டுமே!

அதே அடையாளம் கொண்ட கௌதமை இந்த நிலையில் வைத்திருப்பதும் விதியை அன்றி வேறேது? ஆனால் இனியும் விதியை காரணம் காட்டி அந்த குழந்தையை தவிக்க செய்து இருப்பது மிகப்பெரிய பாவம் என்று பட்டது வருணுக்கு! அதற்கு தானும் ஒரு காரணமோ? அந்த கேள்வி அவனை உறுத்தியது!

முதன்முறையாக குரலில் ஆதூரத்தை தேக்கி வைத்து சகோதரனை அழைத்தவனை சௌமினி ஆச்சரிய பார்வை பார்த்தாள்… இருக்காதா? எத்தனை வருட ஏக்கம் அவளுள்… அவனும் கௌதமும் இணக்கமாக இருக்க வேண்டுமென்று ஒரு காலத்தில் எவ்வளவு விரும்பியிருப்பாள்…

மனக்கிலேசத்தோடு நின்று கொண்டிருந்தவனை தோளோடு சேர்த்து அணைத்தான் வருண்… வாழ்க்கையில் முதன்முறையாக கௌதமை, அவனது சகோதரனை ஆதரவாக அணைத்து கொண்ட அந்த காட்சியை கண்களால் நிரப்பி கொண்டாள் சௌமினி!

“வருண்… ” கௌதமுடைய குரல் பாசத்தையும் ஏக்கத்தையும் வேதனையையும் மனபாரத்தையும் ஒட்டு மொத்தமாக தாங்கி கொண்டு வெளிப்பட்டு உடைந்தது…

“கம்மான் கௌதம்… வா… ஒரு லாங் ரைட் போலாம்… ” முழங்காலில் அமர்ந்திருந்த அவனை எழுப்பி விட்ட வருண் தன் தோளோடு சேர்த்து அணைத்து கொண்டு கூற… அந்த செய்கை சௌமினியையும் சிறிது குழப்பி விட்டது… ஏனென்றால் இது நாள் வரையிலும் வியாபாரத்தில் தீர்க்கமான எதிரிகளாக இருந்து விட்டு… தனிப்பட்ட வாழ்க்கையிலும் எதிர் அணியிலேயே இருந்தவன் என்பதால் சௌமினியால் வருணின் செயலை சட்டென நம்ப முடியவில்லை…

கௌதமுக்கு அந்த சந்தேகம் ஒரு முனையளவும் இல்லை… ஏனென்றால் வருணை பற்றி முற்றிலுமாக அறிந்தவன் அவன்… வருண் எதுவாக இருந்தாலும் முகத்திற்கு நேராக செய்து பழக்கப்பட்டவன் என்பதும் கௌதமுக்கு தெரியும்… தந்தையை பங்கு போட்டு கொள்ள முடியாது என்று முகத்திற்கு நேராகவே சொல்லி இருந்தவன்… அவனுக்கு ஹிட்டன் அஜெண்டா என்று எதுவும் இருக்கவே முடியாது…

சௌமினியின் குழப்பத்தை கண்டு முகத்தை சுருக்கினாலும் கௌதமின் தெளிவான முகம் அவனுக்கும் புன்னகை கீற்றை மலர வைத்தது…

இருவருக்கும் இடையில் ஏதாவது கசப்பான பேச்சு நிகழ்ந்து விடுமோ என்ற பயத்தில் கௌதமோடு தானும் சேர்ந்து கொள்ள முயல… உதட்டை சுளித்த வருண்…

“இப்போ எதுக்கு நீயும் வாலை பிடிச்சுட்டு வர்ற?” அருகில் ரிசப்ஷன் பெண்ணை கண்டு கொள்ளாமல் சௌமினியை வார… அவளோ முறைத்தாள்… அதை பார்த்து கொண்டிருந்த அந்த ரிசப்ஷன் பெண்ணுக்கோ ஆச்சரியமாக இருந்தது…

சௌமினியை உணர்வுகளை துடைத்தவளாக,அந்த பள்ளியின் தாளாளராக,அதிகார மையமாக, அணுகுவதற்கு அப்பாற்பட்டவளாக கண்டு தான் அவர்களுடைய பழக்கம்… ஆனால் இப்போதோ சிறு பிள்ளை போல வருணின் பின்னே சென்று அதற்கு வாங்கியும் கட்டி கொண்டு முறைத்தவளை வியப்பு மாறாமல் பார்க்க… சௌமினி அவளை நோக்கி…

“சங்கீதா… வேலைய பாருங்க… ” என்று அதிகாரமாக கூறிவிட்டு அவனது பக்கம் திரும்பி…

“ஏன் நான் வந்தா என்ன?” எரிச்சலாக கேட்டவளை தீர்க்கமாக பார்த்தான் வருண்… கௌதமின் முகத்தில் மென்மை… அந்த நொடியை மிகத்தீவிரமாக ரசித்து கொண்டிருந்தான்… அவனது அப்போதைய தேவை சௌமினியின் வாழ்க்கை! இனியும் வருணிடம் தேவையில்லாத பிரிவினையை வளர்ப்பது சௌமினியின் வாழ்க்கையை கட்டாயம் பாதிக்கும் என்பதை உணர்ந்தான்… இனியாவது அவளது வாழ்கையை திருப்பி தந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் அவன்! அனைத்தையும் விட அவனது தேவை பிருத்வி!

“அண்ணன் தம்பிக்கிடையே எத்தனையோ விஷயம் இருக்கும் சௌமினி… தனியா பேச… !!”

மிகவும் இயல்பாக அவன் கூற… அதை கேட்டவளுக்கோ ஒரு நொடிகள் மூளை வேலை நிறுத்தம் செய்தது!

“வருண்ண்ண்… ” கண்களில் கண்ணீரோடு முறுவலித்தவளை தோளோடு மென்மையாக சேர்த்தணைத்து கொண்டான் கௌதம்…

புன்னகையை ஏந்திய கௌதமும் அவனை ஆதரவாக அணைத்து கொண்ட வருணும் சௌமினியை பரவசப்படுத்தினர்!

வார்த்தைகள் ஏதுமில்லாத அந்த மென்மையான ஆதரவு சௌமினிக்கு நிறைய வாக்கியங்களை அர்த்தப்படுத்தியது… பள்ளி நாட்களின் போது அவள் வியந்து நினைத்து கொண்ட ஒரு விஷயம் இப்போதும் அவளது மனதில் தோன்றி இருவரையும் பார்த்து வியக்க வைத்தது…

இருவருக்கும் இடையில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் எப்போதுமே அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் அந்த மௌனமான புரிதல் சௌமினிக்கு ஆச்சரியமான ஒன்று!

அதே மௌனமான புரிதல் இப்போதும்!

சௌமினி வாய் விட்டே கேட்டிருந்தாள்!

“எப்படி வருண்… நிஜமா ஆச்சரியமா இருக்கு! ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு… ” கமறிய குரலில் கூறும் போதே குரல் உடைந்து விடும் போல தோன்றியது அவளுக்கு!

கண்களில் சந்தோஷ கண்ணீர்… மெல்லிய நீர்படலமாக!

“இவனிடம் மட்டும் தான் போராட்டம் என்றால் எவ்வளவு வேண்டுமானாலும் போராடலாம் சௌமினி… ஆனால் அந்த போராட்டம் எத்தனை பேருடைய வாழ்க்கையை சீரழிக்கிறது என்று என்னும் போது நாமும் கொஞ்சம் தளர்த்தி கொண்டால் என்னவென்று தோன்றுகிறது… ” வருண் கூற… அதுவரையில் இருந்த சந்தோஷ மனநிலை மாறி… சௌமினியை சற்றே குழப்பம் சூழ்ந்தது!

கௌதம் புன்னகை மாறா முகத்தோடு பார்த்து கொண்டிருந்தான்!

error: Content is protected !!