cp37

அத்தியாயம் 37

எனது பயணத்தில் –நீ

முன்னதாக சென்று கொண்டிருக்கிறாய்

நீ என்பது நானாக!

-டைரியிலிருந்து

ஆயிற்று! ஆதிரை கௌதமிடம் தொழிற்பயிற்சிக்காகவென வந்து மூன்று வாரங்கள் கடந்து இருந்தன…

வீட்டில் வருணுடனும் முகம் கொடுத்து பேசவில்லை… கௌதமிடம் வேலை என்றதும் சிதம்பரம் ஆர்வமாக அவளது முகத்தை ஏறிட்டு பார்த்ததோடு சரி… அவரும் எந்த கருத்தையும் கூறவில்லை… தனித்து விட்டது போன்ற உணர்வில் தவித்து கொண்டிருந்தாள் ஆதி!

மற்றபடி அலுவலகத்தில் வேலை வழக்கமாக போய் கொண்டிருக்க, அவனுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை… பெரும்பாலும் அவன் அலுவலகத்தில் இருப்பதில்லை… அவனது தொழிற்சாலை அல்லது ஏதாவது சைட்களில் தான் இருப்பதே என்பதால் அலுவலகத்தில் நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ஊன்றி கவனித்து கொண்டிருந்தாள் ஆதிரை.

மருந்துக்கும் பெண்கள் இல்லாத இடமாக இருந்ததில் உள்ளுக்குள் சிரித்து கொண்டாள்… கௌதமனுக்கும் பெண்களுக்குமான பொருத்தங்கள் இடைச்சொருகலாக வந்தமர்ந்தது… இப்போது மட்டும் என்னவாயிற்று இவனுக்கு என்ற கேள்வியோடு அவனது பிஏ மகேஷை அவள் கேட்க… அவனோ சிரித்து கொண்டே…

“இல்ல மேடம்… இந்த ஆபீஸில் உள்ள வர்ற முதல் பெண் நீங்கதான்… சாருக்கு லேடீஸ்சை வேலைக்கு வைப்பதில் உடன்பாடு இல்லை… ” என்று கூற… ஆதிரைக்கு உள்ளுக்குள் கோபம் கனன்றது…

இதென்ன பிற்போக்கான செயல்பாடு என்று அவனது சட்டையை பிடிக்க வேண்டும் போல தோன்றியது… ஆனால் அடுத்த நிமிடமே உனக்கு இங்கு வேலையே மூன்று மாதங்கள் தான்… அதை முடித்துவிட்டு அவனது கண்ணில் படாமல் ஓடுவதை விடுத்து உனக்கு ஏன் இந்த தேவையில்லாத கேள்வி எல்லாம்… அவன் யாரை வேலைக்கு வைத்தால் என்ன? வைக்காவிட்டால் உனக்கு என்ன? என்று மனம் தாறுமாறாக இடிக்க… அசட்டு சிரிப்போடு மகேஷிடமிருந்து நகர்ந்து விட்டாள்.

அதை விடுத்து பார்த்தால் அலுவலகத்தில் அவனுக்கு கிடைக்கும் மரியாதை அவளுக்கும் கிடைத்தது… ஒவ்வொரு பிரிவாக சென்று ஒவ்வொரு வேலையையும் ஆராய்ந்து கொண்டிருந்தாள்… தேவைப்படும் இடங்களில் அந்தந்த வேலைகளை அவளையே பார்க்கவும் அனுமதித்திருந்தான்.. பயிற்சியில் இவையும் வருமோ? எப்படி இந்தளவு நுணுக்கமாக ,தொழில் ரகசியங்கள் சார்ந்த வேலைகளை கூட தன்னிடம் ஒப்படைக்கிறான் என்பதில் சற்றே வியப்பும் தோன்றியது…

ஆனால் ஒவ்வொன்றும் மகேஷ் மூலமாக மட்டுமே நடந்து கொண்டிருந்தது… அது அவளுக்கு மாறுபாடாகவும் தோன்றவில்லை… தோன்றவில்லை என்பதை காட்டிலும் மிகவும் வசதியாகவே உணர்ந்தாள் என்பதே உண்மை…

அன்றும் அதே போல ஆராய்ந்து கொண்டிருந்தபோது… அவளை அழைத்தான் தொலைபேசியில்..

“கம் இன்சைட்… ”

இவன் அழைத்தால் உடனே சென்று விட வேண்டுமா? இவன் என்ன பெரிய இவனா என்று தோன்றினாலும் மூன்று வாரங்களுக்கு பிறகு இப்போதுதான் கௌதம் அவளிடம் பேசுகிறான் என்பதும் அவளுக்கு உரைத்தது… இத்தனை நாட்களாக மனதுக்குள் அவனை விதம் விதமாக வறுத்து கொண்டிருந்தாள்… ஒருவேளை அவையெல்லாம் தனது முகத்தில் தெரிந்து விடுமோ என்ற பயம் ஒரு சிறு மூலையில் இருந்தாலும்..என்ன செய்து விடுவான் என்ற அலட்சியமும் இருந்தது…

கல்லூரி காலத்தில் அவன் முன் பயந்து கொண்டு விளக்கங்கள் கூறியது எல்லாம் நினைவுக்கு வந்தது… அவனது கண்டிப்பும் கோபமும் தேவையில்லாமல் நினைவுக்கு வந்து அவளை சற்றே தயங்க வைத்தது…

கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றவளை அமர சொல்லி கை காட்டினான் கௌதம்…

காட்டன் புடவையில் கச்சிதமாக கம்பீரமாக கூடவே கவர்ச்சியாக வந்தவளை ஒரு முறை நிதானமாக பார்த்தான் கௌதம்…

கோவிலில் பார்த்து தான் மயங்கிய ஆதிரைக்கும் அவன் முன் அமர்ந்திருந்த ஆதிரைக்கும் ஆறல்ல ஆறாயிரம் வித்தியாசங்கள் இருந்தன… முக்கியமாக அழகு பலமடங்கு அதிகமாகியிருந்தது… உடல் வற்றியிருந்தாலும் தாய்மையின் மீதங்கள் அவளது சோபையை தூக்கி காட்ட… கண்களை அவனால் அவ்வப்போது மீட்க முடியவில்லை!

முக்கியமாக பதினெட்டு வயது அப்பாவித்தனமான விளையாட்டுத்தனமான குறும்புத்தனமான ஆதிரை இல்லை இவள்… கல்வி தந்த அறிவு சுடர் மின்ன தன்னம்பிக்கை அதிகமாகி எதையும் எதிர்நோக்குவேன் என்ற தைரியத்தோடு துணிச்சலையும் குழைத்த தெளிவான பெண்ணாக அமர்ந்து இருந்தவளை ஊன்றி பார்த்தான்.

ஆனால் அவள் மேல் பார்வையை படர விட்டதெல்லாம் ஒரு நொடி தான்…

சிவகாமி அத்தையின் கம்பீரமும் கைலாசம் மாமாவின் மென்மையும் சேர்ந்த தனது மனைவியை பார்க்கும் போது மறக்க நினைக்க முயல்வதெல்லாம் மீள் நினைவாக அவனுள்!

இப்போது வலியை விட வேறு ஏதோ ஒரு உணர்வு!

உரிமையான மனைவியா இவள்?

எதோ நினைவுகள் அவனை ஆக்கிரமித்து இருக்க, அவனது முகத்தை கொண்டு அவனது உணர்வுகள் எதையும் அவளால் படிக்க முடியவில்லை… எப்போதுமே அவளுக்கு அது சாத்தியப்படாத ஒன்று தான்… படிக்க முடிந்திருந்தால் இப்படி ஏமாளியாக நின்றிருக்க தேவையில்லை என்ற தேவையில்லாத எண்ணம் அவளுள் வட்டமிட்டது…

“லாஸ்ட் இயர் பினான்சியல் எக்ஸ்ப்பெண்டிசர் பைல்ஸ் கோ த்ரூ பண்ணீங்களா மி… மிசஸ் ஆதிரை… ?” கண்களை பைலில் பதித்து கொண்டு மிகவும் இயல்பாக கௌதம் கேட்ட கேள்வியில் அதிர்ந்து நோக்கினாள்… அவனது மிசஸ் ஆதிரை என்ற அழைப்பு அவளை கொதிக்க செய்தது…

எரிச்சலில் பதில் கூறாமல் அவனையே பார்த்திருக்க… நிமிர்ந்து என்னவென்பதை போல புருவத்தை உயர்த்தி பார்த்தான்…

“கால் மீ மிஸ் ஆதிரை… ” கடினத்தை காட்ட முயன்று கொண்டிருந்தது அவளது குரல்… ஆனாலும் அந்த இறுக்கம் அவனை உறுத்த…

“அப்போ பிருத்வி? சூரிய பகவானோட குழந்தையா?இல்ல நீங்க குந்தி தேவியா?” அவனையும் மீறி இடக்காக கேட்டாலும் பொறுமையை இழுத்து பிடிக்க முயல்வது அவளது கண்களில் படாமல் இல்லை…

“யாரோட குழந்தையா இருந்தா உங்களுக்கு என்ன? ஏன் சிங்கிள் பேரன்ட்டா இருக்க கூடாதா? குழந்தைக்கு அப்பாங்கற உதவாத உறவை காட்டியே ஆக வேண்டுமா என்ன?”

கோபத்தில் வார்த்தையாடினாலும் அவளது போக்கிலும் வார்த்தைகளிலும் வெகு நிதானம் வந்து விட்டதை அவனால் உணர முடிந்தது…

வயது கூட முதிர்ச்சியும் கூடியாக வேண்டும் அல்லவா!

அவளது அந்த நிதானத்துக்கு காரணம் அவனே தானே!

அவன் என்ன கூறினாலும் நம்பி கொண்டு அவனையே சுற்றி வந்தவள் அல்ல இவள்! கூர்ந்து அவளை பார்த்தவனுக்கு இனியும் அவளிடம் தர்க்கம் புரிவது தேவையற்றது என்று உணர்ந்தான்…

மனைவியிடம் தர்க்கத்தில் வெற்றி பெறுபவர்கள் வாழ்வில் தோற்று விடுபவர்கள் என்ற வேடிக்கையான சீனப் பழமொழி அவனது கண்முன் வந்து அவனது முகத்தில் சிறு புன்னகையை வரவைத்தது…

தோளை குலுக்கி கொண்டு…

“ஓகே… மிஸ்ஸ்ஸ்ஸ்… ஆஆதிரை… நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லுங்க… ”

“எஸ்… பார்த்து முடித்து விட்டேன்… எக்ஸ்பென்டிச்சர் பிபோர் டேக்ஸ்… ” என்று ஆரம்பித்து அவள் குறித்து வைத்த குறிப்புக்களை கூறிக்கொண்டிருக்க… கூர்ந்து கவனித்து கொண்டான் கௌதம்…

வெகு தெளிவாக ஸ்டடி செய்திருந்தாள்… அடுத்த நாள் மீட்டிங் என்பதால் அதற்கு போவதற்கு முன் அவளது விஷயஞானத்தை சோதித்து விட வேண்டும் என்று கேள்வி கேட்க ஆரம்பித்தவன், அவளது வெகு தெளிவான பார்வையிலும் அக்கு வேறு ஆணி வேறாக விஷயங்களை பியைத்து, கொடுத்த வேலையை முடித்திருப்பது ஆகட்டும், ஆதிரையின் திறமையை எண்ணி அயர்ந்து தான் போனான்…

கல்லூரியிலும் குறும்புத்தனம் இருந்தாலும் பாடம் என்று வரும் போது அவளது தீவிரத்தை பார்த்தவன் என்பதால் அவளது இந்த தெளிவு அவனுக்கு பெரிய ஆச்சரியத்தை கொடுக்கவில்லை… அதே போல அவனது குறுக்கும் நெடுக்குமான கேள்விகளும் அவளுக்கும் பெரிய ஆச்சரியம் இல்லை… அவனது புத்திசாலித்தனமும் அவள் நன்றாக அறிந்தது தானே!

அதிலும் வியுகம் வகுப்பதிலும் அதை செயல்முறை படுத்துவதிலும் உள்ள அவனது புத்திசாலித்தனத்தை அவள் மிகவும் நெருக்கமாக உணர்ந்தவள் அல்லவா!

மிக மிக நெருக்கமாக!

அந்த நெருக்கம் என்பது எந்த அளவு என்பதை நினைக்கையில் அந்த ஏசி அறையிலும் குப்பென்று வியர்த்தது ஆதிரைக்கு!அந்த நினைவை தொடர்ந்து நிகழ்ந்த நினைவுகள் அழையாவிருந்தாளியாக வந்தமர… அவனது முகத்தை நேராக பார்க்க முடியாமல் தலை குனிந்தாள்!

இவ்வளவு நேரம் நேராக கண்களை பார்த்து பேசியவள் இப்போது தலை குனிந்து அமர்ந்திருந்த அந்த தோற்றம் அவனுக்கு குழப்பத்தை தந்தது… இருக்கையிலிருந்து மெதுவாக எழுந்து கொண்டவன்…

“ஆதிரை… ஆர் யூ ஓகே?” அவளது உடல்நிலை குறித்து பொறுப்பாக கேட்பதாக நினைத்து கொண்டு அவன் கேட்டு வைக்க… அந்த வாக்கியம் அவளை கொதிக்க செய்தது…

“நாட் அட் ஆல் மிஸ்டர் கௌதம்… எப்போது உங்களை பார்த்தேனோ அப்போதே எனது நிம்மதி சந்தோஷம் எல்லாம் போய்விட்டது… எனது ஆத்மா இறந்து ஐந்து வருடங்களாகி விட்டன… இப்போது இருப்பது வெறும் கூடு… அதுவும் பிருத்விக்காக மட்டுமே… அந்த கூட்டிற்கு என்னவானால் உங்களுக்கு என்ன?”

மனதில் சேர்த்து வைத்த கோபங்களும் குமுறல்களும் வார்த்தைகளாக வெடிக்க… அவளை மெளனமாக எதிர்கொண்டான் கௌதம்… ஆனால் வலிகள் என்பவை அவளுக்கு மட்டும் உரிதானவை அல்லவே!

“உங்களது முகத்தை திரும்ப பார்க்காத வரை நான் சற்று நிம்மதியாக இருந்தேன்… ஆனால் திரும்பவும் உங்களை… ச்சே… வெறுப்பாக இருக்கிறது… உங்களது முகத்தை பார்க்க வேண்டும் என்றாலே… உயிரோடு இருக்க கூட பிடிக்கவில்லை… பிருத்விக்காக… மட்டும்… ”

இறுக்கமான குரலில் கூறிக்கொண்டிருந்தவள் முடிக்கும் போது அவளையும் அறியாமல் குரல் உடைந்தது… கண்களில் நீர் சூழ்ந்தது… அதை கண்டவனால் மேலும் அழுத்தமாக நிற்க முடியவில்லை…

“ஆதி… ” அவளை நோக்கி நீண்ட கைகளை தடுத்தவள், தன்னை கட்டுப்படுத்த முயன்று தோற்று சட்டென எழுந்து வெளியே சென்றாள்!

அவள் போவதையே பார்த்து கொண்டிருந்த கௌதமுக்கு உள்ளே எதுவோ உடைந்து கொண்டிருந்தது!

*****

அந்த சுழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து விட்டத்தை பார்வையிட்டு கொண்டிருந்தான் கௌதம்… மகேஷிடம் தன்னை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டு அமர்ந்தவனின் மனதுக்குள் துக்கம் அலையாக அவனை அலைகழித்து கொண்டிருந்தது… கௌரவத்தை மீட்க அவனது காதலை பணயம் வைத்த பாவம் இன்னமும் அவனை தொடர்ந்து கொண்டிருந்ததை ரணமான மனதோடு பார்வையிட்டு கொண்டிருந்தான்… அவனால் சில தடைகளை உடைத்து கொண்டு அவனது காதலியை அணுக முடியவில்லை… அணுகியிருந்தால் ஒருவேளை அவனது காதல் காப்பற்றபட்டிருக்குமோ?

கண்களில் ஓரம் நீர் துளிர்த்தது!

முகத்தை அழுந்த துடைத்து கொண்டு நிமிர்ந்தான்… கதவை திறந்து கொண்டு ஆதிரை உள்ளே நுழைந்தாள்… அவளும் தன்னை சமன் படுத்தி கொண்டுவிட்டாள் போலும்… முகம் தெளிவாக இருந்தது… !

“சாரி பார் தி டிஸ்டர்பன்ஸ்… வில் கண்டினியு தி டிஸ்கஷன்… ”

உணர்வே இல்லாத முகத்தோடு மன்னிப்பு கேட்டுவிட்டு அவனது முகத்தை பார்த்தாள்… ஏனோ அந்த முகம் அவனது அன்னையை அவனுக்கு நினைவூட்டியது… சில நேரங்களில் அவரும் இதே போன்ற முகத்தோடு வலம் வந்ததை கண்டிருக்கிறான்… அதீதமான அழுத்தத்தின் போது இந்த பெண்கள் இப்படி மாறி விடுகிறார்கள் போல…

அவன் எதையும் பேசாமல் அவளையே பார்த்து கொண்டிருக்க… ஆதிரைக்கு சங்கடமாக இருந்தது… அவன் பார்த்த பார்வையில் இருந்த வெறுமை அவளை ஏதோ செய்தது…

“கௌதம்… ” மேலெழாத குரலில் அழைத்தவளை திடுக்கிட்டு பார்த்தான்… நினைவலைகள் அறுபட்டன… வெகு வருடங்களுக்கு பிறகான அழைப்பு! அவனுடைய மனதை பிசைந்தது… இழந்து விட்ட வாழ்க்கை தொண்டைக்குழியில் அடைப்பது போல் இருக்க… உணர்வுகளை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருக்க வெகுவாக பிரயத்தனப்பட்டான்…

கண்களை இறுக மூடி திறந்தவன் எதையும் வெளிப்படுத்திக்கொள்ளாமல்…

“எஸ் ஆதிரை… ப்ளீஸ் ப்ரோசீட் வித் யுவர் சஜஷன்ஸ்… ”

அடுத்தநாள் நடக்கவிருந்த வருடாந்திர ஷேர் ஹோல்டர்ஸ் ரீவியு மீட்டிங் பற்றி பேச ஆரம்பித்தவர்களுக்கு நேரம் வெகு விரைவாக பறந்தது… அந்த மீட்டிங்கில் மும்மொழியப்போகும் முக்கியமான தீர்மானங்களை பற்றி ஆதிரைக்கு அவன் கூறவில்லை… அதன் தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று அவனால் கணிக்க முடியவில்லை… அது வரும் போது வரட்டும் என்று விட்டுவிட்டான்…

பேசிக்கொண்டிருக்கும் போதே நேரத்தை பார்த்தவனுக்கு பிருத்வியை பார்க்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது புரிய,

“ஓகே மிஸ்ஸ்ஸ் ஆதிரை… என்னுடைய மகனை ஸ்கூலில் இருந்து அழைக்க வேண்டும்… சி யூ டுமாரோ… ” ‘மிஸ்’ஸில் அழுத்தம் கொடுத்து சிறு புன்னகையோடு கூறியவனை அதே பழைய எரிச்சலோடு பார்த்தாள்…

“தேவை இல்லாம என் பையனை குழப்பறீங்க… ” கடுப்பாக அவள் கூறுகையில் அவனுக்குள் பழைய குறும்பு தலைதூக்கியது… எழுந்து கைகளை இணைத்து நெட்டி முறித்து கொண்டே,

“எனக்கு அவன் தேவை… அதனால் தான் குழப்பறேன்… இதில் உனக்கு என்ன வந்தது?”

அவளிடம் ஏட்டிக்கு போட்டியாக பேசினாலும் அதில் சிறிதும் குத்தல் இல்லை என்பதை ஆதிரை உணர்ந்தாள்… ஆனால் அவளது கோபத்திலும் அர்த்தம் இல்லாமல் இல்லையே!… அவன் வந்தால் தான் உறங்குவேன் என்று அடம் பிடிக்கும் மகனை சீராட்டி சமாதானப்படுத்தி உறங்க வைப்பதற்குள் அவள் படும் பாட்டை அவன் அறிவானா?

“நைட்ல அவனை சமாதானம் செய்ய ரொம்ப கஷ்டமா இருக்கு… கொஞ்சமாவது புரிஞ்சுக்கோங்க… ” அவனிடம் வழக்காடி அவளுக்கும் அலுத்து விட்டது… சற்று மென்மையாக கூறினாலாவது புரிந்து கொள்வான் என்று நினைத்து கொண்டு அவள் கூற… கௌதமின் குறும்புத்தனம் முழுமையாக மீண்டிருந்தது!

“ஓகே… இன்னைக்கு நைட் பிருத்விகுட்டி என்கிட்டே இருக்கட்டும்… ” கண்களில் புன்னகை மின்ன கூறியவனை வெட்டவா குத்தவா என்பது போல அவள் பார்க்க…

“வாட்… என்ன சொல்றீங்க? அவன் என்னை விட்டுட்டு இருக்க மாட்டான்… ” அதிர்ச்சியில் எரிச்சலில் பல்லை கடித்து கொண்டு அவள் கூற…

“சரி… நீயும் வா… எனக்கு ஒன்னும் அப்ஜக்ஷன் இல்லை… ” இயல்பு போல கூறய கௌதம், வேண்டுமென்றே அவளை பார்க்காமல் மகேஷை இன்டர்காமில் உள்ளே அழைத்தபடி லேப்டாப்பை எடுத்து வைக்க ஆரம்பித்தான்… ஆதிரையால் கொதிப்பை அடக்க முடியவில்லை!

“எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி நீங்க சொல்வீங்க?” முகமெல்லாம் சிவந்து கடுகடுத்தவளை அலட்டி கொள்ளாமல் பார்த்த கௌதம்…

“இதற்கு எதற்கு தைரியம் வேண்டும் ஆதி? என் பையனோட அம்மாவை தானே அழைத்தேன்… எப்படி இருந்தாலும் இன்னைக்கு நைட் என்கிட்ட தான் இருப்பான்… என் மகன்!” ‘என் மகனில்’ அவன் கொடுத்த அழுத்தத்தில் இருந்தே அவன் மாற போவதில்லை என்பது புரிய , ஆதிரை ஓய்ந்து போனாள்!

“ஓகே… ஐம் லீவிங்… ” என்று கிளம்ப போனவன் அவளருகில் நின்று,

“ஒரு முக்கியமான விஷயம் மிஸ்ஸ்ஸ் ஆதிரை,… ” என்றவனின் முகத்தை குழப்பமாக பார்த்தாள் ,

“இனிமே ஆபீஸ் வரும் போது புடவை கட்டாதீங்க மேடம்… ” தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் மொட்டையாக கூறியவனின் கண்களில் கள்ளச்சிரிப்பு!

“ஏன்?”

“அங்கங்க கிளாமரா தெரியும்போது ஓவரா டிஸ்டர்ப் ஆகுது… ” குறும்பாக கூறியவனின் கண்கள் அவளை உரிமையாக மேய்ந்தன. முதலில் புரியாத பார்வை பார்த்தவளுக்கு புரிந்தபோதோ கோபம் எல்லை கடந்தது… முகம் சிவக்க…

“யூ இடியட்… ஸ்டுப்பிட்… ”

“தேங்க் யூ… தேங்க் யூ… ” இடை வரை குனிந்து நன்றி கூற… அதை பார்த்தவளுக்கு கோபம் மேலும் அதிகமாக, எதையாவது எடுத்து அடித்தேயாக வேண்டும் என்று தேடியவளுக்கு கிடைத்தது பேப்பர் வெய்ட்… ! அவளது ருத்திர அவதாரத்தை சற்று தள்ளி நின்று கொண்டு ரசித்தவன்…

“உனக்கு இல்லாத உரிமையா? வீட்டுக்கு வந்து நல்லா அடித்து கொள் ஆதி… ” வம்படியாக வம்பிழுத்தவன், இலவச இணைப்பாக ஒரு பறக்கும் முத்தத்தை அனுப்பி விட்டு பறந்தான்.