cp10

cp10

அத்தியாயம் பத்து

கல்லெறிந்து போகும்

குளத்தில் எழும்

நீரலைகளில்

முதல் ஆளாய்

கலைந்து போகிறாய்

நீ!

 -டைரியிலிருந்து

“டேய் ஒழுங்கா ஒரு வாய் வாங்கிடு… இல்ல அடி தான் விழும்… ”கையில் சிறு குச்சியை வைத்து கொண்டு மகனை மிரட்டி கொண்டிருந்தாள் ஆதிரை…

“மாத்தேன் போ… ” அவள் கைகளுக்குள் சிக்காமல் வீட்டை சுற்றி கொண்டிருந்தான் குட்டி பயல்… அவளுக்கு துணையாக பிருத்வியை கவனித்து கொள்ளும் அந்த சிறிய பெண்ணும், சமையலை கவனிக்கும் மரகதமும் பின்னே ஓடினாலும், தன்னை யாராலும் பிடிக்க முடியாது என்று போக்கு காட்டி கொண்டு ஓடி கொண்டிருக்க ஒரு கட்டத்தில் ஆதிரையின் பொறுமை அனைத்தும் காலியாகி கோபம் தலைக்கேற அவனை துரத்தினாள்…

விசாலாட்சி ஹாலில் அமர்ந்து மருமகளையும் பேரனையும் ரசித்து சிரித்து கொண்டிருக்க… அவரையும் பார்த்து முறைத்து வைத்தாள் ஆதிரை!

எப்போதுமே சாப்பிட படுத்துபவன் என்றாலும் சென்னை வந்தது முதல் அவனது பிடிவாதம் சற்று அதிகமாகி இருந்தது… அவளுக்குமே ஒரு சில எரிச்சல்களும் கோபங்களும் இங்கு வந்தது முதல் அதிகமாக அவ்வப்போது அதில் சிக்கி கொள்வது பிருத்வி என்றாகி விட்டது!

முடிந்த அளவு பிள்ளையின் மேல் கோபத்தை காட்டிவிட மாட்டாள் என்றாலும் மகனை பார்க்கும் போதெல்லாம் அவனது தந்தையை ஞாபகப்படுத்துவதால் அவன்மேல் பாயும் கோபத்தை அவளால் கட்டுபடுத்தவியலவில்லை!

அவளது கழுத்தை இறுக்கி கட்டி கொண்டு பிருத்வி உறங்கும் போது அதிர்ந்து போவாள்… அதே பிடிவாதமான அணைப்பு! சிறிதளவும் விட்டு கொடுக்க மாட்டேன் என்ற பிடிவாதத்தில் இறுகிய அணைப்பு… அதே அணைப்பை மகனிடம் கண்டபோதெல்லாம் மனம் வலித்தது!

சாப்பிட்டு முடித்தவுடன் ‘வாயை கழுவிட்டு வா பிருத்வி’ என்று சப்தமிட்டு முடிப்பதற்குள் ஓடி வந்து கழுவிய உதட்டை அவளது கன்னத்தில் தேய்த்து துடைத்து விட்டு போகும் போதெல்லாம் உறைந்து நின்றிருக்கிறாள்! இதிலுமா அவனது தந்தையை இவன் கொண்டிருக்க வேண்டும்? ஏதோ ஒரு காலத்தில் ரசித்து கரைந்து உருகிய நிமிடங்கள் விஷமாக தெரிந்தது ஆதிரைக்கு!

கண்ணீர் துளிர்க்க மகனை தேட… அவனோ மர செல்ப்பின் மேலேறி நின்று கொண்டு அழகு காட்டி கொண்டிருந்தான்… அடப்பாவி… இப்படியுமா வானரமாய் இருப்பாய்?என்று அவனை திட்டி கொண்டே அருகில் ஓடினாள் ஆதிரை… அவள் அருகில் வருவதற்குள்ளாக அவசரமாக இறங்கியவன் அவளது கைகளில் சிக்காமல் ஓட… ஆதிரையோடு கையில் உணவோடு மற்ற இருவரும் அவனை துரத்தி கொண்டு ஓட… சிக்கிவிடுவானா சில்வண்டு!

“டேய் குட்டி பிசாசு… இப்போ ஒழுங்கா பக்கத்துல வர்றியா இல்ல நான் வரட்டா?” கோபம் மூக்கின் நுனியில் நின்று கொண்டிருந்தாலும் அந்த சின்ன கண்ணன் சிக்கினால் தானே!

“வத முதியாது… நீயே புச்சுக்கோ… ” கிண்டலாக கூறி விட்டு அவளது கையில் சிக்காமல் ஓட… அவனது பின்னால் துரத்தியவள் சடன் ப்ரேக்கிட்டது போல அதிர்ந்து நின்றாள்…

எதிரில் ஜிகே!

அவனா? அவனேதானா? அவன் தானா? விதவிதமாக கேட்டு பார்த்து கொண்டாலும் அவனே தான் நின்றுகொண்டிருந்தது!

“ஹை அப்பாஆஆஆ… ” ஆதிரையின் கையை உதறி விட்டு கொண்டு அவனை நோக்கி ஓடிய பிருத்வியை இன்னமுமே அதிர்ந்து பார்த்தாள்!

எப்படி நடந்தது இது? எப்படி நடக்க முடியும்?

ஆதிரையோடு அதிர்ந்து நின்ற இன்னொரு ஜீவன் விசாலாட்சி!

எப்படி வருந்தி அழைத்தாலும்… உருகி தவித்தாலும்… கண் கொண்டு பார்த்திரவே பாத்திராதவன் ஜிகே! திரும்பியும் பாராதவன் இப்போது வீட்டிற்கே வந்திருப்பதை அவரால் நம்ப முடியவில்லை!

“கௌதம்… வா கண்ணா… ” அவனது கண்களுக்கு தன்னை நோக்கி பாய்ந்து வந்த பிருத்வி மட்டுமே தெரிந்தான்…

“குட்டி செல்லம்… ” பூவாக வந்து மேலே விழுந்தவனை வாரி கொண்டவனின் மனம் சொல்ல முடியாத பிணைப்பில் ஆழ்ந்தது! கடந்த கால கசப்பெல்லாம் மனதின் மேல் பாகத்தில் இருந்து மறைவது போன்ற பிரமை… அவனது மூக்கோடு மூக்கை உரசியவன்…

அழைத்த விசாலாட்சியை பார்த்து லேசான புன்னகை பூத்தான்…

அந்த நாளின் அடுத்த அதிர்ச்சிக்கு ஆளானார் அவர்!

“ப்பா… என்னோட ஹெலிகாப்டர் விங்க்ஸ் உதைஞ்சு போச்சு… அதுக்கு அம்மா அதிக்கறா… ” மிகவும் இயல்பாக அவனிடம் ஒட்டி கொண்டு ஆதிரையை போட்டு கொடுக்க… அவனை இறுக்கி அணைத்து கொண்டான்!

“அவ கிடக்கறா… உனக்கு எத்தனை ஹெலிகாப்டர் வேணும்? நான் வாங்கி தரேன் செல்லக்குட்டி…” பட்டு கன்னத்தில் முத்தமிட்டு கொஞ்சியபடி அவன் கூற… ஸ்மரணை வரபெற்ற ஆதிரைக்கு உள்ளுக்குள் எரிந்தது! அவனிடமிருந்து பிருத்வியை பிடுங்கி கொண்டு கண் காணாமல் ஓடி விட வேண்டும் என்பது போன்ற உணர்வு!

இவனை பார்க்கவே கூடாது என்பதற்காகத்தானே இந்த ஐந்து வருட அஞ்ஞான வாசமும்! வந்தவுடனே இது வரை தனக்கு ஒரே சொந்தமாக இருந்த மகனையும் அவன் புறம் இழுத்து விட்டிருக்கிறானே… எனக்கென்று யாருமே இல்லையா? எப்போது நடந்தது இது?மனம் குமைந்தது! தனக்கு சொந்தமானவனை… சொந்தமாக பார்க்க முடியாத காரணத்தால்… சொந்தமில்லாத காரணத்தால்… சொந்தமானவர்களையும் சொந்தமாக நினைக்கவில்லை மனம் என்பது அப்போது புரியவில்லை அவளுக்கு!

“அவனை கீழ இறக்கி விடு… ” மிக மிக கடுகடுப்பான குரலில் ஆதிரை அவனிடம் கூற… அவளை சற்றும் கண்டுகொள்ளாமல் விசாலாட்சியை பார்த்து…

“அவர் எங்க? ஏதோ பேசணும்ன்னு கூப்பிட்டார்… ”அவனிடம் பேச பயம் இருந்தாலும் மகனுக்கு அவனது மகனிடம் இருந்த நெருக்கம் அவருடைய மனதுக்கு நிறைவை தர… அந்த அழகான காட்சியை கண்களால் நிரப்பி கொண்டு நின்று கொண்டிருந்தவரை இவ்வுலகுக்கு அழைத்து வந்தது கௌதமின் அழைப்பு!

அப்பாவென்று அழைக்க முடியாதா என்று கேட்க நினைத்தவரை எப்போதும் போல கட்டி போட்டது அவனது உரிமையற்ற பார்வை…

“அவர் சாமி கட்டுல தான் இருக்கார் தம்பி… ” அந்த வாக்கியத்தை முடிப்பதற்குள்ளாக அவன் மலையேறி விடுவானோ என்று பயந்து கொண்டே கூற… அவனோ மகன் அவனது கையில் இருக்க உலகத்தையே மறந்து இயல்பையும் மறந்து இருந்தான்!

“அவனை கீழ இறக்கி விடுன்னு சொல்றேன்… ” அவளை கண்டுகொள்ளாமல் விசாலாட்சியிடம் பேசி கொண்டிருந்த ஆத்திரத்தை குரலில் காட்டிய ஆதிரையை நீ யார் அதை சொல்ல என்பதை போல பார்த்து வைத்தான்!

“ஏன்?” ஒற்றை வார்த்தையில் கேள்வி கேட்டவனை பார்த்து கடுகடுத்தது மனம்!

“ஏன்னா அவன் என் பையன்… ”அதே கொதிப்பில் வார்த்தை அவளிடமிருந்து வர…

“நான் இல்லாம தான் வந்துட்டானா?” அவளது கொதிப்பை அவளுக்கே திருப்பியளித்து விட்டு பூஜை கட்டை நோக்கி போனவனை மறித்தாள் ஆதிரை…

“இதை சொல்ல உனக்கே வெட்கமா இல்லையா?” கோபம் அதிகபட்ச அளவை அடைந்திருக்க… விசாலாட்சிக்கு உள்ளுக்குள் பதறியது… இவள் எதையாவது கூறி மலையிறங்கியவனை மீண்டும் மலையேற வைத்து விட போகிறாளோ என்று!

“ரெய்டுக்கு வந்த ஆபீசர்ஸ் கிட்ட உன்னை என் ஒய்ப்ன்னு சொன்னபோது உனக்கில்லாத வெட்கம் எனக்கு மட்டும் எதுக்கு?”

“நான் சொல்ல கிடையாது… எனக்கு சொல்லனும்ன்னு அவசியம் கூட கிடையாது… ” எந்த கேள்வியை எதிர்கொள்ள பயந்தாளோ அதை அவன் கேட்டுவிட… ஆதிரைக்கு கேவலமாக இருந்தது!… உள்ளே சென்று விட்ட குரலில் அவள் கூறிய விளக்கத்தில் அவளை கூர்மையாக நோக்கியவன்…

“நீ அந்த இடத்துல தானே இருந்துதிருக்க… உன் முன்னாடி தானே சொன்னான்… இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே… இல்லைன்னா… ”

என்று கூற வந்தவன் சட்டென்று நிறுத்தி அவளை பார்க்க… அவளுக்கு பூமிக்குள் புதைந்து போய் விட்டால் தேவலாம் என்றிருந்தது… அவன் கூற நினைத்த வார்த்தைகளை உணர்ந்த போது! என்றைக்கும் இவன் வார்த்தைகளை கொண்டு அவளை நோகடிப்பதை விட்டுவிட போவதில்லை… இறந்து விட்டால் கல்லறையையும் துரத்துமோ இவனது வார்த்தைகள்?

“ச்சே… நீ ஒரு ராட்சசன்… ” கோபத்தில் கண்களில் கண்ணீர் சூழ பார்க்க… முயன்று அடக்கினாள்! இவன் முன் அழுவதா?

அவளது கோபத்தை சற்றும் கண்டுகொள்ளாமல் அவனது மகனை தூக்கி கொண்டு நடக்க… ஆதிரைக்கு பற்றி கொண்டு வந்தது… பிருத்வி அவனை அப்பாவென அழைத்தது வேறு அவளது கோபத்தை அதிகப்படுத்தியிருக்க…

“அவனுக்கு அப்பான்னு சொல்லி கொடுத்தியா?”கண்களில் நெருப்பு பறக்க அவனை பார்த்து கேள்வி கேட்க…

“அதுல உனக்கென்னடி வந்துது? என் பையனுக்கு நான் சொல்லி தரேன்… ” அதே பகையோடு அவன் மறுமொழி கூற… மனதை அறுத்து கொண்டிருந்த பழைய நினைவுகள் அவளை துண்டாடி கொண்டிருந்தன!

“என் பையன் என் பையன்னு சொந்தம் கொண்டாடிகிட்டு இருக்கியே… நீ தான் அவன் அப்பான்னு நான் தான் சொல்லனும்… ” அவளது இந்த வார்த்தையில் சற்றும் பாதிக்கப்படாமல் ஜிகே பார்க்க… விசாலாட்சி அதிர்ந்து பார்த்தார்…

“ஆதி… ” கோபமாக அவளை அதட்ட… ஜிகே அலட்டிகொள்ளாமல்…

“ஒரே ஒரு ப்ளட் டெஸ்ட் மட்டும் போதும்… உன் தயவே தேவையில்லை… வாயை மூடிகிட்டு போனா என் மகனை விட்டுட்டு போவேன்… ரொம்ப ஆடிகிட்டு இருந்த… இப்படியே தூக்கிட்டு போய்டுவேன்… உன்னை விட எங்கம்மா இவனை அழகா வளர்ப்பாங்க… ”

“ஆமா நல்லா வளர்ப்பாங்க… உன்னை வளர்த்து வெச்சு இருக்கங்களே… அதுலயே தெரியல… ” மனதுக்குள் முனகி கொண்டவளுக்கு அதை வெளியே கூறும் தைரியம் வரவில்லை… அவனது தாயை பற்றிய விமர்சனத்துக்கு எப்படி மறுமொழி வந்து விழும் என்பதை உணர்ந்தவளால் அதை செய்ய முடியுமா?

“பின்கட்டு வழியா வர்றதை விடவே மாட்டியா நீ? நேர்மையா இருக்கவே தெரியாதா?” அவனை கோபமாக கேட்டாலும் அதில் இருந்த வலியை அவள் உணரும் முன்னே அவன் உணர்ந்தான்… அவனுக்குமே வலித்தது!

அவளை கூர்மையாக பார்த்தவன்…

“சுற்றி இருக்கவங்க நேர்மையா இல்லாதப்போ நான் நேர்மையா இருந்து என்ன யூஸ்? நான் இவ்வளவுதான்… இதற்கு மேல உன்கிட்ட எனக்கு பேச தேவை இல்லை… நீ எனக்கு தேவையும் இல்லை… ”

அதற்கு மேல் பேச ஒன்றுமில்லையென பிருத்வியை முத்தமிட்டு அவளிடம் விட்டுவிட்டு அவன் செல்ல…

மேலே அவனது அறையிலிருந்து பார்வையிட்டு கொண்டிருந்த வருணின் இறுகிய முகத்தில் சிறு புன்னகை மலர்ந்தது… ஆனாலும் வலித்தது!

செல்பேசி அழைக்க… அவனது புன்னகை விரிந்தது!

அழைத்தது ஸ்ருதி!

*******

சிதம்பரத்தின் முன் அமர்ந்திருந்தனர் ஜிகேவும் வருணும்!

அசாத்திய அமைதி நிலவ… அதை உடைக்க யாரும் பிரியப்படவில்லை… உடைக்கும் தைரியம் சிதம்பரத்திற்கும் வரவில்லை!

ஜிகே எங்கோ பார்க்க… வருணும் வேறு புறம் பார்க்க… அந்த சங்கடமான நிமிடங்களை சிரமமாக நகர்த்தி கொண்டிருந்தனர்!இருவருமே அந்த சந்திப்பை விரும்பவில்லை ஆனாலும் சிதம்பரம் பிடிவாதமாக அழைத்திருந்தார்… பலமுறை அழைத்து கௌதமையும் சம்மதிக்க வைத்திருந்தார்… அவருமே அறிந்திருந்தார்… தன் மகனை இழுத்து வந்தது அவன் மகன் என்று… அவரது இப்போதைய துருப்பு சீட்டு பிருத்வி என்பதும் அவர் அறியாதது அல்ல…

“சோ… ரெண்டு பேரும் என்ன முடிவு பண்ணிருக்கீங்க?” இருவரையும் பொதுவாக பார்த்து சிதம்பரம் கேட்க… ஜிகே அவரை பார்க்க விரும்பாமல் திரும்பி கொள்ள… வருண் கேள்வியாக அவரை பார்த்தான்…

“ரெண்டு பேருமே இப்படி முட்டி மோதிட்டு இருந்தா நல்லாவே இல்லப்பா… நான் உங்க ரெண்டு பேரையும் ஒன்னாத்தான் பார்க்கறேன்… ” என்று நிறுத்த… வருண் முகம் கோபத்தில் சிவந்தது…

“நான் கிளம்பறேன்ப்பா… ” என்று எழுந்து கொள்ள பார்க்க…

“வருண்… உட்கார்… ” கறாராக அவர் கூற… முகத்தை சுளித்து கொண்டே அமர்ந்தான்… ஜிகே மெளனமாக இருந்தான்… அவனது பார்வையெல்லாம் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த பிருத்வியின் மேல் மையம் கொண்டிருந்தது… பட்டாம்பூச்சி பிடிக்கவென அவன் ஓட… அவனுக்கு பின்னே இவன் பார்வை ஓடியது!

“ப்பா இப்போவும் நான் சொல்றது வேற எதுவும் இல்ல… ஒன்னு எனக்கு அப்பாவா இருங்க… இல்லைன்னா இவனுக்கு அப்பாவா இருங்க… ரெண்டு பேரையும் ஒரே மாதிரி பார்க்கறேன்னு சொல்றது எனக்கு பிடிக்கலை… ” என்று கூறி இடைவெளி விட… சிதம்பரம் எதையோ சொல்ல வர… அவரை கைகளால் தடுத்து நிறுத்தி…

“ப்பா உங்க சுதந்திரத்துல நான் தலையிடவே மாட்டேன்… இன்னொரு வீடு உங்களுக்கு இருக்குன்னா அதை பற்றி எனக்கு கவலை இல்ல… ஆனா எப்போவும் என் அப்பாவை நான் பங்கு போட்டுக்க முடியாது… ” சிதம்பரத்திற்கு வலித்தது… வருணும் பிடிவாதக்காரன்… கௌதமும் பிடிவாதக்காரன்… ஆனால் தற்போது கௌதம் சற்று இளகியிருக்கும் நேரத்தில் இவன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறானே என்று நொந்து கொண்டார்…

“எனக்கு வள்ளியம்மை வேற… இவன் வேற… வள்ளியம்மை கூட உங்களை பங்கு போட்டுக்க முடியும்… ஆனா இவன்… ” கோபத்தில் வார்த்தை தடிக்க ஆரம்பிக்க… சரேலென திரும்பினான் ஜிகே!

“உன்னோட நான் பங்கு போட்டுக்கவே இல்லையே ராமநாதன் குமாரசுவாமி… எனக்கு தேவையே இல்லைன்னு சொல்லிட்டேன்… உன் அப்பாவோட பெர்சனல் விஷயம் எனக்கு அவசியம் இல்லை… ஆனா ஒரே ஒரு விஷயம் என்னன்னா… நான் உன்னை விட எட்டு மாசம் மூத்தவன்… அதாவது உங்க அம்மாவுக்கு கல்யாணமாகி ரெண்டாவது மாசத்துல நான் பிறந்தவன்… அப்போ எங்க அம்மா ரெண்டாவது வீடா இல்ல உங்க அம்மா ரெண்டாவது வீடா?”

முகத்தில் சற்றும் உணர்வை காட்டாமல் வருணை கிழித்தெறிந்து விட்டு பட்டென எழுந்தான்…

திரும்பியும் பாராமல் வெளியேறினான்…

error: Content is protected !!