cp15

cp15

அத்தியாயம் பதினைந்து

வேறென்ன

முத்தமிட்டு முடித்து வை

என் சடலம் மூடும் பெட்டிக்கான

மரம் வெட்டும் ஓசை கேட்கிறது…

 –டைரியிலிருந்து

செயின்ட் லாரன்ஸ் பள்ளியை சார்ந்த மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தான் கௌதம்… பெரிய அளவில் அடிபடவில்லையென்றாலும் அடி பலமே! டிரெஸ்ஸிங் செய்துவிட்டு எலும்பு முறிவு ஏதேனும் இருக்கிறதா என்று டியூட்டி டாக்டர் பரிசோதித்து கொண்டிருக்க… மனதளவில் சிவகாமி அத்தை ஏற்படுத்தி விட்டு போன காயத்திற்கு ஏதேனும் மருந்து இருக்கிறதா என்று சுற்றிலும் பார்த்து கொண்டிருந்தான்… இதழோரத்தில் கசப்பான புன்னகை!

“லுக் மேன்… பேண்டேஜ் போட்டு இருக்கு… ஸ்ட்ரைன் பண்ணாம பார்த்துக்கோ… ” மருத்துவர் அவரது வேலையை முடித்து விட்டு போக… உடன் இருந்த சௌமினியும் சாண்டியும் அவனை தாங்கி பிடித்து அழைத்து கொண்டு வந்தனர்…

“விடு சௌம்ஸ்… இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை… ”

“சரி வேறென்ன தான் உனக்கு பெரிய விஷயம்?” அலட்டி கொள்ளாமல் சௌமினி கேட்க… அவனுக்கோ அதுவுமே எரிச்சலாக இருந்தது!

மனதை அரித்து கொண்டிருந்த காயங்களின் தாக்கத்தில் தனிமையை தேட… சாண்டியும் சௌமியும் விடுவேனா என்று அவனை ஒட்டி கொண்டு திரிய… எரிச்சலில் சௌமியிடம் எரிந்து விழுந்தான்… ஆனால் இதற்க்கெல்லாம் அசந்து விடுபவளா சௌமி?

“இல்ல சௌம்ஸ்… நானே மேனேஜ் பண்ணிக்குவேன்னு சொன்னேன்… அவ்வளவுதான்… ”

“நீ மேனேஜ் பண்ணிக்குவ தான்… இல்லைன்னு சொல்லலையே… என்னால முடிஞ்ச ஹெல்ப் அவ்வளவுதானே… ”

“ப்ச்… யாருமே வேணாம்… ப்ளீஸ்… சாண்டி நீயாச்சும் புரிஞ்சுகோ… போ கிளாசை அட்டென்ட் பண்ணு… ”

“இல்ல கௌஸ்… இன்னைக்கு மட்டும்… ” என்று அவனிடம் மறுத்து கூற வந்த சாண்டியை ஒரே வார்த்தையில் அடக்கினான் கௌதம்…

“சாண்டி… ”

“ஓகே ஓகே டியுட்… டேக் கேர்… சௌம்ஸ் வர்றியா?”

“நோ சாண்டி… நீ போ… ” அவனை அனுப்பி விட்டு கௌதமின் இடையை இடது கையால் தாங்கி கொண்டாள்… அவனை அழைத்து போவதற்காக!

“லூசு… உனக்கொரு தடவை சொல்லனுமா?”

“நீ எப்படி வேணும்னாலும் சொல்லிக்கடா… என் மனசுக்கு படுது… யூ ஆர் நாட் நார்மல்… இப்போ உன்னை தனியா விட முடியாது… ”

இயல்பாக கூறி அவனை அமர செய்து விட்டு கேர் டேக்கர் கொடுத்த மருந்துகளை வாங்கி கொண்டு அவனை நோக்கி வந்தவளை ஆச்சரியமாக பார்த்தான் கௌதம்… இந்த மனசாட்சியிடம் எதையும் மறைக்க முடியாது போலவே… என்று நினைத்து கொண்டவனுக்கு அந்த நிலையிலும் புன்னகை அரும்பியது!

“என்னடா தனியா உட்கார்ந்து சிரிச்சுட்டு இருக்க?”

“ம்ம்ம்… இப்போ உன் ஆள் வந்தா எப்படி இருக்கும்ன்னு நினைச்சு பார்த்தேன்… ” என்றவனது முகம் சிரிப்பிலிருந்து மீளாமல் இருக்க… அவள் ஆச்சரியமாக அவனை பார்த்தாள்… தனக்கு தெரியாமல் தனக்கு ஒரு ஆளா?

“ஹஹா… யாருடா அது?” குரலில் கேலியோடு ஆச்சரியமும் மிகுந்திருந்தது!

“வேற யாரு? மிஸ்டர் துருவாசர்… உன்னோட வருண் தான்… ” நக்கலாக சிரிக்க… சௌமினி அவனை முறைத்தாள்…

“டேய் மூதேவி… அவன் என் ஆளா… பிச்சு போடுவேன்… ஷப்பா இந்த ரெண்டு எருமைங்க தொல்லையும் தாங்க முடியலையே ஆண்டவா… ” நொந்து போய் ஆண்டவனை அழைத்தவளை பார்த்து சிரித்தான்…

“பிசாசு… அந்த நிஷாந்த் கிட்ட நானே சொல்றேன்… இனிமே இப்படி அரைகுறையுமா உடைக்காதே… முழுசா உடைச்சு வைன்னு… ” வாய் அவனை திட்டி கொண்டிருந்தாலும் அவனை கைபிடித்து அழைத்து வந்தவள் வெளியே இருந்த பார்க் பெஞ்சில் அமர செய்தாள்… ஒரேடியாக நடக்க செய்தாலும் வலி வந்துவிடுமே என்ற எண்ணத்தில்! அவளது பதிலை கேட்டதில் புன்னகை மலர்ந்தது அவனது முகத்தில்…

“சௌம்ஸ்… பசங்க மனசு பசங்களுக்கு தான் தெரியும்… ”என்று கூறி சிரிக்க… அவனது தலையில் மட்டென்று ஒரு அடியை வைத்தாள்…

“இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியல… ”

“சௌம்ஸ் செல்லம்… கண்டிப்பா ஒரு நாள் வருண் வி டேக்கு ரோசை நீட்டி ப்ரொபோஸ் பண்ணலை என் பேரை மாத்தி வெச்சுக்கறேன்… சரியா?” என்று சிரித்தவன்… சற்று இடைவெளி விட்டு…

“அவன் கண்ல தெரியுதுடா… ” சற்று தீவிரமாக அவன் கூற… சௌமினிக்கு ஏனோ அந்த நினைவு உள்ளுக்குள் ஐஸ்க்ரீமாய் கரைந்தது! இதுவரைக்குமே அது போன்ற பேச்சுக்கள் வருணிடம் பேசியதில்லை என்றாலும் அவனை மிகவும் பிடிக்கும்… அவனும் அது போலத்தானோ என்ற சந்தேகம் அவளுக்கு உண்டு என்பதால் அதற்கு பதில் பேச முடியவில்லை…

பெஞ்சில் அமர்ந்தவன் உடன் அமர்ந்த சௌமினியின் கையை இறுக்கமாக பிடித்து கொண்டான்… அதுவரை இருந்த லேசான உணர்வு மாறியது! மனம் நேற்றைய காயங்களை கீறி பார்த்து கொண்டிருந்தது…

“ஆனா வேணாம் சௌம்ஸ்… ” மிக தீவிரமான குரலில் கூற… சௌமினி அதிர்ந்து அவனை பார்த்தாள்…

“ஏன்?”

“ஏன்னா நீயாவது உன் பையனோட அப்பா இவன் தான்னு சமுதாயத்துக்கு அடையாளம் காட்டனும் இல்லையா?”

“கௌதம்… ” அவளது குரலில் இருந்த அதிர்வை வெகு இயல்பாக உள்வாங்கிகொண்டவன்… அவளது கைகளை தன்னுடையதோடு கோர்த்து கொண்டு…

“மனசு வலிக்குது சௌமி… ரொம்ப வலிக்குது… ”

அவனது குரலிலிருந்த வலியை உணர்ந்தவளுக்கு மனதை பிசைந்தது… அவள் தான் அறிவாளே… அதன் காரணத்தை! நண்பனின் இருண்ட பக்கத்தை அறிந்த ஒரே நபர் சௌமினி மட்டும் தானே… ஆனால் அதையுமே மறந்து கலாட்டா கேலிகளில் தன்னை தொலைத்து அந்த இருள் சற்றும் அணுகாமல் தன்னை பாதுகாத்து கொள்பவனாயிற்றே தன் நண்பன்… இப்போது என்னவாயிற்று என்று கவலையாக அவனை பார்த்தாள்!

“என்னாச்சுடா?”

“சிவகாமி அத்தை வந்திருந்தாங்க… ” ஒற்றை வரியாக முடித்து விட்டு தொலைவில் தெரிந்த மலைமுகுட்டை பார்க்க… எதுவோ பிரச்சனை ஆகியிருக்கிறது என்பதை புரிந்து கொண்டவளுக்கு நண்பனை நினைத்து மனம் குமைந்தது… ஏன் இவன் மட்டும் இப்படி ஒரு வரத்தை வாங்கி வந்திருக்கிறான்?

“என்ன சொன்னாங்க?”

“எனக்கு மான ரோஷமே இல்லையாம்… அப்பாவோட தலைல மிளகாய் அறைக்கறேனாம்… எங்க அம்மா வப்… ”என்று கூற வந்து கூறவே முடியாமல் குரல் உடைய… … நிறுத்தி இடைவெளி விட்டான்…

சௌமினிக்கு என்ன சொல்லி தேற்றுவது என்றே தெரியவில்லை… மீறி போனால் பதினேழு வயது… சூழ்நிலையை புரிந்து கொள்வதே பெரிய பாடாக இருக்கும் போது அதை தான்டி தேற்றுதல் என்பது? அனுபவங்கள் தங்களது வயதுக்கு மீறியதாக இருந்தாலும் கௌதம் அதை எதிர்கொண்டே ஆக வேண்டிய கட்டாயம்… அவனது தலையை தன் தோளில் சாய்த்து கொண்டவள் இதமாக தலையை வருடி கொடுக்க துவங்கினாள்…

“கண்டபடி பேசிட்டாங்க… ” வார்த்தைகளில் வலி மண்டி கிடக்க…

“ப்ச்… அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்டா… அதை விட்டுடு கௌதம்… ”

“ஏன் சௌமி… அவர் என் அப்பா இல்லையா? யார் மூலமா நான் உலகத்துக்கு வந்தேன்? உனக்கு உன் அப்பா செய்து கொடுக்காம வேற யார் செய்வாங்க? என்னோட தப்பு இங்க என்ன இருக்கு சௌமி?” அவனது உணர்வுகளை எல்லாம் கொட்டி முடிக்கட்டும் என்று மெளனமாக அவனை பேச விட்டிருந்தாள் சௌமி!

‘என் விதி அப்போதே தெரிஞ்சுருந்தாலே

கர்ப்பத்தில் நானே கலைஞ்சிருப்பேனே… ’

அவனது காதில் அவன் மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டிருக்கும் பாடல் ஒலித்தது… அவனது காயத்தை மேலும் கீறி விட்டு சென்றது…

காயத்தில் ரத்தம் வருவது நின்று போய் இறுக ஆரம்பித்தது!

மனதும் இறுக ஆரம்பித்தது… டீனேஜ் பையனின் முதிர்வில்லாத நிலையிலிருந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல ஆரம்பித்து இருந்தான் கௌதம்… தன்னை தானே செதுக்கி கொள்ள துவங்கி இருந்ததை இருவருமே அப்போது உணரவில்லை…

“என் அம்மாவோட நிலைமை உனக்கும் வர கூடாது சௌமி… அவங்க குடும்பத்துல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா சொந்த அத்தை மாமா வகைல மட்டும் தான் கட்டுவாங்க… சொத்து வெளிய போக கூடாதாம்… எவ்வளவு பெரிய குடும்பமா இருந்தாலும் அவங்க பாரம்பரியம்ன்னு இருக்காம்… அந்த சுழல்ல நீ எதுக்கு மாட்டிக்கனும் சௌமி… நீயாவது நிம்மதியா இருந்துட்டு போயேன்… ”

தோழி தெரியாமல் அதில் காலை வைத்து விட்டு அந்த புதைகுழியில் மாட்டி கொள்ள கூடாதே என்ற தவிப்பில் அவன் கூறி கொண்டிருக்க… ஏற்கனவே அதில் சிக்கியிருந்த அவளது மனது தவித்தது… தொண்டைக்கும் வயிற்றுக்கும் இடையில் ஏதோ ஒரு உருண்டை உருண்டது… குரல் வெளியேற முடியாமல் தவித்தது!

“வருண் அப்படி இல்லடா… ”தவிப்பாக அவள் கூற… அவளை கூர்ந்து பார்த்தான் கௌதம்…

“சௌமி… மகாபாரதம் பார்த்து இருக்க தானே… ?”என்னவென்று புரியாமல் அவள் தலையாட்ட…

“அதில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதா உபதேசம் செய்வாராம்… எதுக்காக? போர் முனைல தன்னை எதிர்த்து நிற்கற தன்னோட உறவினர்களை பார்த்து கலங்கி நின்ன அர்ஜுனனை அந்த பாசத்துல இருந்து விடுவிக்க உபதேசம் செய்வார்… அத்தனையும் கேட்டுட்டும் கடைசில தன்னோட உறவினர்களை எதிராளியா பார்க்க முடியாம அர்ஜுனன் கலங்கி நிற்பான்… அப்போ அர்ஜுனன் மேல ரெண்டு சொட்டு கண்ணீர் வந்து விழுமாம்… பார்த்தா கிருஷ்ணர் அழுதுட்டு இருப்பாராம்… அர்ஜுனன் என்னனு கேக்க… அப்போ கிருஷ்ணர் சொல்வாராம்… ” என்று இடைவெளி விட்டவன்…

“இந்நேரம் வரைக்கும் உனக்கு செய்த உபதேசம் எல்லாம் வீணா போச்சேன்னு… ” என்றவன் தன்னுடைய கவலையை மறந்து சிரிக்க துவங்கினான்…

அவனை பார்த்து முறைத்த சௌமினியை தோளோடு சேர்த்து அணைத்து கொண்டவனுக்கு உள்ளுக்குள் ஏதேதோ பயம் தோன்றினாலும் வருண் மேல் நம்பிக்கை இருந்தது… தந்தை செய்த தவறை தனயன் செய்ய மாட்டான் என்ற நம்பிக்கை!

இருவரது நெருக்கத்தையும் சற்று தொலைவிலிருந்து பார்த்த வருணுக்கு கோபத்தில் கடுத்தது… சௌமினியை இழுத்து கொண்டு எங்காவது கண்காணா தேசத்திற்கு போய்விட வேண்டுமென்பது போல…

ஒரு பக்கம் கௌதமிடம் அவளுக்கு உள்ள நெருக்கம் அவனது கோபத்தை விசிறி விட்டது என்றால் காலையில் சிவகாமியின் அத்தையின் எச்சரிக்கை பெரு நெருப்பை மூட்டி விட்டது!

“இங்க பாரு வருண்… பொண் பிள்ளைங்க கூட பழக வேண்டியதுதான் இல்லைன்னு சொல்லலை… ஆனா ஒரு அளவுக்கு மேல போய்ட கூடாது… நாளைக்கு அப்பாவை போல பிள்ளைன்னு பேர் வந்துட கூடாது… உனக்காக ஆதி இருக்கா… அதை எப்போவுமே நினைப்புல வெச்சுக்கோ… ”

அவர் ஆதிரையை சுட்டி காட்டி கூறிய போது என்னவென்று தெரியாத ஒரு உணர்வு அவனை தாக்கி செல்ல… அவனது கண்களில் சௌமினியை தவிர வேறு எதுவுமே தெரியவில்லை!

*******

“வாவ் எவ்வளவு அழகு பாரேன் வருண்… ” தன்னை தீண்டி சென்ற மேகங்கள் சிலுசிலுவென குளிரை விதைக்க கைகளை இறுக்கமாக கட்டி கொண்டாள்…

வாரக்கடைசி அவுட்டிங்கை தன்னோடுதான் கழிக்க வேண்டுமென வலுகட்டாயமாக சௌமினியை இழுத்து வந்திருந்தான்… க்லென் மார்கன் தேயிலை தோட்டங்களுக்கு! பைகாரா இங்கு ஏரியாக படர்ந்து விரிந்திருக்க… சுற்றிலும் யூக்கலிப்டஸ் மரங்களோடு அழகு அள்ளியது!

“ஏன்… என் கூட உன்னால அவுட்டிங் வர முடியாதா?” அன்று அவனது கேள்வியிலேயே கோபம் கரைபுரண்டோட அவனை நேருக்கு நேராக பார்த்து மறுக்க இயலாமல் வேறு பக்கமாக பார்த்தாள்… என்றுமே இல்லாத தயக்கம் தயக்கம் அவளை தடுத்தது…

“இல்ல வருண்… அப்படி எல்லாம் கிடையாது… ”

“அப்போ ஏன் வர மாட்டேங்கற?” அவனது கடுகடுப்பான கேள்விக்கு என்ன விடையளிப்பது? காரணம் அவளாகவே இருக்கும் போது!

“உனக்கு கௌதம் மட்டும் தான் முக்கியம் இல்லையா… ”அவனது இயல்பான குணம் தலைதூக்க… சௌமினி தனக்குள் சிரித்து கொண்டாள்…

“எனக்கு ரெண்டு பேருமே தான் முக்கியம் வரு… ”

“இன்னும் பத்து நாள் தான் இருக்கு… நம்ம ஸ்கூல் டேஸ் முடிய… அப்புறம் ப்ராக்டிகல்ஸ்… எக்ஸாம்ஸ்… ப்ளா ப்ளா… ப்ளீஸ் செமி புரிஞ்சுக்கோ… ” என்று பலவாறாக பேசி அவளை கரைத்து க்லென் மார்கன் அழைத்து வந்திருந்தான்…

ஏரிக்கரையில் ஓரமாக நடந்து கொண்டிருந்தவளின் அந்த குட்டியூண்டு போனிடேயில் அவளது தலை அசைவிற்கு ஏற்ப அசைந்தாட… த்ரீ போர்த் ஜெக்கிங்க்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து முயல் குட்டியாக தாவிக்கொண்டு நடந்தவளை பார்த்து ரசித்து கொண்டிருந்தான் வருண்! வழுவழுவென வாழை தண்டாக கால்கள்… பளீரென்ற வெண்மையில் மின்ன… அவனது மனம் நிலையில்லாமல் தவித்து கொண்டிருந்தது!

“முடி வளர்த்துட்ட போல இருக்கே… நான் சொன்னதுனால தானே… ”சிரித்து கொண்டே வருண் கேட்க… அலட்சியமாக முடியை பின்னால் தள்ளி விட்டு…

“உனக்கு ஏன்டா இவ்வளவு திமிர்? நானாத்தான் வளர்த்தேன்… ஏன் நாங்கல்லாம் வளர்க்க மாட்டோமா?” உதட்டை சுளித்து கொண்டு அவள் கேட்க… அந்த போனியை பிடித்து ஆட்டி விட்டு…

“தாராளமா வளர்த்துக்கோங்க ராணியம்மா… எப்படியோ நீங்க ஒரு பொண்ணா ஆனா சந்தோஷம்… ”

“ஏன்… இப்போ என்ன? நான் பையனா?” கேலியாக அவள் கேட்க… அவனது முகம் மாறியது… கண்களில் குறும்பு மின்ன…

“எனக்கு தெரியல செமி… நான் வேணும்னா செக் பண்ணி சொல்லட்டா?”

“அதை எப்படி செ… ” என்று ஆரம்பித்தவள் உதட்டை கடித்து கொண்டு நிறுத்தி கொண்டாள்… சூடான கன்னங்களோடு அவனை பார்த்து முறைத்தாள்…

“ஆஹா அனலடிக்குதே… ” சிரித்து கொண்டே வருண் அவளை வார… அவனது அந்த புதியமுகம் சௌமினிக்கு ஆச்சரியத்தை கொடுத்தது… அவனது பார்வை அவளுக்கு வெட்கத்தை உணர்த்தியது!

சிவந்த அவளது கன்னங்களை தொட்டு பார்க்க வேண்டும் போல இருந்தது வருணுக்கு… அவனுடைய நினைவிலிருந்து அவனது குடும்பமும் அதன் ரூல் புக்கும் அத்தையும் அவர்களது இடுங்கிய பார்வையும் தூரமாக சென்று விட… அந்த இடத்தை அவனது செமி மட்டுமே ஆக்கிரமித்து கொண்டாள்…

“செமி… அடுத்து என்ன பண்ணலாம்ன்னு இருக்கே?”

“ம்ம்ம்… ஆர்ட் படிக்கனும்ன்னு ஆசை… ஸ்கல்ப்ச்சர் கத்துக்கணும்… வைல்ட் லைப் போட்டோக்ராபி… எவ்வளவோ இருக்கு… ஆனா எங்க அப்பாவுக்கு நான் மட்டும் தானே… சோ வேற வழியே இல்லை… ஏதாவது ஒரு இஞ்சினியரிங் முடிச்சு ஒரு எம்பிஏ முடிச்சு ஸ்கூல்ல போய் உட்கார வேண்டியதுதான்… நீ என்ன பண்ணலாம்ன்னு இருக்க?”அவளது எண்ணத்தை கூறிவிட்டு அவனை கேட்க…

“உன்னை இழுத்துட்டு ஒடலாம்ன்னு இருக்கேன்… ”என்று கூற நினைத்தான்… கூறினால் எப்படி இருக்கும் எனவும் எண்ணி பார்த்தான்… அவனுக்கே சிரிப்பு வந்தது…

“ம்ம்ம் பேமிலி பிஸ்னஸ்… நீ சொன்ன மாதிரி அதுக்கு என்னை தயார் படுத்த ஆரம்பிச்சுடுவாங்க… நோ லுக்கிங் பேக்… ” என்றவனுக்கு ஏதோ ஒரு ஏமாற்றம் சூழ்ந்தது…

கையில் கிடைத்த கல்லை எடுத்து ஏரியை நோக்கி எரிந்தான் வருண்… அது அலைகளோடு ஏரியில் பறந்து போனது…

“எதுவா இருந்தாலும் இஷ்டப்பட்டு செய் வரு… கஷ்டப்பட்டுகிட்டு செய்யாத… நமக்கு கம்பல்ஷன்ஸ் இருந்தாலும் நாம ஒவ்வொரு நிமிஷத்தையும் ரசிச்சு செய்தா அந்த வேலை ரொம்ப அழகாகிடும் இல்லையா… ” புன்னகையோடு அவள் கூற…

“ஆமா… அதை தான் செய்துட்டு இருக்கேன்… ”என்றவனின் ரசிப்பில் இருந்தது சௌமி… அவனது பார்வை அவளை ஏதோ செய்ய… சற்று தள்ளியே நடக்க துவங்கினாள்…

“ஏன்… என்னாச்சு?” அவளுக்கு அருகே வந்து கேட்க…

“ம்ம்ம்… உன்னோட பார்வை சரியில்லை… ”

“நீ தானே சொன்ன செமி… ரசின்னு… அதைதானே செய்றேன்… ” இயல்பாக கூறினாலும் அதிலிருந்த குறும்பை உணர்ந்தாள் சௌமி!

“ப்ச்… ஏன்டா ஒரு மாதிரியா பேசற… ” அவனை முறைத்தாலும் அவளுக்கு அது பிடித்திருந்ததே!

“எனக்கு பிடிச்சிருக்கு… பேசறேன்… ” குறும்பாக சிரிக்க… உதட்டை கடித்து கொண்டவளுக்கு ஏனோ சற்று பயமாக இருந்தது…

பேசிக்கொண்டே மரங்கள் அடர்ந்த பகுதிக்கு வந்துவிட… உள்ளுக்குள் பயம் பீடித்து கொள்ள… சட்டென்று திரும்பியதில் பின்னால் நின்று கொண்டிருந்த வருணின் மேல் இடித்து கொண்டாள் சௌமினி!

“ஹேய்… என்ன? கீழ விழுந்து புதையல் ஏதாவது எடுக்க போறியா?”அவளை பிடித்து கொண்டே வருண் கேட்க

“இல்ல வரு… இருட்டா இருந்துதா… பயந்துட்டேன்… ”அவனை நேராக பார்க்க முடியாமல் பதிலளிக்க… அருகில் நின்றிருந்தவளை மேலும் நெருக்கமாக இழுத்து கொண்டான்…

“ம்ஹூம்… இல்ல… பொய் சொல்ற… ” அவளது கண்களை பார்த்து அவன் கேட்க…

“இல்ல… ” அவளது குரல் அவளுக்கே கேட்பேனா என்றிருக்க…

“உனக்கு பயம் செமி!… பாரஸ்ட் ஏரியா… ஈ காக்கா கூட இல்ல… செம ஹாண்ட்சம் பையன்… என்ன ரைட்டா?” அவன் சிரித்து கொண்டே கேட்டதில் சௌமினியின் வெட்கம் மேலும் அதிகமாக… அவனை தள்ளி விட்டு…

“ஓடிடு… ஹன்ட்சம்மா… ?” தள்ளி நின்று சிரித்து கொண்டே கேட்க… அவளது கையை இழுத்து வளைத்தான்…

“எங்க… என்னை பார்த்து சொல்லு… ” மேலும் நெருக்கமாக வளைத்து கொண்டவனை அதிர்ந்து பார்த்தாள்… அவளுக்கும் பிடித்து இருந்ததுதான்… ஆனால் இது தவறாயிற்றே! உடல் நடுங்க…

“என்ன பண்ற வரு?… ”

“அதான் யோசிக்கறேன் செமி… ” குரல் வெகுவாக மயக்கத்தில் ஆழ்ந்திருக்க… அந்த மோனநிலை இருவருக்குமே பிடித்திருந்தது…

“விடு வரு… ப்ளீஸ்… ”

“ம்ம்ம்… ப்ளீஸ் கொஞ்சம் பேசாதே செமி… ” என்றவன் அவளை பின்னோடு அணைத்து பின்னங்கழுத்தில் முத்தமிட… சிலிர்த்தது அவளுக்கு!

“இது தப்பு… ” அவனிடமிருந்து விடுவித்து கொள்ள முயன்றாலும் அவளாலும் விலக முடியவில்லை…

“என்ன தப்பு? லவ் பண்றது தப்பா?” அலட்டாமல் அவன் கேட்டு வைக்க… இனிமையாக அதிர்ந்தாள் சௌமினி!

“வாட்?”

“எஸ் செமி… நீ எனக்கு மட்டும் தான் வேணும்… நான் ரொம்ப பொசெசிவ்ன்னு சொன்னது உன்னையும் சேர்த்து தான்… என்னால முடியல… உன்னை யாருக்கும் விட்டு கொடுக்க கூடாதுன்னு வெறியே வருதுடா… ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ”

ஒவ்வொரு ஐ லவ் யூவிற்கும் ஒவ்வொரு முத்தமாக இட்டு கொண்டே அவன் கூற… வெட்கபுன்னகையோடு வருணை தள்ளி விட்டாள் சௌமினி!

“ச்சீ போ… ” அவளது வெட்கம் அவனுக்கான ஒப்புதலை கூறாமல் கூற… அவனை ஏதேதோ செய்ய சொன்னது!

“பக்கி… ஐ லவ் யூ சொன்னா… திருப்பி ஐ லவ் யூ சொல்லணும்… ச்சீ போன்னு சொல்ல கூடாது… ” அவளை வார…

“ம்ம்ம் போடா… அதெல்லாம் சொல்ல முடியாது… முதல்ல நாம படிச்சு முடிக்கணும்… அதுதான் முக்கியம்… ” பொறுப்பாக அவள் கூறுவதை கேட்டவனுக்கு சிரிப்பு பொங்கியது!

“நான் மட்டும் என்ன சொல்றேன்… நமக்கு இன்னும் வயசு வரலைதான்… அதுக்கான வயசு வரட்டும்… படிச்சு முடிச்சே வீட்ல சொல்லலாம்… ஓகே… ” என்று அவளது மூக்கை பிடித்து ஆட்டியவன்… சௌமினியின் முகத்தில் வெட்க முறுவல்…

“அட செமி… உனக்கு வெட்கமெல்லாம் வருதே… ” அவளது முக சிவப்பை அவன் கிண்டல் செய்ய…

“டேய்… வேண்டாம் அடி வாங்காதே… ” ஒற்றை விரலை நீட்டி எச்சரிக்க… அவன் அந்த விரலை பற்றியவன் தன் உதட்டுக்கு கொண்டு செல்ல… சட்டென்று கையை பின்னுக்கு இழுத்தாள் சௌமினி…

“இடத்தை கொடுத்தா நீ மடத்தை பிடிப்படா… ” சிரித்தவளின் மூக்கை பிடித்து ஆட்டிவிட்டு…

“இன்னைக்கு மட்டும் தானே மடத்தை பிடிக்க முடியும் செமி டார்லிங்… ”

“ஏன்டா… நாளைல இருந்து நீ விரதம் இருக்க போறியா?” குறும்பாக கேட்டவளை பார்த்து சிரித்தவன்…

“நாளைக்கு வெக்கேஷனுக்கு எங்க அம்மா அப்பா எல்லாரும் வர்றாங்க… சிவகாமி அத்தை ஆல்ரெடி இருக்காங்க… அப்படி இருக்கும் போது ரொம்ப ஊர் சுற்ற முடியாதே… ” அவனது போக்கில் சொல்லி கொண்டு போக… முகத்தின் மீது வெந்நீரை வாரி இறைத்தது போல அதிர்ந்து விழித்தாள் சௌமினி!

“ஐயோ… சிவகாமி அத்தையா? அவரை எப்படி மறந்தேன்? கௌதம் படித்து படித்து சொன்னானே… ?”

அதிர்ச்சியில் தலை சுற்றுவது போல இருந்தது அவளுக்கு!

error: Content is protected !!