cp16

அத்தியாயம் பதினாறு

நீ கொடுத்து போன

முத்தத்தின் எச்சில்

ஈரம் காயாமல் இருக்கிறது

விழியில்!

 -டைரியிலிருந்து

“ஹை… நான் தான் பர்ஸ்ட்… நான் தான் பர்ஸ்ட்… ”

ஆள் அரவமில்லாத அந்த குன்னூர் ரோட்டில் போட்டி போட்டு கொண்டு வள்ளியம்மையும் ஆதிரையும் சைக்கிளில் பறந்து கொண்டிருந்தனர்… விசாலாட்சியும் சிதம்பரமும் ஓய்வுக்காக ஊட்டி குன்னூர் வரும் போதெல்லாம் வருண் வார இறுதிக்கு அவர்களிடம் வந்து விடுவது வழக்கம்… வள்ளியம்மை இங்கு படித்த வரையில் அவளும் வருணுடன் சேர்ந்து வந்து விடுவாள்…

கௌதமை பொறுத்தவரை இந்த விஷயங்கள் தெரியும் வரை சிதம்பரம் பள்ளியில் வைத்து அவனை பார்த்து விட்டு வருவார்… ஆனால் விஷயம் தெரிந்த பிறகு இரண்டு வருடங்களாக விசாலாட்சி அவனையும் எப்படியாவது இழுத்து வந்து ஒரு வேளையாவது தங்களுடன் இருத்தி கொண்டிருந்திருந்தார்…

சிதம்பரத்தை பொறுத்தவரை பிள்ளைகளுக்குள் வேறுபாடு பார்க்கவில்லை… அவரை பொறுத்தவரை மூவருமே அவரது பிள்ளைகளே… அதனால் ஆரம்பம் முதலே எதிலுமே வேறுபாடு காட்டாமல் ஒரே பள்ளி ஒன்று போல என்று அனைத்தையும் ஒன்றாகவே செய்து பழக்கப்பட்டவர்…

சிறு வயது முதல் அவ்வப்போது பார்த்த சாலாம்மாவை இப்போது நிமிர்ந்து பார்க்கவும் முடியாமல் சங்கடப்பட்டு கௌதம் ஒதுங்க… அவனை மூத்த மகனாக பாவித்த விசாலாட்சி எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும் அவன் அந்த கூட்டை விட்டு வரவும் இல்லை… வருணும் அவனை ஏற்று கொள்ள வில்லை… இருவருக்குமிடையில் கோபம் நீறு பூத்த நெருப்பாக இருக்க… அவ்வப்போது சிவகாமி விசிறி விட்டு சென்றார்…

தற்போதும் கௌதமை அழைக்கத்தான் வாண்டுகள் இருவரையும் துரத்தியிருந்தார்…

நேராக பள்ளிக்கு சென்ற இருவரும் வார இறுதி நினைவே இல்லாமல் மோட்டு வளையை பார்த்து கொண்டு அமர்ந்திருந்த சௌமினியை பார்த்து…

“அக்கா… அண்ணா எங்க?” சைக்கிள் ஓட்டி வந்ததில் மூச்சு வாங்க சௌமினியை பார்த்து வள்ளியம்மை கேட்க… மொட்டு மொட்டென்று அமர்ந்திருந்த சௌமினியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது…

“ஹேய் எந்த அண்ணாவை கேட்கற?”

“வருண் அண்ணா தான் வீட்ல இருக்கானே… கௌதம் அண்ணாவை தான் கேட்கறேன்… ”என்று இயல்பாக கூறிய வள்ளியம்மையை மிகவும் பிடித்தது சௌமினிக்கு…

“கௌதமா… ” என்று சௌமினி யோசித்தாள்… அதற்கும் காரணம் இருந்தது… ஏனென்றால் கௌதம் சென்றிருப்பது மதுவோடு!

மது… அவனது தற்போதைய கேர்ள்பிரண்ட்! நித்தமும் மாற்றத்துக்கு உள்ளாகும் அவனுடைய கேர்ள்ப்ரென்ட் என்னும் பதவியை பிடிக்க போட்டி நிலவி வருவதுதான் உண்மை… இந்த மதுவும் அப்படியே…

“டேய் ஒண்ணுல ஸ்டெடியா நின்னு தொலையேன்டா… ”சௌமினி கடுப்பில் கூற

“ஸ்டெடியா நின்னு… ? பிக் அப்… டிராப்… எஸ்கேப் மச்சி… அதைவிட்டுட்டு மெய்ன்டையின் பண்ண சொல்றியா… நோ சான்ஸ்… ” என்று நண்பர்களிடம் கண்ணடித்தவனை பார்த்து அனைவரும் சிரிக்க… சௌமினி மட்டும் முறைத்தாள்… என்னவென்று கண்ணால் கேட்க…

“டோன்ட் டேக் கேர்ள்ஸ் பார் கிரான்ட்டட் கௌஸ்… ” காரமாக சௌமினி கூற…

“ஹேய் சௌம்ஸ்… வெய்ட் வெய்ட்… முதல்ல இந்த முகத்தை மாத்து… இந்த சீரியஸ் லுக் உனக்கு நல்லாவே இல்லை… ” அவளது கோபத்திலும் கிண்டலடித்தவனை என்ன செய்வது என்று புரியாமல் விழித்தாள்…

“ம்ம்ம்ம்… என் மூஞ்சியே அவ்வளவுதான்… சனியனே… எக்கேடோ கெட்டு போய் தொலை… எருமை எருமை… சொன்னா கேட்டா பரவால்லை… ” என்று கூறிவிட்டு கோபமாக வகுப்பறை நோக்கி சென்றவளை அவனது சிரிப்பு துரத்த… நின்று திரும்பி பார்த்து முறைத்தாள்…

கௌதமை பொறுத்தவரை அத்தனையும் ஷார்ட் டெர்ம் ரிலேஷன்ஷிப் மட்டுமே… அதையும் மிகவும் சீரியசாக கொண்டு போக என்றுமே நினைத்ததில்லை என்பதும் சௌமினி அறிந்ததுதான்… அவனது நிலையிலிருக்கும் சிலரை அவள் அறிவாள்… சமூகத்தின் அங்கீகாரத்தை தொலைத்த அவர்கள் தேர்ந்தெடுத்து இருந்தது இருண்ட பாதை… அதில் போதையுண்டு… பெண்களிடம் அளவுக்கு மீறிய பழக்கமுண்டு… அதை காட்டிலும் அக்கம் பக்க கிராமத்தில் இருந்த அழகான பெண்களை உபயோகித்து கொண்டிருப்பதையும் அறிவாள்…

வரைமுறை இல்லாத அவர்களோடு ஒப்பிடுகையில் எதுவாக இருந்தாலும் அளவோடு நிறுத்தி கொள்ளும் கௌதமை யாரிடமும் விட்டு கொடுக்க முடியாதுதான்… ஆனாலும் அவன் அந்த பழக்கத்தையும் விட்டுவிட்டால் வாழ்கையில் மிகப்பெரிய உயரங்களை தொடுவான் என்பதை திடமாக நம்பினாள் சௌமினி!

இது நடந்து ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் வருணும் இல்லாமல்… கௌதமும் மதுவோடு கம்பி நீட்டியதில் வெகு கடுப்பாக இருந்தவளை வள்ளியம்மை கேட்டது இன்னமும் கடுப்பாக்க…

“இப்போ வரைக்கும் என் பேக்கட்ல தான் இருந்தான்… ஜஸ்ட் நவ் இப்போ தான் பறந்து போனான் அம்மு… ” சிரிக்காமல் கூற… வள்ளியம்மை சிரிக்க முடியாமல் சிரித்து வைக்க… ஆதிரை முறைத்தாள்…

“அக்கா… ஜோக் ரொம்ப மொக்கையா இருக்கு… கௌதம் மாமா எங்க… சீக்கிரம் சொல்லுங்க… ”

“அட உனக்கு அவன் மாமாவா… இரு கௌஸ்… இந்த ரெண்டு வாலையும் அனுப்பி விடறேன்… நீ நல்லா மாட்டிகிட்டு முழி… ” என்று தனக்குள் கூறி சிரித்து கொண்டு…

“உன் கௌதம் மாமா தானே ஆதி… இதோ இந்த பக்கம் தான் அவன் ப்ரென்ட் கூட போனான்… போய் தேடித்தான் பாரேன்… ” என்று கூறி முடிப்பதற்குள் இருவருமாக சைக்கிளில் வேகமெடுத்து இருந்தனர்… யார் முதலில் சென்று கௌதமை பிடிப்பது என்ற போட்டியில்!

*****

“யு ஆர் லுக்கிங் டேம் செக்ஸி மது… ”அவளது கண்களை பார்த்து கூறிக்கொண்டே அவளது கையை பற்றி சுண்டி இழுக்க… கௌதம் மேல் பூப்பந்தாய் வந்து விழுந்தாள்…

“ச்சோடு தோ முஜே… லையர்… ” கோபித்து கொண்டு கொஞ்சிகொண்டிருந்த வடஇந்திய பெண்ணான மது கெளதமுடன் ஒன்றாக படிப்பவள்…

“ஹேய்… ஐ ப்ராமிஸ் மது… ” அவளை தன்னோடு பிணைத்து கொண்டு… இடையோடு வளைத்து கொண்டு… அருகே இருந்த ஆப்பிள் மரத்தின் மேல் சாய்த்து கொண்டு அவளது கண்களை பார்த்தபடி கூற… மது வெட்கி தலைகுனிந்தாள்!

அவளது முகத்தை கையில் ஏந்தி கொண்டவன்… இதழை நோக்கி போக…

“பேஏஏஏஏ… ”வள்ளியம்மையும் ஆதிரையுமாக பின்னே இருந்து பயம் காட்ட… தூக்கி வாரி போட திரும்பி பார்த்தான் கௌதம்… ! இரண்டு வாண்டுகளும் நாக்கை துருத்தி கொண்டு பயம் காட்டுவதாக கூறிக்கொண்டு அசையாமல் நின்று கொண்டிருக்க… அவர்கள் இருவரின் தோரணையில் சிரித்து விட்டான் கௌதம்…

அருகில் வந்த வள்ளியம்மை… மதுவை கை காட்டி குறும்பாக சிரித்து கொண்டு…

“ண்ணா… இது உங்க கேர்ள் ப்ரெண்டா?” ரகசியமாக கேட்க… அருகில் நின்று கொண்டிருந்த ஆதிரையும் இதே கேள்வியை மாற்றி கேட்க…

“இதுவும் என்னோட கேர்ள் ப்ரென்ட்… ” என்று சிரித்து கொண்டே கூற…

“அப்போ உங்களுக்கு எத்தனை கேர்ள் ப்ரென்ட் மாமா?” ஆதிரை கனகாரியமாக கேட்டு வைக்க… அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை…

“உன்னோட சேர்த்து பத்துன்னு வெச்சுக்க… ” சிரித்து கொண்டே கௌதம் கூற… முகத்தை சுளித்தாள் ஆதிரை…

“ஹும்ம்ம்… நான் உங்க கேர்ள் ப்ரென்ட் இல்ல… ” சிணுங்கி கொண்டே கூற… அந்த குட்டி ஆதிரையின் கழுத்தில் கை போட்டு தன்னுடன் இழுத்து வைத்து கொண்டு…

“நீ கேர்ள் தானே… ” அப்பாவித்தனமாக முகத்தை வைத்து கொண்டு குட்டி ஆதிரையிடம் கேட்க… அவள் வேக வேகமாக தலையாட்டினாள்…

“ஆமா பின்ன… ”

“என் ப்ரென்ட் தானே… ” என்று கேட்கவும் சற்று யோசித்த ஆதிரை…

“ஆமா… ”

“அதான்… கேர்ள் ப்ளஸ் ப்ரென்ட்… இஸ் ஈக்வல் டூ கேர்ள்ப்ரென்ட்… ” மிகவும் சுலபமாக கூறி முடிக்க… வள்ளியம்மையும் ஆதிரையும் மோட்டுவளையை தட்டி கொண்டு யோசிக்க ஆரம்பித்தனர்… அந்த இடைவெளியில் மதுவை கண்ணை காட்டி போக கூறிவிட்டு அப்பாவியாக இருவருடன் சேர்ந்து தானும் யோசிப்பது போல பாவனை செய்ய… வள்ளியம்மை குறும்பாக பார்த்து சிரித்து…

“ண்ணா… உங்க வால்தனம் எனக்கு தெரிஞ்சு போச்சு… இருங்க அம்மா கிட்ட சொல்றேன்… ” என்று சைக்கிளை நோக்கி ஓட… அவளை துரத்தி கொண்டு கௌதம் ஓட… ஆதிரை என்னவென்று புரியாமல் இருவரையும் துரத்தி கொண்டு ஓட…

“அம்மை என் செல்ல குட்டில்ல… ” ஓடியவளை இழுத்து பிடித்து வைத்து கௌதம் அவளை தாடையை பிடித்து கொஞ்ச…

“இல்ல… ” கறாராக இடம் வலமாக தலையை ஆட்டிய வள்ளியம்மையின் மூக்கை பிடித்து திருகியவன்…

“என் வெல்ல கட்டி ல்ல”

“இல்ல… ”நிர்தாட்சண்யமாக மறுத்துவிட…

“சரி… ஆதி… உனக்கு குறிஞ்சி பூ தெரியுமா?” வள்ளியம்மையை மடக்க அப்பாவி ஆதி என்னும் தூண்டிலை தூண்டிவிட்டான் கௌதம்…

“தெரியுமே… ட்வெல்வ் இயர்ஸ் ஒன்ஸ் பூக்கற பூ தானே… எனக்கு தெரியுமே… !” தலையை வேகம் வேகமாக ஆட்ட,

“அந்த பூ இப்போ ஊட்டில பூத்திருக்கு… அது தெரியுமா?”என்றவுடனே அவன் வீசிய தூண்டில் வேலை செய்ய… இருவரின் கண்களும் விரிந்தது…

“ண்ணா… நிஜமாவா சொல்றீங்க?” வள்ளியம்மை ஆவலாக கேட்க…

“ஆமா அம்மை… உனக்கு தெரியாதா… ?” அவளை போலவே ஆச்சரியத்தோடு கேட்க…

“ண்ணா ப்ளீஸ்… கூட்டிட்டு போங்கண்ணா… ” என்று வள்ளியம்மையும்…

“ஆமா மாமா… ப்ளீஸ்… கூட்டிட்டு போங்க… ” என்று ஆதியும் கெஞ்ச… கௌதம் கெத்தாக…

“கூட்டிகிட்டு போறேன்… ஆனா சிவகாமி அத்தை கேட்டா என்ன சொல்லுவீங்க?”

“நாங்க சைக்ளிங் பண்ணிட்டு இருந்தோம்ன்னு சொல்லிடுவோம்!” இருவரும் கோரசாக கூற…

“அப்போ சைக்கிள்? அதை என்ன பண்ண?”

“மாமா… அப்புறம் வந்து நாங்க எடுத்துக்கறோம்… ப்ளீஸ்… ப்ளீஸ்… ” கெஞ்சிய ஆதிரையை பார்த்து சிரித்தபடி இருவரது தலையிலும் கொட்டி விட்டு பைக்கை எடுத்தான்… வெற்றிகரமாக வள்ளியம்மையின் எண்ணத்திலிருந்து மதுவை அகற்றி விட்ட மகிழ்ச்சி!

“ண்ணா… இன்னும் ஸ்பீடா… ” இது வள்ளியம்மை!

“ஐயோ… வேணாம்… பயமா இருக்கு மாமா… ” இது ஆதிரை!

மூவருமாக குன்னூரை கௌதமின் டுகாட்டியில் வலம் வந்தது போதாது என்று ஊட்டியையும் ஒரு கை பார்க்க கிளம்பினார்கள்… அவனுக்கு பின்னே விதியும் போட்டி போட்டு கொண்டு கிளம்பியது…

*******

வாழ்க்கை பலநேரங்களில் யாருக்கு எதை வைத்திருக்கிறது என்பதை யாராலும் கணிக்க முடிவதில்லை… அப்படி கணித்து விட்டால் தான் மனிதன் கடவுளாகிவிடுவானே! வயிற்று பாட்டுக்கே திண்டாடி கொண்டிருப்பவனுக்கு அரை டஜன் குழந்தைகள் இருக்க… தங்க தட்டை வைத்து கொண்டு அதில் பால் அன்னமிட்டு ஊட்டுவதற்கு ஒரு குழந்தை இல்லை என ஏங்குபவர்களுக்கு ஏக்கம் மட்டுமே பரிசாக கிடைக்க… இறைவனின் விளையாட்டின் நகைமுரணை என்னவென்று சொல்ல?

அந்த குட்டி பெண்களுடன் கல்மிஷமில்லாமல் விளையாடிவிட்டு அவர்களை தன்னுடைய பைக்கிலேயே அழைத்து கொண்டு எதை பற்றியும் சிந்திக்காமல் அவர்களுடைய கெஸ்ட் ஹவுஸில் இருவரையும் இறக்கி விட… ஆதிரைக்கும் வள்ளியம்மைக்கும் முகம் கொள்ளாத சிரிப்பு! கைகளில் கௌதம் பறித்து தந்த குறிஞ்சிப்பூக்கள்…

இறக்கி விட்டுவிட்டு செல்ல நினைத்தவனை தடுத்து இழுத்து கொண்டு இருவரும் உள்ளே வர…

“கௌதம்… வா வா… ” பூரித்த முகத்தோடு அவனை அழைத்த விசாலாட்சிக்கு வெகு நாட்களுக்கு பிறகான அவனது புன்னகை முகம் மனதை குளிர்வித்தது… அவனது சப்தம் கேட்டு வெளியே வந்த சிதம்பரமும்…

“கௌதம் கண்ணா… வா வா… ”என்ற பாசமான அழைப்பில் நெகிழ்ந்த மனதை கடிவாளமிட்டு கட்டினான் கௌதம்… இப்போதெல்லாம் அவரை அழைப்பதும் பிடிக்கவில்லை!

தாய்க்கு மனைவி என்ற அந்தஸ்த்தை தராமல் தன்னிடம் மட்டும் உறவு கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? சாலாம்மா இந்த அளவு ஏற்று கொண்டு நடப்பதே பெரிய விஷயம் அல்லவா… ஏன் இந்த இரு பெண்களின் வாழ்க்கையிலும் இவர் விளையாட வேண்டும்? கேட்க யாருமற்ற ஆள் என்பதால் தன் அன்னையை ஏமாற்றி விட்டாரோ?

காதலென்பது தன்னுடைய இணையின் மரியாதையை கெடுக்குமா? அல்லது பெற்று கொடுக்குமா?காதலுக்காக தன்னுடைய சுயமரியாதையை கூட இழக்க முடியுமா? தன் அன்னையை போல?

அனைத்தையும் விட கௌதம் மலைத்தது விசாலாட்சி தன் மேல் வைத்திருந்த பாசத்தை பார்த்துதான்… இது என்ன வகையான பாசம்? கணவனை பங்கு போட்டு கொண்டவளின் மகனை மூத்த மகனாக நினைக்க முடியுமா? பாசம் காட்ட முடியுமா? கணவன் அந்த மகனுக்காக செய்யும்போது மலர்ந்த புன்னகையுடன் பார்வையிட்டு கொண்டிருக்க முடியுமா?

முடியும் என்று நிரூபிக்கிறாரே இவர்? எப்படி சாத்தியம்? காதல் தன்னுடையவன் என்று கணவனை இழுத்து வைத்து சொல்லாதா? அவனுக்காக ஏன் செய்கிறாய்… என்னுடைய மகன் இருக்கிறான் என்று கேள்வி கேட்காதா? எப்படி இந்த அன்பு சாத்தியமானது?

“சாலாம்மா… வர சொன்னீங்களாம்… ” என்று மொழிந்து விட்டு சிதம்பரத்தை விடுத்து வெறுத்து வேறுபுறமாக திரும்பினான் கௌதம்… சிதம்பரத்துக்கு சுருக்கென்று தைத்தது!

எப்போது சிவகாமியால் பட்டவர்த்தனமாக்கப்பட்டதோ அன்று முதல் தந்தையை அப்பாவென அழைக்கவில்லை… அவரிடம் பேசவுமில்லை!

“கௌதம்… அப்பா உன்னை கூப்பிட்டாங்க பாரு… ” அவரும் தந்தையை சேர்த்து வைக்க பார்க்க…

“சாலாம்மா எனக்கு வேலை இருக்கு… ” உர்ரென்ற முகத்தை வைத்து கொண்டு முறைத்து கொண்டே கூற…

“ரெண்டு வார்த்தை பேசறதுல குறைஞ்சு போய்ட மாட்டே கௌதம்… அப்பாகிட்ட பேசிட்டு இரு… உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்… உனக்கு இங்கதான் லஞ்ச்… உனக்கு பிடிச்ச பணியாரமும் இருக்கும்மா… ” என்று கூறிவிட்டு உள்ளே செல்ல எத்தனிக்க…

“நோ சாலாம்மா… எனக்கு வேலை இருக்கு… ”

“மூச்… ” அவனை மிரட்டிவிட்டு செல்ல… தந்தையுடன் தனித்து விடப்பட்ட கௌதமுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை…

“கௌதம் கண்ணா… அப்பாகிட்ட பேச மாட்டியா?” ஆதங்கமாக கேட்டவரை தீர்க்கமாக பார்த்தவன்…

“பேச என்ன இருக்கு?” வெட்டி விடுவது போல அவன் பேசினாலும் தந்தையை முழுவதுவதுமாக வெறுத்து விட அவனாலும் முடியவில்லை… பதினேழு வருட பந்தமல்லவா!

“நான் உன் அப்பா டா… ”

“நானும் அப்படித்தான் நினைச்சுட்டு இருந்தேன்… ” பார்வையை வேறுபுறம் திருப்பி கொண்டவனின் கண்கள் கலங்கியிருந்ததோ? ஆனாலும் அதை வெளிகாட்டி கொள்ளகூடியவனில்லையே கௌதம்!

“இப்போ என்ன?அத்தை பேசறதை எல்லாம் மனசுல வெச்சுக்காதே… ” சிதம்பரத்திற்கும் தெரிந்து தானிருந்தது… சிவகாமியின் பேச்சுக்களின் விளைவு! ஆனாலும் எதையும் செய்ய முடியாத சூழ்நிலை கைதியாக சிவகாமியின் முன் நிற்கிறாரே! எப்படி தங்கையை கேள்வி கேட்பது? சூழ்நிலை கைதிகளுக்கு அவர்களது பாதையை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை இறைவன் கொடுப்பதில்லையே!

“அவங்க தப்பா ஒன்னும் பேசலையே… உண்மைய சொன்னாங்க… ”அதீத வெறுப்பு மண்டி கிடந்தது அவனது குரலில்…

“ஏன் கண்ணா… அப்பா எந்த விஷயத்துல குறை வெச்சுட்டேன்… சொல்லு… பெஸ்ட் ஸ்கூல் பெஸ்ட் பைக்… எல்லாமே பெஸ்ட்டா தான் கொடுக்கறேன்… ”

“ஆனா நீங்க எனக்கு கொடுத்து இருக்க பெஸ்ட் நேம் என்ன தெரியுமா?”என்று இடைவெளி விட்டவன்…

“அம்மாவுக்கு நீங்க மட்டுமே போதுமா இருக்கலாம்… ஆனா எனக்கு நீங்க சொன்ன எதுவுமே வேண்டாம்… எனக்கு தேவை அங்கீகாரம் மட்டும் தான்… அது உங்களால முடியுமா?” அதுவரை கௌதமை நிமிர்ந்து பார்த்து பேசி கொண்டிருந்தவர் தலை குனிந்தார்… மௌனமானார்…

அவர் மெளனமாக மேல் தளத்தை நோக்கி போனது அவனது கோபத்தை கிளறி விட்டது… அதே கோபத்தோடு வெளியே செல்ல முயல… விசாலாட்சி அவசரமாக வந்தார்…

“கௌதம் கண்ணா… என்ன அதுக்குள்ளே கிளம்பற?சாப்பிடாம… ” வலுகட்டாயமாக இழுத்து கொண்டு சென்றவருக்காக அந்த சூழ்நிலையை சகித்து கொண்டான் கௌதம்…

“சாலாம்மா… இன்னொரு நாள் வர்றேன்… ப்ளீஸ்… ” டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்த வருணை பார்த்தவாறு…

“கௌதம்… ” கறாராக விசாலாட்சி அவனுக்கு உணவை எடுத்து வைக்க… வேறு வழியில்லாமல் சாலாம்மாவுக்காக அமர்ந்தான்… வருணின் முகத்தில் இறுக்கம் இருந்தாலும் பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை… அவனது நினைவு சௌமினியிடம் இருக்க… கண்கள் கனவில் மிதந்து கொண்டிருந்தது…

வள்ளியம்மையும் ஆதிரையும் கௌதமின் இரு பக்கத்திலும் நெருக்கியடித்து கொண்டு அமர்ந்து…

“ம்மா எனக்கும்… ” இது வள்ளியம்மை…

“அத்தை எனக்கும்… ” இது ஆதிரை…

டேபிளில் தாளமிட்டு கொண்டு விசாலாட்சியை ஏலமிட்டு கொண்டிருந்தவர்களை பார்க்க தெவிட்டவில்லை கௌதமுக்கு… அதே நிலையே வருணுக்கும்…

“ரெண்டும் சேர்ந்தா அந்த இடம் சந்தை கடையாகிடும்… ” மலர்ந்த மெலிதான புன்னகையோடு கௌதமை பார்த்து வருண் சிறு குரலில் கூற… கௌதமின் முகத்திலும் அதே புன்னகை…

“ம்ம்ம்… தெரியுதே… ” வீட்டில் ஒற்றையாக படுத்து, உணவை உண்டு விளையாடி களைத்தவனுக்கு அந்த கலகலப்பு மிகவும் பிடித்திருந்தது… அந்த கலகலப்பில் இணைய மாட்டோமா என்று ஏங்கியது மனது… தந்தை மீதான கோபம் மேலும் எகிறியது!

“ஹை பணியாரம்… சாலாட்சி சீக்கிரம் கொண்டு வாங்க… ”ஆதிரை சந்தோஷ மிகுதியில் கௌதமிடம் இருந்து ஒரு பணியாரத்தை பறித்து உண்ண ஆரம்பிக்க… அவனது புன்னகை விரிந்தது…

“ஆதிஈஈஈஈஈஈ… ” கோபமாக முழங்கியது சிவகாமியின் குரல்!