cp17

cp17

அத்தியாயம் பதினேழு

குறிக்கப்பட்ட நாட்களோடு

உன் அன்பையும் ஆதங்கத்தையும்

 பரிமாற முயன்று

தோற்று போகிறாய்

எட்டி நின்று நகைக்கிறது

நமக்கான காதல்!

 -டைரியிலிருந்து

டைரியின் பக்கங்கள் காற்றில் படபடவென அடித்து கொண்டிருந்தது… வெளியில் குளிர் காற்று வீசி கொண்டிருக்க… ஜன்னலின் வழியே வழிந்த அந்த வாடை காற்று அவனது முகத்தை தீண்டி தவிக்க செய்து கொண்டிருந்தது… அந்த குளிரிலும் அவனது முகத்தில் வியர்வை…

மனம் முழுக்க வெம்மை!

அந்த நாட்களின் நினைவு வரும் போதெல்லாம் கொதிக்கும் எண்ணையில் கை விட்டார் போல ஏற்படும் அந்த உணர்வு இன்றும்! ஆதிரையோடு ஒட்டி கொள்ள நினைக்கும் மனதை இழுத்து கட்டியது அந்த நினைவுகள்… நடந்தவற்றை நினைத்து பார்க்கவும் விரும்பாமல் தவித்தது மனது…

அன்று தந்தையிடம் சுணக்கம் இருந்திருந்தாலும் மனம் முழுக்க சந்தோஷமாகத்தான் இருந்தான்… ஆனால் அந்த வீட்டை விட்டு வெளியே வந்த போதோ மனம் அளவுக்கு மீறிய துக்கத்தில் தவித்தது…

உள்ளே சிவகாமியின் சப்தமும் சிதம்பரம் அவரை சமாதானப்படுத்தும் சப்தமும் கேட்டுகொண்டிருந்தது… மனம் கசப்பாக இருக்க… அதே கசப்பு அவனது இதழிலும்…

இன்னும் என்னவெல்லாம் நடக்க வேண்டுமென்று விதித்து இருக்கிறதோ? மனதை அழுத்தியது… மெளனமாக அனைத்தையும் ஜீரணிக்க முடியாமல் ஜீரணித்து கொண்டு வெளியே வந்தவன்… அவனது பைக்கை பார்த்தான்… அதுவும் ஏக்கமாக அவனை பார்த்தது…

உணர்வே இல்லாமல் அதன் ஹேண்டில் மற்றும் சீட்டை தடவி பார்த்தவனுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைந்தது போலிருந்தது… டுக்காட்டியின் ஹேண்டிலை இறுக பிடிக்க… அதை பிரிய போகிறோம் என்ற நினைவே அவனுள் ஏதோ நடுக்கத்தை கொடுத்தது… இரண்டு வருடமாக அவனுடனே இருந்த ஜீவன்…

மெளனமாக தடவியவன் குனிந்து அதன் வாசத்தை பிடித்து முத்தமிட்டான்… நிமிர்ந்தவன் திரும்பியும் பார்க்காமல் வாட்ச்மேனிடம் சாவியை கொடுத்து விட்டு…

“இதை அய்யா கிட்ட கொடுத்துடுங்க… ”

விடுவிடுவென்று வெளியே வந்தான்… மெலிதாக தூர ஆரம்பித்து இருந்தது வானம்… குன்னூரிலிருந்து லவ்டேலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்… கால்நடையாகவே! கிட்டத்தட்ட பதினெட்டு கிலோமீட்டரை எப்படி கடப்பது என்ற தயக்கம் கூட இல்லை… எந்த நினைவும் அவனது நடையை தடுக்கவும் இல்லை… எல்லையற்ற வானத்தை போலவே திக்கற்று தெரிந்த வாழ்க்கை அவனுள் வெறுமையை விதைத்தது…

மனம் சிவகாமி அத்தையின் செயலில் குமைந்து கொண்டிருந்தது… இதற்கு மேலும் வேறு அவமானம் என்ன வேண்டும்? கண்களில் சூழ பார்த்த நீரை அடக்கி கொண்டான்… ஆண்பிள்ளை அழ கூடாதே!ஆனாலும் அவன் பதினேழு வயது பாலகனல்லவா… முதிராத மனம் முரண்டியது!

“ச்சீ ச்சீ… என்ன பழக்கம் இது ஆதி? கண்டவன் தட்டுல இருந்து எடுத்து சாப்பிடறது?”

உண்பதற்காக வாயில் வைக்க போன உணவு அப்படியே நிற்க… கௌதம் மனதில் அதிர்வலைகள்…

ஆதிரையின் கையில் இருந்த பணியாரத்தை பறித்து தூக்கி எறிந்தவர் அவளை கோபப்பார்வை பார்க்க… சிவகாமியின் செயலில் நடுங்கி கொண்டு கோழிகுஞ்சாக கௌதமிடமே ஒடுங்கினாள்…

“சிவகாமி அண்ணி… எல்லாருமே குழந்தைங்க… ப்ளீஸ் எதுவும் பேசிடாதீங்க… ” அருகிலிருந்த விசாலாட்சிக்கு மனம் பதறியது… மீண்டும் ஏதாவது கௌதமை பேசி விடுவாரோ என்று! அவன் வேறு தன்மானக்காரன் ஆயிற்றே என்ற கலக்கம்… அவர் தோட்டங்களை பார்வையிட சென்ற காரணத்தால் தானே கௌதமை அழைத்து வர செய்ததே… அதற்குள்ளா இவர் வந்து நிற்க வேண்டும்?

“அண்ணி… அதுக்கும் ஒரு அருகதை வேண்டும்… நீங்க வேணும்னா வப்பாட்டி பையனை ஒரே மாதிரி பார்க்கலாம்… ஆனா அவன் கூட ஒண்ணா உட்கார்ந்து என் பொண்ணு சாப்பிடறதா? ச்சீ… ” அருவருப்பை பார்த்தது போல முகத்தை சுளித்துகொண்டு கௌதமை பார்த்து வைக்க…

“அண்ணி கொஞ்ச நேரம் பொறுத்துக்குங்க… ப்ளீஸ்… ”சிவகாமியிடம் கெஞ்சி கொண்டிருந்தார் விசாலாட்சி… அவருக்கு வேறு வழி தெரியவில்லை… மேலே அறைக்கு சென்ற சிதம்பரத்தையும் காணாமல் தவித்தார்… ஆனால் சிவகாமி யாருக்குமே அடங்குபவரல்ல என்பதையும் புரிந்து இருந்தவருக்கு கௌதமை எப்படியாவது இந்த இக்கட்டில் இருந்து காத்து விட்டால் போதுமென்று தோன்றியது…

அவனுக்கு அதற்கும் மேல் அங்கே இருக்க மனம் ஒப்பவில்லை… ஆனால் அதற்கும் முன்னரே… அவனை நோக்கி விரலை சுண்டி கௌதமை அழைத்த சிவகாமி…

“டேய்… எழுந்திரு… ” அவன் அபிராமியின் மகன் என்ற காரணத்தை விட… அவருக்கு முன் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு பதிலடி கொடுத்தவனை அவருக்கு பிடிக்கவே பிடிக்காமல் போயிருந்தது… இவனுடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதா?

ஆனால் கௌதமோ தானாக எழுந்திருந்தால் எழுந்திருப்பானே தவிர அவர் அழைத்த முறையில் முகம் இறுக அமர்ந்திருந்தான்… கண்கள் அன்னிச்சையாக தந்தையை தேடியது…

“எழுந்திருன்னு சொன்னேன்… ” கடுமையான குரலில் கூற… அதை கண்டுகொள்ளாமல் பற்களை கடித்து கொண்டு அமர்ந்திருந்தான்… அந்த கோபத்தில் அவனது சட்டையை பிடித்து எழுப்பி விட்டார் சிவகாமி…

“அத்தை… நீங்க பண்றது ரொம்ப தப்பு… உங்களுக்கு பிடிக்கலன்னா போங்க… கௌதமை இப்படி சொல்ல உங்களுக்கு எந்த ரைட்சும் இல்ல… ” அதுவரை அத்தையை எதிர்த்து பேச முடியாமலும் அவரது பேச்சையும் பொறுக்க முடியாமலும் அமர்ந்திருந்த வருண்… இனியும் பொறுக்க முடியாது என்று எதிர்க்க ஆரம்பிக்க… வருணின் எதிர்ப்பு சிவகாமியை அதிர வைத்தது…

“வருண்… நான் பேசறது உனக்காக… ”

“தேவையில்லை… ”

“அவன் உன்னோட எதிரி… ”

“இல்ல… அவனை என்னோட அண்ணனா மட்டும் தான் ஏத்துக்க முடியலை… ஆனா அவன் என்னோட கிளாஸ் மேட்… அவன் கிட்ட நீங்க இப்படி நடக்கறது அசிங்கமா இருக்கத்தை… இதென்ன உங்க வீடுன்னு நினைச்சுட்டீங்களா… இஷ்டம் போல வெளிய போக சொல்ல… ?”

சப்தம் கேட்டு அவசரமாக சிதம்பரம் இறங்கி வருவதற்குள் வருண் சிவகாமியை விளாசி கொண்டிருக்க… சிவகாமியின் முகம் கோபத்தில் சிவந்தது… ஆனால் அண்ணனிடம் விடும் வார்த்தையை வருணிடம் விட முடியாதே!

“பின்ன யார் வீடுன்னு நினைச்சுட்டு இருக்க வருண்?” கௌதமின் சட்டையிலிருந்து கையை எடுத்த சிவகாமி கோபத்தை உள்ளடக்கிய அமர்த்தலான குரலில் எள்ளலாக கேட்க… விசாலாட்சி இடை புகுந்தார்…

“அண்ணி… இந்த பிரச்சனையே வேண்டாம்… கௌதமை நான் அழைச்சுட்டு வந்ததுதானே தப்பு… இனிமே அதை செய்ய மாட்டேன்… இத்தோட விடுங்க… ” எப்படியாவது சிவகாமியை அவரது அறைக்கு அனுப்பி விட்டால் போதுமென்று நினைத்து கொண்டு அவசரப்பட… கௌதம் கண்களில் வலியோடு விசாலாட்சியை நிமிர்ந்து பார்க்க… அவனை காயத்திலிருந்து காப்பாற்ற நினைக்க எண்ணி அவரே துடிக்க வைத்ததை அறியாமல் சிவகாமியிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார்…

“என்னாச்சு சாலா… ”கீழே வந்த சிதம்பரத்தின் கண்களில் முதலில் பட்டது விசாலாட்சி கலக்கத்தோடு நின்று கொண்டிருந்தது தான்… நிமிர்ந்து பார்க்க… சிவகாமி கண்களில் தீப்பொறி பறக்க நின்று கொண்டிருந்தார்…

“என்ன சிவகாமி… என்னாச்சு?”

“உங்க வைப்பாட்டி பையனுக்கு இருபது லட்சம் போட்டு பைக் வாங்கி தாங்க… வருஷம் பத்து லட்சம் செலவு பண்ணி படிக்க வைங்க… ஆனா வீட்டுக்குள்ள விட்டு என் மகளோட இணையா உக்கார வைச்சு சாப்பாடு போடற அளவு தைரியம் வந்துடுச்சா? கடை தேங்காய எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைச்சுட்டு இருக்கீங்களா?”

நிறுத்தி நிதானமாக சிவகாமி கேட்ட கேள்வியில் ஆணி அடித்தது போல நின்றார்… அவருக்குமே என்ன பேசுவது என்றே புரியவில்லை… இந்த பிரச்னையை ஏன் விசாலாட்சி இப்போது இழுத்து விட்டு கொண்டார் என்றுதான் அப்போது யோசித்து கொண்டிருந்தாரே தவிர… அடிபட்டு ரத்த காயத்தோடு பறக்கவே இயலாத புறாவாக துடித்து கொண்டிருந்த தன் மகனின் துடிப்பு அவருக்கு புரியவில்லை…

“சிவகாமி… உனக்கு இப்போ என்ன வேணும்? கௌதம் உன் கண்ல பட கூடாது அவ்வளவுதானே… இனிமே பட மாட்டான்… விடும்மா… ”

விசாலாட்சியும் சிதம்பரமும் சிவகாமியை சமாதானப்படுத்த முயன்றனரே தவிர கௌதமை சமாதானப்படுத்த முயலவில்லை… விசாலாட்சியிடம் இருந்த பரிதாப பார்வையும் வருணின் பரிதாப பார்வையும் கௌதமை ஆற்றுப்படுத்துவதற்கு பதில் சீண்டியே விட்டன… எனக்கு உங்களது பரிதாபமோ பச்சாதாபமோ தேவையில்லை என்று ஓலமிட்டது அவனது மனது…

சிவகாமியை சமாதானப்படுத்தி கொண்டிருந்தவர்… கௌதமிடம் திரும்பி…

“அத்தைகிட்ட என்ன பேசின கௌதம்? இந்தளவு அவங்க கோபப்படற அளவு?” எரிச்சலாக அவர் கேட்க… கௌதம் மௌனமாகவே இருந்தான்… அவன் அவமானத்தின் உச்சகட்டத்தை அடைந்திருந்தான்…

“அப்பா… கௌதம் ஒண்ணுமே பேசலை… நீங்க ஏன் அவன் கிட்ட கேட்கறீங்க?” வருண் கடுப்பாக பதில் கூற…

“நீ சும்மா இரு வருண்… உனக்கு ஒன்னும் புரியாது… ”அதே எரிச்சலோடு அவர் வருணை அடக்க…

“அவனுக்கு மட்டும் என்னப்பா புரியும்?”

“வருண்ண்ண்… கொஞ்சம் வாயை வெச்சுகிட்டு சும்மா இரு… ” சிதம்பரத்தின் கோபக்குரல் வருணை அடக்கி விட… முறைத்து கொண்டே மௌனமானான்…

“சொல்லு கௌதம்… ”

“நீங்க தானே என்னை பெற்றவர்?” உணர்வே இல்லாமல் அவன் கேட்ட கேள்வி சிதம்பரத்தை தொடவில்லை… அவரது மனம் பல்வேறு பிரச்சனைகளில் ஆழ்ந்திருந்தது…

“இப்படியே கேட்டுட்டு இருக்காதே கௌதம்… எல்லாத்தையும் கணக்கா செய்துட்டு தானே இருக்கேன் கௌதம்? உன்னை சும்மா விட்டுடலையே?”

அவரது கேள்வியில் முற்றிலுமாக உடைந்து போனான் அவன்… அவனது தன்மானம் மிகப்பெரிய கேள்விக்குறியாக அவன் முன் காட்சி கொடுத்தது… இதற்கும் மேல் தந்தையென்று ஒருவர் தேவையா என்று யோசிக்க ஆரம்பித்தான் கௌதம்!

கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பது போல பணத்தை கொண்டு எந்த தவறை வேண்டுமானாலும் சரி செய்து விடமுடியுமா? வெறும் பணக்கணக்கில் முடிந்து விடுவதா ரத்த பந்தம்? அந்த பணம் தனக்கு தேவையா?

புருவம் முடிச்சிட யோசித்தவன்… சட்டென்று நிமிர்ந்து…

“எனக்கு இனிமே நீங்க தேவையில்லை… உங்க பணம் தேவையில்லை… நீங்க வாங்கி கொடுத்த எதுவுமே தேவையில்லை… நாங்க இருக்க வீடு எங்கம்மாவோட சுய சம்பாத்தியம்… உங்க முகத்துல கூட விழிக்க மாட்டேன்… அங்க வராதீங்க… ” என்று இடைவெளி விட்டவன்…

“வந்தா மரியாதை கெட்டுடும்… ”

********

வருண் மெளனமாக மரத்தின் மேல் சாய்ந்து இருந்தான்… சற்று தூரம் தள்ளி கௌதம்! சௌமினி கைகளை கட்டி கொண்டு அவன் முன் நின்று கொண்டிருந்தாள்… பெருமழை பெய்து ஒய்ந்திருந்தது… வானம் நிர்மலமாக காட்சி தர… இருவரின் முகத்திலும் குழப்ப மேகங்கள்! கௌதம் எதையுமே பேசாமல் நிர்மலமான முகத்தோடு மரத்தின் மேல் சாயந்து கொண்டிருந்தான்…

“ச்சே இப்படி கூடவா பேசுவாங்க வருண்? அப்படி என்னடா இவன் அவங்களுக்கு செய்துட்டான்? அந்த அம்மா அளவே இல்லாம பேசறதுக்கு?” சௌமினி பொரிந்து கொண்டிருந்தாள்…

“செமி… என்ன இருந்தாலும் பெரியவங்க… ப்ளீஸ் அப்படி பேசாத… ” யாசிக்கும் குரலில் கூறினாலும் அதனுள் ஒளிந்திருந்த அதிகார பன்மையை அவளால் உணர முடிந்தது… அவனது குடும்பத்தை அவனால் என்றுமே விட்டு கொடுக்க முடியாதே!

“அவன் என்னோட கௌதம்… அவனுக்காக நான் பேசாம வேற யார் பேசுவாங்க? எனக்கு வந்த கோபத்துக்கு உங்க வீட்டுக்கு வந்து நல்லா கேள்வி கேட்டு இருப்பேன்… ”அவளது போக்கில் வெடித்து கொண்டிருக்க… அந்த வெடிப்பு வருணுக்கு உவப்பாக இல்லை…

“இங்க பார் செமி… அவனுக்காக நானே நிறைய பேசிட்டேன்… இதுக்கு மேல பேச ஒன்னுமில்ல… பெட்டர் விட்டுடு… ”

“எதை விட்டுட சொல்ற?” கூர்மையாக அவனை பார்த்தபடி…

“இந்த டாப்பிக்கை தான்… ஏன் கேட்கற?”அவளை உறுத்து விழித்தபடி அவன் கேட்க…

“இல்ல… உன்னை தானோன்னு நினைச்சேன்… ”

“லூசு மாதிரி உளறாத… ”

“சரி நான் கேட்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு வருண்… ஆதிரை உனக்கான பொண்ணா? இல்லையா?” அவனிடம் கிடுக்கி பிடி கேள்வியை எழுப்பி விட்டு அவனது முகத்தையே செமி பார்த்து கொண்டிருக்க… வருண் சங்கடத்தில் தவித்தான்… அவனால் பதில் கூற முடியவில்லை…

“செமி… ப்ளீஸ்… அந்த விஷயத்தை நான் பார்த்துக்கறேன்… ”

“எப்படி உங்க அப்பா அபிம்மா விஷயத்தை பார்த்துகிட்ட மாதிரியா வருண்?” கூர்மையான பார்வையோடு அவள் கேட்ட கேள்வியின் சாரம் சிறிது நேரம் கழித்தே பிடிபட… அவனது முகத்தில் கோப ரேகைகள்…

“செமி… இந்த மாதிரி பேசறதை விட்டுடு… எனக்கு பிடிக்கலை… ”

“அதுக்காக என் லைப்பை நான் பணயம் வைக்க முடியாதே… அபிம்மா மாதிரி… ” என்று கூறி முடிப்பதற்குள்

“சௌமினி… ” அடிக்குரலில் அழைத்து அவளை நிறுத்த கூறி கையை உயர்த்தினான்…

“ஸ்டாப் இட் சௌமினி… எங்க அப்பாவோட அபெர்ஸ் பத்தி யாரும் பேச தேவையில்லை… அது அவரோட பெர்சனல்… என் அப்பாவை நினைக்காம என்னை நினைக்க முடியலைன்னு உனக்கு தோன்றியதுன்னா பெட்டர் நாம பிரிஞ்சுடலாம்… ” கண்களை இறுக மூடியபடி கூறியவனை உணர்வை துடைத்த பார்வை பார்த்தாள் சௌமினி… கண்களில் வலி வலி என்று வலியை தவிர ஒன்றுமே இல்லை…

மூச்சை உள்ளே இழுத்து கொண்டு ஒரு முடிவுக்கு வந்தாள்… சற்று தூரத்தில் இந்த வாக்குவாதத்தின் சாரத்தை எடை போட்டபடி நின்றிருந்த நண்பனை பார்த்தாள்… அவளது மனதில் கோவென்று எழுந்த அலையை அடக்க முடியாமல் தவிப்பதை உணர்ந்த கௌதம் அவர்களை நோக்கி வர… தைரியம் வர பெற்றவளாக…

“தேங்க்ஸ் வருண்… தேங்க்ஸ் எ லாட்… குட் பை… ”என்று கூறியவள்…

“இனி என் லைப்ல உன்னை பார்க்கவே கூடாதுன்னு ப்ரே பண்ணிக்கறேன்… ”

மனதை திடப்படுத்தி கொண்டு கூறியவள் விடுவிடுவென்று சென்று விட… அதே இடத்தில் வெறுமையான பார்வையை சுமந்தபடி நின்ற வருணின் முதுகில் தட்டி கொடுத்த கௌதம்…

“டேக் இட் ஈசி வருண்… திஸ் கமிட்மென்ட் ஒன்ட் ஒர்க்… ”தெளிவான குரலில் கூற… கண்களில் அவனது வாழ்க்கை கண்முன்னே பறிபோனதை தடுக்க முடியாத அடிபட்ட பார்வை!

வருணுக்கும் பிரிந்தாக வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லை… சௌமினியும் பிரிந்து போக வேண்டும் என்று எண்ணவில்லை… ஆனாலும் பிரிந்தனர்!

error: Content is protected !!