CP21

CP21

அத்தியாயம் இருபத்தி ஒன்று

கீழுதடு கடித்து

சிரிக்கும் மென்சிரிப்பில்

உள்மடங்கிய

இதழில் நின்றாடுகிறது

உன் நாணம்!

-டைரியிலிருந்து

“ஹாய் எவ்ரிஒன்… ”

புன்னகையோடு வகுப்பறைக்குள் வந்த ஜிகே… தனது முழு உயரத்துக்கும் நிமிர்ந்து நின்று நிதானமாக கண்களை சுழற்றி பார்த்தான்… கையில் இருந்த அட்டன்டன்ஸ் ரெஜிஸ்டரை டேபிளின் மேல் வைத்து விட்டு அதே டேபிள் மேல் சாய்ந்து கைகளை கட்டி கொண்டு ஒவ்வொருவரையும் ஒரு முறை நிதானமாக பார்வையிட்டவனின் வட்டத்தில் விழுந்தாள் ஆதிரை…

அதுவரை முகத்தில் ஒட்டி கொண்டிருந்த புன்னகை மறைந்து முகம் ஒரு நொடி கறுத்து மீண்டது…

ஆறடி உயரத்தில் மாநிறத்தை விட சற்று கூடுதலாக… அழுத்தமான உதடுகளோடு கவர்ந்திழுக்கும் காந்த கண்களோடு… பார்மல்ஸில் வசீகரமாக இருந்த கௌதமை கண்களால் விழுங்கி கொண்டு இருந்தாள் அவள்…

“ஏய் ஆதி… அவர் இப்போது உனக்கு லெக்சரர்… லுக்கை மாற்றுடி… கிளாசில் மற்றவங்களுக்கு தெரிந்தா அவ்வளவுதான்… ” அருகில்இருந்த அனிஷா காதை கடிக்க…

“சோ வாட்… ஹி இஸ் மை கசின் அனி… ” கவலையே இல்லாமல் அனிஷாயிடம் கூறிவிட்டு அவளது வேலையை மீண்டும் ஆரம்பிக்க…

“உனக்கு நேரம் சரியில்லை ஆதி… சர் கிட்ட நீ இன்றைக்கும் வாங்கி கட்டியே ஆக வேண்டுமென்பது உனது விதி போல… ”

ஆதிரை காதில் எதையுமே வாங்கி கொள்ளாமல் அவனை மட்டுமே பார்த்தபடி இருந்ததை கண்ட அனிஷா குறுகுறுப்பாக அவளை பார்த்துவிட்டு வகுப்பை கவனிக்க துவங்கினாள்… இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே அட்டன்டன்ஸ் எடுக்க ஆரம்பித்து இருந்ததை கவனிக்காத ஆதிரை அவனை ரசித்து கொண்டிருக்க…

“நம்பர் த்ரீ… ” இரண்டாவது முறையாக அவன் அழைக்க… ஆதிரையோ வலது கையை கன்னத்துக்கு முட்டு கொடுத்து அமர்ந்து அவனை பார்த்திருக்க… அருகில் அமர்ந்திருந்த அனிஷாவும் தியாவும் திரும்பி இவளுக்கு என்னவாயிற்று என்று பார்த்தனர்…

“ஏய் ஆதி… ஆதி… ” தியா ஆதியின் முதுகில் அடித்து அவளை சுய உணர்வுக்கு கொண்டு வந்தாள்…

“என்னடி… ” எரிச்சலாக கேட்டவளிடம் ஜிகே அழைப்பதை சுட்டி காட்டும் முன்னே அவன் பொறுமை இழந்து “நம்பர் த்ரீ… ” என மூன்றாவது முறையாக சற்று அழுத்தமாக சப்தமாக அழைக்க… பதறி எழுந்தாள் ஆதி…

“ச்சே இந்த அம்மாவுக்கு விவஸ்தையே இல்ல… ஏன் தான் A ல ஸ்டார்ட் ஆகற பேர வைத்தார்களோ?” என்று மனதில் வறுத்து கொண்டே

“எஸ் சர்… ”என்று கூற… அவளை பார்த்து முறைத்தான் ஜிகே…

“என்ன செய்துட்டு இருக்கீங்க? காது கேட்கலைன்னா மெஷின வாங்கி மாட்டுங்க… இல்லை ட்ரீம்ல இருந்தா பெட்டர் லீவ் எடுத்துகோங்க… அடுத்த முறை இப்படி செய்தா உங்களுக்கு ஆப்சென்ட் போட்டுட்டு போய்டுவேன்… புரிந்ததா?” ஆங்கிலத்தில் பல்லை கடித்து கொண்டு திட்ட துவங்கியவனை புன்னகை முகம் மாறாமல் பார்த்து கொண்டிருந்தவள்…

“எஸ் சர்… ஓகே சர்… ” பரவசமாக கூற… அவனுக்கு தலையிலடித்து கொள்ள வேண்டும் போல தோன்றியது…

“சிட் டவுன்… ” பல்லை கடித்து கொண்டு கூறியவன்… மீதத்தையும் முடித்து விட்டு…

“யார் இங்க அட்டன்டென்ஸ் இன்சார்ஜ்?” பொதுவாக அனைவரையும் பார்த்து கேட்க… தயங்கி கொண்டே எழுந்து நின்றாள் ஆதிரை… கிளாஸ் ரெப்பாக இருந்து கொண்டு அவனிடம் இப்படி பாட்டு வாங்கி இருக்கிறோமே என்ற உணர்வு அப்போதுதான் அவளுக்கே தோன்றியது… அதற்கு தகுந்தார் போல இகழ்ச்சியான புன்னகை அவனது உதட்டில் நெளிந்தது…

“நான் இப்போ நோட் பண்ணிட்டேன்… அடுத்த ஹவருக்கு வர்ற ஸ்டாப் கிட்ட சைன் பண்ண கொடுத்துடுங்க… ” எதையும் காட்டிகொள்ளாத குரலில் அவன் கூற… தலையை ஆட்டிய ஆதிரை…

“ஓகே சர்… ” பவ்யமாக கூறினாள்… பாட்டு வாங்கிய எபெக்ட் தெரிந்தது அவளது முகத்தில்…

“அப்போவும் தூங்கிடாதீங்க… இன்னொரு முறை இப்படி இருந்தா… என்னோட ஹவருக்கு ரெப் தனியா தேட வேண்டி இருக்கும்… புரிந்ததா?” அவனது இந்த கேள்வி அவளை எரிச்சல் படுத்தியது… தனது தோழர் தோழியருக்கு முன்… அவனது இந்த செயல் அவளுக்கு தலையிறக்கமாக இருக்க… நிமிர்ந்து நின்ற ஆதிரை…

“ஆஸ் யூ விஷ் சர்… ” என்று வேகமாக கூறிவிட்டு அமர்ந்தவளுக்கு கௌதமை நினைத்து கடுப்பாக இருந்தது… சிறுவயதில் பார்த்த கௌதம் எங்கே? ஊட்டியில் பார்த்த பின் அவனை பார்க்கவில்லை என்றாலும் அவனை பேச்சு அவ்வபோது வந்து கொண்டுதானிருந்தது… விசாலாட்சி அவ்வபோது அவனை பற்றி கூறி கண் கலங்கும் போதெல்லாம் மனம் கனக்கும்…

“கௌதம் இன்றைக்கு என்னை கோவிலில் பார்த்தான்… அபிராமி கூட நல்லாத்தான் பேசினா… ஆனா கௌதம் என்னை திரும்பி கூட பார்க்க்கலை… முகத்தில் அடித்த மாதிரி போய்ட்டான்… நான் என்ன தப்பு செய்தேன் மாமா… அபி என்ன செய்தா? செய்தது எல்லாம் நீங்க… உங்க அப்பா… சிவகாமி அண்ணி… அவனை என்னோட மூத்த பிள்ளையா தானே பார்த்தேன்… என்னையும் ஏன் இப்படி படுத்தி வைக்கறான்?” இயல்பான பாசத்தோடு அவர் சிதம்பரத்திடம் கேட்கும் போது அவரிடம் பதில் இருந்தது இல்லை…

கௌதமுக்கும் தங்களது குடும்பத்துக்கும் சாலா அத்தை கூறிய அபிராமிம்மாவுக்கும் என்ன தொடர்பு என்று கூட அவளுக்கு புரிந்தது இல்லை… அவளுக்கும் வள்ளியம்மைக்கும் புரிந்தது எல்லாம் கௌதம் விசாலாட்சிக்கும் சிதம்பரத்துக்கும் முக்கியமான உறவினன் என்பது தான்… வள்ளியம்மைக்கு அவன் மிகவும் விருப்பமான சகோதரன்… வள்ளியம்மையை அண்ணா என்றே அழைக்க பழக்கியிருந்ததால் தனக்கு அவன் முறையாகிறான் என்பது தான் ஆதிரை அறிந்தது…

அதற்கு மேல் கேட்டாலும் யாரும் வாய் திறவாத காரணத்தால் அவர்கள் இருவருமாகவே அவ்வப்போது கௌதமை பற்றியும் அபிராமியை பற்றியும் பேசிக்கொள்வார்கள்… வள்ளியம்மைக்கு மிக பிரியமானவன் என்பதாலும் அவள் பெரும்பாலும் கௌதமை பார்க்க முடியாததை நினைத்துவருந்தி கொண்டிருப்பாள் என்பதாலும் ஆதிரைக்கு அவன் மிக மிக பிரியமானவன் ஆகியிருந்தான்…

ஆனால் வருணின் அணுகுமுறை இவர்களுடையத்தில் இருந்து மாறுபட்டது… இதில் உடன் படித்தவர்கள் வேறு ஆனாலும் அவனை பற்றிய பேச்சுக்களை தவிர்ப்பதில் அவன் விலாங்கு மீன் என்றே கூற வேண்டும்…

“அண்ணா… உங்க ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் எல்லாருமே மீட் அப் பண்றாங்களாமே… ” மூன்று மாதத்துக்கு முன்பு வருணிடம் கேட்டபோது…

“ஆமா… உனக்கு யார் சொன்னது அம்மு?”

“இதென்ன அவ்வளவு ரகசியமா? மது அக்காவோட கசின் என்னோடதானே படிக்கறா… அவ சொன்னா… மது அக்கா ஸ்டாக்ஹோம்ல இருந்து அவ ஹஸ்பன்டோட இதுக்காகவே வர்றாளாம்… ” ஆர்வமாக வள்ளியம்மை கூறிக்கொண்டிருக்க… சுற்றும் முற்றும் பார்த்த ஆதிரை… இருவரிடமும் கிசுகிசுப்பான குரலில்…

“அப்போ சௌமினி அக்கா வருவாங்க தானே வருண் மாமா?” வருணின் எண்ணத்தை அறிய ஆவலாக இருந்த இருவரும் அதே ஆர்வத்தோடு வருணை பார்க்க…

“ப்ச்… யார் வந்தா என்ன வராட்டி என்ன பொடுசு? நான் போக மாட்டேன்… ” முடிவான குரலில் அவன் கூற இருவருக்குமே ஏமாற்றம்… ஆனால் அவனுக்குள் இருந்த வலி அவன் மட்டுமே அறிந்த ஒன்று… அதை யாருமே அறிய அவன் விரும்புவதில்லை… முதல் காதலும் முதல் முத்தமும் கடைசி வரை மறக்காதே… !!!

“ஏன் மாமா?

“ஏன் ண்ணா?” இருவருமே ஏக காலத்தில் கேட்டு வைக்க…

“அதெல்லாம் முடிந்து போன கதை பொடுசுங்ளா… இப்போ நீங்க ஓட போறீங்களா இல்லையா?”என்று விரட்டியவனை பாவமாக பார்த்தாள் வள்ளியம்மை…

“ண்ணா… ப்ளீஸ்… மீட் அப்க்கு போண்ணா… சௌமியும் வருவாங்க… உங்க மனஸ்தாபத்தை பேட்ச் அப் செய்யலாம்… அப்புறம்… இன்னொன்று முக்கியமா கௌதம் அண்ணா வருவாங்க இல்லையா… எப்படியாவது சமாதானம் செய்து கூட்டிட்டு வாங்கண்ணா… ப்ளீஸ்… ” ஏக்கமாக வள்ளியம்மை கேட்க… வருண் உணர்வை துடைத்த பார்வையோடு இருவரையும் பார்த்தவன்…

“நமக்கு கிரீடம் இருப்பதா வெளியில் இருப்பவங்க நினைக்கலாம் அம்மு… ஆனா நமக்கு இருப்பது நம்ம தலையை அழுத்திகிட்டே சுமையா இருக்க முள் கிரீடம்… நாம நினைத்த மாதிரி வாழ்க்கைய அமைத்து கொள்ளவோ… அதை தாண்டி வெளிய வரவோ முடியாதுடா… நமக்குன்னு அமைக்கப்பட்ட வாழ்க்கைய வாழ்ந்துட்டு போறதுதான் புத்திசாலித்தனம்… இல்லைன்னா… ”என்று நிறுத்தியவன்… தனது தந்தையையும் அபிராமிம்மாவையும் நினைத்து கொண்டு…

“எத்தனையோ பேரோட வாழ்க்கை சின்னாபின்னமாகிடும்… ” பெருமூச்சோடு கூறி முடிக்க… அவனது வார்த்தைகள் டீனேஜின் முடிவில் இருந்த இருவருக்குமே விளங்கவில்லை… அப்படி என்ன இருக்கிறது வருண் இந்த அளவுக்கு மனம் உடைந்து சொல்வதற்கு என்பது புரியாமல் அமர்ந்து இருந்தாள் ஆதிரை வகுப்பறையில் கௌதமை பார்த்தபடி…

இவனிடமாவது இதற்கான பதில் இருக்குமா என்று தேடித்தான் அவனை துரத்தினாள்… ஆனால் இப்போதோ அவனது பார்வையின் சிறையில் தான் சிக்கி விட்டது போன்ற தோற்றம் அவளுள்… முன்தினம் அவனை வம்பிழுக்க அவள் செய்த செய்கை அவளுக்கே அதிர்வை கொடுத்து இருந்தது அதை பற்றி ஆராயும் போது!… வீட்டிற்கு வந்த போது எதிரில் தாயை பார்க்கும் போதே நடுங்கியது… வள்ளியம்மையிடம் எதை பற்றியும் பேச தயங்காத மனம் கௌதமை பற்றி கூறத்தயங்கியது…

கௌதமை பற்றிய தனது நிலை தான் என்ன என்பது அவளுக்கே புரியவில்லை… ஈர்ப்பா அதையும் தாண்டிய ஒன்றா? எப்படி வகைப்படுத்துவது என்பதும் புரியவில்லை ஆதிரைக்கு…

மனதினுள் இத்தனையும் ஓடி கொண்டிருந்த போதும் கண்கள் முழுக்க அவன் மேலேயே பதிந்து இருக்க… பார்வையை அவளால் விலக்கவே முடியவில்லை… பாடத்தை முடித்து விட்டு கூடுதல் தகவல்களாக தற்போது கேரளாவில் ecofriendly கட்டிடங்களாக லாரி பேக்கரின் கட்டுமான திட்டங்கள் செயல்படுத்தபடுவதை கூறி கொண்டிருந்தவன்…

“ஆதிரை கெட் அப்… ” கறாராக அழைத்தான் ஜிகே… சட்டென அடித்து பிடித்து எழுந்து நின்றவளை பார்த்து…

“சுவர்களுக்கு டைல்ஸ் ஓட்டுவது தேவை இல்லையென்று லாரி பேக்கர் கூறியிருக்கிறார் என்று கூறினேன் அல்லவா? அதன் காரணம் என்ன?” ஜிகே கூறியதிலிருந்து கேள்வியை கேட்க… அருகில் அமர்ந்திருந்த தியாவும் அனிஷாவும் சங்கடமாக ஆதிரையை பார்க்க… ஆனால் ஆதிரையோ…

“சுவர்கள் சுவாசிக்க வேண்டும் சர்… சுவர்கள் சுவாசித்தால் தான் அந்த வீட்டில் குடியிருப்பவர்களுக்கு ஆரோக்கியமான காற்று கிடைக்கும்… அதனால் லாரி பேக்கர் டைல்ஸ் ஓட்ட கூடாது என்று கூறியிருக்கிறார்… மேலும் சுவர்களுக்கு மேல்பூச்சு பூசாமல் இருக்கும் பட்சத்தில் சுவாசமானது மேலும் நன்றாக இருக்குமென்றும் பூட்டிவிட்டு செல்லும் வீட்டிலும் கூட அடைத்து வைத்த வாடை வராது என்றும் கூறியிருக்கிறார்… ” அவளது தெளிவான பதிலை கேட்டு தனக்குள்ளாக பாராட்டி கொண்டவன்… அவன் வரைந்திருந்த லாரி பேக்கரின் அறையின் அமைப்பும் கட்டுமான செலவுக்குமான வரைபடத்தை குறிப்பிட்டு…

“இதில் ஒரு சிறிய தவறு இருக்கிறது… அது பேக்கரின் தவறா அல்லது அச்சமைப்பின் தவறா என்பதை நாம் விவாதிக்க போவதில்லை… ஆனால் என்ன தவறு என்று சுட்டி காட்ட முடியுமா?”

“சதுர அமைப்பிலான அறையை அமைக்க ஆகும் செலவை விட செவ்வக அமைப்பிலான அறையை குறைவான செலவில் அமைக்கலாம் என்று இருக்கிறது சர்… அது முடியாது என்று நான் நினைக்கிறேன்… ” என்று அவள் கூறும் போது அவனது முகம் அவளுக்கான பாராட்டை தெரிவிக்க…

“எப்படி என்று சொல்ல முடியுமா?”

“சதுரத்தை எடுத்து கொண்டால் எடுத்துகாட்டாக நான்கு யூனிட் ஒரு சுவரின் அளவை என்று இருக்கும் போது சுற்றளவு பதினாறு யுனிட்கள் வரும்… அதே சமயம் செவ்வக அமைப்பில் 8+2+8+2 என்று இருபது யூனிட்கள் வரும்… அதனால் செவ்வக அமைப்பில் செலவினங்கள் சதுரத்தை விட அதிகமாகுமே தவிர குறையாது என்று நினைக்கிறேன்… ” தெளிவாக எடுத்து கூறியவளை மனதுக்குள் பாராட்டி கொண்டவன்…

“குட்… பரவால்லை… தூங்கிட்டே இருந்தா கூட படித்து விடுவாய் போல இருக்கிறது… ” சிரித்து கொண்டே ஜிகே கூற… அதற்கு அனைவரும் சிரித்து வைக்க… அவனை முறைத்து கொண்டே அமர்ந்தாள்…

“வட்ட அமைப்பும் சதுர அமைப்பும் செவ்வக அமைப்பும் ஓரே ஏரியா தான் என்றாலும் நம்முடைய தேவைகளை கருத்தில் கொண்டு அமைப்பது நல்லது… இந்த முறையில் கட்டிடத்தை அமைக்கும் போது காற்றோட்டமும் அதிகரிக்கும்… அதே போல செங்கல் சுவர்களை பூசாமல் விடுவதன் மூலம் மழைக் காலத்தில் வீட்டின் உள்ளே வெப்பமாகவும் வெயில் காலத்தில் உள்ளே குளிர்ச்சியாகவும் இருக்கும்… செலவும் குறைவு… ”

ஜிகே விளக்கி கொண்டிருக்கும் போது எழுந்த ஆதிரை…

“சர்… எனக்கு ஒரு டவுட்… ”உதட்டை சுளித்து கொண்டு கேட்க…

“எஸ்… கேளுங்க… ”அவன் ஊக்க…

“செங்கல்களை பூசாமல் விடலாம் என்று கூறுகிறீர்களே… அது எப்படி முடியும்? தண்ணீர் உறிந்து கட்டிடம் உலுத்து போய் விடாதா?”

“கண்டிப்பாக… ஆனால் சரியாக முறையாக வர்ணம் பூசுவதன் மூலம் இதை தடுக்கலாமே… அதோடு ராட் ட்ராப் பான்ட், இங்க்லீஷ் பான்ட் என்று செங்கல்களை கட்டுவதற்கு நிறைய முறை இருக்கிறது… அதை பற்றியெல்லாம் இனி படிப்பீர்கள்… அப்போது அதை பற்றிய தெளிவு கிடைக்கலாம்… ”என்று கூறி கொண்டிருக்கும் போதே அந்த பாடவேளை முடிய… கைகளை திருப்பி தனது ரோலக்ஸ் வாட்சை பார்த்து விட்டு…

“ஓகே கைஸ்… டைம் டு பினிஷ்… சீ யூ டுமாரோ… ”

புன்னகையோடு வெளியேறியவனை மீண்டும் துரத்தி பிடிக்க ஓடினாள் ஆதிரை… உடன் அமர்ந்திருந்த அனிஷாவுக்கும் தியாவுக்கும் சாதனாவுக்கும் அவளது செய்கை மிகுந்த குழப்பத்தையும் எரிச்சலையும் தர…

“என்னடி இவ… சர் கொஞ்சம் கூட இவளை மதிக்க மாட்டேங்கறாங்க… ஆனா அவரையே பிடிச்சுட்டு தொங்கறா?”அனிஷா முதல் நாளையும் நினைவில் வைத்து கொண்டு குமுற…

“அது அவளோட பர்சனல் அனி… ஏதோ பேமிலி இஸ்யுன்னு சொன்னா இல்லையா… நமக்கு என்ன?” தியா அவளை அடக்க… அதற்கு காரனமானவளோ ஜிகே முன்பு குறும்பு பார்வையோடு நின்று கொண்டிருந்தாள்… மூச்சிரைக்க வந்து நின்றவளை பார்த்தவனது கண்களில் கேலி… அதை அவளும் தான் உணர்ந்தாள்…

“வேறு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?” வெகு தெளிவாக வேறு எதை பற்றியும் உன்னிடம் பேச நான் தயாராக இல்லைஎன்பதை அவனது செயல்கள் கூற… அதை பற்றியெல்லாம் கவலையே இல்லை என்பதை போல முகத்தை வைத்து கொண்டு…

“ஆமாம் சர்… இருக்கிறது… ”என்று அவனது முகத்தை ஆர்வமாக பார்க்க… என்னவென்பதை போல பார்த்தவனிடம்…

“உங்களது போன் நம்பர் என்ன என்ற கேள்விதான்… ” சிரிக்காமல் அவள் கூற… அவனுடைய முகத்தில் சிறு புன்னகை மலர்ந்தது…

“எதற்கு… போன் செய்து நீங்கள் தாஸா இல்லை லார்ட் லபக்கு தாஸா என்பது போல கேட்கவா?” கிண்டலாக அவன் கேட்க…

“ச்சே ச்சே அப்படியெல்லாம் நான் கேட்கமாட்டேன்… அது தியா அனியின் வேலை… ” என்று சிரித்தவள்… “இப்போ உங்க கேர்ள்ப்ரென்ட் கணக்கு என்னவென்று மட்டும் தான் கேட்பேன்… ” அவனை குறும்பாக பார்த்து கேட்க… அவனுமே அந்த கேள்வியில் சிரித்து விட… அந்த அழகான உயிரோட்டமான வசீகரமான வசிய சிரிப்பு ஆதிரையின் மனதில் கல்வெட்டாக பதிந்து போனது…

“கண்டிப்பாக இப்போது நீ அந்த லிஸ்டில் இல்லை ஆதி… அந்த கௌதமும் இப்போது இல்லை… அதெல்லாம் ஒரு காலம்… கவலைகள் இல்லாமல் வாழ்ந்த காலம்… ” புன்னகையை கைவிடாமல் அவன் கூற… அவள் அவனது வார்த்தைகளை கவனித்தாளா என்ன?

‘ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்… ’ பின்னணியில் பாடல் ஒலிப்பது போல தோன்றியது… அங்கு சுழன்று ஆடியது வேண்டுமானால் நீலாம்பரியாக இருக்கலாம் இங்கு சுழன்று கொண்டிருப்பது இவளது விதி என்பதை அறியாத அந்த மான் தன்னை வேட்டையாட காத்திருந்த வேடனை… ரசித்து கொண்டிருந்தது… தானாக அவனது வலையில் சிக்க துவங்கியிருந்தது…

அவனது சிரிப்பில் தடுக்கி விழுந்த அந்த கணத்தில்… சிக்குண்டு மீளும் வழி தெரியாத அந்த நொடியில்… தன்னை தொலைத்த அந்த நேரத்தில் உணர்ந்தாள்… அவனே அவளது வாழ்வென்று! எதற்காகவும் அவனை விட்டு கொடுக்க முடியாதென்று!

அவனது புன்னகை தந்த மயக்கத்தில் மேகத்தில் நடைபயின்றவள் அடுத்த நாளே வருணின் கோபத்தில்… அவன் வெடித்த வெடிப்பில் கட்டாயமாக தரையிறங்கினாள்…

error: Content is protected !!