CP22
CP22
அத்தியாயம் 22
நீ
அள்ளிமுடிகையில்
தவறும் கற்றை கூந்தலில்
ஊஞ்சலாடுகிறது
என் வானம்!
-டைரியிலிருந்து
மணி இரவு ஒன்பதை நெருங்கி கொண்டிருக்க… ஊர் மெதுவாக அடங்க துவங்கியிருந்தது… ஆனால் பழைய மகாபலிபுரம் சாலையில் இருந்த அந்த பப் அப்போதுதான் உயிர்க்க ஆரம்பித்து உற்சாகத்தில் தள்ளாடி கொண்டிருந்தது… உழைத்து களைத்த கீழ்தட்டு மக்களுக்கு டாஸ்மாக் என்றால் மேல்தட்டு வர்க்கத்துக்கு இது போன்ற ‘சில் அவுட் சோன்’…
“ஹாய் வருண்… ” அணைத்து வரவேற்றான் சரவணன்… வருணின் நண்பன்… அவனது அழைப்பின் பெயரில் அவன் தரும் பார்ட்டிக்காக வந்திருந்தான் வருண்… இருவருமே தத்தமது தந்தையரின் வியாபாரத்தில் கால் பதித்து இருந்தனர்… வருண் அகமதாபாத் ஐஐஎம்மில் மேனேஜ்மென்ட் முடித்து விட்டு தந்தையோடு வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்து இருந்தான்…
இது போன்ற பார்ட்டிகள் அவர்களுடைய உலகில் வெகு சகஜம்… வருணுக்கு அதில் பொருந்தி போவதில் பிரச்சனை எதுவும் வந்ததில்லை என்றாலும் ஒரு அளவுக்கு மேல் இவற்றை ரசிப்பதில்லை… மதுவும் ஜஸ்ட் ஒரு சிப்போடு நின்றுவிடும்… யாரும் கேட்பதில்லை என்பதற்காக வரைமுறை இல்லாமல் வாழ்வதில் அவனுக்கு உடன்பாடு இருந்ததில்லை…
அதே போல பெண்கள் விஷயத்திலும் அப்படியே… தந்தையின் வாழ்க்கை அவனுக்கு படிப்பித்ததெல்லாம் ஒன்று தான்… தேவைக்கு மேல் இருக்கும் ஒவ்வொன்றும் பிரச்சனைக்கு உரியவையே! தந்தையை போலவே மகன் என்ற பெயரை மட்டும் எடுத்துவிட கூடாது என்பதில் மிகமிக கவனமாக இருந்தான்… ஆனாலும் தந்தையை அவனால் எங்குமே விட்டுத்தரவும் முடியாது…
தனக்கு ஒருத்தி மட்டுமே என்பதில் தெளிவாக இருந்த வருணால் சௌமினியை மறக்கவே முடிந்ததில்லை என்பது மட்டும் உண்மை… தனிமையான பொழுதுகளில் எல்லாம் அவளது நினைவு மட்டுமே அவனுக்கு துணை என்பதும் உண்மை…
மேலும் இரண்டு நண்பர்களும் சேர பார்ட்டி களை கட்டியது… நண்பர்களுக்குள் சுவையான பேச்சும் சிரிப்புமாக நேரம் கழிய… சரவணன் யாரையோ பார்த்தபடி சிரித்து கொண்டே எழுந்தான்… வரவேற்கும் முகமாக… !
“ஹாய் ஜிகே… ” கைகளை விரித்து வரவேற்க… வருண் முகத்தை சுருக்கி திரும்பி பார்த்தான்…
கௌதம் தான் வந்து கொண்டிருந்தது… அதே புன்னகை முகத்தோடு… அவனுடைய நண்பர் கூட்டம் ஒரு பக்கம் இருக்க… சரவணனை நோக்கி வந்து கொண்டிருந்தான்…
“ஹாய் சரவணா… எப்படி இருக்கே?” இயல்பான நலம் விசாரிப்போடு மூவரையும் பார்த்து புன்னகைத்தவன்… வருணை பார்த்து…
“ஹாய் வருண்… பார்த்து ரொம்ப நாளாச்சுல்ல… ” தயக்கமில்லாமல் அவன் பேசுவதை கண்ட வருணுக்கு ஆச்சரியமாக இருந்தது… அவன் இதுபோல தன்னிடம் பேசுபவன் கிடையாதே… என்ன காரணமாக இருக்குமென்ற எண்ணம் அவனையுமறியாமல் அவன் மனதில் ஓடி கொண்டிருக்க…
கேள்விக்குரியவனோ அதை பற்றி சிறிதும் கவலையே இல்லாமல் வருணை பார்த்து புருவத்தை உயர்த்தி புன்னகைத்தான்… அந்த செயல் வருணுக்கு எதையோ உணர்த்தியது… தவற ஆரம்பிக்கும் போது குற்ற உணர்ச்சியை குறைத்து கொள்ள பாதிக்கப்பட போகும் ஒருவரிடம் காட்டும் இணக்கமாக பட்டது… அது அவனது கற்பனையா அல்லது அதுதான் உண்மையா என்பதும் அவனுக்கு விளங்கவில்லை…
வருண் அவனது நினைவில் மூழ்கி இருக்க… சரவணன் ஜிகேவிடம் பேசிக்கொண்டிருந்தான்… ஒருவாறாக முடித்து விட்டு போகும் போது வருணை பார்த்த ஜிகே… புன்னகையோடு அவனருகே சென்றவன், காதில் கிசுகிசுக்க… முதலில் புரியாத பார்வை பார்த்த வருண்… அதன் பின் கோபத்தில் கொதிக்க ஆரம்பித்தான்…
*******
“அந்த எல்லோ செல்ப் பார்டர் எடுங்க… ”
“சில்வர் க்ரே வித் பிங்க் காம்பினேஷன் நன்றாக இருக்கு அண்ணி… நீங்க எடுங்க… ”
ஒவ்வொருவராக சேலைகளை பரிசீலனை செய்து கொண்டிருக்க… சென்னையின் அந்த பிரபலமான கடையை சேர்ந்த சிப்பந்திகள் சற்று திணறித்தான் போனார்கள்…
சிவகாமி சென்னையில் இருக்கும் போது இது போன்ற களேபரங்கள் அடிக்கடி நடப்பவை தான்… தான் படுத்துவது போதாமல் தனது உறவு பெண்களையும் அழைத்து வீட்டில் வைத்து கொண்டு… அவருக்கு ராசியான கடையிலிருந்து பட்டு சேலைகளை தருவித்து வீட்டிலேயே ஷாப்பிங் செய்வது அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று…
“அம்மா… கடைக்கே போகலாம்… ப்ளீஸ்… இதென்ன பழைய கால பழக்கம்… ?”
ஆதிரை தரையை உதைத்து கொண்டு சிணுங்கும் போதெல்லாம்…
“இங்க பார் ஆதி… நம்ம ஸ்டேடசுக்கு அவங்க தான் நம்ம வீட்டை தேடி வரணும்… நாம அவங்க கடைய தேடி போகக்கூடாது… புரியுதா?” கறாராக கூறிவிடுவார்… ஆதிக்கும் வள்ளியம்மைக்கும் பிடிக்கவே பிடிக்காத பழக்கம் இதுவென்றாலும் எதிர்க்க முனைந்ததில்லை…
ஆனால் வருண் இவற்றை கடக்கும் போது வெறுத்த பார்வையொன்றை வீசி செல்ல தயங்கியதில்லை… தான் கெடுவதும் இல்லாமல் ஒரு கூட்டத்தையே சேர்த்து கொண்டு இருக்கும் அத்தையை கேட்க யார் இருக்கிறார்கள்? எரிச்சலோடு ஆற்றாமையும் இயலாமையும் சேர்ந்து கொள்ளும் அவனுக்கு!
‘மேலும் எத்தனை நாட்களுக்கு இவரால் இப்படி ஸ்டேடஸ் என்று பேசிக்கொண்டிருக்க முடியும்?அடுத்த நிமிடம் நமக்கு சொந்தமாக இல்லாத போதே மனிதன் இப்படி ஆடினால் வாழ்க்கையை கேரண்டி புத்தகத்தோடு வாழ கடவுள் மனிதனை பூமிக்கு அனுப்பியிருந்தால்? நினைத்து பார்க்கவே முடியவில்லை… ’ என்று நினைத்து கொள்வான் வருண்… அதை ஆதிரையிடமும் கூறவும் செய்வான்…
அப்படி அவன் கூறும் போது வெளிகாட்டமுடியாத உணர்வோடு கடந்து விடுவாள் ஆதிரை…
இப்போதும் அதே உணர்வோடு தான் கடந்து கொண்டிருந்தான்… முந்தைய இரவின் கோபம் வேறு… இப்போது விஸ்வரூபமாய்! விடுமுறை பொழுதை கழிக்க விடாமல் அமைதியில்லாமல் மனம் தவித்தது… எங்காவது அமைதியான இடத்தை தேடி பறந்து செல்ல சொன்னது மனது…
சிவகாமியின் குரல் அதிகாரமாக அவனை நிறுத்தியது… உடன் ராஜேஸ்வரி அத்தையும் இருந்ததால் வேறு வழியில்லாமல் நின்றான் வருண்…
“வருண்… இந்த லேவண்டர் நல்லா இருக்குமா? பிங்க் நல்லா இருக்குமா?” இரண்டு சேலைகளை காட்டி அவனிடம் கருத்தை கேட்டு வைத்த சிவகாமி அத்தையை புரியாத பார்வை பார்த்தான் வருண்…
“அத்தை சாரி பற்றியெல்லாம் எனக்கு என்ன தெரியும்? அதெல்லாம் நீங்களே பார்த்துக்கங்க… ”என்றவாறே அவன் அந்த இடத்தை விட்டு அகன்று அவனது மாடியறைக்கு செல்ல முயல… சிவகாமி அவனை விடாமல்…
“இப்படி இருந்தா கல்யாணத்துக்கு பின்னாடி ஆதிக்கு ஒரு சாரி கூட செலக்ட் செய்து தர மாட்ட போல இருக்கே… ”
சிரித்து கொண்டே அவர் கூற… வருண் அதிர்ந்து நின்றான்… அவனால் ஆதிரையை அவ்வாறு கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை… அவனது மனதில் நிலைகொண்டுவிட்ட உருவத்தை தவிர இன்னொருத்தியை வாழ்க்கை துணையாக ஏற்று கொள்வதில் உள்ள சங்கடத்தை அவன் அப்போது அனுபவித்து கொண்டிருந்தான்…
ஆதிரையின் மேல் மிகவும் ப்ரியம் உண்டுதான்… வள்ளியம்மையை போல அவளும் அவனுடைய இளவரசி தான்… ஆனாலும் வள்ளியம்மைக்கும் ஆதிரைக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் கண்டதில்லை!
ஆதியின் நிலையோ அதையும் தாண்டி இருந்தது…
அவள் எப்போதுமே வருணை அவ்வாறு பார்த்ததில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் இப்போது கௌதமை அப்படி பார்க்க ஆரம்பித்து இருந்தாளே! அவளால் எப்படி வருனோடு தன் தாய் தன்னை சேர்த்து வைத்து பேசுவதை சகிக்க முடியும்? முகம் அஷ்டகோணலாக மாற… சிவகாமியை பார்த்து முறைத்தாள் ஆதிரை!
“ம்மா… உளராதம்மா… கண்டபடி கற்பனை செய்துகிட்டு இருக்காதே… ”
வருணுக்கு தனது அத்தை இவ்வாறு பேசியதும் பெரிதாக தோன்றவில்லை… ஆனால் அதை மறுத்து ஆதி கூறிய முறை அவனை கூர்ந்து நோக்கசெய்தது… எப்போதும் அவளிடம் பாராத எரிச்சல்… அந்த எரிச்சல் வேறு ஒருவரிடம் காதல் வயப்பட்ட பெண்ணுக்கே உரிய எரிச்சல் என்பது அவன் அறிய முடியாததா என்ன? அவனும் ஒரு பெண்ணின் உணர்வுகளை நெருக்கமாக உணர்ந்தவன் தானே!
தாயை கடிந்தவளை கூர்மையாக பார்த்தான் வருண்… அந்த கூர்மை ஆதிரையை கணக்கெடுத்து கொண்டிருந்தது என்பதை அவளுமே உணர்ந்தாள்… நிமிர்ந்து பார்க்க முடியவில்லை… வருண் வலிந்து எதையோ அவளிடம் கேட்டு கொண்டிருந்ததை போல உணர்ந்தாள்…
“ஏய் ஆதி… என்ன வாய் நீளுது?”சிவகாமி மீண்டும் எரிச்சலாக கேட்டுவைக்க… ஆதிரை தனது எரிச்சலை வெளிப்படையாக முகத்தில் காட்டினாள்…
“வருண் மாமாவை நான் அப்படி நினைக்கவே இல்லைம்மா… சொன்னா உனக்கு புரியவே புரியாதா?”சிவகாமி பேசுவதற்காக வாய் திறக்க போக… வருண் கோபமாக இடையிட்டான்…
“ஆதி… மேலே வா… ” பல்லை கடித்து கொண்டு அவளை அழைத்து போக… ஜோடியாக அவர்களை பார்த்த சிவகாமிக்கும் ராஜேஸ்வரிக்கும் மனதில் வெகு திருப்தி… ஆனால் விசாலாட்சிக்கு தான் என்ன நடக்குமோ என்ற பயம் இருந்தது… ஆதி வருண் என இருவரை பற்றியும் முழுவதுமாக அறிந்தவர் ஆயிற்றே…
வருண் வேகமாக அறைக்குள் போக… பின்பற்றி கொண்டு போன ஆதிரை…
“என்ன வருண் மாமா? என்ன விஷயம்?”கேட்டு கொண்டே உள்ளே நுழைய… அவசரமாக கதவை தாளிட்டான்… இருவரும் பேசுவது தனிப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக… புரிந்து கொள்ளாத சிவகாமி அத்தை எதையாவது தவறாக நினைத்து விட்டால்?
“என்ன நடக்குது ஆதி?”கதவை தாளிட்டு விட்டு அவளை நேராக பார்த்து கேட்டு வைக்க… அவன் என்ன கேட்கிறான் என்பதே அவளுக்கு உடனே புரியவில்லை…
“என்ன மாமா?”புரியாத பார்வையோடு கேட்க…
“நான் நேராக தான் கேட்கிறேன் ஆதி? வாட் இஸ் குக்கிங் பிட்வீன் யூ அன்ட் கௌதம்?” அடக்கி வைக்கப்பட்ட கோபத்தோடு வருண் கேட்க… ஆதிக்கு கௌதமின் பெயரை கேட்டவுடன் லேசாக வியர்க்க துவங்கியது…
“கௌதம் மாமாவா?… ம்ம்ம்… ”என்று தயங்கியவளை கோபமாக பார்த்தான் வருண்… வருணுக்கு எந்த அளவில் தெரியும் என்கிற தவிப்பு அவளது முகத்தில்… கௌதமிடம் எதுவும் பேச கூட இல்லையே… அதற்குள் வருணை சமாளிப்பது என்றால்? ஆதிரைக்கு மூச்சடைத்தது!
“ஸ்பீக் அவுட் ஆதி… ”அதீத கோபம் இருந்தாலும் தன்னுணர்வுகளை வெகுவாக அடக்கி கொண்டு வருண் கேட்டு கொண்டிருக்க…
“இன்னும் ஒன்றுமில்லை வருண் மாமா… பட்… ”என்று கூற… வருணுக்கு தலை சுற்றியது… எப்படி இவளை சந்திக்க முடிந்தது அவனால்?… சிவகாமியின் அத்தனை பாதுகாப்பு வளையத்தையும் எப்படி அவனால் தாண்ட முடிந்தது என்ற உணர்வு அவனை அலைகழிக்க…
“ஆதி… நீ சொல்றது உனக்கே அபத்தமா தெரியலையா?”
“இல்லை வருண் மாமா… ”என்று அவள் திணற…
கௌதம் கூறியபோதும் வருண் அவனை நம்பவில்லை… எப்போதுமே அவனை கலியுக கண்ணனாகவே பார்த்து வந்திருந்தவனுக்கு அவனது வார்த்தைகள் பெரிதாக பாதித்து விட வில்லை… ஆனால் இப்போது ஆதிரையின் தவிப்பும் தயக்கமும்… அதை தாண்டி முகத்தில் தெரியும் சிறு வெட்க கோடும் கௌதமை அவளுக்கு அளவுக்கு மீறி பிடித்து இருப்பதை தெளிவாக பறைசாற்ற அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை… இது நல்லதிற்கு இல்லை என்பதை மட்டும் அவன் உணர்ந்தான்…
“ஆதி… எங்கே வெச்சு அவனை பார்த்த?”
“எங்க காலேஜ்ல தான் ஒர்க் பண்றாங்க… எனக்கு லெக்சரர்… ”தயங்கி கொண்டே கூற… ஆயிரம் வோல்டேஜ் மின்சாரம் தாக்கியது போல அதிர்ந்து நிமிர்ந்தான்…
“வாட்… கம் அகைன்… ”
“எனக்கு லெக்சரர் வருண் மாமா… ”தலை குனிந்து கொண்டே கூறிவிட்டு…
“பட்… அவங்க என்கிட்டே பேச கூட யோசிக்கிறாங்க… நம்ம உறவே வேண்டாம்ன்னு நினைக்கறாங்க… அப்படிபட்டவங்களை ஏன் மாமா இப்படி நினைக்கறீங்க?” பாவமாக அவனை பார்த்து கேட்க… அவனது அதிர்வு நின்றுவிடவில்லை…
“அவன் எடுக்கற டெண்டர் மதிப்பே கோடில இருக்கும் போது… வெறும் ஆயிரத்துல சம்பளம் கிடைக்கற லெக்சரர் வேலை பார்க்கறானா? sounds to be odd ஆதி… ” முகம் குழப்பத்தை தாங்க… தலையில் கை வைத்து கொண்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான்… அதை காட்டிலும் கௌதம் எதற்காக இந்த வேலைக்கு போக வேண்டும் என்ற ஆற்றாமை வேறு!
ஆதிரையும் அதே நிலையிலிருக்க… சற்று சுதாரித்த வருண்…
“அவனோட அம்மா யாருன்னு தெரியுமா ஆதி?”கேள்வியாக அவளை பார்க்க… அவள் இல்லையென்று தலையசைத்தாள்…
“பேமஸ் ப்ளே பேக் சிங்கரா இருந்த அபிராமிம்மா… ”
“வாட்… நிஜமாவா?” இந்த தகவல் அவளுக்கு மிக புதியது… ஆச்சரியத்தில் கண்களை விரித்தவளை மனதில் கவலையோடு பார்த்தான் வருண்…
“ம்ம்ம்ம்… இப்போ பாடுவதை விட்டுட்டாங்க… ஆனாலும் கர்னாடிக் மியுசிக்ல அவங்க ஒரு லெஜன்ட்… ”
“வாவ்வ்வ்வ்… ”மேலும் கண்களை விரிக்க…
“கௌதமோட அம்மா வகை தாத்தாவே நல்ல வசதியானவங்க… அவங்களுடைய சம்பாத்தியமும் கொஞ்சமும் குறைவில்லை… அப்படி இருக்கும் போது அவன் எதற்காக இந்த வேலைக்கு வர வேண்டும்?”
“எனி ஹவ்… அவர் வந்ததும் நல்லதுதானே வருண் மாமா?”அப்பாவியாக அவனை நோக்கி கேள்வி எழுப்பியவளுக்கு என்ன சொல்வது? கௌதம் பப்பில் கூறியதை கூற முடியுமா என்ன? கௌதம் நக்கலாக கூறியது அவனது காதுகளில் ஒலித்து கொண்டே இருந்தது…
“வருண்… ஆதிரையை காப்பாற்றி கொள்வது உனக்கு அவசியமா?”புருவத்தை உயர்த்தியபடி கேட்க… வருண் புரியாத பார்வை பார்க்க…
“அவ என்னையே சுற்றி வந்துட்டு இருக்கா… அப்புறம் அது போச்சு இது போச்சுன்னு உங்க வீட்டு பஞ்சாயத்து போர்ட் ப்ரெசிடென்ட் கூக்குரல் எழுப்புவாங்க… உன்கிட்ட முன்னாடியே சொல்லிட்டேன் வருண்… இனிமே அவளை காப்பாற்றி கொள்வது உன்னுடைய கைல தான் இருக்கு… ” சிரித்தபடியே வருணிடம் கூறிவிட்டு விடைபெற்றவனை பார்த்த போது ரத்தம் கொதித்தது… யார் யாரை பற்றி பேசுவது என்ற எரிச்சல்!
அதே எரிச்சலோடு ஆதிரையை பார்த்து…
“ஆதி… லூசு மாதிரி செய்துட்டு இருக்காதே… இனிமே அவன் கிட்ட பேசாதே… சப்போஸ் மீறி பேசினா… ” ஒற்றை விரலை உயர்த்தி அவளை கண்டிப்பது போல மிரட்ட… ஆதிரை நிமிர்ந்து நின்றாள்!
“பேசினா?”ஆழ்ந்த தெளிவான குரலில் அவள் கேட்க…
“பேசாதன்னு சொல்லிட்டேன்… ”வருண் கறாராக கூற…
“சாரி வருண் மாமா… என்னை பேசக்கூடாதுன்னு நீங்க யார்? எனக்கு அவரை பிடித்து இருக்கு… பேசுவது என்ன? கண்டிப்பா அவங்களை தான் கல்யாணமே செய்துக்குவேன்… ” விடாப்பிடியான குரலில் அவன் மேல் இடியை இறக்கியவள்… சற்று இடைவெளி விட்டு…
“ஐ லவ் கௌதம்… ”அதே பிடிவாத குரலில் அவளது காதலை அறிவித்தாள்…
“உனக்கு அவன் எந்த வகையில் உறவினன் என்றாவது தெரியுமா ஆதி… ” மனதுக்குள் கேள்வி எழுப்பியவனால் அதை கேட்க முடியவில்லை… அப்போதாவது வருண் உண்மைகளை கூறியிருக்க கூடாதா என்று பின்னாளில் எத்தனையோ முறை நினைத்திருக்கிறாள்!
வருணை பேசவே முடியாமல் செய்திருந்தாள் அவனுடைய பிரியத்துக்குரிய அவர்களின் வம்சத்தின் இளவரசியான ஆதிரை!