CP23

CP23

அத்தியாயம் 23

கோடை காற்றையும்

வாடை காற்றையும்

ஒரு சேர கொண்டது

உன் நினைவில் நனைதலென்பது!

-டைரியிலிருந்து

“ச்சே… இவ்வளவு திமிர் தலைகனம் ஆகாது… பிசாசு… ”

தனக்குள்ளாக திட்டிக்கொண்டே இருந்தவளை கேலியாக பார்த்தனர் அனிஷாவும் தியாவும்… ஒரு மணிநேரமாக லட்சார்ச்சனையை நடத்தி கொண்டிருந்தாளே தவிர அவர்கள் இருவரிடமும் தெரிவிக்கவே இல்லையென்பதால் உடன் அமர்ந்திருந்தவர்கள் அவ்வப்போது முறைத்து கொண்டும் கேலி பார்வையை வீசிக்கொண்டும் இருக்க… அதை பற்றியெல்லாம் கவலையே இல்லாமல் அவளது அர்ச்சனையை தொடர்ந்து கொண்டிருந்தாள்…

வருணுக்கு கௌதம் அங்கிருப்பது தெரிந்து ஆதிரையை அவன் கூறியதை மேலோட்டமாக கூறி எச்சரித்து ஆறு மாதங்கள் கடந்து விட்டிருந்தன… பிடிவாதமாக வருணிடம் கூறிவிட்டாளே தவிர கௌதமுடனான உறவு எந்த நிலையிலும் மலர்ந்து விடவில்லை… அவளை அருகிலேயே அண்ட விட கூடாது என்பதில் மிகவும் குறிப்பாக இருந்தான் அவன்… வருணும் தன்னால் முடிந்த அளவு அட்வைஸ் வேண்டுமானால் செய்வானே தவிர இதுவரையும் அவளை சிவகாமி அத்தையிடம் காட்டி கொடுக்க வேண்டுமென்று நினைக்கவில்லை… அவனுக்கு தெரிந்தது அவனுக்கு மட்டுமே தெரிந்ததாகவே இருந்தது…

அந்த வகையில் வருணை நினைத்து சற்று பெருமையாகவே இருந்தது ஆதிரைக்கு… ஒவ்வொருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை மதித்து அவர்களது ரகசியங்களை ரகசியங்களாகவே வைத்து கொள்வது என்பது மிகவும் முதிர்ச்சியடைந்தவர்களால் மட்டுமே முடிந்த ஒன்றென்பதை ஆதிரையும் உணர்ந்திருந்தாள்…

ஆனால் கௌதமை எப்படி தன்னை திரும்பி பார்க்க வைப்பது என்பதை மட்டும் அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை… புரியாத புதிராகவே இருந்தான் அவன்…

அவன் பகுதி நேர விரிவுரையாளர் என்பதால் அவனுடைய வகுப்பு இருக்கும் போது மட்டுமே வருபவன்… வகுப்பு முடிந்தவுடனே கிளம்பி விடுவான்… அபூர்வமாக ஸ்டாப் ரூமில் இருந்தாலும் அவனுக்கு வேலைகள் நிறைய இருந்தன… அதனால் ஆதிரையால் நெருங்கவே முடியாத ஒருவனாகவே இருந்தான் கௌதம்…

வருண் கண்டித்த அடுத்த நாளே அவனை வலுகட்டாயமாக பார்க்கிங் ஏரியாவில் பிடித்தாள்… அவனது செடானை நிறுத்தி விட்டு வந்தவன் முன் சென்றவள்…

“வருண் மாமா கிட்ட கம்ப்ளைன்ட் செய்தீங்களா?”இறுக்கமான முகத்தோடு கேள்வி கேட்க… விசித்திரமாக பார்த்தான் கௌதம்…

“ஆமா சொன்னேன்… உன்னோட அப்ரோச் எனக்கு தவறா பட்டது… அதனால் அவன் கிட்ட சொன்னேன்… ” மிகவும் இயல்பாக கூறியவனை எரிச்சலாக பார்த்தாள்…

“என்னுடைய அப்ரோச்சில் என்ன தவறு கண்டுட்டீங்க?”

“இந்த அப்ரோச் தான் தப்பு… முதலில் நான் உனக்கு லெக்சரர்… நீ என் ஸ்டுடென்ட் என்பதை மட்டும் நினைவில் கொள் ஆதி… அதற்கும் மேல் ஒன்றுமில்லை… எதையும் இழுத்து கொள்ளவும் நான் விருப்பப்பட வில்லை… அதையும் புரிந்து கொள்… ” வேறு ஒன்றுமில்லை என்பது போல நகர… அவனுடனே ஓடி சென்று மீண்டும் அவனை மறித்தாள்…

“அப்படி நான் என்ன செய்து விட்டேன் என்று இந்த அளவு நீங்க சொல்றீங்க? வேறு என்ன உங்களிடம் எதிர்பார்த்து விட்டேன்?” முகம் ரோஷத்தில் சிவந்து இருக்க…

“எதிர்பாராதே என்று தான் சொல்றேன்… அன்றைக்கு காபி டேவிலேயே கண்டித்திருக்க வேண்டியது… அத்தனை பேர் முன்னே எதற்கு உன்னை கண்டிக்க வேண்டுமென்று விட்டுவிட்டேன்… அதென்ன இன்னொருவரின் கப்பை… ” என்று கூற வந்துவிட்டு அவளது முகம் சுருங்கியதை பார்த்து நிறுத்தி கொண்டான்…

“சொல்லி முடிங்க கௌதம்… ” கைகளை கட்டிக்கொண்டு நின்ற ஆதிரை அமர்த்தலான குரலில் கூற…

“கௌதம் சர்… இங்கே அனைவருக்கும் சர் என்றால் உனக்கு மட்டும் கௌதமா ஆதி?” முகம் கடுகடுக்க அவளை திருத்தி விட்டு மேலும் கடிக்க… அமைதியாக கேட்டு கொண்டிருந்த ஆதிரைக்கு முகம் புன்னகையில் மலர்ந்து இருந்தது…

“சொல்லு ஆதி?”சற்று கோபமாக கேட்டவனை அமைதியாகவே பார்த்த அதிரை…

“ஏன்… இங்கே எல்லா ஸ்டாப்ஸ்க்கும் நான் ஆதிரை… உங்களுக்கு மட்டும் ஆதியா?”என்று நிதானமாக கேட்க… முகத்தை சுருக்கி அவளை பார்த்தவன்…

“ஸ்டுபிட் மாதிரி பேசாதே ஆதி… உன்னை எனக்கு முன்னமே தெரியும்… அதுவும் இல்லாம என்னையும் அறியாம தான் உன்னை ஆதின்னு மென்ஷன் செய்தேன்… ” கடுத்து கொண்டே கூற…

“அதே தான் எனக்கும்… நீங்க என்னுடைய ரிலேடிவ்… அதுவும் இல்லாம எனக்கு உங்களை பிடிக்கும்… ரொம்ப பிடிக்கும்… இன்பாக்ட் எ கைன்ட் ஆப் க்ரேஸ்… அவ்வளவுதான்… அதுக்காக வருண் மாமா கிட்ட கன்னாபின்னான்னு சொல்வீங்களா?” அவளது தொனியில் அமைதியை தாண்டி குறும்பு வந்திருக்க… கௌதம் புரியாத பார்வை பார்த்தான்…

“ஆமாம் சொன்னேன் தான்… அதற்கு இப்போ என்ன சொல்ற?” பொறுமை இழந்து விட்டான் என்பதை உணர்ந்து கொண்டவள்… சிரிப்பை பூசிக்கொண்டு…

“எனக்கொன்றும் இல்லை கௌதம்… பிரச்சனை எல்லாம் உங்களுக்கு தான்… ”

“என்ன உளர்ற?” வெளிப்படையான கோபத்தோடு அவன் கேட்க

“ஆமா… வருண் மாமா கிட்ட நான் உங்களை லவ் பண்றதா சொல்லிட்டேனே… ” அசராமல் கூறியவளை பார்த்தவனின் முகத்தில் மெல்லிய அதிர்ச்சி! நீயென்ன லூசா என்பது போன்ற பார்வை…

“அறிவிருக்கா உனக்கு? உன்னையெல்லாம்… ச்சே… ” தலையிலடித்து கொண்டவனை, என்னவென்பதை போல பார்க்க… அவனோ அவனது லட்சார்ச்சனையை ஆரம்பித்து இருந்தான்… அவனது வார்த்தைகள் எதையுமே காதில் வாங்காமல் முகத்தில் புன்னகை மாறாமல் நின்று கொண்டிருந்தவளை…

“கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாதா ஆதி?”என்று சற்று சுருதி குறைந்த குரலில் கேட்க… அதே புன்னகையோடு…

“தம்பி… அதையெல்லாம் நீ வருண் மாமா கிட்ட சொல்றதுக்கு முன்ன யோசிச்சு இருக்கனும்… இப்போ நோ யூஸ்… ” என்று கண்களை சிமிட்டி விட்டு செல்ல…

“வாட்… தம்பியா?”அவளது கிண்டலை கண்டு கௌதம் முறைத்தான்…

சற்று தொலைவிலிருந்து இருவரையும் பார்த்து கொண்டிருந்த விஷால் அடுப்பின் மேல் அமர்ந்து இருந்ததை போல உணர்ந்தான்… எரிச்சலில் தவித்தான்…

அன்றோடு கௌதம் ஆதிரையிடம் பேசுவதை முழுவதுமாக தவிர்த்து விட்டான்… அவர்களது வகுப்புக்கு வந்தாலும் வகுப்பு ரெப்ரசென்டேடிவ் என்ற முறையில் கூட ஆதியிடம் எதையும் அவன் சொல்வதில்லை… மற்றவர்களிடம் எதுவாக இருந்தாலும் சொல்வதை பழக்கப்படுத்தி கொண்டான்… முடிந்த அளவு அவள் புறம் திரும்புவது கூட தவறு என்ற நிலையில் அவன் இருக்க… அவன் எந்த அளவு அவளை விலக்கினானோ… அதையும் விட அதிகமாக அவள் நெருங்க முயன்றாள்… ஆனால் அவள் கிழக்கு என்றால் அவன் மேற்கு பக்கம் ஓடுகையில் என்ன செய்துவிட முடியும்?

அவளது முயற்சிகள் ஒவ்வொன்றையும் அவன் கண்டுகொள்ளாமல் சென்று கொண்டிருக்க… அன்று நடந்த சம்பவத்தில் ஆதிரை பொறுமையை முற்றிலுமாக இழந்து இருந்தாள்… கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள் அறிவிக்கபட்டிருக்க… இரண்டாமாண்டு சிவிலிலிருந்து ஆதிரையை தேர்ந்தெடுத்திருந்தார் அவர்களது ஹெச்ஓடி… டிப்பார்ட்மென்ட் ஸ்டாப் ரூமிற்கு வர கூறி ஹெச்ஓடியின் அழைப்பு வந்தது…

விஷால் மற்றும் மேலும் சிலரும் அங்கு முன்னமே காத்திருந்தனர்… ஹெச்ஓடி சிவபாலன் பொதுவாக அனைவரையும் பார்த்து…

“ஜிகே சர் தான் உங்க இன்டர் காலேஜ் காம்படிஷனுக்கு இன்சார்ஜ்… அந்த ஈவன்ட்ல இருக்கவங்க எல்லாரையும் சர் கிட்ட ரிப்போர்ட் செய்ய சொல்லுங்க… தென் அவரோட அட்வைஸ் படி உங்க ப்ராக்டிஸ் செஷன்ஸ் பார்த்துக்கங்க… ஓ டி அலவ் பண்ணிடறேன்… ” என்று முடிக்க… அவள் கௌதமை கேள்வியாக பார்க்க… அவன் காரியத்திலேயே கண்ணாக அவனது கையிலிருந்த பைலில் பெயர்களையும் குறிப்புகளையும் குறித்து கொண்டிருந்தவன்…

“காம்படீஷன்ஸ் அக்டோபர் பர்ஸ்ட் வீக்ல… மொத்தம் சிக்ஸ் டேஸ்… டான்ஸ், மியுசிக், ஸ்பீச்ன்னு ஒரு பத்து பிரிவுகள்ல நடக்க போற போட்டி… இது ஸ்டேட் லெவல் இன்டர் காலேஜ் மீட்… சிஎஸ்ஐ காலேஜ் ஆப் இஞ்சினியரிங், கேத்தியில்… ஐ மீன் ஊட்டியில் காம்படிஷன்ஸ் நடக்க இருப்பதால யாருக்கு விருப்பமோ அவங்க மட்டும் கன்பர்ம் பண்ணிருங்க… ” என்று முதல் கட்ட விளக்கத்தை கொடுத்துவிட்டு அடுத்தடுத்து தேவைப்பட்ட விளக்கங்கள் கொடுத்து கொண்டிருக்க… ஆதிரைக்கு இந்த சந்தர்ப்பத்தை இழக்க மனம் வரவில்லை…

தாயிடம் என்ன காரணத்தை சொல்லிவிட்டு ஊட்டி வரலாம் என்பதை அப்போதிருந்து திட்டமிட ஆரம்பித்து இருந்தாள்…

“சர்… யார் எங்களை அழைத்து செல்வது… அதற்கு பொறுப்பு யார்?”

எச்ஓடியை பார்த்து கேட்டாலும் அவளுக்கு உறுதிபடுத்தி கொள்ள வேண்டியது ஒன்று மட்டுமே… கௌதம் வருவானா என்பதுதான்… கண்களில் எதிர்பார்ப்போடு அவள் கேட்டதற்கு அவனது உதடு ஏளனமாக வளைந்து… அது ஏளனத்தால் தான் வளைந்தது என்பது அவள் மட்டுமே அறிந்த ஒன்றென்பதால் மனதினுள் கோபம் கிளம்ப… அவன் புறமே திரும்பாமல் நின்று கொண்டாள்…

ஆனாலும் மனம் தவித்தது… அட வெட்கம் கெட்ட மனமே அடங்கு என்று தன்னை தானே திட்டி கொண்டவளுக்கு கௌதம் ஓரப்பார்வையாக அவளையே கவனித்து கொண்டிருந்தது தெரியவில்லை… அடுத்தது காட்டும் கண்ணாடி போல அவளது முகம் அவளது உணர்வுகளை மறைக்காமல் அவனுக்கு உரைத்து கொண்டிருந்ததை அவளும் அறியவில்லை… அந்த சிவந்து போன முகத்தை அவன் ரசித்து பார்த்ததையும் அவள் தெரிந்து கொள்ளவில்லை…

“நம்ம டிப்பார்ட்மென்ட்ல இருந்து ஜிகே சர் அப்புறம் ட்ரிப்பில் ஈல இருந்து லாவண்யா மேம்… இரண்டு பேருமே உங்க எல்லோரையும் பொறுப்பா அழைச்சுட்டு போயிட்டு கொண்டு வந்து விட்டுடுவாங்க… டோன்ட் ஹெசிடேட் ஆதிரை… ”

ஹெச்ஓடியின் பதிலில் மனம் ததும்பினாலும் கௌதமை திரும்பியும் பார்க்கவில்லை… அவனுக்கு மட்டும் தான் முகத்தை திருப்ப தெரியுமா? தனக்கு தெரியாதா என்ற கோபம் அவளுக்கு… அருகில் அமர்ந்திருந்தவனை திரும்பி பாராமல் இருக்க பெரும் பாடுபட்டு மனதை அடக்கி வைக்க… அவளது முயற்சிகளை பார்த்து கொண்டிருந்தவனுக்கு இதழோரம் புன்னகை மலர்ந்தது…

“சர்… சீனியர்ஸ் இருக்கும் போது ஜூனியர அனுப்பினா சரி வருமா? எதற்கும் யோசிங்க… ”

சிவபாலனிடம் யோசனை கூறுவது போல ஆதிரையை கீழ் பார்வை பார்த்தபடி கூற… அவனது வார்த்தைகளில் இருந்த நக்கலை அவள் மட்டுமே உணர… மனம் அதிர திரும்பினாள்… அவனை நோக்கி!

“நோ ஜிகே… ஆதிரை நல்ல க்ளாசிக்கல் டான்சர்… நமக்கு திறமை முக்கியம்… சீனியர் ஜூனியர் எல்லாருமே ஒன்றுதானே… ” சிவபாலன் சிரித்து கொண்டே கூற… ஜிகே புன்னகைத்ததை பார்த்தவளுக்கு அவன் வேண்டுமென்றே கூறிக்கொண்டிருப்பது புரிந்தது…

“நான் இதுவரைக்கும் அவங்க பர்பாமான்ஸ் பார்த்ததில்லையே சர்… பார்க்கலாம்… ” அதே புன்னகையோடு அவன் கூற… அவனை மனதுக்குள் திட்டி கொண்டிருந்தவள்… சிவபாலனை பார்த்து…

“சர் என்னுடைய திறமை மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி… கண்டிப்பா ப்ரைஸ் வின் பண்ணி காட்டுவேன்… ”

தீர்க்கமான குரலில் கூற… கையிலிருந்த லிஸ்ட்டை சரி பார்த்து கொண்டிருந்தவன் முகத்தில் அதே லேசான புன்னகை…

ஒவ்வொருவரையும் சில கேள்விகள் கேட்டுவிட்டு உறுதிபடுத்தியவர்களை தனியாக லிஸ்ட் செய்து கொண்டிருந்தான் கௌதம்… ஹெச்ஓடியிடம் விடை பெற்றவர்கள் அவரவர் வகுப்பறைக்கு செல்ல… அங்குதான் அவனுக்கு லட்சார்ச்சனை செய்து கொண்டிருந்தாள் ஆதிரை…

கௌதமை திட்டி கொண்டிருந்தாலும் நடன போட்டிகளை வெகு ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருந்தாள் ஆதிரை… அது அவளது திறமையை உணர்த்தும் சந்தர்ப்பம் என்பதை விட அவளுக்கு மிகவும் பிடித்த ஊட்டிக்கு அவளது மனதுக்கு மிகவும் பிடித்த கௌதமுடனான பயணம் என்பதில் மகிழ்ந்து போயிருந்தாள்… கல்லூரி ரீதிலான பயணம் தான் என்றாலும் மனம் சிறகடித்து பறந்து கொண்டிருந்தது…

ஆனால் அந்த பயணம் தனது வாழ்கையை முழுவதுமாக புரட்டி போடுமென்றோ… முட்டாளின் சொர்க்கத்தில் சஞ்சரித்து கொண்டிருந்தவளை உண்மை என்னும் நரகத்தில் தள்ளுமென்றோ அவள் அறியும் போது?

error: Content is protected !!