அத்தியாயம் 24
காற்றில்
வரைந்த களைப்பில்-என்
முகத்தில் ஓய்வெடுக்கிறது
உன் தேகம் தாங்கிய
துப்பட்டா தூரிகை!
-டைரியிலிருந்து
“ஒன்… டூ… த்ரீ… போர்… ”
நடன அசைவுகளுக்கு விஷால் ஸ்டெப்ஸ் சொல்லி கொண்டிருக்க… குழு நடனத்தில் இருந்த அனைவரும் ஆடி கொண்டிருந்தனர்… விஷால் கல்சுரல் செக்ரட்டரி என்பதால் அவன் முடிவு செய்யும் நபர்களை மட்டுமே மேலிடத்திற்கு சிபாரிசு செய்ய முடியும் என்ற நிலையில் அவனை இந்த விஷயங்களில் ஆர்வமிருப்பவர்கள் பகைத்து கொள்ள விரும்புவதில்லை…
இது ஆதிரைக்கு தெரியாது என்றாலும் விஷாலுக்கு அவள் மேல் இருந்த தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக அவள் நடனகுழுவில் இடம் பெற்று இருந்தாள்…
ரேடியத்தில் பெய்ன்ட் செய்த உடையை அணிந்து இருளில் நடனம் ஆட திட்டமிட்டு இருந்ததால் அதற்கு தகுந்தார் போன்ற ஸ்டெப்ஸ் பயின்று கொண்டிருக்க… விஷால் ஆதியோடு சற்று நெருக்கமாகவே நடன அசைவுகளை வைத்திருந்தான்… பார்ப்பவர்களுக்கு சட்டென்று புரியாவிட்டாலும் பார்க்க பார்க்க அவன் நெருக்கமாக அவளோடு ஆடுவது புரிந்து விடும்…
ஆதி ஜூனியர் என்பதால் பல்லை கடித்து கொண்டு ப்ராக்டிஸ் செய்து கொண்டிருக்க… ஒரு கட்டத்தில் மேலும் நெருக்கமான ஸ்டெப்ஸ் அவன் வைக்க… அவளது கோபம் எல்லை மீறியது…
“விஷால்… ஐ ம் நாட் கம்பார்ட்டபில் வித் தீஸ் ஸ்டெப்ஸ்… ” இறுகிய முகத்தோடு ஆதிரை கூற…
“நோ வே… யூ ஹேவ் டு டு… ” சற்றும் இளகாமல் விஷால் கூறிவிட… மளுக்கென்று கண்ணீர் எட்டிப்பார்த்தது…
“விஷ்… ப்ளீஸ்… புரிந்து கொள்… அவளுக்குத்தான் இந்த ஸ்டெப்ஸ்களில் பிடித்தமில்லை என்று கூறுகிறாளே… ” உடன் நின்று கொண்டிருந்த தியா ஆதிக்காக பரிந்து கொண்டு வர
“ஓகே அப்படியென்றால் அவளுடைய பர்பார்மன்ஸ் எங்கேயும் தேவையில்லை… அவளை கிளாசிற்கு போக சொல்… ” முறைத்து கொண்டே விஷால் கூறி விட… ஆதிக்கு திடுக்கென்றது…
விஷாலும் கெட்டவனில்லை ஆனால் ஆதிரை ஜிகேவையே பின்தொடர்வதில் மிகுந்த கோபமாகி இருந்தான்… அவனால் ஜிகேவை முறைக்க முடியவில்லை… இன்டர்னல் மார்க்கில் கை வைத்து விட்டால் என்னாவது என்ற பயம் அவனுக்கு இருந்தது அதனால் ஆதிரை மேல் கண்மண் தெரியாத கோபத்தில் இருந்தான்…
காரணம் விஷாலின் கண்மூடித்தனமான காதல்… ஆதிரை மேல் கொண்ட காதல்! காதல் அடுத்தவர் முன்னிலையில் காதலிக்கு கௌரவத்தை தேடி தரும் ஆனால் அவமானப்படுத்தி பார்க்க விரும்புமா என்பதை நினைவில் வைத்திருக்கும் கட்டத்தை எல்லாம் அவன் கடந்து இருந்தான்… அவனுக்கு ஆதிரையை எப்படியாவது காயப்படுத்தி பார்க்க வேண்டுமென்ற வெறி மட்டுமே!
ஆதிரையின் கண்ணீர் அவனுக்கு ஏனோ மனதில் அரக்கத்தனமான மகிழ்ச்சியை கொடுத்தது… என்னை கண்டுகொள்ளவில்லையல்லவா ஆனால் இப்போது நீ எனது கைப்பாவை என்று எக்களிக்க வைத்தது…
ஆதிரையால் ஒரே நிமிடத்தில் நடன போட்டி வேண்டாமென்று விட்டு விட முடியும் ஆனால் அனைவரின் முன்னிலையிலும் கௌதமிடம் சவால் செய்வது போல வெற்றி பெற்று காட்டுவேன் என்று கூறிவிட்டு வந்தாயிற்று… விஷாலோ குழு நடனத்தை வேண்டாமென்றால் ஆதிரை தனியாக ஆடும் பியுஷன் நடனமும் தேவையில்லை என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டானே!
அந்த பியுஷன் நடனம் பரதத்தையும் வெஸ்டனையும் கலந்து பயிற்சி செய்து இருந்தாள்… அந்த நடனம் அவளுக்கு மிகவும் முக்கியம்… அவளது திறமையை நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை விட்டுவிட அவளுக்கு மனம் வரவில்லை… விஷாலின் கறாரான பதில்மொழியில் மனம் சுணங்கினாலும் பல்லை கடித்து கொண்டு பயிற்சி செய்து கொண்டிருந்தாள் ஆதிரை…
இறுகிய முகத்தோடு நடனத்தை பயின்று கொண்டிருக்க… விஷாலோ…
“ஆதிரை… பேஸ்ல எக்ஸ்ப்ரஷன் போதலை… ” என்று வேறு கடுப்படிக்க… ஆதிரைக்கு பற்றி கொண்டு வந்தது…
“ஏன் விஷால்… இது டார்க் ரூம் ஷோ தானே… அப்புறம் பேஸ் எக்ஸ்ப்ரஷனுக்கு என்ன வேலை?” பின்னால் இருந்து அழுத்தமான குரல் கேட்க… அனைவரும் திரும்பி பார்க்க…
நின்றிருந்தது ஜிகே!… எதையும் படிக்க முடியாத முகத்தோடு!
“பட் கெமிஸ்ட்ரி செட் ஆச்சுன்னா தானே சர் டான்ஸ் நல்லா வரும்… ” அவனை நி
யாயப்படுத்தி கொள்ள அவசரமாக கூறினான் விஷால்!
“அப்படி எந்த கெமிஸ்ட்ரியும் வேண்டாம் பிசிக்ஸ்சும் வேண்டாம் விஷால்… பர்பார்மன்ஸ் நீட்டா டீசன்ட்டா இருக்க வேண்டும்… தட்ஸ் ஆல்… அந்த பொண்ணோட கெமிஸ்ட்ரிய டெவெலப் செய்துதான் நீங்க டான்ஸ் ஆட வேண்டும் என்றால் அந்த கலைசேவையே தேவை இல்லை… புரிந்ததா?” படு கறாராக கூறினாலும் அவனது முகம் என்னவோ சிறிதளவும் கோபத்தை காட்டாமல் இரும்பை போலவே இருக்க… அந்த தொனியில் விஷால் ஒரு கணம் அதிர்ந்து போனாலும் எரிச்சல் படர்ந்தது அவன் மனதில்…
இவன் யார் தனது விஷயத்தில் தலையிட என்ற கோபம் உள்ளுக்குள் கனன்றது… அந்த நேரத்தில் ஜிகே அவர்களது விரிவுரையாளர் என்பது மறந்து தனக்கும் ஆதிரைக்கும் இடையில் வந்தவன் என்ற எண்ணம் மட்டுமே அவனுள் இருந்தது…
கோபமாக வெறித்தவனை அலட்சிய பார்வை பார்த்த ஜிகே… ஆதியை பார்த்து…
“நீ என்ன பண்ணிட்டு இருக்கே ஆதி? உன்னோட ப்ராக்டிஸ் முடிந்ததா இல்லையா?இன்னும் இரண்டு நாட்கள் தானே இருக்கிறது… ” விஷாலை கடுகடுத்த அதே தொனியில் அவளிடமும் பேச… ஆதி சற்று பதட்டமாக…
“முடித்து விட்டேன் க்… சர்… ” திணறி கொண்டு பதிலளிக்க…
“சரி உன்னுடைய சோலோ பர்பார்மன்ஸை ஆரம்பி… ” வசதியாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டவனை எரிச்சலாக பார்த்தான் விஷால்… வெளியில் தான் இவன் தொந்தரவு என்றால் இங்குமா என்று! அவனையே பொறுப்பாக்கிய போதே ஆரம்பித்த நமநமப்பு… இப்போது இன்னும் அதிகமாக!
நடன ஒத்திகையை துவக்கு என்றவனை கண்களை விரித்து ஒரு நொடி ஆச்சரிய பார்வை பார்த்த ஆதி… அடுத்த நிமிடமே ஷாலை நடனத்திற்கு ஏற்றார் போல இழுத்து கட்டி கொண்டு சரஸ்வதி வணக்கத்தோடு தயாராகினாள்…
பாடல் ஒலிக்க ஆரம்பித்தது…
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா
அந்த பாடலின் முதல் வரியிலேயே ஏனோதானோவென அமர்ந்து இருந்தவன் நிமிர்ந்து அமர்ந்தான்… வேண்டுமென்றே தான் இந்த பாடலை தேர்ந்தெடுத்து இருப்பாளோ என்ற சந்தேகத்தோடு ஆதியை அவன் கேள்வியாக பார்க்க… ஒரு நொடி கண்களை சிமிட்டி அவனுக்கான பதிலை அவள் கொடுத்து விட… அவனது இதயம் நின்று துடித்தது!
அடிப்பாவி இவ்வளவு தைரியமா என்று வியந்து அவளை பார்க்க… அவனுக்காக செய்யப்படும் ரிஹர்சல் என்பதால் அவளுடைய கண்களும் அவனை நோக்கியே இருக்க… ஆதியின் பாவனையில் கௌதம் சிறிது அதிர்ந்து அவளை பார்த்தான்…
அந்த நதியின் கரையை நான் கேட்டேன்
அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை
இறுதியில் உன்னைக் கண்டேன்
இருதயப் பூவில் கண்டேன்
அவளது பார்வை கௌதமையே மையம் கொண்டிருக்க… அவனோ சுற்று புறம் மறந்து அவளையே பார்த்து… அவளுக்குள் தொலைந்து கொண்டிருந்ததை உணர்ந்தான்… அவளது மன உணர்வுகளை அந்த பாடல் மிக அழகாக படம் பிடித்து காட்டுவதாக அவளுக்கு தோன்றியது… அவனுக்கும் தன் மேல் ஈர்ப்பு இருக்கிறது என்பதை அவள் மனம் உறுதியாக நம்ப துவங்கியது… ஏனென்றால் அவனது கண்களில் வெளிப்பட்டு கொண்டிருந்த வெறுப்பையும் கோபத்தையும் தாண்டி அப்போது நேசத்தை உளப்பூர்வமாக உணர துவங்கி இருந்தாள்…
என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது…
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா…
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா
காதல் வயப்பட்ட பெண்ணின் காதல் உணர்வுகளை வெகு இயற்கையாக அவள் கண்களிலும் முகத்திலும் காட்டுவதாக அவளது நண்பர்கள் அனைவரும் வியந்து மனதில் பாராட்டி கொண்டிருக்க… அந்த முகச்சிவப்பும் நாணமும் தனக்கானது என்பதை கௌதம் மட்டுமே அறிந்திருக்க… அந்த நினைவு அவனை ஏதோ செய்தது…
உன் இதழ் கொண்டு வாய் மூடவா என் கண்ணா என்று அவள் அழைத்த போது அவளை கவர்ந்து கொண்டு போய் விட்டால் தான் என்னவென்று அவனது மனம் தீவிரமாக யோசிக்க துவங்க… அவளது இதழுக்காக அலைபாய்ந்த அவனது மனதை அடக்கு அடக்கு என சிரமப்பட்டு அடக்கி கொண்டிருந்தான்… ஆனால் அவனது ராதையோ அவனை மேலும் மேலும் நெருக்கி நெருங்கி கொண்டிருந்தாள்…
பாற்கடலில் ஆடிய பின்னும்
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்
என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா!!!
ஆதிரையின் பாவனையில் உறைந்து அமர்ந்திருந்தான்… அவனை அள்ளி எடுத்து நெஞ்சோடு அணைத்து கொள்வதாக அவள் காட்டிய பாவனை அவனது உயிரை தீண்டியது… சுற்றிலும் இருப்பவர்களை மறக்க வைத்தது… இருவருக்குமே அவர்கள் இருவர் மட்டுமே உலகில் இருப்பதாக தோன்ற… அவனது உணர்வுகளை கட்டுபாட்டில் கொண்டு வர வெகுவாக முயன்று வெற்றிகரமாக தோற்று கொண்டிருந்தான்…
வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய்
கண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்…
நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா
அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கனவுகளில் நானில்லையா…
அவள் அவனை நோக்கி எழுப்பிய கேள்விக்கு அவனிடமே பதில் இல்லையே… பூவின் கண்ணீரை ரசிப்பாய் என கண்களில் கண்ணீரோடு அவனை பார்த்து குற்றம் சாட்ட… அவளது கண்ணீர் அவனது மனதை வதைத்தது…
தினம் ஊசலாடுதென் மனசு அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே
என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா…
அசையாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தவனின் விழியீர்ப்பு விசையில் அவள் கட்டுண்டிருக்க… மனம் படபடவென அடித்து கொண்டது… கைகள் தட்டும் ஓசை கேட்க… அதுவரை சுற்றுப்புறம் பற்றிய உணர்வே இல்லாமல் ஆடி கொண்டிருந்தவளுக்கு தன்னை சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள் தோழர் தோழியர் என்பது அறிவுக்கு பட… வெட்கம் வந்து அப்பியது…
“வெரி நைஸ் பர்பாமன்ஸ்… ” கனவுலகில் மிதந்தவன் நனவிற்கு வந்தது போன்ற பாவனையில் ரசனையோடு அவன் கூற… இருவரது முகத்தையே பார்த்து கொண்டிருந்த விஷாலின் முகத்தில் கோபத்தின் உச்சம்… தனக்குள்ளாக முனுமுனுத்து கொண்டிருந்தவனை பார்த்த ஜிகே… கண்களால் விஷாலை தன்னருகே அழைக்க…
“சர்… ” என்னவென்பதை போல பார்த்தவனின் கைகளை பற்றி கொண்டு… யாருக்கும் கேட்க்காதவாறு அவனை அழைத்து கொண்டு நகர்ந்தவன்…
“விஷால்… ஆதியை டச் செய்யாம ஆட முடியும்னா ஆடுங்க… இல்லைன்னா… ” என்று இடைவெளி விட… விஷால் ஜிகேவைகேலியாக பார்த்து…
“இல்லைன்னா… ” என்று கேட்க…
“உங்களுக்கு ஆட கால் இருக்காது விஷால்… ” இறுக்கமாக கூறியவனின் முகத்தில் எக்கச்சக்க புன்னகை…
“சர்… என்ன மிரட்டறீங்களா? ஸ்டுடண்ட்ஸ் எல்லாரையும் சேர்த்து ஸ்ட்ரைக்ல இறங்கட்டா?” அவனது வலிமையை காட்ட ஜிகேவிடம் அவன் எகிற…
“முடிந்தா செய்து பாருங்க விஷால்… என்னால் என்ன முடியும் என்று நானும் காட்டுகிறேன்… ” சற்றும் பதட்டமே இல்லாத தொனியில் அவன் கூற… சற்று அடங்கினான் விஷால்… அவனை தீர்க்கமான பார்வை பார்த்துவிட்டு அவன் நகர… வழியை மறித்து கொண்ட தியா…
“சர்… காம்படீஷன் அன்று முதல் வரிசையில் இருப்பீர்கள் அல்லவா… ” என்று கேட்டு வைக்க… இந்த பெண் எதற்க்காக இதை கேட்கிறாள் என்று புரியாமல் அவளை பார்க்க…
“சர் நீங்க இருந்தா எங்க பர்பார்மன்ஸ் வேற ரேஞ்சுல இருக்கும் சர்… அதான் கேட்கறேன்… ”ஆதிரையை தியா ஓரபார்வையாக பார்த்தது அங்கிருந்த அனைவருக்குமே புரிய… உள் அர்த்தமும் ஒருவாறாக அனைவருக்கும் விளங்கியிருக்க…
“ஓஓஓ… ” என்று அனைவரும் கத்த… ஜிகேவின் முகத்தில் அவனையும் அறியாமல் வெட்கபூ பூத்திருந்தது… அந்த வெட்கம் அவனது முகத்திலும் புன்னகையை மலர வைக்க…
“சர்… ஜென்ட்ஸ் வெட்கபட்டா செமையா இருக்கு… அதுவும் நீங்க… ” தியா அவனை கேலி செய்ய… கைகளில் சுருட்டியிருந்த பேப்பரினால் அவளது தலையை தட்டிய கௌதம்…
“வாலு பொண்ணு… ”என்று புன்னகைத்தாவாறே வெளியேறினான்… ஆதிரையை பார்த்தபடி… !
******
“ம்மா… ம்மா… ம்மா… ப்ளீஸ் ம்மா… ” வார்த்தைக்கு வார்த்தை அம்மாவென்று அழைத்து சிவகாமியை செல்பேசியில் காக்காய் பிடித்து கொண்டிருந்தாள் ஆதிரை… ஊட்டி செல்ல அனுமதி கேட்டு!
சிவகாமி எப்போதுமே இது போல ஒரு வாரமெல்லாம் வெளியில் தங்க அனுமதித்ததில்லை… ! ஆனால் இந்த முறை ஆதிரை போட்டிக்கு சென்றே ஆக வேண்டும் என்று பத்து நாட்களாக அவரை கெஞ்சி கொண்டிருந்தாள்… சிவகாமிக்கோ அவள் செல்வது கல்லூரி குழுவுடன் தானே என்ற எண்ணம் இருந்தாலும் வீட்டை விட்டு ஒரு வாரம் இருப்பதா என்ற வேகத்தடை அவரை யோசிக்க வைத்தது…
“ம்மா… அத்தை ஓகே சொல்லிட்டாங்க ம்மா… நான் ஜாக்கிரதையா இருப்பேன்… ப்ளீஸ் மா… ”
“நோ ஆதி… நோ ன்னா நோ தான்… ” இந்த நேரத்தில் தான் லண்டனில் மாட்டிகொண்டோமே என்று சிவகாமி நொந்து போய் தடை கூற…
“ம்மா… ஸ்டேட் லெவல் காம்படீஷன் ம்மா… என் ப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் வின் பண்ணி காட்டுறேன்னு பெட் பண்ணிட்டேன்… ”சுருதி குறைந்து வந்த குரல் சிவகாமியை ஏதோ செய்ய… இளக துவங்கினார்…
“சரி கரெக்ட்டா எத்தனை நாள்… அதை முதல்ல சொல்லு… ”அவரது நிலையை விட்டு கொடுக்காமல் அவர் கேட்டாலும் ஆதிரைக்கு மனம் துள்ளியது…
“சிக்ஸ் டேஸ் மா… கரெக்ட்டா செவன்த் டே சென்னை வந்துடுவேன்… ப்ளீஸ் மா ஓகே சொல்லு… ” சிவகாமியின் நாடியை பிடித்து வைத்திருந்த ஆதிரை அவரை ஒருவாறு ஒப்புகொள்ள வைத்துவிட… அதுவரை அவள் செல்பேசியில் கெஞ்சியது கொஞ்சியது என அனைத்தையும் பார்த்த வருணுக்கும் வள்ளியம்மைக்கும் அவளது சர்கஸ் விளையாட்டுக்கள் சிரிப்பை மூட்டி விட… வாய் விட்டு சிரித்தனர்… அவள் செல்பேசியை வைத்தவுடன்… !
இருவரது சிரிப்பும் அவளது தன்மானத்தை சீண்ட…
“வேண்டாம்… ரெண்டு பேரும் இப்போ சிரிப்பதை நிறுத்த போறீங்களா இல்லையா?”ஒற்றை விரலை நீட்டி எச்சரிக்க… லேப்டாப்பில் கணக்கு வழக்குகளை சரி பார்த்து கொண்டிருந்த வருண் வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தான்…
“வருண் மாமா… ” அவள் சிணுங்க…
“வெட்கம் மானமே இல்லாம மண்டி போட்டு கெஞ்சுவது ஒன்று தான் பாக்கி… மற்ற அத்தனையும் செய்து அப்படி போக வேண்டுமா ஆதி… !” நக்கலாக வருண் கேட்க… அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த சிதம்பரம்…
“வருண்… அவளது அம்மாவிடம் எதையோ கேட்டு விட்டு போகிறாள்… உனக்கு என்ன வந்தது?” ஆதிரைக்கு ஆதரவாக கொடி பிடித்த தாய்மாமனுக்கு ஹைபை கொடுத்தாள் ஆதிரை… அவர் மேல் சலுகையாக சாய்ந்து கொண்டு!
“அப்படி சொல்லுங்க மாமா… இந்த ரெண்டு கொசுவோட தொல்லையும் தாங்கலை… ” வள்ளியம்மைக்கும் வருணுக்கும் அழகு காட்டிவிட்டு அவர் மேலேயே சாய்ந்து கொண்டு அவரது மொபைலை பிடுங்கி அதில் கேம் விளையாட ஆரம்பித்த ஆதிரையை இருவருமாக சேர்ந்து சோபாவில் இருந்த சேர் பேடினால் தாக்க ஆரம்பித்தனர்…
“ஐயோ மாமா கொல்றாங்க… கொல்றாங்க… ” வேண்டுமென்றே ஆதிரை நக்கலடிக்க… வள்ளியம்மை அவளது வாயை மூடி இறுக்கி பிடித்து கொண்டாள்…
“அண்ணா சீக்கிரமா அந்த பிளாஸ்திரியை எடு… ” என்று தீவிரமாக வருணுக்கு உத்தரவிடுவது போல நடிக்க…
“எல்லாத்தையும் ப்ளான் பண்ணி பண்ணனும்… ”வடிவேலு பாணியில் உரைத்து விட்டு அருகில் இருந்த சீலிங் டேப்போடு ஆதிரை பக்கத்தில் வந்த வருணை பார்த்து வள்ளியம்மையின் பிடியிலிருந்து தப்பிக்க நென்டினாள்… வள்ளியம்மை வேண்டுமென்றே இறுக்கமாக பிடித்திருப்பது போல பாவ்லா செய்ய… இடையில் வந்த விசாலாட்சி…
“ஏய் வாலு பசங்களா… ஒழுங்கா இருக்க மாட்டீங்க… ” ஒரே சப்தத்துக்கு அடங்க… ஆதிரை நிம்மதி பெருமூச்சு விட்டாள்…
“ஷப்பா… தப்பிச்சேன்டா சாமி… ”
சிரித்து கொண்டே கூறியவளை குறும்பாக பார்த்தனர் நெருக்கியடித்து அமர்ந்திருந்த வருணும் வள்ளியம்மையும்…
“அம்மு… அடுத்தது ஸ்டார்ட் செய்யலாமா… ” வள்ளியம்மையை பார்த்து கண்ணடித்தவனை சற்று தள்ளிவிசாலாட்சியின் குரல் கண்டித்தது…
“ஸ்டார்ட் பண்ணுவ பண்ணுவ வருண்… ஏய் அம்மு… போய் உன்னோட துணியை மடித்து அலமாரியில் வை… ஆதியை பார் எவ்வளவு நீட்டாக முடித்து விட்டாள்… ” அங்கிருந்தே குரல் கொடுத்த விசாலாட்சிக்கு இங்கிருந்தே அழகு காட்டிவிட்டு துணியை மடிக்க எழுந்தாள் வள்ளியம்மை… விசாலாட்சியை பொறுத்த மட்டும் சில வேலைகளையாவது பிள்ளைகள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டுமென்று வரையறை வைத்திருப்பார்… கண்டிப்பாக செய்தே ஆக வேண்டுமென்று…
சிதம்பரமும் எழுந்துவிட… தனித்து விடப்பட்ட வருணின் மேல் சாய்ந்து கொண்டாள் ஆதிரை!
“ஏய் பிசாசு… உனக்கு சாய்ந்து கொள்ள சுவர் மாதிரி ஒரு ஆள் இருந்துகிட்டே இருக்கனுமா?” கேலியாக கேட்டாலும் ஆதிரை அவனுக்கு மிக மிக பிரியமானவள்… வள்ளியம்மைக்கும் இவளுக்கும் வருணால் பேதம் பார்க்க முடிந்ததில்லை…
“ப்ச்… டிஸ்டர்ப் செய்யாதீங்க வருண் மாமா… கார் ரேஸ்ல தோற்று போய்டுவேன்… ” வெகு சீரியசாக கூறியவளை யோசனையாக பார்த்தான்…
“ஆதி… ஆதி… ”மீண்டும் மீண்டும் அவளை அழைக்க…
“ம்ம்ம்… சொல்லுங்க வருண் மாமா… ” கண்கள் செல்பேசியில் இருந்து எழும்பாமல் இருக்க…
“ஊட்டிக்கு ஸ்டாப்ஸ் யார் வர்றது?” அவனுக்கு முதலிலேயே சந்தேகம் வந்து விட்டிருந்தது…
“ரெண்டு பேர் வர்றாங்க… ”
“யாரல்லாம்?”
“கௌதம் மாமா அன்ட் லாவண்யா மேம்… ” விளையாட்டு மும்முரத்தில் சட்டென்று உளறிவிட…
“வாட்… கௌதமா?”அவனது குரலில் அதீத அதிர்ச்சி தெரிய… உதட்டை கடித்து கொண்டாள் ஆதிரை… ஆனாலும் மறுமொழி எதையும் பேசவில்லை…
“ஆதி… தயவு செய்து அவனை நம்பிடாதே… அவன் நல்லவன் தான்… இல்லையென்று சொல்லலை… ஆனால் இது சரி கிடையாது… ” அவனது மனதுக்கு பட்டதை அவன் கூற…
“அ… அதெல்லாம்… ஒ… ஒன்றுமில்லை வருண் மாமா… ” திக்கி திணறி கூறியவளை விசித்திரமாக பார்த்தான் வருண்…
“ஒன்றுமில்லாமல் இருந்தால் போதும் ஆதி… ”ஆதுரமாக முடித்து விட்டவனை குற்ற உணர்வோடு பார்த்தாள் ஆதிரை…