அத்தியாயம் 25
உன் பற்களுக்குள் அகப்பட்டு விடுபடும்
கீழுதட்டின் கால இடைவெளியில்
மூன்றாம் பால் காய்ச்சபடுகின்றது
உன்னில் குடியேற!
-டைரியிலிருந்து
ஊட்டி வந்து மூன்று நாட்கள் முடிந்துஇருந்தன… ஆதிரை தனி நடன பிரிவில் அரை இறுதி போட்டியில் வென்றிருந்தாள்… அடுத்த கட்டத்திற்கு முன்னேறியிருந்தவள் இறுதி போட்டிக்காக நடனத்தை தீவிரமாக பயின்று கொண்டிருந்தாள்… குழு நடன பிரிவிலும் பைனல்ஸ் வந்திருந்தனர்… அதே போல மற்ற போட்டிகளிலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை குவித்து இருந்ததால் அந்த மகிழ்ச்சி அனைவரது முகத்திலும் இருந்தது…
அன்று ஞாயிற்று கிழமை என்பதால் போட்டிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்க… ஆதி மற்ற தோழிகளுடன் சேர்ந்து அவர்களுடைய கெஸ்ட் ஹவுஸ் வந்திருந்தாள் லாவண்யா மேமிடம் அனுமதி பெற்று கொண்டு!
கெஸ்ட் ஹவுஸ் இருந்தாலும் அதில் தனியாக தங்கவெல்லாம் சிவகாமி அனுமதிக்கவில்லை… மற்ற மாணவிகளுடன் சேர்ந்து ஹாஸ்டலில் தான் தங்கியிருந்தாள்… ஞாயிற்று கிழமை என்பதால் மற்றவர்கள் ஊர் சுற்ற போக… தியா,அனிஷாவோடு மேலும் இரண்டு தோழிகளை அழைத்து கொண்டு அங்கு வந்திருந்தாள்…
ஈரமான சில்லென்ற காற்று முகத்தில் மோத கெஸ்ட் ஹவுஸை பார்க்கும் போது சிறு வயது முதல் அங்கு வந்து விளையாடியது, கௌதமோடு தான் சண்டை பிடித்தது,சமாதானப்படுத்த கௌதம் பக் நாய்குட்டி வாங்கி தருகிறேன் என்றதெல்லாம் நினைவுக்கு வர… முகத்தில் இளம் புன்னகை அரும்பியது…
அந்த நினைவுகளை ஆராய்ந்து கொண்டிருந்த போது சிவகாமி அப்போதெல்லாம் கௌதமை அடிக்கடி திட்டி கொண்டிருந்ததும் இப்போதெல்லாம் அவனை பற்றிய பேச்சே வீட்டில் எழாமல் இருப்பதும் கூட நினைவுக்கு வந்தது… எதற்காக தாய் அவனை திட்டி கொண்டே இருக்க வேண்டுமென யோசித்து பார்த்தாள்… அவளுடைய அறிவுக்கு எட்டியவரை பதில் கிடைக்கவில்லை…
தோழிகளோடு இருந்தாலும் நினைவுகள் எங்கோ பறந்து கொண்டிருந்தது… கேட் அருகே வாட்ச் மேன் இருக்க… அவளுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு கேட்டை திறந்து விட்டான்…
“வீடு சுத்தம் செய்து இருக்கா மாரியப்பா?”
“ஆச்சுங்கம்மா… நேற்றே பெரியம்மா போன் செய்து சுத்தம் செய்ய சொன்னாங்க… நீங்க இன்றைக்கு வந்தாலும் வரலாம் என்று சொன்னாங்க… ” என்று அவசரமாக அவன் கூற… சிரித்து கொண்டாள்… தனியாக அனுப்பி விட்டாலும் விசாலாட்சி அத்தை ஸ்மார்ட் தான் என்று நினைத்து கொண்டாள்… ஏனென்றால் இங்கு வருவதையே காலையில் தான் அவருக்கு கூறியிருந்தாள் ஆதிரை!
உள்ளே நுழைந்த ஆதிரையின் கண்களில் முதலில் பட்டது அந்த டுக்காட்டி பைக்… இதழில் ஆதூரமான புன்னகை!
“மாரியப்பா… பைக்கை சர்விஸ் பண்ண வேண்டி இருக்குமா?”
“தேவை இல்லைங்கம்மா… தினம் துடைச்சு ஸ்டார்ட் பண்ணி ஓட விட்டுடுவேன்மா… ஆனா ஓட்ட மாட்டேன்… அய்யா சொன்ன மாதிரியே தான் அந்த வண்டிய பார்த்துக்கறேன்ம்மா… ” பணிவாக கூற… அதை கேட்டு கொண்டவளுக்கு மனதில் குறுகுறுப்பு…
அந்த டுக்காட்டி கௌதமுடையது என்பது அவளுக்கும் தெரியுமென்பதால் வந்த குறுகுறுப்பு! ஏன் இங்கேயே நிற்கிறது என்ற கேள்வி அவளுடைய மூளையில் நெண்டியது! அந்த பைக் அங்கேயே நின்றிருந்தாலும் அதை வேறு ஒருவரையும் தொட கூட விட்டதில்லை சிதம்பரம்… வருடக்கணக்காக யாருக்கோ காத்து கொண்டிருப்பதாக தோன்ற செய்து கொண்டிருந்தது அவரது செய்கை!
யாரும் அந்த பைக்கை பற்றி கேள்வி கூட எழுப்பியதில்லை… எப்போதும் தன் அதிகாரத்தை நிலைநாட்டி கொண்டே இருக்கும் சிவகாமி கூட இந்த விஷயத்தில் வாய் மூடி மௌனியாகி விட்டார் என்பது மட்டுமே ஆதிரை அறிந்தது…
இப்போது கௌதமும் ஊட்டியில் இருக்கும் இந்த நேரத்தில் அவனை அழைத்து வந்து பைக்கை காட்டினால் என்ன என்று அவளுக்கு தோன்றியது… வள்ளியம்மையை அவளது கௌதம் அண்ணனிடம் சேர்ப்பிப்பதும் எவ்வளவு பெரிய சாதனை என்று நினைத்து கொண்டாள் ஆதிரை! அது அவளுக்கே வெட்டி கொள்ளும் குழி என்பதும்… அந்த குழியை தானே வெட்டி கொண்டு இறங்க போகிறோம் என்பதை அறியாத அந்த பேதை அந்த பைக்கை தடவி பார்த்தாள்!
கௌதமே தன்னுடைய கைகளில் இருப்பதாக தோன்றியது அவளுக்கு… உணர்வு மேலீட்டால் கண்களில் சிறு துளியாக கண்ணீர்… முதலிலெல்லாம் தோன்றாத இந்த உணர்வு ஏன் இப்போது தன்னை அலைகழிக்க வேண்டுமென தோன்றியது…
காரணம் அவன் மேல் கொண்டுவிட்டஉயிரை தீண்டும் நேசம்!
காதல்!
“ஏய் ஆதி… ஏன் அந்த பைக்கை இப்படி தடவிக்கிட்டு இருக்க… ” அருகில் நின்றிருந்த அனிஷா சற்று சப்தமாக கேட்க… திடுக்கிட்டு சுயநினைவை பெற்றாள் ஆதி! ஆனால் உதடுகளில் ஒட்டி கொண்டிருந்த புன்னகை சற்று விரிந்தது…
“ச்ச்சும்மா… ”என்று சிரிக்க…
“விட்டா அந்த பைக் கூட டுயட் பாடிடுவ போல இருக்கேடி… ” தியா நக்கலாக கேட்க… ஆதியும் சிரித்து கொண்டே…
“பாடிடலாம் தான் ஆனா இந்த பைக்குக்கு சொந்தக்காரன் இன்னும் ஒத்துக்க மாட்டேங்கறானே… ” கேலியாகவே கூற… நால்வருமாக சேர்ந்து கொண்டு…
“ஓஓஓஓஹோஓஓ… ”என்று சிரித்து கொண்டேநீட்டி முழக்க… தியா அதே சிரிப்போடு கேட்டாள்…
“அப்போ இந்த பைக் யாரோடதுன்னு கண்டிப்பா தெரிந்தாகனுமே… ” குறும்பாக ஆதிரையை பார்த்து கேட்க…
“ஹஹா… சொல்ல மாட்டேனே… ” குறும்பாக கண்ணடித்து விட்டு ஓட… அவளை பிடிக்க நால்வரும் பின்னே ஓட… அவர்களிடம் சிக்காமல் வெளியே ஓடியவளை பிடித்து உண்மையை வெளிவர வைத்தேயாக வேண்டுமென்று தியா மறுபுறம் வந்து அவளை பிடித்து கொள்ள… சிரித்து கொண்டே தியாவிடம் சிக்கியவள் சட்டென்று தோன்றிய உணர்வில் திரும்பி பார்க்க… வந்து கொண்டிருந்தது ஜிகே!
நிதானமாக தனியனாக இறுக்கமான முகத்தோடு வந்து கொண்டிருந்தவனை கவனித்து விட்ட ஆதிரையின் முகத்தில் வெட்க சிரிப்பு வந்து ஒட்டி கொண்டது…
“ஏய் ப்ளீஸ் விடுடி… சர் வர்றார்… ” தியாவை பார்த்து ஆதி கெஞ்ச… திரும்பி ஜிகேவை பார்த்தவள்…
“அட… சர் வர்றார்… நீ சொன்ன விஷயத்தை அவர் கிட்ட சொல்லி கேட்கலாமா… ” கேலியாக அவள் கேட்க… ஆதிரைக்கு ஏனோ அந்த நினைவே பதட்டத்தை கொடுத்தது… ஏதோ ஒரு பிரச்சனை அவனுக்கும் தங்களது வீட்டுக்கும் என்பதை மட்டும் புரிந்து வைத்திருந்தவளுக்கு தியா எதையாவது குழப்பி விட்டுவிடுவாளோ என்று பயந்தாள்!
“ஐயோ வேண்டாம் தியா… ” என்று கூறும் போதே ஆதிரையை கவனித்து விட்ட ஜிகேவின் முகம் மேலும் இறுகியது… நிதானமாக வந்து கொண்டிருந்தவனை எப்படி அணுகுவது என்பது ஆதிரைக்கு புரியவில்லை… ஆனாலும் அவனுடைய பைக்கில் இப்போது ரைட் சென்றால் என்னவென்று கேட்ட மனதையும் அவளால் அடக்க முடியவில்லை… அதற்கான எதிர்வினைகளை பற்றி விளங்கி கொள்ளாமல் யோசித்தது மனது!
அவசரமாக தோழிகளிடம் கூறிவிட்டு அவர்களது கேலியை சமாளித்து கௌதம் முன் சென்று நின்றாள்… ஊட்டி வந்த இந்த நான்காம் நாள் வரை வெறும் பார்வை பரிமாற்றம் மட்டுமே… அவளும் பேசவில்லை… அவனை பற்றியோ கூறவே தேவையில்லை… ஓய்வாக இருந்த பொழுதும் தோழிகளின் கேலியும் அதை காட்டிலும் பழைய நினைவுகளுமாக அவளை அவனிடம் பேச வைத்தது…
“ஹாய் கௌதம் மாமா… ” புன்னகையோடு அவன் முன் வந்து நின்றவளை பார்த்தான்… அவனது கண்களில் ஏனென்று அறிய முடியாத இறுக்கம்! டான்ஸ் ரிகர்சலில் கண்களால் பருகி கொண்டிருந்தவனா இவன் என்று எண்ண தோன்றியது ஆதிரைக்கு!
“மாமா ப்ளீஸ் ஒரே ஒரு ரெக்வஸ்ட்… ” ஒற்றை விரலை காட்டி அவனிடம் கெஞ்ச… என்னவென்பதை போல புருவத்தை உயர்த்தி…
“என்ன?” என்று கேட்டபோது ஏன் இப்படி கல் மாதிரி இருக்கிற கௌதம் என்று அவனது சட்டையை பிடித்து உலுக்க வேண்டுமென்பது போல இருக்க… இதழோரம் சிரிப்பு மலர்ந்தது…
“பக்கத்துல என் ப்ரெண்ட்ஸ் இருக்காங்க… ” என்று அவள் இழுக்க…
“சோ… ” அவளுக்கு பின்னால் நின்றிருந்த தியா குழுவினரை பார்த்து ஒரு சின்ன புன்னகையை உதிர்த்தவன்… இவளை கேள்வியாக பார்க்க…
“என்னை திட்டாம என் கூட வர வேண்டும்… ஓகே வா?” ஒரு பக்கமாய் தலைசாய்த்து கண்ணை சிமிட்டி அவள் கேட்க… கௌதம் ஒரு கணம் நழுவி பின் மீண்டான்… அவன் பதில் கூறாமல் இருப்பதை பார்த்து அவனது கையை இரண்டு கையாலும் பற்றியவள் கெஸ்ட் ஹவுசுக்கு இழுத்து வர… அவனது ஸ்மரணை பறிபோனது…
அந்த வீட்டின் முன் சென்று நிற்க… அவனது உணர்வுகள் மீண்டது… அவளது கைகளை மெதுவாக விலக்கி விட்டான்…
“சொல்லு ஆதி… ” எச்சரிக்கையாக அவன் கேட்க… அவனை கெஞ்சுதலாக பார்த்தவள்…
“ஒரே ஒரு ரவுன்ட் மாமா… உங்க டுக்காட்டில… உங்க ட்ரேட் மார்க் ஸ்பீட்ல… ப்ளீஸ்… எத்தனை வருஷமாச்சு… ” ஊரில் இருந்த தெய்வங்களுக்கெல்லாம் மனு போட்டு விட்டு அவனிடம் கேட்டு வைக்க… அவளை சற்று விலக்கி விட்டு கேட் உள்ளே நிறுத்தபட்டிருந்த அந்த பைக்கை பார்த்தான்…
அவனுடைய பைக்… !
அவன் ஆசை ஆசையாக இந்த ஊட்டியில் பறந்த பைக்… அவனது சாதனையின் சின்னமாக கருதியதுபோய் ஒரே நாளில் அவமானத்தின் சின்னமாக மாற்றப்பட்ட அவனுடைய இன்னொரு உயிர்!
அன்று பள்ளியிறுதியை முடித்து விட்டு சென்றவன் மீண்டும் ஊட்டியை நினைத்தும் பார்க்கவில்லை… ஊட்டியை நினைக்கும் போதெல்லாம் அவனது அவமானம் மட்டுமே நினைவுக்கு வர… உள்ளுக்குள் வழிந்த குருதியில் உண்டான வலியினால் மனம் தவிக்கும்!
அந்த வலி வேறொன்றையும் நினைக்க விடவில்லை… வாழ்கையில் வெற்றியை கைப்பற்ற உந்தியது… இருப்பதிலேயே மிகச்சிறந்த கல்லூரியில் கல்வியை பெற வகை செய்தது… அதை சாத்தியமாக்கியது தாயின் வழியில் வந்த அவர்களுடைய வளமான பின்னணி என்றாலும் அவற்றையெல்லாம் சோதித்து பார்க்க சொன்னது அவனது மனதின் வலி!
அந்த வலியின் சாட்சியாக தான் விட்டுவிட்டு சென்ற பைக்… ! அதை பார்க்கும் போது உள்ளுக்குள் மனதை பிசைந்தது… அவனையும் அறியாமல் பைக்கை நோக்கி கால்கள் செல்ல போக…
மனதை வெகுவாக முயன்று அடக்கினான்…
அருகில் நின்று கொண்டிருந்த ஆதியின் தோழிகளை பார்த்தான்… எரிச்சலை அடக்கி கொண்டு… அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில்…
“ஆதி ஜஸ்ட் ஷட் அப்… ” பல்லை கடித்து கொண்டு அவன் கூற…
“ப்ளீஸ் மாமா… ஒரே ரவுன்ட் தான்… அதுக்கு மேல நான் கேட்கவே மாட்டேன்… ” அவனை விரும்பி அவனது அருகாமையை நேசித்த அவளது மனம் அவனது பிடிவாதத்தை கண்டு சுணங்கியது… அவனோ…
“பிடி… ”என்று அவளிடம் தனது செல்பேசியை கொடுத்து… “உன் அம்மாவுக்கு பேசு… என்னோட ரைட் போக போறேன்னு சொல்லு… ” கடுகடுப்பாக கூற…
“அம்மா பர்மிஷன் கொடுத்தா போதுமா?… ” கண்களில் ஆர்வம் மின்ன கேட்டவளை கூர்ந்து பார்த்தான்… இத்தனை நாட்களில் அவனிடம் இல்லாத பார்வை… மனதை கூறு போடும் பார்வை…
“எனக்கு உன் அம்மாவோட பர்மிஷன் முக்கியமில்லை… என்னோட தன்மானம் முக்கியம் ஆதி… அது மட்டும் தான் முக்கியம்… உடைந்து போனது போனதுதான்… இனிமே ஒட்ட வைக்க நீ முயற்சி செய்யாதே… ” அருகில் இருந்தவர்களையும் பொருட்படுத்தாமல் அவளிடம் வெடித்தவன்… திரும்பி ஒரு முறை பைக்கை பார்த்து…
“வீட்டுக்குள் வா என்று உன் அம்மா தான் அழைக்க வேண்டும் ஆதி… அப்போ தான் இந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைப்பேன்… அதுக்கு முன்னாடி நீ என்ன செய்தாலும் என்கிட்ட இருந்து உனக்கு பதில் வராது… வரவே வராது… ” வார்த்தைகளில் எரிமலையின் சீற்றம் இருந்தாலும் அவனது ஆசை பைக்கை ஒரு முறை கண்களால் நிரப்பி கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றான்…
அவனது கோப முகம் அவளை அதே இடத்தில் உறைய வைக்க… சட்டென்று தன்னை மீட்டு கொண்டவள்… அருகில் நின்றிருந்த அனிஷாவிடம்…
“ஏய் வீட்ல இருங்கடி… நான் துருவாசரை மலையிறக்கிட்டு வரேன்… ” என்று வேக நடையிட்டு சென்று கொண்டிருந்தவனின் பின்னால் ஓடினாள்… அவசரமாக ஓடியவளை பார்த்த தியா…
“சர் அவ கிட்ட சொல்றதை எல்லாம் நம்ம கிட்ட யாராவது சொன்னா திரும்பி கூட பார்க்க மாட்டோம் ஆனா ஏன்டி இவ… இப்படி கொஞ்சம் கூட மான ரோஷமே பார்க்க மாட்டேங்கறா?” முகத்தை சுருக்கியபடி சொன்னவளின் முதுகில் தட்டி கொடுத்தாள் அனிஷா…
“லவ்வுக்கு ஐ சைட் மட்டுமில்ல… சிக்ஸ்த் செவன்த் எய்ட்த் சென்ஸ்ன்னு ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாதுடி… அது ஒரு மானங்கெட்ட பொழப்பு… நீயும் சீக்கிரமாவே அந்த கருமத்துல விழுந்துடுவ… அப்போ தெரியும் ஏன் மான ரோஷமே பார்க்காம ஒடறான்னு… ” மிகவும் தீவிர குரலில் சிரிக்காமல் கூறி கொண்டிருந்தவளை தியாவோடு மற்ற இருவரும் சேர்ந்து மொத்தி எடுத்தனர்…
*******
வேகமாக நடந்து சென்றவனின் பின் எப்போதும் போல ஓடினாள் ஆதிரை… தோழிகளின் கேலியும் கிண்டலும் தெரியும் தான்… இப்போது நடந்த நிகழ்வை கொண்டு அவர்கள் எந்த அளவு அவளை நக்கலடிப்பார்கள் என்பதும் தெரிந்தது தான்… ஆனாலும் அனைத்தையும் மீறி அவளை ஆக்கிரமித்து இருந்தான் ஜிகே… எண்ணங்களில்!
“மாமா… ”
எப்படி அழைத்தாலும் திரும்பாமல் சென்று கொண்டிருந்தவனை எப்படி திருப்புவது? அது அவளது மிக முக்கியமான கவலையாக இருந்தது…
“டேய் கௌதம்… ” இவனுக்கு மரியாதை கொடுத்து பேசுவது… பொறுமையாக பேசுவது எல்லாம் முடியாத காரியம் என்று எண்ணிக்கொண்டாள்… அதிரடியாக எதையாவது செய்தால் மட்டுமே அவனை கவிழ்க்க முடியும் என்ற எண்ணத்தில்!
வேகமாக நடந்து கொண்டிருந்தவன் சட்டென்று நின்றான்… திரும்பி பார்த்தவன்…
“என்னடி?”
வெட்க சிரிப்பு படர்ந்தது ஆதிரையின் முகத்தில்… அவசரமாக அவனுக்குஅருகில் வந்து…
“தேங்க்ஸ்டா மாம்ஸ்… ” கொஞ்சலாக கூற… அவளை முறைத்தவன்… நிற்காமல் நடக்க ஆரம்பித்தான்… அவனை துரத்தினாள் ஆதிரை!
“இன்னும் உன்னை என்னதான் பண்றதுன்னே தெரியல ஆதி… கிவ் மீ எ ப்ரேக் மேன்… ” ஆயாசமாக கூறியவனை குறும்பான பார்வை பார்த்தவள்…
“ஆஸ் யூ விஷ் மாம்ஸ்… ” என்று கண்ணடிக்க… அவன் முறைக்க… “இல்ல என்ன பண்றதுன்னு தெரியலன்னு சொன்ன இல்லையா… அதான்… ” என்று விளக்கமும் கொடுக்க… கௌதம் தலையிலடித்து கொள்ளாத குறையாக அவளை பார்த்து கடுப்படித்தான்…
“மரியாதை… மரியாதை… ”
“என்னடா மாம்ஸ் உனக்கு மரியாதை தரனும்?… ” அதே குறும்பு பார்வையோடு அவள் கேலியாக கூற… ஆள் அரவமற்ற இந்த இடத்தில் அதுவும் காட்டு விலங்குகள் உலவும் இந்த இடத்தில் ஆதியோடு நடப்பது சரி கிடையாதே என்று உணர்வோடு…
“ஆதி… ஒழுங்கா நீ உன் கெஸ்ட் ஹவுசுக்கு ஓடு… இந்த பக்கம் வைல்ட் அனிமல்ஸ் நிறைய வரும்… ” அவளை பயமுறுத்த கூறினாலும் அது உண்மைதானே!
“சரி நான் போறேன்… ஆனா அதுக்கு முன்ன… ” என்று இடைவெளி விட…
“என்ன அதுக்கு முன்ன?”முறைத்து கொண்டே கேட்டான்…
“இப்படி எல்லாம் முறைச்சா எனக்கு சொல்ற மூடே போய்டும் மாம்ஸ்… ”அவள் வேண்டுமென்றே சிணுங்க… அவனுக்கோ எங்கு சென்று முட்டி கொள்வது என்று பார்க்க ஆரம்பித்து இருந்தான்…
“ஆதி… தயவு செய்து வெட்கபடறதா நினைத்து நீ என்னை படுத்தாதே… எரிச்சலா இருக்கு… ” அந்த எரிச்சலை மறைக்காமல் முகத்திலும் காட்ட… அப்பாவித்தனமாக முகத்தை சுருக்கி கொண்டு கீழே குனிந்து கொண்டவளுக்கு மனம் வலித்தது… அவளது காதலை மேலும் எவ்வளவுதான் சிறுமைப்படுத்துவான் என்று மனம் பிசைந்தது!