Cp26

Cp26

அத்தியாயம் 26

அதுவரை அவனிடம் வார்த்தைக்கு வார்த்தை வாயாடி கொண்டிருந்தவள் அமைதியாகிவிட… அவனுக்கே அந்த அமைதி பிடிக்காமல் போயிற்று!

“ஆதி… ” மெலிதாக அழைத்த கௌதமை நிமிர்ந்தும் பார்க்கவில்லை… அவள் விளையாட்டுத்தனமாக அவனிடம் காதலை சொல்லி கொண்டே இருந்தாலும் அவளது மனதும் காயப்படும் அல்லவா! குமரியின் உருவத்தில் இருந்தாலும் அவள் இன்னமும் குழந்தை தானே!

“ஆதி… ”

கண்களை மட்டும் அவள் மேலே உயர்த்தி பார்க்க… அவனுக்கான பரிதவிப்பும் காதலும் ஒன்றாக கலந்து குழந்தைத்தனம் இன்னமும் மாறாமல் இருந்த அந்த பார்வையில் முழுவதுமாக தொலைந்து கரைந்து உடைந்து போனான் கௌதம்!

“இப்போ உனக்கு என்ன வேண்டும்? ரைட் போக வேண்டும்… அவ்வளவுதானே… ” என்று சற்று இறங்கி வந்து கேட்க… அவள் வேகமாக தலையாட்டினாள்… ஆதி உனக்கு வெட்கம் மானம் ரோஷம் இதெல்லாம் ஒன்றுமே இல்லையா என்று மனசாட்சி தெரியாமல் கேள்வி எழுப்பிவிட…

‘அப்படீன்னா என்ன? எங்க கிடைக்கும்?ஹவ் மச் காஸ்ட் ’ என்ற பதில் கேள்வியில் மனசாட்சியை ஓட ஓட விரட்டியடித்தாள்…

அவள் அப்பாவியாக தலையாட்டுவதை பார்த்தவனது முகம் கசங்கியது… அவனது கண்கள்அளவென்று கூற முடியாத துயரை வெளிப்படுத்த…

“ச்சே… ” என்றவாறு கையில் வைத்திருந்த அந்த சிறு குச்சியை தூக்கி எறிந்தவன்… அருகிலிருந்த தடுப்பு சுவற்றில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்தான்…

பார்த்து கொண்டிருந்த ஆதிரைக்கு ஒன்றும் விளங்கவில்லை… ஆனால் மனதில் எதையோ வைத்து கொண்டு குமைகிறான் என்பது மட்டும் ஊர்ஜிதமாக… அவனுக்கு அருகில் நெருங்கி அமர்ந்தவள்… அவனை தோளோடு சேர்த்து அணைத்து கொண்டு…

“கௌதம்… ” மெலிதான அவளது அழைப்பிற்கு பதிலில்லாமல் போக… அவனது முகத்திலிருந்து கைகளை எடுத்து விட்டு தன்னை நேருக்கு நேராக பார்க்க வைத்தாள்… ஏனோ அந்த நேரத்தில் அவளுக்கு அவனது வயதெல்லாம் நினைவில் இல்லை… பொம்மையை தொலைத்து விட்டு பரிதவிக்கும் குழந்தையாகவே அவனை எண்ண தோன்றியது…

“அம்மாவை வைத்து என்னை வெறுக்கறீங்களா?”அவனது கண்களை பார்த்து அவள் கேட்க… அவளது கண்களை நேருக்கு நேராக சந்திக்க முடியவில்லை அவனால்!முகத்தை திருப்பி கொள்ள…

“எனக்கு உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன சண்டைன்னு கூட தெரியாது… ஆனா உங்களை என்னால் விட்டுவிடவே முடியாது… அது மட்டும் உண்மை… என்னை மட்டும் பாருங்க கௌதம்… மறுபடியும் அதே டைலாக்க சொல்லாதீங்க… ஒட்டாது உரசாதுன்னு… ” மிகவும் தீவிர தொனியில் கூறியவள் முடிக்கும் போது சிரிக்காமல் அவனை கிண்டலடித்து வைக்க… இறுக்கமாக இருந்த அவனது முகத்திலும் மெல்லிய கீற்றாக புன்னகை!

“ஒட்டாதுன்னு சொன்னேன்… சரி… அதென்னடி உரசாது?” அதே புன்னகையோடு கேட்க… மேலும் நெருங்கி அமர்ந்தவள்…

“மாம்ஸ்… உங்களுக்குஉரச தெரியாதுன்னு சொன்னா நான் நம்பனுமா? அந்த மது அக்காவோட நீங்க இருந்த இருப்பென்ன? இப்ப என்கிட்டே உதார் விட்டுட்டு இருக்க இருப்பென்ன?” கேலியாக கேட்டவளை பார்த்து வாய்விட்டு சிரித்தவன்…

“நான் அப்படித்தான்னு தெரியுதே… அப்புறமும் ஏன் இப்படி என்னையே பிடிச்சுட்டு தொங்கற ஆதி? எந்த நம்பிக்கையில் நான் உன்னை மட்டுமே லவ் பண்ணுவேன் என்று நினைக்கிறாய்?”

அவன் சிரித்து முடிக்கும் வரை காத்திருந்தவள்… அவனது அந்த சிரிப்பையெல்லாம் மனதினுள் தேக்கி வைத்து கொண்டு…

“எனக்கு இந்த குறும்பு கிருஷ்ணனை அவ்வளவு பிடிச்சுருக்கே… ” அதற்கு ஈடான குறும்புத்தனதோடு கூறி இடைவெளி விட… அவளது கண்களை உற்று நோக்கினான்…

“நம்பிக்கை என்பது வைப்பது இல்லை கௌதம்… மனதால் உணர்வது! இன்வாலண்டரி ஆக்ஷன்… நானாக உணர்ந்தேன்… எனக்கு நீங்க தான் உங்களுக்குநான் தான் என்று!” அவனது கண்ணுக்குள் காதலை தேடியவாறே அவள் கூற… அவன் மனம் ஒரு கணம் அதிர்ந்தது…

“நான் உன்னை காதலிக்கவில்லை என்று சொன்னால் என்ன செய்வாய் ஆதி?”

“நான் இதை செய்கிறேன் நீ எனக்கு இதை செய் என்று சொல்வது காதலல்ல… அது ஒப்பந்தம்! நான் உங்களிடம் ஒப்பந்தத்தை பேசவில்லை… என்னை காதலிக்க கட்டாயப்படுத்தவில்லை… உங்களதுகண்களில் காதல் தெரிகிறதா என்று மட்டுமே பார்க்கிறேன் கௌதம்… ” அவளது ஒவ்வொரு சொற்களும் அவனது உயிரை தீண்டி விட்டு செல்ல… அவனது முகத்தில் மென்மை படர்ந்தது!

எதையோ முடிவு செய்தவனாக நிமிர்ந்தவன்… அவளது முகத்தை மென்மையாக பற்றினான்…

“இந்த நம்பிக்கை மட்டும் போதும் ஆதி… ” என்று மென்மையாக கூறியவன்… “உனக்கு ஹாதிராமின் வரலாறு தெரியுமா?” என்று கேட்க…

“சொல்லுங்க லெக்சரர் சர்… ”என்று குறும்பாக கூறியவளை ஆதூரமாக பார்த்து…

“அவர் நம்ம வெங்கட்டோட தீவிர பக்தர்… ” அவளது பாணியிலேயே கூற… ஆதி கண்ணடித்து…

“யூ மீன் லார்ட் வெங்கட்… ” தீவிரமாக கேட்பது போல விஷமக்குரலில் கேட்க…

“அதே ஆசாமி தான்… நம்ம ஹாதிராம் எப்போவும் அவர் கூட சொக்கட்டான் ஆடுவார்… எப்போவுமே நம்மாள் தான் வின் பண்ணுவார்… ஒரே ஒரு நாள் ஹாதிராம் வின் பண்ணிட்டாராம்… ”சிரித்து கொண்டே கதையை கூறி கொண்டிருந்தவனை பார்த்து ஆதிரை…

“வாவ்… ” என்று கூற

“ம்ம்ம் அதே தான்… ஹாதிராம் வின் பண்ணினதால எனக்கு என்ன தர்றீங்கன்னு டிமேண்ட் செய்ய… நம்ம வெங்கட்டும் இந்தா பிடிச்சுக்கோ ஒரு வரம் உனக்கு கிராண்டட்ன்னு சொல்லி கொடுத்துட்டாராம்… அவர் என்ன வரம் கேட்டு இருப்பார் சொல்லு?” ஆதியின் தோளின் மேல் கை போட்டு கொண்டே இந்த கதையை கூற… அவளும் என்ன வரமாக இருக்கும் என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்து இருந்தாள்…

“தெரியல மாமு… ” தாடையையும் நெற்றியையும் மாற்றி மாற்றி தட்டியதன் பலனாக அவனையே கேட்க… ஆதியை தன் முன் நிறுத்தி அவளது கண்களை பார்த்து…

“பகவானே உன் கிட்ட என்ன கேட்டுட போறேன்… நான் உன்னை மறந்தாலும் நீ என்னை எப்போவுமே மறந்துட கூடாது… விட்டுட கூடாதுன்னு கேட்டாராம்… ” என்று மௌனமானவனை புன்னகையோடு பார்த்தாள் ஆதிரை…

“இப்போ எதுக்கு மாமா ஹாதிராம் கதை சொன்னீங்க?”அதே புன்னகையோடுகேட்டவளை தன் கை வளைவில் கொண்டு வந்தவன்…

“இதையே தான் நானும் கேட்கறேன் ஆதி… எந்த நிலைமை வந்தாலும் என்னை விட்டுடாம இருப்பியா? அவங்க சொல்றாங்க இவங்க சொல்றாங்க… இல்லை நானே சொன்னாலும் கூட என்னோட ஆதிக்கு என் மேல் நம்பிக்கை இருக்க வேண்டும்… பரிபூரணமாக இருக்க வேண்டும்… ” மென்மையாக கேட்டவனின் இதழ்களை கை கொண்டு மூடினாள் ஆதிரை…

“நான் முதலிலேயே சொல்லிவிட்டேன் கௌதம்… என்னுடைய லவ் அன்கன்டிஷனல் அன்ட் இன்வாலண்டரி… ஆனா ஒரே ஒரு ரெக்வஸ்ட்… ” கெஞ்சுதலாக முகத்தை வைத்து கொண்டு அவனிடம் கேட்க… என்னவென்பதை போல பார்த்தான்…

“கிளாஸ்ல டீச் பண்ற மாதிரி இப்படியெல்லாம் உபன்யாசம் செய்யாதீங்க மாம்ஸ் ப்ளீஸ்… பச்சபுள்ளை பாவம்… ”பாவமாக முகத்தை வைத்து கொண்டு கூற… அவனது முகத்தில் குறும்பு படர்ந்தது…

“வேற என்ன செய்ய ஆதி? அதையும் நீயே சொல்லிடு… ”அவளது இடையை பற்றி கொண்டு கேட்க… அவள் கூச்சத்தில் நெளிந்தாள்…

“ஹிஹி மாம்ஸ்… மீ ரொம்ப நல்ல பொண்ணு… எனக்கெல்லாம் உங்களை மாதிரி எக்ஸ்பீரியன்ஸ் கிடையாது… ” நெளிந்து கொண்டே அவள் கூற… சிரித்து கொண்டே கௌதம் அவளை விட்டுவிட்டு…

“ஓகே நீ கெஸ்ட் ஹவுஸ்ல வெய்ட் பண்ணு… வரேன்”என்று கூறியவன் அவளை அந்த வீட்டில் விட்டு சென்றவன் சிறிது நேரத்திலேயே செல்பேசியில் அழைத்தான்…

“வெளிய வா ஆதி… ”

என்றவனின் அழைப்பில் ஆதி வெளியே வர… உடன் தியாவும் அனிஷாவும்… ! அந்த ஸ்போர்ட்ஸ் பைக்கில் புன்னகையோடு அமர்ந்திருந்தான் ஜிகே… தன்னுடைய ஆசையை உடனே நிறைவேற்றி வைக்கும் கௌதமை அப்போதுதான் பார்தவளால் உடனே அதை ஜீரணிக்க முடியாமல் நின்று விட… உடனிருந்த தியாவும் அனிஷாவும் கள்ள குறும்போடு…

“என்னடி சர் இப்போதான் கொதி கொதின்னு கொதிச்சுட்டு போனார்… அதுக்குள்ளே எப்படி இப்படி?” வியப்பாக இருவருமே கேட்டு வைக்க… அதை கேட்க ஆதி இருந்தால் தானே? துள்ளி குதித்து கொண்டு ஓடியிருந்தாள்!

அவனை இறுக்கி அணைத்து கொண்டு அசுர வேகத்தில் குன்னூரிலிருந்து அவலாஞ்சி செல்லும் சாலைகளில் பறந்த போது இருவருக்குமே உலகையே வெற்றி கொண்டதாகத்தான் தோன்றியது… முகத்தில் குளிர் காற்று வேறு அறைய… அந்த சூழ்நிலை இருவருக்குமே பிடித்தமானதாக இருக்க…

அவலாஞ்சி எமரால்ட் ஏரி வரை நிற்காமல் பறந்தது அவனது பைக்…

“ஹய்யோ ப்ளீஸ் கொஞ்சம் ஸ்பீட கம்மி பண்ணுங்க… ” கண்களை இறுக்க மூடி கொண்டு அவனை இறுக்கமாக கட்டி கொண்டவளை மேலும் சீண்டி பார்க்க சொன்னது அவனது வயது…

மேலும் மேலும் வேகத்தை அதிகப்படுத்த ஆதிரை அவனை மேலும் நெருங்கி இறுக்கி முதுகில் முகத்தை மறைத்து கொண்டாள்…

“ப்ளீஸ்… பயமா இருக்கு… வேண்டாம் மாமா… ”குளிரோடு பயமும் சேர்ந்து அவளை நடுங்க வைக்க…

ஏரிக்கு அருகில் இருந்த பாதையில் நிறுத்தியவன்… அவளை பார்த்து…

“இதுக்கே இப்படி பயந்தா இன்னும் எவ்வளவோ இருக்கே ஆதி… ” குறும்பாக அவன் கூறியதன் உண்மை அர்த்தம் புரியாமல் ஆதிரையின் கன்னங்கள் வெட்க சிவப்பை பூசி கொள்ள… அவனை முறைத்தாள்!

“ஹலோ… நான் நல்ல அர்த்ததுல சொன்னா நீங்க ஒரு அர்த்ததுல எடுத்துக்க கூடாதுங்க அம்மணி… ” அதே குறும்போடு அவன் கூறியபோதும்… அவனது கைகளை பிடித்து கொண்டு தோளில் சாய்ந்து கொண்டு ஏரியில் கால் நனைத்த போதும்… ஆள் அரவமற்ற அந்த இடத்தில் மனம் மகிழ்ச்சியால் ததும்பி கொண்டிருந்தது!

அதே சந்தோஷத்தோடு கெஸ்ட் ஹவுஸ் வந்து இறங்கிய போது முகம் விகசித்தது… பைக்கிலிருந்து இறங்கியவளை கௌதமுடைய பார்வை காதலோடு தழுவியது… ஒன்றும் கூறாமல் உள்ளே செல்ல எத்தனித்தவளை…

“ஆதி… ”கிசுகிசுப்பாக அழைத்தான்…

“ம்ம்ம்… ”

“இன்னும் ரெண்டு நாள் தான் இங்க இருப்போம்… ”

“ம்ம்ம்ம்… ” தலை குனிந்து கொண்டே பதில் கொடுத்து கொண்டிருந்தவளை…

“அதுவும் இல்லாம நாளைக்கு உன் கிட்ட எதுவுமே பேச முடியாது… ஸ்டுடண்ட்ஸ் இருப்பாங்க… ”

“ம்ம்ம்… ”

“நல்லா ப்ராக்டிஸ் பண்ணிட்டியா? மிஸ் பண்ணிட மாட்டியே… ” சிரிக்காமல் கேட்டவனை சட்டென்று நிமிர்ந்து முறைத்தாள் ஆதிரை!

“இதுக்காகத்தான் கூப்பிட்டீங்களா?” உர்ரென்று முகத்தை வைத்து கொண்டு அவள் கேட்க…

“ஆமா… பின்ன… என்னோட பொறுப்பில் போட்டிக்கு அழைத்து வந்திருக்கேனே… நீ பாட்டுக்கு லவ் மூட்லையே இருந்து அதை மிஸ் பண்ணிட்டா என்னாகறது ஆதி?” அப்பாவித்தனமாக கேள்வி எழுப்பியவனை எதை கொண்டு அடிப்பது என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள்…

“லவ் மூட்… ” கடுப்பாக அவனை பார்த்து கேட்க… அவள் தலையாட்டியதை போலவே புன்னகையோடு அவனும் கண்ணை சிமிட்டி கொண்டு ஆட்ட

“அதுவும் உங்களை நினைச்சு… ” அவன் மீண்டும் அப்படியே சிரித்து கொண்டு தலையாட்ட…

“ஏன்டா மாமா… உனக்கே இதெல்லாம் ஓவரா தெரியல?” நக்கலாக அவள் கேட்க… கௌதம் அவளது தலையில் தட்டி…

“நம்ம வால்யு தெரியாமையே பேசறடி… ” என்றவன் அவளது கையை இழுத்து முகத்தை தன்னருகே கொண்டு வந்து… அவளது முகத்தையே பார்க்க… பயத்தில் கண்களை மூடியவள் அவன் ஒன்றும் செய்யாமலிருக்க… கண்களை திறந்து அவனை பார்த்து முறைக்க…

“கிஸ் பண்ணுவேன்னு நினைத்தாயா?”கள்ள சிரிப்போடு அவன் கேட்ட கேள்வியில் முகம் சிவந்தாலும்… அதையெல்லாம் காட்டி கொண்டு விட்டால் என்னாவது?

“ச்சீ ச்சீ பேட் வோர்ட்ஸ் எல்லாம் பேச கூடாது மாம்ஸ்… ”அவளும் சிரித்து கொண்டே வேறு புறம் திரும்பி கொள்ள… கௌதம் வாய் விட்டு சிரித்தான்!

“ஆதி… ” கண்களில் விஷமம்… உதட்டில் அதே கள்ள புன்னகை… இடைவெளி விட்டவன்… வெறுமனே வாயை மட்டுமே அசைத்து அழைக்க…

“எனக்கு கேட்கலை… ”எதையோ கிசுகிசுப்பாக கூறுகிறான் என்பது புரிந்தாலும் அவனது வாயசைப்பில் புரிந்து கொள்ள முடியவில்லை… திரும்பவும் அதே போல வாயசைக்க…

“மூன்று வார்த்தைன்னா கூட கெஸ் பண்ணிடலாம்… ஒரு வார்த்தைல என்ன சொல்றீங்க?”அவள் இனிமையான உணர்வில் குழம்ப…

“சீக்கிரமா ஹாஸ்டலுக்கு போய் செட்டிலாகிட்டு யோசி… ஓகே வா… ” என்று அவளது தலையை தட்டி விட்டு கிளம்ப… அந்த வார்த்தையும் அதற்கான அவனது விளக்கங்களும் அந்த சூழ்நிலையும் அவளை மயக்கத்தில் ஆழ்த்த கூடியவை என்றாலும் அதற்கான பின்வினையாக பின்னாளில் அந்த வார்த்தையை நினைத்தே மனம் குமைய போவதை அறிந்திருந்தால் மகிழ்ந்திருக்க முடியுமா?

error: Content is protected !!