Cp27

Cp27

அத்தியாயம் 27

துருவேறிய தண்டவாளத்தில்

படிந்த பனி போல

பயனற்று கிடக்கிறது – உன்

நினைவில் வழியும் கண்ணீர்!

-டைரியிலிருந்து

சென்னையின் மிக முக்கியமான அந்த மருத்துவமனை சோம்பலாக இயங்க ஆரம்பித்து இருந்தது… அந்த விடியற்காலை பொழுதில் இன்பேஷன்ட்டுகள் வார்ட் மட்டுமே இயங்க ஆரம்பித்திருக்க… மருத்துவமனை அறையில் வள்ளியம்மையின் தோளில் சாய்ந்து அழுது களைத்து சாய்ந்து கொண்டிருந்தாள் ஆதிரை… அருகில் வருண் சோபாவில் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருந்தான்!

அந்த கண்ணாடியை தாண்டி அவசர சிகிச்சை பிரிவு படுக்கையில் சோர்வாக பிருத்வி உறங்கிகொண்டிருக்க… அந்த பிஞ்சு கைகளில் சலைன் இறங்கி கொண்டிருந்தது…

யார் இருக்கிறார்கள் வருகிறார்கள் என்பதும் கூட ஆதிரைக்கு விளங்கவில்லை… அவளது எண்ணமெல்லாம் பிருத்வியை சுற்றி மட்டுமே இருக்க… தனது மகனின் உடல்நிலை அவளை தலைகீழாக புரட்டி போட்டிருந்தது…

முதல் நாளிரவு தந்தையை கேட்டபடி அழுது கொண்டே உறங்கிய மகனை சமாதானப்படுத்த வழி தெரியாமல் மனம் கலங்கி உறக்கம் தொலைத்து கடந்த காலத்தில் மூழ்கி இருந்தவளை பிருத்வியின் அனத்தல் சுயஉணர்வுக்கு இழுத்து வர… அவனது நிலையை கண்டு அதிர்ந்தாள்…

மூச்சுக்கு சிரமப்பட்டு… பெரிய மூச்சுக்களோடு இரைத்து கொண்டிருந்த மகனை பார்த்தபோது ஆதிரைக்கு நிலம் நடுங்கியது போல இருந்தது… என்ன நேர்ந்தது என்று அவளுக்கு சற்றும் புரியவில்லை… அவசரமாக லைட்டை போட்டு பிருத்வியை பார்த்தவளின் இதயம் அதிவேகத்தில் துடித்தது…

உடல் அவனது இயல்பான நிறத்திலிருந்து மாறி நீலம் பாரித்து, குழந்தை மூச்சுக்கு திணறி,மயக்கமாகி கொண்டிருந்தான்… ஒரு நொடி என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது என்று புரியாமல் விழித்த ஆதிரை அடுத்த நொடி தன் மகனை உலுக்க தொடங்கியிருந்தாள்…

“பிருத்வி… பிருத்வி கண்ணா… என்னம்மா செய்யுது?” அவள் விடாமல் உலுக்க… குழந்தையோ பேச முடியாமல் மூச்சுக்கு தவிக்க… அவளுக்கு அந்த நேரத்தில் என்ன செய்வது என்று கூட புரியவில்லை… அறையில் தனியாக குழந்தையின் உயிருடன் போராடி கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு மட்டுமே இருக்க…

“யாராவது வாங்களேன்… ப்ளீஸ்… ” எழுந்து சென்று அழைப்பதற்கும் தோன்றாமல் மகனை மடியில் இருத்தியவாறே அழுகை கதறலாக மாறி கொண்டிருந்தது… பிருத்வியோ சிறிது சிறிதாக நினைவை இழந்து கொண்டிருந்தான்…

பக்கத்து அறையில் இருந்த வருணுக்கு அந்த விடியற்காலை நான்கு மணிக்கு ஆதிரையின் கதறல் மெலிதாக கேட்க… அவசரமாக எழுந்து என்னவென்று கூர்ந்து கேட்டான்… அவன் எழும் நேரம் தான் என்றாலும் எழும் போதே என்னவாயிற்று என்ற அதிர்வில் எழுவது முதல் முறை அல்லவா…

ஆதிரையின் குரலாக இருக்கிறதே என்று அவசரமாக உடையை மாற்றி கொண்டு விரைந்தவனுக்கு அடைத்திருந்த அறைக்கதவின் பின்னே இருந்து கேட்ட கதறலே வரவேற்க… அவசரமாக கதவை தட்டினான்…

“ஆதி… ”

“மாமா… ஐயோ… சீக்கிரம் வாங்க… ” நடுங்கிய குரலில் ஆதிரை அழைக்க… கதவை தடதடவென தட்டினான்…

“ஆதி… கதவை திறம்மா… கதவு தாள் வெச்சு இருக்கு… ” பதட்டமாக அழைத்ததை கொண்டே சற்று சுய உணர்வுக்கு வந்தவள் அவசரமாக கதவை திறந்து அழுது கொண்டே நடந்ததை கூற… துவண்டு கிடந்த குழந்தையை பார்த்து அதிர்ந்தான் வருண்…

எதை பற்றியும் சிந்திக்காமல்… கீழ் அறையில் உறங்கி கொண்டிருந்த விசாலாட்சியை எழுப்ப கூட தோன்றாமல்… பிள்ளையை அள்ளி கொண்டு பறந்தான்… கையில் கிடைத்த காரில் தன்னை திணித்து கொண்டு!

வழியெங்கும் அழுது கொண்டே வந்த ஆதிரையை சமாதானப்படுத்துவதா? மயக்கத்திற்கும் இயக்கத்திற்கும் நடுவில் அல்லாடி கொண்டிருந்த குழந்தை பிருத்வியை பார்ப்பதா? வாழ்க்கை ஒவ்வொரு நிலையிலும் அவனை மலையுச்சியில் இருந்து தள்ளிவிட்டு வேடிக்கை பார்ப்பதாகவே தோன்றியது…

வாழ்க்கை அவர்களை துரத்துகிறதா… அல்லது வாழ்க்கையை அவர்கள் துரத்துகிறார்களா? இந்த விதிக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான இந்த பந்தயத்தில் ஓடி களைத்து இருந்தான் வருண்…

“ஆதி… ப்ளீஸ் அழாம வா… குழந்தை பயந்து போய்டுவான்… சொன்னா புரிஞ்சுக்கோ… ” கிட்டத்தட்ட நூறாவது முறையாக கெஞ்சினான்… மருத்துவமனைக்கு சென்று அவனை மருத்துவரின் கையில் ஒப்படைப்பதற்குள் அவனது மனம் பட்ட பாட்டை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது…

எத்தனையோ சவால்களையும் சாதனைகளையும் தாண்டி வந்திருக்கலாம்… கோபங்களும் தாபங்களும் கூட பெரிதல்ல! ஆனால் குழந்தை துடித்து கொண்டிருப்பதை பார்த்த போது மலையளவு துன்பமும் மடுவாகத்தான் தோன்றியது! இதை காட்டிலும் வேறு துன்பமே இல்லையென மனம் துடித்தது…

முறையாக பார்த்தால் பிருத்வி இன்னொருவரின் சொத்தாயிற்றே! என்றைக்கிருந்தாலும் உரிமையாளன் அவன் தானே… அவனது கையில் பத்திரமாக ஒப்படைக்கும் வரையில் தனக்குண்டான கடமையை சரியாக செய்யவில்லை என்றால் தனது மனசாட்சி கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா?

அதை காட்டிலும் பிருத்வி அவனது கைகளில் வளர்ந்த பிள்ளை… அவனுக்கு ஒன்றென்னும் போது வேறெதுவுமே நினைவில் இல்லை வருணுக்கு!

அவசர சிகிச்சை பிரிவுக்கு பிருத்வியை கொண்டு சென்ற பின்… அதன் வாசலில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்த போதும்… தனக்கே சாய்வதற்கு தோள் தேவைப்பட்ட நிலையிலும் அவளை தோளில் சாய்த்து சமாதானம் சொல்லிய போதும்… பதறியடித்து கொண்டு வந்த வள்ளியம்மையை சமாதானப்படுத்திய போதும் அவனுக்கான ஆறுதல் கிடைக்கவே இல்லை… மனம் இரும்பு குண்டை கட்டி கொண்டு அமர்ந்திருப்பது போல கனமாக இருந்தது…

வருண் ஓடி ஓடி களைத்த நிலையிலிருந்தான்… காலையில் விழித்தவுடன் என்னவென்று புரியாமல் விசாலாட்சி செல்பேசியில் அழைக்க… வெளிப்படையாக எதையும் கூறாமல் மருத்துவமனைக்கு புறப்பட்டு வரக்கூறினான்…

முதல் கட்ட அவசரசிகிச்சைக்கு பின்னர் ஒவ்வொரு சோதனையாக தொடர்ந்து கொண்டிருக்க… புயலாக உள்ளே நுழைந்தான் ஜிகே!

உடன் நகரின் மிக முக்கியமான மருத்துவர் இருவர்… அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவரோடு வந்தவன்… ஆதிரையை வெற்று பார்வை பார்த்தான்… அந்த ஒரே பார்வை ஆயிரம் கேள்விகளை கேட்டது… ஆதிரை அருகே இருந்த வள்ளியம்மையின் கைகளை இறுக பிடித்து கொண்டாள்…

இயல்பாக எழுந்த வருண்… மருத்துவர்களின் கைகளை பிடித்து குலுக்கினான்… முன்பே அவன் அவர்களை அழைத்து வருவதை அறிந்தவன் போல காட்டி கொண்டவனை மனதில் மெச்சி கொண்டான் கௌதம்… இப்போதைய நிலையில் கௌதமால் வருண் மேல் கோபப்பட முடியவில்லை… தன்னுடைய பிள்ளையின் உடல்நிலை மட்டுமே அவனது கருத்தில் இருந்தது…

“வருண் மாமா… இவர் எதுக்கு வந்திருக்கார்?” மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவினுள் சென்றிருக்க… அவர்களை அனுப்பிவிட்டு கலக்கமாக திரும்பியவனை பார்த்து ஆதிரை பற்களை கடித்து கொண்டு கேட்க… ஜிகேவின் முகத்தில் கோபச்சூடு!… ஆனாலும் அவனால் எதையும் பேச முடியவில்லை… மனதில் வேதனை மட்டுமே முன் நிற்க… வாய் பேச முடியாதவனாக நின்றான்!

ஜிகே எதையாவது பேசிவிட போகிறானோ என்று எண்ணி கொண்ட வருண்… அவனை முந்தி கொண்டு…

“ஆதி… ஜஸ்ட் கீப் காம்… ” அவளை அடக்க… ஆதிரையோ தன்னை தனியே தவிக்க விட்டுவிட்டவனுக்கு இப்போது மட்டுமென்ன உரிமை வேண்டி இருக்கிறது என்கிற கோபத்தில்…

“தேவை இல்லை வருண் மாமா… எதற்குமே துணை நிற்காத இவருடைய துணை இப்போதும் தேவையில்லை… என் பிள்ளைக்கு இவர் தேவையில்லை… அவன் என்னுடைய பிள்ளை மட்டும் தான்… ” கோபத்தில் வார்த்தைகளை இறைத்தவளை…

“ஷட் அப் ஆதி… முதலில் மரியாதையாக பேசு… இது பொது இடம்… நம்முடைய குடும்ப சண்டையை நிகழ்த்தி காட்டும் மேடையாக்க நினைக்கிறாயா?” கோபமாக வருண் கேட்க… வள்ளியம்மை ஆதிரையை தோளோடு இறுக்கி பிடித்தாள்… இந்த கோபத்தை எல்லாம் பின்னர் காட்டிக்கொள் என்கிற அறிவுறுத்தல் அதிலிருக்க… சரிந்து அமர்ந்தவளுக்கு அழுகை வெடித்து கொள்ளும் போல தோன்றியது…

வேரற்ற மரம் போல சாய்ந்து அழுதவளை சமாதானப்படுத்த முடியாத நிலையில் தன்னை இருத்தி வைத்த விதியின் நிலையை என்னவென்று சொல்ல? சிகிச்சையிலிருந்த மகனை நினைக்கும் போது ஜிகேவுக்கு மனம் குமைந்தது… இப்படி ஒரு மகன் இருப்பதையே இத்தனை நாட்கள் அறியாமல் இருந்து… வாராது வந்த பொக்கிஷமாக கிடைத்த மகனையும் இப்படி ஒரு நிலையில் வைத்து பார்க்க வேண்டுமென்பதுதான் விதியா?

செல்பேசியில் நிலைமையை அவ்வப்போது கேட்டு கொண்டே இருந்த அபிராமிக்கு மெல்லிய குரலில் பதிலை கூறிக்கொண்டு… ஹைதராபாத்தில் பிரபல மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நடத்தி வரும் தனது நண்பன் சஞ்சய்யிடம் நிலைமையை அவ்வப்போது ஆலோசித்து கொண்டே இருந்தவனை அடுத்து அழைத்தது சௌமினி… !

வருவதாக கூறிய சௌமினியை தடுத்து வைக்க அவனுக்கும் விருப்பமில்லை… அவளது ஆதரவு அவனுக்கு அப்போது மிகவும் தேவைப்பட்டது… எதிரில் இருந்த வருணை கணக்கில் கொள்ளாமல் அவளை வர சொல்லிவிட்டு நிமிர்ந்தவனை வருணின் பார்வை வெறுமையாக எதிர்கொண்டது! ஆனாலும் அதை கருத்தில் கொள்வதும் அவனால் அப்போது முடியாத ஒன்றாயிற்றே!

முதல்கட்ட சிகிச்சையின் போதும் மருத்துவர்கள் நல்ல விதமாக கூறவில்லை என்பதை உறுதிப்படுத்தி கொண்டவனுக்கு மனதில் உடலில் எப்போதும் இல்லாத தளர்ச்சி… இதய நோயின் அறிகுறியாக இருப்பதாக மருத்துவ குழு தெரிவித்து இருந்தது!

வருண் ஆதிரை மற்றும் வள்ளியம்மையோடு ஒரு பக்கம் அமர்ந்திருக்க… கௌதம் தனியாக அமர்ந்து விட்டத்தை வெறித்து கொண்டிருந்தான்…

செய்தி அறிந்து விசாலாட்சியும் சிதம்பரமும் பதறிக்கொண்டு வர… நிமிர்ந்து இருவரையும் பார்த்தவனின் கண்களில் எந்த உணர்ச்சியும் தென்படவில்லை…

எதற்காகவும் கடவுளை வணங்க போவதில்லை என்று உறுதியே எடுத்திருந்தவன்… இப்போது அவனுக்கு தெரிந்த கடவுளுக்கெல்லாம் கோரிக்கை மனுவை அனுப்பிய வண்ணம் இருந்தான்… மகனுக்காக!

அருகில் அமர்ந்து அவனையேபார்த்து கொண்டிருந்த சிதம்பரத்தின் கண்களிலும் கண்ணீர்… தன்னால் இரண்டு பெண்களின் வாழ்க்கையும் பாழானது ஒரு பக்கம்… தன் பிள்ளைகள் இருவருமே மொட்டை மரமாக இருக்கிறார்களே என்ற மனக்குமுறல் மறுப்பக்கம்…

“கௌதம்… ஏதாவது சாப்பிட்டியா?” விசாலாட்சி தாயாக கேட்கும் போது தான் மற்றவர்களுக்கும் உணவின் நினைவே வந்தது… ஆதிரையை பற்றி சொல்ல தேவையே இல்லையே… அவள் கண்ணீரில் கரைந்து ஒய்ந்தல்லவா போயிருந்தாள்!

பதில் கூற முடியாத… கூற பிடிக்காத… பதிலே தெரியாத நிலையிலிருந்தான் ஜிகே! மெளனமாக உணர்வுகளை மறைத்து கொண்டு!

நிமிர்ந்து அவனை பார்த்த ஆதிரைக்கு ஜிகேவின் நிலையும் மனதை கீறியது… ஒரே நாளில் முகத்தில் பத்து வயது கூடியது போன்ற தோற்றம் தோன்றிவிட கூடுமா? பார்த்து கொண்டு இருக்கிறாளே? அழுத்தமான உதடுகள் எதையுமே காட்டி கொள்ளாமலிருக்க… அந்த கூர்மையான கண்கள் இப்போது வேதனையை தவிர வேறெதையும் பிரதிபலிக்கவில்லை…

எப்போதுமே சிம்மத்தின் கம்பீரத்தோடு வலம் வருபவன் இப்போது அமர்ந்திருந்த நிலையை கண்டவளுக்கு மனம் துடிக்க ஆரம்பித்து இருந்தது… அவனது காதல் வேண்டுமானால் பொய்யாக இருக்கலாம்… ஆனால் தனது காதல் உண்மையிலும் உண்மையாயிற்றே! அதை கொஞ்சமும் மறுக்க முடியாதே என்ற நினைவு வந்து அவளை அலைக்கழிக்க…

பிருத்விக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த மருத்துவ குழுவின் தலைமை மருத்துவர் பெற்றோரை அழைப்பதாக கூறவும் சட்டென எழுந்து கொண்ட ஜிகேவை அங்கிருந்த அனைவருமே வியந்து பார்க்க… தள்ளாடி எழுந்து நின்ற ஆதிக்கோ அவனுடன் செல்வதா வேண்டாமா என்ற தடுமாற்றம்…

அவன் எதற்கு வரவேண்டும் என்ற கோபம் இருந்தாலும் அதுவரை தனியனாக வேதனையுடன் அமர்ந்திருந்த காட்சி அவளை பேச விடாமல் செய்திருந்தது…

சற்று தள்ளி நின்றிருந்த ஆதிரைக்காக ஒரு நிமிடம் காத்திருக்க… அவசரமாக அவனுக்கு பின்னால் ஓடினாள்… அவசர சிகிச்சை பகுதிக்குள் ஸ்டெர்லைஸ் செய்யப்பட்ட உடுப்புகளோடு அனுமதிக்க பட்டவர்களை எதிர்கொண்டார் தலைமை மருத்துவர்…

“ஹலோ ஜிகே… ”… இருவரையும் பொதுவாக பார்த்து அழைத்தவர் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்!

“ஜிகே உங்க மனைவிக்கு கர்ப்ப காலத்தில் வலிப்பு தடுப்பு மருந்து போல ஏதாவது கொடுத்தாங்களா?” கண்ணாடியை அணிந்து கொண்டவர் இயல்பாக மற்ற தம்பதிகளிடம் கேட்பது போல கேட்க… அதற்கான பதில் தெரியாத ஜிகே விழித்தான்… சுதாரித்து கொண்ட ஆதிரை…

“அது போலெல்லாம் இல்லையே… ” என்று கூற…

“வேறு ஏதாவது வைரல் இன்பெக்ஷன் வந்து அதற்கு மருந்து கொடுத்தாங்களா?” மீண்டும் ஜிகேவையே பார்த்து கேட்ட அந்த மருத்துவருக்கு என்ன பதிலை அவன் கூறிவிட முடியும்? அவனுக்கு குழந்தை பிறந்ததே இப்போதுதான் தெரியும் என்று கூறிவிட முடியுமா?

அவனுக்கு அவமான உணர்வோடு குற்ற உணர்வும் சேர்ந்து கொண்டது… எதை பற்றியுமே தெரியாமல் இதென்ன வாழ்க்கை என்று குமைந்திருந்தான்… ஆனால் உடையவில்லை… உடைவதற்கான நேரம் இதுவல்ல என்பதை தெளிவாக வரையறுத்து வைத்திருந்தான்…

“இல்லை டாக்டர்… அது போலவும் ஒன்றுமில்லை… ” பதிலை கூறிவிட்ட ஆதிரை… மகனுக்கு என்னவாயிற்று என்ற தவிப்போடு அவரை பார்க்க… அவரோ நெற்றியை தேய்த்து விட்டு கொண்டு யோசித்தார்…

“உங்க கர்ப்ப கால ரிப்போர்ட்சை ஒரு முறை பார்க்க வேண்டும் மிசஸ் ஜிகே… சிகிச்சைக்கு அவையும் உதவும் என்று நினைக்கிறேன்… ” என்று யோசனையோடு அவர் கூற… மனதில் அப்போதிருந்த தவிப்பையும் தாண்டி அவர் கூறிய அந்த மிசஸ் ஜிகே ஆதிரையின் மனதை வெப்பத்தில் ஆழ்த்திவிட்டு சென்றது…

“ஆக்சுவலா என்ன ஆயிற்று ரவீந்திரன் சர்… உண்மை நிலையை கூறுங்கள்… அதற்கு சிகிச்சை எங்கு இருந்தாலும் எப்படி இருந்தாலும் என்னால் ஏற்பாடு செய்ய முடியும்… ” ஜிகே சற்று அழுத்தமாக கூற…

“கன்ஜெனிட்டல் ஹார்ட் டிசீஸ் ஜிகே… அதாவது பிறவி இருதய நோயில் ஒரு வகை… இதயத்தை நான்கு பகுதிகளாக பிரிக்கும் சுவர் ஒரு சிலருக்கு பிறவிலேயே சரியாக வளர்ச்சியில்லாமல் போவது… பிருத்விக்கு நேர்ந்திருப்பது அதுதான்… ” அலுங்காமல் குண்டை இருவரின் மேலும் போட… ஆதிரை அதிர்ந்து அருகில் இருந்த ஜிகேவின் கரத்தை இறுக பற்றி கொண்டாள்… அவளுக்கு உலகம் தட்டாமாலை சுற்றுவது போல ஒரு பிரமை… !

“கன்ஜெனிட்டல் என்றால் கர்ப்ப கால ஸ்கேன்களில் தெரிவதற்கு பெரும்பாலும் வாய்ப்பு இருக்கிறது மிசஸ் ஜிகே… அனைத்து வகை பிறவி இதய கோளாறும் தெரிய வாய்ப்பில்லை என்றாலும் murmurs ஐ வைத்து ஐம்பது சதவிதம் தெரிந்து கொள்ள முடியும்… அது போல ஏதாவது ரிப்போர்ட் கொடுத்தார்களா?” மருத்துவர் ஊன்றி கேட்க… ஆதிரையின் விழிகளில் கண்ணீர் குளம்…

நிலையில்லாமல் தள்ளாடியவளை கௌதம் இடக் கையினால் அணைத்து கொண்டு விட… ஆதிரைக்கும் அவனுடைய ஆதரவு தேவையாக இருந்தது… துக்கத்தை அடக்கி வைத்து கொள்பவனை போல அவனுடைய கைகளும் கன்னங்களும் இறுகி இருந்தது…

“பிருத்வி கர்ப்பத்தில் வந்த ஆறு மாதங்கள் வரை எனக்கு நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பது தெரியவில்லை டாக்டர்… கர்ப்ப கால சிம்ப்டம்ஸ் எதுவும் பெரிதாக இல்லை… அது போல பிசிஓடி இருந்ததால் எப்போதும் போல என்று இருந்து விட்டேன்… ” கண்ணீரோடு கூற… கௌதமுடைய உடல் மேலும் விறைத்தது… உணர்வுகளின் கொந்தளிப்பில் இருந்தான் அவன்… கடந்த காலமும் நிகழ்காலமும் சேர்ந்து அவனை சுழற்றியடித்து கொண்டிருந்தது…

“அந்த நேரத்தில் நான் இந்தியாவில் இருக்க முடியாத நிலை… லண்டனில் இருந்தேன்… டெலிவரி வரை மருத்துவரிடம் செல்ல மறுத்து விட்டேன்… ஒரு பிரச்சனையால்… ” சொல்லி முடித்தவள் வாய் மூடி அழ… மருத்துவரிடமிருந்து பார்வையை விலக்கி அவளை பார்த்தவனின் பார்வையில் வலி மிகுந்து இருந்தது… ஆனாலும் உணர்வுகளை வெளிகாட்டிட அவனால் முடியவில்லை…

“கர்ப்ப காலத்தில் எதை பற்றியும் சிந்தித்து மனதை வருத்தி கொள்ளகூடாது பெண்ணே… மனவருத்தங்களே குழந்தைக்கு நிறைய பிறவி கோளாறுகளை கொண்டு வந்து விடும்… இனி பேசி ஒன்றுமில்லை… ”

“ரவீந்திரன் சர்… ட்ரீட்மென்ட்? இங்கு உள்ளதா அல்லது வெளிநாடுகளுக்கு சென்று விடலாமா? எங்கு செல்வதை பற்றியும் எனக்கு கவலையில்லை ரவீந்திரன் சர்… எனக்கு என் குழந்தை ஆரோக்கியமாக திரும்ப கிடைத்தால் போதும்… ” கரகரப்பான வலி மிகுந்திருந்த குரலில் மருத்துவரிடம் அவன் கூற… ஆதியின் கண்ணீர் அதிகமானது…

“ட்ரீட்மென்ட் என்று பார்த்தால் இப்போதைக்கு மருந்துகளை தவறாமல் எடுத்து கொள்ள வேண்டும்… குழந்தையை மிகவும் அழ விட்டுவிட கூடாது… அதனுடைய ப்ரெஷர் அதிகமாகும் போது மீண்டும் இது போல மூச்சிறைப்பு வந்துவிடும்… ” என்று கூற… ஆதிரையினால் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை… தந்தையை கேட்டவனை அடித்து வீட்டிற்கு அழைத்து வந்த பின் தானே காய்ச்சல் வந்து இவ்வாறு ஆனது என்று நினைத்தபோது அவளால் தாள முடியவில்லை…

“ஆனால் சையனாட்டிக் பேபி என்பதால் இப்போதே உங்களுக்கு தெரிந்து விட்டது… அதாவது இதயத்திற்கு ஆக்சிஜன் போதாமல் உடல் நீலம் பாரிப்பதை தான் கன்ஜெனிட்டல் ஹார்ட் டிசீசில் சையனாட்டிக் வகை என்று கூறுவோம்… இல்லையென்றால் குழந்தை பெரிதாகும் வரை கூட இந்த விஷயம் உங்களுக்கு தெரியாமல் போயிருக்க கூடும் ஜிகே… ” என்று இடைவெளி விட்டவர்…

“இரண்டாவது இதய மாற்று அறுவை சிகிச்சை… ” இயல்பாக அவர் குண்டை தூக்கி போட… கேட்டு கொண்டிருந்த இருவருக்குமே அது மிகப்பெரிய அதிர்வாக இருந்தது… அணைத்து கொண்டிருந்த கௌதமின் கைகளை மேலும் இறுக்கி பிடித்து கொண்டாள்… கீழே விழுந்து விடுவதை தவிர்க்க!

“வாட்… ” கௌதம் அதிர்ந்து கேட்க…

“ம்ம் எஸ்… ஆனால் அதில் பிரச்சனை என்னவென்றால் டோனருடைய அனைத்து ஸ்பெக்சும் நமது பிள்ளைக்கு ஒத்து போயிருக்க வேண்டும்… மிகவும் சிரமமான விஷயம் அது… ”என்று இடைவெளி விட்டவர்…

“மூன்றாவது… ஸ்டெம் செல் தெரபி… பிருத்வி உங்களுக்கு ஒரே குழந்தை அல்லவா… ?” யோசனையாக கேட்டவரிடம்…

“ஆமாம் ரவீந்திரன் சர்… ”குரல் இறங்கியிருந்தது…

“ஸ்டெம் செல் தெரபியில் குழந்தையின் சகோதரனிடமோ சகோதரியிடமோ ஸ்டெம் செல்களை பெற்று இதயத்தில் இஞ்சக்ட்செய்து விடுவோம்… அந்த ஸ்டெம் செல்கள் இதயத்தின் சுவரை வளர வைத்து சரியாக இயங்க வைத்து விடும்… இது லேட்டஸ்ட் மருத்துவமுறை ஜிகே… ஆனால் இந்த முறையை கையாள நீங்கள் இன்னொரு குழந்தையை பெற்று கொள்ள வேண்டியிருக்கும்… ஏனென்றால் நமக்கு தேவை தொப்புள் கொடி ரத்தத்திலிருந்து பெறப்படும் ஸ்டெம் செல்கள்… ”

ரவீந்திரன் அமைதியாக கூறிவிட்டு ஜிகேவை பார்க்க… அவனுக்கு என்ன பதில் கூறுவது என்று தோன்றவே இல்லை…

கௌதமை இறுக்கி பிடித்து கொண்டிருந்த ஆதி… சட்டென அவனிடமிருந்து விலகினாள்… மனதின் கசப்பு மேலும் மேலே எழ… !

*******

மெளனமாக அறைக்கு திரும்பியவர்களை வரவேற்றான் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து மாற்றப்பட்டிருந்த பிருத்வி! மயக்கத்திலிருந்து மீண்டு அப்போதுதான் விழித்தவனின் கண்களில் அவனது தந்தை பட்டுவிட… சோர்ந்திருந்த முகத்தில் சந்தோஷம் கொப்பளித்தது!

“ஹை அப்பா… ” படுத்தபடியே துள்ளியவனை பார்க்கும் போது ஜிகேவுக்கு நெஞ்சம் வலித்தது…

“பிருத்விக்குட்டி… ” வலிக்காமல் வாரி அணைத்து கொண்டவனை பார்க்கையில் அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீர்… முழுவதுமாக உரைக்காமல் என்ன பாதிப்பு என்பதை மட்டும் வருணிடமும் வள்ளியம்மையிடமும் கூறி கொண்டிருந்த ஆதிரைக்கு பிருத்வி தந்தையை தேடிய ஏக்கம் மனதை பிசைந்தது…

அதுவரை ஒருவரிடமும் ஜிகே பேசக்கூட இல்லையென்பதையும் உணர்ந்தாள்… அதை அவள் எதிர்பார்க்கவும் இல்லைதான்!… ஆனால் பிருத்வியை கொண்டு விதியாடும் சதிராட்டத்தை நினைத்து மனம் நொந்திருந்தாள்… வாழ்க்கையில் ஒரு முறை தவறியதற்கு இயற்கை தன்னை இதற்கு மேலுமா தண்டிக்க முடியும்? இன்னொரு குழந்தையா? அவளால் அந்த எண்ணத்தையே ஏற்க முடியவில்லையே!

கௌதமும் அதிர்வில் இறுக்கமாக இருந்தாலும் பிருத்வி அவனுள் மென்மையை விதைத்திருந்தான்… மகனை அணைத்து கொண்டு அதே கட்டிலில் சாய்ந்து கொண்டு அவனிடம் கதை பேசிக்கொண்டிருந்தவனை பார்க்கையில் சிதம்பரத்திற்கு மனம் கசிந்தது…

வருணும் வள்ளியம்மையும் என்ன செய்வதென்று அறைக்கு வெளியில் சென்று ஒவ்வொருவரிடமாக செல்பேசியில் விசாரித்து கொண்டிருக்க… சிதம்பரமும் விசாலாட்சியும் குடும்பமாக இருந்த ஆதிரைக்கும் கௌதமுக்கும் தனிமையை கொடுத்து வெளியே வர… நெஞ்சின் மேல் படுத்து கொண்டு பிருத்வி தந்தையிடம் கேள்விகளாக கேட்டு கொண்டிருக்க… அந்த கேள்விகளுக்கு பதில் கூறி கொண்டிருந்தாலும் ஆதிரையும் கௌதமும் திருப்பி பார்க்கவே பிடிக்காத அந்த இனிப்பான ஆனால் கருமை சூழ்ந்த சாக்லேட் பக்கங்களை புரட்ட துவக்கி இருந்தனர்…

error: Content is protected !!