Cp32
Cp32
அத்தியாயம் 32
யாருக்கும் கேட்டிராத மௌனம் நான்
என் தனிமையில் வந்து போகும் பிம்பம் நீ!
-டைரியிலிருந்து
ஆதிரையை அடித்து ஓய்ந்து போயிருந்தார் சிவகாமி… !! உடனிருந்த அத்தனை பேரும் தடுத்தாலும் கௌதம் நிமிர்ந்து பார்க்கவும் இல்லை… தான் பேசிய அனைத்தையும் ஆதிரை கேட்டு விட்டாள் என்ற காரணம் ஒன்று மட்டுமே அவனை அவனுக்குள் இறுகி விட செய்திருந்தது…
அவன் பேசிய அனைத்துமே சிவகாமி ஒரு காலத்தில் அபிராமியை பேசிய வார்த்தைகள் என்று அவனுக்கு தெரியும்… அது சிவகாமிக்கும் தெரியும்… ஆனால் அது ஆதிரை அறியாத விவரங்கள் அல்லவா!
தன்னுடைய எந்த செயலை அவள் அறியவே கூடாது என்று நினைத்து அவளை அப்புறப்படுத்தி இருந்தானோ அதை முழுக்க கேட்டு அதிர்ச்சியில் பேச்சை மறந்து நின்றிருந்தாள் ஆதிரை! கேட்கவே கூடாத வார்த்தைகளை அதுவும் தனது அன்புக்குரியவனின் திரு வாயில் இருந்து கேட்டது அவளுக்கு தன்னை சிலுவையில் அறைந்து விட்டது போல வலியை ஏற்படுத்தியது…
பத்து நாட்களும் தன்னை மகாராணியாக நடத்திய கௌதமா இப்படிப்பட்ட வார்த்தைகளை உதிர்ப்பது என்ற சந்தேகத்தில் தள்ளாடினாள்!
அதீத விருப்பிற்கும் அதீத வெறுப்பிற்கும் ஒரே சிறு எல்லைக்கோடுதான் என்பதை அதை கடந்தவர்கள் நிச்சயமாக உணர்ந்திருக்க முடியும்… அவன் கூறிய வார்த்தைகளை வேறு யாரேனும் கூறியிருந்தால் கண்டிப்பாக அவளால் நம்பியிருக்க முடியாது… ஏனென்றால் உச்சபட்ச நம்பிக்கையின் அடையாளம் தனது காதல் என்று எண்ணியிருந்தது அவளது மனம்! ஆனால் ஒரே நொடியில் அதை சுக்குநூறாக உடைத்து எறிந்து எரித்து இருந்தான் கௌதம்…
ஆதிரைக்கு கௌதமின் மேல் அதிகபட்ச விருப்பத்தை வைக்கவும் நேரம் அதிகம் தேவைப்படவில்லை… அதே போல அதிகபட்ச வெறுப்பை வைக்கவும் அதிக நேரத்தை எடுத்துகொள்ள வில்லை…
சிவகாமி அடித்து ஒய்ந்து இருந்தாலும் ஆதிரை வாய் திறக்கவில்லை… மௌனம்… மௌனம்… மௌனம் மட்டுமே! வருணும் விசாலாட்சியும் மாற்றி மாற்றி கேட்டு பார்த்தாலும் அதே நிலையிலிருந்தாள்!
சௌமினி என்ன பேசுவது என்று புரியாமல் கையால் தலையை தாங்கி கொண்டு அமர்ந்திருக்க… ஆதிரை ஒரு முடிவோடு கௌதம் அருகில் வந்தாள்!
“எல்லாமே ப்ளான் செய்தது தானா?” பேச ஆரம்பித்தவர்களை நிறுத்த கூறிவிட்டு இறுகிய நிலையில் மெல்லிய குரலில் அவனுக்கு முன் நின்று அவள் கேட்க… நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில் வலி! வேண்டாம் பெண்ணே… நீ தொட நினைப்பது தொடக்கூடாத பாகங்களை… அது உன்னை காயப்படுத்துவதை தவிர வேறு ஒன்றையும் செய்யாது என்று கூற நினைத்தான்… முடியவில்லை!
“காலேஜ் வந்தது?” மீண்டும் அவன் மௌனமாகவே இருக்க… ஆதிரை ஆவேசமாக அவனது சட்டையை பிடித்து…
“சொல்லுடா… ”என்று கத்த… கண்களை மூடி மூச்சை இழுத்து வெளியே விட்டவன் அனைத்தையும் கூற ஆயத்தமானான்… இனி ஆதிரையிடம் மறைத்து வைப்பதில் பயனில்லை என்று தோன்றியது… தனக்காக அனைத்தையும் கொடுத்தவளுக்கு இனியாவது சற்றேனும் உண்மையாக இருக்க வேண்டுமென எண்ணி கொண்டான்…
“எஸ் ப்ளான்ட்… உன்னை அதுக்கு முன்ன கோவில்ல பார்த்தேன்… அப்போ தெரியாது நீ இவங்க மகள் என்று! ஆனா தெரிந்தப்போ… ” என்று குரல் கரகரத்தது…
“இவளை யூஸ் பண்ணிக்கிட்டா போதும்ன்னு நினைக்க தோன்றிவிட்டதா?” பார்வையில் கூர்மை வந்திருக்க… நிமிர்ந்து அவளை பார்த்தான்…
“உனக்கு அப்படி தோன்றுதா?” என்று கேட்க நினைத்தான்… ஆனால் முடியவில்லை…
ஹாதிராமை மறந்து விட்டானே சப்தகிரிவாசன்!
ஆனால் அது அவளது தவறில்லையே… காதல் இருந்து உண்மை இல்லாவிடில் அந்த காதலுக்கு சற்றும் மதிப்பில்லையே!
வலிக்க வலிக்க உணர்ந்து கொண்டிருந்தான் இதுவரை உணராத காதலை! கையில் இருக்கும் வரை தெரியாத அதன் தாக்கம்… கையை விட்டு போக போகிறது என்பதை உணர்ந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட வலியை அவனால் தாளவே முடியவில்லை…
“அப்போ நான் மயங்கி விழுந்தது?”
“போதை மாத்திரை… நான் தான் விஷாலுக்கு தெரியாம அவன் உனக்கு ஏமாற்றி கொடுத்த ஹாட் ட்ரிங்க்ஸ்ல கலந்தேன்… ”
“நான் அந்த அளவு ஏமாளியா இருந்து இருக்கேனே… வலைய விரிச்சு வெச்சுட்டு நீ இருந்து இருக்க… நான் அது தெரியாம… ஹய்யோ… ” தலையிலடித்து கொண்டு அழ ஆரம்பித்தவளை நிராயுதபாணியாக பார்த்தான் கௌதம்… அவனால் சமாதானப்படுத்த முடியவில்லை… கலங்கி நின்ற சௌமினியும் ஆதிரையை அணைத்து கொள்ள… அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது…
“எல்லாமே பொய்யா?” உதடுகள் துடிக்க… கண்களில் கண்ணீரோடு ஆதிரை கேட்க… அவளது கண்களை பார்த்தவனுக்கு இல்லையென்று கத்த தோன்றியது… நீதானடி என்னுடைய உயிர் என்று அணைத்து கொண்டு கதற தோன்றியது… ஆனால் செய்ய முடியவில்லை… சொல்ல முடியவில்லை! அதிலும் சிவகாமியின் முன் தன்னை வெளிப்படுத்தி கொள்ள அவனது ஈகோ இடம் தரவில்லை!
“உன்னை நம்பி நான்… ” குரல் கம்மியது ஆதிரைக்கு… “சொல்லு கௌதம்… உன்னை நான் எந்தளவு நம்பி இருந்தேன் என்பதை இந்த பத்து நாளில் உன்னால் உணரவே முடியவில்லையா?… ஆனால் நீ என்னை என்னென்ன வார்த்தைகள்… ”
அழுகையில் குரல் வெடிக்க… அதை கேட்டு கொண்டிருந்த சிவகாமிக்கு நிலம் நழுவியது! இதுவரையிலும் மகள் அவனை காதலித்து மட்டும் தான் இருந்திருக்கிறாள் என்றெண்ணி கொண்டிருந்தவருக்கு மகளது ஒப்புதல் வாக்குமூலம் நடுக்கத்தை ஏற்படுத்தியது…
ஆனால் அவளது கேள்விக்கு கௌதமால் விடை கொடுக்க முடியவில்லை… அவனும் அந்த நிலைக்கு செல்ல வேண்டுமென்று கனவிலும் திட்டமிடவில்லையே… அவளை காதலில், அதாவது திரும்பி வர முடியாத அளவுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்றுதான் நினைத்தானே தவிர கேவலமாக அவளை வெற்றி கொள்ள வேண்டுமென்று நினைக்கவே இல்லையென்பதை எப்படி அவன் உணர்த்துவான்… ?
வார்த்தைகளை விட்டாயிற்று! அவளும் கேட்டாகி விட்டது!
இனி என்ன சொல்லி அவளை நம்ப செய்ய முடியும்?
பிணைக்கப்பட்ட கைகளோடு பயணித்த ஒரு வழியின் பாதை அவனுக்கு அடைக்கப்பட்டு விட்டதாகவே தோன்றியது!
மௌனமாகினான்!
“ஹா… எஸ்… நீ என்னை எப்படி நினைத்தாய் என்று இப்போது புரிகிறது… ஸ்டெப்னி… இதுதானே நீ என்னை அழைக்கும் வார்த்தை… நீ தெளிவாகத்தான் இருந்திருக்கிறாய் கௌதம்… ” வார்த்தைகளை கூறிவிட முடிந்த அவளால் அதை இப்போது ஜீரணிக்க முடியவில்லை… காதலில் உருகிய தருணங்களில் மயக்கிய அந்த வார்த்தை… இப்போது அவளை கிழித்து கூறு போட்டது… !
“ஆதி… ” வருணும் சிவகாமியும் ஏக காலத்தில் கத்த… அவள் முழுவதுமாக அழுகையில் உடைந்து போயிருந்தாள்!
“வருண் மாமா… ப்ளீஸ்… எனக்கு கேட்கணும்… ” என்று கூறிவிட்டு…
“அதிலுமா நடித்தாய்?” மற்றவர்களுக்கு கேட்காமல் கிசுகிசுத்த குரலில் அவனது கண்களை பார்த்து அழுகையோடு கேட்க… கௌதம் லட்சம் முறை இறந்து பிழைத்தான்… நடித்தானா? எப்படி முடியும்? முதன் முதலில் பார்த்தபோது மிக பிடித்தது… பழகிய போதும் மிக மிக பிடித்தது… அந்த இரவில் அவளது கண்களில் தென்பட்ட கரை காண முடியாத காதலும் எதிர்பார்ப்பே இல்லாத ஒப்பு கொடுத்தலுக்கு பிறகும் அவனால் அப்படி சொல்லிவிட முடியுமா?
வாழ்வின் கடைசி வரை காப்பேன் என்று சப்தவடிகள் வைத்து உயிரை ஏற்றால் தான் அது திருமணமா? களவு மணமாக இருந்தாலும் இயற்கையை சாட்சியாக வைத்தல்லாவா உன்னுள் நான் கலந்தேன்… அது நடிப்பா? மனதில் சூறாவளி வீசிக்கொண்டிருந்தாலும் வெளியில் வெகு அமைதியாக சோபாவில் சாய்ந்து அமர்ந்து இருந்தான்…
ஆதிரை அவனுக்கு முன் இருந்த சோபாவில் அமர்ந்து முகத்தை மூடி கொண்டு அமர்ந்து இருக்க… சிவகாமி ஒரு முடிவாக நிமிர்ந்தார்…
அவரது மகளின் வார்த்தை கொண்டே அவளின் நிலையை விளங்கி கொண்டாயிற்று… இதற்கும் மேல் என்ன நடந்து விடும்? இழக்க இனியொன்றும் இல்லையென்று நினைத்து கொண்டார்… தன் கணவர் இறந்த போதும் தைரியமாக வாழ்க்கையை எதிர்நோக்க முடிந்த அவரால் இனி அது முடியாத ஒன்றாகி விட்டது என்பதை உணர்ந்தார்…
அவரது அண்ணனை பார்த்து…
“அண்ணா… இவன் சரியா பழி வாங்கிட்டான்… அவன் கிட்ட நீங்களே கேட்டுக்கங்க… எப்போ கல்யாணத்தை வைத்து கொள்ளலாமென்று!” என்று இறுகிய குரலில் கேட்க… சிதம்பரம் ஒரு பெரிய மூச்சை இழுத்து விட்டு கொண்டார்… எந்த பக்கம் பேசினாலும் அவருக்கு அல்லவா வினையாக முடிகிறது… அதை எத்தனை முறை பார்த்து விட்டார்!
“கல்யாணமா?” சட்டென கேலியாக சிரித்தவன்… சிவகாமியை நேருக்கு நேராக பார்த்து…
“கண்டிப்பா… ஆனா அதுக்கு முன்ன… ” என்று இடைவெளி விட்டவன்… அவரை தீர்க்கமாக பார்த்து…
“எங்க அம்மா கழுத்துல இவர் தாலி கட்டனும்… என்னை இவர் பிள்ளைன்னு பகிரங்கமா சொல்ல வேண்டும்… ” தீர்மானமான குரலில் அவன் கூற… அதிர்ந்து விழித்தாள் ஆதிரை!
இதற்காகத்தானா இந்த அனைத்தும்??