cp39

cp39

அத்தியாயம் 39

இரவினை பிரதியெடுத்து

விட்டத்தில் கிடத்தியிருக்கிறேன்

நிலவாய் நீ!

-டைரியிலிருந்து

வள்ளியம்மை சுறுசுறுப்பாக பறந்து கொண்டிருந்தாள்… பின்னே? தன் கணவனின் தங்கையும் , தன்னுடைய அத்தை மகளுமான சைந்தவியின் திருமணத்திற்கு முன்னான சடங்காயிற்றே! அதிலும் தாய்மாமன் வீட்டு விருந்துக்காகவென தன் பிறந்த வீட்டினர் அனைவரும் வந்திருக்கும் போது அவளது சுறுசுறுப்பை பற்றி கேட்கவும் வேண்டுமோ?

அவர்களது குடும்பத்தில் இந்த சடங்குகளை தொடங்கும் முன் குலதெய்வ வழிபாடும், வீட்டு தெய்வ வழிபாடும் செய்வது முறை என்பதால் அந்த வேலைகளும் சேர்ந்திருந்தது… இதற்கு நடுவில் விசாலாட்சி வரலக்ஷ்மி பூஜையும் ஏற்பாடு செய்திருந்தார்!

வருணும் கௌதமும் ஒன்றாக அமர்ந்திருக்க சைந்தவிக்கு திருமணத்திற்கு சிதம்பரத்தின் குடும்பம் முழுவதும் அங்கே கூடியிருந்தது தான் உறவினர்களிடையே பரிமாறப்பட்ட மிக சூடான செய்தி. அதிலும் உரிமையான அத்தையாக விசாலாட்சி நின்று விருந்தை கவனிக்க, உடன் அபிராமியும் இருந்தது ஒவ்வொருவரின் புருவத்தையும் உயர்த்தியது…

அங்கு வந்திருந்த இன்னொரு ஆச்சரியம் சௌமினி!

தழைய தழைய மென்மையான மெல்லிய பட்டு புடவையுடுத்தி இடை வரையிருந்த நீண்ட கூந்தலை தளர வாரி,ஜாதி மல்லி சூட்டி ஆதிரை வள்ளியம்மையோடு சேர்ந்து வேலைகளில் உதவிக்கொண்டிருந்தவளை பார்ப்பவர்களிடம் சத்தியம் செய்தாலும் இவள் ஒரு ஸ்கூல் கரஸ்பாண்டன்ட் என்பதை நம்ப மாட்டார்கள்!

அவளை பார்வையாலேயே தொடர்ந்து கொண்டிருந்தான் வருண்!

சிவக்குமரன்,கௌதம்,வருண் என்று இளையவர்கள் பட்டாளம் ஒரு புறம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, சிதம்பரத்தோடு ராஜேஸ்வரியின் கணவரும் இன்னும் சிலரும் அவரோடு தனியாக அமர்ந்து வம்பளத்து கொண்டிருந்தனர்…

ஓரிருவர் அபிராமியை பற்றி கிண்டலாக கூற… சிதம்பரம் புன்னகையோடு அதை எதிர்கொண்டிருந்தார்… யாரேனும் கசப்பாக கூறினாலும் அதை தனது மகனுக்காக ஏற்று கொள்வது என்ற முடிவுக்கு வந்திருந்தார்…

“உன்னை எவ்வளவோ விஷயத்தில் விட்டு கொடுத்து உன்னை கஷ்டப்படுத்தியிருக்கேன் கௌதம்… அதெல்லாம் உன்னை எந்தளவுக்கு தவிக்க வைத்திருக்கும் என்பதெல்லாம் என் மரமண்டைக்கு தாமதமாகத்தான் புரிந்தது… அதற்காகவெல்லாம் இந்த அப்பனை முழுவதுமாக வெறுத்து விடாதே… உனக்கு நான் எப்போதுமே நல்ல அப்பாவாக இருக்க முயற்சி செய்தேன்… ஆனால் அதில் வெற்றி பெறவில்லை கண்ணா… ”

அன்றொரு நாள் அபிராமியின் வீட்டிற்கு வெகு நாட்களுக்கு பின்னர் வந்திருந்தார் சிதம்பரம். உடன் விசாலாட்சியும் சிவகாமியும்!அவனது கையை பற்றி கொண்டு கண்களில் நீர் வழிய , தன்னுடைய தவறையெல்லாம் மனம் விட்டு ஒப்புக்கொண்ட தந்தையை உணர்ச்சியற்ற முகத்தோடு பார்த்தான்… பதினான்கு வயது வரை தனக்கு தந்தையும் தோழனுமாக இருந்தவர் அல்லவா!

வெகு நாட்களுக்கு பிறகு அந்த நினைவுகள் மேலெழும்ப கண்களில் சூழ்ந்த மேகத்தை மறைக்க கீழே குனிந்து கொண்டான்…

இருவரையும் கண்ணெடுக்காமல் பார்த்து கொண்டிருந்த அபிராமியின் கண்களில் கண்ணீர்!

“தாய்க்கு தலை மகன்… என்னோட மூத்த மகன் நீதான் கௌதம்… எனக்கு கொள்ளி வைக்க வேண்டியதும் நீதான்… செய்வே தானே?”

விசாலாட்சி நிதான குரலில் கேட்க… அதிர்ந்து அவரை பார்த்தான்!

“சாலாம்மா… ”

உடைந்து போன குரலில் அழைத்த கௌதமுடைய மனம் சொல்ல முடியாத அமைதியில் ஆழ்ந்திருந்தது… !

“நீ வீட்டை விட்டு வெளிய போனப்ப நான் அமைதியா இருந்துட்டதா நினைச்சுடாதே கண்ணா… அன்னைக்கு நான் ஒரு சூழ்நிலை கைதி… பேச உரிமை இல்லாத கைதி கண்ணா… ஆனா நீ வேற வருண் வேற இல்ல எனக்கு! இந்த வாழ்க்கை அபிராமியோட தயவால எனக்கு கிடைச்சது… பார்க்க போனா அபி எனக்கு விட்டு கொடுத்துட்டா… அதுதான் உண்மை!”

நெகிழ்ந்த குரலில் விசாலாட்சி கூற…

“எனக்கு நீங்களும் ஒரு அம்மாதான் சாலாம்மா… ”

அவரது தோளை ஆதூரமாக அணைத்து கொண்டவனுக்கு வாழ்க்கையே அழகாக தெரிந்தது! இத்தனை நாட்கள் வஞ்சித்திருந்த வாழ்க்கை இழந்தவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக திருப்பி கொடுத்து கொண்டிருக்கின்றதே!

“சாலா போதும்டி… விட்டா அழுது வீட்ல கடலை கொண்டு வந்துடுவ போல இருக்கே!” பழைய தோழியின் குறும்பு மீண்டிருக்க , விசாலாட்சிக்கு கண்களில் கண்ணீர் வெள்ளம்…

“இத்தனை நாள் உன்னைதான்டி மிஸ் பண்ணிட்டேன்… உன்னோட இந்த கிருத்துருவமான பேச்சை தான் மிஸ் பண்ணிட்டேன்… ” அபிராமியின் கையை பிடித்து கொண்டு முதுகு குலுங்க அழுதவரை சமாதானப்படுத்திய அபிராமியும் அழுகையில் குலுங்க…

“ஆஹா ரெண்டு பேரும் சேர்த்து இங்க ஒரு சமுத்திரத்தையே கொண்டு வந்துடுவீங்க போல இருக்கே… ” சிவகாமி சிரித்து கொண்டே இருவரையும் கிண்டலடிக்க…

“ஏன் நீங்களும் உங்க அண்ணனும் மட்டும் சும்மா இருக்கீங்க? அதுல ஒரு படகு ஓட்டுங்க அண்ணி… ” சிரித்து கொண்டே நாத்தனாரை வாரிய விசாலாட்சியை புன்னகை முகத்தோடு பார்த்தார் சிவகாமி!

“செட்டு கிடைக்கவும் சாலா அண்ணியே கிண்டலடிக்க ஆரம்பிச்சுட்டாங்க பாருங்க மாப்பிள்ளை… ” கௌதமை கூட்டு சேர்த்து கொண்ட சிவகாமியை ஆச்சரிய பார்வை பார்த்தார் சிதம்பரம்!

“ஆமாத்தை… இனிமே எல்லாத்துக்கும் இவங்க ரெண்டு பேரும் ஜோடி சேர்ந்துகிட்டு நம்மளை பைபாஸ் பண்ணிடுவாங்க பாருங்க… ”

மிகவும் இலகுவான மனநிலையில் சிவகாமியோடு சேர்ந்து கொண்டு இரண்டு பேரையும் கிண்டலடித்தான் கௌதம்…

“பாரேன்டி அபி… இனிமே இவன் அத்தைய ஐஸ் வைச்சா தான் காரியம் ஆகும்ன்னு அந்த பக்கம் சாஞ்சுட்டான்… ”

“சாயட்டும் சாயட்டும்… ஆதி நம்ம பக்கம் தான்டி இருப்பா… அப்போ இந்த வாலு என்ன பண்ணுவானாம்?… ”

இருவரும் சிரித்து கொண்டே கௌதமை கலாய்க்க… ஒவ்வொன்றுக்கும் பதிலடி கொடுத்து கொண்டிருந்தவனை பார்த்து சிதம்பரம் சிரித்து கொண்டார்! எத்தனை நாட்களுக்கு பிறகு அவனது முகத்தில் சிரிப்பை பார்க்கிறார்! ஆனால் அந்த புன்னகையில் இழையோடும் சோகத்தின் காரணம் அவருக்கும் புரியாமலில்லை!

மெளனமாக சிவகாமியை பார்க்க, அவரும் சிந்தனையாக இவரை பார்த்து கொண்டிருந்தார்!

“மாப்பிள்ளை… நாளன்னைக்கு ராஜி வீட்ல தாய்மாமன் விருந்து இருக்கே… வந்துடுவீங்க தானே?” சிவகாமி கௌதமை கேட்க… புன்னகையோடு அவனும் தலையாட்டி வைக்க,சிதம்பரத்தை அர்த்தமாக பார்த்தார்!

*****

தாய் மாமன் விருந்துக்காக ஒருபுறம் விருந்து தயாராகி கொண்டிருக்க, மற்றொருபுறம் வரலக்ஷ்மி பூஜைக்காக பூஜையறையை தயார் செய்து கொண்டிருந்தனர் பெண்கள் அனைவரும்!

“சௌமி… கலசத்துக்கு கொஞ்சம் மாவிலை பறிச்சுட்டு வாயேன் கண்ணா… ” பூஜை வேலைகளை பார்த்து கொண்டிருந்த அபிராமி சௌமினியிடம் கேட்க…

“சௌமிக்கா… மாமரம் பின் கட்டுல இருக்கு… தனியா பறிக்க முடியுமாக்கா உங்களால? இல்லைன்னா நானும் கூட வரட்டா?” வாழையிலையில் பச்சரிசியை பரவ விட்டபடி பொறுப்பாக வழி கூறிய ஆதி , பதிலை எதிர்பார்த்து அவளது முகத்தை பார்க்க… புன்னகையோடு…

“நானே பார்த்துக்கறேன் ஆதி… ” என்று போக முயல… அவசரமாக சுத்தம் செய்த தூபக்காலை கையில் ஏந்தியபடி வந்த வள்ளியம்மை…

“சௌமிக்கா… பின்கட்டு வழியா வேணாம்… நீங்க மாடில இருந்து பறிச்சா தான் ஈசியா பறிக்க முடியும்… அதோட அந்த பக்கம்தான் கொழுந்து இலையா இருக்கும்… ஒன் மினிட் அக்கா… ” அவசரமாக கூறிவிட்டு ஹாலை பார்த்தவள்…

“வருண் அண்ணா… சௌமிக்காவுக்கு எங்க ரூம் பக்கத்துல இருக்க டெரெசை மட்டும் காட்டிடு… ” என்று குரல் கொடுத்துவிட்டு சௌமினியின் புறம் திரும்பியவள்…

“சௌமிக்கா… ஜென்ட்ஸ் பறிக்க கூடாது பூஜைக்கு… வருண் அண்ணாவை பறிக்க விட்டுடாதீங்க… ” வெகு அவசரம் போல கூறிவிட்டு ஆதிரையோடு இணைந்து மற்ற வேலைகளை பார்க்க துவங்கினாள்… கண்களில் கள்ள சிரிப்போடு! அதை கண்டு கொண்ட ஆதிரையின் முகத்திலும் அதே கள்ளத்தனம்!

உதட்டை கடித்து கொண்டு வருணோடு மாடிப்படியில் ஏறினாள் சௌமினி!

“சூப்பர் அம்மு… கலக்கறே… ” அருகில் வந்த வள்ளியம்மைக்கு இடது கையால் ஹைபை கொடுத்தாள் ஆதிரை… சப்தமில்லாமல்!

“ஹஹா… நம்மால் முடிந்த சமூக சேவைடி ஆதி… ” ஆதிரையின் காதில் கிசுகிசுத்தாள் வள்ளியம்மை! இருவரும் மட்டுமாக இருக்கும் இடத்தில் பெரும்பாலும் உறவுமுறையை விட தோழிகளாகவே இருக்க தோன்றும் இருவருக்கும்!

“ரெண்டும் வழிக்கு வருங்கன்னு நினைக்கற?” யோசனையாக புருவத்தை சுருக்கி கொண்டு ஆதிரை கேட்க…

“வரலைன்னா மட்டும் நாம விட்டுடுவோமா என்ன? அடுத்த அட்டாக் பண்ணிடுவோம்ல… ” இல்லாத காலரை ஏற்றி விட்டு கொண்ட வள்ளியம்மையை பார்த்து பக்கென்று சிரித்தாள் ஆதிரை…

“இந்த வருண் மாமாவை யாராலும் மிஞ்ச முடியாது அம்மு… சைட்டிங் சைட்டிங் சைட்டிங் தான் போ… அப்படியே மெல்ட்டான மாதிரி பார்த்துட்டு இருக்காங்க… ” குத்துவிளக்குக்கு சந்தானம் குங்குமம் வைத்து கொண்டே வள்ளியம்மையிடம் கிசுகிசுத்தாள் ஆதிரை…

“ஆனா இந்த சௌமினிக்கா கிட்ட இருந்து எந்த ரெஸ்பான்சும் இல்லையேடி… ” கவலையாக தெரிவித்தவளை பார்த்து சிரித்த ஆதி,

“நோ ஒர்ரிஸ் செல்லம்… அதான் சொன்னியே… அட்டாக்… !!! பண்ணிடலாம்… ” கண்ணடித்து சொன்னவளை பார்த்து மெல்ல சிரித்தாள் வள்ளியம்மை!

“டன்!… ஆனா இந்த கௌதம் அண்ணாவுக்கு என்னாச்சு? மறுபடியும் சண்டை போட்டியா ஆதி?”

அங்கு வந்தது முதலே அனைவரிடமும் நன்றாக பேசிக்கொண்டிருந்தாலும் ஆதிரையின் புறம் திரும்பவும் இல்லை கௌதம்!

கடல் நீல மென்மையான பட்டு அவளது பால் வண்ண சருமத்தை பளீரென எடுத்து காட்ட, இடை தாண்டி முழங்காலை தொட்டு கொண்டிருந்த அந்த தளர வாரிய நீள கூந்தலில் மல்லிகையை சரம் சரமாக சூடியிருந்தவளை கௌதம் தவிர்ப்பது வெளிப்படையாகவே தெரிய, ஆதிரையின் மனம் சுணங்கியது என்னவோ நிஜமே!

எப்போதும் போல இல்லாமல் தன்னை பார்த்து பார்த்து அலங்கரித்து கொண்டவளுக்கு ஏமாற்றமாக இருந்தது… அவனிடம் கோபத்தை வைத்து கொண்டு… கன்னாபின்னாவென பேசியும் விட்டு அவனை ஏன் இந்த மனம் இப்படி எதிர்பார்க்கிறது என்று புரியாமல் தவித்தாள்… அப்படி என்னதான் எதிர்பார்க்கிறோம் என்பதும் அவளுக்கு புரியவில்லை!

பிருத்வியை அன்று காரணம் காட்டி அவளிடம் சமாதானம் பேசியவன் இன்று தன்னை கண்டு கொள்ள கூட இல்லை என்பதை கண்டவள் அவனை மனதுக்குள் வறுத்து கொண்டிருந்தாள்…

மகனை தன்னுடனே வைத்து கொண்டு அவனுக்கு சமமாக பேசிக்கொண்டிருந்தவனை அவ்வப்போது பார்த்து கொண்டு தான் இருந்தாள்… மகன் மட்டும் போதும், தான் தேவையே இல்லையா? என்ற கேள்வி அவளை குடைந்து கொண்டிருந்தது! இதில் வள்ளியம்மை வேறு இப்படி கேட்கவும் உள்ளுக்குள் கடுப்பானது!

“ஆமா… உன் நொண்ணன் கிட்ட சண்டை போடறதுக்கு தான் நான் இருக்கேன் பார்… எனக்கு வேற வேலை இல்லையா?” கடுகடுப்பை வெளிப்படையாக காட்டி விட்டு சுமங்கலி பெண்கள் அமர்வதற்கு மனைகளை தயார் செய்ய துவங்கினாள்!

வள்ளியம்மைக்கு அவளது செய்கை சிரிப்பை வரவைத்தது!

“ஏன்டி இப்படி கடுகு மாதிரி பொறியர? அண்ணா கிட்ட தானே இப்போ வேலை பார்க்கற? அப்போவெல்லாம் பேசிட்டு தானே இருப்பீங்க… வீட்டுக்கு வந்தா வான்னு கூட கூப்பிடாம நீ ஒளிந்து கொண்டா அண்ணன் மட்டும் தானா பேசுவாங்களா? அதுவும் எங்க கௌதம் அண்ணன் எப்படிப்பட்ட சிங்கம்… அந்த சிங்கத்தை சீண்டி விட்டுட்டே இருக்கே நீ… ” சிரிக்காமல் அவளை கிண்டலடித்த வள்ளியம்மையை குதறி விடுவது போல பார்த்தாள் ஆதிரை!

“ம்ம்ம்… சிங்கமா? அசிங்கம்ன்னு சொல்லிக்க… ” என்று எழுந்தவளின் கண்களில் பட்டது அன்னை காமாக்ஷி தேவியின் சிலை முன்பு வீற்றிருந்த அந்த தாலி!

மனதில் ஏதோ ஒரு உணர்வு! அந்த உணர்வு வயிற்றில் ஒரு பந்தாக சுருண்டு மேலெழுந்து தொண்டையை அடைத்தது!

கொந்தளிக்க துவங்கிய உணர்வுகளை வலுகட்டாயமாக அடக்கி கொண்டு சட்டென்று வெளியேறினாள் ஆதி… எதிலிருந்தோ தப்பித்து ஓடுவதை போல…

*****

மெளனமாக நின்று தோட்டத்தை பார்த்து கொண்டிருந்தான் வருண். மனதுக்குள் எவ்வளவோ எண்ணங்கள் வட்டமிட்டாலும் அதை சௌமினியிடம் எப்படி சொல்வது என்ற குழப்பம் அவனுள்!

மாவிலை பறிக்கவென வந்துவிட்டு தன்னையும் போக விடாமல் தடுத்து நின்று கொண்டிருக்கின்றானே இவன் என்ற பரிதவிப்பில் அவனையும் மாடிப்படியையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டே இருந்தாள் சௌமினி. பின்னே? இருவரும் மேலே வந்ததை ஒவ்வொருவரும் அறிவார்களே! மேலே என்ன நடக்கிறது என்பதை மற்றவர்கள் தவறாக நினைத்து விடுவார்களோ என்ற பயம் அவளுக்கு!

ஆனால் அவனிடம் அவளாக பேச்சை ஆரம்பிக்க முடியவில்லை… ஸ்ருதி உறுத்தி கொண்டே இருந்தாள் அவளது மூளைக்குள்!

மெல்ல கனைத்து கொண்டான் வருண்…

“எப்படி இருக்கே?” மொட்டையாக கேட்டு வைத்தவனை விசித்திர பார்வை பார்த்தாள்… வெகு நாட்கள் கழித்து பார்ப்பது போன்ற பாவனை எதற்கு? இவன் தான் பார்த்தால் கூட கண்டுகொள்ளாமல் செல்பவன் ஆயிற்றே!

“ம்ம்ம்ம்… ” என்று தலையை மட்டும் ஆட்டியவளை நிமிர்ந்து பார்த்தான்… ஒரு காலத்தில் ஒரு வார்த்தைக்கு ஒன்பது பதிலை கூறியவள் அல்லவா… அவளது பேச்சை கட்டி போடுவது அவனால் என்றுமே முடியாத காரியமாயிற்றே!… ஆனால் இன்று வயதும் அனுபவமும் அவனை வெகுவாக தள்ளி நிறுத்தி கொண்டிருப்பதை வேதனையாக உணர்ந்தான்…

எவ்வளவு காலத்தை வீணாக்கி விட்டாயிற்று!

ஆனால் இனியும் வீணாக்க வேண்டுமா என்று மனசாட்சி குரல் எழுப்ப… நோ முடியாது! என்று மனம் குரல் கொடுத்தது!

“இன்னைக்கு லீவ் போட்டுட்டியா?” எதை பேசி பேச்சை வளர்த்துவது என்று புரியாமல் அவன் கேட்க… அவள் அவனை பார்த்த பார்வையில் கேலியே மிகுந்திருந்தது…

“ம்ம்ம்ம்… ” அவனை தான்டி சென்று மாவிலையை பறிக்க துவங்கினாள்!

அவள் ஒரு மார்கமாக ம்ம்ம் சொல்லும் போது தான் அவனுக்கு உரைத்தது… ‘டேய் பக்கி… அவ தான் டா கரஸ்பாண்டன்ட்டே… ’ என்று மனசாட்சி இடிக்க… ‘ஹிஹி’ என்று வெட்க சிரிப்பொன்றை படர விட்டான்…

“ச்சே… டீன் ஏஜ்ல பயப்படாம லவ்வை சொல்லிட்டு… இப்போ பேசவே பயமா இருக்கே… ” என்று யோசித்து கொண்டிருக்க… மாவிலையை பறித்தவள் அவனை தான்டி செல்ல முயல… அவளது கையை இறுக பிடித்தான்!

“செமி… என் கிட்டே பேச மாட்டியா?”

சௌமினிக்கு மனம் படபடவென அடித்து கொண்டது!

“என்ன திடீர்ன்னு… ” அவனிடமிருந்து கையை விடுவித்து கொள்ள முயற்சித்து கொண்டே அவள் கேட்க…

“ஏய் நான் உன்கிட்டே ப்ரொபோஸ் பண்ணி பல வருஷமாச்சுடி… ” பழைய வருணாக அவன் சீற…

“டிஸ்போஸ் செய்ததும் நீயேதான்… .” பதிலுக்கு அவளும் சீற…

“ப்ச்… வேண்டாம்ன்னு சொல்லி என்னால் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியுமா செமி?”

“ம்ம்ம்ம்… .இத்தனை வருஷமா என்ன பண்ணிட்டு இருந்தே?” அவளுக்கு உள்ளுக்குள் எவ்வளவுதான் காதல் இருந்தாலும் காயப்பட்டிருந்த மனம் அவ்வளவு சீக்கிரத்தில் சமாதானமாக விடவில்லை…

“இதற்கு என்ன பதில் சொல்ல செமி? எனக்கு புரியல… ”

“நம்ம ப்ரேக் அப்புக்கு காரணம் யார் வருண்? அப்போ இருந்த பிரச்சனை எல்லாம் அப்படியேத்தான் இருக்குன்னு நினைக்கறேன்… இனிமே கூட உங்க அப்பாவை பற்றி ஏதாவது தெரியாம சொல்லிட்டா என்னை போக சொல்லிடுவியா?” மனதை அழுத்தி கொண்டிருந்தவற்றை எல்லாம் சௌமி போட்டு உடைக்க… மெளனமாக கேட்டு கொண்டவன்…

“எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் பரவால்ல செமி… அப்போ இருந்த தெளிவில்லாத டீன் ஏஜ் பையன் கிடையாது நான்… உனக்கே தெரியும்… அப்போ அப்பாவை கௌதம் கூட ஷேர் பண்ணவே முடியாதுன்னு சொன்னேன்… ஆனா இப்போ எல்லாமே உல்டாவாகலையா? இதுவும் அப்படித்தான் செமி!”

“கௌதமை இப்போ நீ ஏத்துகிட்ட காரணம் உன்னோட அத்தை பொண்ணுக்காக தான் வருண்… எனக்கும் தெரியும்!” மனம் ஏனோ முரண்டியது இந்த விஷயத்தை நினைத்து! ஆதிரையோ பிருத்வியோ இல்லாமல் இருந்தால் தன் நண்பனுக்குரிய அங்கீகாரத்தை இவர்கள் கொடுத்து விடவா போகிறார்கள் என்று மனம் சிணுங்கியது…

“உன்னோட பீலிங்க்ஸ் புரியுதுடி… ஆனா என்னோட சகோதரனை சகோதரனா ஏற்றுகொள்ள யாருமே காரணமா இருக்க தேவை இல்லை செமி! அந்த வயசுல எனக்கு நிறைய விஷயம் புரியல… ப்ளைண்ட் பொசெசிவ்னஸ்! இப்போ வயசும் அனுபவமும் அதிகமாகும் போது மெச்சுரிட்டி வருமே… அது தான்..இப்போ எனக்கு… ” என்று கூறிவிட்டு அவளது முகத்தை பார்க்க…

“வயசு அதிகமாகும் போது மெச்சுரிட்டி வரும் தான்… ஆனா அதை நீ தெரிஞ்சுக்க நான் கொடுத்த விலை என்னோட பனிரெண்டு வருட வாழ்க்கை வருண்… ”

மெல்லிய குரலில் அவள் கூறினாலும் அது தேக்கி வைத்த கோபம் பத்து ஹைட்ரஜன் குண்டுகளுக்கு சமமானது என்பதை புரியாமலா அவன் நின்று கொண்டிருக்கிறான்?

“ஹேய… லாஸ்ட் வோர்ட்ஸ் வேர் யுவர்ஸ் செமி!… ஐ ஜஸ்ட் பாலோட்… ” பரிதவிப்புடன் அவன் கூற…

“ஏன்… நீ சொன்னதை வைத்து தானே நானும் சொன்னேன்? அப்படியெல்லாம் இல்லைன்னு சொல்லி நீ சமாதானப்படுத்த கூடாதா? அப்புறம் கூட உன்னை எத்தனையோ தடவை பார்த்து இருக்கேனே… ஆனா கொஞ்சம் கூட அலட்டிக்காம போவ… ” அப்போதைய மன தாங்கலை இப்போது கூறி அவனிடம் முறைத்து நின்றவளை எதை கொண்டு சமாதானம் செய்வது? திணறினான் வருண்! அவளை மேலும் அருகில் இழுத்தவன்…

“சரிடா..நான் செய்தது தப்பு தான்… தப்பு செய்த இந்த பையனை மன்னிச்சு வாழ்க்கை கொடு செமி… ஏதோ உன் தயவுல பொழச்சு போறேனே ப்ளீஸ்… ” இனியும் கருத்து பரிமாற்றம் என்ற பெயரில் அவனுக்கு அவனே குழி தோண்டி கொள்ள அவனென்ன கௌதமா?

அவன் கேட்ட தொனி அவளை லெகுவாக்கினாலும் அதற்கெல்லாம் மசிந்து உடனே ஓகே சொல்லிவிட்டால் என்னாவது என்று மிக தீவிரமாக சிந்தித்து கொண்டிருந்தாள் அவனுடைய செமி!

“ரொம்ப ஈசியா சொல்லிட்டே வருண்… நான் தான் இத்தனை வருடமா வாழவும் முடியாம… சாகவும்… முடியாம… ” அவள் குரல் உடைந்து கொண்டே வர… அவளை தன்னோடு இழுத்து இறுக்கமாக அணைத்து கொண்டான் வருண்…

“ப்ச்… செமிக்குட்டி… சாரிடா… ப்ளீஸ்… ” அவளது முதுகை தடவி கொடுத்தவாறே அவன் கூற,

“உனக்கு எல்லாமே ஈசி தான் வரு… எத்தனை மாப்பிள்ளைய கொண்டு வந்திருப்பார் தெரியுமா? கல்யாணம் செய்யனும்ன்னு நினைச்சுருந்தா எப்பவோ முடிஞ்சுருக்கும்டா… உன்னை மனசுல வெச்சுட்டு நான் நரகத்துல தான் இருந்தேன்… ” கண்களில் நீர் வழிய அவள் கூறிக்கொண்டே போக… அவனது கண்களும் கலங்கின!

“சாரி இஸ் எ அண்டர்ஸ்டேட்மெண்ட் செமி… ப்ளீஸ்… எனக்கு ரொம்பவே குற்ற உணர்வா இருக்குடி… எனக்கு ஒரே ஒரு சான்ஸ் கொடு… .” கரகரத்த குரலில் கூறியவனை வலுக்கட்டாயமாக தள்ளி நிறுத்தியவள்… அவனை முறைத்து கொண்டே…

“ஆமா… ரொம்ப கில்டி கான்ஷியஸ் தான்… அதான் உன் செக்ரட்டரி பொண்ணோட இடுப்பை ரிசர்ச் பண்ணிட்டு இருந்தியா… ” அவளது இடுப்பில் கை வைத்தபடி அவனை பார்த்து முறைத்து கொண்டே கேட்டவளை பார்த்து மலங்க மலங்க விழித்தான்!

ஆஹா சிக்கிட்டோம்டா!

“அட லூசு செமி… அது வேற கதை… அது என்னன்னா… ” என்று அவன் ஆரம்பிக்க… ” அவனை கைநீட்டி தடுத்தவள்…

“போதும்… உன்னோட எக்ஸ்ப்ளநேஷனை எல்லாம் கொண்டு போய் எவளாவது இனாவானா இருப்பா… அவ கிட்ட சொல்லு… எனக்கு எப்பவோ காது குத்திட்டாங்கடா… ” கடுகடுவென முகத்தை வைத்து கொண்டு அவனை தாளிக்க ஆரம்பித்திருந்தாள்…

“செமி… என்னோட சைடை கொஞ்சம் கூட கேக்க மாட்டேங்கற… என்ன நடந்துதுன்னா… ”

“டேய்… இப்போ நிறுத்தறியா இல்லையா? எனக்கு வர்ற கோபத்துக்கு உன்னை அங்கவே மர்டர் பண்ணிருப்பேன்… தப்பிச்சுட்ட… இப்போ என் கண் முன்னாடி நிற்காத… ” அவள் படு கோபமாக கடித்து விட்டு கீழே போக எத்தனிக்க… அவளை போக விடாமல் தடுத்தவன் ,

“ஹேய்… அது சும்மா லுளுலாய்க்குடா… நோ சீரியஸ் அட் ஆல்… ”

“ஆமா… சீரியசான ரிலேஷன்ஷிப் தனி… சீரியஸ் இல்லாத ரிலேஷன்ஷிப் தனின்னு உன்னோட எடுப்பு தொடுப்பை எல்லாம் நான் சகிக்க முடியாது… இல்லன்னா சாலாம்மா மாதிரி அபிம்மா மாதிரி எல்லாத்துக்கும் தலையாட்டுவேன்னு நினைச்சுட்டியா?” விடாமல் அவனை குதறி கொண்டிருந்தவளின் இந்த வார்த்தைகள் மனதை சுருக்கென்று தைத்தாலும் பழைய கோபம் கிளம்பவில்லை அவனுள்!

“இங்க பார் செமி… ஐ ம் வெரி சீரியஸ் அபௌட் யூ… நான் ஸ்ரீராமன் தான்னு சொன்னா நம்பனும்… என்னால் வேறொருத்தியை நினைத்து பார்க்கவே முடியாத காரணத்தால் தான் இதுவரைக்கும் மேரேஜ் பற்றியே நினைக்கலை… அது மட்டும் தான் உண்மை… வேற என்னதான் பண்ணனும்ன்னு நினைக்கிற? உன் கால்ல விழ வேண்டுமா?… சொல்லு… ”

கோபமாக அவன் கேட்க… ஒன்றும் பேசாமல் லேசாக தன் காலை தூக்கி அவன் முன் காட்டினாள், அவன் அறியாத உதட்டோர புன்னகையோடு!

அவளது செய்கை ஒரு சில நொடிகளுக்கு பின்னரே புரிய…

“அடிப்பாவி… விட்டா விழுந்து எந்திரின்னு சொல்லிடுவா போல இருக்கே… டேய் வருண்… செத்தாண்டா சேகரு… ” பரிதாபமாக அவனுக்கு அவனே சொல்லி கொண்டதில் புன்னகை பரவியது அவளது முகத்தில்!

“ம்ம்ம்… ஈகோ?” ஒரு மாதிரியாக அவள் கேட்க…

“ஈகோவும் இல்ல… காக்காவும் இல்ல… நாம வேணும்னா நம்ம வீட்டுக்கு போய் தனியா பேசலாம்… அங்க சாஷ்டாங்கமா உன் கால்லயே விழறேன்டி போதுமா? என் பொண்டாட்டி கால்ல விழ எனக்கென்ன ஈகோ வேண்டி இருக்கு?” மிகவும் இயல்பாக கேட்டவனை சற்றே ஆச்சரியத்துடன் பார்த்தாள் சௌமி… நல்ல மாற்றம் தான் என்று அவனை குறிப்பெடுத்து கொண்டது அவள் மனம்.

அவளுக்கு அவளே சற்று நிதானப்படுத்தி கொண்டவள்,

“ஓகே சீரியஸ் வருண்… எனக்கு கொஞ்ச நாள் டைம் வேண்டும்… உடனே எல்லாம் ஓகே சொல்ல முடியாது… ” முறுக்கி கொண்டு கூறியவளை,

“ஓகே ஓகே… கூல்… எப்போ வேண்டுமானாலும் ஓகே சொல்லு… ஆனா அதுவரைக்கும் இந்த ரிசர்ச் சொன்னே இல்லையா?… ” என்று நிறுத்த… அவளுக்கு புரியவில்லை…

“அதான்டி… இந்த ஹிப் ரிசர்ச்… அதை மட்டும் நான் செய்துக்கறேன்… ” என்று அவளது இடுப்பை இழுத்து குறுகுறுப்பூட்ட… அவள் திடீர் அதிர்ச்சியில் நெளிய ஆரம்பித்தாள்!

“டேய்… பிராடு… விடுடா… ஒழுங்கா… உருப்படியா ஒரு லவ்வை ப்ரொபோஸ் பண்ண தெரியல… ப்ரொப்போஸ் பண்ணதையும் சக்சஸ் பண்ண தெரியல… உனக்கெல்லாம் ஹிப் ரிசர்ச் தேவையா? பிச்சுடுவேன்… ஓடிடு… ”

ஒரு விரலை நீட்டி அவனை எச்சரித்தவளை பார்த்து மனம் விட்டு சிரித்தான் வருண்…

“ஏய் லூசு… இங்கயும் ஸ்கூல் கரஸ்ங்கற நினைப்புலையே இருக்காதேடி… விட்டா நீல் டவுன் பண்ண வெச்சுடுவா போல இருக்கு… ”

சலித்து கொள்வது போல தோன்றினாலும் ,அவனுக்கு பெருமையாக இருந்தது… அவளது பதவியை நினைத்து! அவளது வளர்ச்சி குறித்தான பெருமை எப்போதுமே அவனுள் உண்டு என்றாலும் ,அவனிடமே நிமிர்ந்து நின்று வெற்றி பெற்று காட்டிய அந்த கம்பீரத்தை அவன் மிகவுமே ரசித்தான்!

“சரி… போதும் உன் வால்தனம் எல்லாம்… எல்லாத்தையும் இங்கவே மூட்டை கட்டி வெச்சுட்டு கீழ போ… அங்க வந்து ஏதாவது சீனை போட்ட… அப்புறம் பத்ரகாளியை தான் பார்ப்ப… ” அவன் அவளை மிரட்டியதெல்லாம் போய் இப்போது அவளது பக்கம் காற்று வீசுகிறது என்று புன்னகையோடு சொல்லிக்கொண்டான்…

“ஏய்… ரொம்ப ஆடாதே செமி… அப்புறம் மொத்தமா இப்போவே வசூல் செய்ய ஆரம்பிச்சுடுவேன்… பார்த்துக்கோ… ” மிரட்டலாக கூறினாலும் அவன் வார்த்தையில் இருந்த காதலையும் அதோடு சேர்ந்த குறும்பையும் அவள் ரசித்து கொண்டாள்…

“உன் மிரட்டலை எல்லாம் அந்த செக்ரட்டரி பொண்ணு கிட்ட வெச்சுக்கோ… நான் பயப்பட மாட்டேன்… ”

சிலிர்த்து கொண்டு கூறியவளுக்கு சட்டென்று உலகம் சுழன்றது… கீழே போக எத்தனித்தவளை சுழற்றி இழுத்து சுவரோடு சேர்த்து நிறுத்தியிருந்தான்… அவன் இழுத்ததில் தோள் கழன்று விடும் போல வலிக்க…

“டேய் எருமை… கொஞ்சமாவது சென்ஸ் இருக்கா? இப்படியா இழுப்ப?” வேகமாக பேசிக்கொண்டே போனவள் படிப்படியாக சுருதி இறங்கி காற்று போன பலூன் போலானாள்.

அவளுக்கு இருபுறமும் கையால் முட்டு கொடுத்து கிட்டத்தட்ட அவளை அரெஸ்ட் செய்திருந்தான் வருண்… கண்களில் மின்னலான புன்னகை! புருவத்தை உயர்த்தி அவளை பார்த்து காதலாக புன்னகைத்தவனை விழியை அகற்ற முடியாமல் பார்த்தாள் சௌமினி!

வசீகரன்!… காதலோடு அவன் பார்த்த பார்வை அவளை கவ்வி தனக்குள்ளே சிறை செய்து விடும் போல இருக்க… கன்னங்களில் வெட்க பூ மலர்ந்தது!

“என்ன பண்ற வரு?” அவளுக்கே கேட்காத தொனியில் அவள் கேட்க,

“இந்த மவுத் பீஸ் ஓவர்டைம் பார்த்துட்டு இருக்கே… அதான்… அதை எப்படி க்ளோஸ் பண்றதுன்னு யோசிக்கறேன்… ” கிசுகிசுப்பாக அவன் கூறியதில் அவள் மேனி சிலிர்த்தது… ஆனாலும் அதை ஒப்புக்கொண்டு விட்டால் என்னாவது?

“ம்க்கூம்… ரொம்ப முக்கியம்… ஒழுங்கா தள்ளு… ” அவனை தள்ளிவிட முயன்றவளை அனாயசமாக சமாளித்தவன்,

“எனக்கு முக்கியம் தான்டி… ” என்றவன் அவளுக்கு மிகவும் அருகில் செல்ல, சௌமினி பதட்டமாக பார்த்தாள்…

“வருண்… விளையாடாதே… யாராவது வந்துடுவாங்க… ” அவனை தள்ளி விட முயற்சிக்க… அவனோ விடாக்கண்டனாக அவளை நோக்கி முன்னேறி கொண்டிருந்தான்…

“சான்ஸே இல்ல… ” கிசுகிசுப்பாக அவன் கூற…

“வேண்டாம் வரு… நான் இன்னும் ஓகே சொல்லவே இல்ல… ” ஒற்றை கையை காட்டி மிரட்டியவளை பார்த்து கேலியாக சிரித்தான் வருண்!

“அது உனக்கு எப்போ சொல்ல தோன்றுகிறதோ அப்போ சொல்… ” என்று கண்ணை சிமிட்டியவன் மேலும் முன்னேற,

“பிராடு… போர்ட்வென்டி… நீ இப்படியெல்லாம் பிஹேவ் பண்ணா நான் ஓகே சொல்ல மாட்டேன்டா… ” அவனது நெருக்கம் அவளை பதட்டப்படுத்த அழுது விடும் குரலில் மிரட்டி பார்த்தாள் சௌமினி!

“அப்படியா?… நீ சொல்லாம இருந்துதான் பாரேன்… ” மென்மையாக அவளது இடையை பற்றி கொண்டே கேட்டவனை பயத்தோடு பார்த்தவள் ,

“ஐயோ… ஆதி… ”

சட்டென வருண் திரும்பி பார்க்க.. அந்த ஒரே நொடியில் சுதாரித்து அவனிடமிருந்து தப்பினாள் சௌமினி!

“ஹஹா… எப்படி… ??” என்று அழகு காட்டியவள் வேகமாக பூஜையறையை நோக்கி ஓடினாள்!

முகம் சிவக்க தலையை கோதியவன் முகத்தில் வெட்கப்புன்னகை!

error: Content is protected !!