CP41

அத்தியாயம் 41

மை தீட்டிய வில்லுயர்த்தி

கரையொதுங்கும்

உன் கருவிழிகள் தான்

என் நெடுஞ்சாலையில்

முன்னறிவிப்பின்றி

நிகழ்ந்த அழகிய விபத்து!

-டைரியிலிருந்து

ஆதிரை கௌதமுடைய வீட்டிற்கு வந்து இரண்டு மாதத்திற்கும் மேலாகி விட்டது… போகவே பிரியப்படாதவளை வேறு யாரையும் விட பிருத்வி இழுத்து வந்திருந்தான்… கௌதமை வேறு வழியில்லாமல் பார்க்கும் போதெல்லாம் கடந்த கால கசப்பு மேலெழுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை… அவனும் தடுக்க முனையவில்லை!

ஆனால் வீட்டில் இருக்கும் போது அபிராமியை அவள் பெரும்பாலும் ஒதுக்கியதில்லை… அவருக்கு நல்ல மருமகளாகவே இருக்க முனைந்தாள்!

அன்று ராஜேஸ்வரியின் வீட்டில் இருந்து சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்றவர்கள் சிற்சில வேலைகளை முடித்து விட்டு அன்றே அபிராமியின் வீட்டிற்கும் வந்துவிட்டனர்..அனைவரும்!

சைந்தவியின் திருமணத்தில் இருவரும் ஜோடியாகவே கலந்து கொள்ள… அத்தனை பேரின் பார்வையும் இருவரின் மேல் மட்டும் தான்…

அதிலும் பட்டில் தேவதையாக இவளும், இவளுக்கு இணையாக வேஷ்ட்டியில் அவனும் ,ஜோடி பொருத்தத்தை எண்ணி கண்கள் கலங்கின சிவகாமிக்கு!

இப்போதெல்லாம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எல்லாரும் இணைந்து கொள்வது ஒரு வழக்கமாகவே மாறியிருந்தது… முதலில் சைந்தவியின் திருமணம் ஒரு வாய்ப்பென்றால் இப்போது வருண் சௌமினியின் திருமணம்!

அப்போதே நிச்சயிக்கப்பட்ட அந்த திருமணத்திற்கு இன்னும் இருபது நாட்களே இருக்க… ஒவ்வொருவருக்குமே நேரம் இறக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது…

சௌமியும் வருணும் தங்களை மறந்து அவ்வப்போது செல்பேசியில் ஆழ்ந்து விட, வள்ளியம்மை வாரத்தில் பாதி நாட்கள் அபிராமியின் வீட்டில் கழித்தாள்!

வாண்டுகளும் ஒன்று சேரும் போது அந்த இடம் சந்தை கடையாகி விடுமே! ஆனால் குட்டீஸ் ஒவ்வொருவரும் அபிராமி பாட்டியிடம் பாட்டையும் நடனத்தையும் ஆர்வமாக கற்று கொள்ள விழையும் போது அவரது மனதில் நிறைவு!

ஆனால் கௌதமுக்கும் ஆதிரைக்குமான உறவில் எந்த முன்னேற்றமும் இல்லாதிருந்தது… பெரும்பாலும் அவளை பார்ப்பதையும் பேசுவதையும் தவிர்த்தே வந்து கொண்டிருந்தான்… அவனால் அவளது கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்பது போல வெளிப்பார்வைக்கு தெரிந்தாலும் உள்ளுக்குள் அவனது ரணமும் ஏமாற்றமும் இன்னமும் அப்படியே தானிருக்கின்றது என்பதை யாருமே உணராத வண்ணம் மிகத்திறமையாக மறைத்து வந்திருந்தான்…

அன்று இரவு உணவை முடித்து கொண்டு மாடியில் இருந்த அவர்களது அறைக்கு ஆதிரை வந்த போது பிருத்வி அவனது நெஞ்சில் படுத்து கொண்டு கதை கேட்டு கொண்டிருந்தான்…

ஒரே அறையில் இருந்தாலும் அவர்கள் இருவரை பொறுத்தவரை அந்நியர்களே!

அலுவலகத்தில் வேலை விஷயமாக கருத்து பரிமாற்றங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் நடக்கும்… அதை அங்கேயே விட்டுவிட்டு வந்து விடுகிற நல்லவர்களாக இருவருமே இருக்க… அபிராமியின் கண்களில் இந்த ஒட்டாத தன்மை படாமல் இல்லை…

ஆதிரைக்கு மகனை தன் மேல் போட்டு கொண்டு கதை சொல்லி கொண்டிருந்த கௌதமை பார்க்கும் போது மனதில் ஏதோ சொல்ல முடியாத நிம்மதி பரவியது!

“அந்த ராஜா தமிழ்நாட்டை மட்டும் கவர்ன் பண்ணலை குட்டி… தமிழ்நாட்டை தான்டி ஆந்திரா ,ஒரிசா, ஸ்ரீலங்கா,மலேசியா வரைக்கும் கன்குயர் செய்தாங்களாம்… ” கண்களையும் கைகளையும் விரித்து கொண்டு மகனுக்கு கூற… அதை அவனும் திருப்பி செய்ய…

“அந்த கிங் பேர் என்ன சொன்னேன்?” என்று அவனை கேள்வி கேட்டான் கௌதம்..

“அந்த கிங் பேர் தாஜதாஜ சோதா ப்பா… ” என்றவனை தன்னோடு இறுக்கி கொண்டான் அவன் தந்தை… ராஜராஜ சோழன் என்பதை தன் மகன்அவ்வளவு அழகாக மழலையில் சொல்வதை கேட்டவனுக்கு மனமெங்கும் மழை!

“சமர்த்து சக்கரை கட்டிடி என் தங்கம்… ” முத்தமிட்டு பாராட்டிய தந்தையை பார்த்து கிளுகிளுத்தான் மகன்!

“எஸ்… அவர் பேர் ராஜராஜ சோழா… ஓகே… அவர் கட்டின கோவில் எது?”

“தாஞ்சூர் பிக் டெம்பில்… ” என்று சிரித்து கொண்டே கூறியவனுக்கு மேலும் முத்தங்கள் கிடைக்க… அந்த காட்சியை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டிருந்தவளுக்கு மலைப்பாக இருந்தது… பிருத்வி கேட்கும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அவளால் பதில் அளிக்கவே முடிந்ததில்லை! அவனையே இதற்குள்ளாக கைக்குள் போட்டு கொண்டவனின் திறமையை என்னவென்று சொல்வது?

அதே! திறமையாளன் தானே… தானுமே இப்படித்தானே அவனது கைக்குள்… அவன் சொல்வதை எல்லாம் நம்பி கொண்டு இருந்தோம் என்று நினைத்த போது கண்களில் இருந்து மளுக்கென்று கண்ணீர் எட்டி பார்த்தது!

“ஓகே செல்லக்குட்டி… இப்போ கதை அவ்வளவுதானாம்… மீதி கதைய நாளைக்கு சொல்வேனாம்… நீங்க இப்போ சமர்த்தா படுத்து தூங்கணுமாம்… ஓகே வா… ” என்று தன் நெஞ்சில் சாய்த்து கொண்டே கௌதம் கூற… அவனது மகன் தந்தை சொல் தட்டாத தனையனாக,

“ஓகே ப்பா… ” என்று கூறி கண்களை மூடிக்கொள்ள… மெலிதாக தடவி கொடுத்தும் தட்டி கொடுத்தும் கொண்டிருந்தான்… மகன் உறங்கும் வரை!

ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான்… மழை வலுத்து கொண்டிருந்தது!

சிலுசிலுவென காற்று முகத்தில் அறைந்தது!

“ஆதி… ” இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தவளை அழைத்தான் கௌதம்… மெல்லிய பதட்டம் அவளை சூழ்ந்தாலும் அதை காட்டி கொள்ளாமல்,

“ம்ம்ம்… என்ன?” எப்போதையும் போல எந்த உணர்வையும் காட்டாமல் அவள் கேட்க,…

“ஏன் ஒரு மாதிரி ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க?”

“இல்ல… நத்திங்… பிருத்வி கிட்ட பேசிட்டு இருந்ததை கேட்டுட்டு இருந்தேன்… அவ்வளவுதான்… ” வெகு இயல்பாக கூறிவிட்டு அங்கே செல்பில் இருந்த புத்தகங்களை ஆராய துவங்கினாள்…

உறக்கம் அவ்வளவு எளிதில் வரும் போல தோன்றவில்லை…

மழை வேறு பழைய நினைவுகளை கிளறி விட்டு கொண்டிருந்தது!

“குழந்தைங்களோட உலகம் ரொம்பவே அழகு! அந்த அழகான உலகத்துல நாம அங்கமா இருக்கறது இன்னும் அழகு… ” முகம் விகசிக்க உறங்கி கொண்டிருந்த மகனை பார்த்து கூறினான் கௌதம்…

“ஹும்ம்… அவனுக்கு கதை கேட்பதென்றால் ரொம்ப பிடிக்கும்… நீங்க அதில் எக்ஸ்பெர்ட்ன்னு எனக்கு தான் தெரியுமே… அதான் உங்க கிட்ட சீக்கிரம் ஒட்டிகிட்டான்… ” நிதானமாக அவள் கூறினாலும் அவளது வார்த்தையில் இருந்த குத்தல் அவனுக்கு புரியாமல் இல்லை… அவளை தீர்க்கமாக பார்த்து கொண்டே இருந்தவன்…

“ம்ஹூம்… அப்படியா? என் மகன் நான் சொன்ன கதைய மறக்கவே மாட்டான் ஆதி… முழுமையா என்னை நம்புகிறான்… ஆனா ஒருசிலர் அப்படி கிடையாது… மறதியும் நம்பிக்கையின்மையும் தான் பிரச்சனை என்பது கூட புரியவில்லை அவர்களுக்கு!” நேராக அவளை நோக்கி சுட்டவில்லைஎன்றாலும் அது அவளுக்கான பதில் என்பது கூடவா அவளுக்கு தெரியாது?

“யாரை சொல்றீங்க?” புத்தகத்தை தேடி கொண்டிருந்தவள் சட்டென நிமிர்ந்து அவனை பார்க்க…

“நான் வேற யாரை சொல்வேன்… ”

“உங்க மேல் நான் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன் என்பதற்கு பிருத்வி மட்டுமே சாட்சி… ” சற்று தடுமாறி கூறியவளுக்கு தொண்டை அடைத்தது! கண்கள் பிருத்வியை பார்த்து கொண்டிருந்தாலும் அவளையும் அறியாமல் நீர் சூழ்ந்தது!

“நீ வைத்ததுக்கு பெயர் நம்பிக்கையா?” சற்று கேலியாக வளைந்தது அவனது உதடுகள்…

“அதற்கு பெயர் வேறென்ன?” ரோஷமாக நிமிர்ந்து பார்த்து கேட்டாள் ஆதிரை…

“அது உன்னுடைய வயது கோளாறு… உனக்கு நம்பிக்கை வைப்பதற்கும் அதிக நேரம் தேவைப்படவில்லை… அந்த நம்பிக்கையை உடைத்து கொள்ளவும் அதிக நேரம் தேவைப்படவில்லை… ” உணர்வை கடந்த முகத்தோடு அவன் கூற…

“அப்படின்னா நான் தான் தவறு செய்தவள் இல்லையா? அதுதானே நீங்க சொல்ல வருவது?”

“இல்லை ஆதி… காதலை வைத்து சூதாடியது நான் தான்… அது கண்டிப்பாக மன்னிக்க கூடியது இல்லை… ஆனால் அது என்… ” வேகமாக கூற ஆரம்பித்தவன் சட்டென நிறுத்தி கொண்டான்… பேசி ஒருவரை சமாதானப்படுத்தி வாழ்கையை மாற்ற முடியுமா? அது நிலைத்து தான் இருக்குமா?

யாரோ இருவருக்கும் இடையில் இருக்கும் வெறுப்பு மட்டுமல்ல அதீத காதலும் கூட உண்மைகளை வெகு வசதியாக மறந்துவிடும்… இருவரும் ஒன்றே என்ற நினைவில் மற்றவர் தனிப்பட்டவர் என்பது இரண்டாம் பட்சமாகி விடுகிறது…

“ம்ம்ம்… சொல்லுங்க கௌதம்… இதை மட்டும் ஒத்துகொள்ளவே முடியாதே உங்களால்… என்ன சொல்லி உங்களை நியாயப்படுத்தி கொள்ள முடியும்? முடியாதல்லவா… ”

உடைந்த குரலில் கேட்டு கொண்டிருந்தவளை கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டே இருந்தவன்…

“நான் எதையும் நியாயப்படுத்தவில்லை ஆதி… ஆனால் நீ மறந்தவற்றை நியாபகப்படுத்தி பார்… நான் எதையும் நியாயப்படுத்தவே தேவையில்லை… ”

மெளனமாக அவள் அவனை பார்க்க… அவனும் பார்க்க சளைக்கவில்லை… மனதில் உள்ள கள்ளம் இப்படி நேர்பார்வை பார்க்குமா என்ன?

இவன் பக்கமும் ஏதாவது நியாயம் இருக்க கூடுமா? என்று கேள்வி கேட்டது அவளது மனம்… எதுவும் பேசாமல் சுவரில் சாய்ந்து நின்று கொண்டாள்…

“சரி… நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்… நீ தூங்கும்மா… ”

“ஏன் இந்த நேரத்துல?” கூர்மையாக அவனை பார்த்தாள்… நேரம் பதினோரு மணியை கடந்திருந்தது!

“ம்ம்ம்… உண்மைய சொல்லனுமா இல்ல பொய் சொல்லனுமா?” சற்று இலகுவாக கேட்டவனை எரிச்சலாக பார்த்தாள்…

“இனிமேலாவது உண்மைய மட்டும் பேசுவீங்கன்னு நம்பறேன்… ”

“நான் எப்போதுமே உன்கிட்டே பொய் சொன்னதில்லை ஆதி… ” உணர்ந்து கூறியவனை உறுத்து விழித்தாள்!

“ம்ம்ம் ஆமா… ஆனா உண்மைய வசதியா மறைச்சுடுவீங்க… ”

இதற்கு பதில் கூறினால் வாக்குவாதம் தான் பெரியதாகும் எனபதை உணர்ந்தவன்…

“ரிலாக்ஸ் பண்ணிக்க பப் போறேன்… ட்ரின்க் பண்ண போறேன்… இங்க பிருத்வியை வெச்சுட்டு குடிச்சுட்டு வர முடியாது… சோ நைட் நான் வர மாட்டேன்… வெளிய தங்கிக்கறேன்… ”

இதை காட்டிலும் முகத்துக்கு நேராக வேறெதையும் சொல்லிவிட முடியாது! ஆதிரை அதிர்ந்து பார்த்தாள்!

“உங்களுக்கு குடிக்கற பழக்கம் வேற இருக்கா?” அதிர்ச்சியில் வார்த்தைகள் வெளியே வர மறுத்தன. ஆனாலும் ஜீரணித்து கொண்டு கேட்டாள்…

“ஆமா… நான் குடிப்பேன்… சிகரெட் பிடிப்பேன்… வேறென்ன தெரிய வேண்டும்?”

அவன் வரிசையாக கூறியதை கேட்டவளுக்கு நெஞ்சை பிசைந்தது… வாழ்க்கையே போராட்டமாக மாறியதை நினைத்து!

“அப்புறம் அடுத்தது?” இறுகி விட்ட முகத்தோடு அவள் கேட்க…

“என்ன அடுத்தது?” டிஷர்ட்டை அணிந்து கொண்டே கேட்டவனை முறைத்தாள் ஆதிரை!

“இன்னொரு தப்பு… ”

“என்ன இன்னொரு தப்பு… ? கொள்ளையடிக்கறதா?” அவனது கைகடிகாரத்தை தேடிக்கொண்டே கேட்க…

“ம்ம்ம்… இல்ல… வேறே… ”

“அப்போ கொலை பண்றதா?” வெகு இயல்பாக கேட்டு விட்டு கிடைத்த கைகடிகாரத்தை கையில் கட்ட…

“ம்ம்ம்… இதெல்லாம் நான் கேட்கலை… ” எரிச்சலாக அவள் கூற… அவளை கூர்மையாக பார்த்தவன்…

“அப்போ இதெல்லாம் உனக்கு தப்பா தெரியல?” என்று கேலியாக கேட்டு விட்டு தலை வாரிக்கொண்டே இடைவெளி விட்டவன்… “மேற்படி மேட்டரை தானே கேட்கற..?”

அவளை உறுத்து பார்த்தவன் ,அவள் பதில் கூறாமல் எங்கேயோ பார்ப்பதை சற்று எரிச்சலாகவே பார்த்தான்… ஏன் ஆண்களுக்கு மட்டும் கற்பில்லையா என்று மனம் குமுறியது! விழுந்து விட்டது இவளிடம் மட்டும் தானே?

“இதற்கு நான் என்ன சொன்னாலும் என்னை நீ நம்ப போவதில்லை ஆதி! சோ எதற்கு சொல்ல வேண்டும்?” குத்தி கிழிக்க தயாராகும் கத்தியாக அவனது வார்த்தைகள் வெளிவர, அவள் பதில் கூறவில்லை… அவள் எதிர்பார்ப்பது அவனது பதில்!

“அப்படி போறவனா இருந்தா உன்கிட்டே இப்படி நின்று கொண்டு பேசிட்டு இருக்க மாட்டேன்… இப்படி நீ கேள்வி கேட்கும் சந்தர்ப்பமும் இருக்காது… நீ என்னதான் நினைத்தாலும் என் அம்மாவின் வளர்ப்பு அப்படிப்பட்டதல்ல… கேர்ள் ப்ரெண்ட்ஸ் அதிகம் இருந்தார்கள் தான் ஆனால் அவையெல்லாம் ஒரு அளவுதான்… இல்லைன்னா சௌமினி என்கிட்டே பழகுவான்னா நினைச்ச?”

வார்த்தைகளில் வெப்பம் ஏற ஆரம்பித்து இருந்தது… எப்போது வேண்டுமானாலும் வெடித்து விடுவான் என்று அவனுக்கே தோன்றியது… முயன்று தன்னை மீட்டு கொண்டிருந்தான்! ஆனாலும் வார்த்தைகளை கட்டுபடுத்த நினைத்தவனால் அது முடியாமல் போய் கொண்டிருந்தது!

அருகில் வந்து அவளது தோள்களை கோபமாக பற்றியவன்,

“என்னால மறக்க முடியல… உன்னை மறக்கவே முடியல… அதுவும் அந்த பத்து நாளையும் என்னால மறக்கவே முடியலடி… ஒவ்வொரு நாளும் ராத்திரி கண்ணை மூடினா நீ தான் ஞாபகத்துக்கு வந்த… அப்படி வந்தப்ப எல்லாம் மனசுக்குள்ள வெறி ஏறிட்டு இருந்தது… என்னை விட்டுட்டு போயிட்டாளேன்னு வெறி! உன்னை தான் மறக்க முடியல… அட்லீஸ்ட் என்னையாவது மறக்கனுமே… அதனால் தான் அதிகமா ட்ரின்க் பண்ண ஆரம்பிச்சேன்… இப்போ கொஞ்ச நாளா ட்ரின்க் செய்யாமத்தான் இருந்தேன்… ஆனால் இன்றைக்கு… ” அவளை கோபமாக உலுக்கி கொண்டே கூறியவன்… சற்றே இடைவெளி விட்டான்…

“இந்த மழை… கூடவே நீ!… !” அவளை கோபமாக தள்ளி நிறுத்த, முகத்தை சுளித்து கொண்டு வலி பொறுத்து கொண்டிருந்தவளின் மனதுக்குள் சிலபல நிலநடுக்கங்கள்!

தன் மனம் என்ன நினைக்கிறது என்பதை அவளாலேயே உணர முடியவில்லை! கோபத்தில் அவன் கைகள் நடுங்கியதை உணர்ந்தாள்!

கோபமாக தள்ளி நிறுத்தியதில் தடுமாறியவளை பார்த்தவன்… முயன்று தன்னை கட்டுப்படுத்தி கொண்டு அவனது கார் கீயை எடுத்து கொண்டு வெளியேறினான்…

அந்த இடத்தில் அவனுக்கு மூச்சு முட்டியது… இறக்கி வைக்க முடியாத சிலுவை அவனுக்குள் பெரும் சுமையாக இருந்தது… !

சிலவற்றை சௌமினியிடம் வருணிடம் கூட கூற முடியாததாயிற்றே! ஒருவேளை ஆதிரையால் புரிந்து கொள்ள முடியும் என்ற நிலையிருந்தால் தனக்கு இந்த அளவு மூச்சு முட்டாமல் இருக்குமோ?

சற்று நேரம் வெளியே சுற்றி விட்டு வந்தாலாவது அதன் தாக்கம் குறையுமா என்றெண்ணி அவன் போக , ஆதிரை புருவத்தை நெறித்து கொண்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்! அவளது உடல் இன்னும் நடுங்கி கொண்டிருந்தது… கைகளை இறுக்கமாக கட்டி கொண்டு அமர்ந்திருந்த அந்த கோலம் அவளுக்கே புதிராகத்தான் இருந்தது!

“இவன் கூறுவதை பார்த்தால் தான் ஏதோ தவறு செய்துவிட்டதை போல கூறுவான் போலிருக்கிறதே!”

உறங்குகின்ற மகனை பார்த்தாள்… நிம்மதியான உறக்கம்… தன்னை பார்த்து கொள்ள தாயும் தந்தையும் இருக்கிறார்கள் என்பதனால் வரும் கவலைப்படாத நிம்மதியான உறக்கம்… அது தன் மகன் முதலில் தன் மேல் வைத்த நம்பிக்கையல்லவா!

நம்பிக்கை… இதைத்தானே அவனும் பேசினான்? எங்கோ எதுவோ இடறுவது போல தோன்றியது அவளுக்கு! அவன் எதையோ சொல்ல வந்துவிட்டு அதை கூறாமல் விட்டது வேறு நினைவுக்கு வந்தது!

என்னவாக இருக்கும்? மனம் தவித்தது! எல்லாவற்றுக்கும் மேல் அவனது கோபம் அவளை அலைகழித்து கொண்டிருந்தது!

நாமும் குழந்தையாகவே இருந்திருக்க கூடாதா? கவலையற்று சிறகு விரித்து பறந்த அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன…

அவளையும் அறியாமல் பெருமூச்சு பிறந்தது…

சற்று நேரத்தில் தன்னை மீட்டு கொண்டவள்,எதையாவது படித்தாலாவது தன் மனம் சமன் படுமா என்று யோசித்து அந்த புத்தக ரேக்கை ஆராய… அவளது நேரமோ என்னவோ… புத்தகங்களுக்கு அடியில் எதுவோ சிக்கியிருந்தது!… தூசி தட்டி என்னவென்று பார்த்தாள்…

ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தது!

அது ஒரு டைரி… டைரி என்பதை விட கவிதை தொகுப்பின் கையெழுத்து பிரதி!

திறந்து பார்த்தவளுக்கு அது கௌதமுடைய கையெழுத்து என்பது புரிய வெகு நேரமாகவில்லை!

கௌதம் கவிதை எழுதுவானா? ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தது!

இன்னும் என்னென்ன தன்னிடமிருந்து மறைத்து இருக்கிறான் என்று எண்ண தோன்றியது! அவனை பற்றி என்ன தான் தெரிந்து கொண்டிருக்கிறாய் இந்த கேள்வியை கேட்க? என்று மனசாட்சி ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு சாடியது!

ஒரு வரியாய் இரு விழிகள்

என்னில் கணக்கில்லா விளக்கவுரைகள்!

டைரியின் முதல் பக்கத்தில் ஏதோ ஒரு பெண்ணின் கண்ணை மட்டும் ஒட்டி அதற்கு கீழே இந்த கவிதை!

அந்த பெண்ணின் கண்களை உற்று நோக்கினாள்…

சிலிர்த்தது!

அது அவளின்றி வேறேது?

தன்னை குறித்தான கவிதையா? ஆச்சரியத்தில் உறைந்து போனாள் ஆதிரை!

அவசரமாக ஒவ்வொருபக்கமாக திருப்ப… ஒவ்வொரு பக்கத்திலும் கவிதைகள்! ஒவ்வொரு கவிதைக்கு இவளின் கோட்டோவியமும் கூட! கௌதமுக்கு ஓவியமும் வருமா? அதுவரை இருந்த அழுத்தமான மனநிலை சட்டென மாறியது!

நீ நனையும் மழையில்

குளிர் காய்கிறேன் நான்!

அவளது புகைப்படத்தோடு கூடிய அந்த கவிதை அவளை எங்கெங்கோ தட்டியெழுப்ப… கண்களில் நீர் சூழ்ந்தது!

பாவி… தன்னிடம் ஒரு முறை கூட காதலை வெளிப்படையாக பேசியதே இல்லையே! அவள் தான் ஆயிரம் முறை அவனிடம் காதலை சொல்லியிருக்கிறாளே தவிர ஒரு முறையும் அவனாக எதையும் பேசியதே இல்லையே!

ஏன் இதுவரையும் , இப்போது அவன் வெடித்து விட்டு போன வெடிப்பும் கூட சுற்றி வளைத்து அந்த பத்து நாட்களை மட்டுமாகத்தானே கூறினான்… ஆனால் ஒவ்வொரு பக்கத்திலும் அவன் உருகியிருந்ததை பார்க்கும் போது தன்னுடையதை காட்டிலும் அவனுடைய ஆழமான காதல் அவளுக்கு புலப்பட… அவளுக்கு மேலே குழப்ப மேகங்கள் மேலும் சூழ்ந்தது!

டைரியின் வருடத்தை பார்த்தவள் இன்னமும் இனிமையாக அதிர்ந்தாள்!

2008… !!!

அதாவது கல்லூரி சேர்ந்த முதல் ஆண்டு!

அப்போதிருந்தேவா தன்னை ரசித்து இருக்கிறான்? அவளுள் எழுந்த இந்த மிகப்பெரிய கேள்வி அவளுள் பல கேள்விகளை எழுப்பியது!

அந்த வருடத்தின் மத்தியில் தான் அவன் அவர்களது கல்லூரிக்கு வந்தது! ஆனால் டைரியை படித்தால் அதற்கும் முன்பிருந்தேயான ரசனை போலிருக்க… ஆதிரையின் தலை சுற்றியது!

எதையாவது வெளிப்படையாக பேச மாட்டாயா கௌதம்? அவனது சட்டையை பிடித்து இந்த கேள்வியை கேட்க வேண்டும் போல அவளுக்கு தோன்ற… மெல்லிய புன்னகை அவளது உதட்டில் நெளிந்தது!

அவன் இரவு திரும்ப மாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்றது வேறு ஆதிரைக்கு சாதகமாகிவிட… அவனிடம் சண்டையிட்டதும் இத்தனை நாட்கள் இருந்த தவிப்பும் கூட வெகு தூரம் சென்று விட, அவனது காதல் கணங்களை வெகு சுவாரசியமாக படிக்க துவங்கினாள்!

சில இடங்களில் பெயரையும் குறிப்பிட்டு கவிதையாக்கி இருந்தான்… பல இடங்களில் முகம் சிவக்கும் அளவு எழுதியிருந்தான்… இவ்வளவு ஆழமாக தான் எந்த காலத்திலும் அவனை விரும்பியிருக்க முடியாது என்பது புரிந்தது… காதலிப்பதை விட காதலிக்கப்படுவது வேறெதை காட்டிலும் பரவசத்தை கொடுக்க கூடியது அல்லவா!

இத்தனை நாட்களும் அவளது மனதில் முனுமுனுவென்று முனகி கொண்டு வலிக்க செய்து கொண்டிருந்தது இந்த ஆற்றாமை தான் என்பதை அந்த கணத்தில் உணர்ந்தாள் ஆதிரை!

அவன் காதலை கூட சொன்னதில்லையே ஆனால் தான் எப்படிப்பட்ட முட்டாளாக இருந்திருக்கிறோம் என்பதை அவள் நினைக்காத நாளில்லை…

இப்போதும் அவனது செயல்கள் பலவற்றுக்கு விளக்கங்கள் இல்லை.. ஆனாலும் அவன் தன்னை ஒரு காலத்தில் உருகி உருகி காதலித்து இருக்கிறான் என்ற உண்மை அவளுள் இனிப்பாக இறங்கியது!

அது ஒன்றே அந்த கணத்தில் அவளுக்கு போதுமானதாக இருந்தது!

ஒவ்வொரு பக்கமாக நிதானமாக படித்து முடித்தவள், இன்னொரு டைரியை எடுத்தாள்… சுமார் ஐந்தாறு டைரி இருந்தது போல…

அழகான முகப்பு அட்டை… வழவழப்பான காகிதம்! வெகு ஆசையாக டைரியை திறந்தவளை வரவேற்றது அவளது மற்றொரு படம்.. புன்னகைத்து கொண்டே கீழே பார்த்தவள் வார்த்தைகளை பார்த்து அதிர்ந்தாள்!

ஹாத்திராமை மறந்து விட்டானே சப்தகிரிவாசன்!!!