cp42

cp42

அத்தியாயம் 42

நீ

உடைத்திட விரைந்தோடும்

நீர் குமிழ்களாய்

காலமும் காதலும்!

-டைரியிலிருந்து

எவ்வளவு நேரம் அதே இடத்தில் அமர்ந்து இருந்தாளோ அவளே அதை அறியவில்லை… முதலில் கலக்கம்..அதன் பின் வருத்தம்… அதன் பின் ஆதங்கம்… அதன் பின் அழுகை… என மாறி மாறி அவளது உணர்வுகளை கண்ணாடியாக காட்டியது அவள் முகம்…

அவளது உணர்வுகளை புரட்டி போட ஒரே வாக்கியத்தால் முடியுமென்று அப்போதுதான் உணர்ந்தாள்! என்ன நினைத்து அவ்வாக்கியத்தை அவன் எழுதியிருக்க கூடும்? அவன் தன்னை அவ்வாறு நினைக்க என்ன முகாந்திரம் இருக்கிறது என்பதில் அவளுக்கு அப்போது சந்தேகம் இருக்கவில்லை…

அவன் இப்படியாக நினைத்து விட்டானே என்று மருகியும் போகவில்லை…

ஆனாலும் ஏதோ ஒரு உணர்வு!

அவளது மனதை பிழிந்து கசக்கியது!

ஏன் என்று புரியவில்லை!

உள்ளிருந்த அவளது காதல் இப்போது விஸ்வரூபமெடுத்து விட்டதா?

மறந்து மரத்து மறுத்து விட்ட உணர்வுகள் இப்போது மீண்டும் உயிர்பெற்று வந்து அவளை சீண்டி பார்க்கிறதா?

ஆனால் அப்போது அவள் ஐயம் திரிபற உணர்ந்தது என்னவென்றால் அதீத வெறுப்பு மட்டுமல்ல அதீத காதலில் ஏற்படும் ஏமாற்றமும் உயிரை கொன்று விடுமென்பதை…

தான் உணர்ந்த ,அனுபவித்த வேதனைகளுக்கு சற்றும் குறைந்ததல்ல தன்னுடையவனின் வேதனையும் என்பதை முழுமையாக உணர்ந்தவளுக்கு மனதில் தோன்றிய சந்தோஷத்தையும் தாண்டிய வலி!

அந்த வலி வேதனைகளுக்கு யார் பொறுப்பு?

இழந்து விட்ட நாட்களை யார் ஈடு கட்டுவது?

வேண்டாம்! இனியும் நீயா நானா என்ற வாக்குவாதம் தேவையா என்று தீவிரமாக யோசித்தாள்… அவன் நடந்து கொண்ட முறைகளை ஒப்புமைப்படுத்தி பார்க்கும் போது அவனது மனமும் தெளிவாக புரிந்தது அவளுக்கு! ஆனால் அதை அவளாக உணர்வதற்கு ஐந்து ஆண்டுகள் தேவையாக இருந்திருக்கிறது…

மனம் வலித்தது!

“உனக்கு நம்பிக்கை வைப்பதற்கும் அதிக நேரம் தேவைப்படவில்லை… அந்த நம்பிக்கையை உடைத்து கொள்ளவும் அதிக நேரம் தேவைப்படவில்லை… ” அவனது குரல் காதருகில் ஒலித்தது!

கண்ணில் வழிந்த கண்ணீர் நெஞ்சை நனைத்தது!

“சாரி கௌதம்… நீ சொன்ன மாதிரி நான் உன் மீது நம்பிக்கையை வைத்திருக்க வேண்டுமோ? என்ன காரணம் என்று உன்னிடம் அமர்ந்து பேசியிருக்க வேண்டுமோ? உன்னுடைய காரியங்களுக்கு காரணங்கள் இருக்கிறதா என்று யோசித்திருக்க வேண்டுமோ?… உன்னுடைய விளக்கங்களை கேட்காமலே உன்னை குற்றவாளியாக்கி இத்தனை வருடங்களை வீணாக்கி இருக்கிறேன்… என்னை மன்னிப்பாயா?”

அவளையும் அறியாமல் தன்னையும் மீறி புலம்பினாள்… ஆனால் கேட்பதற்கு தான் அவளது கணவன் அங்கு இல்லையே!

கடலினில் மீனாக இருந்தவள் நான்

உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்

துடித்திருந்தேன் கரையினிலே

திரும்பிவிட்டேன் என் கடலிடமே!

ஒரு நாள் சிரித்தேன் மறுநாள் வெறுத்தேன்

உன்னை தான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே

மன்னிப்பாயா? மன்னிப்பாயா? மன்னிப்பாயா?

அவளது கண்ணீருக்கு காரணமான அவளது காதலனோ அவனது பிரியத்துக்குரிய மோஜிட்டோ காக்டெய்லையும் கூட அருந்துவதற்கு பிரியமில்லாமல் அதில் மிதந்து கொண்டிருந்த புதினா இலைகளை வெறித்து பார்த்து கொண்டிருந்தான்…

இதே மற்ற நேரமாக இருந்திருந்தால் மூன்று ஷாட்களாவது உள்ளே சென்றிருக்கக்கூடிய சாத்தியம் இருந்திருப்பதால் அந்த மிக்ஸாலஜிஸ்ட் அவனை விசித்திரமாக பார்த்தான்!

தன்னை மறக்குமளவு குடிப்பதற்காகத்தான் அவன் அங்கு வந்ததே!

ஆனால் எங்கு நோக்கினும் அவள் முகம் மட்டுமே!

காற்றில் கலந்திருந்த அவளது சுவாசம்… அவனை தீண்டிய அவளது வாசம்… அவனது வெப்பத்தை அதிகப்படுத்த… கொட்டி கொண்டிருந்த மழை பழைய நினைவுகளை கீறிவிட்டு தாபத்தை தூண்டி விட… தப்பித்து வந்ததே அவனுக்கு பெரும் பாரத்தை சுமப்பது போலிருந்தது!

சாட்டையாக சுழற்றி கொண்டிருந்த நினைவுகள் அவனது தலையை வலிக்க செய்து கொண்டிருந்தன…

தான் செய்த தவறுக்கு மன்னிப்பே இல்லையா?

தவறுதான்… மிகப்பெரிய தவறுதான்… !

காதலை பணயமாக வைத்து சூதாடியது தவறுதான்!

அதிலும் உயிருக்கு உயிராக நேசித்தவளை தன்னெஞ்சறிய பொய்யுரைத்து சூதாடியது மன்னிக்கவே முடியாத தவறுதான்… !

ஆனாலும் அதன் காரணம் என்னெவென்று அவள் ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டாமா?

மனம் ஆதங்கமாக கேள்வி எழுப்ப… அவனது மனசாட்சி நிமிர்ந்து அமர்ந்தது…

அடேய் முட்டாளே! அவளது பதினெட்டு வயதில் என்ன முதிர்ச்சி இருக்கக்கூடும் என்று நினைக்கிறாய்? அந்த வயதில் அவளை உன்னுடையவளாகவும் ஆக்கி கொண்டிருக்கிறாய்… அந்த நிலையில், முதிர்ச்சியற்ற மனநிலையில் நம்பிக்கை தளர்ந்து போன அப்பாவியின் பார்வையில் பார் என்று மனசாட்சி இடித்துரைத்தது!

அந்த மழை நாளில் நானாக நெருங்க நினைக்கவில்லை என்று ஆயிரம் முறை கூறிக்கொண்டிருக்கிறாயே… ஆனால் விலக நினைத்தாயா?

மனசாட்சியின் கேள்விக்கு விடையளிக்க முடியாமல் புதினாவை வைத்து கலக்கி கொண்டிருந்தான்…

விலக நினைக்கவே இல்லையே! ஒரு நொடியும் விட்டு விலகாமல் உயிரோடு உயிராக உறைந்து விட துடித்ததை மனசாட்சியிடம் மறைக்க முடியவில்லையே!

“சர்… டூ யூ நீட் சம் மோர் சோடா?”

“நோ தேங்க்ஸ்… ” மோஜிட்டோவை அங்கேயே வைத்து விட்டு எழுந்தவன் பில்லை செட்டில் செய்துவிட்டு வெளியே நடந்தான்…

உடலெங்கும் லேசான நடுக்கம் பரவிகொண்டிருந்தது…

மனம் முழுக்க குழப்பமும் சோகமும்!

“சர்… ” அவசரமாக அவனை நோக்கி ஓடி வந்தான் அந்த பார் அட்டண்டர்… எப்போதும் கோணலாக சிரித்து கொண்டு பிதற்றுபவன் தான்… அப்போதும் அவனது வழக்கமான பிதற்றலை எடுத்து விட்டான்…

“சர்… ஒரு அருமையான பீஸ் வந்திருக்கு… எக்ஸ்போர்ட் குவாலிட்டி… கேரளா மேட்… இந்த தடவையாவது ட்ரை பண்ணி பாருங்க சர்… ” நாலாக மடங்கி கொண்டு கௌதமிடம் அவன் கூற… அதை கேட்டவனுக்கோ அவனிருந்த மனநிலையில் சற்றும் புரியவில்லை… புரிந்தபோது அவனை கொல்லும் வெறி வந்தது… அந்த எரிச்சலை குரலில் காட்டியவன்,

“இன்னொரு தடவை என் கண் முன்னாடி வந்த அடிச்சே கொன்று விடுவேன்… ராஸ்கல்… கெட் ஆப் ப்ரம் திஸ் பிளேஸ்… ” அவனது ரவுத்திரத்தை கண்ட அந்த மனிதன் அவசரமாக நகர்ந்தான்… இருண்ட முகத்தோடு!

வானம் ஒருவாறாககொட்டி தீர்த்து முடித்திருந்தது… குளிர்ந்த காற்று உடலை தழுவி செல்ல… உள்ளிருந்த நடுக்கம் அதிகமானது!

யாருமற்ற அந்த சாலையில் நடந்தவன் மீது சிறு தூறல் விழ… நிமிர்ந்து வானை பார்த்தான்… நட்சத்திரங்களோ நிலவோ ஏதுமின்றி நிர்மலமாக இருந்தது…

எப்போது வேண்டுமானாலும் மீண்டும் மழை வலுக்கும் சாத்தியம் தெரிய… அந்த சிறு தூரலை ரசித்தபடியே அவனது காரை நோக்கி போனான்…

அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தவனுக்குள் ஆயிரம் கேள்விகள்…

‘உனது தந்தை தாய் என அனைத்து சொந்த பந்தங்களையும் மறந்து விடு கௌதம்… உன்னுடைய உலகம் என்பது நீயும் உனது மனைவியும் தானே?’

அவன் முன் அமர்ந்த மனசாட்சி கேள்விக்கணையை தொடுக்க… அவனையும் அறியாமல் தலையாட்டினான்…

‘இருவரில் முதலில் யார் தவறு செய்தது? நீதானே?’ என்று கேட்ட கேள்விக்கு அவனாலேயே பதில் கூற முடியவில்லை…

‘உன் தாய்க்காக காதலை தொலைத்தவன் நீதானே?’

‘கௌரவர் சபையில் திரௌபதியை வைத்து சூதாட தருமனுக்கே அருகதை இல்லாத போது ஆதிரையின் தூய்மையான அன்பை வைத்து சூதாட உனக்கு எப்படி மனம் வந்தது கௌதம்?’

‘மன்னித்து விடு என்ற வார்த்தை என்ன அவ்வளவு பெரியதா என்ன? அப்படி கேட்டுவிட்டால் எந்த விதத்தில் நீ குறைந்து விடுவாய்? நீயே விட்டு கொடுக்காத போது உன்னைவிட ஏழு வயது சிறியவள் ஆதிரை… அவள் எப்படி விட்டு கொடுத்து விடுவாள்? அதிலும் மனைவியிடம் மன்னிப்பை கேட்பது அவ்வளவு தவறா?’

மனசாட்சி சரமாரியாக கேள்வியை கேட்க… அழுத்தம் தாங்க முடியாமல் ஸ்டியரிங் வீலின் மீது சாய்ந்து கொண்டான் கௌதம்!

குற்ற உணர்வு வாட்டியது!

பட்டாம்பூச்சியாக திரிந்து கொண்டிருந்தவளை இரக்கமில்லாமல் கொட்டி கொட்டும் குளவியாக மாற்றியது தானே அல்லவா!

அழகான அந்த நாட்களை மீட்கும் வழி அறியாமல் தலையை பிடித்து கொண்டான்… மகனுக்காக என்ற சாக்கிட்டு அவளை இப்போது தன்னிடம் பிடித்து வைத்திருந்தாலும் உள்ளுக்குள் அவனுடைய அடிமனதின் தேவை அவனுடைய காதலி ஆயிற்றே!

தன்னுடைய ஊனாகி உயிராகி உயிருள் உறைந்து உருகி உருகி தன்னை காதலித்து தான் தொட்டால் மெழுகாய் கரைந்த அந்த ஆதிரை மீண்டும் தனக்கு கிடைப்பாளா?

“வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி… ” உன்னிக்கிருஷ்ணன் என்னவளே அடி என்னவளே என்று எப்எம்மில் உருகி கொண்டிருந்தார்…

“இது சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி… நான் வாழ்வதும் பிறை கொண்டு போவதும் உன் வார்த்தையில் உள்ளதடி… ”

ஏனோ அந்த பாடல் அவனது மனநிலையை பிரதிபலிப்பதாகவே தோன்றியது… அழுத்தமான மனநிலை சற்று மாற தன்னை மறந்து அந்த பாடல் வரிகளில் ஆழ்ந்தான்…

அவனது கண் முன் ஆதிரை தான் நடனமாடினாள்…

“என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா… எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா?”

முற்பகல் அவள் சதிராட, பிற்பகல் விதி சதியாட, இன்று வாழ்க்கை அந்தரத்தில் ஊசலாடி கொண்டிருந்ததை வேதனையுடன் நினைத்து பார்த்தான்…

இந்த வேதனைக்கு என்ன காரணம்?

இருவரும் மனம் விட்டு பேசினால் ஒருவேளை மாற்றம் இருக்குமென்று தோன்றியது… ஆனால் அப்படி பேசாமல் இப்படி ஓடி வந்துவிடுவதால் ஒன்றுமாகபோவதில்லை என்று மனசாட்சி சாடியது…

நீளமான மூச்சை அழுத்த இழுத்து வெளியே விட்டான்… மீண்டும் மழை தூர ஆரம்பித்து இருந்ததை காற்றில் கலந்து வியாபித்து இருந்த அந்த வாசம் உணர்த்த… வீட்டை நோக்கி காரை செலுத்தினான்… ஆதிரையின் முகத்தை உடனே கண்டே ஆக வேண்டும் போல தோன்றியது!

மணி இரண்டை கடந்திருக்க… சப்தமிடாமல் படியேறியவனின் மனதில் படபட பட்டாசு!

******

திடுமென நிகழும் விழிப்பில்

விடுபட்ட கனவை கோர்க்க பார்க்கிறேன்

கை சேரவே இல்லை அவளை போலவே!

வாய்விட்டு படிக்கும் போதே அவளது குரல் உடைய அந்த டைரியால் முகத்தை மூடி கொண்டு அழுகையில் கரைந்தாள் ஆதிரை… மகன் படுக்கையில் உறக்கத்தில் ஆழ்ந்திருக்க சிறு கேவலும் அவனை எழுப்பி விட்டு விடுமோ என்ற பயத்தில் இரண்டு கைகளாலும் வாயை இறுக்கமாக மூடிக்கொண்டாள்!

கண்களில் நீர் வழிந்து கொண்டே இருக்க… டைரியின் பக்கங்கள் மங்கலாக தெரிந்தது அவளது கண்ணீரால்!

கதவை திறக்கும் சப்தம் கேட்க… கண்ணீரை துடைத்து கொண்டு நிமிர்ந்து பார்த்தாள்!

கௌதம் நின்று கொண்டிருந்தான்… கைகளை கட்டி கொண்டு… அவளையே பார்த்தவாறு… அவளது கையில் இருந்த அவனது டைரியையும் பார்த்தவாறு!

படித்து விட்டாள் என்பது அவனுக்கு புரிந்தது…

அவனது கண்களில் சங்கடமான அதிர்ச்சி… அவன் இதை எதிர்பார்க்கவில்லை என்பதை அவள் உணர்ந்தாள்… மறைத்து வைக்க எண்ணிய பக்கங்கள் வெட்டவெளிச்சமானதில் வந்த சங்கடம்…

லேசாக செறுமி கொண்டவன்,

“இன்னும் தூங்கலையா?” எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் கேட்டவனை உற்று நோக்கினாள் ஆதிரை!

“நான் நிம்மதியா தூங்கி அஞ்சு வருஷமாகுது… ” அதை சொல்லும் போதே அவளது உதடுகள் நடுங்கியது… !

அவளை வெறித்து பார்த்தான் கௌதம்… அவள் அவனை நிமிர்ந்து பார்க்காமல் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள்… ! மெளனமாக அவளை பார்த்தவன்,

“என்னுடைய தூக்கமும் பறிபோய் அஞ்சு வருஷமாகுது ஆதி… ” கரகரத்த குரலில் கூறியவனை சட்டென நிமிர்ந்து பார்த்தாள்…

“அது எதுக்காக பறிபோக வேண்டும்? உங்களுக்கு தான் இருக்கவே இருக்கு சரக்கு… நீங்க தான் மொடா குடிகாரனாச்சே… அடிச்சுட்டு கவுந்துட்டா தூக்கம் வந்துடுமாமே… ”

அவளது குரலில் இருந்த நக்கலும் அவனது குடிப்பழக்கத்தின் மீதான கோபமும் பழைய ஆதிரையை நினைவுப்படுத்த… தன்னையும் மீறி எழுந்த சிரிப்பை அவனால் கட்டுபடுத்த முடியவில்லை… அதுவரை இருந்த மனநிலை மாறி வாய்விட்டு சிரித்தவனை உறுத்து விழித்தாள்…

“நான் என்ன ஜோக்கா சொன்னேன்? ” கடுகடுத்த குரலில் கூறியவள்… தனக்குள்ளாக “குடிகாரன்… ” முறைத்து கொண்டே திட்டினாள்!

“ஹே… என்ன? என்னை என்ன டாஸ்மாக்ல சரக்கு வாங்கி அடிக்கற ஆள்ன்னா நினைச்ச? கௌதம்… தி கிரேட் கௌதம்… ” சட்டை காலரை தூக்கி விட்டு கொண்டவனை பார்த்து…

“இந்த திமிருக்கு ஒன்றும் குறைச்சலில்லை… ” என்று உதட்டை சுளித்தவள், “டாஸ்மாக்ல வாங்கி அடிச்சாலும் உங்களை மாதிரி பைவ் ஸ்டார் ஹோட்டல் பார்ல டக்கீலாவ குடிச்சாலும் உள்ள போறது ஆல்கஹால் தான்… ”

அவள் உதட்டை சுளித்து கொண்டு கூறியதை ரசித்து பார்த்தவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை… மனம் வெகு வருடங்களுக்கு பிறகு இலகுவாக இருந்தது…

“ஹேய் என்னடி பேரெல்லாம் தெரிஞ்சு வெச்சுருக்க?” குறும்பாக ஆரம்பித்தவன்… குரலை தழைத்து கொண்டு.. “ஒரு வேளை லண்டன்ல மொடா குடிகாரியா இருந்தியோ?” என்று கண்ணடிக்க… அவளது முகம் சிவந்தது! அதை மறைக்க முயன்று வரவழைத்த கோபத்தோடு…

“ம்ம்ம்… ஆமா… வாங்க… நடுவீட்ல உட்கார்ந்து சேர்ந்து சரக்கடிக்கலாம்… ” கடுப்பாக கூற…

“வாவ்… நிஜமாவா சொல்ற? சூப்பர்… ” என்று சிரித்தவனை நிஜமாகவே முறைத்தாள்…

“ச்சே… நீங்கள்லாம் ஒரு… ” எரிச்சலாக கூற…. அவனது சிரிப்பு மேலும் பெரிதானது!

“ம்ம்ம்… பினிஷ் பண்ணு… ” புன்னகை முகமாகவே கூறியவனை சற்று ஆச்சரியமாகவே பார்த்தாள்… வெகு வருடங்கள் கழித்து இலகுவான மனநிலையில் இருவரும் சிரித்து பேச கூடும் என்று சத்தியம் செய்தாலும் நேற்று வரை அது சாத்தியம் இல்லாத ஒன்றாகவே இருந்தது… ஆனால் இப்போதைய மனநிலை அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது!

அவனுடைய மனம் புரிந்தாலும் அவளுடைய சில தடைகள் அகன்றாக வேண்டும் அவளுக்கு…

“நான் என்ன பினிஷ் பண்றது? எல்லாவற்றையும் நீங்க தான் பினிஷ் பண்ணிட்டீங்க!” மனத்தாங்கலுடன் அவள் கூற… அவனது முகம் இன்னதென்று கூற முடியாத உணர்வுகளை வெளிப்படுத்தியது… இத்தனை நாட்கள் பிரிவை தாங்க முடியாத வேதனை, அவள் தன்னை உணர முடியாத சோகம் , தன்னிலை குறித்தான கோபம் என ஒவ்வொரு உணர்வாக அவனை தாக்க… மூச்சை இழுத்து பிடித்து தன்னை சமநிலை படுத்தி கொண்டான்…

எப்படி இருந்தாலும் அவளிடம் தன்னை இனியாவது சரியாக வெளிப்படுத்தி கொள்ள வேண்டுமே!

“ஆதி… ” மென்மையாக அழைத்தவனை கண்களை விரித்து பார்த்தாள்… ஆச்சரியத்தால்! இத்தனை நாட்கள் எங்கே ஒளித்து வைத்திருந்தான் இந்த மென்மையை?

“வெறும் மன்னிப்பு என்ற வார்த்தை மட்டும் போதாது… … ஆதி… … ”

உறங்கி கொண்டிருந்த மகனை கண்களால் நிரப்பி கொண்டவன்…

“… நம்ம காதலை வைத்து நான் விளையாடி இருக்கவே கூடாது… அதுதான் நான் செய்த ஒரே தவறு… ”

அவள் மெளனமாக அவனை பார்த்தவாறு அமர்ந்திருக்க… அவன் எந்த தடையுமில்லாமல் தன் மனதை திறக்க ஆரம்பித்து இருந்தான்…

“அதிலும் உன் அம்மாவுக்கு புரியவைக்க வேண்டும் என்று நான் பேசிய சில வார்த்தைகள் எனக்கே மிகவும் கஷ்டமாக இருக்கிறது ஆதி… அவர்கள் என் அம்மாவை அவமானப்படுத்தினார்கள் என்பதற்காக நான் செய்தது சரியாகிவிடாது… ” வார்த்தைகளில் இருந்த வலி அவன் முகத்திலும் இருக்க… சோபாவில் அமர்ந்திருந்த ஆதிரை எழுந்து தயங்கியவாறு அவனருகே வந்தாள்…

“பேசியது என்று பார்த்தால் நானும் ஒன்றும் குறைவாக பேசிவிடவில்லை கௌதம்… அப்போது எனது முதிர்ச்சியும் மிகவும் குறைவு… ” தயக்கத்தோடு அவள் கூறிய வார்த்தைகள் அவனது காதில் தேனாக பாய்ந்தது…

“இல்லடா… நீ சின்ன பெண்ணென்று நானாவது சில விஷயங்களில் விட்டு கொடுத்திருக்க வேண்டும்… அப்போதே விஷயத்தை சரி செய்திருந்தால் எவ்வளவோ நான் இழந்திருக்க வேண்டியிருக்காது… என் மகனது பிறப்பை நான் அறியாததை விட எனக்கான தண்டனை வேறு இருக்க முடியாது ஆதி!”

கண்கள் கலங்கி அவன் கூறியதை கேட்கும் போது உண்மையில் ஆதிரை மனம் சந்தோஷப்பட்டிருக்க வேண்டும்… ஆனால் அவளது மனதோ விம்மியது!

“கடவுளே! அது உங்களுக்கு மட்டுமா தண்டனை? அப்போது அருகில் நீங்கள் இருக்கவில்லையே என்பதை நினைத்து நான் எவ்வளவு ஏங்கியிருக்கிறேன் தெரியுமா? உங்களுக்காக ஏங்குகிறேன் என்பதை நினைத்து என்னை நானே வெறுத்து தான் பிருத்வி வயிற்றில் இருந்த போது ஹாஸ்பிடலில் கூட நான் பார்க்கவில்லை… நீங்க வேண்டாம் என்று பேசி விட்டேனே தவிர என்னால்… … என்னால்… … ஒரு நொடி கூட உங்களை மறக்க முடியவில்லை கௌதம்… … ” கால்களை மடக்கி அமர்ந்தவள் முகத்தை கைகளால் மூடி கொண்டு அழ ஆரம்பிக்க… பதறிய கௌதம் அவனும் மடங்கி அமர்ந்து அவளது கைகளை பிடித்து கொண்டான்…

“ஹேய் போதும்டா… அழாதே!… உன்னை மட்டும் என்னால் மறக்க முடிந்ததா என்ன? நீ இல்லாத இந்த வாழ்க்கை என்பது எனக்கு நரகம்… உன்னை மறக்க வேண்டும் என்ற நினைப்பே எனக்கு இறந்து விடுவதை போலிருந்தது என்பதை புரிந்து கொள் ஆதி… ” அழுது கொண்டிருந்த அவளது கைகள் இரண்டையும் பிடித்து கொண்டு அவனும் கண்கள் கலங்கி கொண்டு கூற…

நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் மழை!

அவனது கையை பிடித்து கொண்டு கதறி தீர்த்தாள்… அவள் அழுவதை பார்த்தவனாலும் தன்னை கட்டுபடுத்தி கொள்ள முடியவில்லை… கண்கள் கலங்கியது…

“சாரி கௌதம்… ” இடைவிடாமல் ஜெபம் போல ஜெபித்து கொண்டிருந்தவளை எப்படி நிறுத்துவது என்று அவனுக்கு புரியவில்லை…

“ஹேய் வேண்டாம்மா… இந்த அழுகையெல்லாம் இனி வேண்டாம் கண்ணம்மா… ப்ளீஸ்… ” பிள்ளை எழுந்து கொள்வானோ என்று தணிந்த குரலிலேயே அவன் கூறி கொண்டிருக்க… அவளது அழுகை மேலும் அதிகமானது!

“ஆதி… ”

“ஆதி… பிள்ளை முழிச்சுக்க போறான்டா… ” அப்போதாவது அவளது அழுகை குறையுமென்று அவன் பார்க்க… அவளோ அதையும் பற்றி கவலைப்படாமல் அழுது கொண்டிருக்க… ஒரு கணம் தயங்கியவன் அவளது கைகளை விலக்கி முகத்தை மென்மையாக பற்றினான்…

கண்ணீர் வழிந்த அந்த கண்களோடு தன் கண்ணை கலந்தவன் அவளது உதடுகளை தனதாக்கி கொண்டான்…

முதலில் மென்மையாக, பிறகு நெருக்கமாக அதன் பின் வன்மையாக என்று தொடர்ந்தது அந்த இதழணைப்பு!

ஐந்து வருட பிரிவையும் ஒரு நிமிடத்தில் கடந்து விட எண்ணிய வேகம் அவனிடம்! அவனுடைய வேகத்தை தடுக்கவியலாமல் அவனுள் மூழ்கினாள் அவள்!

அவளை சமாதானப்படுத்தவென முத்த யுத்தத்தை ஆரம்பித்தவனால் அதை சற்றும் நிறுத்த இயலாமல் முயலாமல் மேலும் மேலும் முன்னேறி கொண்டிருந்தான்…

காற்றாற்று வெள்ளத்தை சமாளிக்க முடியாமல் மூச்சுக்கு போராடியவளை அள்ளியெடுத்து அருகிலிருந்த சோபாவில் அமர வைத்த கௌதம்,ஒருவாறாக அவன் தன்னை மீட்டு கொண்டிருக்க… அவளோ மீள முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்… இருவருக்குள்ளும் உணர்வுகள் கொந்தளித்து கொண்டு தானிருந்தது… ஆனாலும் சில விஷயங்களை தெளிவுப்படுதாமல் மீண்டும் அவளை சுழலில் சிக்க வைக்க அவன் விருப்பப்படவில்லை…

அவளருகே மிகவும் நெருக்கமாக அமர்ந்து கொண்டு அவளது கையை தனக்குள் எடுத்து கொண்டவன், கண்ணிமைக்காமல் அவளை பார்த்து கொண்டிருக்க , தலை குனிந்து அமர்ந்திருந்த அவளோ அவனது பார்வையை உணர்ந்தாலும் நிமிர்ந்து அவனது முகத்தை பார்க்க முடியவில்லை!

“ஸ்வீட் கிஸ் தான் கேள்விப்பட்டு இருக்கேன்… இப்போதான் சால்டி கிஸ் டேஸ்ட் பண்றேன்டி… ” குறும்பு கண்ணனாக அவன் கள்ள சிரிப்போடு அவன் கூற… வெட்கசிரிப்போடு நிமிர்ந்தவள் அவனை பார்த்து,

“உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க வேண்டும் இல்லையா?” கிண்டலாக கூற… அவன் சிரித்து கொண்டே…

“அடிப்பாவி… அதை இது வரைக்கும் நான் சாப்பாட்டில் மட்டும் தான் என்று நினைத்திருந்தேன்… ” அவனும் கேலி பேச…

“அந்த அளவு அப்பாவி நீங்கன்னு நான் நம்ப வேண்டும் இல்லையா?” அவளது இதழில் விரிந்திருந்த கள்ளத்தனம் கண்டிப்பாக அதை அவள் நம்பவே முடியாது என்பதை கூற… அதை கண்டுகொள்ளாத கௌதமின் முகத்தில் முறுவல்!

“பின்ன… நாங்கள்லாம் அப்படி அப்பாவியாவே வளர்ந்துட்டோம் ஆதி செல்லம்… ”

“ஆஹா… இதை பிறந்த குழந்தை கூட நம்பாது… ” சிரிப்போடு கூற…

“எதை?”

“நீங்க அப்பாவின்னா தான்… ”

“உலகம் உண்மைய எப்போ நம்புது ஆதி?” போலியாக அலுத்து கொண்டவனை பார்த்து சிரித்தவள்…

“ஆமா… இந்த உலகத்திலேயே இருக்கிற ஒரே நல்லவன் நீங்க மட்டும் தான்… சரியா?”

“பின்ன… யூ கேட்ச் மை பாயின்ட்… ” என்று கண்ணை சிமிட்ட… அவனை வலுகட்டாயமாக தள்ளிவிட்டவள்,

“ஆமா… ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்… ” என்று நீட்டி முழக்கி விட்டு, “குடிச்சுட்டு வந்து தான் இவ்வளவு நல்லவங்களாகிட்டீங்களா?” கடுப்பாக அவள் கேட்க…

“அது இப்போதான் ஞாபகத்துக்கு வருகிறதா செல்லகுட்டி?” அவளை மீண்டும் தன் கைவளைவில் வைத்து கொள்ள அவளை இழுக்க முயல , அதற்கு இடம் கொடுக்காமல் அவனிடமிருந்து தப்பி அவள் எழுந்து கொண்டு,

“மரியாதையா சொல்லுங்க… குடிச்சுதானே இருக்கீங்க?”

“ஏன்டி இவ்வளவு நம்பிக்கை என் மேல?”

“பின்ன… நீங்கள்லாம் சுயநினைவோட இப்படி பேசற ஆளா? எப்போ பார்த்தாலும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஒரு மூஞ்சி… அதுவும் சரக்கு உள்ள போனாத்தான் உண்மைய சொல்லுவாங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேனே… ” வெகு புத்திசாலியாக பதில் கூறியவளை பார்த்து வாய் விட்டு சிரித்தான் கௌதம்.

“ச்சே… என் பொண்டாட்டிக்கு எம்புட்டு அறிவுடா… ” நக்கலாக கூறியவன்… “ம்ம்ம்ம்… இஞ்சி தின்ன குரங்கு… இதற்கு அப்புறமா வசூல் செய்துக்கறேன்… ஆனாலும் உனக்கு இவ்வளவு அறிவு ஆகாதுடி… நீ ஒரு அறிவு வாளி… ” என்று அவனது கேலி பேச்சை தொடர,

“என்ன லொள்ளா… ” முறைத்தவளின் கை பிடித்து இழுத்தவன் தன் மேல் சாற்றி கொண்டு…

“இல்லடி ஜொள்ளு… ” பின்னங்கழுத்தில் மீசையை வைத்து உராய்ந்து கொண்டே கூற…

“பேச்சை மாத்தாதீங்க மாமா… குடிச்சீங்களா இல்லையா?” வெகு வருடங்கள் கழித்தான அவளது மாமாவென்ற அழைப்பு அவனது மனதை தீண்ட…

“குடிச்சுட்டு என் மகன் முன்னாடி நான் வர மாட்டேன் ஆதி… ” இதுவரை இருந்த விளையாட்டுத்தனம் காணாமல் போய் பொறுப்பாக அவன் கூற… அது அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும் முகம் சுணங்கியது…

“ஆமா… எல்லாமே மகனுக்காக… மகன்..மகன்… மகன்… நான் இல்லாமத்தான் அவன் வந்துட்டானா?” தனக்குள்ளாக அவள் முனகி கொள்ள… அது அவன் காதிலும் விழுந்து வைக்க… வாய் விட்டு சிரித்தான் கௌதம்..

சிறு பிள்ளையாக முகம் சுணங்கி தன் மேல் அமர்ந்து இருந்தவளை இறுக்கி கட்டிக்கொண்டு,

“ஏன்டி உன் மகன் கூடவா போட்டி போடுவ?”

“ஆமா… போட்டி போடுவேன் தான்… உங்களுக்கு அவன் இருந்தா போதும்தானே… பின்ன நான் எதற்கு?” அவன் மேலிருந்து எழுந்து கொள்ள முயன்றவளை இறுக்கி பிடித்து கொண்டான்…

“என் மகன் எனக்கு முக்கியம் ஆதி… ஆனால் அவனை சாக்காக வைத்துத்தானே உன்னை என்னிடம் வரவைக்க முடிந்தது… அதை கூடவா நீ உணரவில்லை?” காது மடல்களை சீண்டி கொண்டே அவன் கேட்க… ஆதிரை உடல் சிலிர்க்க…

“உங்களை பற்றி என்னதான் எனக்கு தெரியும் மாமா? ஒன்றுமே இல்லை… ” அவள் குரலில் இருந்த ஆற்றாமையை உணர்ந்தவன்,

“நாம் முழுவதுமாக எல்லாவற்றையும் பேசிவிடலாம் ஆதி… இதற்கு பின் எந்தவிதமான சந்தேகமும் உனக்கு இருக்க கூடாது… முக்கியமாக என்னுடைய காதலை பற்றி… ” என்று இடைவெளி விட்டவன்… அவளது முகத்தை கையில் ஏந்தி நெற்றியில் முத்தமிட்டு,

“ஒரு நாள் என்றுமில்லாத திருநாளாக கோவிலுக்கு போயிருந்தேன்டா… அங்கு பொன் மஞ்சள் நிறத்தில் சேலையுடுத்தி தேவதை போல ஒரு பெண்! முதன் முதலில் சேலை கட்டியிருப்பாள் போல… அவள் இடுப்பில் அது நிற்கவே இல்லை… கடித்து தின்ன வேண்டும் போல இருந்தது அவளது பிங்க் நிற கன்னங்கள்… அந்த முகத்தில் அவ்வளவு அப்பாவித்தனம்… என்னை ஒரே நாளில் கிறுக்கு பிடிக்க வைத்து விட்டாள் அந்த அழகுப்பெண்… ”

அன்றைய நாளை ரசித்து ருசித்து கௌதம் கூறிக்கொண்டு போக.. இதென்ன புதிய கதை என்று குழப்பமாக பார்த்தாள் ஆதிரை! அவனது டைரியை படித்தபோது இந்த விவரங்கள் எல்லாம் இல்லையே… ஒருவேளை அது வேறு பெண்ணோ?

அவளை பார்த்து மென்மையாக புன்னகைத்தவன்,

“அன்றிலிருந்து அவளை என்னால் மறக்கவே முடியலை ஆதி… இங்கே இருந்து கொண்டு என்னை இம்சை செய்ய துவங்கி விட்டாள்… ” அவனது இதயத்தை காட்டி கூற… அவளது முகத்தில் குழப்ப ரேகை!

“எவ்வளவோ முயன்று பார்த்தேன்… மறக்கவே முடியவில்லை… அவளை பார்ப்பதற்காகவே அந்த கோவிலுக்கு மறுபடியும் மறுபடியும் என்று அத்தனை நாட்கள் போயிருக்கிறேன்… ” என்று நிறுத்தியவன் அந்த நாட்களின் இனிமையில் தன்னை தொலைத்து கொண்டிருந்தான்…

“ஒருவாறாக மீண்டும் ஒருநாள் அவளை பார்த்தேன் ஆதி… பாவாடை தாவணியில் மீண்டும் தேவதையாக வந்தாள்… ஆனால் அவளுக்கு பின் வந்து கொண்டிருந்தவரை பார்த்தவுடன் எனக்குள்ளே நிலநடுக்கமே வந்துவிட்டது!… ” சற்று வலியுடன் அவன் நிறுத்த…

கலங்கிய முகத்தோடு ஆதிரை அவனை பார்த்தாள்… அவன் தன்னைத்தான் கூறிக்கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்தவளுக்கு மனமெங்கும் பூமழை!

“ஆமாம்… உன்னுடைய அம்மாவை உன்னருகில் பார்த்தவுடனேயே புரிந்து விட்டது… என்னுடைய ஆதிரையைதான் நான் வளைத்து வளைத்து ரசித்து கொண்டிருக்கிறேன் என்பதையும் அவளை என்னால் விட்டுதரவோ மறக்கவோ முடியவே முடியாது என்பதையும்… ” என்று அவன் நிறுத்த… அவளது கண்களில் கண்ணீர்…

“கௌதம்… ”உதடுகள் நடுங்க அவனை அழைத்தவளால் அதற்கு மேல் பேசவே முடியவில்லை… மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தாள்… தான் விரட்டி விரட்டி காதலை சொன்ன காலத்திலும் தன்னை சற்றும் கண்டுகொள்ளாமல் செல்கிறானே என்று மனதுக்குள் எவ்வளவோ திட்டியிருக்கிறாள்!

அதன் பின்னரோ அவன் தன்னை நடித்து ஏமாற்றிவிட்டான் என்ற கோபத்தில் எவ்வளவோ வார்த்தைகளை கூட விட்டிருக்கிறாள்… ஆனால் அந்த கோபத்துக்கு எல்லாம் அடிப்படை காரணமே ஆட்டம் கண்டுகொண்டிருந்தது இப்போது அவன் கூறி கொண்டிருக்கின்ற உண்மையால்!

“ஆனால் உன்னுடைய அம்மாவை பார்த்தபோது முதலில் எனக்கு சற்று சந்தேகம் வந்தது… எப்படியும் அவர் என்னை ஏற்க போவதில்லை என்பது திண்ணம்… அதனால் முதலில் நீ என்னை காதலிக்க வேண்டும் என்று நினைத்தேன்… இல்லை… உண்மையை சொல்வதானால் திட்டமிட்டேன் ஆதி… ”

அவளை பார்க்காமல் கசப்பான உண்மைகளை கூற ஆரம்பித்தான்… அவள் மெளனமாக கேட்க ஆரம்பித்தாள்… எந்த வகையான உண்மையாக இருந்தாலும் பேசி முடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில்!

“அப்போதும் கூட நீ எனக்காக உறுதியாக நிற்க வேண்டும் என்றுதான் நினைத்தேனே தவிர உன்னை வேறு தவறான வழியில் யூஸ் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவே இல்லை… இது சத்தியமான உண்மை… ” அவனது குரலில் இருந்த உறுதியும் உண்மையையும் தான்டி அந்த மழை நாளின் நிகழ்வுக்கு அவனை மட்டுமே காரணமாகவும் நினைக்க முடியாதே! காரியங்களின் மையப்புள்ளி இருவருமாக இருக்கும் போது அவன் ஒருவனை மட்டும் குற்றம் சாட்டுதல் என்பது ஒரு பக்க தீர்ப்பாகாதா?

ஆனால் அவன் பேசிய பேச்சுக்கள்?

அவளை கோவிலுக்கு அனுப்பி வைத்து விட்டு அவனது தாயாரிடமும் மற்றவர்களிடமும் அவன் பேசிய வார்த்தைகளல்லவா உறுத்தி கொண்டு இருந்தது…

“ஆனாலும் நிகழ்ந்தவற்றுக்கு நான் வேறு யாரையுமே பொறுப்பாக்க முடியாது ஆதி… நீ சிறு பெண் அப்போது… நானாவது சற்று கட்டுப்பாடாக இருந்திருக்க வேண்டும்… ஆனால் உன்னை எப்போதுமே மனதுக்கு மிகவும் நெருக்கமாக மனைவியாகவே பார்த்த எனக்கு அது அப்போது தவறாகவே நினைக்க தோன்றவில்லை… எப்படியும் திருமணம் முடிந்து விடும் என்ற தைரியம்… நீ உன் அம்மாவிடம் எப்படியும் சம்மதம் வாங்கி விடுவாய் என்ற நம்பிக்கை… ” என்றவன் சற்று இடைவெளி விட்டு அவளை பார்க்க… அவளோ சில பல அதிர்வுகளில் இருந்து வெளியே வரவே இல்லை…

“ஆனால் நாம் வைத்த நம்பிக்கை என்பதில் சற்று சுயநலம் கலக்கும் போது எப்படியெல்லாம் விளைவுகள் இருக்கும் என்று அப்போதுதான் தெரிந்து கொண்டேன் ஆதி… ” கூறும் போதே குரல் உடைய… தன்னருகில் அமர்ந்திருந்த அவளது கைகளை நெருக்கமாக பிணைத்து கொண்டான்…

அவளுக்குள்ளும் கலக்கம்!

“என்னுடைய தாயாருக்கு அங்கீகாரத்தை பெற்று தர வேண்டும் என்பதும் என்னுடைய வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்பதும் என்னுடைய போராட்டம் தான்… என்னுடைய பதினாலாவது வயதில் இருந்து இதற்காக போராடி கொண்டிருக்கிறேன் என்பதும் உண்மைதான்… ஆனால் அதில் உன்னை இழுத்து விட்டது மிகப்பெரிய தவறு!” அவனுடைய கடினமான குரல் அவனுடைய மனதை கூற… அந்த நிலையில் எப்படி அவனை சமாதானப்படுத்துவது என்பதும் தெரியாமல் அவன் முழுவதுமாக கூறி முடிக்கட்டும் என்றுமெளனமாக இருந்தாள்.

“இத்தனை நாட்களாக தந்தையென்று எண்ணி அவரிடம் உயிரை வைத்து பழகிய பின் அவரை வேறொருவராக பார்ப்பது எப்படிப்பட்ட கொடுமை தெரியுமா ஆதி?”

“அவர் ஆசையாக வாங்கி கொடுத்தாக எண்ணியிருந்த டுக்காட்டியை ஒரே நாளில் அவமானத்தின் நினைவு சின்னமாக மாற்றி என்னை நடுத்தெருவில் அனாதையாக நிறுத்திய கதை உனக்கு சொன்னால் புரியுமா?”

“இதை அனைத்தையும் விட என்னை பெற்ற தாயை, அதிலும் அவரது மூத்த மகனாக நான் இருக்கும் போது , வேறு பெயரிட்டு அவமானப்படுத்தி கொண்டே இருந்தது எத்தகைய கொடுமையென்று தெரியுமா? அதிலும் நாங்கள் எதிர்பார்த்தது என்ன? அவருடைய பணத்தையா? இல்லையே! அவருக்கு ஈடாக இல்லையென்றாலும் என்னுடைய தாய் வழியில் ஒன்றும் குறைவான பணம் இல்லையே?”

“எதற்காக என்னுடைய தாய் இப்படி தகைந்து போயிருக்க வேண்டும்? அத்தனை அவமானங்களையும் சகித்து கொண்டு இருக்க வேண்டும்? அதிலும் அவர் எவ்வளவு புகழ் பெற்ற பாடகராக இருந்தார் என்பது உனக்கு தெரியுமா? அவரது குரலுக்கு ஈடாக எதையுமே கொடுக்க முடியாது என்பது அத்தனை பேரும் அறிந்த உண்மை… ஆனாலும் எனது தந்தைக்காக அத்தனையும் பொறுத்தார்… விதியாடிய சதியையும் விதியின் பெயரால் மற்றவர் ஆடிய சதிராட்டத்தையும் பொறுத்து கொண்டு இருந்தார்… காரணம் என்னவென்று தெரியுமா?”

“அந்த ஒற்றை சொல்… காதல்!” என்றவன் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மெளனமாக… அதை கேட்டு கொண்டிருந்தவளின் கண்களில் கண்ணீர்…

“அந்த காதல் தந்த நம்பிக்கை தான் அவர்களை என்னை சுமக்க வைத்தது ஆதி… ஆனால் அந்த நம்பிக்கை ஆட்டம் கண்டுவிட்ட போதும் என்னை அவர்கள் மறுத்துவிடவில்லை… எனக்காக நான் தந்தையென்று அழைக்க அவர் வேண்டும் என்பதற்காக தன்னுடைய சுயமரியாதையை விட்டு கொடுத்தார்… ”

“எனக்காக எனக்காக என்று அவரது வாழ்கையில் ஒவ்வொன்றையும் விட்டு கொடுக்க ஆரம்பித்தவருக்கு வாழ்க்கை பறிபோன பின், தன்னுடைய நிலையென்ன என்று மற்றவர் வந்து உணர்த்திய பின் தான், தன்னுடைய உண்மையான நிலையே புரிய ஆரம்பித்தது… அப்போது மனதளவில் இறந்து போனவர் தான்… மீண்டு வரவே இல்லை… பாடுவதையும் விட்டு விட்டார்… ”

“அதன் பின் மொத்தமாக ஒரு நாள் தந்தையே வேண்டாமென்று வந்தேன்… அதன் பின் என் தந்தையை அவர் திரும்பி பார்க்கவும் இல்லை… எனக்காக என்னுடைய சுயமரியாதைக்காக அப்போதும் அவர் விட்டு கொடுத்து விட்டார்… இப்போது சொல்… அவருக்கு நான் அவருடைய மரியாதையை மீட்டு கொடுக்க நினைத்தது தவறா?”

ஆதிரை கண்களில் வழிந்த கண்ணீரோடு இல்லையென்று தலையாட்ட…

“ஆனால் இந்த சிக்கல்களில் அப்பாவியான உன்னை இழுத்து விட்டது தவறு ஆதி… எனது தந்தையை போலவே நானும் ஒரு சந்தர்ப்பவாதியாக உன்னால் அடையாளம் காணப்பெற்றது என்னுடைய சாபம்… மிகப்பெரிய சாபம்… ”

வலியோடு அவன் கூறிய வார்த்தைகளை உள்வாங்கியவளுக்கு மனதினுள் அதே வலி… வேதனை! இல்லை நீயெனதின்னுயிரடா என்று கத்த தோன்றியது!

“ஆனால் என்னுடைய காதல் பொய் கிடையாது… நம்முடைய காதலில் பொய் கிடையவே கிடையாது! உன்னை உயிருக்கு உயிராக நான் காதலித்தது காதலித்து கொண்டிருப்பதும் உண்மைடா… சிலபல ஈகோவினால் நீ மறுத்தபோது நானாக எப்படி உன்னை சமாதானப்படுத்துவேன் என்று நினைத்திருக்கலாம்… ஆனால் நீயில்லாத என்னுடைய வாழ்க்கை பாலைவனம் கண்ணம்மா… ”

“கௌதம்… ” கன்னங்களில் கண்ணீர் வரைந்த கோலத்தை அவன் தன் உதடுகளால் துடைத்து கொண்டிருக்க… அவனது கழுத்தை கட்டி கொண்டு மேலும் கரைந்தாள்!

“அதிலும் பிருத்வியை பற்றி தெரிந்த போது எனக்கு வாழ்வே அஸ்தமித்து விட்டது போலத்தான் தோன்றியது… அதிலும் அவன் என்னை போலவே தந்தைக்காக ஏங்கி கொண்டு இருக்கிறான் என்று தெரிந்த போது என்னை நானே மிக மிக கீழ்த்தரமாக வெறுத்து விட்டேன் ஆதி… என் தந்தை செய்த தவறை , அவர் என் தாய்க்கு செய்த கொடுமையை நானும் செய்து விட்டேனே என்று எண்ணி நான் துடித்த துடிப்பெல்லாம் எனது மனசாட்சி மட்டுமே அறிந்த உண்மை… ”

“அவனுக்காக என்னுடைய உயிரையே கொடுப்பேன் எனும் போது கேவலம் என்னுடைய ஈகோதான் பெரியதா? கிடையாதுடா… அதிலும் பிருத்வியின் ஆரோக்கியத்தையும் பேண வேண்டியது எனது கைகளில்தான் இருக்கிறது என்ற நிலையில் எனக்கு வேறு ஒன்றுமே தோன்றவில்லை… எனது குடும்பம் எனக்கு திரும்ப கிடைத்தால் போதுமென்றுதான் நினைத்தேன்… ஆனால் அதை முன்னெடுக்க ஒருவன் தேவைப்பட்டான்… ”

இடைவெளி விட்டவனை கண்ணீரில் கரைந்தவாறே பார்த்தாள்…

“வருண்… ”

“பிருத்விதான் எங்கள் இருவரையுமே மாற்றியது… இருவரின் ஈகோ சண்டையையும் முடிவுக்கு கொண்டு வந்ததும் பிருத்விதான்… ஆனால் முதலில் சுதார்த்து கொண்டது அவன்… ”

“ஒரு நாள் மொத்தமாக அந்த ஈகோவை விட்டுவிட்டு அவன் என்னை பள்ளியில் இருந்து லாங் டிரைவ் அழைத்து சென்றான்… மனம் விட்டு பேசினோம் ஆதி… நிறைய விஷயங்களை அவனும் உள்வாங்கி கொண்டான்… நிறைய எனக்கும் புரிய வைத்தான்… உடன் பிறக்கவில்லை என்றாலும் அவன் என் தம்பியல்லவா! தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பது எவ்வளவு உண்மை!”

வருணை பற்றிய நினைவில் அவனது முகம் மென்மையாக…

“ஆனால் அப்போது எப்படியாவது சௌமினியின் வாழ்கையை மீட்டு தந்தேயாக வேண்டும் என்ற நிலையில் நானிருந்தேன் ஆதி… அப்போதைய அவனது டீலையும் கூட ஒரு வின் வின் டீலாகத்தான் பார்த்தேன்… ஆனால் இப்போது உணர்கிறேன்… உண்மையான நட்பின் மதிப்பை! அந்த வகையில் வருண் , சௌமினி என்று நான் கொடுத்து வைத்திருக்கிறேன்டா… இன்னும் இரண்டு வாரத்தில் அவர்கள் திருமணமல்லவா… கலக்க வேண்டும்… ”

உணர்ந்து கூறி புன்னகைத்தவனை பார்க்கும் போது மனம் வெவ்வேறு உணர்வுகளின் பால் கொந்தளித்து கொண்டிருந்தது… இவனுடைய இந்த தவிப்புகளை போராட்டங்களை எல்லாம் தான் உணரவே இல்லையே! அதற்கு மருந்தாக தானில்லையென்றாலும் முள்ளாக குத்தி கொண்டல்லவா இருந்திருக்கோம் என்று எண்ணியபோது அவளுடைய மனதில் வலி!

“உங்க அளவுக்கு நான் கஷ்டப்பட்டதில்லை கௌதம்… மிகவும் எளிய வாழ்க்கை… கேட்டது கிடைத்து விடும்… உங்களை பார்க்கும் வரை விளையாட்டுத்தனமாக சுற்றி கொண்டிருப்பேன்… உங்களை மீண்டும் என்னுடைய கல்லூரியில் பார்த்தபோது மனதுக்குள் மழை! உடனே காதலென்று சொல்ல முடியாது… ஆனால் நீங்க என்னை கட்டாயமாக தள்ளி வைத்த போது உங்களோடு பேசியாக வேண்டும் என்பது போல சேலஞ்… ” என்று நிறுத்த… மெலிதாக புன்னகைத்தவன்,

“அது உன்னுடைய வயது கோளாறு… எப்படியும் உன்னை கரெக்ட் செய்து விடலாம் என்ற நம்பிக்கை வீண் போகவில்லை… ஆனால் முதல் நாளே கண்டுபிடித்து விடுவாய் என்று நான் நினைக்கவில்லை… ” குறும்பு கூத்தாடியது அவனது விழிகளில்!

“நான் என்பதை நீ அறிய கூடாது என்று நினைத்தேன்… ஆனால் அதை எடுத்தவுடனே காலி செய்துவிட்டாய்… ” அதுவரை இருந்த இறுக்கமான மனநிலை மாறி சிரித்து கொண்டே கூற… அவனது முதுகில் படாரென்று ஒரு அடியை வைத்தாள் ஆதி!

“சிறு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது ஆனால் காபி ஷாப்பில் சௌமினி அக்காவோடு பார்த்தபோது நீங்க தான் என்பது உறுதியாகி விட்டதே… ” என்று சிரித்தவள்…

“ஆனால் உன்னுடைய தைரியம் யாருக்கு வரும்டி? என்னுடைய கேப்பசினோவை முழுங்கி விட்டு என்னமாய் டெரராக லுக் கொடுத்துவிட்டு போனாய்?” என்று வாய் விட்டு சிரிக்க… அவனை செல்லமாக முறைத்து விட்டு,

“என்ன செய்வது? டெரர் லுக்கில் இருந்த ஒரு மங்கியை நான் பிராக்கட் செய்ய நினைத்தேன்… ஆனால் அந்த மங்கி போட்ட பிராக்கட் அதுவென்று இப்போதானே தெரிகிறது… ” குறும்பாக கூறியவள் நறுக்கென்று அவனது கன்னத்தை கடித்து வைக்க…

“ஆஆ… ஐயோ… ஏன்டி ராட்சசி… இப்படியா கடிச்சு வைப்ப?” கன்னத்தை தடவியவாறே கேட்க…

“பின்ன… என்னை எப்படியும் கரெக்ட் செய்துவிடலாம் என்று நீ செய்த லொள்ளுக்கு இந்த கடி கூட இல்லைன்னா எப்படி மாமா?” ஹஸ்கி வாய்ஸில் கலாய்க்க…

“கண்டிப்பா… ஆனா இதை நானும் பாலோ செய்வேன்… அப்புறம் சேதாரத்துக்கு நான் பொறுப்பு கிடையாதுடி… ” தன்னோடு இறுக்கி அணைத்து கொண்டு அவளது கண்களோடு கலந்தவனின் பார்வையில் இருந்த தாபமும் வார்த்தையில் இருந்த மயக்கமும் ஆதிரையை கிறக்க… பிருத்வியை அவசரமாக பார்த்துவிட்டு…

“பிருத்வி முழிச்சுக்க போறான் மாமா… ”

“என் மகன் மட்டுமில்லடி… ஊரே தான் முழிச்சுக்க போகுது… ” என்று சிரித்தவன்… கடிகாரத்தை காட்டி…

“மணிய பாரு… ” என்று சிரிக்க…

“ஐயோ மணி ஆறு… ” வாரி சுருட்டி கொண்டு எழுந்தவள்… “அச்சோ… நைட் நாம தூங்கவே இல்லை… ” என்று தலை மேல் கை வைக்க… அவனோ மனம் விட்டு சிரித்தான்…

“சரி இனிமே தூங்கி எழுந்துக்கோ… ” என்று கூறியவாறே எழ…

“ஹும்ம்… நீங்க வேற மாமா… நான் இப்போ வேலை செய்யற ஆபீஸ்ல ஒரு சிம்பன்சி குரங்கு இருக்கு… கொஞ்சம் லேட்டா போனாலும் உர்ருன்னு கடிச்சு வைக்கும்… அதுக்காகத்தான் யோசிக்கறேன்… ” சிரிக்காமல் கூறியவளின் இதழோரம் குறும்பு வழிய…

“அடிப்பாவி… நான் உனக்கு சிம்பன்சி குரங்கா… ” அவளை பிடிக்க வந்தவனிடமிருந்து தப்பி அழகு காட்டி விட்டு ஓட… விரட்டி பிடித்தவனின் கைகளில் பாந்தமாக பொருந்தி கொண்டாள் அவனது மனையாள்! இறுக்கமாக அணைத்து விடுவித்தவன் குளியலறைக்கு விரைந்தான்…

“சீக்கிரம் கிளம்பு ஆதி… இன்னைக்கு பயங்கர பிஸி… எக்கச்சக்க வேலை இருக்கு… டைரக்டர்ஸ் மீட்டிங் வேற… ” தீவிர மனோபாவத்துக்கு வந்துவிட்டவன் அவளையும் விரட்ட… அவள் ஒன்றும் புரியாமல் அவனை பார்த்தாள்… இதை அவன் நேற்று கூறவில்லையே… !

“டைரக்டர்ஸ் மீட்டிங்கா? இது எப்போ?” சற்று சீரியசாகவே அவள் கேட்க,

“என்ன ஆதி சொல்ற? இன்னைக்கு டைரக்டர்ஸ் மீட்டிங் இருக்கே… உனக்கு தெரியாதா?” பிரஷ் செய்து முடித்தவன் வாய் கொப்பளித்து கொண்டே கூற…

“இல்லையே… எனக்கு சர்குலர் எதுவுமே வரலையே மாமா… நீங்களும் சொல்லலை… நான் எதுவுமே ப்ரிபேர் பண்ணலையே… ” அதுவரை இருந்த விளையாட்டுத்தனம் காணமல் போய் மிகவும் சீரியசாக கேட்டவளை பார்த்து மெலிதாக புன்னகைத்தவன்,

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் ஆதி… ” முகத்துக்கு நீரையடித்தவன் ஷேவிங் செய்ய ஆயத்தமாக ,

“என்ன டாப்பிக் டிஸ்கஷன்? மினிட்ஸ் நோட் செய்ய வேண்டாமா?”

“செக்கன்ட் ப்ராஜக்ட்டை எப்படி சக்ஸஸ்புல்லா கம்ப்ளீட் செய்ய வேண்டும் என்பதை பற்றித்தான் ஆதி… ஆனா மீட்டிங் ஒரு ஒன் வீக்காவது இழுக்கும் என்று நினைக்கிறேன்… ” சற்றும் சிரிக்காமல் முகத்தில் ஷேவிங் க்ரீமை அப்ளை செய்ய துவங்கினான்…

“செக்கன்ட் ப்ராஜக்ட்டா? அது என்ன?” ஒன்றும் புரியாமல் குழம்பி நெற்றியை தேய்த்து கொண்டு அதே குழப்பத்தோடு துணியை எடுக்க போக…

“விண்டர் சூட் எடுத்து வெச்சுக்கோ… ” அவள் புறம் திரும்பாமல் ஷேவ் செய்து கொண்டே அவன் கூற…

“வின்ட்டர் சூட்டா? எதுக்கு?” அவளுக்கு தலையை பியைத்து கொள்ளலாம் போல இருந்தது… அவனோ அலட்டி கொள்ளாமல் ரேசரை வைத்து இழுத்து கொண்டிருந்தான்…

“சரி விண்டர் சூட் வேண்டாம்… அதையும் நானே மேனேஜ் பண்ணிக்கறேன்… ” மிகவும் இயல்பாக கூறிவிட்டு… “ டைரக்டர்ஸ் மீட்டிங் குன்னூர்லடி… ” குறும்பாக வந்த பதிலில் முழுவதுமாக புரிய…

“அடப்பாவி… நான் கூட ரொம்ப சீரியஸா கேட்டுட்டு இருக்கேன்… உன்னோட கிரிமினல் புத்தி போகுமா? உன்னையெல்லாம்… ” அவனது கழுத்தை நெரிக்க வந்தவளை பார்த்து சிரித்தவன்…

“பின்ன உன்னை மாதிரி ஒரு அடங்காப்பிடாரிய கட்டிகிட்டேனே… வேற வழி?”

“அந்த டைரக்டர்ஸ் யார் மாமா?” அப்பாவித்தனமான குரலில் அவனை கிண்டலடிக்க…

“வேற யார் நீயும் நானும் தான்… ” சிரித்தவனை அவள் முறைக்க…

“ஹே பப்ளிமாஸ்… நிஜமாத்தானேடி சொன்னேன்… நம்ம ரெண்டு பேரும் தீவிரமா டிஸ்கஷன் பண்ணாலும் அது டைரக்டர்ஸ் மீட்டிங் தானே… ”

“டிஸ்கஷன்… ” நக்கலாக கேட்க… அவன் அப்பாவியாக தலையாட்ட… “அதுவும் நீங்க… ” அவனது தலையில் நறுக்கென்று கொட்ட…

“அடிப்பாவி ஒரு பச்சை மண்ணை இப்படி கொட்டறியே… ” தலையை தேய்த்து கொண்டவன்…

“சரி சரி… கிளம்பு எக்கச்சக்க வேலை இருக்கு… ” என்று மீண்டும் பில்ட் அப் தர…

“அடப்பாவி… உன் லொள்ளுக்கு அளவே இல்லாம போச்சு… ” அவனை அடிக்க குச்சியை அவள் தேட… தூக்க கலக்கத்தோடு எழுந்த பிருத்வியை அணைத்து கொண்ட கௌதமுக்கு உலகம் வண்ணமயமாக தோன்றியது!

இடது கையில் மகன் , வலது பக்கம் மனைவியை இறுக்கி கொண்டவனின் மனதில் சாக்லேட் மழை! இனிப்பாக!

பூஜையறையில் அபிராமி பாடுவது கேட்டது… .

குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

குறையொன்றும் இல்லை கண்ணா

குறையொன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா

கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு

குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதை தந்திட வெங்கடேசன் நீயிருக்க

வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா… .

***

error: Content is protected !!