Dei6

அத்தியாயம் 6

“வெற்றி மாமாவ இப்படி தான் மீட் பண்ணினேன் டாடி..!” என்ற மகளின் வார்த்தையில்,

“சுத்தம்! ஆரம்பமே ரணகளமா தான் ஆரம்பிச்சையா?! வாயே அடங்காதாடீ உனக்கு” என்ற தமிழின் வார்த்தையை காதுக்கு வெளியிலேயே, ‘எக்க்ஷிட் போர்ட்’ போட்டு நிறுத்திய கனி, “மாமாவ பார்த்தப்பவே எனக்கு டவுட் தான் டாடி… எங்கையோ…. பார்த்திருக்கோமேன்னு. அப்ப ஸ்ரைக் ஆகவே இல்ல…” என்றதும்,

“அப்ப எப்படி, வெற்றிய மாறனோட பையன்னு கண்டுபிடிச்ச?!” என கேட்ட பிரகாஷ்க்கு,

“அதுவா டாடி, மாமாவ பார்த்துட்டு, அவர பத்தி டீட்டெயில் கலெக்ட் பண்ணாலும், என்கூட வந்துச்சே, அந்த பயந்தாங்கோழி, அதால அவர போயி பார்க்க முடியாம இருந்தேன். நானா, தனியா போலாமுன்னு டிசைட் பண்ணி வச்சிருந்த நேரத்துல, அதுக்கு அவசியமே இல்லாம மாமாவ அத்தம்மாவோட ஒரு ட்ராப்பிக் சிக்னல்ல பார்த்தேன்.

அவங்கள பாலோ பண்ணி வீட்டையும் கண்டுபிடிச்சிட்டேன். அதுக்கு அப்புறம் அத்தம்மாவ தனியா மீட் பண்ண முடியாட்டியும், மாமாவ பாலோ பண்ணதுல சிலபல மேட்டர் தெரியவந்துச்சு” என்றவள், அவன் ஒவ்வொரு முறையும் தனது திருமணத்தை நடத்த அம்மா எடுக்கும் முயற்சிகளை எப்படியெல்லாம் தடுத்து நிறுத்தினான்.. இப்போது சமீபத்தில் ஜோசியரை தலைகீழாக கட்டி வைத்தது வரை, தனது சாதனையாய் எண்ணி கூறும் மகளை, வெட்டவா குத்தவா எனும் நோக்கில் தமிழ் பார்த்தார் எனில், பிரகாஷ் யோசனையோ வேறாக இருந்தது.

தனது மகளின் குணத்தை நன்கு அறிந்தவர் என்பதால் அவளின் எதிர்காலம் குறித்த பயம்  எப்போதுமே பிரகாஷிக்கு இல்லாமல் இல்லை. அவளின் செயலில் விளையாட்டுதனம் இருந்தாலும் நிச்சயம் அவள் தப்பாகவோ, அடுத்தவருக்கு வேதனையை தரக்கூடியதையோ செய்பவள் இல்லை.

அதே நேரம் தனக்கு தேவையானதை பிடிவாதமாக சரியாக நிறைவேற்றிக் கொள்ளவும் தெரிந்தவள் என்பதால், அவளை சிறுவயதிலேயே பார்த்து பழகியதால், சந்திராவின் குணத்திற்கும் தனது மகளுக்கும் நன்றாகவே ஒத்துபோகும். ஆனால் இதில் வெற்றியின் நிலை?? அதுவே அவரின் பெரும் யோசனை..

அவரின் அமைதியான யோசனை பாவத்தை பார்த்த கனி, “என்ன டாடி! யோசனை ரொம்ப பலமா இருக்கு. எப்படி அவன, இவகிட்ட இருந்து எஸ்கேப் ஆக வைக்கலாமின்னா!” என கேட்டவள்,

“அப்படி நினச்சிருந்தா மறந்திடுங்க. இந்த ஜென்மத்துல உங்களுக்கு வாய்ச்ச மருமகன் வெற்றி தான். சின்ன வயசுல என்னை அவ்வளவு பாசமா பார்த்திக்கிட்ட மாமா, இப்ப மட்டும் பார்த்துக்க மாட்டாரா என்ன.. ! அத்தம்மாவ மீட் பண்ணி பேசினா எல்லாமே சரியா இருக்கும்… அவருக்கு வேற பொண்ணு பார்த்து, அத்தம்மா கல்யாணம் செய்யணுமின்னா, அது அவரோட 60 வது கல்யாணமா கூட இருக்காது. அவ்வளவு தீவிரமா இருக்காரு, கல்யாணம் பண்ணாம எஸ்கேப் ஆகுறதுல” என கூறவும்,

தமிழ், “ஏன்டீ கனி, அவனுக்கே கல்யாணத்துல சுத்தமா ஆர்வம் இல்லாம இருக்கும் போது, வழிய போய் கட்டிக்க பார்க்கறையே, இது சரி வருமா?! உன்னோட வாழ்க்கையும் சேர்ந்து வீணா போயிடும். ஒரு வேளை அவருக்கு ஏற்கனவே காதல் கீதல் இருந்து அதனால கூட இப்ப கல்யாணம் வேணாமின்னு இருக்கலாம். எதையும் யோசிச்சு முடிவு செய்யலாம்” என்றதை கேட்டவள், “ஹா.. ஹா… “என சிரித்தபடியே,

“என்னதூ, அந்த விருமாண்டிக்கு லவ்வா. அது சரியான ரிஷிம்மா. அது போய் சைட் அடிச்சு பிகர கரெக்ட் பண்ணியிருக்குமா. சும்மா காமெடி பண்ணாதம்மா” என கூறிட,

“எது, நா பேசறது காமெடியா?! நீ தாண்டி, உன் வாழ்க்கைய காமெடியாக்கிட்டு இருக்க. சிரிச்சிட்டு மூடி வச்சிட்டுவர இது நீ படிக்கறையே நாவல் அது இல்ல, ‘லைப்’ ஒருதடவ தப்பா போனா, அத மாத்திக்க முடியாது” என்றதும்,
 
பிரகாஷிடம் திரும்பிய கனி சம்மந்தமே இல்லாது, “டாடி, இதுக்கு தான் நா சொன்னேன், செட்ஆஃப் பாக்ஸ்ல வர்ற சேனல் பேக்கேஜ்ல, சில சேனல்ஸ் வர்றத தூக்கிடலாமின்னு கேட்டீங்களா?!” என சொல்லிட, குழப்பமாய் பார்த்தவருக்கு விடையாக,

“இப்ப பாருங்க, அந்த சேன்ல்ஸ்ல வர்ற, ஒரு சீரியல் விடாம பார்த்துட்டு, அதுல வர்றங்க மாதிரியே, பக்கம் பக்கமா அட்வைஸ் கொடுக்கறாங்க!” என்றதும் அவரின் யோசனையை விடுத்து,

“கனிம்மா, அம்மா சொல்லறது சரி தானேடா! அவனுக்கு இஷ்டமில்லாம, இந்த கல்யாணம் சரி வருமா?!” என கூற,

“டாடி! நீங்க சொல்லறது புரியாத அளவு பேபியா நா. அன்னைக்கி, மாமா கண்ணுல இருந்த ஏதோ ஒண்ணு, என்னைய அவருக்கு பிடிக்க வைக்குமின்னு தோணுதுப்பா. அதோட, என்னோட சேவை மனப்பான்மைக்கு மாமா தான் கரெக்ட் சாய்ஸ். வேற யாரா இருந்தாலும், நா இப்படி நேரம் கெட்ட நேரத்துல கூட வெளிய போக, வர இருக்க முடியுமா?! அத்தம்மாவும் எனக்கு ஃபுல் சப்போர்ட்டா இருப்பாங்க. அதோட அவரோட வேலையும், எனக்கு நிச்சயமா பாதுகாப்பானதா இருக்கும்.

என்னோட லைப்பை, எப்பவும் தப்பா போக விடமாட்டேன். ப்ளீஸ், எனக்காக அத்தம்மாகிட்ட பேசுங்க, அப்புறம் மத்தத பார்க்கலாம்” என பேசி சரி செய்தவள், சந்திராவை மீட் செய்ய ஏதுவாக, அவர் எப்போதும் வரும் கோவிலை செலக்ட் செய்தாள்.

அவர்களின் நல்ல நேரம், எப்போதும் தாயை உடன் அழைத்து வந்து, கூடவே இருக்கும் வெற்றி, அன்று கோவில் வாசலுக்கு வரும் போதே, ஏதோ ஒரு அவசர அழைப்பு வர, “அம்மா முக்கியமான வேலை, நீ வா, நா வீட்டுல விட்டுட்டு போறேன்” என்ற வெற்றியிடம்,

“கண்ணா! கோவில் வாசல்வரை வந்துட்டு, உள்ள போகாம இருந்தா சரி வராதுடா. நீ போய் வேலைய பாரு. நா சாமி கும்பிட்டு, ஆட்டோல போயிக்கறேன் வீட்டுக்கு” என சொல்லிட,


“அம்மா, அது ரிஸ்க் ம்மா.. அதனால நானே……” என சொல்லிக் கொண்டிருந்தவனை முடிக்க விடாது,

“டேய்! ஏன்டா இப்படி இம்சை பண்ணற. ஸ்கூல் போற குழந்தைய விட, மோசமா இருக்குடா, நீ நடந்துக்கறது. அதெல்லாம் நா, பத்திரமா வீட்டுக்கு போயிடுவேன். நீ, உன் வேலைய போய் பாரு. ச்சும்மா, நொய்யி நொய்யின்னு” என பொறிந்து தள்ள,

விட்டு செல்ல மனம் இல்லா விட்டாலும், செல்ல வேண்டிய அவசியம் உணர்ந்து, ஆயிரம் பத்திரம் சொல்லி, வீட்டுக்கு சென்றதும் மறக்காமல் போன் செய்ய வேண்டும், என்ற கட்டளையோடு விடை பெற்ற வெற்றியை பார்த்த போது தான் நிம்மதியானது கனிமொழிக்கு…..

கோவில் பிரகாரத்தில் சந்திராவிற்காக காத்திருந்தவர்கள், அவர் தரிசனம் முடித்து வந்ததும், அவரிடம் செல்ல, பிரகாஷையும், தமிழையும் பார்த்ததும் நீண்ட வருடங்களுக்கு பிறகு பார்த்த சந்தோஷம் முகத்தில் தெரிய,

ஆதரவாய் தமிழின் கரம் பற்றியவர், அண்ணா, அண்ணி எப்படி இருக்கீங்க?! பார்த்தே ரொம்ப வருஷம் ஆகிடுச்சு!” என்று சொல்லும் போதே, கண்ணீல் நீர் நிறைய குரல் தழுதழுக்க பேசியவரின் பேச்சில், நீண்ட வருடம் கழித்து, தன் குடும்பத்தின் மீதும், தனது கணவர் மீதும் அன்பு கொண்டவரை பார்த்ததன் தாக்கம் தெரிய…

“சந்திரா, நல்லா இருக்கோம். நீ எப்படி இருக்க?! மாறன் போனதும், நீங்க உங்க பொறந்த ஊர் பக்கம் போனதால, சுத்தமா போக்குவரத்தே இல்லாம போச்சு. அதோட நாங்களும், அந்த ஏரியவுல இருந்து தொழிலுக்காக மாறி வந்துட்டோம். இத்தன வருஷம் கழிச்சு நம்ம சந்திக்கணுமின்னு இருந்திருக்கு” என்றவர், அவர்களின் கடந்தகாலத்தை பற்றி சிறிது நேரம் பேசியவர்களிடம், நினைவு வந்தவராக சந்திரா,

“அண்ணா, எங்க என்னோட மருமக?! சின்ன குழந்தையில அத்தம்மா, அத்தம்மான்னு முந்தனைய சுத்திட்டே பூனைக்குட்டி மாதிரி திரிவா.. மாமாவே என் பொண்டாட்டி, முந்தனையில எனக்கு பதிலா, உன்ன முடுச்சு வச்சிருக்காளா?! ன்னு  கேலி செய்யற மாதிரி செஞ்சிட்டு இருப்பா, துறுதுறுன்னு.. எப்பவும் ” என பழைய கனியை மனதில் இருத்தி கேட்க,

“அண்ணி, இப்ப அவ செய்யற சேட்டைய பார்த்தா, நீங்களே நாலு போடுவீங்க. அவ்வளவு குறும்பு. வாய தொறந்தா முடுறதே இல்ல!” என எப்போதும் போல தமிழ் கனியை பற்றிய குற்றப்பத்திரிகை வாசிக்க, அதுவரை அவர்களின் பாச பிணைப்பை தூரம் இருந்தே பார்த்து ரசித்த படி இருந்தவள், அவர் தன்னை பற்றி கேட்கவும் அவரிடம் வர, சரியாக தமிழின் பேச்சை கேட்டவள்,


“பாருங்க அத்தம்மா, நீங்க இல்லாம இந்த தமிழ் என்ன பத்தி இப்படியெல்லாம் சொல்லி, என் இமேஜ்ஜ டோமேஜ் பண்ணறதே வேலைய வச்சிருக்கு! எனக்கு சப்போர்ட் பண்ண, டாடி வந்தாலும் அவரையும் திட்டறாங்க” என சலுகையாக சொல்லி தோள் சாய்ந்த, கனியை வாஞ்சையோடு கன்னம் தடவியவர்,

“என் ராசாத்தி, நீ இருடா உன்னோட அத்தம்மா தான் வந்துட்டேனே, இனி யாராச்சும், என் மருமகள எதாவது சொல்லி பாருங்க, அப்புறம் என் பையன் கிட்ட சொல்லி தூக்கி உள்ள வச்சு முட்டிக்கு முட்டி தட்ட சொல்றேன். இப்ப ஓகே வாடா..”  என கேட்க,

கெத்தாய், தனது சுடிதாரின் காலரை தூக்கி விட்ட கனி, “எப்படி இனி வாய திறந்தா, நீ காலி தமிழூ…!” என தாயை மிரட்ட,

“அடிங்க பொட்ட கழுத, அடங்க மாட்டாம திரியறது, இதுல சப்போர்ட்டுக்கு ஆள் வரவும், பேர் சொல்லி வம்பிழுக்கற அளவுக்கு ஆகிட்ட…” என கையை ஓங்கிட,

“அண்ணி, எதுக்கு குழந்தைய அடிக்க வர்றீங்க, அவ ஏதோ விளையாட்டுக்கு சொல்லறா..! அத போய் பெருசா எடுத்துட்டு, பேர் சொன்னா என்ன தப்பு? ‘பேர் சொல்லும் பிள்ளை…’  கேள்விபட்டதில்ல” எனவும்,

“அப்படி சொல்லுங்க அத்தம்மா” என அவருக்கு, Hi-fi அடித்தவளை அணைத்துக்கொண்ட சந்திரா, “வாங்கண்ணா, அப்படி உக்காந்து பேசலாம்” என கூறி, ஒரிடத்தில் அமர,

‘தான் சொல்ல வந்ததை, எப்படி ஆரம்பிக்க?’ என யோசித்த பிரகாஷிக்கு, அந்த கஷ்டத்தை தராது, “அண்ணா, கனிய வெற்றிக்கு கல்யாணம் பண்ணி தர்றீங்களா?! உங்க பொண்ண கண்கலங்காம, என்னோட மகளா வச்சு பார்த்துக்கறேன்” என கேட்டுவிட,

“சந்திரா நாங்களும் அது விசயமா தான் பேச வந்தோம், அதுல ஒரு சிக்கல்!” என இழுக்கவும், பதட்டத்தோடு “என்ன அண்ணா, என்ன விசயம் ஒரு வேளை கனிக்கு ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்திட்டீங்களா?!” என கேட்க,

“ச்ச! ச்ச!,  அதெல்லாம் இல்லம்மா. அது வந்து .. அத எப்படி சொல்றதுன்னு தான்… இல்ல, எப்படி கேட்கறதுன்னு தான் யோசனை…” என தயக்கமான பிரகாஷின் பேச்சில்,

“என்ன…. கேட்கணுமா!  என்ன கேட்கணும்?! தயங்காம கேளுங்க” என சொன்னதும்,

“வெற்றிக்கு கல்யாணம் செய்யறதுல எதனால இஷ்டம் இல்ல” என ஒளிவு மறைவின்றி பிரகாஷின் கேள்விக்கு,

“என்னது..  கல்யாணத்துல இஷ்டமில்லையா?! என்ன அண்ணா விளையாடுறீங்களா, அவனே என்கிட்ட கல்யாணம் செய்ய, ஓகே பொண்ணு பாருங்கன்னு, சொல்லி ஒரு வருஷம் ஆச்சு. சரியான இடம் அமையல. தரகர் வந்து, முதல் நாள் பொண்ணப்பத்தி நல்ல விதமா பேசிட்டு போவாரூ. அடுத்த நாள் போன் பண்ணினா, அந்த பொண்ணு வேற யாரையோ கல்யாணம் பண்ணிடுச்சு, இல்ல வேற பக்கம் முடிவாகிடுச்சுன்னு சொல்வாரூ. சிலர் வந்துட்டு போறதோட சரி, வரன் கொண்டுவர்றேன்னு… அடுத்து ஆளையே பார்க்க முடியல.. என்னால தான் அவனோட கல்யாணம் தள்ளி போயிட்டே இருக்கு. நாளைக்கே பொண்ண காட்டி கட்டு தாலின்னு சொன்னாலும் கட்டுவான் என் புள்ள” என பெருமையாய்  சொல்லிய சந்திராவிடம், கனி..

“அத்தம்மா, மாமா உங்கள நல்லா ஏமாத்திட்டு இருக்காங்க..!” என்றவள்,  அவனின் நடவடிக்கைகளையும், அவனின் எச்சரிக்கையையும் சொல்ல,

“அட ப்ராடு பையலே! அதான் விசயமா?! என்னடா, எல்லாமே சரியா இருந்தும், எதுவுமே நடக்க மாட்டிங்குதேன்னு நினச்சேன். அவனுக்கு, நா அம்மான்னு ப்ரூப் பண்ணல, நா மணிமாறன் பொண்டாட்டி சந்திரா இல்ல… இப்பவே அவன கேட்டு, உண்டு இல்லன்னு ஆக்கிடுறேன்” என வீம்பாக தனது போனை எடுத்தவரை தடுத்த கனி..

“காரியம் கெட்டுச்சு போங்க. அத்தம்மா, மாமா ரொம்பவும் தெளிவா இருக்காரூ. அவரோட கல்யாணத்த தடுக்கறதுல. இப்ப, அவரு செஞ்ச, அதே ஸ்டைல்ல தான் அவருக்கு ஆப்பு வைக்கனும். உங்க பையனோட வீக் பாயிண்ட் எதுவோ, அத வச்சு அவர வழிக்கு கொண்டு வந்திடலாம்!” என்ற கனியின் வார்த்தையும், சந்திராவின் யோசனை படிந்த முகத்தையும், பார்ப்பதை தவிர வேற வழியே இல்லாது போனது பிரகாஷ்க்கும், தமிழுக்கும்….

நீண்ட யோசனைக்கு பின், “அத்தம்மா, நீங்க வேணுமின்னா, நெஞ்சுவலி வந்த மாதிரி ஆக்ட் பண்ணி, அவர என் கழுத்துல ஹாஸ்பிடல்ல வச்சு, ‘தாலி கட்டு, இது தான் உங்க கடைசி ஆசைன்னு’ சொன்னா….!” என கேட்க,

“அவன் நிச்சயம் அத கேட்க மாட்டான்டா. அவன் நேரா போய், டாக்டர்கிட்ட பேசிட்டு, புதுசா நாலு டாக்டர வர வச்சு, என்னைய புல்லா செக் பண்ண வச்சிடுவான். எத்தன டாக்டர கரெக்ட், பண்ணி பொய் சொல்ல வைக்க முடியும்?!” என நிதர்சனத்தை சொல்லிட…

‘அப்ப என்ன செய்யலாம்?!’ என யோசித்தவளுக்கு, முதல் வாரம் .. தான்,  ரத்தம் கொடுக்க போன போது பார்த்த கனிஷ்காவின் நியாபகம் எழ, “அத்தம்மா!  ஒரு சூப்பர் ஐடியா… உங்களுக்கு எதாவதுன்னா தானே… பேசாம, நா சீக்கிரமா மண்டைய போட்டுடுவேன். அவளுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க அவங்க வீட்டில ஆசை படறாங்கன்னு சொல்லுங்க” எனவும்,

“கனி, என்ன பேச்சு இது, கோவில்ல இருந்துட்டு!” என ஓரே நேரத்தில் மற்ற மூவரும் சொல்ல, ‘இவங்க பாசத்துல வழுக்கிடாம காப்பாத்து ஆண்டவா!’ என மனதில் வேண்டுதல் வைத்தவள்,


“ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்யலாமின்னு பெரியவங்களே சொல்லியிருக்காங்க. ஓரே ஒரு பொய் அதனால என்ன…”என்ற கனியிடம்,

“அப்படி இல்லடா, வாழ வேண்டிய பொண்ணு நீ. உனக்கு போய்… வேணாம் டா .. வேற வழிய யோசிக்கலாம்!” என சந்திரா உறுதியாக மறுத்திட,

“அத்தம்மா, வெற்றி மாமா தான் எனக்குன்னு, நா.. முடிவு செஞ்சு நாளாச்சு!” என்றவள், அவனை சந்தித்ததை சொல்லி,

“டாடிய, உங்ககிட்ட அத பேச தான் கூட்டிட்டு வந்தேன். என்ன ஆனாலும் மாமாவ விட முடியாது என்னால. சோ, நா டிசைட் பண்ணியாச்சு. இனி அதை சென்டிமென்ட்டா பேசி, சக்சஸ் பண்ண வேண்டியது உங்க பொறுப்பு” என தீவிரமாய் சொல்லிய கனியிடம்,

“சரிடா, நீ சொல்லற மாதிரி பேசினாலும், அவன் கேடி! கிரிமினல் கூட பழகி, அதே மாதிரியே இருக்கானே.. அவன நம்ப வைக்க முடியுமா?! உன்னோட ஹெல்த் ரிப்போர்ட் கேட்டா, என்ன செய்ய?!” என சந்தேகத்தை கேட்ட சந்திராவிடம்,

“அதுக்கு, நா ஏற்பாடு செய்யறேன். அவருக்கு நா, யாருன்னு தெரிஞ்சு எனக்கு, இப்படி ஒரு பிரச்சனைன்னு சொன்னா!  சின்ன வயசுல, என்மேல வச்ச பாசம், இன்னும் இருந்தா… கண்டிப்பா, மாமா மேல அதிகமா தோண்டி துருவாம, தாலி கட்டுவாரூ! அவரோட பொண்டாட்டியா ஆகிட்டா போதும், அடுத்தத அப்புறம் பார்த்துக்கலாம்” என்றவள், ‘சந்திராவிடமும், தனது தாய், தந்தையிடமும் எப்படி வெற்றி வந்தால் பேச வேண்டும்’ என்பதற்கு பல முறை பாடம் சொல்லி கொடுக்க,

விருப்பமே இல்லாத போதும் கனியின் பிடிவாதத்திற்கும், வெற்றியின் வாழ்க்கைக்காகவும், மூவரும் ஒத்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லாமல் போக, அவர்கள் திட்டப்படி அனைத்தையும் நடத்தியும் முடித்து விட்டார்கள்.

இதில் கனி எதிர்பார்க்காத விசயம், தன்னை யார்? என தெரிந்து, தனது உடல்நிலை பற்றி தெரிந்ததும், வெற்றி கொண்ட வேதனை, அதை தொடர்ந்து, எவ்வளவு விரைவாக திருமணத்தை நடத்த முடியுமோ, அவ்வளவு விரைவாக என்றாலும், எல்லா விதத்திலும் நிறைவான ஒரு திருமணத்தை நடத்தியதில் இருந்த பாசமும், அக்கரையும் தான்.

அதுவே அவளை குற்ற குறுகுறுப்பில் ஆழ்த்தினாலும், இயல்பான துடுக்கு தனத்தால், அதை ஓரம்கட்டி அதற்கு ஈடாக, நேசத்தோடு தனது வாழ்க்கையை துவங்க நினைத்த போது, அவனுக்கு தெரிந்து போன உண்மையால் இப்போது எப்படி இதை சரி செய்வது என்பதே….

பழைய நினைவுகள் கொடுத்த தாக்கத்தால், நீண்ட நேரம் கழித்து உறங்கியிருந்தாலும், எப்போது சரியான நேரத்திற்கு எழுந்து, தனது அன்றாட பணியை செய்து பழக்கம் கொண்ட வெற்றி, முதலில் கண் விழிக்க,

தன்னை பார்த்தவாரே உறங்கியது போல, தன் புறம் முகம் வைத்து, சிறு பிள்ளை போல, வாயை லேசாக பிளந்த படி, தூங்கும் கனியை பார்த்ததும், ஒரு நிமிடம், தனது கட்டுப்பாட்டை இழந்து, அவளின் உதடருகே கரத்தை கொண்டு சென்றவன், ‘ச்சே! அவ செஞ்ச வேலைக்கு ..’ என நினைத்தவன் திரும்பி, குடிப்பதற்காக ஜக்கில் வைத்திருந்த நீரை எடுத்து, அவளின் முகத்தில் ஊற்ற…

“மம்மீ ……!!!! வீட்டுக்குள்ள மழை பெய்யுதூ…!!!” என கத்தியபடி விழித்தவள், சிறிது நேரம் சென்றே, இருக்கும் சூழல் புரிய, நிமிர்ந்து வெற்றியை பார்க்க, நமுட்டு சிரிப்போடு அவளை பார்த்தவன், “ஹேவ் ஏ வொஸ்ட் டே ஃபார் யூ…!” என்ற படி பாத்ரூமுக்குள் புகுந்தான்.