Dhuruvam-11
Dhuruvam-11
துருவம் 11
மாலை நேர காற்றை சுவாசித்தபடி, அந்த பத்தாவது மாடி அப்பார்ட்மெண்ட் பால்கனியில் நின்று கடல் அலைகளை வெறித்துக் கொண்டு நின்றாள் காவ்யஹரிணி.
துபாய் அரசு அருங்காட்சியத்தில் வேலைக்கு சேர்ந்து, கிட்டத்தட்ட ஒரு மாதமாகிறது. இந்த ஒரு மாத காலமும், எப்படி சென்றது என்று அவளிடம் கேட்டால், அதற்கு பதில் ஒரு கசந்த புன்னகை மட்டுமே.
அன்று அரசர், faiq அவர் மகன் என்று அறிமுகப்படுத்தியதோடு அல்லாமல், அவனின் நிச்சயத்தையும் கூறவும், அதில் அவள் மனம் அதிர்ந்தது.
அப்பொழுது தான், அவளின் மனதை முழுவதுமாக புரிந்து கொண்டாள். தான் அவன் மேல் கொண்டது ஈர்ப்பு இல்லை, உண்மையான காதலை என்று. அன்று நடந்ததை, அவள் நினைத்து பார்த்தாள்.
“வாழ்த்துக்கள்! மகனுக்கு நிச்சயம் வச்சு இருக்கும் பொழுது, இப்படி ஒரு புகைப்படம் வந்தா கண்டிப்பா கோபம் வருவது இயல்பு தான். இனி இப்படி ஒரு தவறு நடக்காது, நீங்க நிச்சய வேலைகளை பாருங்க, நாங்களும் நாளைக்கு ஊருக்கு கிளம்பனும்” என்று தாத்தா நாசுக்காக, எல்லோரும் கிளம்புவோம் என்று சொன்னதை உடனே புரிந்து கொண்டு, மொத்த குடும்பமும் அவர்களிடம் சொல்லிக் கொண்டு சென்றனர்.
அப்பொழுது, காவ்யஹரிணி அவனை கடக்கும் பொழுது, அவனை ஒரு முறை பார்க்க துடித்த மனதை கட்டுப்படுத்தி பாராமல் சென்றாள்.
அதன் பிறகு, அவனை அவள் பார்க்கவில்லையே தவிர, அவனை தான் நினைத்துக் கொண்டு இருந்தாள். மறக்க நினைத்தும், அவளால் அது முடியவில்லை.
“ஹரி! சாப்பிட வா, உங்க அண்ணா உனக்காக காத்துகிட்டு இருக்கார்” என்று அனிருத் மனைவி சாரா அழைத்தாள்.
ஆம்! அனிருத் கிஷோர் தன் ஜாகையை துபாய்க்கு மாற்றிக் கொண்டான். அமெரிக்காவில் நல்ல வேலையில் இருந்தவன் தான், ஆனால் அவனின் தாத்தா பேத்திக்கு துணைக்கு இங்கே தான் இருக்க வேண்டும் என்று, அவர்கள் இங்கே வரும் முன்பே சொல்லி இருந்தார்.
ஆகையால், அவன் தாத்தாவிற்காக இல்லை என்றாலும், காவ்யஹரிணிக்காக அவன் முழு மூச்சாக செயல்பட்டு இங்கே பிளாட் ஒன்றும் வாங்கிக் கொண்டு, மனைவியை அழைத்துக் கொண்டு வந்து விட்டான்.
பிள்ளைகளுக்கு பரீட்சை அங்கே, ஆகையால் அதை முடித்துக் கொண்டு அவர்களை இந்தியா அழைத்து செல்வார் அவனின் மாமனார்.
பிள்ளைகளுக்காக, அவன் தன் மாமியார், மாமனாரை வரவழைத்து இருந்தான் இரண்டு மாதத்திற்கு முன்பு. அது இப்பொழுது, அவனுக்கு உதவியாக இருந்தது.
இங்கே கிளம்பி வரும் முன், அவளின் மனநிலையை தாத்தா அவனுக்கு தெரிவித்து இருந்தார். அவனுக்கும், இந்த விஷயம் கேட்டு அதிர்ச்சியே, எப்படி தங்கையை சரி செய்ய போகிறோம் என்று.
அப்பொழுது தான், அவன் இதை பற்றி மனைவியிடம் ஆலோசனை கேட்டான்.
“இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் என் கிட்ட விடுங்க, பொண்ணுங்க எப்போ எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு இன்னும் பசங்களுக்கு பக்குவம் வரல” என்று அவனுக்கு ஒரு கொட்டு வைத்துவிட்டு, அவள் வகுத்த திட்டத்தை கூறினாள்.
“எப்படி டி இப்படி எல்லாம் யோசிக்குற! இது எனக்கு தோன்றவே இல்லை பாரேன்!” என்று அவன் வியக்கவும், அவள் பார்த்த பார்வையில் வாயை மூடிக் கொண்டான்.
அதன் பிறகு, இங்கு வந்த ஒரு மாதத்தில், அவளை ஆழ்ந்து கவனிக்க தொடங்கினாள் சாரா.
காவ்யா வேலைக்கு செல்கிறாள், வீட்டில் ஓரிரண்டு வார்த்தை பேசுகிறாள், அவள் வேலையை அவளே செய்து கொண்டு, கிட்சேனில் தனக்கு சிறிது உதவி செய்துக் கொண்டு அப்படியே இருக்க பழகிய காவ்யஹரிணியை கண்டு, மலைத்து தான் போனாள் சாரா.
இந்நேரம் வேறு ஒருவராக இருந்தால், நிச்சயம் இப்படி இருந்து இருக்க மாட்டார்கள். இவளோ, எதுவுமே நடக்காதது போன்று, நடமாடிக் கொண்டு இருக்கிறாள்.
இதை எல்லாம் நினைத்த சாரா, பெருமூச்சு விட்டாள். அவளை, அவள் போக்கில் சென்று தான் பிடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.
“இன்னும் கொஞ்ச நேரத்தில் வரேன் அண்ணி, நீங்க அண்ணனுக்கு பரிமாறுங்க” என்று கூறிவிட்டு, அவள் குளியலறைக்குள் சென்று, தன்னை சுத்தப்படுத்தி கொண்டு, வெளியே செல்ல தன்னை தயாராகி வெளியே வந்தாள்.
அங்கே டைனிங் ஹாலில், இருவரும் இவளின் வருகைக்காக தான் காத்துக் கொண்டு இருந்தனர். இவள் வெளியே செல்வது போல் கிளம்பி வரவும், அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“என்ன டா ஹரி! இப்போ நைட் ஆகிடுச்சு! இப்போ எங்க போகணும் டா, நான் உன்னை கூட்டிட்டு போறேன்” என்று அனிருத் சொல்ல, அவளோ இருக்கையை இழுத்து போட்டுக் கொண்டு, தட்டை எடுத்து வைத்து சாப்பிட்டுக் கொண்டே கூற தொடங்கினாள்.
“நான் சில ஆராய்ச்சி செய்றேன் அண்ணா, அது சம்மந்தமா என் தோழி தீபியை பார்க்க போறேன். இங்க தான் பார்க் பக்கத்துல இருக்கிற ரயில்வே ஸ்டேஷன் வருகிறாள்” என்று கூறிவிட்டு, சாப்பிட்டு முடித்தவுடன், தட்டை கழுவி வைத்துவிட்டு, அவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.
செல்லும் அவளையே, அனிருத் பார்த்துக் கொண்டு இருந்தான். அவனின் செல்ல தங்கை, முகத்தில் சிரிப்பை காணாமல் மிகவும் வருந்தினான்.
“சாரு! எப்படி இவளை சரி செய்ய போறோம்! இவ இப்படியே இருந்திடுவாளோன்னு கொஞ்சம் பயமா இருக்கு” என்று ஒரு அண்ணனாக அவன் வருந்தினான்.
“அது எல்லாம் இப்படியே இருக்க மாட்டா, சும்மா எதையாவது யோசிக்காதீங்க. உங்க தாத்தா தான், அப்படியே பேத்தியை இப்படி விட்டுடுவாரா என்ன? கொஞ்சம் பொறுங்க, இன்னும் இரண்டு நாள் ல அவளுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்து சரி செய்திடலாம்” என்று கூறிவிட்டு செல்லும் மனைவியை வியந்து பார்த்தான்.
அவன் தாத்தா சொல்லுவது போல், பெண்களுக்கு எதிரி எப்படி பெண்ணோ, பெண்ணுக்கு பெண்ணே தான் தாயும், தோழியும்.
அவர்களால் தான், ஒரு பெண்ணை வெற்றி அடையவும் செய்ய முடியும், தோல்வியை கொடுக்கவும் முடியும். இப்பொழுது அவனுக்கு, அது தான் தோன்றியது.
மனைவி, எப்படி தன் தங்கையை சரி செய்து கொண்டு வர போகிறாள் என்று ஆவலாக காத்துக் கொண்டு இருந்தான்.
இதை ஏதும் அறியாத காவ்யஹரிணி, அவளின் தோழியை அங்கே ஸ்டேஷனில் சந்தித்து பேசிக் கொண்டு இருந்தாள்.
“இந்தா காவ்யா, நீ கேட்ட எல்லா டாக்குமெண்ட்ஸ் இதுல இருக்கு. அப்புறம் அந்த போட்டோஸ் எடுக்க சொன்னியே, அதுவும் இதுல இருக்கு”.
“கவி, இனி தான் நீ ஜாக்கிரதையா இருக்கணும். உனக்கு ஏதாவது ஹெல்ப் தேவைப்பட்டால், உடனே நீ உங்க அண்ணா கிட்ட கேட்க தயங்காத”.
“இன்னும் நீ இதை பத்தி, உங்க அண்ணா கிட்ட பேசாம இருக்கிறது சரியில்லை டி. உங்க தாத்தா கிட்ட கூட, நீ மேலோட்டமா தான் சொல்லி இருக்க, கொஞ்சம் யோசி டி” என்று அவளின் நெருங்கிய தோழியாக கவலை கொண்டாள் தீபிகா.
“சொல்லுவேன் டி கண்டிப்பா, ஆனா அதுக்கு இன்னும் நேரம் இருக்கு தீபி. நீ கவலைபடாம போ, நான் பார்த்துக்குறேன் டி” என்று அவளை ட்ரெயின் ஏற்றிவிட்டு அங்கு இருந்து, தன் வீடு நோக்கி செல்ல தொடங்கினாள்.
பார்க் அருகே அவள் நெருங்கும் பொழுது, அவளின் பின்னே யாரோ follow செய்வது போல் தோன்றவும், வேக நடை எட்டி போட தொடங்கினாள். கை தானாக, அவளின் அலைபேசியை உயிர்ப்பித்து அவளின் அண்ணனுக்கு கால் செய்ய வைத்தது.
அவர்கள் இவளை நெருங்கும் நேரம், அனிருத் அங்கே சில பேருடன் இவளை நெருங்கி இருந்தான். அதில், இவள் பின்னே வந்தவர்கள் ஓடி விட்டனர்.
அதுவரை இருந்த பதட்டம், மெல்ல குறைந்தது. அனிருத், அவளை அழைத்துக் கொண்டு வீடு வந்த உடன் அவளிடம் ஏதும் பேசாமல் சென்றுவிட்டான் அவனின் அறைக்கு.
அவனின் அந்த செயலிலே, அவன் கோபத்தின் அளவை தெரிந்து கொண்டாள். பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு, அவளின் அறைக்குள் சென்று உடையை மாற்றிவிட்டு, தீபி கொடுத்ததை பார்க்க தொடங்கினாள்.
ஒவ்வொன்றையும் அவள் ஆராய, ஏற்கனவே இது சம்மந்தமாக எடுத்து வைத்த நோட்ஸ் உடன் அதை சரி பார்த்துக் கொண்டு இருந்தாள். மேலும், அந்த புகைப்படங்களை எல்லாம் பார்த்தவளுக்கு, அதிர்ச்சியும், குழப்பமும் மட்டுமே.
தான் ஏதும் குழப்பிக் கொண்டு இருக்கிறோமா, என்று எண்ணி மீண்டும் எல்லாவற்றையும் எடுத்து பார்க்க தொடங்கியவளுக்கு, அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
இதற்கு மேல், தாத்தாவிடமும், அண்ணனிடமும் மறைக்க கூடாது என்று எண்ணியவள், உடனே மணியை பார்த்தாள். இரவு மணி மூன்று என்று காட்டவும், சிறிது படுத்து உறங்கினால் தான் நாளை வேலை செய்ய முடியும் என்று உணர்ந்து, படுத்துவிட்டாள்.
மறுநாள் காலை எட்டு மணிக்கு எழுந்தவள், உடனே அண்ணியிடம், அண்ணனுடன் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று கூறி இன்று விடுமுறை எடுக்க முடியுமா என்று கேட்டு சொல்லுமாறு கூறினாள்.
அண்ணியிடம் கூறிவிட்டு, அவள் குளிக்க சென்றாள். மனதிற்குள், ஏகப்பட்ட குழப்பம். இது சாத்தியமா என்று மனதிற்குள் குழம்பிக் கொண்டு இருப்பதற்கு பதில், இதில் தேர்ந்தவர்களிடம் கேட்டு விடுவது என்ற முடிவிற்கு வந்தாள்.
அதன் பிறகு தான், அவளால் நிம்மதியாக இருக்க முடிந்தது. இங்கே அவளின் அண்ணி, விஷயத்தை கூறிவிட்டு அவளின் அண்ணனின் பதிலுக்காக அவனின் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“என்ன லுக்கு! நேத்து மட்டும் சரியான நேரத்திற்கு நான் போகலைன்னு வை, அவளை அவனுங்க தூக்கி இருப்பாங்க. கொஞ்சமாச்சும், அவளுக்கு அறிவு இருக்கா, இப்படி நைட் நேரம் போக கூடாதுன்னு” என்று கடிந்து கொண்டு இருந்தான்.
“உங்க தங்கச்சி தான, உங்களை மாதிரி தான இருப்பா. அவ முகமே டென்ஷனா இருக்கு, நீங்க லீவு போடுங்க இன்னைக்கு, கோபப்படாம என்னனு கேளுங்க முதல, நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று கூறிவிட்டு சென்றாள்.
சிறிது யோசனைக்கு பிறகு, செல்பேசி எடுத்து ஆபிஸ்க்கு விடுப்பு சொல்லிவிட்டு, தங்கைக்காக ஹாலில் காத்துக் கொண்டு இருந்தான்.
காவ்யஹரிணி ஹாலிற்கு வந்தவள், முதலில் அவனிடம் மன்னிப்பு கேட்டு, இனி இது போல் நடக்காது என்று வாக்குறுதி கொடுத்துவிட்டாள்.
அவள் அப்படி முதலில் செய்தது, அவன் முகத்தில் புன்னகை தானாக வந்து அமர்ந்தது. அதை பார்த்து, நிறைய நாட்கள் கழித்து அவளும் புன்னகை புரிந்தாள்.
அதன் பிறகு, அவள் சேகரித்த அத்தனை தகவல்களையும் எடுத்து காட்டி, அதற்குரிய விளக்கங்களை கொடுக்கவும், அவன் அசந்து விட்டான்.
“ஹரி! இனி லேட் பண்ண வேண்டாம், சீக்கிரம் தாத்தாவுக்கு விஷயத்தை சொல்லிட்டு, அடுத்து என்ன செய்யலாம் அப்படினு கேளு. இங்க இது பத்தி தெரிஞ்ச ஒருத்தர் யாருன்னு, நான் விசாரிக்குறேன்” என்று அவன் கூறவும், உடனே இருவரும் செயலில் இறங்கினர்.
அன்றைய நாள் முழுவதும், அடுத்து என்ன செய்ய வேண்டும், எப்பொழுது அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று எல்லாம், பக்காவாக பிளான் செய்து விட்டனர்.
எல்லாம் ஒழுங்கு படுத்திய பிறகு தான், அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அப்பொழுது, அண்ணி அங்கே வந்தவள் நாளை செல்ல வேண்டிய திருமணம் பற்றி கூறவும், அதுவரை இருந்த சிறிய சந்தோஷம் அவளை விட்டு பிரிந்தது.
அவர்களிடம் சொல்லிவிட்டு, அவளின் அறைக்கு வந்தவள் இதை எப்படி மறந்தேன் என்று நினைத்து புலம்ப தொடங்கினாள். நாளை எக்காரணம் கொண்டும், அங்கு செல்ல கூடாது என்று முடிவெடுத்தாள்.
திரும்பவும், மனதை கீறிக் கொள்ள அவள் தயாராக இல்லை. ஆனால், அவளின் அண்ணியோ அவளின் காயம் பட்ட மனதை கீறிவிட முனைந்து, அதற்கு எல்லா ஏற்பாடையும் செய்துவிட்டாள்.
மறுநாள், கிட்டத்தட்ட அவளை இழுத்து சென்றாள் சாரா திருமணத்திற்கு.
“என்ன அண்ணி நீங்க, எல்லாம் தெரிஞ்சும் இப்படியா செய்வீங்க” என்று சிடுசிடுத்தவளை பார்த்து, முறைத்தாள்.
“இங்க பாரு ஹரி, தாத்தாவுக்கு அரசர் போன் பண்ணி சொல்லி இருக்கார். பத்தாத குறைக்கு, உனக்கும் இன்விடேஷன் கொடுத்து இருக்காங்க, மியூசியம் ல வேலை பார்க்கிறதால”.
“நம்ம குடும்பம் சார்பா, நாம மூணு பேரும் இல்லைனா அரசர் என்ன நினைப்பார், நம்ம குடும்பத்தை பத்தி. இப்படி உங்க தாத்தா தான் சொல்லி, கண்டிப்பா உன்னை இங்க அழைச்சிட்டு போக சொன்னார்”.
“அதனால என் மேல கோபத்தை காட்டாம, வா நாம உள்ள போகலாம்” என்று அழைத்த அண்ணியை பார்த்து, ஒன்றும் கூற முடியாமல் பின்னோடு சென்றாள்.
அங்கே நிற்பது அவன் அல்லவா, அவனை பார்க்காமல் இருந்த இந்த ஒரு மாதத்தில், அவன் நினைவுகளோடு அல்லவா வாழ்ந்து இருக்கிறாள்.
அவன் எப்படி இருக்கிறான் என்று அவனை உற்று பார்க்க, அவனோ அங்கே அவனருகில் இருந்த பெண்ணிடம் சிரித்து பேசிக் கொண்டு இருந்தான்.
அந்த மாளிகை வாசலில், அவனை அப்படி மலர்ந்த முகத்துடன் பார்க்க, அவளுக்கு கண்ணை கரித்துக் கொண்டு வந்தது.
திருமண வைபவத்திற்கு ஏன் வந்தோம் என்று, அவள் நினைக்க, அவனை பார்க்க என்று மனம் கூறிய பதிலில், தன்னையே கடிந்து கொண்டு திரும்ப நினைத்தவளை, ஒரு வலிய கரம் அவளை செல்ல விடாமல், அவள் கையை பிடித்து இழுத்தது.
“ஹரி! வா உள்ள போகலாம். அங்க பாரு, அரசர் பையன் தான reception ல நிக்குறார். இப்படியே திரும்பி போனா நல்லா இருக்காது, வா எங்க கூட” என்று அவளின் அண்ணன் அனிருத் அவளை இழுத்து சென்றான்.
அவன் அருகில் செல்ல செல்ல, அவளின் இதயத்துடிப்பு எகிரிக் கொண்டு இருந்தது. என்ன முயன்றும், அவளால் பார்வையை அவன் புறம் செலுத்தாமல் இருக்க முடியவில்லை.
அவன் அருகே வந்தவுடன், அப்படியே பேசாமல் உள்ளே செல்ல நினைக்க, அவனோ அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றான்.
அவனின் பார்வையும், அவள் மீது தான். மெலிந்து இருக்கிறாள் அவள், என்று பார்த்த உடனே கண்டு கொண்டவனுக்கு அவளின் மெலிவின் காரணம் என்னவென்று கண்டறிய முயற்சி செய்தான்.
“அப்புறம் மிஸ் ஹரிணி, எப்படி இருக்கீங்க? உங்களை பார்த்தே ரொம்ப நாள் ஆகிடுச்சே, உங்க ஒர்க் எல்லாம் எப்படி போகுது” என்று சாதாரணமாக அவன் பேசவும், மனதில் வலி உண்டானது.
இங்கே நான் இவனை நினைத்து, மறுகிக் கொண்டு இருக்க, அவனோ கூலாக பேசுவதை பார்த்து ஒரு பக்கம் வலித்தாலும், மறு பக்கம் கோபம் கோபமாக இருந்தது.
“எனக்கு என்ன, நான் நல்லா இருக்கேன். என் வேலையும் நல்லா போகுது, thanks” என்று கூறிவிட்டு, அவள் அண்ணன், அண்ணியுடன் சென்று அமர்ந்து விட்டாள்.
“திமிர் பிடிச்சவன், எப்படி இவனால இப்படி இருக்க முடியுது? அதானே, கல்யாணம் பண்ணிக்க போறான் ல, அந்த சந்தோஷமா இருக்கும்” என்று பல்லை கடித்தாள்.
அவனோ, அவளின் பதிலில் மனதிற்குள் சிரித்துக் கொண்டு, அங்கு இருந்து நகர்ந்தான். அடுத்து அரை மணி நேரத்தில், மேடையில் பெண்ணையும், மாப்பிள்ளையையும் நிற்க வைத்து, அவர்களுக்கு நிக்கா செய்து வைத்தனர்.
மாப்பிள்ளையை பார்த்தவள், ஒரு நிமிடம் தான் காண்பது கனவோ, என்று கண்ணை கசக்கிக்கொண்டே மீண்டும் மீண்டும் பார்த்தாள்.
“இன்விடேஷன் சரியா பார்க்கலையா நீ, என் தம்பிக்கு தான் நிக்கா, எனக்கு இல்லை” என்று அவள் காதருகில் கேட்ட அவன் குரலில் சிலிர்த்து, தலையை திருப்பி பார்த்தாள்.
அங்கே, அவன் அவளை பார்த்து கண் சிமிட்டி புன்னகை புரிந்தான். அந்த சிரிப்பிலும், சிமிட்டலிலும் மயங்கி தான் போனாள்.
தொடரும்..