Dhuruvam 6
Dhuruvam 6
துருவம் 6
Faiq, அவள் வருவதற்காக காத்துக் கொண்டு இருந்தான். அவளிடம் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று யோசித்து ஒரு முடிவிற்கு வந்து இருந்தான்.
அவள் மதுரை என்று சொல்லிய பின், அவன் சிந்தனை முழுவதும் இத்தனை நாட்கள் அவன் தேடிய தேடலுக்கு விடை அங்கு தான் இருக்கின்றது என்பதை அவன் அறிவான்.
அங்கு செல்ல அவன் எத்தனையோ முறை யோசித்து இருக்கிறான், ஆனால் அவனால் மொழி பிரச்சனையில் போக முடியவில்லை.
அது மட்டுமின்றி, அவன் தேடும் விஷயம் சற்று அதில் ஞானம் உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே உதவ முடியும் என்பது அவனது கருத்து. அதை மெய்ப்பிக்கும் வகையில், காவ்யஹரிணி ஒவ்வொரு இடத்திலும் தன் புத்திகூர்மையை நிருபித்து இருந்தாள்.
ஆகையால், அவளின் உதவியை நாடுவது என்று முடிவு செய்து விட்டான்.
அங்கே காவ்யஹரிணி, துபாய் frame மாடியில் நின்று கொண்டு வெளி அழகையும், உள்ளே தங்கத்தால் செய்த சில frameகளையும் ரசிக்க மனமற்று ஏதோ சிந்தனை வயப்பட்டு இருந்தாள்.
“ஹையோ! ஏன் மீனு நான் இப்படி இருக்கேன்? இவன் கீழே தான நிக்குறான், அப்புறம் ஏன் இப்படி என் மனசு சோகமா இருக்குன்னு தெரியலையே!”.
“ஒரு வேலை இதான் காதலா! ஹையகோ! இது நல்லதுக்கு இல்லையே ரிகா! இப்போ என்ன செய்ய?” என்று புலம்பி தவித்தவளை அவளின் மனசாட்சி கேலி செய்தது.
“நீ கடைசி ஒட்டக கறி தான் சாப்பிடுவ போல, நீ சைட் அடிக்கும் பொழுதே நினைச்சேன்” என்று கேலி பேசிய மனசாட்சியை ஓங்கி உள்ளே தள்ளினாள்.
அங்கே எல்லாம் பார்த்து முடித்த பின், கீழே இறங்கியவர்கள் வேகமாக வேன் இருக்கும் இடத்திற்கு செல்ல, இவளும் அவர்களுடன் சென்றாள்.
Faiq, அவளை அழைத்து பேச நினைக்க, அவளோ அவன் அங்கு இருக்கிறான் என்று தெரிந்த பின், முடிந்தவரை கூட்டத்தோடு கோவிந்தா போட எண்ணி வேகமாக சென்று வேனில் ஏறிக் கொண்டாள்.
இவனும் வேறு வழியில்லாமல், வேனில் ஏறி அமரவும், நேராக வேன் அடுத்து நின்ற இடம் இவர்கள் தங்கி இருந்த ஹோட்டல் தான். எல்லோரும் கீழே இறங்க, பாஸ்கர், சேகர், மனோ மூவரும் அவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு, நாளை அட்டவணை பற்றி விசாரிக்க தொடங்கினர்.
அவன் அவர்களிடம் விளக்கம் கொடுத்துக் கொண்டு இருந்தாலும், கண்கள் உள்ளே சென்று கொண்டு இருந்த காவியஹரிணி மேல் தான் இருந்தது. அவளோ, எங்கே இவனை திரும்பி பார்த்தால், மீண்டும் இதயம் வேகமாக துடிக்க தொடங்கி விடுமோ என்ற அச்சத்தில் திரும்பி பார்க்காமல் சென்றாள்.
அவள் அப்படி திரும்பி பார்க்காமல் சென்றதிலே, faiqகிற்கு புரிந்துவிட்டது, அவள் அவனை தவிர்கிறாள் என்று. மனதிற்குள் அவள் மேல் சிறு கோபம் எழுந்தாலும், அவன் அதை காட்டிக் கொள்ளவில்லை.
“நாளைக்கு உன்னை, எப்படி என் கிட்ட பேச வைக்கிறேன் பார்” என்று மனதிற்குள் அவளிடம் சவால் விட்டான்.
அவளின் அறைக்குள் வந்ததும், முதலில் கை, கால்களை எல்லாம் கழுவிக் கொண்டு, நேராக அவளின் தாத்தா அறைக்கு தான் சென்றாள்.
“வா மா எப்படி இருந்தது, இன்னைக்கு ட்ரிப் துபாய் விசிட் எல்லாம்” என்று கேட்டார் தாத்தா.
“ம்ம்.. நல்லா இருந்தது தாத்தா. அப்புறம் தாத்தா, அந்த பார்ஸல் வந்துடுச்சா?” என்று கேட்டாள்.
“ஆமா! இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்துச்சு. நாச்சி! அவளுக்கு அதை எடுத்து கொடு மா” என்றார்.
“பாட்டி! இருங்க வெய்ட் அது, நானே எடுத்துக்கிறேன்” என்று கூறிவிட்டு அவளே அதை எடுத்துக் கொண்டு, அங்கேயே அதை திறந்து காட்டினாள் தன் தாத்தாவிடம்.
“என்னங்க! இவ்வளவு விலை கொடுத்து வாங்கி இருக்கா, என்னனு கேட்க மாட்டீங்களா! அந்த பெட்டியில் என்ன இருக்குனு கேட்கும் பொழுது, நீங்க வாய்யே துறக்கல”.
“இப்போ பார்த்தா, முழுசும் தங்கமும், நவரத்ன கல்லும் இருக்கு. என்னங்க இது எல்லாம்? இதை வச்சு, என்ன செய்றதா இருக்கீங்க?” என்று அவரை பார்த்து கூர்மையுடன் கேட்டார் நாச்சியார்.
“நாச்சி! நான் சொல்லுறதை நல்லா கவனி, இந்த விஷயம் நம்ம மூணு பேருக்கு மட்டும் தெரிஞ்சா போதும் நினைக்கிறேன். ஏற்கனவே, பேத்திக்கு விஷயம் தெரியும், அதனால தான் இப்போ அவ இங்க இருக்கா” என்று கூறியதை கேட்டு அதிர்ந்தார்.
“என்னமோ, வீட்டுல அவ துபாய் போக கூடாதுன்னு அந்த கலாட்டா பண்ணீங்க. இப்போ இங்க என்ன செய்றீங்க!” என்று குழம்பினார்.
அவர் அப்படி செய்ததற்கான காரணத்தை, சொல்ல தொடங்கினார். எல்லாவற்றையும் கேட்ட பாட்டிக்கு, அதிர்ச்சியாக இருந்தது.
“ஏங்க! இது என்ன விளையாடுற விஷயமா? பேத்திக்கு ஆபத்து இதனால வந்தா, என்ன செய்வீங்க? கொஞ்சம் யோசிங்க!” என்று கூறியவரை பார்த்து சிரித்தார் தாத்தா.
“என் பேத்தியை என்ன நினைச்ச! அவ மதுரை மீனாட்சி ஆண்ட ஊரில் பிறந்தவ, அவளை எப்படி பாதுகாத்துக்கணும்ன்னு அவளுக்கு நல்லா தெரியும், நீ கவலை படாத நாச்சி” என்று கூறியவரை பார்த்து, ஒன்றும் பேச முடியாமல் நின்றார்.
அவருக்கும் பேத்தி பற்றி நன்றாக தெரியும், விட்டால் ஊரையே வித்துவிடும் விதககாரி, தைரியசாலி என்று. போன வாரம் அண்ணிகள் செய்த பிரச்சனைக்கு, அவள் நினைத்தால் அங்கேயே அவர்களை பதம் பார்த்து விடுவாள். அவள் அப்படி செய்யாமல் விட்டதற்கு, ஒரே காரணம் குடும்பம் இதனால் பிரிய கூடாது என்ற ஒரே நல்லெண்ணம் தான்.
ஆனால் அது அவர்களுக்கு, அப்படி ஒரு சிந்தனை இருப்பது போல் தெரியவில்லை. நேற்று கூட ஜாடை மாடையாக பேசிக் கொண்டு தான் இருந்தனர், அவர்களின் சுபாவம் என்று இறுதியில் விட வேண்டியதாகிற்று.
“தாத்தா! நாம நினைச்சது சரி தான், இதுல இருக்கிற சில குறிப்புகளும் அதையே தான் சொல்லுது. நான் ஸ்டீபன்க்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிடுறேன், அவனை நம்ம வீட்டு கெஸ்ட் ஹௌஸ் ல தங்க ஏற்பாடு செய்துடுங்க தாத்தா” என்று கூறினாள்.
“சரி மா! நான் பார்த்துக்குறேன், நீ போய் அவனுக்கு பேசிட்டு சீக்கிரம் படு. நாளைக்கும் வெளியே போகணுமே, நல்லா ரெஸ்ட் எடு டா” என்று கூறி அனுப்பி வைத்தார்.
அறைக்கு வந்தவள், அவளின் கல்லூரி தோழன் ஸ்டீபன்க்கு கால் செய்து விபரம் கூறி ஒரு வாரத்தில் தாத்தா வந்த பிறகு, அங்கே வீட்டில் தங்கிக் கொள்ளுமாறு கூறினாள்.
அந்த பக்கம் இருந்து, சில கேள்விகள் வரவும் அதற்கு தக்க பதில்களை சொல்லிவிட்டு வைத்தாள். பின்னர் கட்டிலில் சாய்ந்தவள், நாளை எப்படி faiqக்கை பாராமல் இருக்க வேண்டும் என்ற யோசனைக்கு சென்றாள். யோசனையின் முடிவில் நாயகிக்கு தூக்கம் தான் வந்தது, நாயகன் அவள் கனவில் உலா வர தொடங்கிவிட்டான்.
மறுநாள் அவன் சொல்லிய நேரத்திற்கு எல்லோரும் தயாராகி இருந்தனர். ஆகையால், அவன் வேனில் வந்தவுடன் எல்லோரும் ஏறி அமர்ந்தனர்.
இன்று அவள், பிளாக் ஜீன், வெள்ளை குர்தா, சிகப்பு ஷால் அணிந்து இருந்தாள்.
கண்களில் கருப்பு கலர் குளிர் கண்ணாடி, தலையில் ஒரு தொப்பி, தோளில் சின்னதாக ஒரு கைப்பை, ஒரு கையில் செல்பேசி சகிதம் நின்று இருந்தவளை, பார்க்க faiqற்கு சிரிப்பு வந்தது.
என்னதான் அழகாக இந்த உடையில் அவள் இருந்தாலும், அவன் கண்களுக்கு ஏதோ அவளுக்கு அந்த உடை பொருந்தாதது போல் இருந்தது.
அவன் வந்ததில் இருந்து அவளை பார்க்க, அவளோ அவனை பார்க்காமல் கையில் செல்பேசியை மும்முரமாக பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“கையில் இருக்கிற போனை தூக்கி, என்கிட்டாவது போட போறேன் நான். வேணும்னே, இவ என்னை பார்க்க மாட்டேங்குரா, இவளை என்ன செய்யலாம்?” என்று பல்லை கடித்துக் கொண்டு இருந்தான்.
அவளோ, கையில் இருந்த செல்பேசியில் நேற்று எடுத்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டு இருந்தாள். முக்கியமாக, அவன் அதில் இருக்கும் புகைப்படங்களை தேடி தேடி எடுத்து பார்த்தாள்.
“இங்க பாருங்க எல்லோரும், நாம இப்போ ஓல்ட் துபாய் போக போறோம். ஓரிடத்தில் வண்டியை நிறுத்திட்டு, அங்க இருந்து சின்ன போட் ல தான் போகணும். கோல்ட் மார்க்கெட் ஒரிஜினல் எல்லாம், அங்க தான் இருக்கு”.
“ரெண்டு மணி நேரம் அங்க நீங்க ஷாப்பிங் செய்யலாம், அதுக்கு அப்புறம் நேரா பாலைவனத்துக்கு தான் போக போறோம்” என்று faiq அறிவிக்கவும், எல்லோரும் தலை அசைத்தனர்.
வண்டி ஓரிடத்தில் நிற்கவும், காவ்யஹரிணி முதல் ஆளாக பிள்ளைகளை அழைத்துக் கொண்டு இறங்கினாள். அவள் அப்படி இறங்கியதில் அவனுக்கு புரிந்தது, தன்னை தவிர்க்க அவ்வாறு செய்கிறாள் என்று.
“நீ போ மா! உன்னை எங்க பிடிக்கணும் அப்படினு எனக்கு தெரியும். என் கிட்டையே, நீ இப்படி கண்ணாமூச்சி ஆடுரியா!”.
“ஜஸ்ட் வெய்ட் அண்ட் வாட்ச் பேபி, யூ ஆர் கோயிங் டு பி இன் மை கண்ட்ரோல், சூன்” என்று அவன் மனதிற்குள் நினைத்தது பாவம் அவளுக்கு தெரியவில்லை.
அங்கே போட்டில் பயணம் செய்து, அந்த பக்கம் சென்றவர்கள் முதலில் உணர்ந்தது மதுரை பஜாருக்குள் நுழைந்தது போன்ற ஒரு பிரமை தான். ஏனெனில், ஓரிடத்தில் போண்டா, வடை சுட்டுக் கொண்டு இருந்தார்கள்.
ஒரு பக்கம் முழுவதும், சிறுவர்கள் விளையாட்டு பொருட்கள் கொண்ட கடை, மறுபக்கம் முழுவதும் நகை கடை என்று அந்த ஏரியாவே ஜெகஜோதியாக இருந்தது.
“அத்தை! நாம துபாய் ல தான இருக்கோம்” என்று ஒரு வாண்டு கேட்கவும், எல்லோருக்கும் சிரிப்பு வந்தது.
“போக்கிரி! துபாய் தான், ஆனா இது நம்ம ஏரியா! அண்ணி நீங்க ஷாப்பிங் செய்ங்க, நானும் மனோவும் பிள்ளைகளை பார்த்துகிறோம்” என்று இரு அண்ணிகளிடமும் கூறிவிட்டு, பிள்ளைகளோடு பிள்ளையாக அந்த ஏரியாவில் குதுகுலமாக வலம் வந்தாள்.
அதை பார்த்த faiqகிற்கு, இவள் எப்படிப்பட்டவள் என்று தெரியமல் ஒரு நிமிடம் குழம்பி போனான். இவளை அவனால், கணிக்க முடியவில்லை இப்பொழுது.
அவனிற்கு, இப்பொழுது தான் அவளை பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ள ஆர்வம் எழுந்து இருக்கிறது. முதல் முறையாக, அவன் வாழ்க்கையில் அவன் தாய்க்கு பின் அதிகமாக யோசித்த பெண் இவள் தான்.
இவன் சித்தி, தங்கை பற்றி எல்லாம் கூட இவ்வளவு யோசித்தது இல்லை. ஆனால், இவள் இங்கு வந்ததில் இருந்து அவன் இவளை பற்றி தான் அதிகம் யோசிக்கிறான்.
“இவளை நான் ஏன், இவ்வளவு தீவிரமா நினைக்கணும்? ஒரு வேலை அவள் மதுரைன்னு சொன்னதுல தான், நான் இவளை ரொம்ப யோசிக்கிறேனா!”.
“அப்பாடித் தான் இருக்கணும், இல்லைனா ஒரு பெண்ணை பற்றி இவ்வளவு தீவிரமா நான் ஏன் நினைக்கணும்?” என்று எண்ணிக் கொண்டு அவர்களை கண்காணிக்க தொடங்கினான்.
இரண்டு மணி நேரம், எப்படி சென்றது என்று தெரியவில்லை அவர்களுக்கு. அங்கேயே, சமோசா, வடை, பாணி பூரி என்று விதவிதமாக வாங்கி சாப்பிட்டு வயிற்றை நிறப்பிக் கொண்டு கிளம்பினர்.
அங்கு இருந்து, ஒரு இரண்டு மணி நேர பயணம் பாலைவனத்திற்கு செல்ல. ஆகையால், அசதியில் எல்லோரும் சிறிது கண்ணயர்ந்தனர்.
காவ்யஹரிணிக்கு, தூக்கம் வராமல் அவள் மனது நேற்றைய குறிப்பில் சிந்தனை வயப்பட்டு இருந்தது. அவள் அதை பற்றி யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுது, தற்செயலாக முன்னாடி பார்க்க அங்கே அவன் சுவாரசியமாக சிரித்துக் கொண்டு பேசினான் அந்த டிரைவரிடம்.
அவனின் அந்த சிரிப்பில், அவள் தொலைந்து போக தொடங்கினாள். அவனை அப்படி அவள் பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுது, ஒரு உந்துதலில் அவன் திரும்பி பார்க்க அவன் பார்க்கவும், திடுக்கிட்டு கண்களை தாழ்த்தி கொண்டாள்.
அவள் இதயம் துடிக்கும் துடிப்பு, அவளுக்கு நன்றாக கேட்டது. பயத்தில், கையை இதயத்தில் வைக்க அந்த துடிப்பு அதிகரிப்பதை உணர்ந்து மேலும் அதிர்ந்தாள்.
“ஹையோ! மீனு நான் மாட்டிக்கிட்டேன் போலயே! கடவுளே! இப்போ எதுக்கு இந்த சோதனை?” என்று மனதிற்குள் புலம்பி தள்ளினாள்.
அதற்குள் அவர்கள் வந்து சேர வேண்டிய இடம் வரவும், அவளுக்கு அப்பொழுது தான் மூச்சு வந்தது. இறங்கி, அந்த இடத்தை பார்த்தவள் மனதிற்குள் வாவ் என்றாள்.
அவளுக்கு சாகசம் என்றால் பிடிக்கும், அதுவும் பைக்கில் என்றால் கேட்கவே வேண்டாம் அவ்வளவு உற்சாகம் வந்துவிடும்.
இப்பொழுது வந்து இருக்கிற இடம், பைக்கில் மணலில் சஃபாரி செய்வதற்கு. அதுவும், அந்த பெரிய சைஸ் பைக்கில், மேடு பள்ளம் கொண்ட மணலில் சபாரி செய்வது தனி சுகம்.
இரு அண்ணிமார்களும், அவர்களுக்குள் பிரித்துக் கொண்டு பைக் எடுத்துக் கொண்டனர். மனோவிடம், இவள் சேர்ந்து செல்லலாமா என்று கேட்டதற்கு, அவன் நீ தனியாக செல் எனவும் அவள் முறைத்தாள்.
அவனோ, அதை எல்லாம் அசட்டை செய்துவிட்டு அவன் ஒரு பைக் எடுத்து முன்னேறினான். தனி பைக் கையில் கிடைக்கவும், உல்லாசமாக அந்த பைக்கில் உலா வர தொடங்கினாள்.
அவளின் சந்தோஷத்தை பார்த்து, faiqகிற்கு ஏன் என்று தெரியாமல் மனதில் சந்தோஷ ஊற்று பெருக்கெடுத்து ஓடியது. அவள் சிரித்துக் கொண்டே அதை லாவகமாக ஓட்டுவதை பார்த்து, மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.
எல்லாம் நன்றாக சென்று கொண்டு இருந்தது, கடைசி ஒரு பதினைந்து நிமிடம் இருக்கும் தருவாயில் அவள் வண்டி மணலில் சிக்கிக் கொண்டது.
அதை எடுக்க அவள் போராட, அவளால் அது முடியவில்லை. கண்களில் அருவி இப்பொழுதோ, அப்பொழுதோ என்று வர இருக்கும் சமயத்தில் வந்து சேர்ந்தான் faiq.
“மிஸ்! பின்னாடி கொஞ்சம் தள்ளி உட்காருங்க. நான் ஹெல்ப் பண்ணுறேன், நல்லா டைட்டா பிடிச்சிக்கோங்க” என்று கூறிவிட்டு, அந்த பைக்கை நன்றாக ரைஸ் செய்து, மணலில் இருந்து வெளியே எடுத்த நொடி, பைக் சும்மா ஜெட் வேகத்தில் பறந்தது.
அதில் நிலை தடுமாறியவள், சீட்டின் பின் பக்கம் கையை பிடித்து இருந்தவள், முன் பக்கம் அவன் இடுப்பில் சுற்றி கை போட்டு, அவனை இருக்கிக் கொண்டாள்.
இப்படி ஜெட் வேகத்தில் அவள் சென்றது கிடையாது, இப்பொழுது அவன் அப்படி செல்லவும், ஒரு பக்கம் உயிர் பயம் இருந்தாலும், அவன் அருகில் இருப்பதால் அவள் அந்த பயணத்தை ரசித்துக் கொண்டாள் மனதிற்குள்.
இக்காட்சியை, நல்லவேளை அவள் வீட்டில் இருந்து வந்த ஜீவிகள் மனோகரை தவிர்த்து யாரும் பார்க்கவில்லை. எல்லோரும், அங்கே பக்கத்தில் இருக்கும் கழுகு கண்காட்சிக்கு இது முடிந்து சென்று இருந்தனர்.
பைக் நிற்கவும், அவள் இறங்கி அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, விறுவிறுவென்று அங்கு இருந்து ஓடி மனோவின் அருகே சென்று அமர்ந்து கொண்டாள்.
“அக்கா! செம அக்கா அந்த அண்ணா, சும்மா ஸ்டைலா என்னமா ஓட்டினார். நீ இப்படி ஒரு ரைட் போனது லக்கி தெரியுமா!” என்று வியந்தவனை ஒரு பார்வை பார்த்து சிரித்தாள்.
“வேணும்னா, நீ அவரோட ஒரு ரைட் போ. உயிர் பயம் அப்படினா என்னனு, நல்லா காட்டுவார் போறியா!” எனவும் அவன் வாயை மூடிக் கொண்டான்.
இன்னும் வேகமாக துடிக்கும் இதயத்தை, அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு பாட்டில் தண்ணீர், உள்ளே தள்ளி சரி செய்ய பார்த்தாள்.
அந்தோ பரிதாபம்! அவளால் அது முடியவில்லை. ஏனெனில் அடுத்து suv வண்டியில் மணல் சபாரி, இவன் தான் மனோவிற்கும், அவளுக்கும் டிரைவர்.
ஹையோ இவனா! என்று அவள் அலற, ஹை ஜாலி இந்த அண்ணா தான் நமக்கு டிரைவர் என்று குதித்தான் மனோகர்.
மொத்தத்தில் அவளை வாந்தி எடுக்க வைக்காமல், அவன் விட போவது இல்லை(உடனே கற்பனை குதிரையை எங்கோ விட வேண்டாம் மக்களே, இப்போ தான் ride ஆரம்பிச்சு இருக்கு, இன்னும் எவ்வளவோ போகணும்).
“பிலீஸ்! கொஞ்சம் மெதுவா போனா பெட்டர்” என்று வண்டிக்குள் ஏறி அமர்ந்த உடன் அவளாக, அவனிடம் பேசினாள்.
“நான் எவ்வளவு நேரம் உன் கிட்ட பேசனும்ன்னு, ட்ரை பண்ணேன். நீ பேசினியா, இரு இப்போ இந்த ரைட் ல உன்னை பேச வைக்கிறேன்” என்று மனதிற்குள் கருவிக் கொண்டான்.
லேசாக மண்டையை மட்டும் ஆட்டிவிட்டு, இவன் வண்டியை எடுத்தான். உள்ளே அந்த மெயின் ஏரியா வரும் வரை, மெதுவாக சென்றவன் அடுத்து அவன் ஆட்டத்தை காட்ட தொடங்கினான்.
அவளோ, கத்தி தள்ளிவிட்டாள் அவனின் வேகத்திற்கு பயந்து. அங்கே இருந்த ரியர் வியூ கண்ணாடியில், கண்களால் அவள் கெஞ்சவும் அதன் பின் என்ன நினைத்தனோ, மெதுவாக ஓட்டினான்.
கண்களாலே அவனுக்கு நன்றி செலுத்திவிட்டு அவள் அப்பாடா என்று அமரும் பொழுது இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது.
அங்கே கம்பீரமாக நின்று இருந்தது, ஒட்டகங்கங்கள். அதில் தான் அடுத்த சபாரி, அவளோ அதில் ஏற மறுத்து விட்டாள்.
“அக்கா! இதான் அடுத்த மெயின் பார்ட். இதுலையும் ஒரு ரௌண்ட் போயிட்டு வரலாம், வா அக்கா” என்று பிடித்து இழுத்தான்.
மனமே இல்லாமல், அந்த பாவப்பட்ட ஜீவன் மேல் ஏறி அமர்ந்தாள். முன்னும், பின்னும் அது செல்லும் அழகை பார்த்தவள் அதை ஆசையாக வருடி கொடுத்தாள்.
“நீ தான் சூப்பரா என்னை கூட்டிட்டு போற, அவன் என்னை படுத்தி எடுத்துட்டான் தெரியுமா வேகமா வண்டியை ஒட்டி” என்று மானசீகமாக அதனுடன் பேசினாள்.
இதை எல்லாம் அவள் தன் செல்பேசியில் எடுக்க மறந்து இருந்தாலும், faiq மறக்காமல் அதை எல்லாம் எடுத்து அவன் செல்பேசியில் பத்திரப்படுத்தி இருந்தான்.
ஒட்டக சபாரி முடிந்த பின், அடுத்து அவன் கூட்டி சென்ற இடத்தை பார்த்து முகத்தை சுளித்தாள். அதில் மீண்டும், அவள் முகம் திருப்பிக் கொள்ள இந்த முறை அவன் அவளை பிடித்து தன் கையிருப்பில் இறுத்திக் கொண்டான்.
தொடரும்..