eks-full

eks-full

இரவு நேரம்.. பௌர்ணமி வானம்..! மொட்டை மாடி தனிமை.. தேகம் தீண்டும் தென்றலின் குளுமை..! நானாக இருந்தால் இக்கணம் உறைந்து போகும் வரமொன்றை என் இஷ்ட தெய்வத்திடம் கேட்டிருப்பேன்..

 

ஆனால் அவன்.. ப்ரியன்.. நிலவொளியும் உடலில் படாதவாறு சுவரோரமாய் சுருண்டு படுத்திருந்தான். ஹெட் ஃபோன் வழியாக கசிந்து, அவன் காதின் நரம்புகளில் தன் கம்பீரக் குரலைக் கடத்திக் கொண்டிருந்தார், ஹரிஹரன்..!

 

“வெண்ணிலவே.. வெண்ணிலவே…

என்னைப் போலத் தேயாதே..

உன்னோடும் காதல் நோயா..?”

 

ரிப்பீட் மோடில் போட்டு விட்டு வானில் காயும் நிலாவை வெறித்துக் கொண்டிருந்தான்.

 

எங்கே பிழை செய்தான்..? தன் தோழன் என்று முழு நம்பிக்கையை அவன் மேல் வைத்தது தான் பிழையா? அன்றி இனி தன் வாழ்க்கை முழுதும் அவளொருத்தியின் புன்னகையில் மட்டுமே என்று ஒட்டுமொத்த அன்பையும் அவள் மேல் கொட்டியது பிழையா?

 

ப்ரியனின் தோழன் விஷ்வா. இருவரும் சேர்ந்து ஆரம்பித்த கம்பெனி ‘பிவி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’. நன்றாக சென்று கொண்டிருந்த நட்பு எப்போது, எங்கே தடம் புரண்டதெனத் தெரியவில்லை.. விஷ்வா.. கொஞ்சம் கொஞ்சமாக கம்பெனி சொத்துக்களைத் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டு.. இன்று மொத்தமாக முதுகில் குத்தி விட்டான்.

 

கம்பெனி ப்ரியனிடம் இல்லை எனத் தெரிந்த கணம்.. தன் காதல் பொய்யென்று உரைத்துச் சென்று விட்டாள், ப்ரியனின் ப்ரியமானக் காதலி ப்ருந்தா..!

 

அடுத்தடுத்த அடிகளால் மீள விரும்பாமல் உடைந்து போய், இருளோடு இன்பம் தேடிக் கொண்டிருக்கிறான், இவன்.

 

திடீரென அந்த அந்தகாரத்தைக் கிழித்துக் கொண்டுக் கேட்டது ஒரு கிசுகிசுக் குரல்..! பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தவன் முதலில் கவனிக்கவில்லை. இப்போது இரு குரல்கள் வழக்கடித்துக் கொண்டிருந்தன.

 

புருவம் சுருக்கியவன்.. தலையை லேசாகத் திருப்பி, சுவற்றின் அலங்கார துளை வழியாகக் குரல் வந்த திசையில் பார்த்தான். அவனின் சுருங்கியப் புருவங்கள் அழகாய் விரிந்தன, ஆச்சர்யத்தில்..!

 

இதென்ன.. இன்று இவனுக்கென்று ‘இரட்டை நிலவுகளின்’ தரிசனமா!!! ஆம்! அந்த பௌர்ணமி நிலவிற்குப் போட்டியாக வெள்ளை நிற நைட் ட்ரெஸ்ஸில் நின்றப் பெண்ணவள் தான்.. அடுத்த மாடியில் நின்று அந்த வீட்டு பொடிப் பயல் தருணுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.

 

காலையில் வேலைக்கு கிளம்பும் அவசரத்தில்.. அன்னை, பக்கத்து வீட்டில் அவர்களின் சொந்தக்காரப் பெண் வந்திருப்பதாகக் கூறியத் தகவலை.. தான் அரைகுறையாகக் காதில் வாங்கியது.. லேசாக நினைவடுக்கில் படிந்திருந்தது.

 

இருவரும் கைகளில் எதையோ பிடித்து இழுத்து கொண்டிருந்தனர்.

 

“சொல்றதக் கேளுடா குட்டி சாத்தான்.. நான் ஃபர்ஸ்ட் விடறேன்.. கொஞ்சம் மேலப் போனதும் உன்கிட்ட தந்துடறேன்.”

 

“முடியாது.. நீ ஜாலியா விட்டுட்டு இருப்ப.. அதுக்குள்ள யாரும் வந்தா என்னை டீல்ல விட்டுட்டு நீ நல்ல பொண்ணு மாதிரி எஸ்கேப் ஆகிடுவ..”

 

“ஷ்ஷ்.. கத்தாதடா.. அப்டிலாம் பண்ண மாட்டேன்..”

 

“முடியாது குடு. வெண்ணி.. பன்னி”

 

“ஏய்… இன்னொரு வாட்டி பன்னி சொன்ன.. வாயத் தச்சிடுவேன்..”

 

“ நீ மட்டும் என்னைக் குட்டி சாத்தான் சொல்லல?”

 

“சரி இனி சொல்ல மாட்டேன்.. இப்ப அத என்கிட்ட குடு..”

 

“நீ யார் வந்தாலும் என்னை விட்டு போக மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு..”

 

“ப்ராமிஸ் பண்ணா.. உனக்கு கேர்ள் ஃப்ரெண்ட் கிடைக்க மாட்டாளாம்டா பரவாயில்லயா?”

 

பிஞ்சு விரலை, நாடியில் வைத்து யோசித்தவன்.. “நிஜமாவா பன்னி?” கேட்டான், தீவிரமான முகபாவனையோடு..!

 

அவள் முறைத்துப் பார்த்ததும்.. “சரி சரி.. வெம்மதி..” என்றான், சமாதானமாக..!

 

“ஹய்யோ… வெம்மதி இல்லடா.. வெண்மதி..” என்றாள்.

 

இங்கே இவன் இதழ்கள் பிரிந்து.. மிகமிக மென்மையாக உச்சரித்தது.. “வெண்மதி” என்று..!

 

அவர்கள் இருவரும் ஒரு வழியாக சமாதானமாகி.. பட்டம் விட ஆரம்பித்திருந்தனர். பட்டம் விடத் தான் இந்த ஆர்பாட்டம் போலும்.

 

ப்ரியன் தன் மொபைலில் நேரம் பார்த்தான். இரவு மணி ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. புன்னகையோடு அவர்களைப் பார்த்து விட்டு திரும்பிப் படுத்தான்.

 

தன் மனதைக் கூறுப் போட்டுக் கொண்டிருக்கும் ப்ருந்தாவின் நினைவுகளில் மூழ்க ஆரம்பித்த நேரம்.. மீண்டும் இருவரிடையே சலசலப்பு.. ‘இப்ப என்னவாம்..?’ யோசித்தவாறேத் திரும்பிப் பார்த்தவன்.. பீறிட்டு வந்த சிரிப்பை அடக்க முடியாமல் கைகளால் வாயை இறுக மூடிக் கொண்டான்.

 

பட்டத்தின் நூல் அறுந்து எதிர் வீட்டின் மாமரத்தில் சிக்கிக் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. தருண், பெரிய மனித தோரணையோடு.. இருக் குட்டிக் கைகளையும் மார்பின் குறுக்கேக் கட்டி.. குற்றம் சாட்டும் பார்வையைப் பார்த்திருந்தான். அவள், இருக் காதுகளையும் பிடித்துக் கொண்டு.. அவன் முன்னால் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தாள்.

 

“போதுமா..? கால் வலிக்குது தருண்.. ப்ளீஸ்டா.. சாரிடா..”

 

“எனக்கு என் பட்டம் வேணும்.. இப்பவே வேணும். அதில்லாம நான் சாப்ட மாட்டேன்.. தூங்க மாட்டேன்.. யாரோடயும் பேச மாட்டேன்.”

 

“டேய் செல்லோ.. அப்டிலாம் சொல்லக் கூடாதுமா.. வெண்மதி நாளைக்கு வேற செஞ்சு தருவாளாம்.. தருண் ஜாலியா பட்டம் விடுவானாம்.. ஓகேவா?”

 

“முடியாது.. நான் எவ்ளோ கஷ்டப்பட்டு அத செஞ்சேன் தெரியுமா? நம்ம ரொம்ப டெடிகேட்டிவா.. கஷ்டப்பட்டு செய்ற விஷயம் எப்பவும் நம்மள விட்டு போகாதுனு எங்க ஹேமா மேம் சொல்லிருக்காங்க. இப்.. இப்ப.. இப்ப மட்டும் ஏன் போச்சாம்? சொல்லு வெம்மதி..” என்று கண்களில் நிறைந்து விட்ட நீரோடு உதட்டைப் பிதுக்கினான்.

 

“இங்க பாரு.. இப்ப என்ன? நீ கஷ்டப்பட்டு செஞ்ச உன்னோட பட்டம் உனக்கு வேணும். அவ்ளோ தான?”

 

“ம்ம்..”

 

“அதுக்கு இப்டி அழுதுட்டு மூலைல உட்கார்ந்தா ஆச்சா? உன்னை விட்டு போன உன் பொருள மீட்டெடுக்க.. என்ன ஸ்டெப் எடுக்கலாம்னு யோசிக்கணும். கவலைய மறந்துட்டு அது கிடைக்கற வரை விடாம போராடணும். சரியா?” என்று அவனின் சுருள் கேசத்தைக் கலைத்து விட்டாள்.

 

ப்ரியனின் கரங்கள் தானாக.. மொபைலில் ப்ளே லிஸ்ட்டில் இருந்த பாடலை டெலிட் செய்தது.

 

“எப்டி..? அந்த ஆன்ட்டிக்கும் அம்மாவுக்கும் சண்டையாச்சே.. அவங்க காம்பவுண்ட்டுக்குள்ள விட மாட்டாங்க.”

 

“யோசிப்போம்டா வெல்லக்கட்டி.. ஏதாவது ஐடியா மாட்டும்.. கண்டிப்பா நமக்கு வழியில்லாம போகாது. அங்க பாரு.. மாங்கா பறிக்க பெரிய கம்பு மரத்துலயே சாய்ச்சு வச்சிருக்காங்க. அத வச்சு பட்டத்த எப்டியும் எடுத்துடலாம்..”

 

“நிஜமா?”

 

“ம்ம்.. உன் பட்டம்..! உன் உரிமை..!! தடை அதை உடை..!!!”

 

இவன் பரபரவென தன் லேப்டாப்பை விரித்து.. கம்பெனியில் தான் ஏமாற்றப்பட்ட விவரங்களை மீண்டும் ஒருமுறை பார்வையிட்டான். நிச்சயம் நமக்கான வழி எங்கேனும் இருக்கும் என்று மனம் கூவியது..!

 

“அது சரி.. இப்ப நம்ம எப்டி அங்கப் போறதாம்?”

 

“அது தான்டா இப்ப நம்ம ப்ரச்சனை..” என்று நெற்றியைத் தேய்த்து விட்டு கொண்டாள்.

 

“ரொம்ப நல்லவ மாதிரி நடிக்காத வெம்மதி.. நீ சுவரேறி குதிச்சு உங்க பக்கத்து வீட்டு அண்ணாவோட புது ஷர்ட்ல போஸ்டர் கலர்ஸ கொட்டி வச்சியாமே.. பெரிம்மா சொன்னாங்க..”

 

“ஹிஹி.. சொல்லிட்டாங்களா? அவன் நான் கடைக்கு போகும் போது என் ஷால புடிச்சி இழுத்தான்டா.. சும்மா விட சொல்றியா?”

 

“அப்டியா செஞ்சான்? அப்ப நீ அவனோட ஷர்ட்ட கிழிச்சு விட்ருக்கலாம் தான?”

 

“ரௌடி பயலே.. இப்ப அந்த பக்கம் எப்டி போகலாம்னு பார்ப்போம் வா..”

 

“தருண்..” – ப்ரியன்.

 

குரல் வந்த திசையைத் திரும்பி பார்த்தவன்.. திகைப்பாய், “ப்ரியண்ணா.. அது வந்து.. இந்த வெம்மதி தான் சாக்லேட் வாங்கி தரேன். நிலா வெளிச்சத்துல பட்டம் விட்டா செமயா இருக்கும் வா னு.. குட்டிபையன் தானனு என்னை ஏமாத்திக் கூட்டிட்டு வந்துட்டா..” என்றான், பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு..!

 

“அடப்ப்ப்பாவி.. குட்டிச்சாத்தான்..” – வெண்மதி.

 

சிரிக்கும் விழிகளோடு, “வெய்ட் பண்ணு.. உன் பட்டத்த நான் எடுத்து தரேன்.” என்றான்.

 

சொன்ன கையோடு நொடியில் கீழே சென்று, அந்தப் பக்கம் தாவி குதித்து.. சரசரவென மரமேறி, பட்டத்தை பத்திரமாக எடுத்து அணிந்திருந்த டீ-ஷர்டுக்குள் வைத்து, அடுத்த ஐந்தாவது நிமிடம் மாடியேறி வந்து.. அவர்கள் முன்னால் நின்றான்.

 

அவனின் செய்கைகளை விழிவிரித்துப் பார்த்து கொண்டிருந்த இருவரும் அவன் பட்டத்தைத் தந்ததும்.. சந்தோஷத்தில் துள்ளி குதித்து ஆர்பரித்தனர்.

 

பட்டத்தைப் பெற்றுக் கொண்ட தருண், “தாங்க்யூ ப்ரியண்ணா..” என்று கூறியவாறே கீழே ஓடி விட்டான்.

 

“தாங்க்ஸ் அ பன்ச்..” என்றாள், வெண்மதி.

 

“ம்ஹூம்.. நான் தான் உங்களுக்கு தாங்க்ஸ் சொல்லணும்..”

 

புரியாமல் புருவம் சுருக்கியவள், “நீங்க எதுக்கு சொல்லணும்?” கேட்டாள்.

 

“தொலைச்சத மீட்டெடுக்க வழி காமிச்சதுக்கு..”

 

இப்பவும் புரியாமல் விழித்தவள்.. தோள்களைக் குலுக்கி விட்டு, “ பை தி வே.. திஸ் இஸ் வெண்மதி..” என்று நட்புப் புன்னகையோடு வலக்கையை நீட்டினாள்.

 

இருளின் பிண்ணனியில் பூமியில் நின்ற.. வெண்மதியெனும் அந்த இரண்டாம் நிலவின் நட்புக்கரத்தைப் பற்றிக் குலுக்கினான், ப்ரியன்..!

 

திடீரென மாடியின் பக்கவாட்டு சுற்றுச்சுவரின் மீது இரு கைகள் முளைத்ததைத் தொடர்ந்து.. ஒருவன் மேலேறி வந்து.. இவர்கள் முன் மூச்சு வாங்க நின்றான்.

 

வந்தவன் இருக்கைகளால் இடுப்பைப் பிடித்துக் கொண்டு.. மாயக்கண்ணனைப் போல.. கன்னக்குழி சிரிப்போடு, வெண்மதியைப் பார்த்து.. “ஹாய் போங்கு” என்றான், முத்துப் பற்கள் மின்ன..!

 

அவனைப் பார்த்து அதிர்ந்த வெண்மதி, “என்ன கொடுமைடா இது?” என்றாள்.

 

புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்து நின்றான், ப்ரியன்.

 

2

 

ப்ரியன், வெண்மதியின் கரத்தைப் பற்றிக் குலுக்கிய போது.. அந்த மொட்டை மாடி மேல் மாயக்கண்ணனைப் போல திடீரெனத் தோன்றிவன்.. வெண்மதியை நோக்கி, “ஹாய் போங்கு” என்றான்.

 

விழிவிரித்து அதிர்ந்தவள்.. “டேய்.. இதென்ன திருடன் மாதிரி இப்டி வந்து நிக்கற?” என்றவளின்.. கண்களில் அதிர்ச்சியையும் மீறி சந்தோஷச் சாரல் தெறித்ததை கவனிக்கத் தவறவில்லை, ப்ரியன்!

 

“ஏய்.. உன்னைப் பாக்கறதுக்காக.. பைப்லாம் புடிச்சு ஏறி, ஹீரோ மாதிரி சாகசம் பண்ணி வந்துருக்கேன்.. ஒரே வார்த்தைல திருடன்னு டேமேஜ் பண்ணி விடற..?”

 

“நீ ஹீரோவா?” என்று அவனை மேலிருந்து கீழாக, நக்கலாக ஒரு பார்வை பார்த்து வைத்தாள்.

 

சற்றே சிவந்த நிறத்தில் ஆறடி உயரத்தைத் தொடவிருந்தவனின் தேகம்.. கட்டியம் கூறியது.. தான் அன்றாட உடற்பயிற்சியைத் தவற விடாதவன் என..! காற்றில் அழகாய் கலைந்திருந்த தலைமுடி பிடிவாதமாய் கூறியது அந்த சிறிய நெற்றியை முழுமையாய் காட்ட மாட்டேன் என..!  குறும்பு கூத்தாடும் விழிகள் கூறியது இவன் தீராத விளையாட்டு பிள்ளையென..!

 

“சரியான மொக்கப் பீஸூடி நீ.. நீ என் பர்சனாலிட்டியப் பார்த்து நக்கல் லுக் விடற..?” என்று பல்லைக் கடித்தவனின் விழிகளில்.. அவளுக்கான கரை காணாத நேசத்தைக் கண்டான், ப்ரியன்..!

 

“யாருடா மொக்கப் பீஸு..?” என்று சிலிர்த்துக் கொண்டாள்.

 

“இங்க இருக்க ஒரே பிஸு நீதான்டி வெண்மதி..” என்று அவளின் அதே நக்கல் பார்வையை அவளிடமேத் திருப்பி அனுப்பினான்.

 

வந்தவனின் தோள் வரை உள்ள உயரத்தில் இருந்தவள்.. பெயருக்கேற்றாற் போல மதி முகம் கொண்டிருந்தாள். அயர்னிங் செய்தாலும் அடங்க மாட்டேனென சுருண்டிருக்கும் கர்லிங் கூந்தலை பெற்றிருந்தாள். கண்களோ கடலோவென பிரித்தறிய முடியாத விழிகளைக் கொண்டிருந்தவள்.. இதழ்களில் இரண்டு ஸ்ட்ராபெர்ரிகளைப் பெற்றிருந்தாள்.

 

“பீஸு கீஸுனு சொன்ன.. பல்லப் பேத்துடுவேன் பார்த்துக்கோ..” என்று சீறினாள்.

 

“நீ? என் பல்ல? ஹாஹாஹா…” திடீரென அந்த அமைதியைக் கிழித்து கொண்டு வாய்விட்டு சிரித்தவனைப் பார்த்த ப்ரியனும், வெண்மதியும் திடுக்கிட்டு போய்.. சுற்றும் முற்றும் பார்த்தனர்.

 

“அடேய் அடேய்… புண்ணியமாப் போகும் நிறுத்தி தொல..” என்று தன் கரங்களால் அவன் வாயை மூடினாள், வெண்மதி.

 

அவளின் உள்ளங்கையில் இதழ் குவித்தவனை.. அவள் முறைத்துக் கொண்டே.. சட்டென கரத்தை விலக்கிக் கொண்டதும், ஒன்றும் நடவாதது போல்.. ப்ரியனிடம், “அப்புறம் பாஸ்.. இந்த போங்கு ஃப்ரெண்ட்னு சொல்லி அது கட்சில உங்கள சேர்க்கப் பார்க்குதா? நம்பாதீங்க பாஸ்.. இப்டி தான் திருட்டு வேலப் பார்க்கறதுக்கு ஆள் சேர்த்துக்கிட்டு இருக்குது..” என்றான்.

 

“நீதான்டா இப்ப திருடன் மாதிரி பைப் ஏறி அடுத்தவங்க வீட்டுக்கு வந்திருக்க..”

 

“ஆமாண்டி.. இந்த திருடன் இந்த வெள்ளபூதத்த ஸ்வாஹா பண்றதுக்காக பைப் ஏறி வந்திருக்கேன்..”

 

அவள் அவன் மீது கன்டனப் பார்வையை வீசி விட்டு.. சட்டென்று ப்ரியனைப் பார்த்தாள். ‘அவன் என்ன நினைத்துக் கொள்வான்? லூசு லூசு.. சரியான லூசு..! எப்ப என்னத்தப் பேசணும் தெரியுதா?’

 

ஆனால் அவன்.. அவளின் கன்டனப் பார்வையைக் கண்டு கொள்ளாமல்.. ப்ரியனின் தோள் மீது கைப் போட்டுக் கொண்டு.. “உண்மைய சொல்லுங்க பாஸ்.. இந்த நடு ராத்திரில.. இப்டி வைட் ட்ரெஸ்ல தலைய விரிச்சு போட்டு நிக்கறதப் பார்த்து.. உங்க ஹார்ட் எக்ஸ்பிரே டைம் குறிச்சிச்சு தான? ஆனாலும் பேய நேர்ல மீட் பண்ணதுக்கப்புறமும் எப்டி பாஸ் இவ்ளோ ஸ்டெடியா நிக்கறீங்க?” என்றான், போலியாக ஆச்சரியம் காட்டி..!

 

“டேய்ய்ய்..”

 

“பாருங்க பாருங்க.. பேய் எப்டி முழிய உருட்டுது!”

 

“இப்ப நீ இடத்த காலி பண்ணல… இங்க ஒரு கொல விழும்..”

 

“புதுசா உன்கிட்ட சிக்கின அடிமைக்கு.. உன் ஹேண்ட்சம் ஹீரோவ அறிமுகப்படுத்தி வைக்காம துரத்தப் பார்க்கறியே போங்கு?” என்றவன்.. ப்ரியனிடம், “ஹலோ பாஸ்.. நான் வேற நல்ல ஃபிகர் கிடைக்கற வரை இந்த போங்குகிட்ட காதலனா வொர்க் பண்ணலாமேனு.. கடந்த ஒன்னரை வருஷமா வொர்க் பண்ணிட்டு இருக்கேன்.. அதனால அதோட ஃப்ரெண்ட் எனக்கும் ஃப்ரெண்ட் தான்.. ஃப்ரெண்ட்ஸ்?” என்று கேட்டுக் கொண்டே கை நீட்டினான், அந்த புன்னகை மன்னன்.

 

வெண்மதி, “உன் மூஞ்சிக்கு வேற நல்ல ஃபிகர் வேணுமோ..?” என்று கடுப்பானாள்.

 

ப்ரியன் இன்னும் ஆச்சரியம் விலகாமல் பார்த்துக் கொண்டிருந்தான். யாரிவன்..! நடு இரவில்.. மொட்டை மாடியில்.. தன் காதலியுடன் ஒரு அந்நிய ஆடவன் கரம் குலுக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் எந்தக் காதலனின் கண்ணோட்டமும் வித்தியாசமாகவே தான் இருக்கும்.

 

ஆனால் இவன்!!! இவனால் எப்படி எந்த கேள்விக் கணைகளும் இல்லாமல் இயல்பாக பேச முடிகிறது? அதுவும் தன் தோளிலிலேயேக் கைப் போட்டு கொண்டு.. நட்பென்று கரம் நீட்ட முடிகிறது? தன் காதலி மேல் எத்தனை நம்பிக்கை இருந்தால் இவன் இவ்வளவு இயல்பாக இருப்பான்?

 

புதியவனை ப்ரியனுக்கு இன்னும் இன்னுமாய் பிடித்துப் போனது.. வெண்மதியின் நட்புப் புன்னகையை விட இரு மடங்கு புன்னகையோடு வந்தவன் நீட்டிய கரத்தைப் பற்றிக் குலுக்கினான்.

 

“யாஹ்.. ஃப்ரெண்ட்ஸ்.. நைஸ் டூ மீட் யூ.. அப்புறம் என் பேரு பாஸ் இல்ல.. ப்ரியன்..” என்றான் விரிந்த புன்னகையோடு..!

 

“ப்ரியன்..? ப்ரியமா…..னவனே….” என்று பாடியவன் வாயை வெண்மதி மீண்டும் தன் கரம் கொண்டு மூட வேண்டியதாய் போயிற்று. ஆதலால் அவனும் மீண்டும் அவள் உள்ளங்கையில் இதழ் குவிக்க வேண்டியதாய் போயிற்று. ஆதலால் அவளும் சட்டென கையை விலக்கி.. அவனை முறைக்க வேண்டியதாய் போயிற்று.

 

இந்தக் கூத்தினைப் பார்த்துக் கொண்டிருந்த ப்ரியனும் தன் இயல்பை மீறி சிரிக்க வேண்டியதாய் போயிற்று. தான் சற்று முன் இருந்த நிலை என்ன..? இப்போது மனம் நிறைந்து புன்னகைப்பதென்ன..? எல்லாம் இந்த மாயக் கண்ணனால் அல்லவா!!!

 

அவனைப் பார்த்தான். அவன் கண்கள் முழுதும் காதலை நிரப்பி வெண்மதியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

வெண்மதி, “நான் கீழப் போறேன்..” என்றாள்.

 

“ஓகே, குட் நைட்..” – ப்ரியன்

 

“எங்க ஓடுற?” என்று அவள் கையை பிடித்துக் கொண்டவன்.. “ப்ரியன்.. நீங்களும் தான்.. என் ஃப்ரெண்ட் ஆனதுக்கப்புறம் அவ்ளோ சீக்கிரம் தூங்க விட்ருவேனா? வெய்ட் பண்ணுங்க. இந்த பேய்க்கு பேய் ஓட்டிட்டு வர்றேன்..”

 

இதழ்களில் புன்னகை விரிய, “நான் அங்க தான் இருப்பேன்..” என்று தன் வீட்டு மொட்டை மாடியைச் சுட்டிக் காட்டி விட்டு.. நகர்ந்தான், ப்ரியன்.

 

இவள் கோபித்துக் கொண்டு அவன் பிடித்திருந்த கையை உதறி விட்டு.. கீழிறங்க மொட்டை மாடிக் கதவைத் திறந்து உள்ளே போகும் வரை அமைதியாகப் பார்த்திருந்தவன், அவள் கதவை மூடும் கடைசி நொடியில்.. பாய்ந்து சென்று, “ஹேய் போங்கு..” என்று வேண்டுமென்றே அவளை இடித்து நின்றான்.

 

“ஹய்யோ.. வெளியே போய் தொலைப் பிசாசே.. யாராவது வந்துடப் போறாங்க..”

 

“உன்னப் பார்க்கறதுக்காக எவ்ளோ கஷ்டப்பட்டு ***கிலோ மீட்டர் பைக் ஓட்டிட்டு இந்த மிட் நைட்ல சாகசம்லாம் பண்ணி வந்திருக்கேன்? நீ என்னடான்னா வெளிய விட்டு கதவைப் பூட்டற?”

 

“பைப் ஏறி திருட்டுப்பய மாதிரி வந்துட்டு பெருமை வேறப் பீத்திக்கறியா?”

 

“ஹ.. சுவரேறி குதிக்கறவளுக்குலாம் பைப் ஏறி குதிக்கறவன் தான் புருஷனா வருவான்.” என்று தான் அணிந்திருந்த டீ-ஷர்ட்டின் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.

 

“உன்னை மாதிரி வாலில்லாத கொரங்க லவ் பண்ணேன்ல எனக்கு தேவை தான்..” என்று அவள் தலையில் அடித்துக் கொள்ளும் விநாடிப் பொழுதில்.. அவளை இழுத்து, கன்னங்களை ஆக்கிரமித்திருந்தான்.

 

கன்னங்களோடும், காது மடல்களோடும் போர் செய்தது போதுமென.. கழுத்தடியில் இளைப்பாறியவன், “ஹ்ம்ம்.. ஆகச்சிறந்த பர்ஃப்யூம்..” என்றான், ஆழ்ந்த சுவாசத்துடன்..!

 

அதுவரைத் துவண்டு.. அவனின் டீ-ஷர்ட்டின் காலரை இறுக்கியிருந்தவள், இப்போது அவனைப் பிடித்துத் தள்ளி விட்டு.. தன் சிவந்த முகத்தைக் காட்டாமல் திரும்பி நின்று கொண்டு, “உன்னைக் கொன்னுடுவேன்.. ஓடிடு” என்றாள், பிசிறடிக்கும் குரலில்..!

 

“வெண்மதி…” கிறக்கமாக வெளிவந்த குரலில் மீண்டும் தன்னிலை இழக்க இருந்தவள், “மரியாதையா ஓடிப் போய்டு..” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.

 

திரும்பி நின்றிருந்தவளைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டவன்.. “நீயும் வர்றியா? ஓடிப் போலாம்..” என்றான்.

 

“அய்யோ..! தெய்வமே… தயவுசெஞ்சு கிளம்புமா.. ப்ளீஸ்ஸ்ஸ்..” அவள் கெஞ்சலில் இறங்கியதும்..

 

அவளை விட்டு விலகி நின்று கொண்டு, “ஹ்ம்ம்.. ஒரு ஹேண்ட்சம் ஹீரோவ, வருங்காலத்துல உன் புள்ளைக்கு அப்பாவா வரப் போறவன அலட்சியப்படுத்திட்டீல.. இந்த நாள் மட்டுமில்ல.. இனி வரப்போற ஒவ்வொரு நாளும் இதுக்காக நீ வருத்தப்படப் போற..”

 

“என்ன மண்ணாங்கட்டிக்காம்?” என்று பல்லைக் கடித்தாள்.

 

அவளின் கீழுத்தட்டைப் பிடித்திழுத்து, “இனி தினமும் இந்த ஸ்ட்ராபெர்ரிஸ டேஸ்ட் பண்ணாம விடமாட்டேன்..” என்றான், ஒற்றைக் கண்சிமிட்டி..!

 

வெண்மதி அவன் கையை தட்டி விட்டு.. பொறுமை இழந்த குரலில்.. மேலேப் பார்த்து, “காட்….” என்றாள்.

 

“ஏண்டி சும்மா சும்மா அவரயே டிஸ்டர்ப் பண்ற? நான் தான் உன் பக்கத்துல இருக்கேன் தான?”.

 

“அதனால தான் அவரக் கூப்பிட வேண்டியதா இருக்கு. சொன்னா கேளுடா.. அம்மா முழிச்சிக்கிட்டா பக்கத்துல நா இல்லனு.. என்னைத் தேடுவாங்க.. ப்ளீஸ் போயேன்..”

 

“அப்ப வா.. அம்மா பக்கத்துல கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிட்டு இருப்போம்..”

 

அருகிலிருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து.. “இப்ப மட்டும் நீ போகல.. மண்டைய உடைச்சிடுவேன்..” என்றாள்.

 

“ச்சே.. கொஞ்ச நேரம் காதலி கூட ரொமான்ஸ் பண்ணலாம்னு பார்த்தா.. போ போ னு துரத்தறா.. என்ன கொடுமை சார் இது?” என்று நெற்றியில் அறைந்து சலித்துக் கொண்டவன், அவளை இழுத்து பிறை நெற்றியில் அழகாய்.. சின்ன முத்தமொன்றை வைத்தப் பின்பே வெளியேறினான்.

 

வெளியே.. ப்ரியன் இன்னும் தூங்காமல் லேப்டாப்பில் நிறுவனத்தில் தான் ஏமாற்றப்பட்ட விவரங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். ‘கண்டிப்பா நமக்கு வழி இல்லாமப் போகாது’ காதில் வெண்மதியின் குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது.

 

திடீரென, “ஹாய் ப்ரியன்..” என்ற உற்சாகக் குரலில் தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு நிமிர்ந்தான். தன் அருகில் மடியில் அமராதக் குறையாக இடித்துக் கொண்டு வந்து உட்கார்ந்தவனைப் பார்த்ததும் தானாய் புன்னகை மலர்ந்தது, அவன் இதழ்களில்..!

 

“ஹாய்.. என்ன உங்க பேய்க்கு பேயோட்டியாச்சா?”

 

“போங்க பாஸ்.. எனக்கு வெக்க வெக்கமா கம்மிங்..” என்று ப்ரியனின் தோளில் முகம் சாய்த்து கொண்டான்.

 

“ஹாஹா..”

 

“அது சரி.. நானெல்லாம் வேலை நேரத்துலயே ஒழுங்கா வேலை செய்ய மாட்டேன்.. நீங்க என்ன இப்டி மிட் நைட்ல மிச்சமில்லாம வேலைய முடிச்சிட்டு இருக்கீங்க போலயே?”

 

“அது.. கொஞ்சம் கம்பெனி டீடெய்ல்ஸ்..”

 

“கம்பெனி? என்ன கம்பெனி பாஸ்? ஐஸ் கம்பெனியா?”

 

“ஹாஹா.. இல்ல.. கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி”

 

“ஊஊ.. வாவ்!!!” என்று கண்களை விரித்தவன்.. நம்ம லைனா நீங்க? ப்ரியன்.. இப்ப நம்ம நெருங்குனப் பங்காளி ஆயிட்டோம்” என்று ஹைஃபை கொடுத்தான்.

 

“அப்ப நீங்களும் கன்ஸ்ட்ரக்ஷன் ஃபீல்டு தானா?”

 

“ஆமா பாஸ்.. ஏண்டா இதப் படிச்சோம்னு தமிழ்நாட்டுல அம்புட்டு பயலும் ஃபீல் பண்றப் படிப்பு.. எங்களுக்கு வேலை கிடைக்குதோ இல்லயோ.. எங்கள வச்சு மீம் க்ரியேட்டர்ஸ்க்கு நல்லா வேலை கிடைக்குது.. ஹூம்ம்..”

 

“ஹாஹா.. இன்ஜினியரா நீங்க?”

 

“சரியாப் போச்சு.. அதத் தான இவ்ளோ நேரம் சொல்லிட்டு இருக்கேன்..?”

 

“ஓகே, எந்த கம்பெனில வொர்க் பண்றீங்க?”

 

“சென்னைல ‘தேவேந்திரன் கன்ஸ்ரக்ஷன்ஸ்’. தெரிஞ்சிருக்கணுமே உங்களுக்கு..”

 

“வாட்!!! தேவேந்திரன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸா? அது என் ஃப்ரெண்டோட கம்பெனியாச்சே..”

 

“யாரு? ரவீந்திரன்?”

 

“எஸ்.. தேவா அங்கிளோட ஒரே பையன் அவன் தான? ஹி இஸ் மை பெஸ்ட் ஃப்ரெண்ட்..”

 

“அவர் தான் என்னோட பாஸ்..”

 

“ஓ!! தேவா அங்கிள் ஃபீல்டு பத்தி எனக்கு நிறைய அட்வைஸ் குடுப்பார்.. நைஸ் மேன்..” என்ற ப்ரியனின் மனம்.. ‘அத்தனை அட்வைஸைக் கேட்டும் நிறுவனத்தைக் கோட்டை விட்டு விட்டோமே’ என அடித்துக் கொண்டது. பின் அவனாகவே, “பாருங்களேன்.. நீங்க உங்க பேரயே சொல்லல..” என்றான்.

 

“ஹாஹாஹா.. உஃப் என்று ஊதினால் அணையும் தீக்குச்சி அல்ல இவன்.. ஆயிரம் கரங்கள் கொண்டு மறைத்தாலும் மறையாதவன் இவன்.. இவன் இல்லயேல் அண்ட சராசரமே இல்லாமல் போகும்.. ஹாஹாஹா..”

 

சற்று முன் வெண்மதியிடம் வம்பு வளர்த்தவனைப் பார்த்திருந்தாலும்.. இப்போது ஒரு மாதிரி திருதிருவென முழிக்கவே செய்தான், ப்ரியன்.

 

‘என்னக் கொடுமை சார் இது? பேர தானக் கேட்டேன்!!!’

 

“புரியல.. சூர்யாவா உங்க பேரு?”

 

“அது தான் இல்ல.. ஆதவன்..” என்றான், புருவங்களை உயர்த்தி..!

 

“ஆதவன்? வெண்மதி – ஆதவன்..” சொல்லிப் பார்த்து விட்டு.. “தட்’ஸ் நைஸ்” என்றான், முகம் மலர..!

 

“அந்த போங்கு என் பேருக்காகவே என்னை லவ் பண்ணுதுங்க, ப்ரியன்..”

 

ப்ரியன், “ஃப்ரெண்ட்ஸ்னு சொல்லிட்டு ’ங்க’ போடறியே ஆத..” என்று சொல்லி வாய் மூடும் முன்..

 

“ஆமாண்டா ப்ரியன்.. நானே சொல்லணும் நினைச்சேன்டா.. ஃப்ரெண்ட்ஸா ஆனதுக்கப்புறம்டா மச்சிய விட்டுட்டு ‘ங்க’ போட்டோம்னாடா.. நட்புக் குத்தம் ஆகிடும்டா. இப்ப நீ சொல்லிட்ட தானடா.. இனி பாருடா.. உன்னை டால்டா ஆக்காம விட மாட்டேன்டா.. ப்ரியன்டா.. ஈஈஈ..”

 

அவன் ‘ஆமாண்டா’ என்று ஆரம்பிக்கையில் திகைப்பாய் பார்த்திருந்த ப்ரியன்.. பேசி முடிக்கையில் கடகடவென சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.

 

“ஹாஹா.. யூ ஆர் இன்ட்ரஸ்டிங் மேன் ஆதவன்”

 

இருவரும் சிறிது நேரம் பேசி முடித்து.. ஆதவன் கிளம்பும் போது.. “வா ஆது.. கீழ எங்க வீட்டு வழியா போகலாம்..” என்றான்.

 

“யாரைப் பார்த்து வாசல் வழியாகப் போக சொன்னாய்? மூச்சைப் பிடித்து.. சுவரேறி குதித்து.. சுற்றும் முற்றும் பார்த்து யார் கண்ணிலும் படாமல்.. கைகள் நோக பைப்பைப் பற்றி.. மேலேறி மொட்டை மாடியில் குதித்து.. காதலியைக் காண ஓடோடி வந்த இந்த சுத்த வீரனைப் பார்த்தா வாசல் வழிப் போகச் சொல்கிறாய்..? வேதனை.. அவமானம்.. வெட்ட்ட்…கம்..!” என்று கைகளைக் குவித்து நெற்றியில் குத்திக் கொண்டான்.

 

தான் பேசுவதை விழி மூடாமல் பார்த்து கொண்டிருந்த ப்ரியனின் முன் சொடுக்கு போட்ட ஆதவன், “ப்ரியன்.. ஆர் யூ ஆல்ரைட்?” என்று கேட்டான்.

 

“ஹ்ம்ம்.. நான் நல்லா தான் இருக்கேன்.. பட், வெண்மதிய நினைச்சா தான் பாவமா இருக்குது..”

 

“ம்க்கும்” என்று இதழ் வளைத்தவன்.. “அவக்கிட்ட மாட்டிட்டு முழிக்கற நான் தான் பாவம்.. போக போக நீயே புரிஞ்சிக்குவ..” என்று கூறி விட்டு.. நேரமாகி விட்டதென தன்னோடு தங்க சொன்ன ப்ரியனை மறுத்து விட்டு.. சொன்னது போலவே.. பைப் வழியே கீழிறங்கி.. கேட்டை (gate) தூரத்தில் இருந்து ஓடிச் சென்று.. ஒரே தாவலில் தாண்டி அந்த பக்கம் குதித்து சென்றவனை.. மேலிருந்து புன்னகை மாறாமல் பார்த்திருந்தான், ப்ரியன்.

 

ஏதோ ஒரு நிம்மதி உணர்வில் தளும்பிய மனதோடு கண்ணயர்ந்தாலும்.. ஓரத்தில் ப்ருந்தாவின் நினைவு முள்ளாய் குத்திக் கொண்டே இருந்தது.

 

3.

 

மறுநாள் கண்விழித்த வெண்மதி.. தன்னருகில் பட்டத்தைக் கட்டி கொண்டு.. சற்றே இதழ் விரிய தூங்கிய தருணின் கலைந்த தலைமுடியை இன்னும் கலைத்து விட்டு ரசித்திருக்கையில்..

 

“மதி.. நைட் எத்தன மணிக்கு ரெண்டு பேரும் தூங்கினீங்க?” கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார், வெண்மதியின் அம்மா சுமதி.

 

“சீக்கிரம் தூங்கிட்டோம்மா..”

 

“இன்னிக்கு ஒரு நாளாவது உண்மைய பேசேன்டி..”

 

“நான் என்னைக்குமா பொய் பேசிருக்கேன்..?”

 

“நீ என்னத்தையும் பேசிட்டு போ.. இன்னிக்கு ஊருக்கு கிளம்பணும்.. இவன் கூடவே சுத்திட்டு இருக்காம கொஞ்சம் கூடமாட வந்து வேலையப் பாரு..”

 

“வேலையெல்லாம் என்னை செய்ய சொல்லாதீங்கம்மா.. சுத்த போர்..”

 

“உன்னை ஆஃபீஸ்ல வச்சு எப்டி தான் இந்த பய வேலை வாங்கறாங்கனோ தெரியல.. சரியான சோம்பேறி”

 

சோம்பேறி என்றதில் சிலிர்த்துக் கொண்டு.. அன்னையிடம் வம்பு வளர்க்க ஆரம்பித்து விட்டாள், பல்லைக் கூட விளக்காமல்..

 

வெண்மதி.. ஶ்ரீதர் – சுமதி தம்பதிகளின் தவப் புதல்வி. அஜய்யின் ‘தொல்லை’ தங்கை. B. Arch., படித்து விட்டு.. அண்ணனின் கம்பெனியில் பணிபுரிகிறாள்.

 

‘Right Choice Interiors’ என்ற கம்பெனியின் எம். டி. வெண்மதியின் அண்ணன் அஜய்.. ஆதலால் வேறு வழியில்லாமல் இவள் அங்கு கொட்டும் குப்பைகளை பொறுத்துக் கொண்டிருக்கிறது அந்நிறுவனம்.

 

இரக்க குணம் கொண்ட பாசக்காரி. வால்தனங்கள் மிகுந்த சேட்டைக்காரி. ஆதவனின் சேட்டைக்கு இவளின் சேட்டைகள் எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல.

 

ஶ்ரீதர் சென்னையில் சிறுவர்களுக்கான துணிக்கடை வைத்து நடத்தும் சிறு வியாபாரி. சுமதி இனிமையான இல்லத்தரசி.

 

இப்போது சுமதியின் தங்கை சத்யாவின் வீட்டிற்கு தருணைப் பார்க்கவென்று இரண்டு நாள் பயணமாக வேலூர் வந்துள்ளனர். சுமதியின் சித்தி பெண் சத்யா.. அவரை விட பதினான்கு வயது இளையவர்.

 

சுமதிக்கு பத்தொன்பது வயதிலேயே திருமணம் முடித்து விட்டதால்.. சத்யாவின் ஆறாம் வயதிலேயே நம் வெண்மதி பூமியை பார்க்க வந்து விட்டாள். சத்யாவிற்கும், வெண்மதிக்கும் இடையேயான நட்பிற்கு.. ஆறு வயது இடைவெளி பெரிதாகத் தோன்றாததால்.. வெண்மதி அவரை சித்தி என்று இதுவரை அழைத்ததே இல்லை. எப்போதும் சத்யா தான்..!

 

அன்றலர்ந்த மலர் போல்.. குளித்து இளம் பச்சை வண்ண சுடிதாரில்.. ஈரக் கூந்தலை டவலால் துவட்டிக் கொண்டே.. உள்ளே வந்த சத்யா, “வெண்ணி.. காலைலயே எங்கக்காக்கிட்ட வம்பு வளர்க்க ஆரம்பிச்சிட்டியா? குளிச்சிட்டு சாப்ட வா.. தோசை ஊத்தறேன்.. என்ன சட்னி செய்யட்டும்?” கேட்டாள்.

 

“ஆமா.. அவ கேக்கறத செஞ்சு குடுத்து ஊட்டி விட வேண்டியது தான.. ஏண்டி இப்டி இருக்க? என்ன சட்னி வேணுமோ அவளையே செய்ய சொல்லு..”

 

“இன்னும் கொஞ்ச நேரம் தான் இங்க இருப்பா.. அப்புறம் எப்ப பார்க்கப் போறோமோ? என் திருப்திக்கு நானே செஞ்சு குடுக்கறேன். உன் வீட்ல போய் அவள வேலை வாங்கிக்கோ..”

 

“அப்டி சொல்லு சத்யா.. வீட்ல அப்பாவோட சப்போர்ட் எனக்கு எப்பவும் இருக்கும். அங்க என்னை இப்டிலாம் மிரட்ட முடியாதுல.. அதான் இங்க ட்ரைப் பண்ணி பார்க்கறாங்க உன் சிஸ்ஸி.. பாவம் அவங்களுக்கு தெரியல. அவங்க தால் என்கிட்ட எப்பவுமே குக் ஆகாது..”

 

“அந்த தைரியம் தான் உனக்கு.. உன்னை எதாவது சொன்னா.. அந்த மனுஷன் வந்துடுவார் வரிஞ்சு கட்டிட்டு..”

 

“பின்ன அவர் பொண்ண வேலை வாங்கினா அவருக்கு கோவம் வராதா?”

 

“அடியே.. போதும்டி வழக்கடிக்காம போய் குளிச்சிட்டு வா..” என்றாள் சத்யா.

 

வெண்மதி குளித்து முடித்து.. தருணை எழுப்பி அவனையும் குளிக்க வைத்து.. இருவரும் தங்கள் சேட்டைகளோடு அந்நாளைத் துவங்கினர்.

 

*********

 

காலை உணவை முடித்துக் கொண்டு, லேப்டாப்போடு அமர்ந்திருந்தான், ப்ரியன்.

 

ப்ரியனின் அப்பா கார்த்திகேயன். அம்மா பல்லவி. ஒரே தங்கை பாரதி. ப்ரியன் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் போதே கார்த்திகேயன்.. மாரடைப்பில் இறைவனடி சேர்ந்து விட்டார்.

 

பல்லவி கல்லூரிப் பேராசிரியை.. கணவரின் இழப்பில் மனம் சோர்ந்து தான் போனார். கார்த்திகேயன் கோடீஸ்வரர் இல்லையென்றாலும் ஓரளவு பணக்காரர் கேட்டகிரி தான். சில சொத்துக்களை விட்டுச் சென்றிருந்தாலும்.. அதை பல்லவி.. பிள்ளைகளின் பிற்காலத்திற்கென நினைத்து.. வைராக்கியத்துடன் அவரின் வருமானத்தில் பிள்ளைகளை அவர்கள் விரும்பியப் படிப்பில் சேர்த்து படிக்க வைத்து விட்டார்.

 

ப்ரியனின் தங்கை பாரதி.. ஒரு ஃபேஷன் டிசைனர்.. தற்போது திருமணமாகி மும்பையில் வசிப்பவள், படித்த படிப்பை வீணாக்காமல்.. பொட்டிக் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறாள்.

 

கல்லூரி செமஸ்டர் லீவு இருப்பதால் சாவகாசமாய் காலை உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார் பல்லவி..

 

“என்னடா.. இந்நேரம் சைட்டுக்கு போகணும்னு கால்ல சக்கரத்த கட்டிட்டு கிளம்பிருப்ப.. இன்னிக்கு இன்னும் லேப்ப நோண்டிட்டே உட்கார்ந்துருக்க?”

 

“இன்னிக்கு ஆஃபீஸ் தான் போகப் போறேன்.. லேட்டா போய்க்கலாம்..”

 

“விஷ்வா பார்த்துக்குவான்ற தைரியம் உனக்கு..”

 

‘இத்தன நாளும் அப்டி இருந்தது தான்மா தப்பா போச்சு..’

 

இன்னும் அம்மாவிடம் தான் விஷ்வாவால் ஏமாற்றப் பட்டதை சொல்லவில்லை. எப்படியும் தன்னதை மீட்டு விடுவோம் என்ற நம்பிக்கை ஆழிப்பேரலையாய் அலைமோதிக் கொண்டிருந்தது.

 

“பல்லவி ஆன்ட்டிஈஈஈ…” கத்திக் கொண்டே ஓடி வந்தான் தருண், கூடவே வெண்மதியும்..!

 

“ஹேய் தரூக் குட்டி.. வா வா.. இன்னிக்கு என்ன கேம் விளையாடலாம்? வாம்மா வெண்மதி..”

 

“ஹாய் ஆன்ட்டி..”

 

“சாப்ட்டாச்சா ரெண்டு பேரும்? வாங்க.. எங்க வீட்டு சமையல டேஸ்ட் பண்ணிப் பாருங்க..”

 

“இல்ல ஆன்ட்டி.. தாங்க்ஸ்.. இப்ப தான் சாப்ட்டோம்..”

 

“ப்ரியன்.. இவ வெண்மதி.. நம்ம சத்யாவோட அக்கா பொண்ணு.. நேத்து கூட உன்கிட்ட சொன்னேனே..”

 

“தெரியும் ஆன்ட்டி.. ஹாய் மிஸ்டர் ப்ரியன்..”

 

“தெரியுமா? எப்டிடா?” என்று மகனைக் கேட்டார்.

 

“அது…”

 

“நேத்து மொட்டை மாடில பட்டம் விடும் போது ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க.. இல்ல வெம்மதி?”

 

“ஹ்ம்ம்.. ஆமா ஆன்ட்டி..”

 

‘நல்லவேளை பயபுள்ளைக்கு நைட் எத்தன மணிக்குனு சொல்லத் தெரியல..’

 

“ஓ! சரி சரி.. இரு நான் சாப்ட்டு வந்துடறேன்.. நம்ம நேத்து மாதிரி ஹைட் & சீக் விளையாடலாம்..”

 

“விளையாட முடியாது ஆன்ட்டி.. வெம்மதி ஊருக்கு போறாளாம்”

 

“ஆமாவா வெண்மதி?”

 

“ஆமா ஆன்ட்டி.. அதான் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்..”

 

“ரெண்டு நாள் நீ இருந்த.. நல்லா கலகலனு இருந்தது.. உன் கூட சேர்ந்து நானே சின்னப் பிள்ளையா மாறிட்ட மாதிரி இருந்தது.. அடுத்து எப்பமா வருவ..”

 

“இன்னும் ரெண்டு மாசத்துல தருணோட பர்த்டே வருது ஆன்ட்டி.. அதுக்கு கண்டிப்பா வருவேன்.. சரி கிளம்புறேன் ஆன்ட்டி.. பை ப்ரியன்..”

 

“ஹ்ம்ம்.. பை..” என்ற ப்ரியனின் மூளை ஒரு நிமிடம் தாமதித்து.. எதையோ கைப்பற்றியதை உணர்ந்து.. சென்று கொண்டிருந்தவள் கேட்டைத் தாண்டும் முன்.. வேகமாக வெளியே போய் அழைக்க நினைத்தவன்.. அவள் செய்த செயலில் அசையாமல் நின்று விட்டான்.

 

போர்டிகோவில் நின்றிருந்த ப்ரியனின் பைக்கை அசால்ட்டாக ஓடிப் போய் தாண்டி சென்று.. அவளைப் பார்த்து கைத் தட்டி குதித்து ஆர்பரித்துக் கொண்டிருந்த தருணிடம் ஹைஃபை கொடுத்தாள், வெண்மதி.

 

மலைத்து நின்றவன்.. அவள் வெளியே செல்வதை உணர்ந்து.. தலையை உலுக்கிக் கொண்டு, “மிஸ். வெண்மதி..” என்றழைத்தான்.

 

திரும்பியவள் மாறாத புன்னகையுடன்.. “சொல்லுங்க ப்ரியன்..” என்றாள்.

 

“வந்து.. ஆதவனோட நம்பர் வேணுமே.. ப்ளீஸ்.. நேத்து வாங்க மறந்துட்டேன்..”

 

“நம்பரா? நேத்து பத்து, பதினஞ்சு நிமிஷம் பேசிருப்பீங்களா? அதுக்குள்ள அந்த இடியட் உங்கள மெஸ்மரைஸ் பண்ணிடுச்சா?” என்று விழி விரித்தாள்

 

சிரிப்புடன், “உங்களுக்கு அதுல ரொம்ப பொறாமை போல..” என்றான்.

 

“பின்ன இல்லயா? எல்லாரையும் பேசியே கவுத்துடுவான் ஃப்ராடு..”

 

“ஹாஹா.. அவனை ஃப்ராடுனுலாம் சொல்லாதீங்க. நாங்க ரெண்டு பேரும் வாடா போடா சொல்ற அளவுக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்..”

 

“ஹாங்.. இது எப்ப?”

 

“நேத்து தான்..”

 

“ஓ..!” அவளிடம் ஆதவனின் மொபைல் நம்பரைப் பெற்றுக் கொண்டு விடைக் கொடுத்தான்.

 

விடைப்பெற்று திரும்பியவள்.. மீண்டும் வந்து, “ப்ரியன்.. உங்க நம்பர் தரலியே..?” கேட்டாள்.

 

“என் நம்பரா?” என்று இழுத்தான்.

 

“ஆமா.. எனக்கு வேணும்.. குடுங்க..”

 

‘இந்த பொண்ணுக்கு எதுக்கு நம்ம நம்பர்?’ என யோசித்தாலும்.. தன் எண்ணை தரவே செய்தான்.

 

“ஓகே ப்ரியன்.. நானும் உங்க ஃப்ரெண்ட் தான? எப்ப வேணாலும் கால் பண்ணலாம் தான?”

 

“தாராளமா மிஸ் வெண்மதி..”

 

“அந்த மிஸ்ஸ கட் பண்ணுங்க ப்ரியன்.. ஓகே பார்க்கலாம்.. பை..”

 

வெண்மதி சென்றதும் உள்ளே வந்தவனை.. “ப்ரியன்.. வெண்மதி நல்ல பொண்ணா தெரியறா இல்ல? அவங்க அம்மா கூட நல்லா பழகறாங்கடா.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கு ஓகேனா நான் சத்யாகிட்ட பேசட்டுமா?” ஆர்வமாய் மகன் முகம் பார்த்துக் கேட்டார்.

 

சற்றே திகைத்த ப்ரியன், “ம்மா.. லூசு மாதிரி பேசாதீங்க. என்கிட்ட மாதிரி சத்யாக்காகிட்ட உளறி வைக்காதீங்க.. வெண்மதி என்னோட நல்ல ஃப்ரெண்ட்.. தட்’ஸ் இட்” என்றான்.

 

“ஏண்டா.. உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் நினைக்கிறேன். உளருரேன்னு சொல்ற? என்னோட ஒரு பார்வைலயே எங்க காலேஜ் ஸ்டுடண்ட்ஸ் எல்லாரும் பத்தடி தள்ளி நிப்பாங்க தெரியுமா? நீ என்னடான்னா என்னை பைத்தியக்காரி ரேஞ்சுக்கு பேசற.. லூசு, உளருறேன்னுட்டு..” ஆற்ற மாட்டாமல் கத்திக் கொண்டிருந்தார்.

 

“கால்ம் டவுன் மாம்.. வெண்மதிய நான் அப்டிலாம் நினைக்கல. அதான் சொல்றேன்..”

 

“நேத்து தான் பார்த்துருக்க.. அதனால அப்டி எதுவும் தோணாம இருக்கலாம். கொஞ்ச நாள் ஃப்ரெண்ட்ஸா பழகினப்புறம் பிடிக்கலாம் இல்ல?”

 

“நோ.. எப்பவும் தோணாது..”

 

“ஏண்டா.. இப்டி சொல்ற?”

 

“மாம்.. புரிஞ்சிக்கோங்க.. அவளப் பார்த்தப்ப அழகான பொண்ணா.. தேவதை மாதிரி தான் தோணுச்சு. ஆனா என் லைஃப் இவக்கூடனு தோணவே இல்லம்மா. வெண்மதி விளையாட்டு பொண்ணு. நான் சிரிக்கக் கூட காசு கேக்கறவன்னு நீங்க தான சொல்லுவீங்க? அவளுக்கு அவள மாதிரி ஒருத்தன் தான் லாயக்கு. மோர் ஓவர்.. நான் வேற ஒரு பொண்ண லவ் பண்றேன்..”

 

அவன் சொல்வதை அமைதியாக கேட்டு கொண்டிருந்தவர்.. அவனின் கடைசி வரியில், “என்னடா சொல்ற?” என அதிர்ந்தார்.

 

“பட், ப்ரேக்கப் ஆகிடுச்சு..”

 

“என்னடா சொல்ற?”

 

“ஆனா அவள மறந்துட்டு வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியும்னு தோணலம்மா..”

 

“ஹாங்.. என்னடா சொல்ற?’

 

“ச்சு.. என்னதிது..?”

 

“சரி வெண்மதி வேணாம்.. நீ லவ் பண்ற பொண்ணு யாருனாவது சொல்லு.. அம்மா போய் பேசறேன்.. என் பையன ஏன் பிடிக்கல கேக்கறேன்..”

 

“நோ மாம்.. வேணாம்னு விட்டு போனவக்கிட்ட போய் திரும்ப கேக்கற அளவு ஒண்ணும் உங்க பையன் குறைஞ்சிடல..”

 

“அப்ப என்ன பண்ற ஐடியால இருக்க? காவி கட்டிட்டு போகப் போறியா? நான் பெத்து வச்சிருக்கறது கறிவேப்பிலை கொத்து மாதிரி ஒரே ஒரு பையன்..”

 

“நான் என்ன வேப்பிலை மாதிரி ரெண்டு பையன்னா சொன்னேன்?”

 

“டேய்.. என்னப் பார்த்தா உனக்கு கிண்டலா இருக்கா? எங்க காலேஜ்ல ஸ்டூடெண்ட்ஸ் எல்லாம் நான் ஒரு பார்வை பார்த்தா….”

 

“ஷ்ஷ்.. ம்மா.. எனக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்ல.. போதுமா? ஆள விடுங்க”

 

“இதுக்கு தான் ஃபர்ஸ்ட்டே சொன்னேன்.. உனக்கு முடிச்சிட்டு பாரதிக்கு முடிக்கலாம்னு.. அவளுக்கு தான் மொதல்ல முடிக்கணும்னு ஒத்தக் கால்ல நின்ன.. இப்ப அவளுக்கும் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகப் போகுது.. இப்பவும் இஷ்டம் இல்ல சொன்னா என்ன அர்த்தம்..?”

 

“இஷ்டம் இல்லனு அர்த்தம்..” பேச்சை முடித்துவிட்டு, உள்ளே சென்று விட்டான்.

 

4.

 

ப்ரியன்.. அன்று மதிய ஒரு மணியளவில்.. அந்த அப்பார்ட்மெண்ட்டில் உள்ள ஒரு வீட்டின் வாசலில் நின்று.. ஆதவனை அழைப்பதற்காக மொபைலை எடுத்தான். திடீரென.. உள்ளிருந்து சேர் உருண்டு விழும் சத்தத்தில் திடுக்கிட்டுப் போய்.. அனிச்சையாய், கதவை தட்டாமலேத் திறந்தான்.

 

திறந்தவனின் இதழ்கள் அவனின் அனுமதி இல்லாமலேயே.. புன்னகை சிந்தியது. சேர் ஒரு பக்கமும், டீப்பாய் மறுபக்கமும் உருண்டு கிடந்தது. சோஃபாவின் இந்தப் பக்கம் ஆதவனும்.. அந்தப் பக்கம் பிங்க் வண்ண சல்வாரில் ப்ரியனின் அம்மாவின் வயதையொத்தப் பெண்மணியும் ஓடிப் பிடித்து விளையாடும் தினுசில் நின்றிருந்தனர்.

 

“டேய் உன்னைக் கொன்னுடுவேன்டா.. ஒழுங்கா குடுத்துடு..”

 

“ம்மா.. ம்மா.. ப்ளீஸ்மா.. மேட்ச் இருக்குதுமா.. முடிஞ்சதும் தரேன்மா..” தன் அன்னையிடம் இருந்து.. டிவி ரிமோட்டை கைப்பற்றியிருந்த ஆதவன் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

 

“நானும் தான்டா வ்ரெஸ்ட்லிங் பார்க்கணும்.. இன்னிக்கு என் ராக் வர்றான்டா.. மரியாதையா ரிமோட்டக் குடுத்துடு.. ”

 

“அது அரதப் பழசும்மா.. யூ – ட்யூப்ல இருக்கும்.. நான் உங்க மொபைல்ல டவுன்லோட் பண்ணி தரேன். ப்ளீஸ்ம்மா.. இன்னிக்கு ஒரு நாள் மட்டும் ரிமோட் நான் வச்சிக்கறேன்மா..”

 

“ஏன் நீ உன் மேட்ச்ச மொபைல்ல பார்க்க வேண்டியது தான?”

 

“அதுல பார்த்தா மேட்ச் நல்லாவே இருக்காதும்மா.. என்ன இருந்தாலும் பெரிய ஸ்க்ரீன்ல பாக்கற மாதிரி இருக்குமா?”

 

“ஏன் அந்த பெரிய ஸ்க்ரீன்ல நான் மட்டும் என் ராக்-அ பார்க்க மாட்டேனா?”

 

“தெய்வமே.. அவன் ஜட்டியோட உருண்டு விழறத பார்த்து ஜொள்ளு விடப் போறீங்க.. அத பெருசுலப் பார்த்தா என்ன? சிறுசுலப் பார்த்தா தான் என்ன?”

 

“ஹாஹாஹா….”

 

இவ்வளவு நேரம் இருவரின் விளையாட்டைப் பார்த்திருந்த ப்ரியன்.. வாய்விட்டு சிரித்தான்.

 

‘எவ அவ..’ வடிவேலு ரேஞ்சில் அன்னையும், மகனும் திரும்பி பார்த்தனர்.

 

ப்ரியனைப் பார்த்த ஆதவன், “ஹாய்டா.. வா வா.. ம்மா.. திஸ் இஸ் ப்ரியன்.. மை ஃப்ரெண்ட்” என்று தன் அன்னை பார்கவிக்கு அறிமுகம் செய்து வைத்து விட்டு.. ப்ரியனின் புறம் திரும்பி.. “ப்ரியன்.. இவங்க….”என்று ஆரம்பிக்கும் முன்.. “ஹாய் ப்ரியன்.. என் பேர் கூட உன்னோடது மாதிரி ரொம்ப அழகா இருக்கும் தெரியுமா..?” என்றார்.

 

என்ன பேசுவதெனப் புரியாமல் புன்னகைத்தவனிடம், “என்ன பேருனு கேக்க மாட்டியா?” என்று முகம் சுருக்கினார்.

 

“சொல்லுங்கம்மா.. என்ன பேரு..?”

 

அவன் கேட்டதில் முகம் மலர்ந்தவர், “என் பேர் கவி.. நல்லா இருக்குல?” கேட்டார்.

 

“ம்மா.. முன்னாடி உள்ள ‘பார்’ விட்டுட்டீங்களே..” – ஆதவன்.

 

“போடா.. அது ரொம்ப ஓல்டு நேம்.. அதான் விட்டுட்டேன்.. ஆதார் கார்டுல கூட மாத்தி தர சொன்னேனே ஆதூ.. அதுப் பத்தி விசாரிச்சியா?”

 

“ஆமா.. ரொம்ப முக்கியம் பாருங்க..”

 

“ஆமாண்டா.. முக்கியம் தான். கவி னு மாத்தினா தான் யங்கா இருக்கும்..”

 

“எப்டியோ இருந்துட்டு போகட்டும்.. ப்ரியன் உங்க முழுப் பேரு தெரியாம குழம்பிட்டு இருக்கான். நீங்க சொல்றீங்களா? இல்ல நான் சொல்லட்டுமா?”

 

“ம்க்கும்..” என்று அழகாய் முகம் சுளித்தவர்.. “பாஆஆர்கவி.. போதுமா?” என்று ராகம் பாடினார்.

 

அவரின் மனதைப் புரிந்த ப்ரியன், “பார்கவி.. நைஸ் நேம்.. என் காலேஜ்மேட் பேரு கூட பார்கவி தான்ம்மா..” என்றான்.

 

“ஆமாவா ப்ரியன்? இந்த காலத்துல கூட இந்த ஓல்டு நேம் வைக்கறாங்களா என்ன?” ஆச்சர்யமாகக் கேட்டார்.

 

“வைக்கறாங்கம்மா.. அழகான பேராச்சே..”

 

“அப்ப சரி.. டேய் ஆதூ.. எதையும் மாத்த வேணாம். பார்கவியே இருக்கட்டும்..”

 

“ஹ்ம்ம்.. இருக்கட்டும் இருக்கட்டும்.. வீட்டுக்கு வந்தவனுக்கு சாப்ட எதுவும் குடுக்கற ஐடியா இருக்கா இல்லையா?”

 

“அச்சோ.. மறந்தே போயிட்டேன் பாரு.. ப்ரியன்.. உட்காரு.. தோ வந்துடறேன்..” என்று கிச்சனிற்கு ஓடினார்.

 

“ஏண்டா.. அம்மாவ துரத்தற? நான் சாப்ட்டு தான் வந்தேன்.”

 

“உன்னை காப்பாத்துனேன்னு சந்தோஷப் பட்டுக்கோடா.. இல்லனா.. ‘இந்த சல்வார் நல்லாருக்கா? இந்த குர்தி மேட்சா இருக்கா’னு இப்ப உனக்கு ஃபேஷன் ஷோவே நடத்திக் காட்டிடுவாங்க.. புவர் லேடி..”

 

“ஆதவ்.. உங்க அப்பா…” என்று இழுத்தான்.

 

சின்னப் புன்னகையுடன் மேலே விரல் உயர்த்திக் காட்டினான் ஆதவன்.

 

“ஓ! சாரிடா.. நீயும் என்னை மாதிரி தானா?” என்று தன் தந்தையைப் பற்றி கூறினான்.

 

கேட்டு கொண்ட ஆதவன், “அப்பா ரெண்டு வருஷம் முன்ன தான் போனார்டா.. கார்டியாக் அரெஸ்ட்.. அம்மாவ பழைய மாதிரி மீட்டு வர தான் கஷ்டமாப் போச்சு.. இப்பக் கூட எனக்காக தான் இப்டி ஏதாவது சேட்டை பண்ணிட்டு இருக்காங்க..” என்றான்.

 

அதற்குள் கையில் காபி ட்ரேயுடன் வந்த பார்கவி, “என்னைப் பத்தி என்னடா பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்..?” கேட்டுக் கொண்டே காபியை எடுத்து ப்ரியனிடம் கொடுத்தார்.

 

“ஆமா.. நீங்க நேத்து ஐ. நா சபைல ஆணைப் பிறப்பிச்சி, அறிக்கை விட்டுட்டு வந்தீங்க பாருங்க.. அது தான் உங்களப் பத்தி பெருமையா சொல்லிட்டு இருந்தேன்..”

 

“ஹ.. ஐ. நா சபைல மட்டுமா? ஐன்ஸ்டீனுக்கேக் கூட நான் ஐடியா குடுப்பேனாக்கும்..” என்று கெத்தாக முகத்தை வைத்துக் கொண்டார்.

 

“நாசால சாட்டிலைட் அனுப்ப ஆலோசனை குடுத்தீங்களே.. அத விட்டுட்டீங்க?”

 

“போடா அரட்டை.. ப்ரியன்.. இவ்ளோ நல்ல பையனா இருக்கியே.. எப்டி இவன் கூட சேர்ந்த? உன் நல்லதுக்கு சொல்றேன் கேளுடா.. இவனோட கெட்ட சகவாசம் உனக்கு வேணாம்.. உன்னையும் கெடுத்துடுவான். இப்பவே அவன் ஃப்ரெண்ட்ஷிப்ப கட் பண்ணு..”

 

“சொல்லிட்டாங்க நல்லகுடி நாணயம்.. தூத்துக்குடி வெண்கலம்.. கேட்டுக்கோடா..”

 

இருவரும் ஒருவரையொருவர் வாரிக் கொண்டதைப் பார்த்த ப்ரியனுக்கு குடித்த காபி புரையேறியது. ஆதவனின் குறும்புத் தனங்கள் எங்கிருந்து வந்ததெனப் புரிந்து கொண்டவன் மனம் நிறையப் புன்னகைத்தான்.

 

பார்கவி காபி மக்கை எடுத்துக் கொண்டு நகர்ந்ததும், “வெண்மதிக்கேத்த மாமியார்..” என்றான்.

 

“ஹ்ம்ம்.. அவ வந்ததும் ரெண்டையும் கட்டி எப்டி மேய்க்கப் போறேனோ தெரியலடா..” என்று போலியாய் சலித்துக் கொண்டான்.

 

“கஷ்டம் தான் போல.. காலேஜ் ப்ரொஃபசரா இருக்க எங்கம்மாவயே ஹைட் அண்ட் சீக் விளையாட வச்சிருக்கா உன் ஆளு..”

 

“ஹாஹா.. அவ அப்டி தான்.. சரி சொல்லுடா.. ஃபோன் பண்ணி மீட் பண்ணனும் சொன்ன..? என்ன விஷயம்? அந்த போங்கு நீ கேட்டதும் நம்பர் குடுத்துடுச்சா?” கேட்டான்.

 

“ஹ்ம்ம்.. கொஞ்சம் பர்சனலாப் பேசணும் ஆதவ்..”

 

“அப்ப வா.. நம்ம வெளில எங்கயாவது போலாம்..”

 

“உனக்கு இன்னிக்கு ஆஃபீஸ் இல்ல?”

 

“இருக்குது தான்.. மேட்ச் பார்க்கணுமேனு ரவி சர்க்கிட்ட வயித்துவலினு சீன் போட்டேன்..” என்று கண்சிமிட்டியவன்.. “ஆனா பாரு.. இந்தம்மா.. ‘ராக்’கப் பார்க்கணும்.. ‘பேக்’கப் பார்க்கணும்னு கடுப்படிக்கிறாங்க.” என்று எரிச்சலானான்.

 

“ஹாஹா.. சரி வா வெளியே போய் பேசுவோம்..”

 

“ஹ்ம்ம்.. ட்டூ மினிட்ஸ்..” சொன்னதைப் போல் இரு நிமிடங்களில் தயாராகி வந்தவனை.. அருகிலிருந்த சிறுவர் பூங்காவிற்கு அழைத்து சென்றான் ப்ரியன்.

 

“இங்க எதுக்குடா? சீ சா விளையாடவா கூட்டிட்டு வந்துருக்க?”

 

“ஹ்ம்ம்.. அல்மோஸ்ட் அப்டி தான்..” என்ற ப்ரியனின் முகம் சீரியஸ்னெஸ்ஸை தத்தெடுத்திருந்தது.

 

அவன் தோள் மீது ஆதரவாய் கை வைத்த ஆதவன்.. “இப்ப எதுக்குடா எவனயோ போட்டு தள்ளப் போற தெலுங்கு பட ஹீரோ மாதிரி மூஞ்சிய வச்சிருக்க?” என்றான்.

 

“விளையாடாத ஆதவ்.. போட்டு தான் தள்ளப் போறேன். நீதான் அதுக்கு ஹெல்ப் பண்ணனும்.” என்று பல்லைக் கடித்தான்.

 

“என்னது!!! டேய்.. யூ மீன்…”

 

“ச்சேச்சே.. அப்டிலாம் இல்லடா.. இது வேற.. ஃப்ரெண்ட்னு நம்பின ஒருத்தன் முதுகுல குத்திட்டான்..” என்று தான் தன் நிறுவனத்தில் ஏமாற்றப்பட்டதை.. உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளை.. ஆதவனிடம் கொட்டித் தீர்த்தான்.

 

“விஷ்வாவும் நானும் ரெண்டு வருஷம் முந்தி தான் பிவி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஆரம்பிச்சோம். என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்னு நம்பினதால வொர்க்கிங் பார்ட்னர், ஃபினான்ஷியல் பார்ட்னர்னு பிரிக்காம எல்லாத்தையும் ரெண்டு பேரும் சேர்ந்தே செய்றதுனு.. பார்ட்னர்ஷிப் டீட் கூட சும்மா ஒரு பேருக்கு தான் போட்டோம்..”

 

“பெஸ்ட் ஃப்ரெண்ட் எப்டி திடீர்னு துரோகியா மாறினான்?”

 

“அது தான் எனக்கும் தெரியல ஆதவ்.. என்னால இன்னமும் கூட நம்பவே முடியல, என் விஷ்வாவா இப்டினு.. என் நம்பிக்கைய மொத்தமா உடைச்சிட்டான்டா..” என்று அருகிலிருந்த பெஞ்சில் பொத்தென அமர்ந்தான்.

 

“டோண்ட் ஃபீல்டா.. பார்த்துக்கலாம் விடு..”

 

“நான் மேக்ஸிமம் ஆஃபீஸ்ல இருக்க மாட்டேன்.. கான்ட்ராக்ட் மீட்டிங் அட்டெண்ட் பண்றதுலயும், அது சாங்ஷன் ஆச்சுனா.. பார்ட்டி விரும்பின மாதிரியான ப்ளான் போடறதுலயும், நம்ம போட்ட ப்ளான் சைட்ல நம்ம கண்ணு முன்னாடி பில்டிங்கா உருவாகறதயும் பார்க்கறதுல தான் அதிக கவனம் செலுத்துவேன். ஆஃபீஸ், மீட்டிங், ஃபினான்ஷியல் வொர்க், ஆடிட்டிங் மேய்க்கறது இதுலலாம் ஆர்வமில்லாம இருந்தது தான் நான் பண்ண பெரிய தப்பு. என் பேருக்கு வர்ற ப்ராஃபிட்ஸ்லாம் பில்டிங் மெட்டீரியல்ஸ்க்குனு சொல்லி எடுத்துருக்கான். ஒவ்வொரு வாட்டி செக்ல சைன் பண்ணும் போதும்.. முட்டாளா கண்ண மூடிட்டு சைன் பண்ணிருக்கேன். எதனால? என் விஷ்வா மேல இருந்த நம்பிக்கைனால..”

 

‘நம்பிக்கை துரோகம் செய்த ஒருவனை இன்னமும் ‘என் விஷ்வா’ என்கின்றானே.. என்ன மாதிரியான நண்பன் இவன்!!!’

 

உள்ளுக்குள் ஆச்சர்யப்பட்டுக் கொண்டே.. “கன்ட்ரோல் யுவர் செல்ஃப் ப்ரியன்.. இப்ப நம்ம என்ன பண்ணப் போறோம்?” கேட்டான்.

 

“கம்பெனில விஷ்வா என் ஷேர்ஸ் எல்லாம் அவன் பேருக்கு மாத்திட்டான். பார்ட்னர்ஷிப் டீட் போட்ட டாக்யூமெண்ட்ஸூம் மொத்தமா அவன் பேருக்கு மாத்திருக்கான்.. அதக் காட்டி தான் என்னை வெளியே போக சொன்னான்.. அந்த டாக்யூமெண்ட் எப்டியாவது என் கைக்கு வரணும். ஆதவ்.. அந்த கம்பெனி என் உழைப்பு.. திரும்ப அதோட எம்டி சேர்ல உட்காருவேன். அதுக்கு எனக்கு உன் ஹெல்ப் வேணும். செய்வியா?” என்று கேட்டு.. ஆதவனிடம் என்ன செய்ய வேண்டும் எனக் கூறினான்.

 

கேட்டுக் கொண்டு நிச்சயம் உதவுவதாக உறுதியளித்த ஆதவன், “ஏண்டா.. நேத்து தான் பார்த்த என்னை நம்பி இதல்லாம்…” என வாக்கியத்தை முடிக்காமல் இழுத்தான்.

 

“ஹ்ம்ம்.. என்ன கேக்கறனு புரியுது.. இத்தன வருஷமா நம்பின அவனே.. கழுத்தறுத்துட்டான். திரும்பவும் நேத்து பழகின ஒருத்தன ஏன் நம்பறனு கேக்கற.. இல்ல?”

 

‘ஆம்’ எனத் தலையசைத்தான்.

 

“எனக்கும் தெரியலடா.. முதல்ல என் மனசு இதுக்கு நீ மட்டும் தான் செண்ட் பர்சன்ட் கரெக்டான ஆளுனு சொல்லுது. ரெண்டாவது.. உனக்கும் எனக்குமான ஃப்ரெண்ட்ஷிப் விஷ்வாவுக்கு தெரியாது. மூணாவது இந்த ப்ளானுக்கு தேவேந்திரன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பேரச் சொல்லி விஷ்வாகிட்ட நெருங்க உன்னால முடியும்.”

 

“டண் மச்சி.. உன் கம்பெனி கண்டிப்பா உன்கிட்ட வந்து சேரும்..” உறுதியாகக் கூறிய ஆதவனின் மொபைலில் அழைப்பு..

 

யாரென எடுத்து பார்த்தவன்.. ஜெர்க்காகி திருதிருவென முழித்தான்.

 

“ஏண்டா இப்டி முழிக்கற? யாரு கால் பண்றா?”

 

“இந்த போங்கு தான் ப்ரியன்..”

 

“எல்லாரும் லவர் கால் பண்ணா ஆசையோட அட்டெண்ட் பண்ணி.. ஹஸ்கியா பேசுவானுங்க.. நீ ஏண்டா இப்டி ஜெர்க்காகற?”

 

“நீ வேற ஏண்டா.. இவ என்ன ரொமான்டிக்கா பேசறதுக்கா கால் பண்றானு நினைச்ச?”

 

“ச்சே.. ஏதாவது முக்கியமான விஷயமா இருக்கப் போகுது.. பேசுடா.. கட்டாக போகுது..”

 

“ஆனா ஆகட்டும்.. விடு..” சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. அழைப்பு நின்று விட்டது.

 

ப்ரியன் ஆதவனைத் திட்டுவதற்காக வாய் திறந்தான். இப்போது ப்ரியனின் மொபைலில் அழைப்பு.. எடுத்துப் பார்த்தவன்.. திரையில் புது எண்ணைப் பார்த்து.. யாராக இருக்கும் என புருவம் சுருக்கி யோசித்து கொண்டே.. அழைப்பை ஏற்றான்.

 

“ஹலோ.. ப்ரியன் ஹியர்..”

 

“ப்ரியன்.. திஸ் இஸ் வெண்மதி..”

 

அவளின் குரலைக் காதில் வாங்கிக் கொண்டே ஆதவனைப் பார்த்து.. ‘உன் ஆளு’ என இதழசைத்து விட்டு.. “சொல்லுங்க வெண்மதி..” என்றான்.

 

அவனைப் பார்த்து ஆதவன்.. அதிர்ந்த பாவனையோடு விழிகளைப் பெரிதாக விரித்து.. ‘வேண்டாம்.. வைத்து விடு..’ என எச்சரிக்கும் விதமாய்.. சைகை செய்து கொண்டிருந்தான்.

 

அவனை அலட்சியப்படுத்திய ப்ரியன் அந்த பக்கம் வெண்மதி கூறுவதை செவி மடுத்தான்.

 

“ப்ரியன்.. நீங்க இப்ப பிஸியா இருக்கீங்களா?”

 

“அப்டிலாம் ஒன்னும் இல்ல வெண்மதி.. சொல்லுங்க..”

 

“அப்படின்னா எனக்காக பாரீஸ் வரை கொஞ்சம் வர முடியுமா? ப்ளீஸ் ப்ரியன்..”

 

“என்னாச்சு வெண்மதி? எனி ப்ராப்ளம்?”

 

“இல்ல ப்ரியன்.. நீங்க வாங்களேன்”

 

“ஓகே.. வெய்ட் பண்ணுங்க.. வந்துடறேன்..”

 

அவன் பேசி விட்டு மொபைலை வைத்ததும், ஆதவன்.. “வரேன்னு சொல்லிட்டியா..? போச்சு போச்சு.. இனி உன்னை அந்த ஆண்டவன் மட்டும் இல்ல இந்த ஆதவனாலக் கூடக் காப்பாத்த முடியாது..” என்றான், கைகளை உதறிக் கொண்டே..!

 

“ஏண்டா இப்டி அலறுற?” வா போய் என்னனு பார்த்துட்டு வந்துடுவோம்..”

 

“எது..? நான் வரவா? ஆள விடு சாமி.. எங்க அம்மாவுக்கு நான் ஒரே புள்ள..”

 

“பாவம் எதாவது ப்ரச்சனையா இருக்கப் போகுது‌ ஆதவ்..”

 

“அவளால யாருக்கும் ப்ரச்சனை வராம இருந்தா போதாதா? அனுபவிச்சவன் சொல்றேன்.. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல.. வர முடியலனு சொல்லிட்டு உசுரக் காப்பாத்திக்கோடா”

 

“ச்சு.. போடா..” எச்சரித்தவனை அலட்சியப்படுத்தி விட்டு.. தன் டோமினார் 400ஐக் கிளப்பிக் கொண்டு பறந்தான், ப்ரியன்.

 

ஆதவன், “என்ன கொடுமை சார் இது..? ஒரு மனுஷன் இவ்ளோ தூரம் சொல்றேன்.. மதிக்காம போறான்..! கடவுளே.. யாரு பெத்த புள்ளயோ.. இப்டி ஆப்ப தேடிப் போய் உட்காருது.. ஹூம்ம்..” புலம்பிக் கொண்டே தானும் வீட்டிற்கு கிளம்பினான்.

 

பிறந்ததிலிருந்தே ஸ்பென்சர், மாயாஜால் போன்ற மேல் தட்டு மால்களில் மட்டுமே ஷாப்பிங் செய்து பழகியிருந்த ப்ரியன்.. வெண்மதிக் குறிப்பிட்ட.. பாரிஸில் இருந்த அந்த பெரிய, பிரபலமான ஷாப்பிங் சென்டர் சென்று.. அங்கிருந்து வெண்மதியை அழைத்தான்.

 

“வெண்மதி.. நான் நீங்க சொன்ன இடத்துக்கு வந்துட்டேன்.. நீங்க எந்த ஃப்ளோர்ல இருக்கீங்க?”

 

“ஃப்ளோரா? உங்கள யாரு அந்த கடைக்குள்ள போக சொன்னா? வெளில வாங்க ப்ரியன்..”

 

“ஓ! ஷாப்பிங் முடிச்சிட்டீங்களா? சரி.. இதோ வர்றேன்..”

 

“கால் கட் பண்ணாதீங்க.. அப்ப தான் நான் லொகேஷன் சொல்ல முடியும்..”

 

“சரிங்க வெண்மதி.. வெளில வந்துட்டேன்.. எங்க வரணும்?”

 

“அப்டியே ரோட் க்ராஸ் பண்ணி எதிர்க்க உள்ள காம்ப்ளக்ஸ் வாங்க..”

 

ப்ரியன் கடை வாசலில் நின்று பார்த்தான். கசகசவென்று குட்டி குட்டி கடைகளாகத் தெரிந்ததேயன்றி.. எந்த காம்ப்ளக்ஸை இவள் சொல்கிறாளெனத் தெரியாமல் நின்றான்.

 

பக்கத்தில் போய் பார்த்தால் தெரியுமோ என்னவோ என.. சாலையைக் கடந்து சென்றவன்.. இன்னும் அதிகமாகவேக் குழம்பினான்.

 

காதில் இருந்த ப்ளுடூத்தை இடது கையால் பற்றி.. “வெண்மதி.. இங்க நிறைய கடைகள் இருக்கே.. நீங்க எங்க இருக்கீங்க?” என்று கேட்டான்.

 

“நான் கடைக்கு வெளில மெயின் ரோட் பக்கத்துல தான் நிக்கறேன்.. கொஞ்சம் லெஃப்ட்ல பாருங்க ப்ரியன்..” சொல்லிக் கொண்டே தன் வாழைத்தண்டு கரத்தை உயர்த்தி காட்டினாள்.

 

அவளைப் பார்த்ததும்.. ‘ஹப்பாடா’ என முகம் மலர்ந்தவன்.. மொபைலில் அழைப்பை நிறுத்தி விட்டு, தன் வேக நடையுடன் அவளருகில் சென்றான்.

 

“ஹாய்..”

 

“என் கூட வாங்க ப்ரியன்..” என்றவள் முன்னால் நடந்தாள்.. நடந்தாள்.. நடந்து கொண்டே இருந்தாள். இடதுபுறம் திரும்பி நீண்ட நடை பாதையிலும், பின் வலது புறம் திரும்பியும் நடந்து போய் கொண்டே இருந்தாள்.

 

இது போன்ற சின்ன சின்னக் கடைகளை இதுவரை திரும்பிக் கூடப் பார்த்திராத ப்ரியன்.. வியர்த்து வழிந்த படி, அங்கிருந்த கடைகளை மலைத்துப் போய் பார்த்து கொண்டே அவள் பின்னால் நடந்தான்.

 

‘இத தான் லொகேஷன்னு சொன்னாளா? டேய் ஆதவா.. முடியலடா..’ மனதிற்குள் புலம்பிக் கொண்டிருக்கும் போதே.. ஒரு வழியாக அங்கிருந்த ஒரு கடைக்குள் நுழைந்தாள்.

 

அங்கு நடுத்தர வயதில் இருந்த ஒருவரைப் பார்த்து.. கைகளை கட்டிக் கொண்டு, ஏற்ற இறக்கத்துடன்.. “என்ன அண்ணாத்தே.. என் டீலுக்கு ஒத்து வர்றியா.. இல்லாங்காட்டி சார உன் பேர்ல எஃப்ஐஆர் போட சொல்லவா? சார் என் வீட்டாண்ட தான் இருக்கார்..‌ நான் ‘ம்ம்’ னு சொன்னா போதும்.. உடனே செஞ்ஞ்..சுடுவார்.. ” என்றாள், பக்கா சொர்ணாக்காவைப் போல்..!

 

ப்ரியன் பேயறைந்தது போன்ற முக பாவத்துடன்.. நேற்று இரவு பௌர்ணமி நிலவொளியில் தன்னை ரட்சிக்க வந்த தேவதையைப் போல் இருந்தவள் இவள் தானா என்று கண்களை மூடித் திறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“சர்.. சர்.. சர் உங்கள தான்..” அவள் தன்னை உலுக்குவதை உணர்ந்து.. தூக்கத்திலிருந்து விழித்தவனைப் போல, “ஹான்.. சொல்லுங்க வெண்மதி..” என்றான்.

 

“இவ்ளோ நேரம் சொல்லிட்டு தான இருந்தேன்? என்னனு கேளுங்க சர்”

 

“என்ன..?”

 

“ஹய்யோ.. என்கிட்ட இல்ல.. இதோ நிக்கறார் பாருங்க இந்த கடைக்காரர்.. அவர்க்கிட்ட கேளுங்க சொன்னேன்..”

 

“என்ன சர்..? எனி ப்ராப்ளம்?” என்று கடைக்காரரிடம் கேட்டான்.

 

வேகமாக அவன் காதருகே சென்று.. “ஸ்ஸ்.. கெடுத்தீங்களே காரியத்தை.. உங்கள போலீஸ்னு சொல்லி வச்சிருக்கேன்.. அவர போய் சாரு மோருன்றீங்க? ‘என்னய்யா பொம்பள கைல ராங்கு பண்றியா’னு சவுண்ட் விடுங்க..” என்றாள், சின்னக் குரலில்..!

 

திருதிருவென முழித்தவனைப் பார்த்து.. “ஹய்யோ.. ஏன் இப்டி அம்மாஞ்சி மாதிரி முழிக்கறீங்க ப்ரியன்..? சரி.. நான் பேசறேன்.. நீங்க அப்டியே என்னை ஃபாலோ பண்ணுங்க..” என்றாள்.

 

‘அம்ம்மா..ஞ்சியா? நம்ம மூஞ்சி என்ன அப்டியா இருக்குது?’ யோசித்து கொண்டே.. அவள் பேசுவதை கவனித்தான்.

 

“இங்க பாருங்க அண்ணே.. இப்ப முடிவா என்ன சொல்றீங்க? இந்த யானை செட்க்கு முப்பது பர்சண்ட் டிஸ்கௌண்ட் தருவீங்களா மாட்டீங்களா..?”

 

“நீ எத்தன வாட்டி கேட்டாலும் தர முடியாது தான் போம்மா.. ஆள இட்டாந்தா மட்டும் பயந்துடுவோமா நாங்க..? ஓனர் வர்ற நேரமாச்சு.. இடத்த காலி பண்ணி போயிட்டே இரு..”

 

“அப்ப ஓனர் நீ இல்லயா? கஸ்டமர் சாட்டிஸ்ஃபேக்ஷன் தான் முக்கியம்னு உனக்கு சொல்லி தரலயா? வரட்டும் உங்க ஓனர் கைலயே நான் பேசிக்கறேன்”

 

அவர் தலையில் அடித்து கொண்டு.. “சரியான சாவுகிராக்கி” என்றார்.

 

“பாருங்க பாருங்க சர்.. உங்க முன்னாடியே எப்டி பேசறார் பாருங்க..” என்றாள், ப்ரியனிடம்..!

 

இன்னமும் ப்ரச்சனை என்னவென்று புரியாத ப்ரியன்.. “ஏன்.. என்ன ரேட்க்கு தருவீங்க? இங்க வாங்கற திங்க்ஸ்க்கு டிஸ்கௌண்ட் கிடையாதா?” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே.. ஐம்பது வயதில் வட இந்திய முகத்தோடு அந்த மனிதர் உள்ளே வந்தார். இவர் தான் கடை ஓனர் போலும்..

 

“டிஸ்கௌண்ட் உண்டு சார்.. போர்டு வச்சிருக்கோம் பாருங்க கொஞ்சம்.. அந்த பக்கம் இருக்க பொருளுக்கு முப்பது பர்சண்ட்.. இந்த பக்கம் இருக்க பொருளுக்கெல்லாம்.. பத்து பர்சண்ட் தான் டிஸ்கௌண்ட்.. இந்தம்மா இந்த பக்கம் உள்ள இந்த யானை சிலைங்கள எடுத்துட்டு.. முப்பது பர்சண்ட்க்கு கேக்குது.. நான் வியாபாரம் பண்ணவா வேணாமா? இத்த முப்பது பர்சண்ட்க்கு குடுத்தா.‌. தோ… அந்த ப்ளாட்ஃபார்மாண்ட இருக்கானே.. அவன் பக்கத்துல போய் நானும், எங்க ஓனரும் குந்த வேண்டியது தான்..”

 

“நான் இத அந்த பக்கம் இருந்து தான் எடுத்தேன்கிறேன்..”

 

“இல்லங்கறேன்.. அடுக்கி வச்ச எனக்கு தெரியாதா சார்? இந்தம்மா போங்காட்டம் அடிக்குது..”

 

‘ஆதவன் இவளை போங்கு போங்கு என்றழைப்பதன் அர்த்தம் இது தானா?’

 

“எனக்கு அதெல்லாம் தெரியாது.. இப்ப இந்த யானை சிலைங்கள்லாம் முப்பது பர்சண்ட் டிஸ்கௌண்ட்ல பில் ஆகணும்.. இல்ல.. நீ இங்க பண்ற நம்பர் டூ சேல்ஸ்க்கு எல்லாம் சாருக்கு பதில் சொல்லி ஆகணும்.. அண்ணாத்தேக்கு எப்டி வசதி?”

 

நம்பர் டூ சேல்ஸ் என்றதும் சற்று திகைத்த அந்த வட இந்திய மனிதர்.. “கிருஷ்ணா.. கஸ்டமர்கிட்ட என்ன ப்ரச்சனை பண்ணிட்டு இருக்க?” கேட்டார்.

 

“ஜி.. இந்தம்மா..” என்று ஆரம்பித்தவரைக் கையமர்த்தி விட்டு..

 

“இந்தா பொண்ணு.. உனக்கு இது தர்ட்டி பர்சண்ட்க்கு வேணும்னா.. இதே விலைல உள்ள வேற பொருள் சேர்த்து வாங்கிக்கோ.. சரி தானா? என்று கேட்டு தான் ஒரு தேர்ந்த வியாபாரி என நிரூபித்தார்.

 

பின்னே.. இருபது வருடங்களாக கலைப் பொருட்களை.. பழையது, புதியது என கிடைக்கும் அனைத்து இடங்களிலிருந்தும் வாங்கி விற்கிறார். அதில் பாதிக்கும் மேல் நம்பர் டூ சேல்ஸ் எனும் பில் இல்லா வியாபாரமே..! அதில் நம் வெண்மதியைப் போல் எத்தனை ஃப்ராடுகளை சந்தித்திருப்பார்!!

 

சற்றே முகத்தைத் தூக்கி யோசித்தவள்.. “ஓகே சர்.. வாங்கிக்கறேன்.. அந்த பொருளையும் நான் தான் செலக்ட் பண்ணுவேன்.. மோர் ஓவர்.. அதுக்கும் தர்ட்டி பர்சண்ட் டிஸ்கௌண்ட் வேணும்.. டீலா? நோ டீலா?” என்று பெருவிரலை நிமிர்த்தி, கவிழ்த்துக் காண்பித்தாள்.

 

“சரி பாரும்மா..”

 

மேலும் அரைமணி நேரம் செலவழித்து.. அந்த வேலை செய்யும் நபரின் பிபியை பரிசோதித்து.. ப்ரியனின் பரிதாபகரமான பெருமூச்சுகளை எண்ணி விட்டு.. கடைக்காரரின் கண்டனப் பார்வைகளைப் புறக்கணித்து விட்டு.. கடைசியாக சீலிங்கில் தொங்க விடும் கெட்டிலைப் போல் வடிவில் உள்ள பீங்கான் ஜாடியைத் தேர்ந்தெடுத்தாள். உள்ளே கேண்டில் ஏற்றும் விதமாய் வடிவமைத்திருந்த பொருள் கண்ணைப் பறித்தது.

 

அவள் தெரிவின் அழகில் ‘விளையாட்டு பெண்ணாக இருந்தாலும் வேலையில் கெட்டிக்காரியாகவே தான் இருக்கிறாள்’ என உள்ளுக்குள் வியந்து கொண்டான்.

 

வாங்கியப் பொருட்களை பில் போட்டப் பின்.. அடுத்த ப்ரச்சனையை செவ்வனே ஆரம்பித்து வைத்தாள் நம் வெண்மதி.

 

வாங்கியப் பொருட்களை ‘ஃப்ரீ டோர் டெலிவரி செய்ய வேண்டும்’ என்பது தான் அது.

 

“வெண்மதி.. இந்த மாதிரி கடைகள்ல அதெல்லாம் செய்ய மாட்டாங்க.. நீங்க வாங்க.. நம்ம ட்ரான்ஸ்போர்ட் அரேன்ச் பண்ணிக்கலாம்.”

 

“சும்மா இருங்க ப்ரியன்.. இவ்ளோ அமௌண்ட்க்கு பர்சேஸ் பண்ணிருக்கோம்.. இது கூட செய்யலனா எப்டி..? நீங்க இருங்க.. நான் பேசிக்கறேன்.”

 

“ஹய்யோ.. சொன்னா கேளுங்க வெண்மதி..” என்றவன்.. கடைக்காரரிடம், “சர், எல்லா திங்க்ஸூம் இங்கயே இருக்கட்டும். நான் அனுப்பற ஆள்கிட்ட பில் குடுத்து அனுப்பறேன். அவர்கிட்ட ஹேண்ட்ஓவர் பண்ணிடுங்க” என்று கிட்டத்தட்ட அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான்.

 

வெளியே மெயின்ரோட் வரை போன பின் கையை விட்டவன்.. “அட்ரஸ் சொல்லுங்க வெண்மதி.. எனக்கு தெரிஞ்ச ட்ரான்ஸ்போர்ட்ல புக் பண்ணிடுவோம். அவங்க சேஃப்டியா உங்க திங்க்ஸ் கொண்டு வந்துடுவாங்க..” என்றான்.

 

“ப்ச்.. ஏன் ப்ரியன் இப்டி பண்றீங்க..? நான் இன்னும் கொஞ்சம் பேசிருந்தா அவங்களே டெலிவரி பண்ணிருப்பாங்க.. ச்சு.. போங்க..” அழகாய் கைகளைக் கட்டிக் கொண்டு, முகம் திருப்பினாள்.

 

அவளை சமாதானப்படுத்த நிமிரும் போது தான் கவனித்தான், அவனவளை..! வெண்மதியின் பின்னால் நின்றிருந்தாள், ப்ரியனின் ப்ரியமானவள் ப்ருந்தா.

 

நேற்று இதே நேரத்தில் அவன் மனதை நொறுக்கிச் சென்றவளை.. இன்று மீண்டும் சந்திக்கையில் உள்ளுக்குள் ஊற்றாக பெருகும் காதலைத் தடுக்கத் தான் முடியவில்லை. இவள் தன்னவள் என்ற உரிமைப் பார்வையினை மாற்றத் தான் முடியவில்லை. லிப் க்ளாஸில் பளபளக்கும் ரோஜா இதழ்களை தன் வசமாக்கும் எண்ணத்தைத் தவிர்க்கவே முடியவில்லை. அவளில் கிறங்கும் மனதினை இழுத்துப் பிடித்து.. சமரசம் செய்வதில் ஜெயிக்கவே முடியவில்லை.

 

ஆனால்.. ஆனால்.. அவள் கண்களில் ஏன் இத்தனை வெறுப்பு..! புரியாமலேப் பார்த்திருக்கையில்.. திரும்பி நடந்து விட்டாள், ப்ருந்தா..!

 

பெருமூச்சுடன் வெண்மதியைப் பார்த்தான். அவள் இன்னும் கோபமாக வாய்க்குள் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். அவளை சமாதானம் செய்து.. பின் அவளின் ஆலோசனைப் படி, அவள் நிறுவன வாகனத்தையே வரவழைத்து.. வாங்கியப் பொருட்களை பத்திரமாக ஏற்றி விட்டு.. அவளும் விடைபெற்று அவளின் ஸ்கூட்டியில் ஏறிப் பறந்ததைப் பார்த்தப் பின்.. ‘உசுரக் காப்பாத்திக்கோடா..’ என்ற ஆதவனை அலட்சியப்படுத்தியது எத்தனை தவறு என்று.. தன்னையே நொந்து கொண்டு கிளம்பினான்.

 

இங்கு வீட்டிற்கு வந்த ஆதவன் .. அம்மாவிடம் சிறிது நேரம் வம்பு வளர்த்து விட்டு.. க்ரிக்கெட் பார்த்து.. ‘ஒன் மோர் சிக்ஸ்’, ‘வாவ்! சூப்பர் கேட்ச்’ என்றெல்லாம் உருண்டு புரண்டு கத்தி விட்டு அமர்ந்திருக்கையில்.. ப்ரியன் வந்து சேர்ந்தான்.

 

அவனைப் பார்த்து நக்கலாக சிரித்த ஆதவன்.. “என்னடா.. பாஸ்தா பீட்சா மாதிரி போன.. இப்ப பழைய சாதம் மாதிரி திரும்பி வந்துருக்க? என்ன.. ஸ்பெஷல் கவனிப்போ..? என்று போலியாக வியந்தான்.

 

“டேய் ஆதவா.. எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுடா..” என்றான், பாவமான முகத்தோடு..!

 

“கேளு மச்சி.. கேளு.. நீ கேட்டப் பின்னும் விடைக் கூறாமல் இருப்பேனோ..! உன் கேள்விக் கடலில் மூழ்கி பதிலெனும் முத்தெடுத்து, நண்பனாகிய உன்னிடம் சேர்க்காமல் விடுவேனோ..! உன்னால்..”

 

அவனை அதற்கு மேல் பேச விடாமல்.. இரு கைகளையும் கூப்பி.. “நானே நொந்து போய் வந்துருக்கேன்.. நீ வேற ஏண்டா என்னை நூடுல்ஸ் ஆக்க ட்ரைப் பண்ற?” அழாக் குறையாக..!

 

“ஹாஹா.. சரி சரி.. அழாத.. என்ன கேக்கணுமோ கேளு..”

 

“மச்சி..‌ எப்டிடா இந்த பொண்ண லவ் பண்ணின? உன் லவ் ஸ்டோரிய கொஞ்சம் சொல்லு..”

 

“என் லவ் ஸ்டோரியா? அது ரொம்ப பெரிய கதை ஆச்சேடா.. கண்டிப்பா தெரிஞ்சே ஆகணுமா?”

 

ஆமெனத் தலையசைத்த ப்ரியனிடம் தான் வெண்மதியை சந்தித்ததைக் கூற ஆரம்பித்தான், ஆதவன்..!

 

5.

 

‘தேவேந்திரன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ உடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில்.. வேலைகளை செய்து தருபவர்கள், ‘Right Choice Interiors’

 

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, தங்கள் வேலை முடிந்ததும்.. இன்டீரியரின் வேலைகளை மேற்பார்வையிட வந்திருந்த ஆதவனின் விழிகளில் விழுந்து.. அவனை காதலில் மொத்தமாக வீழச் செய்தவள், வெண்மதி.

 

முதன்முதலில் அவளைப் பார்த்து, தனக்கானவள் இவள் என முடிவு செய்து விட்டு.. அவள் கண்களில் படும் தூரத்தில் நின்று கொண்டு.. ஆனால், அவளை கவனிக்காதவன் போல இருந்து கொண்டான்.

 

அந்த பங்களாவில் மாடுலர் கிச்சன் அமைக்க வேலை நடந்து கொண்டிருக்கையில்.. இவள் ஹாலில் கலைப் பொருட்களையும், பெயிண்டிங்ஸையும், எங்கே எப்படி வைக்கவென ஆட்களிடம் கூறிக் கொண்டிருந்தாள். இடையில் வேறு என்ன தேவையெனக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள்.

 

கிச்சன் வாசலில் நின்று கொண்டிருந்தவன்.. அவள் திரும்பாததைப் பார்த்து கடுப்பாகி, அங்கு இன்னும் பிரிக்கப் படாமல் இருந்த அட்டைப் பெட்டியை வழக்கம் போல் ஓடி வந்து தாண்டி வெளியே சென்று விட்டான்.

 

அவன் ஓடி வரும் அரவம் கேட்டு இவள் திரும்பும் போது, அட்டை பெட்டியைத் தாண்டி வெளியே சென்று கொண்டிருந்தான்.

 

சென்று கொண்டிருப்பவனைப் பார்த்து, ‘யாருடா இவன்.. ஹை ஜம்ப்ல நமக்கே டஃப் குடுப்பான் போல..?’ என்று மனதில் நினைத்தவள்.. ஜன்னலின் வழியே வெளியே கார்டனிங் வேலை நடந்து கொண்டிருந்த இடத்தில் நின்றிருந்தவனைப் பார்வையிட ஆரம்பித்தாள்.

 

‘நல்லா தான் இருக்கான்.. பட், நம்ம கொள்கைக்கு ஒத்து வரணுமே..’ என்று யோசித்து விட்டு, ‘சட்! என்னத்த யோசிக்கறேன்!!’ என்று தன் எண்ணம் போகும் திசையில் திகைத்து.. தலையில் கொட்டிக் கொண்டாள்.

 

நம் வெண்மதிக்கு தன் பெயரின் மேல் அலாதி ப்ரியம்.. ஆதலால், தன் பெயருக்கேற்றாற் போல் பொருத்தமாய் பெயருள்ளவனையே மணாளனாய் ஏற்றுக் கொள்வது என்ற மேம்பட்டக் கொள்கை வைத்திருக்கிறாள்.

 

தன் மனதை கட்டுப்படுத்தி.. வேலையில் கவனம் செலுத்தியவள், ஏதோ உள்ளுணர்வில் மீண்டும் அவனைத் திரும்பி பார்த்தாள். அங்கே அந்த மாயக்கண்ணன்.. வேலை செய்யும் பெண்களுடன் ‘ஈஈஈ’ என அத்தனை பற்களையும் காட்டி, என்னவோ கதை ஜொள்ளிக் கொண்டிருந்தான்.

 

கடுப்பானவள்.. வெளியே செல்ல எத்தனிக்கையில்.. ‘அவன் யாரோ எவனோ.. என்ன செய்தால் உனக்கென்ன?’ என்ற மனசாட்சியின் குரலுக்கு மதிப்பளித்து.. அமைதியாக நின்று விட்டாள்.

 

சிறிது நேரத்தில் உள்ளே வந்தவனை.. வேலை செய்பவர், “ஆதவன் சார்.. இந்த கப்போர்ட் சைஸ் ஓகேவா பாருங்களேன்..” என்றார்.

 

அங்கே அவனின் பெயரைக் கேட்டு ஃப்ளாட் ஆனவள் தான் நம் வெண்மதி..!

 

அன்றைய வேலை முடித்து செல்லும் வரைக் கூட பொறுமையில்லாமல்.. நொடியும் தாமதிக்காமல், கிச்சனில் உள்ளே நின்றிருந்தவனிடம்.. “மிஸ்டர் ஆதவன்” அழைத்தாள்.

 

யாரெனத் திரும்பி பார்த்தவன்.. அழைத்தது தன்னவளெனத் தெரிந்து, விநாடிப் பொழுதில் பிண்ணனியில் இளையராஜா பிஜிஎம் இசைக்க விட்டு.. வெண்ணிற ஆடை அணிந்த தேவதைகள் சகிதம்.. பனிமலை வரை அவளுடன் கைக்கோர்த்து சென்று கொண்டிருந்தவன்.. அவளின் “கேன் வீ கெட் மேரீட்?” என்ற கேள்வியில் அவசர அவசரமாக இளையராஜாவையும், தேவதைகளையும் புறம் தள்ளிவிட்டு… திகைத்துப் போய் “பார்டன்” என்றான், புருவங்கள் சுருங்க..!

 

வேலை செய்து கொண்டிருந்த அனைவரும்.. வேலையை நிறுத்தி விட்டு, இவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

 

அதில் அஜய்க்கும், வெண்மதிக்கும் தோழனான ப்ரதீபன், “மதி.. என்ன விளையாட்டு இது?” என்றான், கண்டிக்கும் பாவனையில்..!

 

“விளையாடல தீபன்.. நிஜமா தான் கேக்கறேன்..”

 

“உன்ன… இரு உன்னை வேலை செய்ற பேர்வழினு என் தலைல கட்டின உன் அண்ணங்காரன்ட்ட சொல்றேன்..” என்று அலைபேசியை உயிர்ப்பித்தான்.

 

அது எதையும் கண்டுகொள்ளாமல்.. ஆதவனைப் பார்த்தாள். அவன் இன்னும் ‘என்ன பொண்ணுடா…’ என்ற ரீதியில் திகைப்பிலிருந்து வெளியே வராமல்.. கண் தட்டாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

 

“பிடிக்கலனாலும் சும்மா சொல்லுங்க.. நோ இஷ்யூ..”

 

“ச்சேச்சே.. பிடிக்கல எப்ப சொன்னேனாம்..? உங்களப் பார்த்தப்பவே ரொம்ப பிடிச்சது. நீங்க சொல்லுங்க.. இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமா?”

 

பார்த்து கொண்டிருந்த மற்றவர்கள் மானசீகமாக தலையில் அடித்து கொண்டனர்.. அநேகமாக அவர்களின் மைண்ட் வாய்ஸ்.. ‘இதுங்க எங்க உருப்பட போகுதுங்க’ என்பதாய் இருக்கலாம்.

 

ப்ரதீபன் அலைபேசியைத் தட்டி கொண்டிருக்கையிலேயே, “ஓ! பண்ணிக்கலாமே.. கல்யாணத்துக்கு எங்கள எல்லாம் கூப்டுவீங்களா எப்டி?” கேட்டு கொண்டே உள்ளே வந்தான், வெண்மதியின் அண்ணன் அஜய்.

 

அஜய்யின் தங்கை தான்.. வெண்மதியென அறியாத ஆதவன், “ஹலோ அஜய் சர்.. நீங்க இல்லாமலா? வாங்க.” என்று கைக் குலுக்கி.. அவன் காதோரம் சென்று, “இந்த பொண்ணு பார்த்ததுமே என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சு அஜய் சர்.. என் பர்ஸனாலிட்டிக்கு மேட்ச்சா இருப்பாளா? கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்..” என்றான்.

 

இருவரின் அருகில் நின்ற தீபன்.. ‘என்ன கொடுமை சார் இது? பொண்ணோட அண்ணன்கிட்டயே போய் மேட்ச்சா இருப்பாளானு கேக்கறான்..!’ என்று திருதிருவென முழித்து கொண்டிருந்தான்.

 

“அதிருக்கட்டும்.. பொண்ணு பேரென்ன கேட்டீங்களா ஆதவன்?”

 

“ஸ்ஸ்.. இல்லயே..” என்று நுனி நாக்கை கடித்துக் கொண்டவன், வெண்மதியிடம் திரும்பி.. முப்பத்து இரண்டையும் காட்டி, “யுவர் குட் நேம் டார்லிங்?” கேட்டான்.

 

“வெண்மதி..” என்று பதில் சொன்னான், அஜய்.

 

“பரவால்ல அஜய் சர்.. உங்க ஸ்டாஃப்ஸ் எல்லார் பேரையும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க போல.. ஐ அப்ரிஷியேட் யூ..”

 

“ஸ்டாஃப்ஸ் பேரு மட்டுமில்ல.. இந்த தங்கச்சி பேரயும் தெரிஞ்சு வச்சிருக்கேன் மிஸ்டர் ஆதவன்” என்ற அஜய், “ரெண்டு பேரும் மாடிக்கு வாங்க..” என்று உறுமி விட்டு விறுவிறுவென மாடியேறி சென்று விட்டான்.

 

ஆடு திருடும் கள்ளனின் முகத்தை பார்க்காதவரா நீங்கள்? அப்படியானால் இப்போது வந்து ஆதவனின் முகத்தைப் பார்த்து செல்லுங்கள்..

 

“த.. த.. தங்கச்சியா?”

 

“ஏன் தந்தியடிக்கறீங்க ஆதவன் சர்?” – தீபன்.

 

“நீங்க கூட சொல்லவே இல்லயே தீபன்? அதான் தந்தி.. தபால் அடிக்குது..”

 

“எங்க சொல்ல விட்டீங்க? அதுக்குள்ள தான் ரெண்டு பேரும் கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமானு டூயட் வரைப் போயிட்டீங்களே.. போங்க.. உங்க மச்சான் மாடில மசாஜ் பண்ண வெய்ட் பண்ணிட்டு இருப்பாரு.. அவர ரொம்ப நேரம் காக்க வைக்காதீங்க..”

 

அவனை முறைத்து விட்டு, வெண்மதியைத் திரும்பி பார்த்தான்.. அவள் படியேறி சென்று கொண்டிருந்தாள். பெருமூச்சுடன் இவனும் அவளை பின் தொடர்ந்தான்.

 

அஜய்.. வெண்மதியின் குணத்திற்கு அப்படியே நேர் எதிரானவன்.

 

இவளிடம் ஒற்றை ரோஜாவைக் கொடுத்தால்.. நாள் முழுதும் கூட பூச்சாடியில் வைத்து ரசித்திருப்பாள். அதை அஜய்யிடம் தந்தால்.. நொடியில் விற்று லாபக்கணக்கை கணித்து விட்டு.. அடுத்த பிஸினஸ் என்னவென்று பார்க்க போய் விடுவான்.

 

இவளின் குறும்பு தனத்தில் அஜய் கொலை வெறியாவான். வீட்டில் இருவருக்கும் எப்போதும் முட்டுக் கொள்ளும் தருணங்களே அநேகம்..

 

மொட்டை மாடியில் இருந்த அஜய்யின் முன் ஒன்றுமறியா பச்சை பாலகனைப் போல் நின்றிருந்தான் ஆதவன். அஜய்யின் முகத்திலிருந்து எதையும் கணிக்க முடியவில்லை.

 

அஜய்.. ஆதவனின் கண்களுக்கு மொட்டை மாடியில் தனுஷிடம் பேரம் பேசும் பிரகாஷ் ராஜாகவே தெரிந்தான். சிரிக்காமல் இருக்க அரும்பாடுபட்டு மேலே வானத்தையும், கீழே தரையும் பார்க்கும் பாவனையில் மண்டையை மேலும் கீழுமாக உருட்டி கொண்டிருந்தான்.

 

“என் தங்கச்சிய என்கிட்டயே மேட்ச்சா இருக்காளா கேக்கறீங்களே மிஸ்டர் ஆதவன்.. ஹௌ டேர் யூ ஆர்?”

 

“அஜய் சர்.. அது..”

 

“அஜய்.. நான் தான் கல்யாணம் பண்ணிக்கலாமானு அவர்கிட்ட கேட்டேன்”

 

“ஏன் நாங்களாம் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டோம்னு நீயே உனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டியா?”

 

“ஏண்டா இப்டி பேசற? அவர் பேரு தெரிஞ்சதுனால தான் அப்டி கேட்டேன்..” என்றவளின் குரல் ஸ்ருதி இறங்கி ஒலித்தது..

 

அவளின் பதிலில் அஜய் ருத்ர மூர்த்தியாய் முறைத்துக் கொண்டிருந்தானெனில்.. ஆதவன்.. திகைப்பு, ஆச்சர்யம், கோபம், தன்னை தனக்காக அவள் விரும்பவில்லை என்றதில் கொஞ்சமே கொஞ்சம் அவமானமாய் கூட உணர்ந்தான்.

 

‘ஏன்.. பேரு ராமசாமியா இருந்தா கல்யாணம் பண்ணிக்க மாட்டாளாமா?’

 

“சென்ஸோட தான் பேசறியா மதி நீ? ஒருத்தவங்க பேர மட்டும் வச்சு உன் லைஃப தூக்கி குடுத்துடுவியா?”

 

“இங்க பாரு.. என்னோட பாலிஸி உனக்கு தெரியும் தான?”

 

“பாலிஸி மண்ணாங்கட்டினு பேசினினா.. அடிச்சு பல்லைக் கழட்டிடுவேன் வெண்மதி.. இருபத்து மூணு வயசு ஆகிடுச்சு.. இன்னும் குழந்தையாவே பிஹேவ் பண்ணிட்டு இருக்க.. வெக்கமாயில்ல?”

 

“போடா அஜய்.. நா..”

 

இருவரிடையேக் குறுக்கிட்ட ஆதவன், “சர் ப்ளீஸ்.. உங்க சிஸ்டர் எதுக்கு அப்டி கேட்டாங்கனு எனக்கு தெரியல.. பட், நிஜமாவே எனக்கு அவங்கள பிடிச்சிருக்கு.. உங்களுக்கே என்னைப் பத்தி ஓரளவு தெரிஞ்சிருக்கும்.. இன்னும் விசாரிக்கணும்னா நீங்க ரவி சர்கிட்ட கூட தாராளமா கேட்டுக்கலாம். உங்க தங்கச்சினு தெரியாம.. உங்கக்கிட்டயே நான் அப்டி கேட்ருக்கக் கூடாது தான். ஐ’ ம் எக்ஸ்ட்ரீம்லி சாரி.. நான் வரேன் அஜய் சர்” என்று அஜய்யிடம் கூறி விட்டு.. வெண்மதியைத் திரும்பி கூடப் பார்க்காமல் சென்று விட்டான்.

 

ஒரு பார்வைக் கூட தராமல் போனவன்.. அடுத்து வந்த இரவுகளில்.. வெண்மதியின் தூக்கத்தை மொத்தமாய்க் களவாடிக் கொண்டான்.

 

ஒரு வாரமாக வேலையில் கவனம் செலுத்தாமல்.. சோர்ந்து போய் இருக்கும் தங்கையைப் பார்த்த அஜய்.. கடுப்பானாலும்.. வேறு வழியில்லாமல் ஆதவனின் எம். டி. ரவீந்திரனிடம் பேசினான்.

 

விசாரித்த வரையில் விளையாட்டுதனம் மிகுந்தவன் என்பதைத் தவிர, மற்ற விஷயங்கள் தன் மனதிற்கு திருப்தி தரவே.. வெண்மதியிடம் தன் சம்மதத்தைத் தெரிவித்தான்.

 

ஒரே நொடியில் மனதைக் கொய்து சென்றவனின் பார்வையை ஒரு முறை மட்டும் பெற்றால் போதுமென ஒரு வாரமாகத் தவித்திருந்தவள்.. வாழ்நாள் முழுதும் அவன் பார்வைக்கான சொந்தம் கிடைக்கப் போவதில் சிட்டுக்குருவியாய் மாறி பறந்து போனாள்.. அவளவன் ஆதவனைக் காண..!

 

‘தேவேந்திரன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ என்று தங்க நிற எழுத்துக்கள் மின்னிய போர்டைப் பார்த்து வியந்து கொண்டே.. அந்த பெரிய நிறுவனத்தினுள் அனுமதி வாங்கி உள்ளே சென்றாள், வெண்மதி.

 

ரிசப்ஷனில் இருந்த அந்த அழகியப் பெண்ணிடம்.. “எக்ஸ்க்யூஸ் மீ.. திஸ் இஸ் வெண்மதி.. வான்ட் டூ ஸீ மிஸ்டர் ஆதவன்.. கேன் ஐ?” என்றாள்.

 

“ஆதவன் சர்.. ஆஃபீஸ்ல இல்லயே மேம்.. சைட் சீயிங் போயிருக்கார்..”

 

“ஓ! எப்ப பார்க்கலாம்?”

 

“வொர்க் முடியற நேரம் தான்.. வந்துடுவார்.. மே பி.. ஹாஃப் அன் ஆர் ஆகலாம்..”

 

“ஓ!”

 

அவளின் ஏமாற்ற முகத்தைப் பார்த்து விட்டு, “ரொம்ப அர்ஜென்ட்னா சொல்லுங்க மேம்.. கால் பண்றேன்.. உங்க நேம் என்ன சொன்னீங்க?” என்று கேட்டாள், ரிசப்ஷன் பெண்.

 

“இல்ல.. பரவால்ல.. நான் வெய்ட் பண்றேன்..”

 

“அது விசிட்டர்ஸ் ரூம்.. அங்க வெய்ட் பண்ணுங்க.. அவர் வந்ததும் நான் இன்ஃபார்ம் பண்றேன்..”

 

“ஹ்ம்ம்.. தாங்க்ஸ்..” அவளிடம் ஒரு புன்னகையைத் தந்து விட்டு.. அவள் காட்டிய அறையில் போய்.. அங்கிருந்து விலையுயர்ந்த அந்த சோஃபாவில் அமர்ந்து ஆதவனுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள், வெண்மதி..!

 

அரைமணி நேரம் ஒரு மணி ஆனப் பின் வந்தவனை.. ரிசப்ஷனிஸ்ட், “ஆதவன் சர்..” அழைத்தாள்.

 

“ஹாய் மேகா.. எப்டி காலைல பார்த்த மாதிரியே.. இப்பவும் இவ்ளோ ஃப்ரெஷ்ஷாவே இருக்க? ம்ம்… லிப்ஸ்டிக் மட்டும் தான் லேசா கலைஞ்சிருக்கு நினைக்கறேன்.. எங்க அந்த டிஷ்யூ? கொண்டா சரி பண்ணுவோம்..”

 

“ப்ச்.. ஏன் சர் இப்டி..”

 

“அப்ப லிப்ஸ்டிக் கலையலயா? இந்த பக்கம் கொஞ்சம் திரும்பு.. ஓ! எஸ்.. கண்ல காஜல் கூட கலைஞ்சிருக்குது போலயே.. ஸீ மேகா.. நீ எந்த காஸ்மெட்டிக் ப்ராடெக்ட்ஸ் யூஸ் பண்ற? இனி அதுலாம் வாங்காத.. நான் சொல்ற ப்ராடெக்ட்ஸ் வாங்கு சரியா? ட்வென்ட்டி ஃபோர் ஆர்ஸ்.. பர்ஃபெக்ட்டா இருக்கும்..”

 

அவனைப் பற்றி நன்கு அறிந்திருந்தவள்.. “ஷ்ஷ்.. கொஞ்சம் என்னைப் பேச விடுங்களேன் சர்..” என்றாள், பொறுமை இழந்தவளாக..!

 

“பேசு கண்ணே.. பேசு.. நீ பேசுவதைக் கேட்பதற்காகவன்றோ நான் இப்பிறவியே எடுத்துள்ளேன். நீ பேசுவதைக் கேட்காவிட்டால்.. என் ஜென்ம சாபல்யம் தீருமோ? இப்பிறவிப் பயனை நான் அடைவேனோ..? பேசு மேகாம்மா பேசு..” என்றான், ஓவர் உணர்ச்சிகரமான குரலில்..!

 

அடுத்து எங்கே தன்னை பேச விடாமல் அவன் பேச ஆரம்பித்து விடுவானோ என்று.. ‘கண்டேன் சீதையை’ என்பது போல்.. “விசிட்டர் சர்.. உங்களுக்கு சர்.. வெய்ட்டிங் சர்..” என்றாள், அவசர அவசரமாக..

 

“பார்த்து.. பார்த்து.. மெதுவா மேகா.. ஏன் செல்லம்.. தொண்டைல எதுவும் ப்ராப்ளமா?”

 

“சர்.. பாவம் அவங்க ஒரு மணி நேரமா வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க.. நீங்க என்னடான்னா இங்க விளையாடிட்டு இருக்கீங்க..”

 

“ஒரு மணி நேரமாவா? யாரு?”

 

“ஒன் யங் லேடி.. பேரு என்னவோ சொன்னாங்க.. விசிட்டர்ஸ் ரூம்ல வெய்ட் பண்றாங்க. போய் பாருங்க..”

 

“பாஸ் இருக்காரா.. கிளம்பிட்டாரா மேகா..?”

 

“ரவி சர் அப்பவே கிளம்பிட்டார்.. உங்கள நாளைக்கு பார்க்கறதா சொல்ல சொன்னார்.. நான் கிளம்பறேன்.. எனக்கு டைம் ஆகிடுச்சு..”

 

“ஓகே மேகா.. டாட்டா.. நான் வேணும்னா உன்னை வீட்ல ட்ராப் பண்ணட்டுமா..? என் பைக் வேற உன்னை சுமந்துட்டு போக ஒத்த கால்ல ஸ்டாண்ட் போட்டு நிக்குது..”

 

“உங்க பைக்கிட்ட ரெண்டு கால்லயும் நிக்க சொல்லுங்க சர்.. என்னை சுமந்துட்டுப் போக எங்க அத்தானோட பைக் இருக்குது..” என்றவள் அதற்கு மேல் நிற்காமல் பறந்து விட்டாள்.

 

சென்றவளைப் பார்த்து தலையசைத்து.. தோழமைப் புன்னகையை உதிர்த்து விட்டு.. பின் ஞாபகம் வரப் பெற்றவனாய், ‘யாருடா அது நம்மளப் பார்க்க வந்திருக்க யங் லேடி..?’ யோசித்துக் கொண்டே சென்றவன்.. வெண்மதி வந்திருப்பாள் என சற்றும் நினைக்கவில்லை..

 

ரூம் வாசலில் கால் வைத்தவன்.. வெண்மதியை எதிர்பாராததால் திகைத்து நின்று விட்டான். ஒரு நொடியில் சமாளித்துக் கொண்டு.. “வாங்க.. மிஸ். வெண்மதி” என்றான், எங்கோ பார்வைப் பதித்து..! அவனுக்கு இன்னும் பெயர் காரணத்தால் விரும்புகிறாள் என்பது உறுத்திக் கொண்டே இருந்தது.

 

காத்துக் கொண்டிருக்கிறாள்உன்

ஒற்றைப் பார்வையில்

சாம்பலாகிப் போக

அவளுக்கான

சிறு புன்னகையை

சிந்தி விடு..

மீண்டும் உயிர்த்திடுவாள்

ஃபீனிக்ஸ் பறவையாக..!

 

அவள் அவனையே வைத்த விழி வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள். பதிலில்லாமல் போனதும் திரும்பியவன்.. அவள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, “ஏன் நிக்கறீங்க? உட்காருங்க.. என்ன விஷயமா பார்க்க வந்தீங்க?” என்று கேட்டான்.

 

பதில் சொல்லாமலும், உட்காராமலும் அதே பார்வையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“கான்ட்ராக்ட் விஷயமா வந்திருக்கீங்களா? பில்டிங் ப்ளான் எதுவும் போடணுமா? இல்ல.. ரைட் சாய்ஸ்ல இருந்து கொட்டேஷன் குடுத்துருக்காங்களா?”

 

கேள்வியை அடுக்கியவனைப் பார்த்தவள்.. பார்வையை மாற்றாமலே, “ஹ்ம்ம்.. கொட்டேஷன் தான் குடுக்க வந்தேன்.. ரைட் சாய்ஸ் ப்ரொப்பரேட்டர்.. அவர் தங்கச்சிய இங்க உள்ள ஒரு இடியட் இன்ஜினியருக்கு தாரை வார்க்க சம்மதம்னு கொட்டேஷன் குடுத்துருக்கார்.. அத சொல்ல தான் வந்தேன்.” என்று விட்டு அன்று அவன் திரும்பி பார்க்காமல் போனது போல்.. இவளும் முகத்தை திருப்பிக் கொண்டு விறுவிறுவென வெளியேறி விட்டாள்.

 

அவள் கூறியதன் சாராம்சம் புரிந்தும் புரியாமலும் முழித்து கொண்டே நின்று கொண்டிருந்தான். இந்த சேதியை எதிர்பாராத மூளை.. சற்றே வேலை நிறுத்தம் செய்திருந்தது போலும்.

 

வெளியே சென்றவள்.. அவன் பின்னால் வராததைப் பார்த்து கடுப்பாகி.. மீண்டும் உள்ளே வந்தாள். அவன் அசையாமல் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தவள் விரல்களை மடக்கி.. ‘நச்’சென்று அவன் தலையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்து விட்டு.. எதுவும் பேசாமல் நடக்க ஆரம்பித்து விட்டாள்.

 

“ஆஆஆ… ராட்சஷி..” என்று கத்திக் கொண்டே பின்னால் ஓடினான். நல்லவேளை.. வேலை நேரம் முடிஞ்சதும் எல்லாம் கரெக்டா கடைய சாத்திடுதுங்க.. இல்லையெனில்.. ஆதவனின் மானம் ஆகாயம் சென்றிருக்கும்.

 

அப்படித் தான் தலையைத் தடவிக்கொண்டே ஓடிச் சென்று.. அவளை இழுத்து நிறுத்தினான்.

 

“ஹேய்.. என்ன சொல்ற நீ..?”

 

“நீங்க ஒரு வெங்காயம் சொன்னேன்..”

 

“ப்ச்.. அஜய் சர் என்ன சொன்னார் சொல்லு..” சுற்றும் முற்றும் பார்த்து விட்டு.. ஆஃபீஸில் ஆட்கள் இல்லாததை உணர்ந்து.. “வா வெளியே போய் பேசலாம்..” என்று அவளையும் இழுத்து கொண்டு வெளியே வந்தான்.

 

பைக்கை ஸ்டார்ட் செய்து.. “உட்காரு..” என்றான்.

 

கைகளை கட்டி கொண்டு நின்றவள்.. “நான் எதுக்கு உட்காரணும்? முடியாது..” என்றாள்.

 

அவளை மேலிருந்து கீழ் வரைப் பார்த்தவன், “இங்க இப்ப செக்யூரிட்டி தவிர யாரும் இல்ல.. இப்ப மட்டும் நீ உட்காரல….” என்று வாக்கியத்தை முடிக்காமலே நிறுத்தி விட்டு.. அவள் முகத்தை அர்த்தத்துடன் பார்வையால் தீண்டினான்.

 

வாய்க்குள் என்னவோ முணங்கிக் கொண்டே பில்லியனில் அமர்ந்தாள்.

 

சீரியல் லைட்டின் உபயத்தால் தன் மேனியெங்கும் வண்ணப் பூத்தூரலாய் தூறிக் கொண்டிருந்த அந்த உயர் ரக ரெஸ்டாரண்ட் அழைத்துச் சென்றான்.

 

“என்ன ஆர்டர் பண்ணட்டும் வெண்மதி? ஸ்வீட் பிடிக்குமா?”

 

உர்ரென்று முகத்தை வைத்திருந்தவள்.. “எனக்கு பாவக்கா பக்கோடா தான் புடிக்கும்..” என்றாள்.

 

முதன்முதலில் ஆசையாக வெளியே அழைத்து வந்திருக்கிறான்.. பாகற்காய் கேட்டால் கோபம் வராதா..?

 

நிதானமாகப் பார்த்தவன்.. “பாவக்கா தான? போகும் போது அஞ்சு கிலோ வாங்கி தரேன்.. வீட்டுக்கு போய் நல்லா மொக்கு..” கடுப்புடன் கூறி விட்டு.. அவனுக்கு பிடித்த பாஸந்தி ஆர்டர் செய்தான்.

 

“சொல்லு வெண்மதி.. அஜய் சர் என்ன சொன்னார்..?” என்று ஆவலாக அவள் முகம் பார்த்து கேட்டான்.

 

“இன்னும் பத்து வருஷம் கழிச்சு ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதா சொன்னார்..”

 

அவள் பதிலில் எரிச்சலாகி, அவளை நக்கலாக பார்த்து கொண்டே.. “இன்னும் பத்து வருஷம் கழிச்சா? இப்பவே உன் மூஞ்சி பார்க்க சகிக்க மாட்டாம இருக்குது. இதுல இன்னும் பத்து வருஷம் கழிச்சுனா.. டவுட் தான். பேசாம வேற பொண்ணு பார்க்கலாம் நினைக்கறேன். நீ என்ன சொல்ற வெண்மதி? ஜஸ்ட் ஒரு சஜஷன்..” என்றான்.

 

ஆர்டர் செய்த பாஸந்தி வந்த பின்னும்.. அவள் பதிலேதும் சொல்லாமல்.. அமைதியாக இருப்பதைப் பார்த்தவன், “வெண்மதி.. என்ன ரொம்ப நேரமா யோசிக்கற?” என்று கேட்டான்.

 

“இல்ல.. ஒரு இன்ஜினியர் காஸ்மெடிக்ஸ் ப்ராண்ட்லாம் கூட தெரிஞ்சு வச்சிருக்காரே.. எப்டினு யோசிச்சிட்டு இருக்கேன்..” என்றாள், டேபிளிலேயேப் பார்வையைப் பதித்து..!

 

‘ஆஹா…இது தான் இந்த அழகுப் புயலின் அமைதிக்கு காரணமா? இது தெரியாம நான் வேற வெறுப்பேத்தி விட்டுட்டேனே.. எல்லாருக்கும் லவ் பண்ணதுக்கு அப்புறம் தான் ப்ரேக் அப் ஆகும்.. நமக்கு ஓகேனு சொல்றதுக்குள்ளயே ப்ரேக் அப் ஆகிடும் போலயே.. என்ன கொடுமை சார் இது?’

 

“அது.. அது.. இன்ஜினியரா? யாரு? கா.. கா.. காஸ்மெட்டிக்ஸா? அப்டியொரு ஸ்வீட் இருக்கா என்ன?”

 

“ஆமாமா.. காஸ்மெட்டிக்ஸ்னா சாருக்கு என்னன்னே தெரியாது இல்ல?”

 

“ஆமா.. இல்ல இல்ல..” என்று உளறிக் கொட்டி தலையில் கை வைத்துக் கொண்டவன்.. “பாருடி வெண்மதி.. பாஸந்தி கூலிங் போய்டுச்சுனா நல்லா இருக்காது.. சாப்டுமா..” என்றான்.

 

“சாப்பிடவா இல்ல.. தூக்கி உன் தலைல கொட்டவா..?

 

“எதுக்குடாம்மா இவ்ளோ கோவம்?”

 

“வேணாம்… கொல காண்டுல இருக்கேன். ஒண்ணுமே தெரியாத மாதிரி மூஞ்சிய வச்சிக்காத.. எப்டி.. எப்டி..? லிப்ஸ்டிக் கலைஞ்சிருக்குதோ? சர் டிஷ்யூ தேடி எடுத்து துடைச்சு விடப் போறீங்களோ? ம்ம்?”

 

“ச்சேச்சே.. அப்டி இல்ல வெண்மதி.. சும்மா ஒரு ஹெல்ப் பண்ணலாமேனு..”

 

“ஓஹோ! சர் சமூக சேவை செய்றீங்களோ..?”

 

“இங்க பாரு.. நீ ஏதோ தப்பா புரிஞ்சிட்டு இருக்க வெண்மதி..”

 

“ஆஹான்? பைக் எதுக்கோ ஒத்த கால்ல நிக்குது சொன்னீங்களே..?”

 

“அது.. சைட் ஸ்டாண்ட் மட்டும் போட்டா ஒத்தக் கால்ல நிக்காத? அது தான் சொல்லிட்டு இருந்தேன். வேற ஒண்ணுமில்ல..”

 

“அப்ப உங்க ரிசப்ஷனிஸ்ட்கிட்ட அவ்ளோ நேரம் இத தான் சொல்லிட்டு இருந்தீங்க? வேற ஒண்ணுமேயில்ல.. இல்ல?”

 

“அது.. அது.. ரிசப்ஷனிஸ்ட்கிட்ட வேற என்ன கேப்பாங்க.. எனக்கு போன் கால் எதுவும் வந்ததா என்னனு விசாரிச்சுட்டு இருந்தேன்.. அப்..”

 

வெண்மதி பல்லைக் கடித்து கொண்டு, கையை உயர்த்தி விரல்களை மடக்கிக் காட்டினாள்.. அதைப் பார்த்தவன் கப்பென்று வாயை மூடிக் கொண்டான்.

 

“நான் உங்க ஆஃபீஸ்ல எவ்ளோ நேரம் வெய்ட் பண்ணேன்னு உங்க ரிசப்ஷனிஸ்ட் சொன்னாங்களா?”

 

“ஹ்ம்ம்.. ஒன் அவர் வெய்ட் பண்ணியாமே.. சாரி வெண்மதி.. சைட்ல இன்னிக்கு வொர்க் கொஞ்சம் இழுத்துடுச்சு..”

 

“சைட் வொர்க் பத்தி எனக்கு தெரியாதா? ஆனா, ஒரு மனுஷி ஒரு மணி நேரமா.. நீ வந்துட மாட்டியானு ஆஃபிஸ் வாசலயே பார்த்துட்டு இருக்கேன்.. நீ வந்தது தெரிஞ்சதும்.. எழுந்து வந்து ரூம் வாசல்ல நிக்கறேன்.. திரும்பி கூடப் பார்க்காம அந்த பொண்ணுக்கிட்ட என் கண்ணு முன்னாடியே சைட்டடிக்கற வொர்க்க சின்சியராப் பண்ணிட்டு இருக்க நீ.. உன்னை…” என்று காண்டாகி.. டேபிளில் இருந்த தண்ணீர் க்ளாஸை யாரும் அறியா வண்ணம் அவன் பக்கமாக தட்டி விட்டாள்.

 

சட்டென நகர்ந்து.. தன் உடையைக் காத்துக் கொண்டவன்.. “நோ.. நோ வயலண்ட் செல்லோ.. உங்க அண்ணாத்த என்ன தான் சொன்னார்? அதைச் சொல்லுடி.. அதுக்கு முந்தி இந்த பாஸந்தி சாப்டு..” என்று அவள் பக்கம் ஒரு பௌலை நகர்த்தி வைத்தான்.

 

“அண்ணா என்னவோ சொல்லிட்டு போகட்டும். ஆனா, இப்ப நான் யோசிக்கறேன்.. பேர மட்டும் வச்சு தப்பான ஆள செலக்ட் பண்ணிட்டோமோனு..”

 

“ஏய் ஏய்.. உளராதடி.. நான் அந்த பொண்ணுக்கிட்ட விளையாட்டா தான் பேசிட்டு இருந்தேன்.. அத மட்டும் வச்சு நீ முடிவு எடுக்காத வெண்மதி..” என்றான், அவசர அவசரமாக..!

 

“இன்னொரு வாட்டி யார்க்கிட்டயாவது இப்டி வழியறதப் பார்த்தேன்…”

 

“ச்சேச்சே.. இந்த பொண்ணுங்க தான் என்னைப் பார்த்து வழியறாங்க வெண்மதி.. உன்னைத் தவிர நான் யாரயும் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன்.. உன்னை பார்த்த நாள்ல இருந்து என் கனவுலக் கூட நீ தான் வர்ற தெரியுமா..? தூக்கத்துல கூட வெண்மதி, வெண்மதினு உன் பேர சொல்லி தான் புலம்பிட்டு இருக்கேன்..”

 

“ஷ்ஷ்… ஆண்டவா.. நிறுத்தறியா கொஞ்சம்..? அஜய் என்ன சொன்னான் சொல்லவா வேணாமா?”

 

“சொல்லும்.. சொல்லி தொலையும்.. அதத் தான வந்ததுல இருந்து கேட்டுட்டு இருக்கேன்..?”

 

“ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு ஓகே சொல்லிட்டான்..”

 

முகம் மலர, “அப்ப கல்யாணம் பண்ணிக்கலாமா.. இப்பவே..?” கண்ணோடு கண் பார்த்துக் கேட்டான்.

 

பதில் சொல்லாமல் எழுந்தவள்.. ஹேண்ட் பேகை மாட்டிக் கொண்டு.. அமைதியாக எழுந்து நடந்தாள். கதவு வரை சென்றவள்.. தன்னை இமைக்காமல் பார்த்திருந்தவனை, இதழின் ஓரம் உதித்த சின்னப் புன்னகையோடுத் திரும்பி.. சற்றே தலையை இடது புறம் சாய்த்து, அந்த சிப்பி இமைகளை மூடி திறந்தாள்.

 

தலை சாய்த்துப் பார்த்தாளே..

தடுமாறிப் போனேனே..’

 

ஒருத்தியால் கண்களால் ஆறடி உயரத்தையும் மொத்தமாக முத்தமிட முடியுமா? அந்த மயக்கும் அந்தி மாலைப் பொழுதில்.. வெண்மதி ஆதவனைக் கண்களால் முத்தமிட்டுச் சென்றாள். அவளின் கண் முத்தத்தில் நெஞ்சம் முழுதாக நனைந்த ஆதவன்..

 

நீ முத்தப் பார்வைப் பார்க்கும் போதும்..

என் முதுகுத் தண்டில் மின்னல் வெட்டும்..’ என்று அவளின் தனக்கான ஒவ்வொரு அசைவிற்கும்.. கனவு உலகத்திற்கு சென்று வந்தான்.

 

அவள் கண்ணை விட்டு சென்றதும்.. சுதாரித்து, பாஸந்திக்கானப் பணத்தை டேபிளில் வைத்து விட்டு.. தனக்கு முன்னிருந்த டேபிளை.. லாங் ஜம்ப் செய்து.. ஓடிப் போய், சென்று கொண்டிருந்த வெண்மதியின் முன் மூச்சு வாங்க நின்றான்.

 

‘பாவி.. ஃபர்ஸ்ட்டே இந்த பார்வையப் பார்த்திருந்தா இவ்வளவு டென்ஷனாகி இருந்திருப்பேனா? இப்படி கோவம் போல போங்காட்டம் ஆடி.. இந்த ஆதவனையே கெஞ்சும் பார்வை பார்க்க வைத்து விட்டாளே..!’

 

“ஹேய் போங்கு..” தன் முன் மூச்சு வாங்க நின்றவனை அதே புன்னகை மாறாமல் பார்த்திருந்தாள், வெண்மதி.

 

“சரியான போங்கு நீ.. இவ்ளோ நேரம் கோவம்னு நடிச்சு.. ஏண்டி மனுஷன டென்ஷன் பண்ணி விட்ட?”

 

“நீ மாங்காவா இருந்தா அதுக்கு நான் போங்கா?”

 

“யாரு நானா? வெறும் பேருக்காக கல்யாணம் பண்ணலாமா கேட்டது நீதான?”

 

“அப்டிலாம் இல்ல.. நிஜமாவே பிடிச்சிருக்கு.  என்ன தான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்ருந்தாலும்.. இதுக்கு முந்தி பேசி பழகாத ஒருத்தன் அத்தன ‘டி’ போட்டும் நான் அமைதியாவே இருக்கேன்.. அப்பவே புரிஞ்சிருக்க வேணாம்? வேற ஒருத்தனா இருந்தா இந்நேரம் கன்னம் பழுத்துருக்கும்..”

 

புருவங்களை உயர்த்தி, “ஓ! இதுல இப்டி ஒரு விஷயம் இருக்கா? அப்ப பொண்ணுங்கக்கிட்ட ‘டி’ சொன்னா நம்மள புடிச்சிருக்கா.. இல்லயா.. தெரிஞ்சுக்கலாம்.. ரைட்?” என்று குறும்பு கண்களை சிமிட்டிக் கேட்டவனைப் பார்த்து பொய்யாய் முறைக்க முயன்று முடியாமல்.. இதழ் மலர்ந்து புன்னகைத்தாள், அவனவள் வெண்மதி..!

 

6.

 

ப்ரியன் தன் காதல் கதையைக் கூறுமாறு கேட்டதும்.. ஆதவன், “நிஜமாகவே தெரிஞ்சுக்கணுமா? அது பெரிய கதையாச்சே..” என்றான்.

 

“பரவாயில்ல சொல்லு.. இன்னிக்கு நான் ஃப்ரீ தான்..”

 

“அப்ப சரி.. வா.. நம்ம வெளில போய் பேசலாம்.. இங்க இந்த ஓல்டு லேடி ஒட்டு கேக்கும்..”

 

“ஏண்டா.. அம்மாவுக்கு இன்னும் வெண்மதி பத்தி தெரியாதா?”

 

“தெரியாது மச்சி.. தெரிஞ்சா இப்பவே வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லிடுவாங்க.. அவளும் எப்ப வரட்டும்னு கேட்டுட்டே இருக்கா.. ரெண்டும் சேர்ந்தா என் நிலைமை என்னாகும்? கொஞ்சம் யோசிச்சு பாரேன்.. அதான் கொஞ்ச நாளாவது நிம்மதியா இருந்துட்டு போலாமேனு சொல்லல..”

 

“சரி வா.. அப்டியே வெளில டின்னர் முடிச்சிட்டு வந்துடலாம்..”

 

ஆதவன் – வெண்மதியின் காதல் கதையைக் கேட்ட ப்ரியன்.. “அப்ப இந்த ரெஸ்டாரண்ட் தான் ஃபர்ஸ்ட் டைம் உன் ஆளக் கூட்டிட்டு வந்தியா?” என்று கேட்டான்.

 

“ஆமா மச்சி.. நீ கேட்டதும் சென்டிமென்டலா இருக்குமேனு தான் இங்க வந்தேன்..”

 

ப்ரியன், “பார்டா.. நீ கூட சென்டிமென்ட் பார்ப்பியா.. ஹய்யோ.. தெய்வமே.. வெக்கம் வேற படறானே.. ஹாஹாஹா..” என்று வாய்விட்டு சிரித்துக் கொண்டே.. “அதான் அவங்க அண்ணா ஓகே சொல்லிட்டாரே.. அப்புறம் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க..?” என்று கேட்டான்.

 

“அவ இன்னும் குழந்தையாம்.. ரெண்டு வருஷம் போகட்டும்னு சொல்லிட்டார். அவர் சொன்ன டைம் முடிய இன்னும் ஆறு மாசம் இருக்குது. அதான் என் நிலைமை இப்டி பைப் ஏறி குதிக்க வேண்டியதா இருக்குது..” என்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டான்.

 

“யாரு? வெண்மதி குழந்தையா? இன்னிக்கு நான் போலீஸ்னு வாய் கூசாம பொய் பேசறாடா..” என்று அதிர்ச்சியானக் குரலில் கூறிக் கொண்டிருக்கையில்..

 

“இருடா வர்றேன்..” என்று எழுந்த ஆதவன்.. இவர்களதில் இருந்து இரண்டு டேபிள் தள்ளி இருந்த டேபிள் சென்று.. அங்கிருந்த பெண்ணிடம்.. “ஹாய்.. ஐ’ம் ஆதவன்.. இவ்ளோ நேரம் என்னைத் தான பார்த்துட்டு இருந்தீங்க?  இங்க இருந்து ரொம்பக் கஷ்டப்பட்டு எக்கி எக்கி பார்த்துட்டு இருந்தீங்களா.. அதான் நீங்க படறக் கஷ்டம் தாங்காம நானே உங்க முன்னாடி வந்துட்டேன்.. இப்ப நல்லா தெரியறேன் தான? நல்லாவே பார்த்துக்கோங்க.. நான் ஒண்ணும் தப்பாலாம் நினைச்சுக்க மாட்டேன். அப்புறம் நான் என் பேர சொன்ன மாதிரி நீங்களும் உங்க பேர சொன்னா.. கூப்பிடறதுக்கு வசதியா இருக்கும்.. அதுக்கு தான். யுவர் குட் நேம் மேம்..?” என்று வழக்கம் போல் தன் சேட்டையை ஆரம்பித்து விட்டிருந்தான்.

 

அவன் எழுந்து சென்றதும்.. எங்கே போகிறானெனத் திரும்பி பார்த்த ப்ரியனின் விழிகள்.. முதலில் திகைப்பைக் காட்டி, ஆதவனின் பேச்சில் சிரிப்பை வெளிப்படுத்தி,  அதற்கு எதிர்வினையாய் அப்பெண்ணின் மிரண்ட பார்வையை உள்வாங்கி, அவள் விழிகள் தன்னைத் துணைக்கழைத்ததில் கர்வப்பட்டு, என வர்ண ஜாலங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

 

அவளின் மீதிருந்த பார்வையை அகற்றாமல்.. மெதுவாக எழுந்து சென்று ஆதவனின் அருகில் போய் நின்றான்.

 

இவனைப் பார்த்த ஆதவன்.. “பாரு மச்சி.. வர வர.. எங்க போனாலும் இந்த பொண்ணுங்க தொல்லை கொஞ்சம் ஜாஸ்தியா தான் ஆகிடுச்சு.. இருந்தாலும் என்னை மாதிரி அழகா பொறந்த பசங்க அதுக்கெல்லாம் கவலைப்பட்டுட்டு இருந்தா முடியுமா..? பாவம் அந்த பொண்ணுங்க மனசு உடைஞ்சிட மாட்டாங்க..? அது தான் என் கவலைய ஒரு ஓரமாத் தூக்கி வச்சுட்டு.. இவங்க மனசு நோகக் கூடாதுனு வந்து பேசிட்டு இருக்கேன்..” என்றான்.

 

ப்ரியன் எழுந்து வந்ததும்.. அந்த பெண் ஆதவன் பேச்சில் மேலும் மிரண்டு.. மெதுமெதுவாக நகர்ந்து ப்ரியனை ஒட்டினாற் போல் நின்று கொண்டாள்.

 

அவள் மனம் பாதுகாப்பிற்காய் தன்னை நாடுவதை உணர்ந்து கொண்ட ப்ரியனின் மனம்.. இரண்டு நாட்களாய் கொதித்துக் கொண்டிருந்தது சட்டென மாறி.. பனிநிலவாய் ஒரே நொடியில் குளிர்ந்து போனது.

 

ப்ரியனைப்‌ பார்த்து விட்டு..‌ கண்களில் குழப்பத்தோடு ஆதவனைப் பார்த்தாள்.

 

அவளின் குழப்பத்தை உணர்ந்து கொண்டவன், “என்‌ ஃப்ரெண்ட்.. ஆதவன்” என்றான்.

 

தன் அழகிய புருவங்களை சுருக்கியவளைப் பார்த்து, “உனக்கு தெரியாது.. நேத்து தான் ஃப்ரெண்ட்ஸ் ஆனோம்..” என்று மீண்டும் அவள் விழிகளின் கேள்விக்கு பதில் தந்தான்.

 

இன்னமும் அவள் விழிகளைப் படித்துக் கொண்டே.. “சாப்ட்டியா?” கேட்டான்.

 

ஆயிற்று எனும் விதமாய் தலையசைத்தாள்.

 

“தனியாவா வந்த..?”

 

ஆமாமென மீண்டும் தலையாட்டினாள்.

 

“சரி, பில் நான் பே பண்ணிடறேன். நீ போ..‌”

 

தயங்கி நின்றவளைப் பார்த்தவன்.. “போ..” என்றான், மீண்டும் அழுத்தமாக..!

 

கைப்பையை எடுத்துக் கொண்டு, திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வெளியேறினாள்.

 

சென்றவளையேப் பார்த்து கொண்டிருந்த ஆதவனைப் பார்த்த ப்ரியன், “கின்னஸ் ரெக்கார்ட்..” என்றான், சற்றும் சம்மந்தமில்லாமல்..!

 

புரியாமல் திரும்பிய ஆதவன், “எது..?” கேட்டான்.

 

“நீ இவ்ளோ நேரம் உன் திருவாய மூடிட்டு இருக்கறது..”

 

“என்ன கிண்டலா? யாருடா அந்த பொண்ணு..? இவ்ளோ நேரம் ஒண்ணும் தெரியாதவன் மாதிரி என் கதையக் கேட்ட? ஆனா.. உனக்கே பெரிசா ஒரு கதை இருக்குது போலயே?”

 

ப்ரியன், “எப்டிடா கண்டுபிடிச்ச?” என்றான், விழிகளில் ஆச்சர்யத்தைக் காட்டி..!

 

“ஆமா.. இத கண்டுபிடிக்க க்ரைம் ப்ரான்ச் விவேக் வரணுமாக்கும்.. நான் தான் பார்த்தேனே.. அந்தம்மா என்னவோ என்னை வில்லன பாக்கற மாதிரி பார்த்துட்டு.. இவர் பக்கம் வந்து நிக்கறாங்க.. இவர் என்னடான்னா கௌதம் மேனன் ஹீரோ மாதிரி லுக் விட்டுட்டு.. கண்ணாலயே ப்ரொடெஸ்ட் குடுக்கறாரு.. அவங்க கண்ணு கேக்கற எல்லா கேள்விக்கும் இவரு அப்டியே கூகுளா மாறி பதில் சொல்றாரு.. அப்புறம் சாப்ட்டியானு வாய் கேக்குது.. ஊட்டி விடட்டுமானு கண்ணு கேக்குது.. தனியாவா வந்துருக்கனு வாய் கேக்குது.. துணைக்கு வரட்டுமானு கண்ணு கேக்குது.. அப்புறம் என்ன..? ஆங்.. வள்ளல் பெருந்தகையா மாறி பில் பே பண்றாராமாம்.. ஷப்பப்பப்பா.. இதுக்கு மேலயுமா நான் கண்டுபிடிக்கறதுக்கு இருக்குது..?”

 

“ஹாஹா.. டேய் உனக்கு வாய் வலிக்காதா மச்சி..? தண்ணியக் குடி.. தண்ணியக் குடி..”

 

“கடுப்படிக்காதடா.. ஒழுங்கா அந்த பொண்ணு யாருனு சொல்லு..”

 

“ப்ருந்தா.. என்னோட அம்மு..” என்றவனின் கண்களில் வலியும், நிம்மதியும் ஒரே நேரத்தில் வெளிப்படுவதைக் கண்ட ஆதவன்..

 

“எதுவும் ப்ரச்சனையா மச்சி..?” என்று கேட்டான்.

 

பெருமூச்சை வெளியேற்றிய ப்ரியன்.. ‘கம்பெனி கைவிட்டு போனதால் ப்ருந்தாவும் கை விட்டு விட்டாள்’ என்றான்.

 

அவன் சொன்னதைக் கேட்ட ஆதவன், “நோ..‌ ஷி நெவர்.. பணத்துக்காக லவ் பண்ண பொண்ணு கண்ல இத்தனை ஏக்கம் இருக்காது..” என்றான்.

 

“என்னடா சொல்ற..”

 

“ஆமா மச்சி.. நான் பார்த்தேன்.. அந்த பொண்ணு எவ்ளோ நேரம் இங்கயே பார்த்துட்டு இருந்தா தெரியுமா? இப்ப தெரியுது.. உன் முகத்தை ஒரு வாட்டி பார்த்துட மாட்டோமானு தான் பார்த்திருக்கா.. நான் பேச ஆரம்பிச்சதும் கூட உன்னைத் தானத் தேடுனா?”

 

“ஹ்ம்ம்.. அது தான் நானும் யோசிக்கறேன். நேத்து அவ்ளோ வெறுப்பா பேசினவ.. இப்ப இப்டி…” என்று வாக்கியத்தை முடிக்காமல்.. நேற்று ப்ருந்தா பேசியதை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்த்தான்.

 

நேற்று விஷ்வாவின் சுயரூபம் தெரிந்து.. நொந்து போன மனதுடன் நிறுவனத்தை விட்டு வெளியேறி.. தன் டோமினாரில் வாசலைக் கடக்கும் நேரம்.. வேகமாக வந்து நின்ற ஆட்டோவில் இருந்து இறங்கினாள் ப்ருந்தா..

 

‘ப்ரியன்..’

 

‘அம்மு.. என்ன இந்த நேரத்துல வந்துருக்க? ஃபோன் கூட பண்ணல..?’

 

‘நம்ம ப்ரேக்கப் பண்ணிக்கலாம் ப்ரியன்..’ என்றவளின் முகத்தில் வெறுப்பின் பிரதிபலிப்பு.

 

‘ஹேய்.. என்னடி உளர்ற?’

 

‘ஆமா.. உங்களப் பத்தி இப்ப தான் எனக்கு நியூஸ் வந்தது.. இனி நம்ம ரெண்டு பேருக்கும் ஒண்ணும் இல்ல ப்ரியன்..’

 

‘அம்மு.. என்னாச்சு? ஏன் திடீர்னு இப்டி லூசு மாதிரி பேசற?’

 

‘இனி லூசாகிடக் கூடாதேனு பேசறேன்.. உங்கள மாதிரி ஒருத்தருக்கு கழுத்த நீட்டறதுக்கு லைஃப் ஃபுல்லா கல்யாணம் பண்ணிக்காமலே இருந்துடுவேன்..’

 

‘இப்ப என்னாச்சு சொல்லப் போறியா இல்லயாடி? யார் உன்கிட்ட என்ன சொன்னா? என்ன நியூஸ் வந்தது?’

 

‘விஷ்வாண்ணா எல்லாத்தையும் சொல்லிட்டார்..’ என்றவள்.. கையெடுத்துக் கும்பிட்டு, ‘இப்டிப்பட்ட ஒருத்தர் எனக்கு வேணவே வேணாம்.. குட் பை..’ என்று விட்டு மீண்டும் ஆட்டோவில் ஏறி சென்று விட்டாள்.

 

நேற்றைய சம்பவத்தை யோசித்துக் கொண்டிருந்த ப்ரியனின் தோள்களைப் பிடித்து உலுக்கினான், ஆதவன்.

 

“டேய்.. மச்சான்.. என்னாச்சு? ஏன் இப்டி சைட்டிஷ்ஷ பறிகொடுத்த குடிகாரன் மாதிரி முழிச்சிட்டிருக்க..?”

 

நக்கலடித்தவனை முறைத்த ப்ரியன்.. மீண்டும் தீவிரமான முக பாவத்துடன், “நீ சொன்னப்புறம் தான் யோசிக்கறேன் ஆதவ்..” என்றான்.

 

“என்னனு.. சைட்டிஷ்ஷ எப்டி பறிகொடுத்தோம்னா..?”

 

“ப்ச்.. டேய்..”

 

“சரி.. சரி.. சொல்லு..”

 

“நேத்து இருந்த டென்ஷன்ல என்னால எதையும் யோசிக்க முடியலடா.. நேத்து அம்மு நம்ம பிரேக்கப் பண்ணிக்கலாம்.. ஒத்து வராது சொன்னாளே தவிர.. கம்பெனி பத்தி அவ பேசவே இல்ல.. இந்த விஷ்வா தான் என்னவோ ப்ளே பண்ணிருப்பானோனு தோணுது..”

 

“ஹ்ம்ம்.. காலைல மொத வேலையாப் போய் அவன் சட்டையப் புடி.. ஏன் மச்சி.. நீ ஏன் போலீஸ்க்கிட்ட போய் அவன் மேல ஒரு கம்ப்ளெய்ண்ட் குடுக்கக் கூடாது..?

 

“இல்ல ஆதவ்.. அவன் எல்லா டாக்யூமெண்ட்ஸூம் பக்காவா வச்சிருக்கான். போலீஸ்க்கு போனாலும் நோ யூஸ். நான் தான் ஏதோ கம்பெனி அக்ரிமென்ட்னு சொன்னதும் கண்ண கட்டிட்டு வெத்து பத்திரத்துல சைன் பண்ணி தொலைச்சிருக்கேனே..” தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து உள்ளம் குமுறினான்.

 

தொடர்ந்து, “மோர் ஓவர்.. எப்டி எனக்கு தெரியாம என் கம்பெனிய அவன் எடுத்துக்கிட்டானோ… அதே மாதிரி அவனுக்கே தெரியாம நான் எடுத்துக்கணும்.. அப்ப தான் என்னோட வலி என்னனு அவனுக்கு புரியும்..” என்று கண்கள் சிவந்தான்.

 

ப்ரியன் டென்ஷனாவதை உணர்ந்து… அவன் மனநிலையை மாற்ற எண்ணி, “சரிடா.. கண்டிப்பா உன் கம்பெனி உன்கிட்ட வரும்.. அத விடு.. உன் ஆளு பத்தி சொல்லு.. என்ன பண்றாங்க..?”

 

காதலியின் நினைவில் டென்ஷன் குறைந்து, மென்மையாய் புன்னகைத்தவன்.. “ப்ருந்தா.. சி. ஏ. படிச்சிட்டே ஒரு ஆடிட்டர்கிட்ட வொர்க் பண்ணிட்டு இருக்கா.. அப்பா ரிஜிஸ்டர் ஆஃபீஸ்ல வொர்க் பண்றாரு.. அம்மா அக்கௌண்டண்ட்.. ஒரு தம்பி விஷூவல் கம்யூனிகேஷன் படிச்சிட்டு இருக்கான்.. ஒரு வீடு முடிச்சதுல கிரஹபிரவேசத்துக்கு இன்வைட் பண்ணிருந்தாங்க.. அப்ப தான் பார்த்தேன்..” என்று கண்களில் அவளுக்கான காதலை ஏந்தி.. அவளை முதன்முதலில் பார்த்த தருணத்தை.. ஆதவனிடம் காட்டும் சாக்கில், நினைவுப் பெட்டகத்திலிருந்து எடுத்து.. தன் மனக் கரத்தால் மீட்ட ஆரம்பித்தான்.

 

தன் தோழியின் வீட்டு கிரஹபிரவேசத்திற்கு என்று வந்திருந்த ப்ருந்தா.. இளஞ்சிவப்பு நிற டிசைனர் புடவை அணிந்திருந்தாள்.

 

தன் மொபைலில் வந்த அழைப்பை ஏற்று பேச வெளியே வந்த ப்ரியன்.. தோட்டத்தில் பூத்திருந்த ரோஜாவிலிருந்து ஒன்று தரையில் விழுந்து.. கை கால் முளைத்து, கண்களில் ரசனையெனும் மையிட்டு.. இதழ்களில் புன்னகையோடு தன் முன்னால் நிற்பதைக் கண்டான்.

 

தோட்டத்தில் தோழிகளோடு அரட்டையில் இருந்தவளின் கண்கள்.. அவ்வப்போது ரோஜாக்களை வருடி வருடி.. அதன் அழகைத் திருடித் திருடி நெஞ்சுக்குள் பொத்தி வைத்துக் கள்ளச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தது.. தன்னையும் ஒருவன் கண்களால் வருடித் திருட முயன்று கொண்டிருக்கிறான் என்பதை அறியாமல்..!

 

விசேஷம் முடிந்து.. விடைபெறும் நேரம் வந்ததும்.. கடினப்பட்டு போயிருந்த தன் நெஞ்சத்தை நனைத்து.. இலகுவாய் உள்ளே சென்று அமர்ந்து கண்சிமிட்டியவளை.. விழிகளால் தேடினான்.

 

யாருடனோ சிரித்து பேசிக் கொண்டிருந்தவளை கண்ட பின்.. அருகில் சென்று, “எக்ஸ்க்யூஸ் மீ.. ம்ம்..” என்று எப்படி பேச்சைத் துவங்குவது என தயங்கி கொண்டிருக்கையில்..

 

“நீங்க.. இன்ஜினியர் ப்ரியன் தான?” என்று கேட்டாள், தன் யூகம் சரியாக இருக்கும் என்ற ஆர்வம் தாங்கிய உற்சாகக் குரலில்..!

 

இனம் புரியாத சந்தோஷ விழிகளோடு, ஆனால் குரலில் அதை மறைத்து, “ஹ்ம்ம்.. நீங்க..?” என்று கேட்டான்.

 

“இந்த வீட்டுப் பொண்ணோட ஃப்ரெண்ட்.. வீடு ரொம்ப அழகா இருக்குது சர்.. அதான் யாரோட ப்ளான்னு கேட்டேன்.. உங்கள தான் கை காமிச்சா..” என்றாள், மலர்ந்த புன்னகையுடன்..!

 

“தாங்க்ஸ்..” அதற்கு மேல் சத்தியமாக என்னப் பேச எனப் புரியவில்லை.. நெற்றியைத் தேய்த்து விட்டு கொண்டு, அவளைத் தவிர மற்ற இடங்களை பார்வையால் அலசினான்.

 

“சொல்லுங்க சர்.. எதுக்கு கூப்ட்டீங்க..?”

 

“அது.. வந்து..”

 

அதற்குள் அவன் பின்னிருந்து ஒரு குரல், “ப்ருந்தா.. கிளம்புவோமா? எனக் கேட்டது.

 

‘ப்ருந்தா..’ தித்திப்பாய் இனித்த நெஞ்சம்.. அவள் கிளம்ப போகிறாள் என்பதில்.. சற்றே சுணங்கியது.

 

“தீப்தி.. இங்க வா.. வர்ஷினி சொன்னாளே.. இன்ஜினியர்.. இவங்க தான்..” என்றாள், தான் முதலில் அறிமுகமாகி விட்ட சந்தோஷத்தில்..!

 

இதெல்லாம் பழக்கமில்லாத ப்ரியன் சற்று எரிச்சலடைந்தான். எனினும் அவளிடம் அதைக் காட்டாமல் இருக்க முடிந்ததே தவிர.. அந்த பெண்ணின் புன்னகைக்கு பதில் புன்னகையை தர முடியவில்லை.

 

தலையை மட்டும் அசைத்து வைத்தான். அதைப் பார்த்தவள், “நீ வெளிய வெய்ட் பண்ணு தீப்தி.. இதோ வந்துடறேன்..” என்று கூறி அனுப்பி வைத்தாள்.

 

தீப்தி தோள்களைக் குலுக்கி விட்டு நகர்ந்ததும்.. ப்ரியன் தன் மனம் முழுதும் ஆக்ரமித்து உள்ளுக்குள் காதல் சிற்பங்களை செதுக்கி கொண்டிருந்தவளை நிமிர்ந்து பார்த்தான்.

 

தன் தோழியிடம் அவன் காட்டிய பாரா முகத்தில்.. உதடுகளை மடித்து, தன் ஏமாற்றத்தை கண்களில் வெளிப்படுத்தினாள்.

 

இப்போது அவளும் எதுவும் பேசத் தோன்றாமல்.. ‘எதற்கு அழைத்தாய்’ என விழிகளால் அவன் விழிகளிடம் கேள்வி எழுப்பினாள்.

 

எப்படி தன் காதலை வெளிப்படுத்த எனப் புரியாமல் குழம்பியவன்.. “ஐ’ம்.. ஐம் இன் லவ் வித் யூ..” என்று பட்டென்று கூறினான்.

 

அவன் தன்னிடம் காதல் உரைக்கிறான் என்று புரிவதற்கு முன்.. மென்மையான காதலை இத்தனை விறைப்பான உடல்மொழியோடு கூட ஒருவனால் வெளிப்படுத்த முடியுமாவென்றே திகைத்து நின்றாள்.

 

திகைப்பிலிருந்து மீளாமல் நின்றவளிடம், “உங்க நம்பர் குடுங்க.. பேசணும்..” என்றான்.

 

“ஹாங்!!!”

 

“ப்ச்..” என்று எரிச்சலாக மீண்டும் நெற்றியைத் தேய்த்து விட்டுக் கொண்டவன்.. சட்டென்று அவள் இடக்கையில் வைத்திருந்த மொபைலைப் பிடுங்கி.. ஆன் செய்தான்.

 

பேர்ட்டன் வரைய சொன்ன திரையைப் பார்த்து மேலும் கடுப்பாகி.. அவள் முன் திரையைக் காட்டினான். அவனின் மிரட்டலானப் பார்வையில்.. மிரண்டவள் நடுங்கும் விரலால் திரையை வருடி லாக்கை விடுவித்து விட்டு.. அவன் முகம் பார்த்தாள்.

 

அதிலிருந்து தனக்கு கால் செய்தவன்.. “சேவ் பண்ணிக்கோ.. அப்புறம் கால் பண்றேன்” என்று அவள் முகத்தை மீண்டும் ஒரு முறை முழுதாகப் பார்வையால் நனைத்து விட்டுச் சென்றான்.

 

மிரண்டு நின்றிருந்தவள்.. செல்லும் முன் அவன் பொழிந்த காதல் பார்வை மழையில் தன்னையறியாமலேயே நனைந்து.. துளிர்த்து.. சிலிர்த்து.. புதிதாய் பூத்து.. அப்பூக்களைக் கோர்த்து.. அவனிடமே தந்து தன் மனமாளிகைக்குள் தயக்கமாய் வரவேற்றுக் கொண்டாள்.

 

அவளிடம் பேசாவிட்டால் வேலையாகாது என்ற நிலையில் இருந்த ப்ரியன்.. அன்று மாலையே கால் செய்து, ‘காதல் சொல்வாயா? மாட்டாயா?’ என கிட்டத்தட்ட மிரட்டினான்.

 

அவனின் முரட்டுத்தனத்தில் சற்றே மிரண்டாலும்.. அவனின் மருவக்காதலில் கரையவே செய்தாள், ப்ரியனின் ப்ரியமான ப்ருந்தா..!

 

அதன் பின் இருவரும் நேரில் சந்தித்து பேசி.. காதல் வளர்த்தனர். சந்திக்கும் போதெல்லாம் திருமணம் குறித்து ப்ரியன் கேட்பதற்கு.. “அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட் ப்ரியன்.. சி. ஏ. வேற ரெண்டு அட்டெம்ட்லயும் கோட்டை விட்டுட்டேன்.. இப்ப போய் எப்டி எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கனு சொல்ல முடியும்?” என்று சொல்லி தட்டி கழித்து விடுவாள்.

 

இவனும் சரி படிப்பை முடிக்கட்டுமென விட்டு விடுவான். இப்படியே ஆறு மாதங்கள் சென்ற நிலையில் தான்.. திடீரென நேற்று வந்து பிரேக்கப் என்று கூறி விட்டு சென்றாள். இன்று மதியம் கண்களால் வெறுப்பைக் கக்கி, முகம் திருப்பினாள். இப்போது பரிதவிப்பாய் பார்த்து போகிறாள். மண்டை காய்ந்து போய் ஆதவனின் தோள் சாய்ந்திருந்தான் ப்ரியன்.

 

ஆதவன் எல்லாம் சரியாகிவிடும் என நம்பிக்கை கூறி.. அவனைத் தேற்றினான். இருவரும் இரவு உணவை அங்கேயே முடித்து விட்டு.. விடைபெற்று கொண்டு தத்தமது வீட்டிற்கு கிளம்பினர்.

 

7.

 

மறுநாள் காலையில் கண்விழித்த ப்ரியன்.. காலை உணவினைக் கூடத் தவிர்த்து விட்டு.. விஷ்வாவை சந்திக்க கிளம்பி விட்டான்.

 

நிறுவனத்தின் உள்ளே சென்றவன்.. நேரே விஷ்வாவின் கேபினுக்குள் போய் அமர்ந்து விட்டான். விஷ்வா இன்னும் வந்திருக்கவில்லை.

 

ப்ரியனும், விஷ்வாவும் பத்தாம்‌ வகுப்பு முதல் ஒன்றாகவே படித்தவர்கள். தன்னிடம் வலிய வந்து நட்பு பாராட்டிய விஷ்வாவை, தன்னை விட வசதி குறைவானவன் என்றாலும் நன்றாக படிக்கும் விஷ்வாவை.. ப்ரியனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

 

பள்ளி படிப்பை முடித்ததும்.. ‘உங்க அப்பா இருந்திருந்தா உன்னை ஃபாரின் அனுப்பி படிக்க வச்சிருப்பார்’ என்ற வருத்தம் கொண்ட அன்னையிடம் கூட.. ‘ஆனா, ஃபாரின்ல என் விஷ்வா இருக்க மாட்டானேம்மா’ என்று தன் நண்பனைப் பிரிய முடியாதென கல்லூரியிலும் ப்ரியன்.. விஷ்வாவுடனே தன் படிப்பைத் தொடர்ந்தான்.

 

படிப்புகள் முடிந்ததும் வேறு நிறுவனத்தில் சொற்ப சம்பளத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த விஷ்வாவை.. ப்ரியன் தான் பார்ட்னர்ஷிப் நிறுவனம் துவங்கலாம் என விஷ்வாவை விட அதிக பணம் போட்டு.. பிவி கன்ஸ்ட்ரக்ஷன்ஸை ஆரம்பித்தான்.

 

அரைமணி நேரத்திற்கு பின் வந்த விஷ்வா.. “வாடா என் உயிர் தோழா.. ‌என்ன இந்த கம்பெனில இன்னும் நீ பார்ட்னர்ங்கற நினைப்புலயே மறந்து போய் எப்பவும் போல கிளம்பி வந்துட்டியா..? ஜோ ஜேட்.. ஜோ ஜேட்..” என்று போலியாக இரக்கம் காட்டினான்.

 

அவனை அமைதியாகவே பார்த்திருந்த ப்ரியன்.. “ஏன் விஷ்வா இப்டி பண்ணின..? என்னை ஏமாத்தி என் முதுகுல குத்தற அளவுக்கு.. என் மேல உனக்கு அப்டி என்னடா கோவம்..? எதுக்கு இந்த நம்பிக்கை துரோகம்..?” என்று கேட்டான்.

 

“ஏன்? என்ன? எதுக்கு? ஹாஹாஹா..” மென்மையாக ஆரம்பித்து வாய்விட்டு நகைத்தவன்..‌ சட்டென ஆக்ரோஷமாக, “நீ ஏண்டா அப்டி பண்ணின..?” என்று கத்தினான்.

 

புரியாது நின்ற ப்ரியன்.. “எப்டிடா..?” கேட்டான்.

 

ப்ரியனுக்கு முகம் காட்டாமல் திரும்பி.. அறையின் ஜன்னலருகே சென்றவன், “பாரதி..” என்று கூறி விட்டு.. ஒரு முறை ஆழமூச்செடுத்துக் கொண்டு.. மீண்டும் திரும்பி வேக எட்டுக்களோடு வந்து.. ப்ரியனின் சட்டையைப் பிடித்துக் கொண்டு “பாரதிடா.. ஷி இஸ் மை லவ்.. எஸ்.. மை லவ் பாரதி..” என்று ஹிஸ்டீரியா பேஷண்ட்டைப் போல் கத்தினான்.

 

அதிர்ந்து நின்ற ப்ரியன்.. அவன் பிடித்திழுக்க சட்டையைக் கொடுத்து விட்டு அசையாமலே நின்றான். ‘விஷ்வா பாரதியை விரும்பினானா?’ இது அவனுக்கு புதிய செய்தி..

 

மூளை யோசிக்கும் திறனை இழந்து.. அசைவற்று நின்றிருந்தவனை.. கோபத்தில் பிடித்து உலுக்கினான், விஷ்வா.

 

“ஞாபகம் இருக்காடா உனக்கு..? டென்த் படிக்கும் போது எக்ஸாம் ஃபீஸ் கட்ட வழியில்லாம நின்னவனுக்கு ஆறாங்கிளாஸ் படிக்கற சின்னப் பொண்ணு அவளோட சேவிங்ஸ்னு பத்து ரூபாய குடுத்தா..”

 

இந்த இடத்தில் ஆதவனாக இருந்திருந்தால் பக்கென்று சிரித்து வைத்திருப்பான்.. ஆனால் இந்த ப்ரியன் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் பார்த்திருந்தான்.

 

“உன்னைப் பார்க்கறதுக்கு முந்தி அவள தான் நான் பார்த்தேன்.. இன்ஃபாக்ட் பாரதிகிட்ட பழகறதுக்காக தான் உன்கிட்ட நான் வழிய வந்து பேசினேன். உன் ஃப்ரெண்ட்ஷிப் மூலமா அவள நெருங்க நினைச்சேன்.. ஆனா, நம்ம ப்ளஸ்1 போகும் போது.. உங்க வீட்ல அவள வேற ஸ்கூல் மாத்திட்டாங்க”

 

ப்ரியன் என்னும் சிலை உயிர் பெற்று கோப முகம் காட்டியது. “அதுலாம் பப்பி லவ்டா அறிவு கெட்டவனே..”

 

“நோ..‌ அவள அப்பவே மறந்திருந்தா அது பப்பி லவ்.. ஆனா, இன்னும் மனசுல பதிஞ்சு போனவள மறக்க முடியலடா.. இதுவா பப்பி லவ்?”

 

இப்போது ப்ரியன் விஷ்வாவின் சட்டையை பிடித்து, “ராஸ்கல் எவ்ளோ தைரியம் இருந்தா மறக்க முடியலனு என்கிட்டயே சொல்லுவ?” என்று உறுமினான்.

 

“ஆமாண்டா.. தைரியம் தான்.. நானும் உன் ஸ்டேட்டஸ்க்கு ஈக்குவலா இருந்திருந்தா.. அவளுக்கு அலையன்ஸ் பார்க்க ஆரம்பிக்கும் போது நான் உன் கண்ணுக்கு தெரிஞ்சிருப்பேன்.. நான் ஒண்ணுமில்லாதவன்னு தான என்னை விட்டுட்டு, உன் ஸ்டேட்டஸ்க்கு ஏத்த மாதிரி மும்பை பிஸினஸ்மேன உன் வீட்டு மாப்பிள்ளை ஆக்கின..? அதான் நான் உன் கம்பெனிய உனக்கே தெரியாம உன்கிட்ட இருந்து பறிச்சேன். இப்ப நானும் உனக்கு ஈக்குவலான பணக்காரன் தான்..”

 

ப்ரியன் அவனைப் பேச விட்டு அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“ஆனா, என் காதல் திரும்ப கிடைக்காதே.. அப்ப நீ மட்டும் உன் காதலிய கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா லைஃப என்ஜாய் பண்ணலாமா? அதுக்கு தான் உனக்கு வச்சேன் அடுத்த ஆப்பு.. நேத்து பிருந்தா வந்து பிரேக்கப்னு சொல்லிருப்பாளே.. ஹாஹாஹா.. நேத்து நீ மஞ்சமாக்கான் மாதிரி முழிச்சிட்டு இருந்தத இங்க இருந்து பார்த்துட்டு தான் இருந்தேன்..”

 

ப்ரியன் கோபமிகுதியில் பல்லைக் கடித்தான். ஆனாலும் அவனே சொல்லட்டும் என முகத்தை பாறையாக வைத்து கொண்டு அமைதி காத்தான்.

 

“என்ன செல்லோ.. நான் என்ன பண்ணிருப்பேன்னு யோசிக்கறியா? ஒண்ணும் இல்ல.. அந்த ஆந்திரா பார்ட்டிக்கு ஒரு வில்லா முடிச்சு குடுத்தோமே.. அந்த ப்ராஜெக்ட் பண்ணும் போது.. நீ போட்ட ப்ளான்ல இது சொத்த அது சொட்டனு சொல்லிட்டே இருந்துச்சே அவர் பொண்ணு.. அப்ப உங்க ரெண்டு பேரையும் கொஞ்சமா.. கொஞ்சமே கொஞ்சமா கவர் பண்ணி வச்சிருந்தேன். அத தான் சமயம் பார்த்து நேத்து உன் ஆளுக்கு அனுப்பிட்டு.. கால் பண்ணி சும்மா உன்னைப் பத்தி ரெண்டே ரெண்டு பிட்ட போட்டேன் மச்சான்.. சத்தியமா அவ்ளோ சீக்கிரம் வருவானு நான் கூட எதிர்பாக்கலடா..” என்று கூறி விட்டு வடிவேலு ஜோக்கைப் பார்த்தவன் போல விழுந்து விழுந்து சிரித்தான்.

 

ப்ரியன் நிதானமாக யோசித்தான். விஷயம் என்னவென்று அறியாத பொழுது பிருந்தாவைப் பற்றி அரித்துக் கொண்டிருந்த மனம்.. இப்போது விஷயம் தெரிந்த பின்.. ‘ஓ! அதான் நேத்து வெண்மதியோட சேர்த்து பார்த்ததும் அப்டி முறைச்சாளா? சரி.. அவளை எப்படியும் சமாதானப்படுத்தி விடலாம்.. தற்போது விஷ்வாவிடம் இருந்து நிறுவனத்தை அவன் பெயருக்கு மாற்றிய ஆவணங்களைக் கைப்பற்ற வேண்டும்.’ என்றே யோசித்தது.

 

(எல்லாரும் இப்டி தான் இருப்பாங்க போல ஃப்ரெண்ட்ஸ்.. நம்மள சமாதானப்படுத்தறது எல்லாம் அப்புறமாம்.. அவங்க வேலை தான் அவங்களுக்கு முதல் முக்கியமாம் பாருங்களேன்.. ஹூம்ம்..)

 

எனவே, வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு.. பொறுமையாகவே பேசினான். “இங்க பாரு விஷ்வா.. நீ பாரதிய விரும்பறனு ஒரு வாட்டியாவது என்ட்ட சொல்லிருக்கலாம் தானடா? எதுவும் சொல்லாம எனக்கு எப்டி தெரியும்? என்னைக்காவது ஸ்டேட்ஸ் பத்தி உன்கிட்ட பேசிருக்கேனா நானு?” என்று கேட்டான்.

 

“எத்தன வாட்டி மறைமுகமா உன்கிட்ட சொல்லிருக்கேன் தெரியுமா? அப்பலாம் மாங்கா மாதிரி இருந்துட்டு.. இப்ப வந்து சொல்லிருக்கலாம்லன்னா என்ன அர்த்தம்..? எனக்கு சத்தியமா புரியலடா ப்ரியன்.. செங்கலயும், சிமெண்டயும் கட்டி அழறவன் எப்டிடா ப்ருந்தா மாதிரியான ஒரு பொண்ணு மனசுல இடம் பிடிச்ச..? ஆறு மாசம் முந்தி நீ லவ் பண்ற விஷயத்த சொன்னதும்.. நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன்..”

 

பறந்து கொண்டிருந்த பொறுமையை இழுத்துப் பிடித்த ப்ரியன்.. “சரி நடந்தத மாத்த முடியாது விஷ்வா.. இப்ப பாரதி வேற ஒருத்தரோட வைஃப்.. நீ மனசுல நினைக்கறது கூட தப்பு.. மறந்துடு.. இதனால நம்ம ஃப்ரெண்ட்ஷிப்குள்ள ப்ரச்சனை வரணுமா? எப்பவும் போல நம்ம கம்பெனிய ரன் பண்ணலாம்டா.. என்ன சொல்ற?” என்று தன்மையாகவே பேசினான்.

 

“தெரியாம தான் கேக்கறேன்.. என்னைப் பார்த்தா உனக்கு கேனயன் மாதிரி இருக்குதா? இவ்ளோ தூரம் கஷ்டப்பட்டு ப்ளான் பண்ணி என் பேருக்கு நான் மாத்துவேனாம்.. அத இவர் நோகாம திரும்ப குடு கேப்பாராம்.. நானும் இந்தா மச்சினு தர்ட்டி டூ காட்டிட்டே.. குடுக்கணுமாம். போடா டுபுக்கு..” என்றவன்..

 

ப்ரியனை சுற்றி வந்து, எம்.டி நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து சுழற்றிக் கொண்டே.. “ஸ்டேட்ஸ் பத்தி நீ வேணும்னா எதுவும் நினைக்காம இருக்கலாம் மச்சி.. ஆனா, நான் நினைச்சேன்.. சின்ன வயசுல இருந்தே உன்னை மாதிரி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவன் இல்ல நானு.. உனக்கு தான் தெரியுமே.. குடிகார அப்பனுக்கு பிறந்து நான் பட்டக் கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா? அதனால தான் கல்யாணமாவது பணக்காரப் பொண்ணாப் பார்த்து பண்ணிட்டு லைஃப்ல செட்டில் ஆகலாம்னு நினைச்சேன்.. உன் தங்கச்சியக் கட்டினா சொத்தும் வரும்.. சொசைட்டில மதிப்பும் வரும்னு ப்ளான் போட்டேன். அது தான் சொதப்பிடுச்சு.. ஆனா, என்னை என்னடா பண்ண சொல்ற? செகண்ட் ஆப்ஷனா வச்சிருந்த கம்பெனி ப்ளான் பக்காவா வொர்க் அவுட் ஆகிடுச்சு..” என்று டேபிளில் வலக்கையை ஊன்றி கன்னத்தைத் தாங்கி பாவம் போல் இமைக் கொட்டினான்.

 

இவ்வளவு நேரம் தன் தங்கையின் மேல் உள்ள நண்பனின் காதலை உணராமல் போனோமே‌ என்று மனதின் ஓரம் தோன்றிய குற்ற உணர்ச்சியோடு நின்றிருந்த ப்ரியன்.. இப்போது அவன் பணத்திற்காக என்றதும்.. கட்டுக்கடங்காத கோபத்தோடும், தன் இத்தனை வருட நட்பு இப்படி தோற்று போன வருத்தத்தோடும்.. இனி, இவனிடம் பேசி ப்ரயோஜனம் இல்லை என்ற ஞானோதயத்தோடும் அங்கிருந்து விறுவிறுவென வெளியேறி விட்டான்.

 

“என்ன கொடுமை சார் இது..? அவன் பணம் போட்டு.. வெயில்ல கல்லோடயும், மண்ணோடயும் நின்னு வளர்த்த கம்பெனிய ஒருத்தன் பிடுங்கிட்டேன்னு சொல்றேன்.. சட்டையப் புடிச்சி ஏண்டா இப்டி பண்றனு நாலு இழுப்பு இழுக்காம.. எனக்கென்னனு விளக்கெண்ண மாதிரி போறான்? அது சரி.. கேக்கும் போதெல்லாம் சைன் பண்ணும் போதே மூளை வேலை செய்யல.. இப்ப மட்டும் செஞ்சுடப் போகுதா என்ன..? புவர் பாய்..” என்று வாய் விட்டு தன் நண்பனுக்காக போலியாக வருத்தப்பட்டான்.

 

அவனுக்கு தெரிந்திருக்கவில்லை, புவர் பாய் ப்ரியனல்ல தான் தானென்று..! தன் மீது பாயப் போகும் புலி.. ஒன்றல்ல இரண்டு என்பதை.. அறியாமல் போனான், விஷ்வா.

 

8.

 

அந்த நள்ளிரவு இரண்டு மணிப் பொழுதில்.. விஷ்வாவின் வீட்டின் முன் நின்றிருந்தனர்.. ப்ரியனும், ஆதவனும்..! வேலூரில் ஒதுக்குப்புறமாக இருந்தது ஒற்றை படுக்கையறையைக் கொண்ட விஷ்வாவின் சின்னஞ்சிறிய வீடு..

 

கொட்டாவியை வெளிப்படுத்திக் கொண்டே, “எப்டிடா உள்ள போறது..? வழியவே காணுமே..” என்றான், ஆதவன்.

 

ப்ரியன், கண்களால் வீட்டின் உள்ளே செல்ல வழியைத் தேடிக் கொண்டே.. “வெண்மதியப் பார்க்க மொட்டை மாடிக்கு எப்டி வந்தியோ அதே மாதிரி போய்.. விஷ்வாவையும் பார்த்துட்டு வா..” என்றான்.

 

“எது? டேய்.. என்ன நக்கலா? உன் ஃப்ராடு ஃப்ரெண்டும்.. என் ஆளும் ஒண்ணா..?”

 

“உன் மனசாட்சியத் தொட்டு சொல்லு.. உன் ஆளு ஃப்ராடு இல்லனு..? நீயே அவள போங்குனு தான் கூப்பிடற..”

 

“அது… அது நான் செல்லமா அப்டிக் கூப்டுவேன்.. அதுக்காக..? இவன் மூஞ்சியப் பாக்கறதுக்கு நான் பைப் ஏறி வேறப் போகணுமாக்கும்..? காலக் கொடுமைடா சாமி..” என்று நோகாமல் நெற்றியில் அறைந்து கொண்டான்.

 

அவன் நெற்றியில் இருந்து கையை எடுத்து விட்ட ப்ரியன்.. “அது அப்டி இல்லடா.. என்ன கொடுமை சார் இதுனு சொல்லணும்.. அது தான் நம்ம செலக்ட் பண்ணிருக்க டைட்டில்..” என்றான், கொஞ்சமும் சிரிக்காமல்..!

 

“இப்டிலாம் மொக்கயா கடிக்கக் கூடாதுனு சஷி மேம் சொல்லிருக்காங்க மச்சி.. ரூல்ஸ ஒழுங்கா படிச்சியா இல்லயா நீ..?” என்று சுட்டு விரலை ப்ரியனின் மூக்கிற்கு நேரே நீட்டிக் கேட்டான், ஆதவன்.

 

“என் கம்பெனி ரூல்ஸயே ஒழுங்கா படிக்காம தானடா.. இப்டி ராத்திரி நேரத்துலயும், ப்ருந்தாவ விட்டுட்டு உன் கூட சுத்தற நிலைமைல இருக்கேன்..? ஆனாலும் ஆதவ்.. நான் உன்னை விட அதிகமா மொக்க போட்டுட மாட்டேன்..”

 

உர்ரென முகத்தை வைத்து கொண்ட ஆதவன், “இப்ப உள்ள எப்டி போறதுனு சொல்லப் போறியா? இல்லயாடா..?” என்று கேட்டான்.

 

“ஸீ ஆதவ்.. விஷ்வா வீட்ல மொட்டை மாடிலலாம் வழி இல்ல.. எனக்கு தெரியும்.. பின்னாடி கிச்சன் பக்கம் ஒரு வாசல் உண்டு.. அது வழியா போக முடியுமா பாக்கலாம்..”

 

ஆதவன், “சரி வா.. என் தகுதிக்கு இந்த குட்டி சுவரெல்லாம் தாண்ட வேண்டிருக்குது.. எல்லாம் என் நேரம்..” என்று புலம்பிக் கொண்டே அந்த குட்டி காம்பௌண்ட் சுவரைத் தாண்டினான்.

 

அவனைப் பின்பற்றி ப்ரியனும் சுவரைத் தாண்டிய பின்.. இருவரும் வீட்டின் பின்பக்கம் சென்றனர்.

 

பின்புறம் முழுவதும் காய்கறி செடிகளும், கீரைகளும் நன்றாக செழித்து வளர்ந்து கிடந்தது. நேர்த்தியாகவும், சுத்தமாகவும் இருந்த இடத்தைப் பார்த்து.. ஆதவன், “சூப்பர்ல..?” என்றான்.

 

“விஷ்வாம்மா வளர்க்கறாங்க.. ‌அவங்களுக்கு கார்டனிங்ல ரொம்ப இஷ்டம்..” கிசுகிசுப்பாய் பேசிக் கொண்டே.. கதவைத் தள்ளிப் பார்த்தான்.

 

உள்பக்கமாய் பூட்டப் பட்டிருந்தது. எப்படி திறக்க முற்பட்டாலும் சத்தம் கேட்டு உள்ளிருப்பவர்கள் எழுந்து விடக் கூடும். என்ன செய்வதெனப் புரியாமல்.. மீண்டும் ஒருமுறை இருவரும் வீட்டைச் சுற்றி வந்தனர். ம்ஹூம்.. எங்கும் வழியில்லை..

 

வீட்டின் வலப்புற ஜன்னலின் வழியே உள்ளே ஹாலில் பார்வையை செலுத்தினர். விஷ்வாவின் அம்மா..‌ நல்ல தூக்கத்தில் இருந்தார். அருகே அவர் கணவர் ஒழுங்கில்லாத கோணத்தில் படுத்திருந்தார். அவரின் தலைமாட்டில் ஃபுல் மதுபாட்டில்..!

 

ஆதவன் ஒருமுறை ப்ரியனைப் பார்த்து விட்டு.. கீழிருந்து சிறு கல்லை எடுத்து.. உள்ளே விட்டெறிந்தான். அவன் கல்லையெடுத்து குறிபார்க்கையில் அவன் நோக்கத்தை புரிந்து கொண்ட ப்ரியன்.. “டேய் டேய்.. நோ ஆதவ்‌.. நோ..” என்று ஆட்சேபித்துக் கொண்டிருக்கும் போதே.. ஆதவன் விட்டெறிந்த கல் மிகச் சரியாக தன் வேலையை செய்து.. மதுபாட்டிலை வீழ்த்தியது.

 

தட்டென்று தன் தலையில் என்னவோ விழுந்ததை உணர்ந்து.. எழுந்தமர்ந்தவர்.. கீழே சாய்ந்திருந்த மதுபாட்டிலைப் பார்த்து.. “செல்லம்.. என்னாச்சு செல்லம்? எப்டி கீழ விழுந்த? அடிகிடிபட்ருச்சா..?” என்று கண்களில் போதையோடு பாட்டிலைத் தூக்கி மேலும் கீழும் பார்த்தார்.

 

“ஹ்ம்ம்.. அடிலாம் ஒண்ணுமில்ல.. என்னை எழுப்ப தான் கீழ விழுந்துக் கூப்ட்டியா? என் மேல தான் உனக்கு எவ்ளோ அக்கறை செல்லம்..?” என்று மூடியைத் திறந்து.. இன்னும் கொஞ்சம் குடித்துக் கொண்டவர்.. மெதுவாக எழுந்து தள்ளாடிக் கொண்டேப் பின்பக்கம் வந்தார்‌.

 

இவர்கள் இருவரும் மெதுவாக பின்பக்க பக்கவாட்டு சுவரில் சாய்ந்து நின்று கொண்டனர். நினைத்தது போலவே விஷ்வாவின் தந்தை.. கதவைத் திறந்து பின்பக்கமிருந்த பாத்ருமை நோக்கிப் போனார்.

 

கிடைத்த இடைவெளியில் இருவரும் உள்ளே புகுந்து விட்டனர். வேகமாக திறந்திருந்த விஷ்வாவின் அறைக்குள் போய் சற்றே மூச்சு வாங்கிக் கொண்டு.. சத்தம் வராமல் இருவரும் அறையைப் புரட்டிப் போட ஆரம்பித்தனர்..

 

கால்மணி நேரத் தேடலுக்கு பின்.. ஆதவன், “ஆஃபீஸ்ல வச்சிருப்பானோ..?” என்று.. அந்த சின்ன மர பீரோவின் சாவியைத் தேடிக் கொண்டிருந்த ப்ரியனிடம் கிசுகிசுத்தான்.

 

வாயில் விரல் வைத்து.. இல்லை எனத் தலையாட்டிய ப்ரியன்.. ஆணியில் மாட்டியிருந்த ஜூட் பையிலிருந்து மர பீரோவின் சாவியைக் கைப்பற்றியிருந்தான்.

 

அசந்து தூங்கிக் கொண்டிருந்த விஷ்வாவை ஒரு பார்வை பார்த்து விட்டு மெதுவாக பீரோவைத் திறந்தான். உள்ளே துணிமணிகளையும், லாக்கரில் சொற்ப நகை மற்றும் பணம் தவிர.. வேறொன்றுமில்லை.

 

ஏமாற்றமாய் நிமிர்ந்தவனின் கண்களில் பட்டது.. அந்த பரண்.. பரண் மேலிருந்த ட்ரங்கு பெட்டி.. அது விஷ்வாவின் தாத்தாவினது என்று ப்ரியனுக்கு தெரியும். தாத்தாவின் பொருட்களை அவர் மீதுள்ள அலாதி ப்ரியத்தால்.. தான் சேகரித்து வைத்திருப்பதாக முன்பு ஒரு முறை விஷ்வா கூறியதாக ஞாபகம்..

 

ஒருவேளை.. அதனுள் இருக்குமோ..? யோசித்ததை செயல்படுத்த ஆதவனுக்கு கண்ணைக் காட்டினான். மேலே பார்த்த ஆதவன்.. ‘சத்தம் கேட்கும்’ என்று சைகை செய்தான்.

 

முகத்தில் பிடிவாதம் காட்டி.. ‘பரவாயில்லை வேண்டும்’ என இவன் சைகை செய்தான். ‘தம்ப்ஸ் அப்’ காட்டிய ஆதவன் அங்கிருந்த நாற்காலியில் ஏறி.. பரணில் இருந்து பெட்டியை மெதுவாக நகர்த்தினான். ‘க்றீச் க்றீச்’ என்ற சத்தத்தில்.. விஷ்வா விழித்து விடுவானோ என்ற கவலை கொஞ்சமுமில்லாமல்.. சிறிது சிறிதாக நகர்த்தி வெளியே எடுக்கும் சமயம்.. விஷ்வாவிடம் அசைவு..! சட்டென ஆதவனையும் இழுத்து கொண்டு கட்டிலின் பின்புறம் குனிந்து அமர்ந்து கொண்டான் ப்ரியன்.

 

மெதுவாக கண்விழித்த விஷ்வா.. சிறு கொட்டாவியுடன் எழுந்தமர்ந்தான். தலைமாட்டில் இருந்த அலைபேசியில் நேரம் பார்த்தவன்.. அருகிலிருந்த சின்ன டீபாயில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து தண்ணீரைக் குடித்து விட்டு.. வெளியே செல்ல எண்ணி.. கட்டிலை விட்டு இறங்கினான்.

 

இறங்கியவன் வெளியே செல்லாமல்.. நாற்காலி எப்படி இடம் மாறியதென்ற சிந்தனையுடன்.. அதன் அருகே சென்றான்.

 

ஒன்று.. இரண்டு.. மூன்று..

 

‘டமால்’ என்ற பெரும் சத்தத்துடன் விஷ்வாவின் தலைக்குள் இருக்கும் கிரிமினல் மூளையைப் பரிசோதிக்க எண்ணி.. அவன் தலை மேல் வந்து விழுந்தது, ஆதவன் ஸ்லாபின் முனை வரை நகர்த்தி வைத்திருந்த.. தாத்தாவின் ட்ரங்கு பெட்டி..!

 

சிறு அலறல் கூட இல்லாமல் தலை சுற்றி சரிந்து விழுந்தவனைப் பார்த்து.. வாயில் கை வைத்த ஆதவன், “போச்சு.. போச்சு.. ஃப்ரெண்டோட லட்சியத்துக்காக நம்ம திருடனா மாறுறது ஒண்ணும் தப்பே இல்லனு உன்னை நம்பி வந்தேன் பாரு.. இப்டி அநியாயத்துக்கு என்னை கொலகாரனா மாத்திட்டியேடா கொலகார பாவி..!!!” என்று பயந்தவன் போல் படபடவென பொறிந்தான்.

 

“டேய் கத்தித் தொலையாதடா.. வா.. என்னாச்சு பார்ப்போம்..”

 

“என்னத்த பார்க்க போற? உசுரு இருக்கா இல்லையான்னா? அவன் தான் சயனைட் முழுங்குனவன் மாதிரி கிடக்கறானே..”

 

“யூ…” என்று திட்டுவதற்கு வாய் திறந்த ப்ரியன்.. “ச்சு.. போ..” என்று விட்டு, விஷ்வாவின் அருகே சென்று பார்த்தான். விஷ்வா லேசாக கண்களை அசைத்து.. மென்மையாக முணங்கிக் கொண்டிருந்தான்.

 

“விச்சு.. விச்சு.. என்னடா சத்தம்? இன்னைக்கும் அந்த மாமனார் கெழவனோட ட்ரங்கு பெட்டிய நோண்டிட்டு இருக்கியா? இம்சை..” – வெளியிலிருந்து விஷ்வா அம்மாவின் சலிப்பானக் குரல்.

 

இங்கு இருவரும் ஒருவருக்கொருவர் அர்த்தம் பொதிந்தப் பார்வையைப் பரிமாறிக் கொண்டு, விஷ்வாவை விட்டு விட்டு.. கீழே விழுந்ததில் தன்னுள் பொத்தி வைத்திருந்த அத்தனைப் பொருட்களையும்.. சிதற விட்டிருந்த பெட்டியை ஆராய்ந்தனர்.

 

தாத்தாவின் ரிம்லெஸ் கண்ணாடியில் இருந்து.. கடன் கணக்கு எழுதி வைத்திருந்த டயரி வரை எல்லா பொருட்களையும் சேகரித்து வைத்திருந்தான் பேரன். கீழே சிதறயது போக பெட்டியின் உள்ளிருந்தவற்றை ஆராய்ந்ததில் பழுப்பு நிறத்திற்கு மாறியிருந்த தாத்தாவின் வெள்ளை வேஷ்டியின் அடியில் இருந்தது.. அந்த பேப்பர் ஹோல்டர்.

 

ப்ரியனின் செல்களில் புது ரத்தம் பாய்ந்து.. அவனிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேகமாக எடுத்து பிரித்து பார்த்து.. முகத்தில் வெளிச்சத்தைப் படர விட்டான்.

 

வந்த வேலை முடிந்ததென்பதைப் புரிந்து கொண்ட ஆதவன்.. எழ முற்படுகையில்.. “என்னடா விச்சு.. சத்தத்தையே காணும்..?” என்று கேட்டு கொண்டே வந்த விஷ்வாவின் அம்மாவைப் பார்த்ததும்.. இருவரும் ஜெர்க்காகி.. மீண்டும் கட்டிலின் பின்புறம் போய் அமர்ந்து கொண்டனர்.

 

உள்ளே வந்தவர் விஷ்வா கிடந்த கோலத்தைப் பார்த்து விட்டு.. “அய்யோ விச்சு.. என்னடா ஆச்சு..? ஏண்டா இப்டி விழுந்து கிடக்கற? கடவுளே.. இந்த மனுஷன் வேற இப்டி குடிச்சிட்டு மல்லாந்து கிடக்கறாரே.. நான் என்ன பண்ணுவேன்..” புலம்பிக் கொண்டே விஷ்வாவை உலுக்கினார்.

 

மிகுந்த பதட்டத்தில் இருந்தவர்.. “தண்ணி.. தண்ணி.. எங்க..?” கேட்டு கொண்டே டீப்பாய் பக்கம் திரும்பினார்.. கட்டிலை ஒட்டி இருந்த டீப்பாய் பக்கம் அமர்ந்திருந்த ஆதவன்.. நொடிக்கும் குறைவான நேரத்தில், வாட்டர் பாட்டிலைக் கைப்பற்றி.. சிலை போல் அமர்ந்து கொண்டான்.

 

அவனின் செயலைப் பார்த்த ப்ரியன் வந்த சிரிப்பை, உதடுகளை மடக்கி அடக்கிக் கொண்டான். ‘என்னைப் பார்த்தா உனக்கு சிரிப்பா இருக்குதா’ என்பது போல் இவன் முறைத்து வைத்தான்.

 

அம்மா.. தண்ணீர் இங்கில்லை என நினைத்து கிச்சனில் இருந்து எடுத்து வர சென்ற நேரத்தில்.. இருவரும் விஷ்வாவைப் பார்த்து.. சாதாரண மயக்கம் தான்.. ஆபத்தில்லை என்று, வந்ததைப் போல் பின்பக்கம் வழியே வெளியேறி விட்டனர்.

 

மீண்டும் அந்த குட்டி காம்பௌண்ட் சுவரை தாண்டி குதித்ததும்.. ஆதவனைக் கட்டிக் கொண்டு ஆர்பரித்தான் ப்ரியன்.

 

“டேய் டேய்.. விடுடா.. பாதி கிணறு தான் தாண்டிருக்கோம்.. அதுக்குள்ள மியூசிக்க போட்டுட்டு இருக்க?”

 

“அது எப்டியும் நீ சக்ஸஸ்ஃபுல்லா பண்ணிடுவ.. எனக்கு நம்பிக்கை இருக்குடா..”

 

“பண்ணப் போறது ஃப்ராடு தனம்.. இதுல நம்பிக்கை வேறயா? ஹய்யோ..”

 

“சரி சரி வா.. நேரமாச்சு.. சீக்கிரம் வீட்டுக்கு போய் தூங்கு.. அப்ப தான் காலைல ஃப்ரெஷ்ஷா போய் விஷ்வாவ மீட் பண்ண முடியும்..”

 

“ஹ்ம்ம்.. நல்லா கோர்த்து விடறடா..” பேசிக் கொண்டே இருவரும்.. தூரத்தில் நிறுத்தி வைத்திருந்த ப்ரியனின் நீல வண்ண ஏமியோவில் ஏறிச் சென்றனர்.

 

9.

 

மறுநாள் காலையில் அலுவலகத்தில் தன் கேபினில்.. கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தான், விஷ்வா. அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.. தான் ஏமாற்றி வாங்கிய கம்பெனி டாக்யூமெண்ட்ஸ் ப்ரியனிடம் சென்று விட்டது என்று..! ஆனால் இது எப்படி நடந்தது என்று தான் புரியாமல் அமர்ந்திருக்கிறான்.

 

நேற்றிரவு பெட்டி எப்படி கீழே விழுந்தது? உள்ளிருந்த பத்திரம் மட்டும் எப்படி காணாமல் போனது? வீட்டிற்கு யாரும் வந்த சுவடும் இல்லை. போலீசிற்கு போகலாமா? என்னவென்று கம்ப்ளெய்ண்ட் தருவது? நிறுவனத்தை தன் பெயருக்கு மாற்றிய விவரம் நிறுவன ஊழியர்களுக்குக் கூட இன்னும் தெரியாது. அனைவரும் ப்ரியனும் பார்ட்னர் என்றே நினைத்திருக்கின்றனர். இந்நிலையில் போலீஸிடம் சென்றால் திருடனுக்கு தேள் கொட்டினாற் போலல்லவா இருக்கும்?

 

ஏதேதோ நினைத்து தனக்குள் உழன்று கொண்டிருக்கும் போது.. இன்டர்காமில் விசிட்டர் வந்திருப்பதாக தகவல் வந்தது. வந்திருப்பது ப்ரியனாக தான் இருக்கும் எனத் தானே முடிவெடுத்துக் கொண்டு.. மேலே எதுவும் விசாரிக்காமல், உள்ளே அனுப்புமாறு பணித்தான்.

 

ஆனால் உள்ளே வந்தவனைப் பார்த்ததும்.. ஆச்சர்யமாக நோக்கி.. “நீங்க.. நீங்க ரவி சர் பிஏ.. மிஸ்டர் ஆதவன்.. இல்ல?” என்று கேட்டான், பரபரப்பாக..!

 

‘தேவேந்திரன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ உடன் ஒப்பிடுகையில்.. ப்ரியனின் நிறுவனம் மிகவும் சிறியது தான்.. தேவேந்திரன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் இரண்டு தலைமுறைகளை சந்தித்த நிறுவனம்.. பிவி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் இரண்டு வருடங்களை மட்டுமே எட்டவிருந்தது.

 

அதோடு ப்ரியனைப் போல் அல்லாமல்.. ப்ரியன், விஷ்வாவின் தோழனான ரவீந்திரனின் வலக்கை, இடக்கை, சைடு கை என அனைத்தும் இந்த ஆதவன் தான் என்று அறிந்திருந்தான் விஷ்வா. எனவே தான் ஆதவனைக் கண்டதும் அவனிடம் இந்த பரபரப்பு..!

 

“ஆமா சர்.. எப்டி இருக்கீங்க..?”

 

“ஹ்ம்ம்.. குட் மிஸ்டர் ஆதவன்.. ரவி எப்டி இருக்கான்? பேசி ரொம்ப நாள் ஆச்சு..”

 

“யாஹ்.. ஹி ஆல்சோ ஃபைன்..”

 

“என்ன திடீர் பிவி விசிட்.. உங்க பிஸி ஷெட்யூல்லயும்?”

 

“ஒரு சின்ன ப்ராஜெக்ட் சர்.. ரவி சர்க்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க போல.. மறுக்க முடியல.. ஆனா, இப்ப ஃபைவ் ஸ்டார் ரெஸ்டாரண்ட் ப்ராஸஸ்ல இருக்குது.. சோ.. இப்போதைக்கு வேற எதையும் தொட முடியாது.. அதான் உங்களால பண்ண முடியுமானு கேக்கலாம்னு வந்தேன்..”

 

“ஓ!! சர்ட்டன்லி ஆதவன்.. என்ன மாதிரி ப்ராஜெக்ட்..?”

 

ஆதவனின் வாய்ஜாலம் நாம் அறியாததா? இல்லாத திட்டத்தை இருப்பதாகக் கூறி, இடத்தையும் கைக் காட்டி.. விஷ்வாவை நன்றாகவே நம்ப வைத்து விட்டான்.

 

“இதுல நாங்க இடத்துக்கு அட்வான்ஸ் பே பண்ணின டீடெய்ல்ஸ் இருக்குது..” என்று கோப்பு ஒன்றை எடுத்துக் காட்டினான். “இடம் பாக்கறதுக்கு உங்க சைட் இன்ஜினியர் அனுப்புனீங்கனா எங்க ஆள் ஒருத்தர் வந்து காட்டிடுவார்..”

 

இன்ஜினியர் என்றதும் மீண்டும் ப்ரியனின் நினைவில் அமிழ்ந்து.. குழம்பினான் விஷ்வா.

 

“தென்.. உங்களுக்கு ஓகேனா பார்ட்டிய கூட்டிட்டு வரேன்.. ப்ராஜெக்ட்க்கு பைசா கால்குலேட் பண்ணி கொட்டேஷன் அவர்க்கிட்டயே குடுத்துடுங்க.. பில்டிங் ப்ளான் கூட ஏற்கனவே பார்ட்டி கேட்ட மாதிரி நானே போட்டு வச்சுட்டேன். நீங்க இடம் பார்த்தப்புறம்.. உங்க இன்ஜினியர்கிட்டயும் கன்சல்ட் பண்ணிக்கோங்க விஷ்வா சர்.. ”

 

“ஹ்ம்ம்.. ஓகே மிஸ்டர் ஆதவன்..” மனதில் குழம்பிக் கொண்டிருந்தவன்.. ஆதவனிடம் கவனத்தை சிதற விட்டான்.

 

பேனாவை பிடிப்பதற்கு கூட திராணியற்றவன் போல அமர்ந்திருந்தவனை கீழ் கண்களால் கவனித்து கொண்டே.. “ஓகே சர்.. அப்ப இது பத்தின அக்ரிமென்ட்ல கொஞ்சம் சைன் பண்ணிடறீங்களா? நாங்க அட்வான்ஸ் பே பண்ணிட்டோம்.. தட்’ஸ் வொய்…” என்று இழுத்தவாறே.. முதல் இரண்டில் மட்டும் வேலை சம்பந்தப்பட்ட காகிதங்களையும்.. மற்றவை நிறுவனத்தை ப்ரியனுக்கு தாரை வார்த்து தருவதாக கூறிய.. சில காகிதங்களையும் எடுத்து வைத்தான், ஆதவன்.

 

யோசித்து கொண்டிருந்த விஷ்வா.. “ஹ்ம்ம்.. ஷூயூர்..” என்று பிசிறு தட்டியக் குரலோடு.. ஆதவன் நீட்டிய காகிதங்களை மேலோட்டமாக பார்த்து விட்டு தன் கையெழுத்தை இட்டான்.

 

ஆதவன் மேலும் சிறிது நேரம் பேசி விட்டு.. விடைபெற்று கொண்டான். அவன் போன பின்னும் விஷ்வாவின் நினைவுகளில் ப்ரியன் மட்டுமே நிறைந்திருந்தான்.

 

அவனுக்கு நன்றாக தெரிந்தது, நிறுவனம் தன் கைவிட்டு போகப் போகிறதென்று..! அதை ஏற்று கொள்ள முடியாமல் மனம் தத்தளித்து தவித்தது. என்னவோ இவனே உழைத்து வளர்த்த நிறுவனம் போல்.. அதிலேயே உழன்று கொண்டிருந்தான். இருந்தாலும் தன் சம்மதம் இல்லாமல் அவனால் அவன் பெயருக்கு மாற்ற முடியாது என பலவீனமாக நம்பினான்.

 

எந்த நேரமும் ப்ரியனை எதிர்பார்த்திருந்த விஷ்வா.. அன்று மாலையில் அவன் ப்ருந்தாவுடன் கைக் கோர்த்து கொண்டு வருவான் என கொஞ்சமும் நினைக்கவே இல்லை.

 

‘இது எப்படி..?’ காலையில் இருந்து யோசித்து யோசித்து சூடாகிக் கிடந்த மூளை.. இப்போது வெடித்து சிதறி விடும் கொதிநிலையை அடைந்தது..

 

உள்ளே வந்த ப்ரியன்.. “என்னடா மறுபடியும் மறந்து போய் வந்துட்டேன்னு பார்க்கறியா? பாவம் பச்சப்புள்ள மாதிரி முழிக்கறியே மச்சி.. ஜோ ஜேட்.. ஜோ ஜேட்..” என்று அவனைப் போலவே போலி இரக்கம் காட்டினான்.

 

“ஒரு நாள்.. ஒரு நாள் கூட உன்னை வேற மாதிரி நினைச்சதே இல்லடா.. நம்ம என்னத்த தர்றோமோ அது தான் நமக்கு திரும்ப கிடைக்கும். ஆனா.. ஒட்டுமொத்த நம்பிக்கையையும் நான் உன் மேல் தானடா வச்சிருந்தேன்..? நீ ஏன் எனக்கு அந்த நம்பிக்கைய தராம போயிட்ட?”

 

விஷ்வா பேச்சு வராமல் நின்றிருந்தான்.

 

“ஃப்ரெண்டுனு நீ என்னை தோள்ல சாய்ச்சுக்க வேணாம்.. குப்புற தள்ளி விடாம இருந்துருக்கலாம்ல? எத்தனை வருஷ ஃப்ரெண்ட்ஷிப்..? பணத்துக்காக தூக்கிப் போட்டுட்டல்ல? ரைட்.. பாஸ்ட் இஸ் பாஸ்ட்.. இப்ப எப்டி..? நீயே வெளில போயிடறியா? இல்ல….” என்று வாக்கியத்தை முடிக்காமல் விஷ்வாவின் முகத்தை வெற்றி பார்வை பார்த்தான்.

 

“நோ.. இது என் கம்பெனி.. நான் எதுக்கு வெளில போகணும்..? ஐ நெவர்..” விஷ்வாவின் குரலில் நடுக்கமும், பதட்டமும்..

 

ப்ரியன் கூலாக ப்ருந்தாவைப் பார்த்து கண்சிமிட்டி, “அம்மு.. சர்கிட்ட அத எடுத்து காட்டு” என்றான்.

 

ஓரத்தில் சிறிய டெடிபியர் தொங்கி கொண்டிருந்த தன் கைப்பையில் இருந்து கற்றை காகிதங்கள் அடங்கிய கோப்பு ஒன்றை எடுத்து டேபிளில் விஷ்வாவின் முன் வைத்தாள், ப்ருந்தா.

 

இதோ.. இதோ.. தான் வெளியேறும் தருணம் வந்து விட்டது.. தன்னை வெளியேற்ற காத்திருக்கும் அரக்கனை போல் காட்சியளித்த  கோப்பினை மெதுவாக பிரித்துப் பார்த்தான்.

 

நிறுவனத்தை ப்ரியன் பெயருக்கு மாற்றி தருவதாக எழுதியப் பத்திரங்கள்.. விஷ்வாவின் கையெழுத்தோடு..! இது எப்படி சாத்தியம்..! நிமிர்ந்து ப்ரியனைப் பார்த்தான்.

 

என்ன பாக்கற? ரெண்டே நாள்ல எப்டி இது நடந்தது பார்க்கறியா? ஏமாத்தின உனக்கே ஒரு வழி இருந்துருக்கும் போது.. நேர்மையா இருந்த எனக்கு ஒரு வழி கூடவா இல்லாம போய்டும்? அதான் உன் வழிலயே வந்து என் கம்பெனிய எடுத்துக்கிட்டேன். ஹாஹாஹா.. ஏண்டா.. ஒருத்தன் வந்து கையெழுத்து போடு சொன்னா படிச்சு பார்க்க மாட்டியா? மடையன் மாதிரி கண்ண மூடிட்டு போட்ருவியா?”

 

விஷ்வாவிற்கு ஆதவன் வந்து போனதே

அப்போது தான் புத்தியில் உறைத்தது.. ஆனால்.. நிறுவனக் கூட்டத்திற்கு சென்று வரும் தனக்கே ஆதவனை அதிகம் தெரியாத பொழுது.. கல்லோடு மல்லுக் கட்டும் ப்ரியனுக்கு எப்படி தெரிந்தது? விஷ்வா மற்றும் ப்ரியனின் தோழனான ரவியின் ஆள் தான் ஆதவன்..

 

‘அப்படியானால்??? உதவிக்காக ப்ரியன் சென்றது.. ரவியிடமா? அதனால் தான் பத்திர பதிவு கூட இவ்வளவு சீக்கிரம் முடித்திருக்கிறானா?’ அவனாகவே அவனின் யூகங்களைத் தீர்மானித்துக் கொண்டான்..

 

என்ன கொடுமையடா இது.. விஷ்வாவைப் போன்றவன்.. தன் சக்திக்கு மீறி ப்ரியனிடம் வேண்டுமானால் போராட முடியும்.. ‘தேவேந்திரன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ எனும் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தின் வாரிசான ரவியிடம் எப்படி மோத முடியும்?

 

ஒழுங்காக இருந்திருந்தாலாவது தான் நான்கில் கால் பங்களித்த பிவி – யில் இருந்திருக்கலாம்.. இப்போது.. மொத்தமும் போய் வெற்று ஆளாய் நிற்கின்றான்.

 

சரி.. நிறுவனத்தில் தான் இந்த ப்ரியன் தன்னை வென்று விட்டான்.. ஆனால் இந்த ப்ருந்தாவுடன் எப்போது, எப்படி ராசியாகித் தொலைந்தான்? எரிச்சலுடன் ப்ருந்தாவைப் பார்த்து விட்டு.. ப்ரியனை நோக்கினான்.

 

“என்ன செல்லோ.. என் செல்லத்த எப்டி சமாதானம் பண்ணினேன்னு யோசிக்கறியா? அதுக்கு ஏண்டா இப்டி மஞ்சமாக்கான் மாதிரி முழிக்கற?” என்று அவனின் வசனத்தை அவனுக்கே திருப்பி படித்தான், ப்ரியன்.

 

“ஒண்ணுமில்ல.. நேத்து உன் வீட்டுக்கு வந்தப்ப உன் மொபைல்ல இருந்த மெமரி கார்ட எடுத்துட்டு போய்.. என் தேவிகிட்ட காட்டினேன்.. மேடம் அதுல நீ வச்சிருந்த குப்பையெல்லாம் பார்த்துட்டு என் மேல எந்த தப்பும் இல்லனு வெளில ரிலீஸ் பண்ணி விட்ருந்த என்னை திரும்பவும் அவங்க இதய ஜெயிலுக்குள்ளத் தூக்கி போட்டுக்கிட்டாங்க.. இனி எப்பவும் என்னை ரிலீஸ் பண்ணவே மாட்டாங்களாம்டா.. ம்ம்..” என்று தித்திப்பாய் வருந்தினான்.

 

ப்ரியன்.. ப்ருந்தாவின் மேல் வீசியக் காதல் பார்வையில், விஷ்வாவின் உள்ளம் கோபத்தில் தகித்தது..

 

ப்ரியன், “ஆங்.. மிஸ்டர் விஷ்வா.. ஒன் கைண்ட் இன்ஃபர்மேஷன்.. நௌ, இட்’ஸ் மை சேர்.. யூ கோ அவுட்.. மீ கோ சிட்..” என்று கைகளை நீட்டி மடக்கி பேசி நக்கலடித்தான்.

 

எழுந்து கொள்ளாமல் முறைத்துக் கொண்டிருந்த விஷ்வாவைப் பார்த்தவன்.. “இன்னும் என்ன முறைப்பு வேண்டி கிடக்குது? வெளிய போடா அயோக்கிய ராஸ்கல்..” என்றான், வடிவேலு பாணியில்..

 

இருவரையும் தோற்றுப் போன பார்வைப் பார்த்து விட்டு.. வெளியேறினான், விஷ்வா..!

 

அவன் சென்றதும் திரும்பிய ப்ரியன் தன்னையே வைத்த விழியெடுக்காது பார்த்து கொண்டிருந்த ப்ருந்தாவிடம், “ஹேய்.. இது ஆஃபிஸ்டி.. எதுக்கு இப்டி பார்த்து வைக்கற..” கேட்டுக் கொண்டே அவளை நெருங்கினான்.

 

“இது ஆஃபிஸ் ஆச்சே.. எதுக்கு பக்கத்துல வரீங்களாம்?”

 

“நீ எதுக்கு அப்டி பார்த்தனு கேக்கறதுக்காக வந்தேன்..” என்றான், தன் கைகளால் அவள் கைகளோடு கதை பேசிக் கொண்டே..!

 

“இல்ல.. இத்தன நாளும் சிரிக்கவே யோசிப்பீங்க.. இப்ப வடிவேலு ஸ்லாங்லலாம் பேசறீங்க.. இந்த ரெண்டு நாளைல சிரிக்கறதுக்கு எதுவும் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் எடுத்தீங்களா என்ன..?”

 

“ஹ்ம்ம்.. ஆமா.. நேத்து ரெஸ்டாரண்ட்ல பார்த்தியே.. அவன்கிட்ட தான் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டேன்..”

 

“அவர் யாருனு ஒண்ணும் நீங்க சொல்லவே இல்லயே.. என்ன தான் ரெண்டு பேருக்கும் ஒண்ணும் இல்ல.. ப்ரேக்கப்னு சொல்லிட்டு போயிருந்தாலும்.. நீங்க ரெஸ்டாரண்ட்குள்ள போறது பார்த்துட்டு என்னால பார்க்காத மாதிரி போக முடியல. ஒரே ஒரு வாட்டி உங்க முகத்தை பார்த்துட்டு போயிடலாம்னு.. ஃப்ரெண்ட் கூட ஷாப்பிங் வந்தவ.. அவள அனுப்பிட்டு உங்க பின்னாடியே நானும் வந்துட்டேன்..” தாயின் மடியை முட்டும் கன்றைப் போல் அவன் நெஞ்சில் தலை சாய்த்து கண்மூடிக் கொண்டாள், ப்ருந்தா.

 

அவள் மனநிலையை புரிந்து.. ஆறுதலாய் அணைத்துக் கொண்டவன்.. “எனக்கும் ப்ரேக்கப்னு சொன்னதும் கோவம் வந்தாலும்.. நேத்து உன் கண்ணு துணைக்காக என்னைக் கூப்பிட்டதுமே புரிஞ்சது.. நீயும் என்னை மாதிரி தான் தவிச்சுட்டு இருக்கனு..” என்றான், அவள் நெற்றியில் முத்தமிட்டு..!

 

“சாரிப்பா.. யார் என்ன சொல்லிருந்தாலும் நான் நம்பிருக்கக் கூடாது. ஆனா.. இன்னிக்கு நீங்க வரலனா நாளைக்கு நானே உங்கள பார்க்க வந்துருப்பேன்..”

 

“அந்த ஃபோட்டோவ நானும் தானப் பார்த்தேன்.. யாரா இருந்தாலும் கோவம் வர தான் செய்யும்.. லீவ் இட் அம்மு..”

 

“ஆமா.. அந்த ஃப்ரெண்ட் யாரு..? அவர் என்கிட்ட வந்து அப்டி பேசுனதும் எனக்கு ரொம்ப பயமா போயிடுச்சு தெரியுமா?”

 

“ஹாஹாஹா.. இப்ப நம்ம கம்பெனி திரும்ப கிடைச்சதுக்கு காரணமே அவன் தான் அம்மு.. இல்லனா.. இவ்ளோ சீக்கிரம் நான் நினைச்சது நடந்துருக்காது..” பேச்சோடு பேச்சாக.. நெற்றியில் முத்தமிட்ட அதரங்கள் இப்போது காது மடலைக் குத்தகைக்கு எடுத்திருந்தது.

 

ஆதவனைப் பற்றி மேலும் கேட்க நினைத்தவளுக்கு மொழியோடு சேர்ந்து சிந்தனையும் சிதைந்து கொண்டிருந்தது. கண்மூடிக் கிறங்கி கொண்டிருந்தவள்.. “பிடிச்சிருக்கு..” என்றாள், கிசுகிசுப்பாய்..!

 

தன் வேலையை கண்ணாய் செய்த படி.. “என்னது..?” தெளிவில்லாத குரலில் கேட்டான்.

 

அவனை விலக்கி நிறுத்தி விட்டு,

காதுமடல் அருகே உதடுகள் நடத்தும்

நாடகம் பிடிச்சிருக்கு..”

என்று தன் ஐஸ்கிரீம் குரலில் பாடினாள்.

 

“ஹாஹாஹா.. அப்ப நிறைய நாடகம் நடத்தலாமே..” என்றவன் விலக்கியவளை மீண்டும் நெருங்கி.. “அடுத்த லைன் நான் எப்ப பாடறதாம்?” என்று அவள் கண்களுக்குள் விழுந்து கொண்டே கேட்டான்

 

“பாடலாமே.. இன்னும் பத்து நாளைல..”

 

“என்ன..? பத்து… ஹேய்.. நிஜமாவா சொல்ற..? உங்க அப்பாகிட்ட பேசிட்டியா?” என்று கண்கள் பளபளக்க.. விலகி நின்றவளை கைப் பிடித்து இழுத்து நெஞ்சோடு இறுக்கிக் கொண்டு கேட்டான்.

 

“ஹ்ம்ம்.. மனசால ரெண்டு பேரும் பிரிஞ்சிடலாம்னு சொன்னதே போதும். உயிர் போய்டுச்சு தெரியுமா? அதுவும் வேற பொண்ணோட சேர்த்து பார்த்ததும் நான் பட்ட அவஸ்தை.. இனி என்னால முடியாது. கல்யாணம் பண்ணிக்க போறீங்களா இல்லயா?” என்றாள், மிரட்டல் குரலில்..!

 

என்ன தான் காலையில் அவளைப் பார்க்க சென்ற போது.. வெண்மதி தன் தோழி என்று விளக்கம் கூறியிருந்தாலும்.. அவன்.. அவள் கையைப் பிடித்திருந்த போது..? அது ப்ருந்தாவிற்கு தெரியாதல்லவா? தன்னவனை விட்டு கொடுக்க முடியாது என்ற பிடிவாதமான மனநிலை வந்த பின் தான் ரெஸ்டாரண்டில் அவன் முகம் காணத் தவித்து நின்றாள்.

 

“நானா வேணாம் சொல்றேன்.. நீதான அப்பாகிட்ட பேசணும் ஆயாகிட்ட பேசணும்னு உளறிட்டு இருந்த?”

 

“இன்னிக்கு எப்டியும் பேசிடுவேன்.. கொஞ்சம் சிடுமூஞ்சின்றத தவிர உங்கள மறுக்க காரணமில்ல.. அதுவும் இப்பலாம் ஜோக் கூட பண்றீங்க.. கண்டிப்பா அப்பா ஒத்துக்குவார்.. எனக்கு நம்பிக்கை இருக்குது..”

 

“ஆனா, அப்ப கூட பத்து நாள்ல மேரேஜ்னு எப்டி சொல்லுவார்?”

 

“அதுலாம் நீங்க ஆன்ட்டிய கூட்டிட்டு வந்து பேசிக்கோங்க.. எனக்கு டென் டேஸ்ல என் ப்ரியன் வேணும்.. அவ்ளோ தான்..”

 

இது போதாதா..? தன் காதலி தன்னைத் தேடுகின்றாள்.. அதற்காக தன்னை வேண்டுகின்றாள் என்பதில் கர்வம் தலைக்கேறிப் போய்.. அவள் காதலின் கனம் தாங்காமல் தலைசுற்றி நின்றான், ப்ருந்தாவின் ப்ரியன்..!

 

10.

 

ப்ருந்தா ப்ரியனிடம் சொன்னதைப் போலவே.. தன் தந்தையிடம் தங்கள் காதலைக் கூறி, திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விட்டாள். பெரிதாக காதலை எதிர்க்காத ப்ருந்தாவின் அப்பா கிருஷ்ணன்.. ப்ரியனை மட்டுமல்லாமல்.. அவன் குடும்பத்தினரைப் பற்றியும் நன்கு விசாரித்த பின்னரே அவளின் காதலுக்கு பச்சை கொடி காட்டினார்.

 

அந்த வாரத்திலேயே ஒரு நாள் ப்ரியன்.. தன் வீட்டில் கெட் டூகெதர் பார்ட்டி அரேன்ஞ் செய்து ஆதவனையும், வெண்மதியையும் அழைத்திருந்தான். கூடவே ப்ருந்தாவையும் அழைத்து தன் அம்மா பல்லவியிடம் இவள் தான் உங்கள் மருமகள் என்று கூறி விட்டான்.

 

ப்ருந்தாவிற்கு வெண்மதியின் மீதிருந்த கோபம்… அவளிடம் பேச ஆரம்பித்ததும் கரைந்து காணாமல் போனது. அவளின் விளையாட்டுதனம் கலந்த பேச்சில் ஈர்க்கப்பட்டாள்.

 

இருவரும் சேர்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த ஆதவன் எங்கே தான் ப்ருந்தாவிடம் ரெஸ்டாரண்டில் வம்பு வளர்த்ததை வெண்மதியிடம் கூறி விடுவாளோ என.. திருதிருவென முழித்து கொண்டு நின்றான்.

 

அவன் படும் பாட்டைப் பார்த்த ப்ரியன் தனியாக அவனை அழைத்து சென்று, “உன்னை பத்தி நான் அம்முகிட்ட சொல்லிருக்கேன்டா.. அப்டி ஒண்ணும் உன்னை போட்டு குடுத்துட மாட்டா.. நீ வயித்து வலிக்காரன் மாதிரி மூஞ்சிய வச்சிக்காம கொஞ்சம் நார்மலா இரு மச்சி..” என்று கூறி விட்டு, அடக்கமாட்டாமல் சிரித்தான்.

 

“உனக்கு என்னைப் பார்த்தா சிரிப்பாணியா இருக்குதா?” என்று இவன் அவனை மொத்தினான்.

 

ப்ருந்தாவின் பாந்தமான அழகில் பல்லவி அசந்துவிட்டார் என்றால்.. அவளின் மென்மையான குணத்தில் வீழ்ந்து விட்டார் என்றே சொல்லலாம். எனவே, ப்ரியன் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்ததும்.. எங்கே மகன் மீண்டும் சண்டை, ப்ரேக்கப் என்று மனம் மாறி விடுவானோ என பயந்தவர்.. ப்ருந்தா தன் தந்தையிடம் பேச அழைத்த போது உடனே தலையாட்டி விட்டார்.

 

பின்பு, பெரியவர்கள் பேசி பத்து நாட்களில் எல்லாம் கல்யாணம் வைக்க முடியாது.. அடுத்த மாத இறுதியில் வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டு, இன்று இதோ.. இந்த சுபயோக சுபதினத்தில்.. ப்ருந்தாவை தன்னுடையவளாக்கிக் கொண்ட பூரிப்பில்.. கேமரா மேன் அலைக்கழிப்பதையும் அருண் ஐஸ்கிரீம் தந்ததைப் போல்.. முகம் கொள்ளா புன்னகையுடன்.. ஏற்று நின்றிருக்கிறான் ப்ரியன்.

 

உடலெங்கும் கற்கள் பதித்த பேர்ல் நிற லெஹங்காவில் தேவதையாய் ஜொலித்த ப்ருந்தாவை திருட்டுப் பார்வைப் பார்த்து கொண்டிருந்தவன்.. சட்டென முகம் மாறிப் போய்.. தூரத்தில் ஒரு  பெண்ணிடம் வார்த்தையாடிக் கொண்டிருந்த ஆதவனை, தன்னருகே நின்றிருந்த சிறுவன் ஒருவனை அனுப்பி அழைக்க செய்தான்.

 

சிரித்து கொண்டே வந்த ஆதவன், “எதுக்குடா கூப்பிட்ட? ஆமா.. அந்த பொண்ணு ப்ருந்தாவுக்கு சொந்தமா? நல்லா கம்பெனி குடுக்கறாங்க மச்சி.. செத்த நேரம் பேசலாம் நினைச்சா.. அதுக்குள்ள கூப்பிட்டுட்ட..? வேற ஒண்ணுமில்ல.. என்னடா நம்ம ஃபேமிலி மேன் ஆகிட்டோமே.. இவன் மட்டும் இன்னும் பேச்சிலராவே இருந்து.. பொண்ணுங்கக்கிட்ட கடலை ஃபேக்டரி நடத்தறானேனு உனக்கு ஜெலஸ்டா.. அதுவும் அந்த பொண்ணு உனக்கு மச்சினிச்சி முறை வருது.. எங்க நம்ம மச்சினிச்சி இவன் அழகுல மயங்கிடுவாளோனு ஃபியர்.. கரெக்ட்டா? மோர் ஓவர்…”

 

அதற்கு மேல் பொறுக்க முடியாமல்.. வேகமாக ஆதவனின் வாயை மூடிய ப்ரியன்.. “இன்னொரு வார்த்தை பேசின.. ஃப்ரெண்ட்னு பார்க்காம கொன்னுடுவேன்..” என்றான், எச்சரிக்கும் குரலில்..!

 

“அடக் கொலகார பாவி.. எதுக்குடா என்னைக் கூப்பிட்ட? அத சொல்லு மொத..”

 

“எங்கடா சொல்ல விடற? மொத ப்ருந்தாவுக்கு டச் – அப் பண்ணிட்டு இருக்க உன் ஆள அந்த பக்கம் கூட்டிட்டு போ..”

 

ஆதவன் வெண்மதியைத் திரும்பி பார்த்தான். அவள் ப்ருந்தாவிடம் என்னவோ பேசி சிரித்தவாறே.. முகத்தில் துளிர்த்திருந்த வேர்வையை கர்ச்சீஃபால் ஒற்றிக் கொண்டிருந்தாள்.

 

“எதுக்குடா..? இருக்கட்டும்.. ப்ருந்தாவுக்கு ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்..”

 

“வேணாம் மச்சி.. ப்ருந்தா சூது வாது தெரியாதவடா.. வெண்மதி மாதிரி கிடையாது.. அவ பாட்டுக்கு எதையாவது சொல்லி குடுத்துடப் போறா ஆதவ்.. உன் கைய காலா நினைச்சு கேக்கறேன்.. அவள கீழ இறங்க சொல்லு மச்சி..” என்று ஆதவனின் கைகளை பிடித்துக் கொண்டான்.

 

ஆதவன் கண்களில் சிகப்பு சீரியல் பல்புகள் போட்டதைப் போல்.. தீப்பொறி பார்வைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே.. யோசனையுடன் இவர்களின் நெருக்கத்தைப் பார்த்து கொண்டே மேடையேறினான் விஷ்வா.

 

ப்ரியன்.. பல்லவியிடம், ‘விஷ்வா வேறொரு பெரிய வெளிநாட்டு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து விட்டான். இது அவனுக்கொரு நல்ல வாய்ப்பு. இனி நம் கம்பெனியில் பார்ட்னர்ஷிப் இல்லை’ என்று மட்டும் தான் கூறியிருந்தான். துரோகியாய் மாறிய நண்பனைப் பற்றி வேறு எதுவும் பேசவும் விரும்பவில்லை.

 

பல்லவிக்கு விஷ்வாவின் வீட்டு நிலைமை நன்றாக தெரியும். விஷ்வாவின் அப்பா ஒரு குடிகாரர். அம்மா தான் காய்கறிகள் விற்று அவனைப் படிக்க வைத்தார். ஆதலால்.. பல்லவி ப்ரியனிடம் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. ஆனால், இத்தனை நாளும் தன் மகனின் நண்பனை தன் மகனாகவே நினைத்திருந்தவர்.. மகனின் திருமணத்திற்கு அவன் குடும்பத்தினரை அழைக்காமல் எப்படி இருப்பார்? இந்த விஷயத்தில் ப்ரியனும் எதுவும் செய்வதற்கு இல்லை.

 

இப்போது இதோ.. மேடைக்கு தன் அன்னையுடன் வந்து கொண்டிருக்கிறான். விஷ்வாவின் அம்மா தம்பதிகளை ஆசிர்வதித்து பரிசுப் பொருளை ப்ரியன் கையில் தந்து விட்டு.. விஷ்வாவைக் காட்டி, “இவனுக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லக்கூடாதா பிரியா? உன் கூட இருந்தா பொறுப்பா இருப்பான்.. கொஞ்ச நாள்ல இவனுக்கும் ஒரு பொண்ணு பார்த்து முடிச்சு வச்சிட்டா நிம்மதினு நினைச்சேன்.. இப்ப என்னடான்னா தனியா வேலை பார்க்கப் போறேன்னு சொல்றான்.. இதுக்கா நான் ரோட்டோரமா.. வெயில்ல கிடந்து காய் வித்தேன்?” என்று கவலைப்படுவதற்காகவே ஜென்மம் எடுத்த அந்த தாய் வேதனையோடு ப்ரியனிடம் புலம்பினார்.

 

ப்ரியனுக்கு நெஞ்சோரம் ஈரம் கசிந்தாலும்.. விஷ்வாவின் செயலால் கசிந்த இரத்தமே இன்னும் உலராமல் இருக்கும் போது.. தன்னால் என்ன செய்து விட முடியும் என அமைதியாகவே இருந்தான்.

 

தன்னை விட ப்ரியனையே உயர்த்தி பேசும் தாயின் மேல் எப்போதும் போல் இப்போதும் விஷ்வாவிற்கு கட்டுக்கடங்காமல் கோபம் கொப்பளித்தது.

 

“ம்மா.. வந்த இடத்துல என்னத்த பேசிட்டு இருக்கீங்க..? கிஃப்ட்ட குடுத்தாச்சு தான? கீழ இறங்குங்க..” என்று கையைப் பிடித்து கீழே விட்டு விட்டு வந்தவன்.. ஆதவன் கண்களைக் கூர்மையாய் பார்த்துக் கொண்டே, “என்ன மிஸ்டர் ஆதவன்.. எங்க இன்ஜினியர உங்களுக்கு முன்னாடியே தெரியும் போலயே..” என்று கேட்டான்.

 

ப்ரியன், “என்கிட்ட கேளுடா ஃப்ராடு.. ரொம்ப நல்லாவே தெரியும்.. என்னாங்குற இப்ப?” என்று அடிக்குரலில் உறுமினான்.

 

“ஓ! அப்ப ரவிக்கு எதுவும் தெரியாது?” என்று.. தன்னை புத்திசாலி என்றெண்ணி உளறி விட்டான்.

 

‘இவன் இப்படி ரவியோடு சம்மந்தப்படுத்தி நினைத்துக் கொண்டிருக்கிறானா?’ என்று இருவரும் சுதாரித்து கொண்டனர்.

 

“ஏன் தெரியாது விஷ்வா சர்..? எங்கள இன்ட்ரடியூஸ் பண்ணி விட்டதே ரவி சர் தான்.. என்னை உங்ககிட்ட அனுப்பினதும் அவர் தான்.. ஃபங்கனுக்கு கூட வந்துருக்காரு.. வாங்க பேசி ரொம்ப நாளாச்சுனு என்கிட்ட சொன்னீங்களே.. வாங்க நான் கூட்டிட்டு போறேன்..” என்றான் ஆதவன்.

 

உள்ளுக்குள் சற்று பயம் தோன்றினாலும்.. “பரவால்ல.. என் ஃப்ரெண்ட்ட பார்த்துக்க எனக்கு தெரியும்..” என்று கெத்தாகவே கூறி.. மேடையை விட்டு கீழே இறங்கினான்..

 

“இனி உன் திசைக்கே வர மாட்டான்னு நினைக்கிறேன்..”

 

ஆமோதிப்பாய் தலையசைத்துப் புன்னகைத்த ப்ரியன்.. ப்ருந்தாவைப் பார்த்தான்.

 

விஷ்வா இருவரிடமும் பேசுவதைப் பார்த்தவள்.. மீண்டும் ஏதேனும் ப்ரச்சனை செய்வானோ என கலக்கத்தோடு பார்த்திருந்தாள். அவளை ப்ரியன் கண்களால் சமாதானப்படுத்திக் கொண்டிருந்த இடைவெளியில்.. ஆதவன் வெண்மதியை கைப் பிடித்துத் தனியே தள்ளிக் கொண்டு போனான்.

 

வெண்மதி பேபி பிங்க் நிறத்தில் பாவாடை, தாவணி அணிந்திருந்தாள். தாவணியிலும், ப்ளவுஸிலும் ஆரி வொர்க் செய்திருந்த அந்த உடையில் அப்சரஸ் போல் காண்போரின் கண்களை நிறைத்தாள்.

 

மணமகன் அறைக்கு இழுத்து சென்றவன்.. அவள் நெற்றியோரம் சிலும்பிக் கொண்டிருந்த முடிகளை விரல்களால் ஒதுக்கி கொண்டே, “ஹேய் போங்கு.. டுடே யூ லுக் கார்ஜியஸ்டி..” என்றான்.

 

“அப்ப இத்தன நாளும் கேவலமா இருந்தேனா?”

 

“அத என் வாயால வேற நான் சொல்லணுமா?” என்று கேட்டு.. அவளிடமிருந்து சில பல பரிசுகளை பெற்று கொண்டான்.

 

“மங்க்கி, டாங்க்கி.. ஆன்ட்டிகிட்ட ஏண்டா என்னை இன்ட்ரடியூஸ் பண்ணி விட மாட்டேங்குற?”

 

நெற்றி முட்டி, “ரெண்டு பேய்ங்களயும் தனிதனியா சமாளிக்கவே இங்க அல்லு விடுதாம்.. இதுல ரெண்டு பேயும் ஒண்ணா சேர்ந்தா என் நிலைமை அந்தல சிந்தல ஆகிடாது?” என்றான், அவள் புருவங்களை இதழ்களால் வருடிக் கொண்டே..!

 

இதழ் வருடலில் சிலிர்த்து கொண்டிருந்தவள்.. அவன் பேசியதைக் கேட்டு, “என்னடா சொன்ன.. நான் பேயா..?” கேட்டு கொண்டே.. அவனின் புதிய ரேமண்ட் ஷர்ட்டைப் பிடித்து இழுத்து, தள்ளி விட்டு, வயிற்றில் பன்ச் செய்து என.. கோபம் கொண்டு மூச்சிறைத்து நின்றாள்.

 

“கூல் கூல் டார்லிங்.. உண்மைய தானடி சொல்றேன்..?”

 

“நீ அடங்க மாட்ட.. இரு நானே போய் ஆன்ட்டிகிட்ட பேசிக்கறேன்..” என்று வெளியேறப் போனவளைப் பிடித்து இழுத்து.. “உங்க அண்ணா சொன்ன டைம் முடிய தான் இன்னும் அஞ்சு மாசம் இருக்கே.. அதுவரை நான் கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா விட மாட்ட போலயே..” என்று அலுத்துக் கொண்டான்.

 

“ஏன் நாங்க இன்ட்ரடியூஸ் ஆகறதுல உனக்கு என்ன இஷ்யூ?”

 

“ஒண்ணுமில்லயே.. ஒண்ணுமே இல்ல..” என்று அவள் இடை வளைத்து இறுக்கி.. அதற்கு மேல் அவளைப் பேச விடாமல்.. அவள் சிந்தனையை மழுங்கடிக்கும் வேலையை செவ்வனே செய்தான்.

 

மூளையின் செல்களை அசமந்தமாக்கி.. உடலின் செல்களை மட்டும் விழிக்கச் செய்து கொண்டிருந்தவனிடம் இருந்து.. கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மீட்டு கொண்டு திமிறியவள்.. “டேய் ஆதூ.. கேடிடா நீ.. பேசிட்டு இருக்கும் போதே என்ன காரியம் பண்ணி வைக்கற..?” என்று அதற்கும் மொத்தினாள்.

 

ஆதவனின் அன்னையிடம் பேசியே தீர வேண்டும் என ஒற்றைக் காலில் நின்றவளை.. வேறு வழியின்றி.. பார்கவியிடம் அழைத்துச் சென்றான்.

 

பார்கவி, தன்னருகே வந்து நின்ற மகனிடம்.. “என்னை இங்க உட்கார வச்சிட்டு நீ எங்கடா போய் தொலஞ்ச? எனக்கு யாரையுமே தெரியல.. பேச்சு துணைக்கு கூட ஆள் இல்ல..” என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார்.

 

“அதனால தான் அந்த ஆரஞ்ச் சாரி கட்டிருக்க ஆன்ட்டி அரண்டு போய் அந்த பக்கம் போய் உட்கார்ந்தாங்களா?”

 

“ஆமா.. சும்மா ரெண்டு வார்த்தை பேசுவோம்னு  இந்த புடவைல நான் நல்லாயிருக்கேனா? இல்ல கல்யாணப் பொண்ணு போட்டிருக்க மாதிரி லெஹங்கா போட்டா நல்லாயிருக்குமானு தான் கேட்டேன்.. மூஞ்சிய திருப்பிக்கிட்டு அந்த பக்கம் போய் உட்கார்ந்துட்டா..” என்று முகத்தை தோளில் இடித்து கொண்டார்.

 

ஆதவன் அருகிலிருந்த வெண்மதி பற்களால் உதட்டை இறுக்கமாகக் கடித்து சிரிப்பை அடக்கினாள்.

 

“உங்கள கல்யாண வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேனா? இல்ல ஃபேஷன் ஷோக்கு கூட்டிட்டு வந்தேனா? எப்ப பாரு யார்கிட்டயாவது இது நல்லாயிருக்கா? அது நல்லாயிருக்குதானு நொய் நொய்னுட்டே இருக்கணுமா? மனசுல இளமை ஊஞ்சலாடுதுனு நினைப்பு..” என்று கடுப்படித்தான்.

 

“போடா.. பொறாமை பிடிச்சவனே.. வெவ்வவெவ்வவெவ்வ..”

 

“நானு? உங்களப் பார்த்து? பொறாமை?” ஆதவனின் உடல்மொழியில் வெண்மதி அதற்கு மேல் சிரிப்பை அடக்க முடியாமல்.. அருகிலிருந்த சேரில் (chair) அமர்ந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள்.

 

இத்தனை நாளும் எப்போதும் தன்னை வெறுப்பேற்றும் ஆதவனையே இன்று ஒருவர் டென்ஷன் செய்கிறார்.. தனக்கு ஒரு மகத்தான கம்பெனி கிடைத்துள்ளது என்பதில் ஏகக் குஷியாகிப் போனாள்.

 

அவன் அறிமுகம் செய்யாமலே.. இவளாகவே பார்கவியிடம், “ஆன்ட்டி.. இந்த சாரி கொஞ்சம் ஓல்டு டிசைனாத் தெரியுது.. ஆனாலும் இதுல நீங்க ரொம்ப யங்கா இருக்கீங்க ஆன்ட்டி..” என்றவளைப் பார்த்த ஆதவன், ‘அடி பாதகத்தி’ என வாயில் கை வைத்து அதிர்ச்சியாகப் பார்த்தான்.

 

“நிஜமாவா சொல்ற? ஆமா.. நீ இவ்ளோ அழகா இருக்கியே.. எப்டிமா?” என்று அவள் கன்னம் வருடி அதிசயித்தார்.

 

“அது நான் அப்புறம் சொல்றேன் ஆன்ட்டி.. இப்ப வாங்க நம்ம சாரி கலெக்ஷன்ஸ் பார்ப்போம்.. நியூ டிசைன்ஸ் ஆன்லைன்ல நிறைய கிடைக்குது..” என்று ஆதவனை இடித்துத் தள்ளி விட்டு.. தன் மொபைலுடன் பார்கவியின் அருகே அமர்ந்து விட்டாள்.

 

‘ஒண்ணு கூடிட்டாய்ங்கப்பா… ஒண்ணு கூடிட்டாய்ங்க!!! இதுக்கு தான இத்தன நாளும் மீட் பண்ண விடாம பார்த்துட்டு இருந்தேன். இனி நம்ம இன்ட்ரடியூஸ் பண்ணி வைக்கவே தேவையில்ல. அய்யய்யோ.. ஆதவா.. உன் பர்ஸ பனால் ஆக்கப் போகுதுங்கடா. இன்னும் கொஞ்ச நேரம் இங்க நின்னா க்ரெடிட் கார்ட் நம்பர் கேக்கும்ங்க.. நைஸா எஸ்ஸாகிடு’ என்று மனதிற்குள் அலறிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நழுவினான், ஆதவன்.

 

11.

 

ப்ரியன் – ப்ருந்தாவின் திருமணம் முடிந்து ஒரு மாதம் முடிந்திருந்த நிலையில்.. அதே ப்ரியன் வீட்டு மொட்டை மாடி.. இரவு நேரம்.. பௌர்ணமி வானம்.. தேகம் தீண்டும் தென்றலின் குளுமை.. அன்று தனிமையில் உழன்று கொண்டிருந்த ப்ரியன்.. கடவுளிடம் அன்று கேட்காத வரத்தை இன்று கேட்டுக் கொண்டிருந்தான்.

 

கை வளைவில் இருந்த ப்ருந்தாவோடு தனித்திருக்கும் இந்த பொழுது உறைந்து போக வேண்டிக் கொண்டிருந்தான்.

 

“ப்ரியன்..”

 

“ஹ்ம்ம்.. சொல்லு அம்மு..”

 

“இன்னிக்கு ஃபங்ஷன் நல்லா போச்சுல்ல? அத்தை வெண்மதியப் பார்த்ததும் குழந்தையா மாறிட்டாங்க தெரியுமா? அவக்கூடயும், தருண்கூடயும் சேர்ந்து எதிர்வீட்டு அண்ணாவ ஒரு வழி பண்ணிட்டாங்க”

 

“எதுக்காம்..?”

 

“தருணுக்கு கிஃப்ட்ங்கற பேர்ல ‘எது எடுத்தாலும் பத்து ரூபாய்’ கடைல உள்ள குட்டி கார் வாங்கி குடுத்திருக்காராம்.. அத நானும் பார்த்தேன்.. இதுக்கு அந்த மனுஷன் எதுவும் வாங்காமலே வந்திருக்கலாம்பா.. அதப் பார்த்ததும் தருண் டென்ஷன் ஆகிட்டான்.. அதுக்கு மூணு பேரும் சேர்ந்து என்ன பண்ணாங்க தெரியுமா?”

 

“என்ன பண்ணாங்க? நீங்களே வச்சிக்கோங்கனு திருப்பி குடுத்துட்டாங்களா?”

 

“இல்லங்க.. கேக் உள்ள உப்புக்கல்ல வச்சு, ஜூஸ்ல புளிய கரைச்சு ஊத்தி குடுத்துட்டாங்க.. ஹாஹாஹா..”

 

“வெண்மதிக்கு வால் நீளம்.. சின்னப்பையனையும் சேர்த்து கெடுக்குறா..”

 

“அப்டிலாம் இல்ல.. தருணுக்கு நல்ல விஷயங்கள் எவ்ளோ கத்துக் குடுக்கறா தெரியுமா? எனக்கு அவள ரொம்ப பிடிச்சிருக்குது”

 

இரண்டு மாதங்களுக்கு முன்பு.. இதே இடத்தில் தருணிற்கு நல்லுரைக் கூறி சமாதானப்படுத்தி.. தன்னையும் தெளிவுறச் செய்தவள் அல்லவா?

 

“ஹ்ம்ம்.. அது என்னவோ சரி தான்..” என்றான், ஒத்துக் கொள்ளும் பாவனையில்..!

 

இருவரும் பேசிக் கொண்டிருக்கையிலேயே.. ப்ருந்தா, “ஆவ்வ்” என்ற சிறு அலறலுடன் துள்ளி.. ப்ரியனை இறுகக் கட்டிக் கொண்டாள்.

 

எதைப் பார்த்து அலறுகிறாள் எனத் திரும்பி பார்த்தவனின் இதழ்கள் புன்னகையில் மலர்ந்தது. பைப் ஏறி குதித்து, மூச்சு வாங்க இருக்கைகளையும் இடைப் பற்றி நின்று கொண்டிருந்தவன்… சாட்ஷாத் நம் மாயக்கண்ணனே தான்.. தவறு! தவறு!! வெண்மதியின் மாயக்கண்ணன்!!!

 

ஆம்! ஆதவன் எதிர்பார்த்தது போலவே.. பார்கவிக்கு வெண்மதியை மிகவும் பிடித்துவிட்டது. உடனடியாக திருமணம் செய்து கொள் என அடம்பிடிக்கவே ஆரம்பித்துவிட்டார். அதோடு நிறுத்தாமல் வெண்மதி வீட்டிலும் பேசி.. சென்ற வாரத்தில் நிச்சயதார்த்தத்தையும் முடித்துவிட்டார். இன்னும் மூன்று மாதங்களில் திருமணம் என முடிவாகியிருந்தது.

 

இந்நிலையில் இன்று தருணின் பிறந்தநாளிற்கு ஆதவனையும் அழைத்திருந்தனர். ஃபங்ஷனில் கலந்து கொண்டவன்.. வீட்டின் பின்புறம் வந்து.. பைப் ஏறி இதோ மொட்டை மாடியில் திருடனைப் போல் குதித்து ப்ருந்தாவை அலற விட்டுக் கொண்டிருக்கிறான்.

 

“ஏண்டா.. அதான் மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க தான? இன்னும் என்னத்துக்குடா இப்டி வந்து குதிச்சுக்கிட்டு இருக்க? பேச நினைக்கறதக் கீழயே அவக்கிட்ட பேச வேண்டியது தான..?”

 

“என்ன இருந்தாலும் பழச மறக்கக்கூடாதுல்ல.. அதோட கீழ ஒரே க்ரௌடு மச்சி.. ஓவர் டிஸ்டபர்ன்ஸ்.. எப்டியும் அந்த பொடிப்பயலோட ஆட்டம் போட இங்க தான் வருவா.. மோர் ஓவர்.. சாகசம் பண்ணாம சும்மா நேரடியா பேசறது இந்த வீராதி வீரக் காதலன் ஆதவனுக்கு இழுக்கு..”

 

“ஹ.. உன் பேய்க்கு பேயோட்டணும்னு வந்துருக்க.. அதுக்கு இம்புட்டு பில்டப்பா?”

 

திருடனோவென பயந்து கணவனைக் கட்டி கொண்ட ப்ருந்தா, திருடனல்ல தன் புதுத் தோழி வெண்மதியைத் திருடவிருக்கும் ஆதவனெனத் தெரிந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நண்பர்கள் பேசுவதை சின்னச் சிரிப்புடன் பார்த்திருந்தாள்.

 

“ஹிஹி.. அப்டியும் சொல்லலாம்..” அசடு வழிந்து கொண்டிந்தவனின் அலைபேசி அழைத்தது.

 

“பேசுகிறேன்… பேசுகிறேன்…

உன் இதயம் பேசுகிறேன்…”

 

ரிங் டோனை வைத்து அழைப்பது யாரென தெரிந்து கொண்டவன்.. சட்டென சைலண்ட் மோடில் போட்டு விட்டு ப்ரியனைப் பார்த்தான். அவன் திகைத்துப் போய் ஆதவனிடம் ‘ஆமாவா’ எனத் தலையசைத்துக்  கேட்டான்.

 

ஆதவன், ‘ஆம்’ என பதில் தலையசைப்பைத் தந்ததும்.. அவசரமாக தன் ஷார்ட்ஸின் பாக்கெட்டைத் துழாவி அலைபேசியை எடுத்து வேகமாக அணைத்து வைத்தான்.

 

இருவரையும் புரியாமல் பார்த்து நின்ற ப்ருந்தாவின் அலைபேசி சொன்னது.. வெண்மதி அழைக்கிறாள் என..!

 

எடுத்துப் பார்த்து விட்டு இருவரிடமும்.. “வெண்மதி” என்றாள்.

 

“வேணாம் ப்ருந்தா.. அட்டெண்ட் பண்ணாத..”

 

“ஆமா அம்மு.. கட் பண்ணுடி..”

 

இருவரையும் ஒற்றைத் தலையசைப்பில் அலட்சியம் செய்து.. அழைப்பை ஏற்று பேசி விட்டு ஆதவனிடம்.. “வெண்மதி உங்கள கீழ கூப்பிடறா அண்ணா.. நீங்க ஏன் கால் அட்டெண்ட் பண்ணல?” என்று கேட்டாள்.

 

“அது.. அது.. ப்ரியன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டிருக்குது.. நான் அப்புறம் போறேன் ப்ருந்தா..”

 

“ரெண்டு பேரும் டெய்லியும் பேச தான செய்றீங்க? போய் என்னனு கேட்டுட்டு வந்துடுங்க”

 

எப்டி தவிர்ப்பது எனப் புரியாமல்.. ப்ரியனின் கையைப் பிடித்துக் கொண்டு, “நீயும் வாடா..” என்றான்.

 

“அவங்க எதுக்கு.. என்னவோ ஃபர்ஸ்ட் மீட்டிங் மாதிரி இப்டி ஜெர்க் ஆகறீங்க?”

 

பதட்டமாக இன்னும் ப்ரியனை ஒட்டி நின்று கொண்டவன், “பப.. பர்ஸ்ட் மீட்டிங் இல்ல ப்ருந்தா.. ஃபர்ஸ்ட் நைட்..” என்றான்.

 

“வாட்!!! யாருக்கு?”

 

“எனக்கும் இவனுக்கும் தான்.” என்று உளறிக் கொட்டினான்.

 

“ஹா…ங்ங்ங்!!!” என்று முகத்தை அஷ்டகோணலாக்கினாள்.

 

“டேய்ய்ய்!!!” ப்ரியன் ஆதவனின் காலை நச்சென மிதித்தான்.

 

“ஆஆ!!!” என்று காலைப் பிடித்தவன் பின்பு தான்.. தான் என்ன உளறினோம் என்று புரிந்து நாக்கைக் கடித்துக் கொண்டான்.

 

இருவரையும் முறைத்து விட்டு, “நீங்க பேசிட்டு இருங்க.. நான் போய் பார்த்துட்டு வர்றேன்..” என்றாள்.

 

“நோ அம்மு.. போகாத..” – ப்ரியன்.

 

“வேணாம் வேணாம்..” – ஆதவன்.

 

இருவரும் ஒரே நேரத்தில் அதிர்ந்து அலறினர்.

 

“எதுக்கு ரெண்டு பேரும் இப்டி பண்றீங்க? பாவம் வெண்மதி ரொம்பப் பதட்டமா வேற பேசற மாதிரி இருக்குது.”

 

“சொன்னா கேளு அம்மு.. நீ போக வேணாம்..”

 

“ஆமா ப்ருந்தா.. அவ ஏதாவது வாய்க்கா தகராறுக்கு பஞ்சாயத்து பண்ண கூப்பிடுவா.. போகாத..”

 

“ச்சு.. போங்க ரெண்டு பேரும்.. ப்ராப்ளம் வரும் போது ஹெல்ப் பண்ணலனா அது என்ன மண்ணாங்கட்டி ஃப்ரெண்ட்ஷிப்பாம்.? நான் போறேன்” என்று விறுவிறுவெனக் கீழே இறங்கி சென்றுவிட்டாள்.

 

இருவரும் திரும்பி, ஒருவர் முகத்தை ஒருவர் இமைக்காமல் பார்த்துக் கொண்டே.. கோரஸாக, “ஒருத்தருக்கு ரெண்டு பேர் இவ்ளோ தூரம் சொல்றோம்.. கேக்காம போறா? என்ன கொடுமை சார் இது?!” என்று கூறி, நெற்றியில் நோகாமல் அறைந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!