Tk 40

அத்தியாயம் – 40 

அன்று இரவு பிரபா வீடு திரும்பும் பொழுது  வீடே மயான அமைதியுடன் காணப்படவே, “என்ன வீட்டில் யாரும் இல்லையா?” என்ற கேள்வியுடன் வீட்டிற்குள் நுழைந்தான்.

அவனின் காலடி ஓசைக்கேட்டு திரும்பியவர், “வாப்பா பிரபா..” வரவேற்க,   “என்ன மாமா வீடே ரொம்ப அமைதியாக இருக்கிறது?” அவன் சோபாவில் அமர்ந்தான்.

“நேத்ரா சீக்கிரமே தூங்கிட்டா.. ஜெயா காலையில் நீ போகும் பொழுது அறைக்கு போன பொண்ணு  இன்னும் சாப்பிடக்கூட கீழே வரல..” என்றார் அவர் வருத்ததுடன். 

“அவள் சாப்பிட கூட கீழே வரவில்லையா மாமா?” என்றவனின் புருவங்கள் கேள்வியாகச் சுருங்கியது.  இன்னும் அறையில் என்ன பண்ற? என்ற சிந்தனையுடன் அமர்ந்திருந்தான்.

 “பிரபா” என்றதும், “மாமா” என்ற அழைப்புடன் நிமிர்ந்தான்..

“மேலே போய் பாருப்பா. பாவம் காலையிலிருந்து இன்னும் ஒன்றுமே சாப்பிடல..” என்றவரின் குரல் வருத்ததுடன்  ஒலித்தது.

“சரி மாமா..” எழுந்து அவன் அறையை நோக்கிச் சென்றவன் மீண்டும் திரும்பி அவரின் அருகில் வந்தவன், “நீங்க சாப்பிட்டீங்களா?” விசாரித்தான்.

“நான் இப்பொழுதுதான் சாப்பிட்டேன் பிரபா. நீ போய் ஜெயாவை அழைச்சிட்டு வந்து சாப்பிட வை..” என்றதும் மீண்டும் அவன் அறையை நோக்கி செல்ல, “பிரபா உங்களுக்கு ஏதாவது சண்டையா?” அவரின் குரல் சந்தேகத்துடன் ஒலித்தது..

அவரின் கேள்வியில் அவனின் நடை தளர்ந்துவிட, “இல்ல மாமா” என்றதும், “சரிப்பா” என்றதும் பிரபா மாடியேறி அறைக்கு செல்ல அவனை பின் தொடர்ந்தும் அவரின் பார்வை. பிறகு அவர் எழுந்து அவரின் அறைக்கு சென்றுவிட்டார்..

 தன்னறைக்குள் நுழைந்த பிரபாவின் பார்வை அறையை சுற்றிவர ஜெயா அறையில் இல்லை என்று அங்கே நிலவிய அமைதியே அவனுக்கு உணர்த்திட, ‘தோட்டத்தில் இருப்பாள்’ என்ற எண்ணத்துடன் குளியலறைக்குள் புகுந்தான் 

‘ஜெயா இத்தனை மாதத்தில் இப்படி இருந்ததே இல்லையே’ மனதில் நெருடியது.  அவன் ரிப்ரெஷ் ஆகி வெளியே வந்தவன் தன உடையை மாற்றிவிட்டு பின் படிக்கட்டு வழியாக அவன் தோட்டத்திற்கு சென்றான். 

அவளைத் தோட்டத்தில் காணவில்லை  என்றதும் அவனின் மனதில் பயம் சூழ, “இந்த நேரத்தில் எங்கே போயிருப்பாள்” என்ற பயத்துடன் அவன் மீண்டும் மாடிப்படிகளில் இரண்டு இரண்டு படிகளாக வேகமாக தாவி ஏறியவன் மொட்டை மாடிக்கு சென்றான்.

அங்கிருந்த கைப்பிடி சுவற்றில் சாய்ந்து சோகத்தின் மொத்த உருவமாக நின்றவளைப் பார்த்தும் தான் அவனுக்கு போன உயிர் திரும்பி வந்தது.  தன் பின்னோடு காலடி ஓசை கேட்டே வருவது யார் என்று உணர்ந்த ஜெயா அமைதியாக இருந்தாள்

அவளின் அருகில் சென்றவனோ, “ஜெயா” என்ற அழைப்புடன் அவளின் தோளைத் தொடவே அவனின் கையைத் தட்டிவிட்டாள் அவள்.  ‘இயல்பாக தொடுவது கூட தவறா?’ என்று சிணுங்கியது அவனின் மனம். 

“ஜெயா” என்றவன் மீண்டும் அழைக்க அவள் மௌனமாகவே இருந்தாள். அவள் எதனால் இப்படி இருக்கிறாள் என்று அவனுக்கு புரியவே இல்லை. 

அவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் நொடிபொழுது அமைதியாக நின்றிருந்தான். அதெல்லாம் சில நொடிகள்தான்.

“ஜெயா சாப்பிடாமல் இன்னும் என்ன பண்ற?” என்றவன் வலுக்கட்டாயமாக அவளின் முகத்தை தன்பக்கம் திருப்பிட அவளின் கன்னங்களில் ஈரம் உணர்ந்து, “மலர்” என்ற அழைத்தான்.

அந்த அழைப்பில் அவனின் காதலை முற்றிலுமாக உணர்ந்தவளோ,  “பிரபா..” என்று அவனின் தோளில் சாய்ந்து அவள் சந்தோஷத்தில் அழுதுவிட்டாள்.

அவள் அழுதது அவனுக்கு அதிர்ச்சியை கொடுக்க, ‘நான் காலையில் விளையாட்டாக பேசியது இவளின் மனதை காயப்படுத்திவிட்டதா?’ என்ற சந்தேகம் அவனின் மனதில் எழுந்தது. அதைப்பற்றி அவளிடம் நேரடியாக கேட்க அவனுக்கு மனம் வரவில்லை.

சிலநொடிகளில் பிரபாவின் மனம் எதை எதையோ நினைத்து துடிக்க அவளின் விசும்பம் ஒலி அவனின் கவனத்தைத் திசை திருப்பிட, “ஏய் எதுக்குடா இப்போ அழுகிற?” அவனின் கேள்விக்கு அவள் மௌனம் சாதிக்க அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“மலர் நிமிர்ந்து என்னோட முகம் பாரு..” அவன் அதட்ட அவளோ மாட்டேன் என்று இடமும் வளமும் மறுப்பாக தலையசைக்க, ‘இன்னும் சின்ன பெண்போல பண்ற’ கூந்தலை ஆறுதலாக வருடிவிட்டு அவளின் உச்சியில் இதழ் பதித்தான்.

அவளை இரண்டு கரங்களில் வளைத்துக்கொண்ட பிரபாவின் மனதில் இதம் பரவியது என்றால் அவனின் அணைப்பில் பாதுகாப்பை உணர்ந்தாள் அவள். இருவரின் இதயத்துடிப்பும் இணைந்து துடிக்க இருவரும் விழிமூடி அந்த நொடியை ரசித்தனர். 

அவளை மார்புடன் அணைத்து நின்ற பிரபாவோ, “என்ன விஷயத்தை மனசில் போட்டு குழப்பிட்டு இருக்கிற. புருஷன் தப்பு பண்ணிட்டான் இனிமேல் இவனோடு எப்படி..” அவன் மௌனத்தைக் கலைக்க அவனைவிட்டு விலகி நின்றாள் ஜெயா..

அவள் பட்டென்று விலகியதும் அவனுக்கு ஏதோமாதிரி ஆகிவிடவே, “ஜெயா” என்றவன் அவளை நெருங்க, “அதெல்லாம் இல்ல” என்றவள் அவனைவிட்டு விலகிச்செல்ல அவளின் கரம்பிடித்து இழுத்ததும் அவனின் மார்பில் வந்து மோதினாள்.

ஒரு விரலால் அவளின் முகத்தை உயர்த்தி அவளின் விழிகளை நோக்கியவன், “என்னிடம் போய் பேசற இல்ல” என்று கேட்டான்..

“ஏன் நீங்க சொல்லல..” விழி உயர்த்தி அவனை கேள்வியாக நோக்கினாள் ஜெயா.. 

அவள் பார்வையின் பொருள் புரியாமல், “நான் உன்னிடம் என்ன பொய் சொன்னேன்?” என்றவன் சிந்தனையுடனே..

அவனை முறைத்துவிட்டு, “நீங்க பொய் சொல்லல. சரி வாங்க..” அவள் அவனின் கரங்களை விலக்கிவிட்டு முன்னே சென்றாள். 

என்றும் இல்லாமல் அவளின் செயல்களில் இருந்த மாற்றம் அவனுக்கு தெளிவாக புரிய, “நான் இவளிடம் எப்பொழுது பொய் சொன்னேன்?” என்றவளை பின் தொடர்ந்தான் பிரபா..

 அதன்பிறகு வந்த நாளில் ஜெயா அவனுடன் பேசாமல் மௌனம் சாதித்தாள். அவள் ஏன் அப்படி இருக்கிறாள் என்று புரியாமல் பிரபா ரொம்பவே குழம்பி போனான். 

அவனுக்கு வேண்டிய விஷயங்களை பார்த்து பார்த்து கவனமாக செய்யும் ஜெயா அவனிடம் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தாள். அவனாக வந்து பேசினாலும் அவள் மெளனமாக இருக்க அவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் சிந்தனையுடனே இருந்தான்.

என்னதான் அவன் சிந்தித்தாலும் தன் பக்கம் என்ன தவறு? என்று புரியாமல் அவன் குழப்பத்தில் இருக்க நாட்கள் சென்றது. தினமும் இருவரும் சேர்ந்தே அலுவலகம் சென்று மீண்டும் வீட்டிற்கு திரும்பினர். அவள் செய்ய வேண்டிய வேலைகளை முடித்து மெயில் பண்ணிவிட்டு அவள் மௌனமாகவே இருந்தாள்.

கிட்டதட்ட ஒரு வாரமாக தன்னுடன் பேசாமல் இருந்தவளைப் பார்த்து, அவனின்  பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக குறையும் நேரத்தில், அவள் எதிர்பாராத செயல் ஒன்றை செய்தான் பிரபா. அது ஜெயாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

அன்று காலையில் ஒரு முக்கியமான மீட்டிங் இருக்க வழக்கமான நேரத்தைவிட பிரபா கொஞ்சம் முன்னாடியே கிளம்பிவிட ஜெயா அப்பொழுதுதான் சமையலை முடித்துவிட்டு அறைக்குள் நுழைந்தாள்.

அவளை பார்த்தும், “ஜெயா அந்த அலைமாரியில் ஒரு யெல்லோ கலர் ஃபைல் இருக்கும் கொஞ்சம் எடு” என்று கேட்டான்..

அவளோ அவன் சொன்னதை காதில் வாங்காமல் அலைமாரியைத் திறந்து சேலையை எடுத்துகொண்டு குளியலறைக்குள் சென்று மறைந்தாள். அவளின் நடவடிக்கைகளை கவனித்த பிரபாவிற்கு கோபம் வந்தது.

‘எவ்வளவு பெரிய தவறு செய்துட்டு வந்தப்போ கூட என்னிடம் பேசினாள். இப்போ காரணமே இல்லாமல் என்னை ரொம்ப தண்டிக்கிற ராட்சசி..’ என்றவன் அந்த ஃபைலை எடுக்க அலைமாரியைத் திறந்தான். 

அவன் பைலை தேடி எடுத்துவிட்டு திரும்ப சில பைல்கள் கீழே விழுக, “இந்த நேரத்தில் இது வேற” என்றவன் பைகளை கையில் எடுத்தான்.

அப்பொழுது கீழே கிடந்த கவிதை புத்தகத்தைப் பார்த்தும், “என்னோட கவிதை புத்தகம் இங்கே எப்படி?” என்ற கேள்வியுடன் அந்த புத்தகத்தை கையில் எடுத்து புரட்டினான்..

அப்பொழுது கடைசி பக்கத்தில் இருந்த அவனின் கையெழுத்து அவனின் விழிகளில் விழுந்து கருத்தில் பதிந்தது. கிட்டதட்ட பத்து வருடங்களாக அந்த புத்தகம் யாரின் கைக்கு சென்றது என்ற குழப்பத்துடன் இருந்திருக்கிறான். இத்தனை வருடங்கள் சென்ற பின்னரும் அந்த புத்தகம் மட்டும் யாரின் கைக்கு சென்றது என்று தெரியாமல் பல நாட்கள் தூங்காமலே இருந்திருக்கிறான்.

அந்த புத்தகம் இப்பொழுது அவனின் அறையில் கிடைக்க அது யாரிடம் இதுவரை இருந்தது என்று உணர்ந்தும் அவனையும் அறியாமல் அவனின் உடல் சிலிர்த்து அடங்கியது.. 

அவனின் கவிதைக்கு கீழே நானும் உனக்காக காத்திருக்கிறேன் என்ற அவளின் கையேழுத்து பார்த்ததும், ‘பனிமலர்’ என்று அவளின் பெயரை அவன் ஆழ்மனதில் உச்சரிக்க, அவனின் முகம் பிரகாசமாக மாறிவிட்டது. 

அவனின் இதழ்கள் புன்னகையில் விரிய கண்மூடி அந்த ஏகாந்த நேரத்தை ரசிக்க குளியலறை கதவு திறக்கும் சத்தம்கேட்டு திரும்பினான் பிரபா. சிவப்பு வண்ணத்தில் கோல்ட் கலர் எம்ராடிங் டிசைனர் சாரியில் எழில் ஓவியமாக கண்ணாடி முன்னாடி நின்று தலை கோதிக் கொண்டிருந்தாள் ஜெயா. 

அந்த புடவை அவளின் அழகிற்கு அழகு சேர்க்க அவளின் நிறத்திற்கு அது எடுப்பாக இருக்க பிரபாவின் பார்வையில் ரசனை கூடியது. கிட்டதட்ட இந்த நான்கு மாதத்தில் அவளோடு ஒரே அறையில் இருந்த பொழுது கூட அவனின் பார்வை எல்லை மீறியது கிடைக்காது..

தன் மீது தவறு என்று தன்னையே கட்டுபடுத்திக்கொண்டு இருந்தான் பிரபா. அந்த தடைகள் எல்லாம் விலகிய பிறகும் அவளிடம் உண்மையைச் சொல்லி அவளின் காதலை கடன் வாங்க அவனின் மனம் இடம்தராமல் இருக்க அவளின் மனம் மாற்றத்திற்காக காத்திருந்தான்..

அவனின் எதிர்ப்பார்ப்புகள் எல்லாம் பொய்யாக போக ஜெயா காரணமே இல்லாமல் அவனைவிட்டு விலகி இருக்க அது அவனின் மனதை பாதித்தது. எதிர்பாராத விதமாக அந்த புத்தகம் அவனின் கையில் கிடைக்க மற்றது எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட அவனின் காதல் மனம் சிறகில்லாமல் வானத்தில் பிறந்தது..

அவனுக்கு ரொம்ப பிடித்த பாடல் ஒன்றை ஹம்மிங் செய்த வண்ணம் அவளை நெருங்கியவன், “ஏய் மொசக்குட்டி..” என்று அவளின் பின்னோடு சென்று இடையோடு கைகொடுத்து இறுக்கியணைத்துக் கொண்டான்..

“பிரபா விடுங்க” அவள் அவனின் கையை விலக்கிவிட, “முடியாது மொசக்குட்டி” என்று அவளின் கூந்தலில் வாசம்பிடித்தவன் கண்ணாடி வழியாக அவளின் முகத்தை ரசிக்க அவளோ அவனை முறைத்தாள்..

“என்னடி முறைக்கிற..” அவன் அவளை வம்பிற்கு இழுக்க, “முதலில் கையை எடுங்க..” என்றவள் இடையோடு பதிந்த அவனின் கரங்களை விலக்கிவிட்டு நகர்ந்தாள்.

அவளின் கையை பிடித்து இழுத்து சுவரோடு சேர்த்து நிறுத்திய பிரபாவின் விழிகள் அவளின் விழிகளை ஊடுவிச் செல்ல இமைகளை தாழ்த்தி மௌனமானாள் பெண்ணவள்..

“பனிமலர் எனக்காக பத்து வருடம் காத்திருந்தாயா?” என்ற கேள்வியில் வெடுக்கென்று நிமிர்ந்த ஜெயா அவனின் முகம் பார்த்தாள்.

“ஓ மேடம் மெளனமாக இருக்க இதுதான் காரணமோ?” என்று முகத்தின் முன்னாடி விழுந்த கற்றை முடியை அவளின் காதோரம் ஒதுக்கிவிட்டு, “ஸாரி..” என்றவன் அவள் எதிர்பாராத நேரத்தில் அவளின் இதழோடு இதழ் பொருத்தினான்..

அவளின் விழிகள் அதிர்ச்சியுடன் விரிய சிலநொடிகள் அவளின் இதழ் முத்தம் நீடித்தது.. பிறகு மெல்ல அவளைவிட்டு விலகிய பிரபா, “மொசக்குட்டி..” என்று அவன் செல்ல பெயர் வைத்து அழைக்க அவளின் கன்னங்கள் வெக்கத்தில் சிவக்க அவனின் பார்வையில் ரசனை கூடியது..

அவனின் பார்வை தன் மீது படிய, “ச்சீ போடா” என்றவள் வெக்கத்துடன் அவனின் மார்பில் புதைய, “ஸாரிடி மொசக்குட்டி” என்று அவளை அணைத்துக்கொண்டான் பிரபா..

அவள் மேலும் அவனுக்குள் புதைய, “நான் தப்பு பண்ணிருப்பேன் என்று நினைக்கிறாயா பனிமலர்” ஆழ்ந்த குரலில் அவன் கேட்டான்.

உடனே வெடுக்கென்று நிமிர்ந்த ஜெயா அவனின் விழிகளை நேருக்கு நேர் சந்தித்து, “நான்கு மாசமாக இதே அறையில் நம்ம இருவரும் இருக்கோம். உன்னோட மனைவி நான். இதுவரை நீ என்னை தப்பான பார்வை பார்த்தது இல்ல..” என்று நிறுத்திவிட்டு அவனின் முகம் பார்த்தாள்..

“ம்ம் சொல்லு..” என்று அவன் மேலும் தூண்டிவிட, “ஆனால் திருச்சி போயிட்டு வந்த பிறகு உன்னை நான் பழைய பிரபாவாக உணர்கிறேன். அப்போ இடப்பட்ட நாளில் உனக்கு ஏதோ உண்மை தெரிஞ்சிருக்கு..” என்றதும் அவனின் பார்வையில் மின்னல் வந்து போனது..

“ம்ம் பரவல்ல.. கொஞ்சம் உண்மை எல்லாம் கண்டிபிடிப்ப போல” என்றவன் கள்ளச்சிரிப்புடன் சொல்ல, “நீ என்னிடம் பொய் சொல்ற. நீ பொய்தான் சொல்கிறாயா என்று சீக்கிரமே கண்டுப்பிடிக்கிறேன்.” என்று அவள் சவால் விட்டாள்.. 

“ம்ம் கண்டுபிடி கண்டுபிடி..” என்றவன் அவளை மீண்டும் இழுத்து அணைத்து, “ஏய் பேசாமல் இருக்காதே. உன்னிடம் பேசாமல் என்னால இருக்க முடியலடி. சோ சண்டை போட்டாலும் என்னோடு பேசு. இப்படி மௌனமாக இருந்து உயிரை வாங்கதே..” என்று அவளின் காதோரம் கூறி அவளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

அவள் மீண்டும் மெளனமாக இருக்க, “ஜெயா.” என்று அவளை அதட்டினான் பிரபா.

“பனிமலர் என்ற பெயருக்கு நான் பிக்ஸ் ஆக்கிட்டேன் பிரபா. சோ இனிமேல் நீ ஜெயா என்று கூப்பிட்ட என் காது கேட்காது..” அவள் குறும்புடன் கண்ணடிக்க, “சரிடி மொசக்குட்டி. ஆபீஸ் லேட் ஆகுது. நான் கிளம்பறேன்..” என்றவன் புன்னகையுடன் அவளைவிட்டு விலகி நின்று அவளை ரசித்தான்..

அவள் அணிந்திருந்த சேலை அவளின் அழகிற்கு இன்னும் அழகு சேர்க்க, “இந்த சாரீ சூப்பர்டி” என்று கண்ணடித்துவிட்டு மணியைப் பார்த்த பிரபா, “ஓ காட் டைம் ஆகிருச்சு. நான் கிளம்பறேன் பனிமலர். இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு..” அவன் ஃபைலை எடுத்துகொண்டு கிளம்பினான்..

அவனுக்கு தேவையானவற்றை எடுத்து கொடுத்தாள். பிறகு அவள் கிளம்பி ஆபீஸிற்கு சென்றாள்.. அன்று முழுவதும் பிரபா மும்பரமாக வேலை செய்ய, “என்ன பாஸ் ரொம்ப பிஸியா?” கிண்டலடித்தாள் ஜெயா..

அவனோ நிமிர்ந்து அவளை முறைத்துவிட்டு மீண்டும் அவன் வேலையை கவனிக்க அடுத்த ஒரு வாரம் முழுவதும், வீட்டிற்கு கூட வராமல் கண்விழித்து வேலை பார்த்தான் பிரபா.

முக்கியமான ப்ராஜெக்ட் முடிந்தும் தான் அவனால் மூச்சுவிடவே முடிந்தது. அன்று இரவு வீடு திரும்பிய பிரபா நேராக அவனின் அறைக்கு சென்று படுக்கையில் விழுந்தான். ஜெயா என்றும் இல்லாமல் அன்று நேரத்திலேயே உறங்கிவிடவே அவன் வந்து விழுந்த வேகத்தில் அவளின் தூக்கம் களைந்துவிட்டது.

அதன்பிறகு தூக்கம் வராமல் போகவே அவள் விழித்த வண்ணம் அவளின் அருகிலேயே படுத்திருக்க அவனிடம் துளி அசைவில்லை. அவன் சீரான உறக்கத்தில் இருக்க அவனின் மார்பு ஏறி இறங்கியது.

தன்னையும் அறியாமல் தனது பார்வையை அவனின் மீது நிலைக்கவிட்டாள். என்றும் இல்லாத அளவில் அவனின் முகத்தில்  வசீகரத்தை அவளின் பார்வையில் சுவாரசியத்தை கூட்டிட்ட அவனையே இமைக்காமல் பார்த்துகொண்டிருந்தாள் ஜெயா..

அவளையும் அறியாமல் உறங்கிவிட, “ஏய் மொசக்குட்டி எழுந்திரி..” என்று அவளின் காதோரம் அவனின் குரல் கேட்க, “ஏய் போ. நான் தூங்கனும்..” என்றவள் திரும்பிப் படுத்துக்கொண்டாள்..

அவளை சிலநொடி ஆழ்ந்து பார்த்த பிரபா அருகில் இருந்த தண்ணீரை எடுத்து அவளின் முகத்தில் ஊத்த, “ஐயோ..” என்ற அலறலுடன் எழுந்தமர்ந்தவளைப் பார்த்து, “ஹா ஹா ஹா” வாய்விட்டு சிரித்தான் பிரபா.. 

அவனை கோபத்துடன் முறைத்துவிட்டு, “ஏண்டா தூங்கவிடாமல் தண்ணீ ஊத்தி எழுப்பற..” என்று தலையணையை எடுத்து அடிக்க, “ஏய் அடிக்கதடி..” என்றவன் அவளைவிட்டு  

“ஏய் சீக்கிரம் கிளம்பு. இன்னும் ஒன் ஹௌர்ல பிளைட். பொண்டாட்டியை கொஞ்சி கொஞ்சி எழுப்ப எனக்கும் ஆசைதான். ஆனால் இப்போ நேரம் இல்லையே. சீக்கிரம் மலர். ஏற்கனவே லேட்..” என்றவன் தயாரி நின்றிருப்பதை கவனித்தாள்.. 

அவள் கடிக்காரத்தைப் பார்க்க நேரம் பதினோரு மணியை கடந்து செல்ல, “இந்தநேரத்தில் எங்கே கிளம்ப சொல்ற” என்று அவள் சிணுங்க, “பன்னிரண்டு மணிக்கு பிளைட். சீக்கிரம் மலர். நான் ரெடி.” என்றவனை முறைத்தவள், “சரி புலம்பாதே. காது அடிக்குது” என்று எழுந்து குளிக்க சென்றாள்.

அவள் அடுத்த அரைமணிநேரத்தில் தயாராகிவிட, “சோ ஸ்வீட்.” என்றவன், “வா வா..” என்று அவளை இழுத்துக்கொண்டு வேகமாக படிபடிகளில் இறங்கினான் பிரபா.

“நடுராத்திரில உன்னோட அல்சாட்டியம் அதிகமாக இருக்குடா..” சிணுங்கியவளை முறைத்த பிரபா, “பரவல்ல காரில் ஏறு..” என்று அதட்டிவிட்டு மறுபக்கம் காரில் ஏறியமர்ந்து காரை எடுத்தான்..

அடுத்த அரைமணிநேரத்தில் அவர்கள் ஏர்போர்ட் செல்ல, “பிரபா இங்கே..” அவள் இழுக்க, “அதெல்லாம் சொல்றேன்..” என்றவன் செக்கிங் எல்லாம் முடித்துவிட்டு கிளம்பினர்.

பிளைட் ஏறியதும், “பிரபா தூக்கம் வருது..” என்றவள் அவனின் தோளில் சாய்ந்து உறங்கிவிட, “சரி தூங்கு..” அவனும் அவளுடன் சேர்ந்து உறங்கினான்.

அவன் எங்கே அழைத்து செல்கிறான் என்று தெரியாமல் அவள் நிம்மதியாக உறங்கினாள். மறுநாள் அவள் சந்திக்க போகும் நபரால் அவளின் உலகமே தலைகீழாக மாறுமா..? மலருமா..?  

 

error: Content is protected !!