emv16c

emv16c

எனை மீட்க வருவாயா! – 16C

 

தனிமையில், திவ்யாவின் மடியில் படுத்தபடி பேசுவது, அவளிடம் அனுமதி கேட்டு அணைத்து விடுவிப்பது என ஜெகன் அவனது பேராசைகளுக்கு இடையே, தனது சின்னச் சின்ன ஏக்கங்களைத் தணித்துக் கொண்டிருந்தான்.

தர்மசங்கடமாய் இருந்தாலும், அவனது அடுத்தகட்ட எதிர்பார்ப்புகள் புரிய, “கொஞ்சம் டைம் குடுங்க” என ஒவ்வொரு முறையும் கணவனை ஒரு நிலைக்குமேல் தவிர்த்தாள் திவ்யா.

குழாய் நீரில் பாத்திரங்களை கழுவி பழகியவளை, வேண்டிய நீரை அவளே கண்மாய் அல்லது குளத்தில் இருந்து எடுத்து வந்து கழுவ வேண்டிய நிலை. எல்லாம் புதிது.  நேரம், வீட்டு வேலைகளிலேயே அவளை முழுமையாக ஆட்கொண்டிருந்தது.

கரி பாத்திரங்கள் தேய்க்கத் தேய்க்க, அவளின் விரல்கள், கைப்பகுதி அனைத்தும் கருமை பூசினாற்போல மாறத் துவங்கியிருந்தது.

கையில் இருந்த மென்மை தொலையத் துவங்க, வருத்தம் மேலிட தாயிடம் ஒருமுறை அதைப்பற்றிக் கூறினாள்.

தினசரி ஈஸ்வரி, மகளுக்கு அலைபேசியில் பேசிவிடுவார். அவர் கேட்கும் வினாக்களுக்கு பதில். கூடுதல் நேரம் பேசினாலும், காளியம்மாள் முணுமுணுக்கத் துவங்கிவிடுவார்.

ஆகையினால், ‘வேலை இருக்குமா’ என சட்டென அழைப்பைத் துண்டிக்குமாறு தாயிடம் கூறிவிடுவாள்.

அருண் சென்னைக்கு கிளம்பிச் செல்லும்வரை, காளியம்மாள் துவங்கும் பிரச்சனைகள் விரைவாய் முடிவுக்கு வந்தது.  ஆனால் அவன் சென்றபின் அது தொடர்ந்ததே அன்றி.  முற்றுப் பெறவில்லை.

ஜெகன் தனிமையில் அவளிடம், தேனாய் பேசி, மெழுகாய் உருகினாலும், தாயிடம் மனைவிக்காக இதுவரை ஒரு வார்த்தை பேசினானில்லை.

புதிய உலகத்தில் சஞ்சரித்தவளுக்கு, சொல்ல இயலாத புதுப்புது பிரச்சனைகள் முளைத்திருந்தது.

பசிக்கு, வேண்டிய நேரத்தில் உணவு உண்ண இயலாத உரிமையற்ற தயக்க நிலை. 

குளிக்க ஏதுவாய் குளியலறை இல்லாமல், அவசர அவசரமாய் மறைப்பில் அறைகுறையாய் திருப்தியில்லாமல் குளிப்பது.  கழிப்பறை வசதி இல்லாததால், அதிகாலையில் எழுந்து புறப்பகுதியில் காலைக் கடனைக் கழிக்கச் செல்வது. 

கணவனிடமும் தனது ஆதங்கத்தைத் தெரிவித்தாள்.  ஜெகனோ அமைதி காத்தான்.  அவனது மனதில் இருந்ததை அவளிடம் கூறவே இல்லை.

சோர்வு வந்தாலும் படுக்க இயலாத சூழல்.

பசித்து உணவைத் தட்டில் எடுத்து வந்தாலும், காளி அவர்களின் வீட்டு சுவரில் மாட்டியிருக்கும், திவ்யா ஜெகன் திருமணப் பரிசாய் வந்த சுவர் கடிகாரத்தை எட்டிப் பார்த்ததும், பசியே சென்றுவிடும் உணர்வு திவ்யாவிற்கு.

“அதுக்குள்ளயே பசிச்சிருச்சா” என்கிற கேள்வியில் எடுத்து வந்ததை சாப்பிடலாமா இல்லை அதை அப்படியே ஊறத் தொட்டியில்(மாட்டிற்கு, இரை வைக்கும் தொட்டி) கொட்டிவிடலாமா என்கிற எண்ணம் அவ்வப்போது திவ்யாவிற்கு எழும்.

இதனால் உடலில் மெலிவு வந்திருந்தது. 

மூன்று வேளைக்கும் சாதம். வீட்டில் இருந்தவரை, காலையில் சிற்றுண்டி, மதியம் சாதம், இரவு சிற்றுண்டி என உண்டவளுக்கு, மூன்று வேளைக்கும் சாதம் என்றதும் உண்ணவே பிடிக்கவில்லை. 

டிவி இருந்தாலும், காளியம்மாள் எந்த சானல்  வைத்துப் பார்க்கிறாரோ அதைத்தவிர தனது விருப்பத்திற்கு எதுவும் மாற்ற இயலாத நிலை.

முன்பெல்லாம் பகலில் ஆடுகளை மேய்க்கச் செல்லும் காளி, திவ்யவோடு போட்டி போட்டுக்கொண்டு, வீரத்தை ஆடு மேய்க்க அனுப்பிவிட்டு, மருமகளோடு பொழுதைக் கழித்தார்.

ஜெகனும் திருமணமான ஒரே வாரத்தில் வேலைக்குச் செல்லத் துவங்கியிருந்தான்.  ஆகையால் பகலில் பொழுதை நெட்டித்தள்ள மிகவும் சிரமமாய் உணர்ந்தாள் திவ்யா

வேலைக்குச் சென்று திரும்பியவனுக்கு, வாங்கி வந்த கூலியை யாரிடம் கொடுப்பது என்கிற தடுமாற்றம்.

அறுநூறு ரூபாயில், முன்னூறை தாயிடம் தந்தவன், மீதியை மனைவியிடம் கொடுத்தான்.

காளி புரியாமல் மகனை நோக்க, “அதை வச்சிக்கோம்மா.  எனக்கும் கையில கொஞ்சம் பணம் வேணுமில்ல” என்றபடி அகன்றிருந்தான்.

திவ்யாவோ பதறி, “இது எங்கிட்ட குடுத்தது தெரிஞ்சா, அப்பத்தா எங்கிட்ட சண்டைக்கு வருவாங்க.  எனக்கு வேணாம்” என மறுக்க

“ஷ்… பேசாம வாங்கி பீரோவுல வை” எனக் கூறிவிட்டு அகன்றிருந்தான்.

திவ்யாவைக் கண்காணிப்பதையே முழுநேர வேலையாக மாற்றியிருந்தார் காளியம்மாள்.

வீரத்திடமும் மகனைப் பற்றிக் கூறினார் காளி.

அவர் சிரித்துக் கொண்டோரே அன்றி, பதில் எதுவும் பேசினாரில்லை.

……………………..

மாமியார் வீட்டின் தடாலடி மாற்றங்களின் காரணமாக, அதனைச் சமாளிக்க இயலாதவளால், அவளுக்கு ஏதுவான, பிடித்த, சந்தோசமான பொழுதாக ஜெகனோடு இருக்கும் தருணங்கள் மாறத் துவங்கியிருந்தது.

ஜெகன் மாலையில் வீடு திரும்பியது முதல் அறைக்குள் வரும்வரை அதே சங்கடங்கள் தொடரும்.

எதற்கெடுத்தாலும், “செகனு…” என அழைத்து, சேதி சொல்லும் அப்பத்தாவையே வெறுத்தாள் திவ்யா.

‘இப்பத்தான் வந்தாங்க… அதுக்குள்ள என்னவாம்’ என்பதாக திவ்யா எண்ணுமளவிற்கு தம்பதியர் இடையே ஒருவர் அண்மையை மற்றொருவர் நாடினர்.

ஜெகனோ, எதுவும் பேசாமல் தாயின் அழைப்பிற்கு எழுந்து சென்று, காளியம்மாளை, வீரத்தோடு வாகாய் பேச்சில் கோர்த்துவிட்டபின், எழுந்து மனைவிடம் வருவான்.

ஆனாலும், அவனது எண்ணத்தை மனைவியோடு வருத்தமாகவோ, தனது செயலைக் கூறி புகழ்ச்சியாகவோ காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருப்பான்.

மனைவி தன்னை ஏற்றுக் கொள்ளப்போகும் நன்நாளிற்காக மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறான்.

அறைக்குள் வருபவன், “திவ்யா..” எனத் துவங்கி அன்றைய தினத்தில் தான் வெளியே சென்றது முதல், திரும்பியது வரை எதையும் மறைக்காமல் ஒப்பித்துவிட்டு, “இன்னிக்கு உனக்கெப்படி போச்சு திவ்யா” என மனைவியிடம் இன்முகமாய் அனைத்தையும் கேட்டறிந்து கொள்வான்.

தாயைப்பற்றி மனைவி கூறினாலும் கேட்டுக்கொண்டானே அன்றி, அதைப்பற்றி தாயிடம் கேட்பதில்லை.  ரெண்டு நாள் இதனைக் கவனித்தவள், எதையும் மறைக்காமல் மனதில் தோன்றுவதை கணவனிடம் இறக்கி வைத்து, தனது மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளத் துவங்கினாள்.

………………………………..

மாதம் ஒன்று கடந்திருந்தது.

இருவருக்கிடையே கிண்டல், கேலிப் பேச்சுகள் இலகுவாய் வந்தது.

“என்னங்க..” என அழைத்துப் பேசத் துவங்கியிருந்தாள் தற்போது.

“சொல்லுங்கங்க பொண்டாட்டி” கிண்டல் செய்தான் ஜெகன்

“கிண்டல் பண்றீங்க..” கொஞ்சும் குரலில் சிணுங்கியவளிடம்

“கிண்டல், கேலி எல்லாம் உன்னைத் தவிர வேற யாரையும் பண்ணா, பிரச்சனையாப் போயிரும்லடா லட்டு குட்டி. சரி நீ சொல்ல வந்ததைச் சொல்லு”

“அது.. ரிசல்ட் இன்னும் ஒன் மன்த்ல வந்திரும்.  பீஜிக்கு நான் அப்ளை பண்ணறதுக்குத்தான் உங்ககிட்ட கேக்கலாம்னு” என இழுத்தாள்.

“இங்க இருந்து பக்கத்துல எதுவும் காலேஜ் இல்லையே” யோசித்தபடியே கூறினான்.

“ஹாஸ்டல்லனா விடுங்களேன்” சட்டென திவ்யா கூற

“என்னாது” என அவள் மடியில் தலைவைத்துப் படுத்திருந்தவன், பதறி எழுந்திருந்தான்.

“ஏய்.. என்ன நினைச்சிப் பேசிட்டுருக்க!”

“இல்ல, அப்பத்தா இன்னும் நீங்க இரண்டு மாசத்துல வெளிநாடு போயிருவீங்கன்னு சொன்னாங்க.  அதான்!”

“யாரு எங்கம்மாவா!  அதுபாட்டுக்கு அது சொல்லிக்கிட்டே இருக்கட்டும்.  என் லட்டுக் குட்டிய விட்டுட்டு இனி  நான் எங்கேயும் போற மாதிரி ஐடியா இல்ல!” என தாடையைப் பிடித்து மனைவியைக் கொஞ்சியவன், அவளை அணைத்துக் கொண்டான்.

அதில் அவனது ஏக்கங்கள் பெண்ணுக்குப் புரிந்தது. ஆனாலும் அவனது அணைப்பை விட்டு மெதுவாய் விலகியவள்,

“சாரிங்க… நான் உங்களை ரொம்ப நாள் தள்ளி வச்சி, கஷ்டப்படுத்தறேனா?” தலைகுனிந்தபடியே கேட்டாள்.

“கஷ்டந்தான்! இல்லைனு எல்லாம் பொய் சொல்ல மாட்டேன்.  ஆனா மனசுல ஒருத்தனை வச்சிருக்கும்போது, நான் உங்கிட்ட நெருங்கினா அருவருப்புதான் மிஞ்சும் உனக்கு.  அது நல்லாயிருக்காதுன்னுதான நீ மாறி வரவரை வயிட் பண்றேன்”

“அய்யோ.. எப்ப அவன் என்னைத் தெரியாதுனு சொன்னானோ அப்பவே அவனை எம்மனசுல இருந்து தூக்கி வீசிட்டேங்க!”

“இதை ஏன் இத்தனை நாளா எங்கிட்ட சொல்லவே இல்லை” என ஆசையோடு மனைவியை இழுத்தணைத்து, முகமெங்கும் முத்தங்களால் அர்ச்சனை செய்தான்.

வலுக்காட்டமாய் கணவனிடமிருந்து விலகியவள், “ஆனா…” எனத் தயங்க

தான் அவசரப்பட்டுவிட்டோமோ என எண்ணியவன், “என்ன… ஆனா…” என அவளின் முகத்தைச் சங்கடமாய்ப் பார்த்திருந்தான்.

“நீங்க இவ்ளோ நல்லவங்களா இருக்கீங்களா…! உங்களுக்கு நான் ஏத்தவ இல்லையோன்னு மனசுல தோணுதுங்க!” கமறலான குரலில் இயம்ப

“ஏய்… எதுக்கு இப்டியெல்லாம் லூசு மாதிரி யோசிக்கற!”

“உண்மைதான..! என்னதான் இருந்தாலும், நான் தப்பு பண்ணிட்டேன்தான!”

“அப்ப நானும்தான தப்பு பண்ணேன்”

“அது வேற… இது வேற”

“என்ன வேற…”

“நீங்க அந்தப் பொண்ணுகிட்ட நேருல பேசினதுகூட இல்லைன்னு சொன்னீங்க”

“அதுக்கென்ன… நீ பேசியிருக்க… அவ்ளோதான!”

“…” அவனது கேள்வியில் தலையை மட்டும் அசைத்து ஆமோதித்தவளுக்குள், மிகவும் தர்மசங்கடமான உணர்வுகள்.

“காதல் பண்றதுல்லாம் தப்பு இல்ல லட்டும்மா.  ஆனா அதுக்கு மேல போனாத்தான் தப்பு!”

என்ன சொல்வாள் திவ்யா.  எனக்கு முத்தங்களை அறிமுகம் செய்தவனே அவன்தான் என்றா கூற முடியும்.  அதுவும் கணவனிடத்து.

“இருந்தாலும், நான் பியூர் ஹாட்டா இல்லாமப் போயிட்டேனேன்னு ரொம்பக் கில்டியா ஃபீல் ஆகுதுங்க.  அந்த நினைப்பு வந்ததும், நீங்க கிட்ட வந்தாலும், அவாய்ட் பண்றேன்” அழுகையோடு கூறினாள்.

“இல்லடா லட்டு.  அதுக்கு நீ இப்டியெல்லாம் நினைச்சு அழுகாத. இனி நாம ரெண்டு பேரும் லவ் பண்ணுவோமாம். அப்ப பியூர் ஹாட்டாகிரலாம்” என அவனுக்குத் தெரிந்ததைக் கூறி சமாளித்தான் ஜெகன்.

அதை மீறி அழுகின்றவளை, தனது மார்புக்குள் இழுத்து அணைத்து ஆறுதல்படுத்தினான்.

“முன்னாடியே உங்களைப் பாத்து, லவ் பண்ணிருக்கலாம்னு இப்பத் தோணுது” அழுதபடியே கூறினாள்.

“இப்ப என்ன கெட்டுப் போச்சு.  இனி பண்ணு”

“என்னைவிட நல்ல பொண்ணாப் பாத்து உங்களுக்கு கட்டி வைக்கவா”

“ஏண்டி உனக்கு என்னாச்சி.  என்னைய விட்டு நீ போனா நான் அவ்ளோதான். அது புரியாம வேற பொண்ணு பாக்கப் போறேங்கற”

“நான் பண்ணது தப்புத்தான.  அதான்” என மீண்டும் தனது நிலையில் நிற்க

“சேச்சே… அப்டியெல்லாம் நீ எந்தத் தப்பும் பண்ணிருக்க மாட்ட.  அறியாம ஆசைய வளத்துட்ட.  அவன் அதுக்கு தகுதியில்லன்னு தெரிஞ்சதும் விலகிட்ட.  அதுக்குப் போயி உன்னை நீயே கீழ யோசிக்கக் கூடாதுடா” என முதுகில் தட்டி ஆறுதல் கூறியவன்

“என்னோட லட்டுக்காக நான் காத்திருக்கேன்.  அதுகூட சந்தோசமாத்தான் இருக்கு.  என்ன… சீக்கிரமா சரியாகிட்டா நல்லாருக்கும்னு எதிர்பார்ப்போட ஒவ்வொரு நாளையும் கடத்துறதுகூட ஒரு புதுவிதமான சுகமாத்தான் இருக்கு” என்றான்.

தன்னை பழைய நிகழ்வுகளின் கரையிலிருந்து மீட்க முயலும் கணவனை, தனது கரங்களால் அன்போடு அணைப்பதே பாவம் என இன்னும் கூனிக் குறுகியிருப்பவளை எவ்வாறு மீட்பான்… ஜெகன்.

………………………………

Leave a Reply

error: Content is protected !!