En Jeevan neyadi 3

3
எட்டையபுரம் ஒரு சிற்றூர்தான். பெரிதாக எந்த வசதிகளும் இன்றி ஒரு கிராமத்துக்குண்டான இலக்கணத்தோடு இருக்கும் ஊர் அது. வறண்ட வானம் பார்த்த பூமியாதலால் விவசாய வேலைகளுக்குச் சற்று பஞ்சம்தான்.

பெரும்பாலான மக்கள் தீப்பெட்டித் தொழிற்சாலைக்கும் பட்டாசு கம்பெனிக்கும், கோவில்பட்டி வட்டாரத்தில் புகழ்பெற்ற கடலைமிட்டாய் போன்ற பலவகை மிட்டாய் தயாரிக்கும் சிறுசிறு கம்பெனிக்கும் வேலைக்குதான் செல்வர்.

வேறு பெரிதாக வருவாய் ஆதாரம் எதுவும் இல்லாத சிற்றூர் அது. தொடக்கக் கல்வி வரை உள்ளூரிலே படித்த சுபத்ரா. உயர்கல்வி பள்ளி வகுப்புகளை அண்டையில் உள்ள ஒரு ஊரில் முடித்தாள்.

கல்லூரிப் படிப்பை கோவில்பட்டியில் உள்ள பெண்கள் கல்லூரியில் முடித்தவள், தனது தாயின் உடல்நிலை சீர்கெடவும் குடும்ப சூழ்நிலை உணர்ந்து எட்டையபுரத்திலே இருந்த சிறிய அளவிலான ஒரு மிட்டாய் கம்பெனிக்கு கணக்கு எழுதும் வேலைக்கு சென்றாள்.

சொற்ப வருமானத்தில் வாடகைக்கும் சாப்பாட்டுக்குமே சிரமப்படும் போது, தாய்க்கு வைத்தியம் பார்க்க எங்கணம் முடியும்? தான் வேலை செய்த கம்பெனியின் முதலாளியான ராஜேந்திரனிடம் சிறுகச் சிறுக வாங்கிய கடன் வட்டியோடு உயர்ந்து நான்கு லட்சத்தை எட்டியிருந்தது.

கடனுக்காக காலமெல்லாம் அடிமையாக உழைக்கவும் அவள் தயாராகத்தான் இருந்தாள். ஆனால் அந்த ராஜேந்திரன் அவளிடம் பணத்தைவிட அவளின் இளமையையும் அழகையும் எதிர்பார்க்க, மிகுந்த வெறுப்போடு வேலையை விட்டு நின்றிருந்தாள்.

தாயின் உடல்நிலை மிகுந்த மோசமான நிலையை அடையவும், அவரிடமும் அவனைப் பற்றி ஏதும் சொல்ல முடியவில்லை அவளால். இதோ அவளுடைய தாயின் இறப்பைப் பற்றிக் கேள்விப்பட்டதும் வாங்கிய பணத்துக்காக வாசலில் வந்து நிற்கிறான்.

அந்த ஊரில் பலரும் அவசரத் தேவைக்கென்றால் அவனிடம் பணம் வாங்குவது இயல்புதான். வட்டி அதிகமாக இருந்தாலும் கேட்டவுடன் பணம் கிடைக்கும் என்பதால் அவனிடமே வாங்கிக் கொள்வர்.

ஒழுங்காக பணத்தைத் திருப்பித் தந்துவிட்டால் பிரச்சனை இல்லை. அப்படித் தரமுடியாத பட்சத்தில் அவர்களிடமிருந்து நிலத்தையோ வீட்டையோ, அதற்கு ஈடாகப் பிடுங்கிக் கொள்வான்.

பணம் கொடுக்கும்முன் வாங்குபவரிடம் என்ன சொத்துக்கள் இருக்கிறது என்பதைக் கணக்கிட்டுதான் அவன் பணம் கொடுப்பதும். அவர்களால் கட்ட முடியாத சூழல் வரும் வரை அமைதியாக இருந்து, பின்னர் கொடுத்த பணத்துக்கு ஈடான மதிப்புள்ள சொத்தை தனது பெயருக்கு மாற்றிக் கொள்வான்.

இது பலருக்கும் தெரிந்தாலும் அந்தச் சிற்றூரில் அவசரத்துக்கு அவனை விட்டால் பணம் தருபவர் ஒருவரும் இல்லை. சுபத்ராவுக்கும் இவையெல்லாம் நன்கு தெரியும்தான்.

ஆனால் தாயின் உடல்நிலை அந்த நேரத்தில் வேறு எதையும் அவளைச் சிந்திக்க விடவில்லை. காலமெல்லாம் அவனது கம்பெனியில் உழைத்தாவது பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்று எண்ணி இருந்தாள்.

ஆனால் இராஜேந்திரன் சுபத்ராவைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டே அவளுக்குப் பணம் கொடுத்தான். ஆதரவற்ற பெண். நோயாளித் தாய் மட்டுமே துணை.

சொந்தம் பந்தம் என்று ஒருவரும் இல்லை. கேட்பதற்கு ஆளில்லை என்பதே அவளிடம் அவன் அத்துமீறி நடக்கக் காரணமாய் இருந்தது.
பணத்தையும் தன்னிடம் கைநீட்டி வாங்கியிருக்கிறாள், தன்னைமீறி அவளால் ஏதும் செய்ய முடியாது என்று எண்ணியே அவளிடம் வாலாட்டியது. ஆனால் அவள் வேலையை விட்டு நிற்பாள் என்பது அவன் எதிர்பார்க்காதது. வளைந்து போவாள் என்று எண்ணியிருந்தான்.

சரியான சந்தர்ப்பம் வரக் காத்திருந்தவன், அவளுடைய தாயின் இறுதிச் சடங்கில் வந்து பிரச்சனையைக் கிளப்பினான். பணத்தை வட்டியோடு எண்ணி எடுத்து வை என்று வந்து நின்றான்.

மருதமுத்துதான் பொறுமையாகப் பேசினார்.

“ஏய்யா… ராஜேந்திரா… சாவு வீட்ல வந்து பிரச்சனை பண்ணா என்ன அர்த்தம்ப்பா? அந்தப் பிள்ளையே தன்னோட ஒத்தை ஆதரவையும் இழந்துட்டு நிக்குது. இந்த நேரத்துல பணத்தை எண்ணி வைன்னா அது எங்க போகும்.

பிரச்சினை பண்ணாம போப்பா. அது வேலைக்கு வரும்போது பணத்தை திருப்பிக் குடுக்கும்பா.”

“வேலைக்கு வந்தா நான் ஏன் இங்க வந்து நிக்கறேன்? அம்மணி வேலைய விட்டு நின்னு பத்து நாளாகுது. வேலைக்கும் வரலை. கொடுத்த காசுக்கு வட்டியும் வரலை. அசலும் வரலை. நான் என்ன செய்யறது பெரியவரே? நீங்களே ஒரு நியாயத்தை சொல்லுங்க.”

“வேலைய விட்டு நின்னுடுச்சா?” மெல்லத் திரும்பி சுபத்ராவைப் பார்த்தவர் மீண்டும் திரும்பி அவனைப் பார்த்தவாறு, “அவங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு லீவு போட்டிருக்கும்பா. கண்டிப்பா வேலைக்கு வரும்.”
அவர் பேசி முடிக்கவும் மெல்லிய அதே சமயம் உறுதியான குரலில், “இனிமே நான் அந்த கம்பெனிக்கு வேலைக்குப் போகமாட்டேன் தாத்தா. கூலி வேலை பார்த்தாவது அவங்ககிட்ட வாங்கின பணத்தை திருப்பித் தந்துடுவேன்.”
அவளுடைய குரலிலேயே மருதமுத்துவுக்குப் புரிந்து போனது ராஜேந்திரன் ஏதோ தவறாக நடந்திருக்கிறான் என்று. அந்தக் கோபம் இழையோட ராஜேந்திரனைப் பார்த்தவர், “அதுதான் சொல்லுது இல்லப்பா. கண்டிப்பா உன் பணத்தை திருப்பிக் குடுத்திடும். இப்ப எந்தப் பிரச்சினையும் பண்ணாத.”
இருவரது பேச்சையும் கேட்டு உரத்துச் சிரித்த ராஜேந்திரன், “என் கம்பெனியில வேலை பார்த்தப்பவே பணத்துக்கு வட்டிகூட கட்டமுடியாம மேலமேல கடன் வாங்கினா. சரி இங்கதான வேலை பார்க்குறா விட்டுப் பிடிக்கலாம்னு நானும் நினைச்சிருந்தேன். இப்ப என் கம்பெனியிலயும் வேலை செய்யல… நான் எப்படி இவளை நம்ப முடியும்?
என்னைய ஏமாத்திட்டு ஊரை விட்டு ஓடிட்டான்னா நான் என்ன செய்யறது? பாண்டு பேப்பர்ல கையெழுத்து வாங்கி வச்சிருக்கேன். சந்தி சிரிக்க வச்சிடுவேன் ஜாக்கிரதை. ஒழுங்கா மரியாதையா என் கம்பெனிக்கு வேலைக்கு வரச் சொல்லுங்க இல்லையின்னா இப்பவே பணத்தை எண்ணி வைக்கச் சொல்லுங்க.”
அவனது பேச்சின் சாராம்சம் புரிந்தது சுபத்ராவுக்கு. எக்காரணம் கொண்டும் அவனது கம்பெனிக்கு வேலைக்கு மட்டும் போகமாட்டேன் என்று ஓலமிட்டது உள்ளம். கோவில்பட்டியில் ஏதேனும் வேலை தேடிப் பார்க்கலாம். ஆனால் உடனடியாகப் பணத்தை எண்ணி வை என்பவனை என்ன செய்வது? இயலாமையில் அழுகைதான் வந்தது.
உள்ளூர் மக்களும் மருதமுத்துவும் சேர்ந்து பேசி, ராஜேந்திரனை ஒருவாறாக சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மறுநாளே வருவேன் பணத்திற்கு வழி சொல்லவேண்டும் என்ற மிரட்டலோடு சென்றிருந்தான்.
அடுத்தது கோமதிக்கு இறுதிச் சடங்கு யார் செய்வார்கள் என்று எழுந்த பேச்சை தனது ஒற்றை வார்த்தையில் அடக்கினார் மங்களம்.
“அநாதரவா அந்தப் புள்ள கோமதி இந்த ஊருக்குள்ள அடியெடுத்து வச்ச நாள்ல இருந்து அதையும் என் பொண்ணுங்கள்ல ஒன்னாதான் நினைச்சேன். என் கணவர் செய்வார் எல்லா சடங்கையும்” என்று முடித்து விட்டார்.
கோமதியை வழியனுப்பும் நேரம் வந்ததும் வீட்டின் வாயிலில் வைத்து சில சடங்குகளை சுபத்ராவை செய்ய வைத்தவர்கள் பின் இடுகாட்டில் முறையாக எரியூட்டி விட்டு வந்தனர். தந்தை என்ற முறையில் மருதமுத்து அனைத்து சடங்குகளையும் செய்தார்.
கணத்த மௌனத்துக்கு இடையிலான சிறு சிறு விசும்பல்கள் தவிர்த்து பெரிய சப்தம் இல்லாமல் அமைதியாக இருந்தது வீடு. குறுகி துவண்டுபோய் படுத்திருந்தாள் சுபத்ரா.
முன்தினம் கோமதியின் இறுதிச் சடங்கிற்கு பின் வந்து தாயின் புகைப்படத்தின் முன் சுருண்டிருந்தவள், அவ்விடத்தை விட்டு அசையாமல் படுத்து கிடந்தாள்.
மிகவும் வற்புறுத்தி அவளை உணவு உண்ணச் செய்த மங்களம் தனது வீட்டுக்குச் சென்றிருந்தார். மங்களத்திற்கு இரண்டு பெண்கள். இருவரையும் உள்ளூரிலேயே கல்யாணம் செய்து கொடுத்திருந்தனர். அவர்கள் தத்தம் கணவர்களோடு அங்கு வந்திருந்தனர்.
கோமதிக்கான இறுதிச் சடங்குகளை மருதமுத்து செய்தது அவரது மாப்பிள்ளைகள் இருவருக்கும் பிடிக்கவில்லை.
போதாக்குறைக்கு ராஜேந்திரன் வேறு காலையிலேயே வந்து மீண்டும் பிரச்சனை செய்திருந்தான். மகள் என்று கொள்ளி வைத்ததால் அவர்கள் வாங்கிய கடனுக்கும் நீயே பொறுப்பு என்று மருதமுத்துவைப் பார்த்து கூறிவிட்டுச் சென்றிருந்தான்.
இதனால் தமது மாமனாரின் சொத்துக்கு ஏதும் பிரச்சனை வருமோ என்று அவர்களுக்குப் பெரும் சஞ்சலம். சாதாரண வியாபாரிகளான இருவருக்கும் அந்த வீட்டின் மீது ஒரு கண் உண்டு.
உரிமையான மகள்களான தமது மனைவியருக்கு இயல்பாக கிடைக்க வேண்டிய சொத்துக்கள் யாரோ ரத்த சம்பந்தம் இல்லாத ஒருவர் வாங்கிய கடனுக்காக சென்று விடுமோ என்று உள்ளூர பயம் இருந்தது இருவருக்கும்.
மங்களத்தையும் மருதமுத்துவையும் நேரடியாக எதுவும் கேட்க முடியாமல் தத்தம் மனைவியரிடம் பாய்ந்து கொண்டிருந்தனர். மருமகன்களின் ஜாடைப் பேச்சும் முக இறுக்கமும் சூழ்நிலையைப் புரிய வைத்தது மருதமுத்துவுக்கு.
கோமதிக்காகவும் சுபத்ராவுக்காகவும் எதுவும் செய்யலாம் என்ற போதும் யதார்த்தம் என்ற ஒன்று இருக்கிறது இல்லையா… அந்த லைன் வீடுகள் மட்டுமே அவர்களது ஒரே ஆதாரம். அது இல்லையென்றால் மருமகன்கள் மதிப்பது கூட சிரமம். தங்கள் இருவரின் வயிற்றுப் பாடும் அதை நம்பிதான் இருக்கிறது.
அதுவும் இல்லாமல் இறக்கும் தருவாயில் கோமதி கூறிய பல விஷயங்கள் அவரை யோசிக்க வைத்திருந்தது. சுபத்ரா இப்படி ஒரு ஏழ்மை வாழ்வு வாழ வேண்டிய பெண்ணே இல்லை. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வந்து இங்கு அரை வயிற்றுக் கஞ்சிக்கு முதுகு ஒடிய வேலை பார்த்த கோமதியின் வைராக்கியம் முதன் முறையாக தவறோ என்று எண்ணத் தோன்றியது.
அங்கேயே இருந்து தான் யார் என்பதை நிரூபித்து இருக்க வேண்டுமோ… ஆனால் அவளைக் கட்டிய கணவனே போன பிறகு சொத்து எதற்கு…? தன்மானமே முக்கியம் என்று அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு வந்த பெண்ணையும் குறைத்து மதிப்பிட முடியவில்லை அவரால்.
ஆனால் அந்த சிறிய வயதில் கையில் சிறு குழந்தையோடு கணவனையும் இழந்து நின்றிருந்தவளுக்கு யாரிடமும் எதையும் நிரூபிக்கும் அளவுக்குத் தைரியமும் இல்லை… தெம்பும் இல்லை… தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் பிள்ளைகளுக்கு எதுவும் ஆகாமல் இருக்கவும் மட்டுமே அவள் அந்த முடிவை எடுத்தது, என்பது அவருக்குத் தெரியாது.
“அனைத்து சொத்துக்களையும் உன் மருமகன் பெயரில் எழுதி வைத்துவிட்டு கண்காணாமல் ஓடிப்போ… இல்லையென்றால் ஒருவரையும் விடாமல் தொலைத்து விடுவேன்” என்ற கர்ணகடூரமான குரலும் கேவலமான ஒரு அருவெறுப்புப் பார்வையும் அவளை இறக்கும் தருவாய் வரையில் கூட பயத்தோடுதான் வைத்திருந்தது.
ஆனால் இறுதி காலங்களில் மகளின் எதிர்காலம் கோமதியை வெகுவாக மிரட்டியது. அவள் யாருமற்று நிற்பாளே என்று மனது கிடந்து மருகியது. தன் கணவரும் அவரது நண்பரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் மற்றும் அனைவரும் குடும்பத்தோடு எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை எடுத்து மருதமுத்துவிடம் கொடுத்தவள், அலர்மேல்மங்கை என்பவரைச் சென்று சந்திக்கச் சொல்லியிருந்தாள்.
கோமதியைப் பற்றியும் சுபத்ராவைப் பற்றியும் தெரிந்தால் அலர்மேல்மங்கை சும்மாயிருக்க மாட்டார். உடனடியாக சுபத்ராவைப் பார்க்க வந்துவிடுவார். அதற்குப்பின் சுபத்ராவைப் பற்றி எந்தக் கவலையும் இருக்காது என்றும் கூறியிருந்தாள்.
அலர்மேல்மங்கையைத் தவிர்த்து வேறு ஒருவரிடமும் கோமதியைப் பற்றியும் சுபத்ராவைப் பற்றியும் கூற வேண்டாம் என்றும் கூறியிருந்தாள். சுபத்ராவுக்கு ஏதேனும் நல்லது நடக்கலாம் என்ற எண்ணம் இருந்ததால், மறுநாளே கோமதி கொடுத்த விலாசத்துக்குச் சென்று அலர்மேல்மங்கையை பார்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார் மருதமுத்து.
இதைப் பற்றி மனைவியிடமும் கலந்து ஆலோசித்தவர், மனைவியும் அதையே வலியுறுத்தவும் மறுநாள் சென்னை செல்வது என்று முடிவு செய்து கொண்டார்.
வீட்டினுள் அமைதியாகச் சுருண்டு படுத்திருந்த சுபத்ராவுக்குத் தன்னைச் சுற்றி நடப்பது அனைத்தும் தெரிந்துதான் இருந்தது. தன்னால் யாருக்கும் எந்தவிதமான சிரமமும் இருக்கக் கூடாது என்று எண்ணிக் கொண்டாள்.
நினைவு தெரிந்த நாளில் இருந்து கண்ணில் எவ்வளவு சோகத்தைத் தேக்கியிருந்தாலும், தன் முகம் பார்த்து தனக்காகவே சிரித்து தனக்காகவே அழுது தனக்காகவே அனைத்துத் துயரங்களும் பட்ட தாயின் முகம் நீங்காமல் கண்ணுக்குள் நின்றது.
ஒருநாளும் தன் கவலையே பெரிது என்று ஓய்ந்து அமர்ந்ததில்லை கோமதி. ஊரார் முன் மானத்தோடும் கௌரவத்தோடும் இருவரும் வாழ உழைப்பு மட்டுமே கை கொடுக்கும் என்பதால், தான் ஓடாகத் தேய்ந்து அவளை ஆளாக்கியவர் அவர்.
தன்னைமீறி நெஞ்சம் விம்மும் நேரங்களில், அவளது தந்தையின் புகைப்படத்தில் தலையை வைத்து சிறிது நேரம் சாய்ந்திருக்கும் தாயைப் பார்த்திருக்கிறாள். அதுவும் சிறிது நேரங்களே… அந்த சிறிது நேர தலைசாய்த்தலே யானை பலம் தந்துவிடும் கோமதிக்கு.
சாகும்போது என்னைப்பற்றி மிகுந்த கவலை அரித்திருக்க வேண்டும். வைராக்கியமாக இருபது வருடங்களாக எதைப்பற்றியும் யாருக்கும் சொல்லாமல் வாழ்க்கையை ஓட்டியவர், மரணப் படுக்கையில் மட்டுமே வாய்திறந்து தன்னைப்பற்றி சொன்னார்.
அலர்மேல்மங்கை என்பவரிடம் கோமதி என்ற பெயரைச் சொன்னாலே போதுமாம் என்னை வந்து அழைத்துச் சென்றுவிடுவாராம். என் தந்தையின் நண்பரின் உறவினராம். இத்தனை வருடங்களாக என் தாயே வைராக்கியமாகச் செல்லாத இடத்துக்கு நான் ஏன் போக வேண்டும்? மனதிற்கு ஒன்றும் பிடிக்கவில்லை.
‘கால் வயிற்றுக் கஞ்சியானாலும் மானத்தோடு வேலை செய்து என்னாலும் குடிக்க முடியும்’ எண்ணிக் கொண்டாள். ஆனால் ராஜேந்திரனை நினைத்த மாத்திரத்தில் அவளது எண்ணங்கள் சோர்ந்தன.
அவனிடம் வாங்கிய பணத்தை எண்ணி வைக்காமல் இந்த ஊரைவிட்டு வேறு வேலை தேட காலை வெளியே வைக்கக் கூட முடியாது என்னால். ஈட்டிக்காரனைப்போல காலையிலேயே வந்துவிட்டான். மருதமுத்து தாத்தாவையும் மிரட்டிச் சென்றுள்ளான்.
வயதான மருதமுத்துவும் மங்களமும் எவ்வளவு நாள் அவளை அவனிடம் இருந்து பாதுகாக்க முடியும்? அது மட்டுமல்லாமல் அவர்களுக்குத் தேவையில்லாமல் எந்தத் தொந்தரவும் கொடுக்கவும் அவள் மனது ஒப்பில்லை.
அவள் உறங்குகிறாள் என்று எண்ணிக் கொண்டு அவள் முன்பு அவர்கள் மாப்பிள்ளைகள் செய்யும் பிரச்சனையை பேசிக் கொண்டிருந்த மருதமுத்துவும் மங்களமும், இறுதியாக அலர்மேல்மங்கையைச் சென்று சந்திக்க முடிவு செய்திருந்தனர்.
எதுவாக இருந்தாலும் இப்போதைக்கு அவளுக்கு பாதுகாப்பும் ஆதரவும் அவர்கள் இருவர்தான். ஆகவே அவர்கள் என்ன சொன்னாலும் கட்டுப்படும் மனநிலைக்கு வந்திருந்தாள்.
ஒருவேளை அந்த அலர்மேல்மங்கையிடம் சென்றால் நல்ல வேலைகூட கிடைக்கலாம். அந்தப் பணத்தில் ராஜேந்திரனின் கடனை அடைக்கலாம் என்று அவளது சிறியமூளை எண்ணிக் கொண்டிருந்தது. உண்மையில் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களின் சொந்தக்காரியான அவளை இருபது வருடங்களாக அலர்மேல்மங்கை தேடுவது அவளுக்குத் தெரியாதே….
***
மருத்துவமனையில் ஐசியுவின் வாசலில் அமர்ந்திருந்தார் சரஸ்வதி. அர்ஜுன் ஹோட்டலில் நடக்கும் மீட்டிங்க்காக சென்றிருந்தான். அலர்மேல்மங்கை அழைப்பதாக செவிலி வந்து சொல்லவும் உள்ளே சென்றார்.
மருத்துவமனைக் கட்டிலில் தளர்ந்திருந்தாலும் கம்பீரம் குறையாமல் படுத்திருந்த அலர்மேல்மங்கையின் அருகே சென்றவர் அவரது கரங்களை பிடித்தவாறு,
“அம்மா… கூப்பிட்டீங்களா… என்ன வேணும்…” மெல்லிய குரலில் கேட்க,
கண்திறந்தவரின் இமைகள் நனைந்திருந்தன. மூதாட்டியின் தேகமும் மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்தது. நடுக்கத்தோடு சரஸ்வதியின் கைகளைப் பிடித்துக் கொண்டவர், சற்றுத் திணறிய மூச்சுக்களோடு,
“சரோ… என்னவோ மனசுக்கு கஷ்டமா இருக்கு. நமக்கு வேண்டியவங்களுக்கு என்னவோ நடந்திட்ட மாதிரி… காலையில இருந்தே மனசு அலைபாயுது.
கண்ணை மூடினா மாதவன் வந்து என் குடும்பத்தை விட்டுட்டீங்களே அம்மான்னு கேட்கறான்… என்னால இந்த சித்ரவதையைத் தாங்க முடியல சரோ…”
பொலபொலவென கண்ணீர் வழிந்து ஓடியது அவரது கண்களில். சட்டென்று குனிந்து அவரது கண்களைத் துடைத்த சரஸ்வதி.
“அம்மா… இப்படி உங்க உடம்பை வருத்திக்காதீங்க. யாருக்கும் எதுவும் ஆகியிருக்காது. நீங்க மனசறிஞ்சு எந்தத் தப்பையும் செய்யல. எங்க இருந்தாலும் கோமதியும் குட்டிம்மாவும் நல்லாதான் இருப்பாங்க.
நாமளும் ஒன்னும் சும்மா இல்லையே… அவங்க பாதுகாப்புக்காக வேண்டி நியூஸ் பேப்பர்ல விளம்பரம் குடுக்கலை, ஆனா அதைத் தவிர எல்லா வழியிலயும் அவங்களைத் தேட முயற்சி பண்ணிகிட்டுதான இருக்கோம்.
கண்டிப்பா ஒருநாள் கிடைச்சிடுவாங்க. நீங்க உங்க உடம்பை கவனிச்சிக்கோங்க. அவங்க இங்க வரும்போது நீங்க இங்க தெம்பா இருக்கனும். நடந்த எதுவுமே அர்ஜுனுக்குத் தெரியாது. அதெல்லாம் நீங்க உங்க வாயாலதான் அவனுக்கு சொல்லனும். அவன் இன்னும் சின்ன பிள்ளை இல்லை. நீங்க சொல்றதை அவன் புரிஞ்சுப்பான்.
அது மட்டுமில்லாம நீங்க அவன்கூட இருந்தா அவனுக்கு எந்த ஆபத்தும் வராது. உங்க மனசுல இருக்கறது எல்லாம் நல்லபடியா நடக்கனும்னா நீங்க முதல்ல உங்க உடம்பை தேத்தி எழுந்து வர முயற்சி செய்ங்கம்மா.”
நம்பிக்கையற்று சுருங்கியது அலர்மேல்மங்கையின் விழிகள். அர்ஜுனின் ஆசையைப் பற்றி தெரியும் அவருக்கு. தான் இல்லாது போனால் அவனது ஆசையை நிறைவேற்றிக் கொள்வான். ஆனால் அவனது மாமனின் மனவிகாரங்கள் எதுவுமே தெரியாது அவனுக்கு.
இனி சொன்னாலும் நம்புவானா என்பது சந்தேகமே. ஸ்வேதாவை திருமணம் செய்து கொள்வதை தடுப்பதற்காக பழி கூறுவதாக நினைக்கலாம். நியாயமாக கோமதியின் மகள் வந்து வாழ வேண்டிய வீடு அது. அவனது பெற்றோரின் ஆசையும் அதுதான்.
அவனுக்கு அது விருப்பம் இல்லாதபட்சத்தில் சரிபாதி சொத்தையாவது அவளிடம் ஒப்படைக்கத் துடிக்கிறது அந்த மூதாட்டியின் மனது. அதற்கு முதலில் அவர்கள் கிடைக்க வேண்டுமே… ஆயாசமாகக் கண்களை மூடிக் கொண்டார்.
ஹோட்டலில் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த டெலிகேட்ஸுடன் தொழில்முறை பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்து ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. அவர்களுடனான விருந்தை முடித்தவன் சற்று ஓய்வெடுக்க வீட்டிற்கு வந்தான்.
சென்னையின் சற்று வசதியானவர்கள் மட்டுமே வசிக்கக் கூடிய ஆழ்வார்பேட்டை போட்கிளப் பகுதியில் ஆடம்பரமாக இருந்தது அந்த இரட்டை மாளிகை. பிரம்மாண்டமான கேட்டும், அகலமான கார் ஓடும் பாதையுமே அதன் பிரம்மாண்டத்தைப் பறைசாற்றியது.
ஒன்று போலவே இருந்த இரண்டு வீடுகளும் தூய வெண்மை நிறத்தில் கம்பீரமாக மின்னின. சுற்றிலும் போதுமான அளவு தோட்டத்திற்கென ஒதுக்கப் பட்டு மத்தியில் இருந்தன வீடுகள். காரைப் போர்டிகோவினுள் விட்டவனின் மனதுக்குள் எப்பொழுதும் எழும் கேள்வி ஒன்றுதான்… இந்த வீட்டில் இருந்தவர்கள் யார்?
இரட்டை வீடுகளில் ஒன்றில் இவர்கள் வசிக்க, மற்றொரு வீடு யாரும் இல்லாமல் பூட்டியே கிடக்கும். ஆனால் அதற்காக பராமரிப்பில்லாமல் இருக்காது. தினந்தோறும் சுத்தம் செய்து விளக்கேற்றி வைக்கவே தனியாக ஆட்களை நியமித்து இருந்தார் அலர்மேல்மங்கை.
யார் இந்த வீட்டில் இருந்தார்கள் என்ற அவனது கேள்விக்கு இதுவரை பதில் கிடைத்தது இல்லை. தொழிலும் சொத்துக்களும் அவன்வசம் வந்தபோது, அனைத்து சொத்துக்களும் அவன் பேரில்தான் இருந்தது அந்த இரட்டை வீடுகள் உட்பட.
மணிவாசகம் அந்த வீட்டில் தான் குடும்பத்தோடு தனியே இருந்து கொள்கிறேன் என்று அர்ஜுன் மூலமாக கேட்ட போதும் அலர்மேல்மங்கை ஒப்புக் கொண்டதில்லை.
பல விஷயங்கள் இதுவரை ஏனென்று அவனுக்கு புரிந்ததே இல்லை. அவனைச் சுற்றி பல மர்மங்கள் இருந்த போதும் பாட்டியின் மீதுள்ள நம்பிக்கையில் அவரிடம் வற்புறுத்தி எதையும் கேட்டதில்லை அர்ஜுன்.
இன்றும் அந்த வீட்டைச் சிறிது நேரம் பார்த்தவன், தனது வீட்டுக்குள் நுழைந்து மாடியேறினான். தனது அறைக்கு வந்து தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு படுக்கையில் சாய்ந்தவனை அலைபேசி அழைத்தது.
ஸ்வேதாவின் பெயரை அலைபேசியில் பார்த்ததும் தன்னைப்போல புன்னகையில் விரிந்தது உதடுகள். அழைப்பை ஏற்றவன்,
“சொல்லுங்க மேடம். என்ன இந்த நேரத்துக்கு ஃபோன் பண்ணியிருக்கீங்க.”
“மாமா… நாளை மறுநாள் நாங்க ஊருக்கு வந்துடுவோம். நீங்க ரிசீவ் பண்ண வருவீங்களா?” வாய்விட்டு சிரித்தவன்.
“ஹேய்… நீ என்ன வெளிநாட்டுக்குப் போய் சாதனை பண்ணிட்டா வர்ற… இந்தியாக்குள்ள சுத்திப் பார்த்துட்டு வர்றதுக்கு உன்னை ரிசீவ் பண்ண வேற நான் வரனுமா?”
“மா…மா… அதெல்லாம் எனக்குத் தெரியாது நீங்க கண்டிப்பா ஏர்போர்ட் வரனும்.” சினுங்கிக் கொண்டே பிடிவாதம் பிடித்தவள் வழக்கம் போல அவனை ஈர்த்தாள்.
அவளிடம் வருவதாக வாக்குக் கொடுத்தவன் சுகமாக அவள் நினைவுகளில் மூழ்கினான்.
—-தொடரும்.

error: Content is protected !!