Kathiruntha kathaladi 3

Kathiruntha kathaladi 3

3

சில நாட்கள் எவ்வித மாறுபாடும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது ஆருஷிற்கு.

வழக்கம்போல அவனது காலை, படுக்கையறையில் அவளது புகைப்படத்தின் முன்னான பேச்சு, அலுவலகம் என செல்ல, தீப்தி எவ்வித குறுக்கீடும் செய்யவில்லை.

அதுவே ஆருஷுக்கு பெரும் நிம்மதியாய் இருந்தது. ஒரு விவாதம், ஆர்ப்பாட்டம், இல்லை சிறு அழுகை இதையாவது அவளிடம் எதிர்பார்த்தான்.

ஆனால் இது எதையும் அவள் செய்யாததோடு, இவன் கண்ணிலும் படவில்லை. மனம் மாறி விட்டாளோ என நினைக்க அவன் ஒன்றும் குழந்தை இல்லையே!

அவளது பிடிவாதத்தைப் பற்றி நன்கு அறிவான். ஏதோ பெரிய ஒன்றிற்காக இந்த சிறு அமைதி என எண்ணிக்கொண்டான். ஆனால் அவளை சமாளித்து விடலாம் என எண்ணினான்.

ஆனால் அவள் இவன் சமாளிக்கும் நேரத்தைக் கூடத் தராமல் சுற்றி வளைக்கப் போகிறாள் என்பதை அறியவில்லை.

மதியம் நடக்கவிருக்கும் வாடிக்கையாளர் சந்திப்பிற்காக கோப்புகளை தயார் செய்து வைத்துக் கொண்டு இருந்த போது சபரிநாதனின் வீட்டு தொலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது ஆருஷிற்கு.

அவருக்கு எதாவதோ! என்று அவசரமாக அதை ஏற்றவன், அதில் கூறப்பட்ட செய்தியில் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றான்.

“வாட்! நான் உடனே வரேன்” எனக் கூறியவன் வேகமாக புறப்பட்டுச் சென்றான்.

காரை அதிவேகமாக செலுத்தியவன் கூறப்பட்ட செய்தியின் நினைவில், “தீப்தி” எனப் பல்லைக் கடித்தான். இப்படி ஒரு நகர்வை அவளிடம் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

மிஞ்சி, மிஞ்சி போனால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுவாள் என்று கணித்திருந்தான். ஆனால் தற்கொலையை விட மோசமான மிரட்டல் இது.

இதிலிருந்து எப்படி தப்ப போகிறேன். என சிந்தித்துக் கொண்டே விரைவாக காரைச் செலுத்தினான்.

ஆருஷ் வீட்டிற்குள் நுழையும்போதே சாமியாரிணிகள் (துறவிகள்) சிலர் அமர்ந்திருந்தனர்.

இவனை கண்டதும் மெல்லியதாய் புன்னகைக்க, மூச்சு வாங்கியவாறே இவனும் பதிலுக்கு சமாளிப்பாய் சிறு புன்னகை சிந்தினான்.

சபரிநாதன் எங்கே என தேட, அவர் தனது வீல் சேய்ரில் முகம் இறுக தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியவாறு அமர்ந்திருந்தார்.

இந்த தீப்தி இவரை எண்ணியாவது தனது முடிவை மாற்றக் கூடாதா என்று ஆயிரமாவது முறையாக தோன்றியது.

அதில் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் பேசத் தொடங்கினார். அவருக்கு எழுபது வயதிற்கும் மேல்இருக்கும். சாந்தமான விழிகள் அனைவரையும் அன்பு பொங்க பார்த்தன.

“உங்கள் பெண் இறைவனுக்கு சேவை செய்ய விரும்புகிறாள் சபரிநாதன். நாங்களும் இந்த சிறு வயதில் வேண்டாமம்மா என்று தடுத்து பார்த்தோம்.

ஆனால் அவள், எனக்கு வாழ்வின் மீது பற்று இல்லை. இனி வாழ்நாள் முழுவதும் இறைவனுக்கும், இயலாதவர்களுக்கும் தொண்டு செய்து தனிமையில் கழிக்கவே விரும்புகிறேன் அப்படினு சொல்றா.

இருந்தாலும் மனசு கேக்கல சின்ன பெண்ணில்லையா. வாழ்க்கைனா இன்னும் என்னன்னே தெரியாம அதை முடிச்சிக்க பாக்கறா. அதான் உங்ககிட்ட சொல்லிட்டு போகலான்னு வந்தோம்.

இரண்டு மாதங்கள் கழித்து வான்னு உங்க பொண்ணுகிட்ட சொல்லியிருக்கோம். நீங்க அவ மனச மாத்த முடியுதான்னு பாருங்க. அதுக்கும் மேல இறைவன் சித்தம்” என்றவர் கையெடுத்து கும்பிட்டு வருகிறோம் என சென்றுவிட்டார்.

சபரிநாதன் பிரம்மை பிடித்து அமர்ந்திருந்தார். எதற்காக இத்தனை பெயர், புகழ், சொத்துக்கள் மகள் சாமியாராய் போகவா!

நெஞ்சம் ஊமையாய் அழுதது. இதோ அதற்கு காரணமானவன் அவர் முன்தான் நிற்கிறான். ஆனால் தவறு அவன்மீது கிடையாதே!

ஆருஷ் தயக்கமும் வேதனையுமாக அவர்முன் மண்டியிட்டு அமர்ந்தவன்,

“சாரி அங்கிள், தீப்தி இப்படி செய்வாங்கன்னு எதிர்பாக்கல”

மேலும் என்ன கூறி அவரைத் தேற்றுவது என எண்ணிக் கொண்டிருக்கும்போதே,

“ஒரே பொண்ணு ஆருஷ், அவ மனசு வெறுத்து சன்னியாசம் வாங்கறதுக்கா இத்தன ஓட்டம் ஓடினேன்” வாய்க் குழறலாய் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இவ்வளவுக்கும் தீப்தி இங்கு இல்லை. சாமியாரிணிகள் வந்ததும் போனதும் கூட தெரியாது அவளுக்கு.

“நான் பேசறேன் அங்கிள். நீங்க கவலைப்படாதீங்க.. கண்டிப்பா அவங்க மனசு மாறும்”

இது எந்தளவு சாத்தியம் என தோன்றினாலும், அவர் கண்களில் வருத்தத்தையும் மீறி வெளிச்சம் பரவியது. ஆனால் அடுத்த நொடி அது காணாமல் போனது. மகள் பிடிவாதக் காரியாயிற்றே!

அவர் கைகளைப் பிடித்துக் கொண்டவன்,”நம்புங்க அங்கிள், நான் பேசறேன் அவங்ககிட்ட. நான் எல்லாத்தையும் சரிபண்றேன். நீங்க கவலைப் படாம இருங்க” என நம்பிக்கை அளித்தான்.

தன் மகள் விரும்பியதும் இதைதானோ! இருவரில் ஒருவர் தோற்றே ஆகவேண்டிய நிலை. தடுக்க இயலாத கையறு நிலையில் இவர்.

ஆருஷின் மேல் பரிதாபமாக இருந்தது. ஆனால் இவனை விட சிறந்த மணமகன் தன் மகளுக்கு கிடைக்க மாட்டான் என்று ஒரு தந்தையாகவும் எண்ணத் தோன்றியது.

சிறு புன்னகையுடன் உள்ளே சென்று விட்டார். ஆருஷ் ஓய்ந்து போய் சோபாவில் அமர்ந்தான், அவளிடம் எப்படி பேச வேண்டும் என மனதுக்குள் உருபோட்டபடி.

சிறிது நேரத்தில் தீப்தி வந்தாள். எப்போதும் போல துள்ளலில்லை. அமைதியாக இருந்தாள்.

“தீப்தி” இவன் அழைக்க,

அவள் நின்றாள். நிற்க மட்டுமே செய்தாள். ஆருஷிற்கு கோபம் கூட வரவில்லை. இந்த முட்டாள் பெண்ணை நினைத்து பரிதாபம்தான் வந்தது.

அவள்முன் நின்றவன், “ஏன் இப்படி பண்ண தீப்தி”

“என்ன பண்னேன் மிஸ்டர் ஆருஷ்” கைகளை கட்டிக் கொண்டு சாவகாசமாக கேட்க,

“ஏன் எண்ண பண்ணன்னு உனக்கு தெரியாது ”

“ஹலோ…வெய்ட்..வெய்ட்…வெய்ட் என்ன பிரச்சனை உனக்கு, நீயா வந்த நீயா பேசிட்டே இருக்க என்ன விசயம்னு சொல்லு, இல்லனா தள்ளு எனக்கு வேலை இருக்கு” என அவனை தாண்டிக் கொண்டு போக முற்பட,

“நில்லு தீப்தி” என்று அவளை வழிமறைத்தவாறு நின்றவன், “இன்னைக்கு சாமியாரிணி வந்திருந்தாங்க”

ஓ இதற்குதானா! என்று எண்ணியவளுக்கு வியப்பே அவர்கள் இங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்க வில்லை. இவர்களிடம் சொல்லும் வேலை மிச்சம் எனத் தோன்றியது.

” எப்படி உன்னால இப்படி ஒரு முடிவு எடுக்க முடிஞ்சது. உங்கப்பாவ கொஞ்சமாவது நினைச்சு பார்த்தியா” கோபமும் ஆதங்கமுமாக ஆருஷ் கேட்க,

தந்தையை நினைத்து கண்கள் கலங்கினாலும் “அது என்னோட பிரச்சனை மிஸ்டர் ஆருஷ் இதுல நீங்க தலையிட வேண்டாம். அதான் என்னை வேண்டான்னு சொல்லிட்டீங்களே. சோ ஸ்டே அவே”

“சோ, இது எனக்கான ப்ளேக்மெய்ல்தான் இல்லயா?”

“இல்ல, உன்னோட என் வாழ்க்கை இல்லனா அப்பறம் எனக்குன்னு வாழ்க்கையே இல்ல” என்றவள் அவனைத் தாண்டி சென்று விட்டாள். ஆருஷ் செல்பவளையே வெற்றுப் பார்வை பார்த்தவாறு நின்றிருந்தான்.

ஆருஷ் அவனது வீட்டிற்கு வந்தவன் டையை கழட்டி வீசிவிட்டு, அவளது புகைப்படத்தின் முன் நின்றான். கண்கள் கலங்கியது அவனுக்கு

எத்தனை ஆசை, எத்தனை நேசம் அத்தனையும் கனவாய் மாற வேண்டுமா? இறைவனுக்கு என்மீது இரக்கமில்லையா! என மனம் அரற்றியது.

“நீ சிரிக்கிறியா…சிரி, நல்லா சிரி” எனக் கத்தியவன், ” ஏன்டி என்ன விட்டு போன? ரொம்ப வலிக்குது இங்க” என கண்கள் கலங்க நெஞ்சை நீவிக் கொண்டான்.

“நான் சந்தோஷமா இல்ல… நடிச்சிட்டு இருக்கேன். சரி இப்படியே நினைவோட வாழ்ந்திடலான்னு பாத்தா இந்த தீப்தி நெருக்கடி கொடுக்கறா…

அங்கிள் நிலமை இன்னும் மோசம். அவருக்கு எல்லாம் தெரியும்னு நினைக்கறேன். இருந்தாலும் என்னை ஒன்னும் கேக்கல.

என்னை வாழ்க்கைல உயர்த்தி பார்த்தவருக்கு நான் என்ன செய்யறேன் .அவர் பொண்ண சன்னியாசம் வாங்க வைக்கறேன்.

அவரோட நம்பிக்கைக்கும் பாசத்துக்கும் என்ன கைமாறு பண்ண போறேன். எதாவது வழி சொல்லு” எனப் பேசிக் கொண்டே அங்கேயே அமர்ந்து விட்டான்.

தொழிலில் தன் சாமர்த்தியத்தால் வெற்றிகளை குவித்து வரும் இளம் தொழிலதிபன் என்ன செய்வது என அறியாது கண்கலங்கி போனான். புகைப்படம் பதில் சொல்லுமா? இல்லை அதில் இருப்பவளே சொல்வாளா?

ஒரு வழியாக ஹர்ஷியும், தர்ஷியும் இந்தியா செல்வதற்காக விமான நிலையம் வந்துவிட்டனர். அதற்குள் அவள் தாய், தந்தையிடம் இருந்து ஹர்ஷியை வெளியே அனுப்பக் கூடாது, தினமும் உட்கொள்ளும் மாத்திரை உட்கொள்ள வேண்டும் எனப் பல கட்டளைகள். அவர்களால் வர இயலாத சூழ்நிலை. அதனால் இரு வாரங்கள் கழித்து வருவதாக கூறினர்.

இவை அனைத்தையும் ஹர்ஷி கவனத்துடன் கேட்க, தர்ஷியோ இதையெல்லாம் மாத்தறதுதான் என்னோட முதல் வேலையே என எண்ணிக்கொண்டாள்.

ஆதித்யாவும் அவன் பெற்றோரும் வந்துவிட, இவர்களுக்கான அறிவிப்பு வந்ததும் அனைவரும் கிளம்பினர்.

விமானத்தில் ஹர்ஷி, தர்ஷி அடுத்தடுத்து அமர, ஆதி தர்ஷியின் அருகில் இடம் பிடித்தான். ஹர்ஷி மாத்திரை உட்கொள்வதால் அதிகம் உறக்கம் வரும். அதனால் அவள் உறக்கத்தில் அழ, தர்ஷி அவனை பார்த்து முறைத்தாள் ,

“ஓய் என்னா முறைப்பு…இனிமே இவன் என்ன பண்ண முடியும் அதான் கெளம்பிட்டமேன்னா!”

இவள் நினைத்ததையே அவன் கேக்கவும் திருதிருவென அவள் முழிக்க,

“என்ன சரியா சொன்னேனா…” என்று கூறியவன் அவளை நெருங்கி கிசுகிசுப்பாக,

“உன் வாயசைவுக்கு மட்டுமில்ல, உன் விழியசைவுக்கு கூட என்கிட்ட பதில் இருக்கும்.” என கூறி அவளை திகைக்க வைத்தான்.

திகைத்தாலும் சற்று நேரத்தில் மீண்டவள், அவன் நெருக்கம் அவஸ்தையை தர, அவனைச் சற்றுத் தள்ளியவாறே, “ஃபார் யுவர் கைன்ட் இன்ஃபர்மேஷன் உங்களுக்கு பார்த்திருக்கற பொண்ணு ஹர்ஷி” என்று உறங்கும் ஹர்ஷியைக் காட்டியவள், “நானில்ல புரியுதா” என பல்லைக் கடித்துக் கொண்டு சன்னக்குரலில் கூறினாள்.

“ஹே..ஹே அதான் நீ ஃப்ரீயா வரியே, உங்கக்காகூட அப்பறம் என்ன…” அவள் முறைப்பதைப் பார்த்து, “என்ன ஒன்னும் சொல்லக்கூடாதுபா இத சொன்னதே நீதான்..ஆமா” என சிறுபிள்ளைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு கூற,

ஒரு நிமிடம் அவனை ரசனையாய் பார்த்தவள், ‘ச்சே தர்ஷி என்ன பண்ற நடக்குதோ இல்லையோ! இவன் உங்கக்காவுக்கு பார்த்திருக்கற மாப்பிள்ளை’என மனம் எடுத்துரைக்க கடினப்பட்டு தன் பார்வையை திருப்பினாள்.

ஆதி இதை கண்டும் காணாமல் வழவழவென்று அவளுடன் பேச்சு கொடுத்தபடியே முழு பயணத்தையும் கடந்தான்.

சென்னை விமான நிலையம். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து பேப்பர் படித்தவாறு இருந்தான் ஆருஷ். பிஸினஸ் சம்பந்தமாக நியூயார்க் செல்ல வேண்டி அவனது விமானத்தின், அறிவிப்பிற்காக காத்திருந்தான்.

அப்போது ஆதி, அவன் பெற்றோர்கள், ஹர்ஷி தர்ஷி இவர்கள் பயண பொதிகளை சேமித்து தள்ளிக் கொண்டு வர, ஆதி அங்கு அமர்ந்திருந்த ஆருஷை பார்த்து விட்டான்.

எதையோ யோசித்தவன், “இதோ வருகிறேன் நீங்க அங்க வெய்ட் பண்ணுங்க” என்று ஆருஷை நோக்கிச் சென்றான்.

“ஹாய் மேன், என்ன பிஸினஸ் ட்ரிப்பா”

அருகில் கேட்ட குரலில் தன் கவனம் கலைந்தவன் ஆதியைக் கண்டதும் முகம் மலர பேப்பரை வைத்துவிட்டு, “ஹேய் ஆதி எப்ப லண்டன்ல இருந்து வந்த.. அண்ட் கங்க்ரேட்ஸ் உனக்கு கல்யாண ஏற்பாடு நடக்கறதா கேள்விபட்டேன்.” என கைகுலுக்க,

பதிலுக்கு கை கொடுத்தவாறே, “எனக்கு கல்யாண ஏற்பாடு நடக்கறது இருக்கட்டும் அப்படியே உனக்கும் ஒரு பொண்ணு பாக்கலாமா.”

அவனது கேள்வியில் மௌனமானவன், “என்ன அவசரம் மெதுவா பாக்கலாம் ஆதி” என சமாளித்து வைத்தான்.

ஒரு அர்த்த புன்னகையை சிந்திய ஆதி, “கூடிய சீக்கிரமே பாக்கலாம் ஆருஷ்… பை தி வே என்னாட ஃபியான்சே அங்க இருக்காங்க, வாயேன் மீட் பண்ணலாம்”

“ய்யா ஷ்வர் ” என்றவன் தன் ட்ராலியை இழுத்தவாறு ஆதியோடு சென்றான். பாதி தூரம் கடக்கையிலே அவர்களின் பின்புற தோற்றத்தைதான் கண்டான்.

அருகில் செல்லச் செல்ல ஒருவித பரபரப்புடன் கூடிய ஆர்வம் தொற்றிக் கொண்டது. நெஞ்சம், வயிற்றில் எல்லாம் ஒரு இன்ப அவஸ்தை. இது என்ன உணர்வு என யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவனுக்கான விமான அழைப்பு கேட்க, ஆதியிடம் “சாரி” என கண்களால் அறிவிப்பு வந்த திசையை நோக்கி கண்காட்ட, “விதி வலியது” என ஆதியால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஆருஷ் நேரமாகிவிட்டது தான் பிறகு சந்திப்பதாக கூறி சென்றுவிட்டான்.

செல்லும் போது யாரையோ தேடியது அவனது கண்கள். தேடியது கண்முன்னால் இருந்தும் அவனால் காண முடியவில்லை. விதி வலியதுதானோ!.

error: Content is protected !!