kaamyavanam15
kaamyavanam15
காம்யவனம் 15
நண்பர்கள் அனைவரும் காட்டில் இருக்கும் அதிசயங்களைத் தோண்ட ஆரம்பித்திருந்தனர். புதிய நிறங்களில் இருக்கும் இலைகள், தங்கப் பொடி போன்ற மணல், மரத்தின் கீழ் நின்று கத்தினால் தன்னாலே பழத்தை உதிர்க்கும் மரம் என அன்று முழுவதும் பார்த்துப் பார்த்து பூரித்துப் போனார்கள். மாயாவும் இந்த அதிசயக் காட்டினை நினைத்து மகிழ்ச்சியில் திளைத்தாள்.
இன்னும் என்னென்ன தென்படும் என்ன நிகழும் என்று பார்க்க ஆவலாக இருந்தாள். மகதியும் குருவும் கூட மகிழ்ந்தனர்.
ஆனால் இதிலெல்லாம் மயங்கி தேவா இங்கு இருக்கவில்லையே. அவன் இருப்பது மாயாவிற்காக. அவளது வாழ்வைப் பற்றிய கவலையே அவனுக்கு இதையெல்லாம் விட முதன்மையாக இருந்தது.
இருந்தாலும் நண்பர்களுடன் இருக்கும் நேரம் அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தான். அவர்களோடு குதூகலிப்பது அவனுக்குப் பிடித்த ஒன்று.
அன்றைய நாள் முழுதும் ஆட்டம் ஓடாமாகக் கழிந்தது. இரவு அனைவரும் அடித்துப் போட்டது போல உறங்க, பிரத்யும்னன் அவனது காதலியைக் காணச் சென்றான்.
வழக்கம் போல அவளை அலுங்காமல் தூக்கிக் கொண்டு வந்து ஆற்றங்கரையில் மயில்தோகை மெத்தையில் கிடத்தி அருகில் இருந்து பார்த்து ரசித்தான்.
நாளை விடிந்ததும் முதல் பொருளை ஆவலுடன் பொருத்தி தன் காதலுக்கான அஸ்திவாரத்தை பலமாகப் போட வேண்டும்.
முதலில் அவன் எடுத்து வந்திருப்பது விரளி மஞ்சள். மங்களகரமாக ஆரம்பிக்க வேண்டுமே!
மஞ்சள் லக்ஷ்மி தேவியின் அம்சம். நாராயணனின் மார்பில் நிரந்தரமாகக் குடிகொண்டிருப்பவளைப் போல தன் நெஞ்சில் இருக்கும் மாயாவை நிரந்தரமாக தன்னுடன் இணைக்க முதல் படி தான் இந்த மஞ்சள். அதைத் தன் கையிலேயே வைத்திருந்தான்.
“மாயா, நாளைக்கு இந்த மஞ்சளை உன்னுடைய நெற்றியில் பொருத்தப் போகிறேன். தலையிலிருந்து கால் வரை ஒவ்வொன்றாக வரப் போகிறேன்.
இதில் எப்போது உனக்கு என் ஞாபகம் வருமோ எனக்குத் தெரியாது. ஆனால் பதினோரு பொருளும் சேர்ந்த மறுகணம் நீயே என்னை தாவி அனைத்துக் கொள்ளப் போகிறாய்.” சிரித்துக் கொண்டே அவளது நெற்றியில் இருக்கும் முடிக் கற்றைகளை ஒதுக்கி விளையாடினான்.
உறங்கும் அவளை ரசிப்பது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அழகிய மெழுகு பொம்மை போல அவள் கிடந்தாள்.
ஒவ்வொரு நாளும் அவளை கண்ணால் பருகிக் கொண்டிருப்பது கூட தனக்கு இன்பமாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். நிலவு தேய்ந்து மறையும் வரை அவளை தன் மார்பின் மீது கிடத்திக் கொண்டவன்,
“உன்னைக் கண்ட நாள் முதல், நெஞ்சில் உன் முகம் மட்டுமே என் இதயத்தை துடிக்க வைக்கிறது. ஒரே வாழ்க்கை! அதில் நீ மட்டுமே எனக்காக மாயா”
மெல்ல அவள் விழித்துக் கொள்ளும் சமயம் யாரும் அறியாமல் அவளை அவளது வீட்டில் மீண்டும் விட்டுவிட்டு வந்தான்.
தரையில் படுத்திருப்பது அவர்களுக்கு வழக்கம் தான் என்றாலும், எப்போதும் சிறு உடல் வலி அதில் இருக்கும். ஆனால் மாயாவிற்கு அது சிறிதும் இல்லையே என்று தோன்றியது.
சோம்பல் முறித்து எழுந்தவள், அதையே நண்பர்களிடம் சொல்ல,
“அதெல்லாம் இல்ல. நாம நாளெல்லாம் நல்லா சுத்திட்டு வந்து படுக்கறோம் அதுனால நமக்கு எதுவும் தெரியறதில்ல.” குரு விளக்கினான்.
“இருக்கும்.” தேவா அவனை ஆமோதித்தான்.
“சரி சரி சீக்கிரம் எந்திருங்க. இன்னிக்கு என்ன விஷயமெல்லாம் நம்ம கண்ணுல படுமோ எனக்கு ஒரே ஜாலியா இருக்கு!” அவசரமாக படுக்கையை சுருட்டிக் கொண்டு எழுந்தாள் மகதி.
“இது ஒரு அல்ப” குரு முனுமுனுக்க,
“என்ன டா சொன்ன?” காளியாய் முறைத்தாள் மகதி.
“அழகின்னு சொன்னேன்.” முப்பத்திரண்டு பல்லையும் காட்டிச் சிரித்தான் குரு.
“அந்த பயம் இருக்கட்டும்.” பல் விளக்க எழுந்து வெளியே சென்றாள்.
மற்ற மூவரும் சிரித்துக் கொண்டே எழுந்தனர்.
“அவ சொல்றதும் சரி தான டா. நமக்கும் அந்த ஆர்வம் இருக்கே!” தேவா ஒத்துக்கொள்ள,
“ஆமா மச்சான். ஆனா அவள இப்படி வாரும்போது செம ஜாலியா இருக்கு டா!” குருவின் முகத்தில் ஏனோ ஒளி வீசியதாக தேவாவிற்குப் பட்டது.
இருந்தும் அவன் விகற்பமாக யோசிக்கவில்லை.
இவர்கள் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தாலும் மாயாவிற்கு ஆற்றங்கறையில் இருந்தது நினைப்பு.
அவர்களின் குடிலுக்குப் பக்கத்திலேயே குளிக்கவென்று சில தென்னங்கீற்றுகளை வைத்து சிறிய அரை போல அமைத்திருந்தனர் குருவும் தேவாவும். அருகில் இருக்கும் வாய்கால் நீரை எடுத்துவந்து அங்கே குளித்துக் கொண்டிருந்தனர்.
ஆனாலும் மாயா பிடிவாதமாக ஆற்றங்கரைக்குத் தான் செல்வேன் என பிடிவாதமாக இருந்தாள்.
“அங்க இருக்கற அருவியும் ஓடுற ஆறும் மனசையே சுத்தப் படுத்திடுத்து” என நண்பர்களிடம் சொல்லியிருந்தாள்.
அதனால் யாரும் கண்டுகொள்வதில்லை. தேவா முதலில் தயங்கினாலும் அவள் சந்தோஷமே பிரதானமென்று விட்டுவிட்டான்.
நகர வாழ்க்கையை விட இந்தக் காட்டு வாழ்க்கை அவர்களை மிகவும் ஈர்த்தது. அதுவும் இந்தக் காம்யவனம் அதிசயங்களை உள்ளடக்கி அவர்களை இங்கேயே தங்கவைக்கும் ஆவலைத் தூண்டியது என்றே சொல்லலாம்.
தேவா ஒருபுறம் செல்ல குரு ஒருபுறம் சென்றான். மகதி மற்றொரு புறம் கிளம்பினாள்.
இவர்கள் தனித் தனியே செல்லும் வரைக் காத்திருந்து மாயா பிரத்யுவைச் சந்திக்கக் கிளம்பினாள். இன்று அவன் என்ன செய்வான் என்ன கேள்வி கேட்பான் என்று அவளுக்கு மனதில் பரபரப்பாக இருந்தது.
துணிகளையும் அவள் உபயோகிக்கும் பாடிவாஷயும் வழக்கம் போல கரையில் வைத்துவிட்டு அவனைத் தேடினாள். நேற்று போல திடீரென முன்னே வராமல், கையில் சிறு துனியில் எதையோ எடுத்துக் கொண்டு மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தான்.
அவனைக் கண்டதும் முன்னை விட இப்போது ஏனோ தனக்கு நெருங்கியவன் போன்ற உணர்வு அவளுக்குள் எழுந்தது அவளுக்கே ஆச்சரியம் தான்.
‘ஒரு வேளை அவன் சொன்ன உணர்வுகளுக்கு இது தான் ஆரம்பமோ!’ என அவள் மனம் சொல்ல,
“ம்ம்க்கும். இன்னும் ஆரம்பிக்கவே இல்ல, அதுக்குள்ள அளப்பரையை பாரு!” என மூளை மனதை இடித்தது.
தனக்குள் நடக்கும் இந்த சர்ச்சை அவளுக்கே சிரிப்பை வரவைத்தது.
அவனது கட்டான தேகம் மாயாவின் ஹார்மோன்களை உயிர்ப்பிக்கச் செய்து அவனையே கண்கொட்டாமல் பார்க்க வைத்தது.
அருகில் வந்திருந்தான். அவளோ சிந்தனையின் வசம் ஆழ்ந்து போய்க்கொண்டே இருந்தாள்.
“மாயா!” அவளது முகத்திற்கு முன் சொடக்கிட்டு அவளை விழிக்கவைத்து, அவளிடம் அந்த சிறு துணி மூட்டையைக் கொடுத்தான்.
கண்ணைச் சிமிட்டி அவனைக் கண்டவள், அவன் கொடுத்த மூட்டையை வாங்கிக் கொண்டாள்.
“என்ன இது?” அதைத் திறந்துகொண்டே அவனிடம் கேட்டாள்.
“இது தான் இன்னிக்கு உன்னோட சேர்க்கப் போற பொருள்.”
பிரித்துப் பார்த்து அது மஞ்சள் என்று அறிந்தாள்.முகம் மலர அவனைப் பார்த்து,
“இப்போ நான் என்ன செய்யணும்?” என்றாள்.
“சொல்றேன். அவசரமில்ல. நீ குளிச்சுட்டு நிதானமா வா. நான் இங்கயே இருக்கேன்.” நேற்று போல அங்கிருந்த கல்லில் அமர்ந்து கொண்டான்.
அவன் சொன்னபடியே அவளும் குளித்துவிட்டு புதிதாகப் பூத்த பூப் போல அவன் முன்னே வந்தாள். அவளது வாசம் அவனைக் கவர்ந்தது.
“நம்ம விளையாட்டு உனக்கு ஞாபகம் இருக்கா?” விஷயத்திற்கு வந்தான்.
“ம்ம்.. நீங்க கேக்கற கேள்விக்கு நான் பதில் சொல்லணும்” அவளும் கூற,
“இன்னிக்கு ரொம்ப சுலபமா ஒன்னு கேக்கறேன். அதுக்கு பதில் சொல்லு.” கையைக் கட்டிக் கொண்டு அவள் முன்னே நின்றான்.
“எனக்குத் தெரிஞ்ச மாதிரி கேளுங்க.” சிறு பிள்ளையாய் சிணுங்கினாள்.
அவளது சிணுங்கலில் தொலைந்தவன்,
“உனக்கு எதுலேந்து கேள்வி கேட்கனும்னு நீயே சொல்லு” அவள் வழிக்கே வந்தான்.
“ம்ம்ம்..!!!” என ஆகாயத்தைப் பார்த்து தாடையில் கைவைத்து யோசித்துவிட்டு பின்பு
“திருக்குறள் தெரியுமா உங்களுக்கு. அதுலேந்து வேணா கேளுங்க” தைரியமாகச் சொன்னாள்.
இரண்டடியில் எதற்கு வேண்டுமானாலும் ஒருவார்த்தையை வைத்தே விளக்கம் சொல்லிவிடலாம் என எளிதாகக் கணக்குப் போட்டாள்.
அவனோ வேறுவிதமாக கேள்வி கேட்டான்.
“உதடுகள் ஒட்டாத ஒரு திருக்குறள் சொல்லு பார்ப்போம்” என்று சாதாரணமாகக் கேட்டுவிட்டான்.
“என்னது!! உதடு ஒட்டாத குறளா?!”
“ஆமா”
“இது சரிபட்டு வராது. போன தடவ விளக்கம் தான கேட்டீங்க. இப்போ பாட்டையே கேட்டா எப்படி!?” முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.
அவள் செயலில் சிரிப்புத் தான் வந்தது.
“நான் பாட்டு தான் கேட்பேன்னு உன்கிட்ட சொன்னேனா? ஏதோ ஒன்னு கேட்பேன்னு தான சொன்னேன்.” அவளது தாடையைப் பற்றி நிமிர்த்தினான்.
“நான் அப்படித் தான் நெனச்சேன்.”உதட்டைச் சுழிக்க, அதில் அவன் சுழன்றே விட்டான்.
‘நீ இப்படி எல்லாம் பண்ணா தான் தாங்க மாட்டேன். முதல் நாளே முகூர்த்த நாளாயிடும்.’ மனதுக்குள் மருகினான்.
“இப்போ என்ன பண்ணலாம்!? அதையும் நீயே சொல்லு” தாடையைப் பற்றி இருந்த கைகள் இப்போது தோளுக்கு இடம் மாறி இருந்தது.
மாயா அதைப் பெரிதாக கவனிக்கவில்லை.
“ கேள்வின்னு ஒன்னு கேட்டாச்சு. அதுனால இன்னிக்கு நீங்க பதில் சொல்லுங்க. நாளைக்கு சங்கதி நாளைக்குப் பார்க்கலாம்.” பேச்சுவாக்கில் கையைத் தட்டிவிட்டாள். அதுவும் தெரியாமல் தான்.
“ஹா ஹா. அப்போ இன்னிக்கும் நான் சொல்றத தான் நீ கேட்கணும்.” சம்மதமா என்பது போல அவன் பார்க்க,
“அதான் ஒத்துக்கிட்டேனே. பதில் சொல்லுங்க.” மனமில்லாமல் ஒப்புக் கொண்டாள்.
“யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்”
“இதுக்கு அர்த்தம் உனக்குத் தெரியும்ல?” மீண்டும் அவளிடமே கேட்க,
“தெரியும். ஒருத்தன் எந்தெந்த பொருள் மேல விருப்பம் இல்லாம விலகிப் போறானோ அந்தந்தப் பொருள்களால அவன் வருத்தப் படமாட்டான்.” பளிச்சென்று பதில் சொன்னாள்.
“ரொம்ப அழகா சொல்லிட்ட.” மெச்சினான் பிரத்யும்னன்.
ஆனால் அவனது முகம் சிறிது மாறியது.
அவனது முக வாட்டம் அவளையும் தாக்கியது.
“என்னாச்சு”மனம் தாங்காமல் கேட்டுவிட்டாள்.
“ஒருத்தி மேல எனக்கு இருந்த காதல் இன்னமும் போகல, அது அவ கிடைக்காம இருக்கறதுனால அதிகமான வருத்தம் எனக்கு இருக்கத் தான் செய்யுது. அதை நினைச்சு பார்த்தேன். இந்தக் குறளுக்கு இப்படியும் ஒரு விளக்கம் சொல்லலாம் இல்ல” வேதனையாக வார்த்தைகள் வெளிவந்தன.
மாயாவிற்கு ஏனோ அவனை ஆறுதல் கூறி தேற்ற வேண்டுமெனத் தோன்றியது. ஆனாலும் என்ன சொல்வது எப்படி சொல்வது என்று விளங்கவில்லை. அதற்கு பதிலாகப் பேச்சை மாற்றினாள்.
“கிடைக்கறது கெடைக்காம இருக்காது, கெடைக்காம இருக்கறது கெடைக்காது.” வேகமாகம சொல்ல,
அவளைத் திரும்பிப் பார்த்தான் பிரத்யு,
“என்ன சொன்ன?” எனவும்,
“இது சூப்பர் ஸ்டார் டயலாக்” என சிரித்தாள்.
“ஒ” என முடித்துக் கொள்ள,
“எல்லாம் சரி. இந்த மஞ்சளை என்ன செய்யணும். நானும் குளிச்சுட்டு கொஞ்சம் நடுங்கிக்கிட்டு இருக்கேன் பாஸ்.” என கையில் இருந்த மஞ்சளை அவனுக்கு முன்னே நீட்ட,
அதைக் கண்டதும் பழையபடி ஆர்வமானான்.
“என்கூட வா” நான்கு மரங்கள் சுற்றிலும் இருந்து கீழே சமநிலையாக இருந்த நிலத்தில் அவளை நிற்க வைத்தான்.
அன்று நெருப்பின் சாட்சியாக வைத்து அந்த மாயாவிடம் செய்ததை இவளிடமும் செய்தான்.
இருவரும் நேருக்கு நேராக நிற்க, பிரத்யும்னன் வெறும் தரையில் தீ மூட்டினான்.
பக்கென நெருப்பு மூண்டதும் மாயா பயந்துவிட்டாள்.
அவள் பதறியது பிரத்யும்னன் அறிந்து அவளது இரு கைகளையும் பற்றிக் கொண்டு அவளுக்கு தைரியமூட்டினான்.
பிறகு அவளிடமிருந்து அந்த மஞ்சளை வாங்கி நெருப்பில் காட்டி எடுத்தான்.
மந்திரம் சொல்லி அம்மஞ்சளுக்கு அவர்களுடைய பழைய பந்தத்தை நினைவூட்டி மஞ்சளுக்கு அதனின் பொறுப்பை சொன்னான்.
“நீ என்னுடைய மாயாவின் நெற்றியில் சேர்ந்து முதலில் அவளுக்கு என்னுடைய நினைவை உண்டாக்குவாயாக!” என்று கூறி மாயாவின் நெற்றியில் அதனை லேசாகத் தடவினான்.
மாயாவிற்கு உடல் கூசியது.
அவனது கைகள் மாயாவின் நெற்றியில் பட்டதும் அவளுக்குள் ஒரு சிலிர்ப்பு! பூரிப்பு அனைத்தும் உண்டானது.
மறுநொடி அந்த மஞ்சள் அவளது நெற்றிப் பொட்டில் சென்று மறைந்தது.
அது மறைந்ததும் பிரத்யும்னன் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தான்.
“இனி ஒவ்வொன்றாக தானாக நிகழும்” அவளிடம் சொல்ல,
கண்மூடி அவனது தொடுகையில் லயித்திருந்தவள், அந்த வார்த்தையில் கண்விழித்தாள்.
இப்போது பிரத்யுவின் கண்களில் வழியும் காதலை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. அந்தக் காதல் தனக்கானதாக வேண்டும் என்ற ஆவல் அவளிடம் முன்னை விட இப்போது அதிகமாவதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.
“மாயா!”
“ம்ம்ம்”
“முதன்முதலா மஞ்சளை உன்கிட்ட சேர்த்துட்டேன். எனக்கு அதுபோதும். ஆனா போட்டில நீ இன்னைக்கு தோத்ததுக்கு நான் சொல்றதை கேட்கனுமில்ல” இழுத்தான்.
“அதுக்கு!” என்னவென்று அவள் யோசிக்கும் முன் ,
“உன்னோட அனுமதியோட..”நெருங்கி வந்தவன் கைகளால் தீண்டிய அவளது நெற்றியை மீண்டும் ஒருமுறை தடவிப் பார்த்தான்.
கண்மூடி அந்த ஸ்பரிசத்தை உள்வாங்கிக் கொண்டாள் மாயா.