En Jeevan niyadi 11

En Jeevan niyadi 11

11
கடல் காற்று அள்ளிக் கொண்டு போகும் பெசன்ட் நகர் கடற்கரையோர பங்களா. பொழுது சாயும் வேளை வந்ததால் மின் விளக்குகளால் குளிப்பாட்டப்பட்டு பளிச்சென்று இருந்தது. உயர் மத்திய வகுப்பினர் வசிக்கும் பகுதி அது. அவ்வளவாக நெரிசல் இல்லாத சாலை.

ஆளுயர காம்பௌண்டு சுவர் அதன் மேல் படர்ந்துள்ள போகன் வில்லா வீட்டுக்கு அழகூட்டியது என்றால் விசாலமான போர்டிகோவும் அதில் நின்ற ஸ்கார்ப்பியோவும் கம்பீரத்தைக் கொடுத்தது.

மாடி பால்கனியில் உருண்டை வடிவிலான லாம்ப் வெளிச்சத்தை சிந்த, அங்கு கட்டப் பட்டிருந்த கூடை ஊஞ்சலில் சுருண்டு அமர்ந்திருந்தாள் ஜானவி. மனம் படபடப்பாக இருப்பதால் கையில் வைத்திருந்த கிட்காட் சாக்லேட் வேகமாய் உள்ளே சென்று கொண்டிருந்தது.

கடற்காற்று முகத்திற்கு முடிக்கற்றைகளை விடாமல் அனுப்ப, விரல்கள் தாமாக ஒதுக்கியபடி இருந்தது. தீவிர சிந்தனையோடு தூரத்தில் தெரிந்த கலங்கரை விளக்கை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.

ஸ்ரீராம் கேட்ட கேள்விக்கு அவனிடம் ஏதோ ஒரு பதிலைக் கூறி உளறி கிளறி மூடிவிட்டு வந்திருந்தாள். .வீட்டுக்கு வந்ததிலிருந்து அதே கேள்வி சுற்றி சுழன்றடித்தது அவளை. அவ்வளவு சிரமப்பட்டு அவனுக்கு அவளை நினைவு படுத்த எண்ணியது ஏன்?

கல்லூரியில் ஸ்ரீராமுடன் இணைந்து படித்தது ஒரு வருடம்தான். இவள் முதலாண்டு முடிக்கவும் அவன் கல்லூரிப் படிப்பு மொத்தமும் முடித்துச் சென்றிருந்தான். இருவரும் ஒரே டிபார்ட்மெண்ட் என்பதால் சில நிகழ்வுகளில் சந்தித்ததை தவிர பேசியது கூட கிடையாது.
.கல்லூரியில் அர்ஜுனுக்கும் ஸ்ரீராமுக்கும் நிறைய ரசிகைகள் உண்டு. கால்பந்தாட்டப் போட்டியாகட்டும், கல்லூரி கல்சுரல்ஸாக இருக்கட்டும் இருவருமே வெகுவாக முன்னிறுத்தப்படுவர்.

இருவருக்கும் இரு அணிகளாக மாணவியர் பிரிந்து குரலெழுப்பி உற்சாகப் படுத்துவதும் அவ்வப்போது நடக்கும்.

அப்பொழுதெல்லாம் ஸ்ரீராமுக்கு ஆதரவாக குரலெழுப்பியிருக்கிறாள்.
அமைதியான அர்ஜுனை விட ஆர்ப்பாட்டமான ஸ்ரீராமை அவளுக்குப் பிடிக்கும். ஆனால் அவர்கள் கல்லூரியை விட்டு போனபிறகு மீண்டும் சந்தித்ததுகூட கிடையாது.

ஃபிரெஷ்ஷர்ஸ் பார்ட்டியின் போது இருவரும் இணைந்து பாடியதுகூட எதேர்ச்சையாக நிகழ்ந்த நிகழ்வுதான். அதை அவன் நினைவு வைத்திருக்க வேண்டும் என்று ஏன் என் மனம் எதிர்பார்த்தது? ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு.

இரத்ததான முகாமில் அவனை அத்தனை வருடங்கள் கழித்துப் பார்த்தபோது, அவளைக் கேட்காமலேயே அவளது செல்கள் குத்தாட்டம் போட்டன. ஆசையோடு ஆர்வத்தைத் தேக்கி அவன் முகத்தையே இவள் பார்த்திருக்க அவனுக்கோ இவள் யாரென்றுகூட தெரியாதது ஒருவித ஏமாற்றத்தைத் தந்தது அவளுக்கு.

போதாக்குறைக்கு அந்த இரத்ததான முகாமில் ஒரு சிறு ஊசியைக் குத்திக் கொள்ள இவளிடம் அவன் செய்த அலப்பறைகள் மீண்டும் கல்லூரிக்கால ஸ்ரீராமை அவள் முன் கொண்டு வந்து நிறுத்தியது.

அன்று அவனோடு செலவழித்த ஒரு மணி நேரமும் அவனது முகத்தை ஆவலாக பார்த்தபடியே இருந்தாள்.

ஏதாவது ஒரு கணத்தில் தன்னை அவனுக்கு அடையாளம் தெரிந்துவிடாதா என்று.

மறுமுறை பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சுவரேறிக் குதித்தபோது அவனை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை அவள்.

அப்பொழுதும் அவனுக்கு அவளை யாரென்று தெரியவில்லையே என்ற கடுப்பில் அவனோடு வம்பு வளர்த்தவளுக்கு, இவள் யாரென்ற குழப்பத்தோடு திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே சென்ற ஸ்ரீராமைப் பார்த்து சிரிப்புதான் வந்தது.

நன்றாகக் குழம்பித் தவிக்கட்டும் என்று எண்ணிக் கொண்டவள் அவனது முகப்புத்தகம் டிவிட்டர் பக்கங்களில் இருந்த அவனது விபரங்களைச் சேகரித்துக் கொண்டாள். சத்தமில்லாமல் அவனது புகைப்படங்கள் இவளது மடிக்கணினிக்குக் குடியேறியது.

ஜானவியின் மாமன் மகளுக்கு வரன் பார்க்க மேட்ரிமோனியை அவளும் அவளது தாயும் சேர்ந்து குடைந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராமல் கண்ணில் பட்டது அவனது பதிவு.

ஏதோ ஒருவேகத்தில் அதில் இருந்த அவனது மின்னஞ்சல் முகவரியை எடுத்தவள் அவளது ஜாதகத்தையும் பயோடேட்டாவையும் அவனுக்கு அனுப்பிவிட்டாள். இதைப் பார்த்தால் கண்டிப்பாகத் தன்னைத் தொடர்பு கொள்ளுவான் என்று திடமாக எண்ணினாள்.

ஆனால் எதிர்பாரத இன்றைய சந்திப்பில் அவனது கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை அவளால். நிஜமாகவே அவனிடம் நான் எதிர்பார்த்தது என்ன?

எதற்காக அவனது கவனம் என்னை நோக்கி இருக்க வேண்டும் என்று எண்ணினேன்.

ஸ்ரீராமை அவளுக்குப் பிடிக்கும்தான், ஆனால் இத்தனை வருடங்களில் அவன் முகம் கண்ணுக்குள்ளேயே இருந்தது என்று பொய்யாகவெல்லாம் சொல்ல விரும்பவில்லை. அன்று இரத்ததானமுகாமில் அவனுக்கு அவளைப் பார்த்ததும் நினைவுக்கு வந்து இயல்பாக பேசியிருந்தால் அவள் சாதாரணமாக அவனைக் கடந்திருக்கக்கூடும்.

அவனுக்கு எப்படி என்னைத் தெரியாமல் போகலாம் என்று கச்சைகட்டி ஏதேதோ செய்யப் போக…

அதிலும் ஜாதகம் அனுப்பியது கொஞ்சம் ஓவர்தான் என்று எண்ணிக் கொண்டாள்.

ஆனால் உள்ளூர ஸ்ரீராம் மீதான தனது விருப்பம்தான் தன்னை இவ்வாறெல்லாம் செய்யத்தூண்டியது என்பதை ஒப்புக்கொள்ள மறுத்தது இதயம்.

அவனது புகைப்படங்களை ஏன் எடுத்து வைத்துக் கொண்டாய் என்ற மனதின் கேள்விக்கு இதுவரை பதிலே இல்லை அவளிடம்.

தானாக வலியப் போய் அவனிடம் வழிந்தது போல ஆகிவிட்டதே. தவறாக எண்ணியிருப்பானோ என்னை. இனி எந்தத் தொடர்பும் அவனோடு வைத்துக் கொள்ளக்கூடாது என்று பிரசவ கால வைராக்கியம் போல மனதில் சபதம் எடுத்தவள், உணவு உண்ண அழைத்த தாயிடம் வேண்டாம் என்று கூறிவிட்டு ஊஞ்சலில் சுருண்டு கொண்டாள்.

அலைபேசி மெஸேஜ் வந்த ஓசையை எழுப்பவும் அதனை எடுத்துப் பார்த்தவள் இன்பமாக அதிர்ந்தாள். ஸ்ரீராம்தான் ஹாய் என்று அனுப்பியிருந்தான்.

பதில் கொடுக்கலாமா வேண்டாமா என்று சில நொடிகள் தடுமாறியவள், ஹாய் என்ற பதிலை அனுப்பினாள்.

“இப்ப எங்க தரையில இருக்கியா எதுலயாவது தொங்கிகிட்டு இருக்கியா?” சிரிப்பு ஸ்மைலியுடன் வந்து விழுந்தன வார்த்தைகள்.
உர்… என்று கோப முகம் காட்டும் ஸ்மைலியை அனுப்பியவள்,

‘ஊஞ்சல்ல உட்கார்ந்திருக்கேன்.’

‘இப்பவும் தொங்கிட்டுதான் இருக்க தரையில இல்லை…உன்னை ப்ரூஃப் பண்ணிகிட்டே இருக்க’ கண்ணில் நீர் வர சிரிக்கும் ஸ்மைலி.

“ஹலோ… மங்கியோட பிரெண்டும் மங்கிதான் புரியுதா…”
என்ன பேசுகிறோம் என்று புரியாமலே அர்த்தமில்லாத கேலி கிண்டல்களுடன் கூடிய மெஸேஜ்கள் பறந்தன. சந்தோஷமாக அவனுடனான சாட்டிங்கை முடிக்கும்போது முழுதாக இரண்டு மணி நேரங்கள் ஓடியிருந்தன.

அவனுடன் சரிக்கு சரி கொடுத்த பதில்களை எண்ணிச் சிரித்தபடி வந்து படுக்கையில் சரிந்தவள், அவனோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று சற்று முன் எடுத்த முடிவு நினைவுக்கு வர,

‘நானா மெஸேஜ் பண்ணலை இல்ல. அவராதான முதல்ல ஆரம்பிச்சாரு அதனால தப்பில்லை’ என்று தனக்குத்தானே சப்பைகட்டு கட்டிக்கொண்டு சுகமாக அவனை எண்ணியபடி தூங்கிப் போனாள்.

வழக்கம் போல நாட்கள் நகரத் தொடங்க, அன்று விடுமுறை தினத்தன்று எப்பொழுதும் போல காலையில் எழுந்து சரஸ்வதிக்கும் செங்கமலத்துக்கும் சிறு சிறு உதவிகள் செய்தபடி இருந்த சுபத்ராவை அழைத்தான் அர்ஜுன்.

எதற்கு கூப்பிடுகிறான் என்று புரியாமல் வந்து நின்றவளிடம் சில விண்ணப்பங்களைக் கொடுத்து நிரப்பச் சொன்னவன், சில பத்திரங்களிலும் கையெழுத்து வாங்கினான். மறுபேச்சு பேசாமல் சொன்ன இடத்தில் எல்லாம் நம்பிக்கையோடு கையெழுத்து போடுபவளை கனிவோடு பார்த்திருந்தவன், “இதெல்லாம் என்னன்னு கேக்க மாட்டியா?”

“எதுக்கு கேக்கனும்? நீங்க எது செய்தாலும் சரியாதான் இருக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.”
இருவரும் பேசிக் கொண்டிருக்க, என்ன நடக்கிறது என்று பார்த்தபடி வந்தமர்ந்தார் மணிவாசகம்.

“என்ன மாப்ள? ஏதோ கையெழுத்தெல்லாம் வாங்கற.”

“ஒன்னுமில்ல மாமா. கம்ப்யூட்டர் கிளாஸ் சேர்க்க அப்ளிகேஷன் ஃபார்ம்ல சைன் வாங்கினேன்.” பதில் கூறியவன் நிற்காமல் எழுந்து சென்றுவிட, இவளுக்குதான் குழப்பமாகிப் போனது. ‘பத்திரம் மாதிரி ஏதோ கையெழுத்து வாங்கினாங்க. இவர்கிட்ட ஏன் மறைக்கிறாங்க’ என்று யோசித்தபடி நகர்ந்தாள்.

அப்பொழுது அங்கே வந்த லோகேஸ்வரி, “ஏய் பொண்ணு… தலையை வலிக்குது நல்லா ஸ்ட்ராங்கா ஒரு காபி போட்டுக் கொண்டு வா” என்று ஏவவும் சமையலறைக்குள் சென்று காபி தயாரித்து எடுத்து வந்து மணிவாசகத்துக்கும் லோகேஸ்வரிக்கும் தந்தாள்.

அப்பொழுதுதான் எழுந்து வந்த ஸ்வேதாவும் அதே போல மரியாதையின்றி வேலை ஏவ, அவளுக்கும் காபி கலந்து எடுத்துச் சென்றவளை வெகுவாக கடிந்து கொண்டார் சரஸ்வதி.

“இங்க பாரு நீ இப்ப அர்ஜுன் மனைவி. நியாயமா இந்த வீட்டுக்கு எஜமானி. நீ எதுக்கு இந்த வேலையெல்லாம் செய்யற?”

“ஹைய்யோ… அதனால என்ன அத்தை. பெரியவங்க தலைவலிக்குதுன்னு கேட்டாங்க அவங்களுக்கு செய்ததுல என்ன தப்பு?”

“சரி… அவங்கதான் பெரியவங்க. இந்த ஸ்வேதாவுக்கு நீ செய்ய வேண்டிய அவசியம் இல்லை. புரியுதா.”

சுபத்ராவை வெகுவாக கடிந்து கொண்டவர் ஸ்வேதாவிடமும் எச்சரித்திருந்தார். சுபத்ராதான் இந்த வீட்டுக்கு எஜமானி என்ற சரஸ்வதியின் வார்த்தையில் அகங்காரம் கொண்டு ஆடிய ஸ்வேதாவையும், தங்கறதுக்கு இடமில்லாம இங்க வந்தவ என்ற வார்த்தையை விட்ட லோகேஸ்வரியையும் வெகுவாக அடக்கியிருந்தார்.

 

“இந்த வீடு அவ புகுந்த வீடு. பக்கத்து வீடு அவ பிறந்த வீடு. இரண்டு வீட்டுக்குமே உரிமைப் பட்டவ அவதான். அவ ஒன்னும் வேற யார் வீட்லயோ போய் இருக்கல. அவளை எந்த வேலையும் சொல்ற உரிமை உங்களுக்கு இல்லை. அர்ஜுன் சொன்னபடி ஒரு வருஷம் முடியறவரை இவதான் இந்த வீட்டு எஜமானி அதை மறக்காதீங்க.

உங்களுக்கு எது பேசறதா இருந்தாலும் அர்ஜுன்கிட்ட பேசிக்கோங்க புரியுதா.”
நீதான் உன் சொந்த வீட்ல இல்லை. அர்ஜுனின் வீட்டில் அண்டியிருக்கிறாய் என்ற சரஸ்வதியின் பதிலடியில் கொதித்துப் போனவள் அர்ஜுனிடம் சென்று முறையிட அவனோ,

“பெரியம்மாவைப் பத்தி எதுவுமே என்கிட்ட பேசாத. அவங்க எது செய்தாலும் சரியாதான் இருக்கும். வீட்ல இத்தனை வேலைக்காரங்க இருக்கும் போது சுபத்ராவை நீ ஏன் வேலை செய்யச் சொல்ற? அதனாலதான் அவங்களுக்கு கோபம் வந்திருக்கும்.

உன்னைப் போலவே அவளும் இந்த வீட்டுப் பொண்ணுதான். என்ன… நம்மையெல்லாம் விட்டுட்டு கொஞ்சநாள் பிரிஞ்சு போய் வாழ்ந்திருந்தாங்க அவ்வளவுதான்.

அதுக்காக அவளை அடிமை மாதிரி நடத்தலாம்னு நினைக்காதே.
எனக்காக எந்த சொத்துமே வேணாம்னு பெருந்தன்மையா சொன்ன பொண்ணு அது. அதுக்கு எதாவது கஷ்டம் இந்த வீட்ல நடந்தா நான் சும்மா இருக்க மாட்டேன்.

இனியாவது பொறுப்பா நடந்துக்கோ.”
அர்ஜுனின் பதிலில் மேலும் கொதித்துப் போனவள் உள்ளுக்குள் கருவிக் கொண்டாள். ‘இருங்க இந்தப் பிரச்சனை எல்லாம் ஓய்ஞ்சு நம்ம கல்யாணம் நடந்த பிறகு அந்த சுபத்ராவையும் சரஸ்வதியையும் ஓட ஓட விரட்டுறேன். அப்ப தெரியும் இந்த ஸ்வேதா யாருன்னு.’

அதன் பிறகு சுபத்ராவிடம் இருந்து தள்ளியே இருந்து கொண்டாள் ஸ்வேதா. அவளது ஆசையின் படி பொட்டீக் வைப்பதற்கான ஆயத்த வேலைகளில் தன்னை மும்முரமாக ஈடுபடுத்திக் கொண்டாள்.

மணிவாசகமும் அலர்மேல்மங்கை உயிருடன் இருந்தவரை கம்பெனிக்குப் போவதைப் பற்றி எண்ணாமல் இருந்தவர், அதன்பிறகு அர்ஜுனிடம் கேட்டு தினமும் அனைத்து மில்லுக்கும் சென்று மேற்பார்வையிட்டு வந்தார்.

இப்படியே நாட்கள் செல்ல, காலையில் கம்பெனிக்கு கிளம்பிக் கொண்டிருந்த அர்ஜுனிடம் வந்த சரஸ்வதி,

“கண்ணா, சுபத்ராவுக்கு நல்லதா ட்ரெஸ் கொஞ்சம் எடுக்கனும்பா. உங்க கல்யாணத்தப்ப அவசரமா நான் எடுத்த நாலு புடவையையே மாத்தி மாத்தி போட்டுக்கறா. தானா வாயைத் திறந்து கேட்கவும் மாட்டா. நாமதான் பார்த்து செய்யனும்பா.”

“இதுக்கு நீங்க என்கிட்ட கேட்கனுமா பெரியம்மா. அவளைக் கூட்டிட்டு போய் அவளுக்குத் தேவையான எல்லாமே வாங்கிட்டு வந்துட வேண்டியதுதானே”

‘டேய்… அது எனக்குத் தெரியாதா? அவளுக்கு என்ன தேவையோ அதையெல்லாம் நீ பார்த்துச் செய்யனும்னுதானே நான் உன் கிட்ட பேச வந்தேன்’ மனதிற்குள் கடிந்து கொண்டவர்,

“வயசானவ ஏதோ எனக்குத் தெரிஞ்ச மாதிரி நாலு சேலை எடுத்திருந்தேன். எனக்கு இந்த சுடிதார் பத்தியெல்லாம் என்ன தெரியும்?

சுபத்ராவுமே கிராமத்துல வளர்ந்த புள்ள. இப்ப இருக்கற ஃபாஷன் பத்தி அவளுக்கும் ஒன்னுமே தெரியாது. அதான் உன்கிட்ட சொன்னேன். நீயே கூட்டிட்டு போய் வாங்கிக் குடுப்பா.”
சரி பெரியம்மா என்றவன்,

ஸ்வேதாவை அழைத்து சுபத்ராவுக்கு நல்ல உடைகளை தேர்ந்தெடுத்து தரச் சொன்னான்.

“ஸ்வேதா… சுபத்ராவுக்கு லேட்டஸ்ட் டிசைன்ல புடவை சல்வார் எல்லாம் தேர்ந்தெடுத்துக் குடு. என்னோட கார்ட் எடுத்துட்டு போங்க.

விலையைப் பத்தி கவலைப்படாம அவளுக்குப் பிடிச்ச மாதிரி வாங்கிட்டு வாங்க.”

எரிச்சலின் உச்சத்துக்கே போனாள் ஸ்வேதா, “அவளுக்கு இப்ப ட்ரெஸ் வாங்கி தர்றதுதான் எனக்கு முக்கியமான வேலையா? நான் என்னோட பொட்டீக் ஆரம்பிக்கறதுக்காக அலைஞ்சிகிட்டு இருக்கேன். என்னால முடியாது மாமா.”
மறுத்துப் பேசிவிட்டு தனது தாயை அழைத்துக் கொண்டு அவள் வெளியே சென்றுவிட, அர்ஜுனே சுபத்ராவை அழைத்துக் கொண்டு பிரபலமான துணிக்கடைக்கு சென்றான்.

காரில் மெல்லிய குரலில் உன்னிக் கிருஷ்ணன் ‘என்னவளே அடி என்னவளே’ என்று உருகிக் கொண்டிருந்தார். வெளியே வேடிக்கை பார்ப்பது மட்டுமே உலகின் முக்கிய வேலை என்பது போல ஜன்னலோடு ஒட்டிக் கொண்டு தலையைத் திருப்பாமல் உட்கார்ந்திருந்தாள் சுபத்ரா.

போகவே மாட்டேன் என்று அடம் பிடித்தவளை சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதற்குள் சரஸ்வதிக்கு பெரும் பாடாகிப் போனது.

“எனக்கு எதுக்கு அத்தை புதுசா ட்ரெஸ். இப்பதான் நீங்க நிறைய புடவை வாங்கித் தந்தீங்க. நான் ஊர்ல இருந்து எடுத்து வந்த ட்ரெஸ் எவ்வளவு இருக்கு. ஏன் தேவையில்லாம செலவு பண்ணி வாங்கனும்? வேணாம் அத்தை.”

“சும்மா இரு சுபத்ரா. பாவாடை தாவணி எல்லாம் இனி போடாதே. அர்ஜுன் மனைவி நீ. அதுக்கு ஏத்த மாதிரி உன்னுடைய உடை இருக்கனும். வீட்லயும் நல்லதா உடுத்தனும். அதுக்குத் தகுந்த மாதிரி தேர்ந்தெடு.

வெளிய விசேஷங்களுக்கு போட்டுட்டுப் போக பட்டுப் புடவை ஃபேன்சி சேலை எடு. தினமும் மில்லுக்கு கட்டிட்டுப் போக நல்ல தரமான காட்டன் புடவை வகைகள் எடு. சாதாரணமா வெளிய போடவும் வீட்ல போடவும் சுடிதார் வகைகள் உனக்குப் பிடிச்ச மாதிரி எடும்மா.

பணக் கணக்கு பார்த்து செலவு பண்ற குடும்பமில்லை உன்னுது. செலவெல்லாம் யோசிக்காத. தேவையில்லாத யார்யாருக்கோ பண்றான் உனக்குப் பண்ண மாட்டானா?”
சரஸ்வதியையும் கூட வருமாறு அழைக்க ஏதேதோ சாக்குகள் சொல்லி இருவரை மட்டும் தனியே அனுப்பியிருந்தார்.

‘வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி…
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி…”

காருக்குள் ஒலித்த பாடல் வரிகளில் வைரமுத்து உணர்த்திக் கொண்டிருந்த அவஸ்த்தையை சுபத்ரா உணர்ந்தாள். அர்ஜுனின் பார்வை அவ்வப்போது தன்னைத் தழுவிச் செல்வதை உணர்ந்தது அவளது புலன்கள்.

இத்தனை நாட்களில் அவனது அருகாமையில் அவள் இதுவரை உணர்ந்திராத ஒன்று, அந்தப் பார்வையில் இருப்பது போலத் தோன்றியது. திரும்பி அந்தப் பார்வையைச் சந்திக்கத் திராணியின்றி தலையை இம்மிகூட அசைக்காமல் வெளியே பார்த்தபடி வந்தாள்.

“பார்த்து… தலையாலேயே முட்டி கண்ணாடியை உடைச்சி அந்தப் பக்கம் விழுந்துடப் போற.”
திடுமென்று அவனது குரலில் அதிர்ந்தவள் அதிலிருந்த கேலியை உணர்ந்து சரியாக அமர்ந்தாள்.

“என்ன ஆச்சு சுபா. ஏன் நெர்வஸ்ஸா இருக்க?”
சுபா என்ற அவனது அழைப்பு அன்னையை நினைவு படுத்த, சற்று நெகிழ்ந்த முகத்தோடு ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள்.

“என் மேல எதுவும் கோபமா சுபா உனக்கு. நம்ம வீட்டுக்கு வந்த அன்னைக்கு என்கூட உட்கார்ந்து மனசுவிட்டு சகஜமா பேசுன சுபா இப்ப இல்லையே ஏன்?”

“…”

“உன்கிட்ட ஒரு வார்த்தைகூட கேட்காம என்னோட பிரச்சனைக்குத் தீர்வா உன்னை நடுவுல நிறுத்துனது தப்புதான். என்னை மன்னிச்சிடும்மா.” அவனது குரலில் வருத்தத்தை உணர்ந்தவள் பதறிப் போனாள்.

“ஐயோ… நீங்க ஏன் மன்னிப்பு கேட்கறீங்க. எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்லை. அந்த ஊர்ல அதுக்குமேல என்னால இருந்திருக்க முடியாது. அந்த ராஜேந்திரன் ரொம்ப மோசமானவன். அந்த ராஜேந்திரனுக்கு பயந்துதான் நான் ஊரைவிட்டு வந்ததே.

வேற எங்கயும் போய் தனியா இருக்கற அளவுக்கு தைரியமாவும் நான் வளரலை. நான் இங்க வந்திருக்கலைன்னா உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையே. நான் வந்ததாலதான இவ்வளவு பிரச்சனையும்.

நான் மட்டும் வராம இருந்திருந்தா இன்னேரம் உங்களுக்கும் ஸ்வேதாவுக்கும் கல்யாணம் ஆகியிருக்கும். நியாயமா நான்தான் மன்னிப்புக் கேட்கனும்.”

“சேச்சே… நீ இங்க வந்ததாலதான் பாட்டிக்கு அவ்வளவு மன அமைதி கிடைச்சது. அவங்களோட கடைசி காலத்துல குற்றவுணர்ச்சி இல்லாம நிம்மதியா கண்மூட நீதான் காரணம்.”

நெகிழ்ந்த குரலில் கூறியவன் தனக்குள் முனுமுனுப்பாக,

“நீ வந்ததாலதான் நல்லது எது கெட்டது எதுன்னு என்னால பிரிச்சுப் பார்க்க முடிஞ்சது. நீ மட்டும் வரலைன்னா என்னால எதையுமே புரிஞ்சுக்க முடியாம போயிருக்கும்.”
அவன் பேசுவது புரியாமல் அவனது முகத்தைப் பார்த்தவளைப் பார்த்துப் புன்னகைத்தவன்.

“எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடு சுபா. நம்ம இரண்டு பேரோட வாழ்க்கையையும் சந்தோஷமா மாத்த வேண்டியது என்னோட பொறுப்பு. கண்டிப்பா மாத்திடுவேன் எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.”
புன்னகையோடு தலையசைத்தவளை விழிகளில் நிரப்பிக் கொண்டவன்,

போக்குவரத்தில் கவனத்தைச் செலுத்தினான்.

கடைக்கு வந்ததும் முதலில் புடவைகள் பகுதிக்கு அழைத்து வந்தவன் சரஸ்வதி கூறியது போலவே பட்டுப் புடவைகளை முதலில் பார்த்து தேர்ந்தெடுத்தான்.

அவளது நிறத்துக்கு தோதாக இருக்குமா என்று ஒவ்வொரு புடவையாக அவள்மீது இயல்பாக வைத்துப் பார்த்தவனின் தொடுகையில் அவள்தான் கூசிச் சிலிர்த்துப் போய் நின்றிருந்தாள்.

அவன் உனக்குச் சொந்தமில்லாதவன். நீ நடிக்க வந்தவள் என்று அறிவு உணர்த்திக் கொண்டே இருந்தாலும், மனமோ அவனது அருகாமையில் மயங்கி நின்றது.

கூட்டத்தில் நடக்கும் போது அவளது தோளோடு அணைத்தபடி நடந்தான். லிப்ட்டில் கூட்டத்தில் இயல்பாக ஒதுங்கியவளை, தன்னோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டான்.

அவனது இயல்பான செய்கைகளில் மயங்கி நிற்கும் மனதை அடக்கத் தெரியாமல் தவித்துப் போனாள் சுபத்ரா.

அவளது அவஸ்தைகளை அவன் உணர்ந்தாலும் கண்டு கொள்ளாமல் இயல்பாக அவளை அருகே நிறுத்திக் கொண்டு ஒவ்வொன்றிலும் அவளது அபிப்ராயத்தைக் கேட்டுக் கேட்டுத் தேர்ந்தெடுத்தான்.

போதும் போதும் என்றவளின் சொல்லைக் கேட்காமல் பட்டுப் புடவைகளும் டிசைனர் புடவைகளும் காட்டன் புடவைகளும் வாங்கிக் குவித்தவன், அடுத்து சுடிதார் வகைகளைத் தேர்ந்தெடுக்க அழைத்துச் சென்றான்.

ஒவ்வொன்றாக அவளை அணிந்து காட்டச் சொல்லி தேர்ந்தெடுத்தான். ஒவ்வொரு உடையும் அவளுக்குப் பொருத்தமாக இருக்கிறதா என்று அவன் பார்க்கும் பார்வைகள்கூட அவளை நெளியச் செய்து கொண்டிருந்தது.

அவளுக்குப் பொருந்தும் வகையில் அனைத்து புதிய மாடல்களிலும் சுடிதார்களைத் தேர்ந்தெடுத்தவன், அவளுக்கு வேண்டிய அத்தியாவசிய உள்ளுடைகளை வாங்கச் சொன்னான்.

பின்னர் தைத்து அணியக்கூடிய வகையிலான சுடிதார் மெட்டீரியல்களையும் வாங்கிக்கொண்டு வந்து பில்லைச் செலுத்திவிட்டு இரு கைகளிலும் கொள்ளாத அளவுக்கு பார்சல்களோடு வெளியே வந்தனர்.

வீட்டுக்கு வந்து அனைத்தையும் சரஸ்வதியிடம் காட்ட, அவருமே பெரிதும் மகிழ்ந்து போனார்.

“இன்னைக்கு சாயங்காலம் நீயும் நானும் போய் இந்த ஜாக்கெட் சுடிதார்லாம் தைக்கக் கொடுத்திட்டு வரலாம். எல்லாமே அழகா இருக்கு. அர்ஜுன்தான் செலக்ட் பண்ணானா?”

ஆமாம் அத்தை என்ற லேசான வெட்கப் புன்னகையுடன் கூறியவளை வாஞ்சையோடு பார்த்துக்கொண்டது சரஸ்வதியின் விழிகள். திருமணம் முடிந்த கையோடு காதுகளில் ஒற்றை தோடு மட்டும் அணிந்து கொண்டு தாலிச் செயினை தவிர்த்து அனைத்து நகைகளையும் கழட்டி சரஸ்வதியிடம் தந்திருந்தாள் சுபத்ரா.

அவள் வேலைக்குச் சென்ற அன்றுதான் வெறும் கையாக இருக்கக் கூடாது என்று கையில் சில வளையல்களையும் கழுத்துக்கு மெல்லிய செயினும் காதுகளில் போட ஜிமிக்கியும் எடுத்துக் கொடுத்திருந்தார். உடைகளையும் இனி அழகாக அணிவாள்.

இயல்பான அழகு இவற்றால் இன்னும் அதிகரிக்கும் என்று எண்ணிக் கொண்டார் சரஸ்வதி.

“சரி… பத்திரமா எடுத்திட்டு போய் எல்லாத்தையும் உள்ள வைம்மா.”
சரியென்று தலையசைத்தவள், அவர் அறையிலிருந்து வெளியே வரும் போது ஹாலில் அமர்ந்திருந்த ஸ்வேதாவிடம் விகல்பமில்லாமல் அனைத்தையும் காட்ட, ஸ்வேதாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

அவள் வாங்கியிருந்த துணி வகைகளைப் பார்த்து வயிரெறிந்தது. அர்ஜுன் ஒருநாள்கூட தனக்கு இப்படி பார்த்துப் பார்த்து வாங்கித் தந்ததில்லை என்பதை நினைத்துக் கொண்டாள்.

“ஃபாஷன் டிசைனிங் படிக்கிற உனக்குத் தெரியாத டிசைனா? நீயே உனக்குப் பிடிச்சதை பார்த்து எடுடா” என்று விடுவான்.

‘என்னைதான் போகச் சொன்னார். நானே போயிருக்கலாம். ஏதோ இரண்டு மூனு எடுத்துட்டு வந்திருப்பேன். அவரே கூட்டிட்டு போனதுமில்லாம இவ்வளவு அள்ளிகிட்டு வந்திருக்கா’ என்று உள்ளுக்குள் பொருமியவள்,

“உனக்குக் கொஞ்சம்கூட விவஸ்தையே இல்லையா. அவர்தான் கூப்பிட்டாருன்னா அவர்கூட நீபாட்டுக்கு ஜோடிபோட்டுப் போய்டுவியா? உன்னோட நிலை எதுன்னு உனக்குத் தெரிய வேணாம்.
அவர் என்னோட மாமா. நானே அவர்கூட வெளிய ஜோடி போட்டு போகறதில்லை. உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா போயிருப்ப. நீ நடிக்க வந்தவ அதை மறந்துடாத.

இன்னும் ஆறுமாசத்துல பதிவு பண்ணனும். அடுத்த நாலைஞ்சு மாசத்துல விவாகரத்து கிடைச்சிடும். அதுக்கப்புறம் ஒரு நொடிகூட நீ இந்த வீட்ல இருக்கக்கூடாது. நீ போட்டுகிட்டு மினுக்கறியே எல்லா நகையையும் கழட்டி வச்சிட்டுப் போகனும். தாலி உட்பட.”
கண்களில் நீர்முட்டக் குனிந்து நின்றவள் கடைசி வரிகளில் கண்ணீர் வழிய நிமிர்ந்து பார்க்க,

“என்ன பார்க்குற? அது பதினாறு பவுன் சங்கிலி. உன்கிட்ட தரச் சொல்றியா? நீ போட்ட எதையும் நான் போட மாட்டேன்தான். ஆனாலும் பவுன் விக்கிற விலையில அதை உனக்குத் தரமாட்டேன் தெரிஞ்சுக்கோ.”

“உனக்குப் பணம்தான முக்கியம். கவலைப்படாத இந்த தாலிக்கு உண்டான காசை உன்கிட்ட குடுத்திட்டுதான் நான் இந்த வீட்டை விட்டுப் போவேன்.” அழுகையோடு கூறியவள் உள்ளே ஓடிவிட…

வெளியே இருந்தவளோ சுபத்ரா கூறிச் சென்றதின் அர்த்தம் பிடிபடாமல் திகைத்து நின்றாள்.

தொடரும்…

error: Content is protected !!