மேஜிக் 19
நந்தனாவின் கைப்பேசி ஒலிக்க, அதை எடுத்தவள் கோவமாக,
“என்ன வேணும் ?” என்று கடுகடுக்க
அவளுக்குத் தன் எண்ணத்தைப் புரியவைக்கப் பொறுமையாகப் பேசினான் நிரஞ்சன் “பேபி ப்ளீஸ் கோவப் படாம நான் சொல்றதை கேளு”
“என்ன சொல்லப்போறீங்க? நான் ஊட்டிக்குப் போகக் கூடாதுன்னு தானே?”
“ம்ம் எஸ்! சென்னலையே ஏதாவது இடம் இருக்கா பாரேன், நான் வேணும்னுனாலும் லொகேஷன் பார்த்துத் தரேன்”
“எப்போ டாக்டர் வேலையை விட்டு, சார் இந்த வேலை ஸ்டார்ட் பண்ணீங்க?” கோவமும் கிண்டலும் கலந்த குரலில் அவள் கேட்க
“ப்ளீஸ் நான் என்னாலான உதவியை பன்றேன்னு சொல்றேன், நீ ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குறே பேபி?” ஆதங்கமாய் கேட்டான்
“நான் ஏன் சார் உங்களை புரிஞ்சுக்கணும்? என்ன உரிமையில் நீங்க இப்படி எல்லாம் செய்றீங்க?”
“உனக்கு எப்படி தான் நான் புரியவைப்பேன்?”
பொறுமையை முற்றும் இழந்த நந்தனா “நிச்சயம் செஞ்சதால என்னை கண்ட்ரோல் பண்ண பார்க்கறீங்க அப்படித் தானே?” என்று பொரிந்து தள்ளினாள்.
“ஐயோ ப்ளீஸ் !” அவன் கத்திவிட்டு மௌனமாக, அதிர்ந்த நந்தனா தாழ்ந்த குரலில்,
“சரி சொல்லுங்க ஏன் என்னை தடுக்குறீங்க?” கடுகடுத்தாள்.
சிலமுறை ஆழமாகச் சுவாசித்தவன், நிதானமாகப் பேசத்துவங்கினான்.
“நான் லூசுத்தனமான ஒரு விஷயம் சொல்லியே ஆகணும்! எனக்குத் தெரியும் இது கேட்க லூசுத்தனமாத்தான் இருக்கும், ஆனா நீயும் கேட்டே தீரணும்!
எனக்கே தெரியாம நீ என் மனசை உன் வச படுத்திக்கிட்டே, ஒரு நாளுக்கு ஒரு அணு வீதம். இனி எனக்கு நீ வேணும். நான் உன்னை நிஜமா காதலிக்கிறேன்! உண்மையா கல்யாணம் பண்ணிக்க விருப்பப்படறேன் !”
அவன் தன் மனதைச் சொல்லிவிட, உறைந்தவள், திக்கித் திணறி, “ரஞ்சன் என்ன சொல்றீங்க?” தன் காதில் விழுந்ததை அவளால் நம்ப முடியவில்லை.
“இன்னும் என்ன சொல்லணும் ? அதான் சொல்லிட்டேனே”
“ரஞ்சன் நான்…”
“நான் திருப்பி திருப்பி சொல்லிட்டு இருக்க மாட்டேன். நீ இப்போ எழுந்துக்கலைனா, உன்மேல தண்ணி கொட்டிடுவேன்” ஸ்ரீராமின் குரலில் அதிர்ந்து எழுந்தவள், சில நொடி எது நிஜம் எது கனவென்று புரியாமல் குழப்பமாய் ஸ்ரீராமை பார்க்க,
“முழிக்காதே! குளிச்சிட்டு சீக்கிரம் கிழ வா. பெரிப்பா பெரியம்மாலாம் வந்துருக்காங்க” விறுவிறுவென வெளியேறினான் ஸ்ரீராம்.
கைகளில் முகத்தைப் புதைத்து கண்களை மூடிக்கொண்டாள்.
சிலநேரம் கொடுங்கனவுகளை விட, அழகான கனவுகள் தான் நம் மனதை துளைத்தெடுக்கும், நந்தனாவிற்கும் அதுதான் நேர்ந்து கொண்டிருந்தது.
தன் உள்மனத்தில் நிரஞ்சனின் மேல் கொண்ட காதலோ, அவன் அன்பிற்காக, காதலுக்காக ஏங்குவதாலோ. இக்கனவினால் முற்றிலும் நிம்மதியைத் தொலைத்தவள், வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களிடம் ஒழுங்காக முகம் கொடுத்துப் பேசாமல், கல்லூரி ப்ராஜெக்ட் வேலை இருப்பதால் வெளியே செல்லவேண்டுமென்று சொல்லிவிட்டு கோவிலுக்குச் சென்று அமர்ந்துவிட்டாள்.
***
முந்தைய இரவு நந்தனாவுடன் ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் நிரஞ்சனின் மனதில் பூதாகரமாக ஓடிக்கொண்டிருந்தது.
மதிய உணவு இடைவேளையில் நிரஞ்சன், தன்னுடன் தினமும் உணவு உண்ணும் கிரிதர் தன் அறையினுள் நுழைந்ததை கூட உணராமல், கண்முன்னே திறந்து வைத்திருந்த டிஃபன் பாக்ஸை வெறித்திருந்தான்.
தான் துவளும் பொழுதெல்லாம் தோள் கொடுக்கும் நண்பனாய், பெற்றோர் இல்லாததை எண்ணி வருந்தும் பொழுதெல்லாம் சகோதரனாய், சமூக நலனுக்காகப் பாடுபடும் வேலையில் தனக்கொரு முன்மாதிரியாய் எப்பொழும் நிரஞ்சனின் பாசிட்டிவ் முகத்தை மட்டுமே பார்த்துப் பழகிய கிரிதருக்கு, நிரஞ்சனின் இந்த சோகமும், வெறுமையும் படர்ந்த முகம் கலக்கத்தைத் தந்தது.
பொறுமையாக அவனை நெருங்கி, நிரஞ்சனின் தோளில் கைவைத்த கிரிதர், “நிரு! என்ன யோசனை?” அன்பாய் கேட்க, அவன் வந்ததை அப்பொழுதுதான் உணர்ந்த நிரஞ்சன்,
“வாடா! எப்போ வந்தே?” அப்பொழுதுதான் விழித்ததைப் போல் கண்களைக் கசக்கிக் கொண்டு கேட்க
“இப்போதான். ஆமா என்ன பலமான யோசனை? ஏன் இந்த சோக அவதாரம்? என்னடா ஆச்சு? நந்தனா கூட ஏதாவது சண்டையா?” மனதில் பட்டதை மடமடவெனக் கேட்டான் கிரிதர்.
“சண்டையெலாம் இல்லடா…” என்று துவங்கியவன், முன்தினம் நடந்த உரையாடலை கிரிதரிடம் மேலோட்டமாக பகிர்ந்துகொண்டான்.
“இதுல எதுக்கு நீ கோவப்படணும்? அவ மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?” கிரிதருக்கு கோவமேனோ நிரஞ்சன் மீதுதான் வந்தது.
“டேய் என்னடா நீயே இப்படி கேக்குற? நான் அப்படிலாம் இல்ல…பெரியவங்க துணை இல்லாம அத்தனை தூரம்…கூடப் போறவன் யாரோ எவனோ எல்லாரும் நல்லவங்களா இருப்பாங்களா? அதுவும் என் நந்து வெகுளிடா!” கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்து கொண்டு
“நான் சொல்றத நீயே புரிஞ்சுக்க மாட்டேங்குற அப்புறம் அவ எப்படி புரிஞ்சுப்பா” வெறுப்பாய் சொன்னவன் அப்படியே சாய்ந்திருக்க,
கிரியோ புன்னகையுடன் அவன் தோளைத் தட்டிக் கொடுத்து, “என்னப்பா நீ இதுக்கே டென்ஷன் ஆனா எப்படி ? நீ தான் நம்ம கேங்லேயே பொறுமைசாலி. அதுவும் இதெல்லாம் உனக்கு சப்ப மேட்டர் சால்ட் வாட்டர். முதல்ல சாப்பிடுவோம். அப்புறம் தெம்பா யோசிப்போம். என்ன நான் சொல்றது?”
அவனைத் தேற்றிச் சாப்பிட வைத்துவிட்டு தன் அறைக்குத் திரும்பினான்.
***
விக்னேஷ், சுகன்யா மற்றும் மயூராவை தன் வண்டியில் ஏற்றிக்கொண்டு கடைசியாய் முன்றேமுக்கால் மணிக்கு நந்தனாவை அழைத்துக்கொள்ள வருவதாய் தெரிவித்திருந்தான் சித்தார்த்.
ஹார்ன் சத்தம் கேட்டதும், காபி குடித்துக் கொண்டிருந்த ஸ்ரீராம் நந்தனாவின் பைகளை எடுத்துக்கொண்டு வெளியே விரைந்தான்.
பெற்றோர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிய நந்தனா, ஸ்ரீராமைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியே வர,
“சீக்கிரம் கெளம்புடி அப்புறம் செல்போனை நோண்டலாம். எப்படியும் வெட்டியா உட்கார்ந்து தானே போகப்போர” ஸ்ரீராம் அவளை வம்பிழுக்க, அண்ணனுக்கு நாக்கை துருத்தி பழிப்பு காட்டிவிட்டு காரில் ஏறக் கதவைத் திறந்தவள், கண்கள் விரிய சிலையாய் நின்றாள்.
“குட்மார்னிங் பேபி!” அழகாய் டிரைவர் சீட்டிலிருந்து புன்னகைத்தான் நிரஞ்சன்!
“நீ…நீங்க…” விழித்தவள் சில அடிகள் பின்னே சென்று காரை ஒரு முறை பார்த்து, ‘ஆஹா கொர தூக்கத்துல எழுந்ததால கண்ணைத் திறந்தும் கணவோ?’ யோசித்திருக்க
“ஏறு என்ன யோசனை? ம்ம்” ஸ்ரீராம் விரட்ட, குழப்பமாய் விழித்தவள் தயக்கத்துடன் காரில் ஏறப்போக,
“நான் என்ன உனக்கு டிரைவரா? முன்னாடி வந்து உட்கார்” நிரஞ்சன் முறைக்கவும் , ஸ்ரீராமும் தன் பங்கிற்கு விடாது விரட்டப் பதற்றமாய் முன் இருக்கையில் அமர்ந்து, அவள் என்ன ஏது என்று கேட்கும் முன்னே
“பை! ஸ்ரீராம் அப்போ அப்போ கால் பண்றோம்.” புன்னகைத்தபடி விடைபெற்றவன், காரை மின்னல் வேகத்தில் கிளப்பினான்.
குழப்பம், தூக்கக்கலக்கம் என்று இருந்தவள், நடப்பவை எதுவும் கணவில்லை என்று உணர்ந்து தெளிந்த மறுகணமே “ஹலோ! வண்டியை வீட்டுக்குத் திருப்புங்க! “ என்று அலற,சிரித்தபடி நிரஞ்சனோ,
“ஹையா! அப்போ ஊட்டி ப்ரோக்ராம் கேன்சலா?” என்று உற்சாகமாக,
“நோ! என்னை வீட்ல விடுங்க, சித்து வந்து வெயிட் பண்ணுவான்” அடம்பிடிக்க
கோவமாய் “அவன் வரமாட்டான்!” என்றவன், பிரதான சாலையை அடைந்ததும் வேகமெடுக்கத் துவங்கினான்.
“ஏனாம், நேத்து வரேன்னு சொன்னானே?” தன் கைப்பேசியில் சித்தார்த்தை தொடர்புகொள்ள முயன்றாள்.
ப்ளூடூத் வழியே ஸ்பீக்கரில் ரிங் அடிக்கும் சத்தம் கேட்க,
“ஹாய் சித்தார்த்! நாங்க கிளம்பிட்டோம், நீங்க எங்க இருக்கீங்க இப்போ?” நிரஞ்சன் வெகுசாதாரணமாய் கேட்க,
அவன் எப்படி சித்தார்த்துடன் பேசுகிறான் என்ற வியப்பில் அவனை கெரித்திருந்தவள் ஏனோ சித்தார்த்தின் குரல் கேட்டவுடன் இன்னும் கோபம் கொண்டாள்.
“இப்போ தாம்பரம் தாண்டிட்டு இருக்கோம் சார். நீங்க எங்க இருக்கீங்க?” சித்தார்த் கேட்க
குறுக்கிட்ட நந்தனா “ம்ம் காண்டுல இருக்கேன்! டேய்…”
அதே நொடி நிரஞ்சன், ஸ்டேரிங் வீலில் இருக்கும் பொத்தானை அழுத்தி அழைப்பைத் துண்டித்திருந்தான்.
“இப்போ எதுக்கு கட் பண்ணீங்க?”
“அவன் உன் சீனியர்ன்னு சொன்னே, டேய்ன்னு கூபிட்றே?” அவன் முகம் இறுக
‘அடேய் அவனை எப்படி கூப்பிட்டா உனக்கென்ன?’
“க்ளோசா பழகினா வாங்க போங்கன்னு எப்படி வரும்?” இதெல்லாம் ஒரு கேள்வியா என்பதுபோல் அவள் முறைக்க
“அவன் அப்போ உனக்கு க்ளோசா?” சாலையையும் அவளையும் மாறி மாறி முறைத்தவன் பற்களை நறநறவெனக் கடிக்க
“நீங்க எதுக்கு இப்போ பொங்கறீங்க? மொதல்ல நீங்க எங்க வரீங்க? உங்களுக்கு எப்படி சித்து நம்பர் தெரியும்? சித்து ஏன் இப்போ முன்னாடி போறான்? ஸ்ரீராம் எப்படி கார்ல என் பையை வச்சான்? ம்ம்ஹும் நீங்க எதோ பண்றீங்க. ஒழுங்கா சொல்லிடுங்க, என்ன நடக்குது?” அவள் முகம் கோவத்தில் சிவக்க
“இத்தனை கேள்விக்கும் பதில் சொல்லலாம் முடியாது, நீ தனியா எங்கயும் போகலை அவளோதான்”
“ஹலோ என்ன டாமினேட் பண்ண பாக்கறீங்களா?”
“அக்கரைக்கும் அடக்குமுறைக்கும் வித்தியாசம் இருக்கு. உனக்கு அது புரியாட்டி நான் ஒன்னும் செய்ய முடியாது”
“அக்கறை? அதுவும் உங்களுக்கு என்மேல?” கிண்டலாகச் சிரித்தவள் “நம்பிட்டேன். நான் உங்க பேச்சை கேட்காம கிளம்பறேன்னு உங்களுக்கு ஈகோ” என்று சாடினாள்.
“நீ இதுக்கு என்ன பெயர் வச்சாலும் எனக்கு கவலை இல்லை” அவன் தோளைக் குலுக்க
‘காதலிக்க மாட்டாராம், கல்யாணம்னா ஓடுவாராம் ஆனா அக்கறையாம். மண்ணாங்கட்டி!’
“எந்த உரிமையில் இப்படியெல்லாம் பண்றீங்க?”
ஏனோ அவள் கேட்ட இந்த கேள்வியில் நிரஞ்சன் முகம் கடகடவெனச் சிவக்க, கோவமாய் காரை ஓரம் கட்டியவன், நந்தனாவின் கையை பிடித்து அவள் முகம்வரை உயர்த்தி, கண்ணால் அவள் கையிலிருந்த நிச்சயதார்த்த மோதிரத்தைக் காட்டி, “இந்த உரிமையில்!” என்றுவிட்டு அவள் கையை பற்றிக்கொண்டு, காரை மீண்டும் சாலையில் செலுத்தினான்.
அவன் செயலில் அதிர்ந்தவள், அதிர்ச்சியாய் அவன் முகத்தையே பார்த்திருக்க
‘நிச்சயாமாகிடுச்சு நீ என் சொல்படி தான் நடக்கணும்னு சொல்றானா? ஒரு வேலை இவனுக்கு என்னை பிடிச்சிருக்கா? நோ நோ இவனாவது காதலிக்கிறதாவது. உலகமே இவன் சொல்படி ஆடனும்னு எண்ணம். வேற என்ன? இல்லை இதுக்கும் ஏதாவது காரணம் வச்சுருப்பான்’
தலைவலி மண்டையைப் பிளக்க, தலையைப் பிடிக்கத் தன் கையை இழுக்க முயன்றாள், அவனோ கையை விடுவதாய் இல்லை
“நான் எங்க ஓடியா போறேன்? எதுக்கு இப்போ கையை இப்படி கெட்டியா பிடிச்சுக்கிட்டு இருக்கீங்க?” நந்தனாவிற்கு கோவம் குறையவில்லை
“ஓடிப்போக விட்டுடுவேனா? போய் தான் பாரேன்” அவனும் சவால் விட்டு கையை விடுவித்தான்.
அவள் மௌனமாகவே அதன் பிறகு வர, அவள் மௌனம் அவனை வாட்ட, கோவமாகப் பேசினாலும், பேசினால் போதும் என்ற எண்ணம் வர வேண்டுமென்றே அவளை வம்பிழுக்க முடிவு செய்தான்.
“நான் எவளோ சொல்லியும் கேட்காம, நீ ஊட்டி கிளம்பினது எனக்கு பிடிக்கலை. சீக்கிரமா உன் படப்பிடிப்பை முடி நாம திரும்பிடுவோம். என்ன ஒரு நாள் போதும் தானே? இல்லை ஒரு நாள் போதும்” உள்ளே புன்னகையும், முகத்தில் கடுப்பும் பூசி அவன் சொல்ல,
நந்தனா கோவமாக “ஹலோ! நீ யாரு எனக்கும் சேர்த்து பிளான் போட? உனக்கு பிடிக்கலைன்னா நான் போகக் கூடாதா? நல்ல கதையா இருக்கே! இருந்தாலும் உனக்கு இவ்வளவு திமிறு இருக்கும்னு நான் நினைக்கவே இல்ல”
அவன் எண்ணியது போலவே பொறுமை இழந்து கத்த துவங்கினாள்.
‘அடிப்பாவி பொசுக்குன்னு மரியாதை இல்லாம பேசிபுட்டே!’ முதல் முறை ஒருமையில் அவள் அழைத்து, திட்ட, அதிர்ந்தவன் அதிர்ச்சியை வெளிக்காட்டாது
“உனக்கு என்னைப் பார்த்தா திமிறு பிடிச்சவன் மாதிரி தெரியுதா?”
“இல்லையா ? உன் வாழ்க்கையைச் சரி படுத்த என்னை உன் சொற்படி ஆட வச்சீங்க. ஆனா என் வாழ்க்கைக்கு நான் எதாவது பண்ணா அதும் உங்க சொல்படிதான்னா எப்படி சார் நியாயமாகும்?”
“உன்னை இப்போ நான் தடுக்கலையே! நீ யார்கூடவோ அவ்வளவு தூரம் தனியா போறது எனக்கு பிடிக்கலை. உனக்கு ஊட்டிக்குத்தானே போகணும், அதான் நானே கூட்டிகிட்டு போறேன்! நீ எனக்கு நியாயமா நன்றி சொல்லணும்”
“பிள்ளையார் கொழுக்கட்டையைத் திருடி அவருக்கே திரும்ப நைவேத்தியம் செய்யுற மாதிரி இருக்கு”
ஒரு கணம் அவளைத் திரும்பிப் பார்த்தவன், “நீ என்ன வேணா சொல்லிக்கோ, இதற்கு என்ன பெயர் வேணா வச்சிக்கோ, எனக்கு நீ தனியா போகக் கூடாது அவளோதான்!”
“காலைல எழுத்தும் என்னை நினைசீங்க? இன்னிக்கி நந்தனா வாழ்க்கைல எப்படி கும்மி அடிக்கலாம்னா?” கிண்டலும் கோவமும் ஒன்றுசேர அவள் கேட்க
சிரித்துவிட்டவன் “அதே தான்! எப்படி இப்படி சரியா கண்டுபிடிக்கிற?” கிண்டலாய் சொல்லிவிட்டு, “ஆமா ஒன்னு கேட்கவா?”
“…”
“என்ன இன்னிக்கி நீ, நீங்க ன்னு மாரி மாரி வருது? என்னை எப்படி கூப்பிடுறதுன்னு குழப்பமா பேபி?” குறும்பாய் கேட்க
அதுவரை அதை உணராதவள், உதட்டைக் கடித்துக்கொண்டு வெட்கத்தைக் கட்டுப்படுத்த திணற, அதை ஓரக்கண்ணால் கண்டு ரசித்தான்.
‘அவளோ சத்தமாவா கேட்குது ?’ அவனை பாராது சாலையை வெறித்தாள்
‘இவன் என்னை ஓட்டுறானா? இல்லை என்னைக் காதலிக்கிறானா? ஐயோ என் குழப்பத்துக்கு ஒரு விடையே கிடைக்காதா?’ மனம் விடாது அடித்துக்கொள்ள மௌனமும், செல்ல சண்டைகளுமெனத் துவங்கிய பயணம், மாலை மறைந்து இரவு படரும் நேரம் ஊட்டியில் முடிந்தது.
ஹோட்டல் அறையில் தங்க வேண்டாமென்று வற்புறுத்தி தங்கள் விருந்தினர் மாளிகைக்கு அனைவரையும் அழைத்துச் சென்றிருந்தான் நிரஞ்சன்.
அவர்களுக்கான அறைகளைக் காட்டியவன், தனக்கும் நந்தனாவிற்கும் மேல் தளத்தில் அறைகள் என்று சொன்னதுதான் தாமதம், அனைவரும் “உஉஉ”என்று சத்தமிட்டுக் கிண்டல் செய்ய,
சுகன்யாவோ “ரொமான்ஸ் பண்ண பிரைவசி வேண்டுமென்று இந்த ஏற்பாடா அண்ணா?” நிரஞ்சனை வம்பிழுக்க,
“அதெல்லாம் வெளிப்படையா சொல்ல முடியுமா என்ன?” மயூரா கிண்டல் செய்ய
“ஆஹா! அதெல்லாம் ஒன்னுமில்லை மா. மாடியில் என் ரூம் இருக்கு, பக்கத்தில் என் தங்கை வந்தா தங்கற ரூம் இருக்கு. நந்துவுக்கு அந்த ரூம் கொடுக்கணும்னு நிவி ஆர்டர் அவளோதான். நீங்க ஓவரா கற்பனை பண்ணாம ரூம்க்கு போங்க. சமையல் ரெடி ஆனதும் தணிகாசலம் அங்கிள் கூப்பிடுவார் (சமையல்காரர்)”
நிரஞ்சன் புன்னகைத்தபடி மேல் தளத்திற்குச் சென்றுவிட, நண்பர்கள் சிறிதுநேரம் அரட்டை அடித்துவிட்டு தங்கள் அறைக்குச் சென்றனர்.
ஊட்டியில் அது சீசன் நேரம் இல்லை என்பதால் குளிர் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
இரவு உணவின் பின் பயண களைப்பில் அனைவரும் சீக்கிரமாக உறங்கச் சென்றுவிட்டனர். தன் அறையில் காதுவரை போர்வையைப் போர்த்திக்கொண்டு சுருண்டு படுத்திருந்த நந்தனா, அன்று நாள் முழுவதும் நிரஞ்சனுடன் பயணம் செய்ததைப் புன்னகையோடு அசைபோட்டுக்கொண்டிருந்தாள்.
யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டு கதவைத் திறக்க, அழகிய அடர் சிவப்பு வண்ண ஸ்வெட்டரும் வெள்ளை பைஜாமாவும் அணிந்து, வசீகரிக்கும் புன்னகையுடன் நின்றிருந்த நிரஞ்சனை கண் இமைக்காது பார்த்திருந்தாள்.
நிரஞ்சனோ குறும்பு புன்னகையுடன் “மேடம் என்ன தூங்கிட்டிங்களா? டிஸ்டர்ப் பண்டேனா ?”
“…”
“ஹலோ! என்ன யோசனை?”
“அது…”
“போதும் போதும் ! நான் அழகா இருக்கேன்னு தெரியும். அதுக்காக இப்படி சைட் அடிக்க வேண்டாம்.” அவன் விஷமமாய் புன்னகைக்கப்
பதறியவள் “தோடா ! ஆசை தோசை!” என்று நாக்கை துருத்திவிட்டு “சும்மா என்ன இந்நேரத்துல வந்திருக்கீங்கன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்”
“வட போச்சே! நீ எதோ ரொமான்ஸ் பன்றேன்னுல்ல நெனச்சேன்” விஷம புன்னகையுடன் அவன் கண்ணடிக்க
அவன் செய்கையில் விக்கித்தவள் “என்ன ரொமான்ஸா?” கண்கள் விரிய
அவனோ உரக்கச் சிரித்தபடி “ரொமான்ஸ் தெரியாது? காதலனும் காதலியும் பண்ணுறது. சினிமால காட்டுவாங்களே” முகத்தில் குறும்பு கொப்பளிக்க
“எனக்கு ரொமான்ஸ்ன்னா என்னனு தெரியும்!” வெட்கம் பொங்கிவர, அதை மறைக்க வேறு புறம் திரும்பிக்கொண்டாள்.
“பரவாயில்ல சின்ன பொண்ணுன்னு நெனச்சேன், ம்ம் விவரம் தான்”
மௌனமாக இருந்தவள் மனமோ தாடர் தடாரென்று அடித்துக்கொள்ள, “சரி என்ன சொல்லுங்க”
“டி குடிக்கணும் போல இருக்கு, போலாம் வரியா?”
“என்ன இந்நேரத்துக்கு டீயா?”
“டீக்குடிக்க நெனச்சா குடிக்கணும். ராத்திரியென்ன பகலென்ன?” அவன் பிடிவாதத்தை ஏற்கனவே இன்று கண்கூட கண்டிருந்ததால் அவனுடன் கீழே இறங்கியவள் சமையலறையை நோக்கி நடக்க,
“மேடம் எங்க போறீங்க?” அவன் கேள்வியில் நின்றவள் “பின்ன டீ?” புருவம் சுருக்க
“கொஞ்ச தூரத்துல கடை இருக்கு அங்க போலாம் வா” அவன் முன்னே நடக்க,
நந்தனா “நான் வரலை” என்று நின்றுவிட்டாள்.
“ஏன்?”
“…”
“அப்போ வேற வழி இல்லை” என்றவன் அவள் கையை பிடித்து இழுத்துச் சொல்ல
“நான் வரலைன்னு சொன்னேன்” அவள் முரடு பிடிக்க
“இப்போ நீ வரலை, நான் தான் உன்னை கூட்டிட்டு போறேன்.” என்றவன் மீண்டும் இழுக்க, வேறு வழியின்றி முணுமுணுத்தபடி அவனுடன் சென்றாள்.
சாலையில் விளக்குகள் இருந்தாலும், சென்னையைப் போல் இரவையும் பகலாய் காட்டுமளவிற்கு வெளிச்சம் இல்லை. வெகுசிலரே சாலைகளில் நடந்துகொண்டிருந்தனர்.
இரவுநேர குளிர் உடலை ஊசியாய் துளைக்க, ஸ்வெட்டர், குல்லா என்று அணிந்திருந்தாலும், அவளுக்குக் குளிரில் உடல் நடுக்கத்தான் செய்தது.
“உங்களுக்கு குளிரலையா?” அவனை அதிசயமாகப் பார்த்தாள்.
“கொஞ்சம், ஏன் உனக்கு ரொம்ப குளுருதா?” அவன் புருவம் சுருக்க
“குளுருதாவா? உறைஞ்சு போயிருக்கேன்” அவள் உதட்டைப் பிதுக்க
“வா” அவளை இழுத்து இறுக்கமாகப் பக்கவாட்டில் தன்னுடன் சேர்த்து அணைத்தவாறு நடக்கத் துவங்கினான்.
இந்த எதிர்பாரா செயலில் நந்தனா மிரண்டாலும், அவன் உடலிலிருந்த கதகதப்பு, குளிர்க்கு இதமாய் மட்டுமில்லாது ஒரு பாதுகாப்பு உணர்வையும் தந்தது.
சாலையோர தேநீர்க் கடையில் தேநீர் பருகியபடி சுற்றும் முற்றும் தன் பார்வையைச் சுழல விட்டுக்கொண்டிருந்தான் நிரஞ்சன்.
அவன் பக்கவாட்டு தோற்றமும், மெல்லிய புன்னகையுடன் டீக்கடைக்காரருடன் ஸ்நேஹமாகப் பேசிக்கொண்டிருந்த தோரணையும் பெண்ணவள் மனதை மீண்டும் அவன்பால் ஈர்த்தது.
“ம்ம் என்ன யோசனை? குடி கிளம்பலாம்.இந்த குளிரே உனக்கு தாங்கல, நேரம் ஆக ஆக இன்னும் குளிரும்” அவன் சொல்லவும், மண் குவளையில் இதமான சூட்டிலிருந்த தேநீரைப் பருகியவள் உடலெங்கும் மெல்லிய சூடு பரவிட, கண்மூடி ரசித்தவாறே தேநீரைப் பருகி முடித்தாள்.
அவர்கள் திரும்பிச் செல்லும்பொழுது, நந்தனா அவனை ஒட்டிக்கொண்டு நடக்க, புன்னகைத்தபடி அவளை அணைத்துக்கொண்டு நடந்தான் நிரஞ்சன்.
மறுநாள் அவர்கள் விடியற்காலையே படப்பிடிப்பிற்கு அணைத்து உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு சித்தார்த்தின் காரில் புறப்பட்டுவிட, நீண்ட உறக்கத்திற்குப் பிறகு எழுந்துவந்த நிரஞ்சன், யாரும் அங்கு இல்லாததைக் கண்டு வேகமாக வெளியே சென்று பார்க்க, அவன் எதிர்பார்த்தது போலவே சித்தார்த்தின் கார் அங்கில்லை.
“ஓஹ் சூட்!” கோவமாகத் தன் அறைக்குச் சென்று நந்தனாவிற்கு கால் செய்தான், பலமுறை அவன் முயற்சித்தும் அவள் அழைப்பை ஏற்கவில்லை.
“முண்டம்! முண்டம்!” பொருமியவன், கோவமாக சித்தார்த்தை தொடர்பு கொண்டு அவர்கள் இருக்குமிடத்தைக் கேட்டு அங்கே விரைந்தான்.