Enathu punnagaiyin mugavari 20

Enathu punnagaiyin mugavari 20

அத்தியாயம் – 2௦

மனோவின் அமைதி இல்லம் இப்பொழுது மகிழ்ச்சி இல்லமாக மாறியது.. மனோவின் மனம் போலவே அவனின் இல்லத்தில் சந்தோசம் என்ற தென்றலை மெல்ல மெல்ல அழைத்து வந்தாள் நமது புன்னகை புயல்..

அந்த வீட்டில் எல்லாவற்றையும் மாற்றியமைத்தாள்.. அந்த வீட்டில் இருந்த அமைதி அவள் வந்ததில் இருந்து விடைபெற்று செல்ல மனோவின் மனதிலும் மாற்றம் வந்தது.. அதை அவன் உணர்ந்தே இருந்தான்..

காலையில் இவன் செல்லும் வரையில் இவனுடன் வம்பு வளர்க்கும் தென்றலோ இவன் சென்ற பிறகு சாருவுக்கு, தாத்தாவுக்கும் போன் செய்து கதையளப்பாள்.. பிறகு சமையலறை சென்றால் மனோவிற்கு பிடித்தாக பார்த்து பார்த்து செய்வாள்.. இவளின் சேட்டையில் அவன் கடையில் சாப்பிடுவதே மறந்துவிட்டான்..

மாலை நேரத்தில் ஏதோ யோசனையில் சோபாவில் அமர்ந்திருந்த தென்றலைப் பார்த்த வண்ணம் வீட்டுக்குள் நுழைந்தனர்..  நிவாஸ், சுனில், பிரதாப், ராகுல், ஷிவானி ஐவரும்!

“என்ன யோசனை தென்றல் அக்கா..?!” என்று கேட்ட பிரதாப் குரலைக் கேட்ட தென்றல் “என்னடா இன்னும் யாரையும் காணமே என்று இப்போதான் யோசித்தேன் வந்துடீங்களா..?!” என்று கேட்டதும், “ம்ம் வந்துவிட்டோம்.. நீதான் எங்களை மறந்தே விட்டாய்..” என்று சுனில் கோபத்துடன் கூறினான்..

“உங்களை நான் மறந்தேனா..?” என்று கேட்ட தென்றல், “உங்களை எல்லாம் மறக்கவா முடியும்.. ஏண்டா இப்படி எல்லாம் பேசுகிறாய்..?” என்று கேட்டபடியே சமையலறையில் நுழைந்த தென்றல் அவர்களுக்கு சாப்பிட ஸ்நேக்ஸ் எடுத்து வந்து கொடுத்துவிட்டு அவர்களின் அருகில் அமர்ந்தாள்..

தென்றலின் அருகில் அமர்ந்த நிவாஸ், “அக்கா உன்னை மாமா ஏதாவது பேசுகிறாரா..?” என்று கேட்டவனின் குரலில் இருந்த வருத்தம் உணர்ந்த தென்றல்,

“டேய் உன்னோட மாமா எனக்கு சமையல் செஞ்சு ஊட்டி விடுகிறார்..” என்று சொல்ல, “நீ மாமாவையும் சேர்த்து கெடுத்துட்டியா..?” என்று தலையில் அடித்துக் கொண்டான் நிவாஸ்..

அவன் சொன்னதைக் கேட்டு சிரித்த தென்றல், “அது எப்படிடா உன்னோட மாமா மாதிரியே சொல்ற..?” என்று கேட்டதும், “அவன் என்னோட மச்சான் இல்ல அதுதான் புயல் அப்படியே சொல்றான்..” என்று சொன்ன மனோவின் குரல் கேட்ட தென்றல் வாசலைப் பார்க்க மனோ வீட்டின் உள்ளே நுழைந்தான்..

அதையெல்லாம் கண்டு கொள்ளாத ராகுல், “அப்படி சொல்லுங்க மாம்ஸ்.. உங்களுக்கு இவங்க இரும்பு மனிதன் என்று வச்சிருக்காங்க.. ஆனால் நீங்க நல்ல பேசிறீங்க..” என்று தென்றலை மாட்டிவிட்டான்.. அவன் சொன்னதைக் கேட்ட தென்றல், ‘ஐயோ இவனிடம் என்னை மாட்டி விடுகிறானே..?!’ என்று மனதிற்குள் புலம்பினாள்..

”உன்னோட அக்கா என்னைக்குதான் திருந்துவாளோ எனக்கு தெரியல..” என்று தென்றலின் அருகில் அமர்ந்த மனோ, “என்னடா மச்சான்ஸ் திடீரென்று விசிட்..?!” என்று கேட்டான்..

“ஏன் மாமா நாங்க வரவே கூடாதா..?” என்று கேட்டான் ஷிவானி.. அவன் அப்படி கேட்டதும் தென்றல் மனோவின் முகத்தைக் கேள்வியாகப் பார்க்க அவனோ, “டேய் நீங்க வரலை என்றால் என்னை இவள் கொன்னாலும் கொன்னு போட்டுட்டுவா.. தயவு செஞ்சி இவளிடம் இருந்து என்னை காப்பாற்ற அடிக்கடி வாங்க மச்சான்..” என்று மனோ விளையாட்டாக பேசினான்..

‘இவன் இந்த அளவுக்கு பேசுவானா..?’ என்ற கேள்வி மனதில் எழுந்ததும், “இருங்க நான் காபி போட்டு எடுத்துட்டு வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் சென்ற தென்றலைப் பின்தொடர்ந்தது மனோவின் பார்வை..!

அவள் வரும் வரையில் அவர்களுடன் பேசி சிரித்த வண்ணம் இருந்த மனோவை பஞ்சபண்டவர்களுக்கும் பிடித்து போனதில்  ஆச்சர்யம் இல்லையே..?! பிறகு அவர்கள் சென்றபிறகு அவளின் முகத்தைப் பார்த்தான் மனோ..

அவள் எதுவும் பேசாமல் செல்ல அவளின் கையைப்பிடித்த மனோவை நிமிர்ந்துப் பார்த்தாள் தென்றல்.. அவளின் பார்வையோடு அவனின் பார்வை கலக்க, “நீ வெளிப்படையாகவே இரு தென்றல்..” என்று சொல்ல, “நீங்க இப்படியே இருங்க பாவா.. அப்போதான் பார்க்க நல்ல இருக்கு..” என்று புன்னகையுடன் கூறியவள் அவனை விட்டு விலகிச்சென்றாள்.. நாட்கள் விரைந்தோடிச் செல்ல இருவருக்கும் திருமணம் நடந்து ஒரு மாதம் சென்றது.

காலைபொழுது அழகாக விடிந்திருக்க கிழக்கில் தனது பணியைத் தொடங்கினான் பகலவன்.. எப்பொழுது போல சீக்கிரம் எழுந்த தென்றல் மனோவைப் பார்த்துவிட்டு குளிக்க சென்றாள்..

அவள் குளித்துவிட்டு வந்து சமையலை முடிக்கும் வரையில் கூட மனோ எழுந்து கீழே வரவே இல்ல.. தென்றலுக்கு காலையில் எழுந்ததும் மனோவிடம் ஏதாவது வம்பு இழுத்தால் தான் அந்த நாள் அவளுக்கு நல்ல நாளாக அமையும்..

மனோ கொஞ்ச கொஞ்சமாக மாறவே அவனின் மாற்றம் இவளுக்கு இன்னும் இன்பத்தை வாரி வழங்கியது.. இப்பொழுது எல்லாம் அவனின் முகம் பார்க்காமல் தென்றலால் ஒரு நொடி கூட இருக்க முடியாது.. குறிப்பாக வாலுத்தனம் குறையவே இல்ல.. இன்னும் அதிகம் தான் ஆகியிருக்கு..

இவளின் செய்யும் சேட்டையெல்லாம் பார்க்கும் மனோவிற்கு சிரிப்புதான் வரும்.. இப்பொழுது அப்போ அப்போ அவனின் முகத்தில் எட்டிப்பார்க்கிறது..

காலையில் இருந்து அவன் கீழே வருவான் வருவான் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனவள், ‘இது மேல் சும்மா இருக்க என்னால் முடியாது..’ என்று மாடி ஏறினாள்.. அவளுக்கு அங்கே ஒரு இன்ப அதிர்வு காத்திருப்பதை அறியாமலே அவனின் அறைக்குள் சென்றாள்..

இது எல்லாம் அறியாத மனோ தரையில் படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.. அவன் உறங்குவதைப் பார்த்த வண்ணம் மெதுவாக அவனின் அறைக்குள் நுழைந்த தென்றல் மனோ உறங்குவதைப் பார்த்து, “பாவா தூங்கறீங்களா..?” என்று கேட்டபடியே ‘அந்த அறையில் தனக்கு சாதகமாக என்ன இருக்கிறது..’ என்று நோட்டம் விட்டாள்..

அவளின் கண்களுக்கு எதுவும் சிக்காமல் தரையில் அவனின் அருகில் அமர்ந்தவளின் கண்களுக்கு தட்டுப்பட்டது அவளின் கண்மை டப்பா.. அதைப் பார்த்த தென்றல், ‘பாவா..’ என்று மனதில் சந்தோசமாக நினைத்தவள் நொடியும் தாமதிக்காமல் அதை எடுத்து அவனின் அருகே நெருங்கினாள்..

அவள் அறியாத ஒரே விஷயம் தென்றல் அறையின் உள்ளே நுழையும் பொழுதே அவன் கண்விழித்து விட்டான் என்று பாவம் தென்றலுக்குத் தெரியாதே.. அவன் கண்ணைத் திறந்து அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்க அவள் மை டப்பா எடுப்பதைப் பார்த்தவன்,

‘உன்னோட சேட்டை என்னிடமா..?! இன்னைக்கு உனக்கு இருக்கு..’ என்று நினைத்தவன் கண்களை மூடிப்படுத்துக் கொள்ள, விரலில் மையை எடுத்தவள் அவனின் முகத்தின் அருகே சென்று அவனைப் பார்த்தவள்,

‘இன்னைக்கு உங்களோட முகத்தைப் பார்த்து உங்களையே பயப்பட வைக்கிறேன்..’ என்று நினைத்தவள் அவனின் முகத்தில் மையை வைத்து அலங்காரம் செய்ய நினைத்து அவனை நெருங்கினாள்..

அவளின் முகம் முழுக்க அத்தனை குறும்புத்தனம்.. குழந்தையின் கொண்டாட்டம்.. அவனின் முகத்தைப் பார்த்தவள் அவனின் உதட்டைப் பார்த்துவிட்டு, ‘இதுக்கு முதலில் மை போடலாம்..’ என்று விரலை அவனின் உதடு நோக்கி எடுத்துச் சென்றாள்..

அவள் அவனின் உதட்டிற்கு மையிட அவனும் அமைதியாக படுத்திருந்தான்.. அவளின் குறும்புத்தனத்தை ரசித்த வண்ணம்.. அவனின் உதட்டில் மையிட்டவள் மனோவின் முகத்தைப் பார்த்து கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள்..

அவள் சிரிப்பு சத்தம் கேட்டதும் தனது அருகில் அமர்ந்திருந்தவளின் இடையோடு கைகொடுத்து தன்னை நோக்கி இழுத்தும் அவனின் அதிரடி செயலில் அவனின் மார்பின் மீது விழுந்தாள் தென்றல்..

அவனின் மார்பில் விழுந்தா தென்றல் அவனை நிமிர்ந்துப் பார்க்க விழிதிறந்து அவளைப் பார்த்த மனோ, “புயல் உன்னோட சேட்டைக்கு தண்டனை தரலாமா..?” என்று அவன் குறும்பாக புன்னகைத்த வண்ணம் கேட்டான்..

அவனின் முகத்தில் இருந்த குறும்பைக் கண்ட தென்றல், “நீங்க எல்லாம் தண்டனை கொடுத்தாலும்..” என்று சொல்ல அவனை தள்ளிவிட்டு எழ நினைத்தவளை நகரமுடியாத அளவிற்கு அவளைக் தனது கைவளைவில் சிறைபிடித்தான்..

அவனிடம் இருந்து விடுபட போராடிய தென்றல், “பாவா விடுங்க பாவா என்னால் முடியல..” என்று சொல்ல அவனோ அவளின் செவ்விதழை சிறை செய்தான்.. அவள் அதிர்வுடன் அவனைப் பார்க்க அவனோ அவளின் இதழில் அழகாக கவிதை எழுதிக் கொண்டிருந்தான்.. அவனின் இதழ் முத்தத்தில் அதிர்ந்த தென்றல் அவனின் முகத்தையே பார்க்க அவனோ காதலோடு தனது முதல் முத்தத்தில் மூழ்கியிருந்தான் அவளின் செவ்விதழ்களில்..

அவன் அவளுக்கு முத்தமிட்டு நிமிர்ந்த மனோ அவளின் முகத்தைப் பார்த்து சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் விழுந்து வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான்..

அவன் சிரிப்பதை ஆச்சர்யமாகப் பார்த்த தென்றல், “எதுக்குடா இப்பொழுது சிரிக்கற..?!” என்று கேட்டதும் சிரிப்பதை நிறுத்திவிட்டு “உன்னோட முகத்தை கண்ணாடியில் பாரு புயல்..” என்றவன் மீண்டும் சிரித்தான்..

அவனின் முகத்தைப் பார்த்த தென்றல் எழுந்து கண்ணாடியில் தனது முகத்தைப் பார்க்க அவளின் உதடு முழுக்க கண்மையாக இருந்தது..

அதை பார்த்த தென்றல், “டேய் எருமை மாடு என்னோட உதடு முழுக்க கண்மை..” என்று சொல்லிய வண்ணம் அவள் அவனின் மார்பில் குத்த அவளின் அடிகளை வாங்கிக் கொண்டே சிரிக்க ஆரம்பித்தான் மனோ..

“அடியே அடிக்காதே.. இப்போதான் உன்னோட முகம் ரொம்ப அழகாக இருக்கு.. கண்ணுக்கு மை அழகு.. கவிதைக்கு பொய்யழகு..” என்று அவன் ரசித்துப்பாட அவனின் முகத்தைப் பார்த்த தென்றலின் முகத்தில் அத்தனை நிறைவு..

ஒரு குழந்தை முதல் முதலாக பேசும் பொழுது ஒரு தாய் எந்த அளவுக்கு மகிழ்வாளோ அந்த அளவு சந்தோசத்தில் இருந்தாள் தென்றல்.. அவனின் முகத்தில் இருந்த புன்னகை கண்டு அவளின் முகத்திலும் புன்னகை மலர அவள் அவனைப் பார்த்தபடியே அவனின் அருகில் அமர்ந்திருந்தாள்..

அவளின் புன்னகை முகத்தைக் கண்ட மனோ, “புயல் ஏண்டா அமைதியாக இருக்க..” என்று கேட்டபடியே எழுந்தமர்ந்தான் மனோ.. அவளின் விழிகள் தன மீதே நிலைத்திருப்பதைக் கவனித்த மனோ, “ஸா..” என்று அவன் சொல்லும் முன்னே அவனின் வாயை தனது மூடினாள் தென்றல்..

அவளின் அந்த செய்கையில் மனோ தென்றலின் முகத்தைப் பார்க்க, “எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு பாவா.. நீ இப்படி மனம் விட்டு சிரிக்கணும் என்று எத்தனை நாள் எதிர்பார்த்தேன் தெரியுமா..?” என்றவளின் கண்ணீர் எட்டிப்பார்க்க அவளை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டான் மனோ..

“ஏண்டா காலையிலேயே கண்ணு கலங்குகிறாய்..?” என்று அவன் வருத்ததோடு கேட்டான்.. அவனின் குரலில் இருந்த வருத்தம் கண்ட தென்றல், “இந்த புன்னகைக்கு நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும்.. நீ இப்படி சிரிக்க மாட்டியா என்று நான் எத்தனை முறை ஏங்கியிருக்கேன் என்று எனக்குதான் தெரியும்..” என்று கண்ணீரோடு கூறினாள் தென்றல்..

அவளின் கண்களில் வழிந்த கண்ணீரைப் பார்த்த மனோ, “ஏய் அழுகாதே என்று சொல்றேன்.. மறுபடியும் அழுகற நீ சரியான அழுமூஞ்சி..” என்று அவன் அவளை செல்லமாக கடிந்துக் கொண்டான்..

“ஆமாடா நான் அழுமூஞ்சி தான்.. என்னைத்தானே உனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. இல்ல எனக்கு உன்னை பிடிக்கல என்று சொல்லு பார்க்கலாம்..” என்று அவனுக்கு சவால் விட்டாள் தென்றல்..

அவளின் சவாலைப் பார்த்து சிரித்த மனோ, “எனக்கு உன்னைத்தான் ரொம்ப பிடிச்சிருக்கு போதுமா..?” என்று கேட்டவன், அவளின் முகத்தைப் பார்த்து, “ரொம்ப அழகாக இருக்கிறாய் புயல்..” என்று கூறினான்..

அவனின் முகத்தைப் பார்த்த தென்றல் அவனின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்து, “தேங்க்ஸ் பாவா..” என்றவள் எழுந்து அறையைவிட்டே ஓடிவிட்டாள்..

அவள் சென்றதும், ‘இவள் எதுக்கு தேங்க்ஸ் சொன்னா..?’ என்ற கேள்வியுடன் எழுந்தவன் அவள் கூறிய அர்த்தம் புரியாமல் குளியலறைக்குள் புகுந்தான்..

அவன் குளித்து முடித்துவிட்டு கீழே இறங்கிவர தென்றலோ சோபாவில் அமர்ந்து எங்கோ வேடிக்கைப் பார்க்க அவளின் அருகில் வந்து அமர்ந்த மனோ, “என்ன ரொம்பவே யோசிக்கற.. மாமா கொடுத்த முத்தம் நல்ல இருக்க..?! அதுக்குத்தான் தேங்க்ஸ் சொல்லிட்டு வந்தாயா..?” என்று அவன் குறும்பாகக் கேட்டதும்,

அவனின் குரலில் இருந்த குறும்பைக் கவனித்த தென்றல், “போ மனோ நீ ரொம்ப கிண்டல் பண்ற..” என்று அவள் வெக்கத்தோடு அவனின் தோளில் சாய்ந்தாள்.. அவளின் வெக்கம் கண்ட மனோ, “புயல் நீயா இது சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க..” என்று சிரிப்புடன் சொல்ல,

“எவன் நம்பினால் எனக்கு என்ன..? நம்பலாட்டி எனக்கு என்ன..?” என்று கூறியவள், “தாத்தாவைப் பார்க்க போகலாம் பாவா..” என்று சொல்ல, “சரிடி பொண்டாட்டி கிளம்பு போலாம்..” என்று அவன் சொன்னதும், “தேங்க்ஸ் பாவா..” என்று சொன்ன தென்றலைப் பார்த்த மனோ, “இந்த தேங்க்ஸ் எதுக்கு செல்லம்..” என்று அவன் கேட்டதும், “போடா..” என்று அவனைத் தள்ளிவிட்டு ஓடிவிட்டாள்..

மலர்ந்த முகத்துடன் ஓடும் தென்றலைப் பார்த்த மனோ அவளிடம் உண்மையைச் சொல்வதே சரி என்ற முடிவோடு ஊட்டி செல்ல தயாரானான்..

அடுத்த ஒரு மணிநேரத்தில் இருவரும் ஊட்டி செல்ல தயாராகிய    தென்றல், “பாவா இன்னும் என்ன பண்றீங்க..? நான் கிளம்பிட்டேன்..” என்று அவனின் அறையை நோக்கி குரல் கொடுத்தாள் தென்றல்

அவளின் சத்தம் கேட்டு அறையில் இருந்து வெளியே வந்த மனோ, “நீ ரெடி ஆகிட்ட அப்படியே சோபாவில் அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டியது தானே..?” என்று கேட்டபடியே மாடியிலிருந்து வேகமாக இறங்கினான்..

“என்னால் எல்லாம் பொறுமையாக உட்கார்ந்திருக்க முடியாது..” என்று சொன்னவளைப் பார்த்த மனோ, “அதுதானே பொறுமை என்றால் என்ன விலை என்று கேட்கும் ஆள் ஆச்சே..?” என்றவனை முறைத்தாள் தென்றல்..

அவள் முறைப்பதைக் கவனிக்காத மனோ, “எல்லாம் எடுத்து வைத்துவிட்டாயா..?” என்று கேட்டதும், “இல்ல பாவா..” என்று அவள் நக்கலாக சொல்ல, “உன்னை அங்கே கூட்டிட்டுப் போய் மறுபடியும் உன்னை வீடு வந்து சேர்ப்பதற்குள் எனக்கு உயிர் போய் உயிர் வருமே..?!” என்று புலம்பியபடியே பொருட்களை எடுத்து டிக்கியில் வைத்தான்..

அவன் புலம்புவதைப் பார்த்து சிரித்தபடியே வீட்டின் கதவுகளைப் பூட்டியவள், “உங்களை கூட்டிட்டு போறதே அதுக்கு தானே..” என்று சிரித்தவளைப் பார்த்த மனோ, “உன்னோட விளையாட்டு அளவு இல்லாமல் போகிறது.. என்னிடம் நல்ல வாங்கிக் கட்டிக்க போற பாரு..” என்று சொன்னவன் காரில் ஏறியமர அவனோடு காரில் ஏறினாள் தென்றல்..

அவள் காரில் ஏறியதும் காரை எடுத்த மனோ, “என்ன பதிலே வரல..?” என்று கேட்டதும், “நீ வாங்கிக் கொடுத்ததைத் தானே மாத்தி மாத்தி கட்டிகிறேன்.. இதில் வேற நான் தனியாக வாங்கிக் கட்டிக்கணுமா..?” என்றவள் விளையாட்டாகக் கேட்டாள்

மனோவோ கொஞ்சமும் யோசிக்காமல் எதையோ நினைத்து, “அது உன்னோட இஸ்டம் புயல்..” என்று கூறியவன் சிரிக்க ஆரம்பித்தான்.. அவன் சிரிப்பதைப் புரியாமல் பார்த்த தென்றல், “எதுக்கு பாவா சிரிக்கிற..?” என்று விளக்கம் வேறு கேட்ட தென்றலைப் பார்த்தவன்,

“புயல் செல்லம் பேசும் போது தெளிவாக பேசுடா.. ஒரு வார்த்தை மாறினாலும் அர்த்தமே மாறும்..” என்று அவன் இயல்பாக கூறினான்.. அவன் சொல்ல வரும் அர்த்தம் புரியாத தென்றல், “என்ன அர்த்தம் மாறும்..?” என்று அவனையே மீண்டும் கேட்டாள்..

அவனோ எதுவும் சொல்லாமல் காரை மட்டும் வேகமாக செலுத்த தென்றல் வெளியே வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்..

கொஞ்ச நேரத்தில் அவள் திரும்பி மனோவைப் பார்க்க அவளின் பார்வையைக் கவனித்த மனோ, ‘என்ன அர்த்தம் புரிந்ததா..?’ என்று பார்வையால் கேட்டதும், “இல்ல..” என்று சொல்லி உதட்டைப் பிதுக்கினாள்..

அவள் உதட்டை பிதுக்குவதைப் பார்த்த மனோ, “உனக்கு புரியாமல் இருந்தால் சந்தோசம்..” என்று கூறிய மனோவை சந்தேகமாகப் பார்த்தாள் தென்றல்.. அவள் பார்வையில் இருந்த மாற்றத்தை உணர்ந்தவன் கண்டும் காணாமல் அமைதியாக சாலையின் மீது கவனத்தைத் திருப்பினான் மனோ..

அவன் காரை ஊட்டியை நோக்கிச் செலுத்த அவள் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வர மலைக்கு மேல் செல்லும் போது வழிதோறும் இருந்த இயற்கை காட்சியை ரசித்தவண்ணம் வந்தாள் தென்றல்..

error: Content is protected !!