அத்தியாயம் – 2
தூக்கம் தடைப்பட்டதின் எரிச்சல் அவனது குரலில் அப்பட்டமாகத் தெரிந்தது… மல்லியோ அதை உணரும் நிலையிலெல்லாம் இல்லாமல்… “அம்முகிட்ட பேசணும்.” என்க..
“என்ன அம்முவா” என்றவனின் தூக்கமெல்லாம் பறந்திருந்தது…
“அம்முகிட்ட குடுங்க”.. மறுபடியும் அவள் இதையே சொல்ல…
எதிர் முனையில் பேசியவனோ அடக்கப்பட்ட கோபத்துடன்… “ஏய்ய்ய்ய்.. யார் நீ??? இப்பபோய் அம்முவை கேக்குற…” என்க…
மறுபடியும் அவள் “அம்மு எங்கே இருக்கா” என்று கேட்க…
கோபத்தின் எல்லைக்கே சென்றவன்.. “ஏய்.. நீ எங்கிருந்து பேசற…” என்று அடிக்குரலில் உறும..
அழுகின்ற நிலைக்கே போனவள்…”அம்மு எங்கடி இருக்க?” என்றவரே போனை கட் செய்துவிட்டாள். அப்படியே தூங்கியும் போனாள்.
அடுத்த நாள் காலை தான் செய்துவைத்திருந்த குளறுபடிகள் எதுவுமே நினைவில் இன்றி வழக்கம் போல் எழுந்தவள்… குளித்து, தயாராகி, தனக்கும் தம்பிக்குமான உணவையும் தயாரித்து லன்ச் பாக்சில் அடைத்தவாறே… படித்துக்கொண்டிருந்த தீபனிடம்,
“டேய் தீபா… லஞ்ச்… பேக் பண்ணிட்டேன்டா… வா சாப்பிட்டுவிட்டுக் கிளம்பலாம்” என அவனை அழைக்க…
இருவரும் பேசிக்கொண்டே உண்டு முடித்து… அவன் பள்ளிக்கும், அவள் அலுவகத்திற்கும் கிளம்பினார்கள்…
*****
அலுவலக பேருந்தில் அமர்ந்தவள்.. அம்மாவுக்கு அழைத்துப் பேசலாம் என்று போனை எடுக்க… அப்பொழுதுதான்… அவள் டையல்டு லிஸ்டில் ஒரு புதிய எண்ணிற்குக் கால் செய்திருப்பதை கவனித்தாள்.
அழைத்திருந்த நேரத்தைப் பார்த்து திடுக்கிட்டு… “தூங்கும்போது டச் ஸ்க்ரீனில் தெரியாமல் கை பட்டு அழைப்பு போயிருக்கும்”, என்று நினைத்தவள்… கால் டியூரேஷனை பார்த்தால்… மூன்று நிமிடங்களுக்கு மேல் இருக்கவே… “மன்னிப்பு கேட்பதுதான் முறை” என்று கருதி… அந்த எண்ணுக்கு… “sorry for the disturbance .Mistakenly called “. என்று மெசேஜ் செய்துவிட்டு… அதற்குமேல் அதைப்பற்றி அதிகம் யோசிக்காமல் சரளாவை அழைத்துப் பேசத்தொடங்கினாள்.
ஆனால் எதிர்முனையில் அந்த குறுந்தகவலை படித்தவனோ… அவள் யார்? என்று யோசிக்கத் தொடங்கியிருந்தான்…
அன்று மல்லி… சவிதா… மேகலா… மூவரையும் அழைத்திருந்தார் காஞ்சனா.. அனுமதி பெற்று அவரது கேபினுக்குள் மூவரும் நுழைந்தனர்.
அங்கே மணிகண்டனும் அமர்ந்திருந்தான். மூவரையும் அமருமாறு பணித்த காஞ்சனா..”இந்த ட்ரைனிங் பீரியட்ல உங்க மூன்று பேருக்கும் நல்ல ஒரு வாய்ப்பு வந்திருக்கு…நீங்க மூணுபேரும் தனித்தனியாக சில ட்ரெஸ்ஸஸ் டிசைன் பண்ணனும். மேனேஜ்மெண்டில்…யாரோடது பெஸ்ட்டாக இருக்கோ அதை செலக்ட் செய்வாங்க.. அது கிறிஸ்துமஸ், நியூ இயர் மற்றும் பொங்கல் சமயத்தில் விற்பனைக்கு வரும். இன்னும் ஒரு வாரத்திற்குள் தயார் செய்யவேண்டியிருக்கும்… தேவையான தகவல்களை மணியிடம் கேட்டுக்கோங்க… மற்ற துணிகள் மற்றும் தேவையான வேறு மெடீரியல்ஸ் எல்லாமும் அவரிடமே சொல்லிடுங்க… என்று சொல்லிமுடித்தார்.
உண்மையிலேயே தம் திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்பு என்று மூன்று பெண்களுமே மகிழ்ந்து நன்றி கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்…
அடுத்து வந்த நாட்கள் மல்லி…ஆடை வடிவமைப்பிற்கான வேலைகளில் மூழ்கிவிட… அவளுக்கு வேறு எதைப்பற்றியும் யோசிக்க நேரமில்லாமல் போனது.
அவர்கள் வடிவமைத்த உடைகளின் மாடல்கள் மேலிடத்திற்கு அனுப்பப்பட… மல்லி வடிவமைத்திருந்த அழகிய சிறிய மணிகள் பதித்த… மயில்போல் எம்பிராய்டரி செய்யப்பட்ட…பெண் குழந்தைகளுக்கான பாவாடையும், அதற்கேற்ற சட்டையும்… தேர்வுசெய்யப்பட… அடுத்த சில நாட்களிலேயே ஆதி சில்க்ஸின் மற்ற புதிய ஆடை கலெக்ஷன்களுடன் அதுவும் விற்பனைக்கு வந்துவிட்டது.
மேலும் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் இடம்பெறும் அவர்களது விளம்பரத்திலும் அந்த உடைகளை அணிந்து குழந்தைகள் தோன்ற… மல்லிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை…
அவர்கள் வீட்டிலோ திருவிழாவாகிப்போனது!!! மகளின் பெருமையை பற்றி பரிமளாவும் ஜெகனும் கூப்பிட்டுச் சொல்லாதவர் பாக்கியில்லை எனலாம்.
ஒவ்வொருமுறை அந்த விளம்பரம் தோன்றும்பொழுதும்… “அக்கா உண்மையிலேயே நீதான் இதை டிசைன் செய்தியா? இல்ல நெட்டலிருந்து சுட்டியா? என்னால நம்பவே முடியலையேம்மா நம்பவே முடியலையே”என்றுநடிகர் திலகம் பாணியில் அவளை ஓட்டி எடுத்து… அதற்குப் பதிலாக அவளிடம் இரண்டு அடிகளையும் வாங்கிக்கொள்வான்…
மல்லி குடும்பத்தில், அவர்கள் வீட்டை விற்றுவிட்டு, ஊரை விட்டே வந்துவிட்டாலும்… வருடந்தோரும்பொங்கல் பண்டிகையை மட்டும் பூவரசந்தாங்கல் சென்று,ஜெகனது பெரியப்பாவின் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடுவதை வழக்கமாகக்கொண்டிருந்தனர். வசதி வாய்ப்புகளில் பின்தங்கியிருந்தாலும்…தம் மக்களிடம் பாசம் காட்டுவதில் அந்த கிராம மக்கள் என்றுமே குறைவைப்பதில்லை.. அதுபோல் ஊர்ப் பாசமும் இவர்களை விடுவதில்லை.
அடுத்துவந்த நாட்களில் பூவரசந்தாங்கல் சென்று அங்கே பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடிவிட்டு,பின்பு பழைய சீவரத்தில்வருடந்தோறும், மாட்டுப்பொங்கலன்று விமரிசையாக நடக்கும் விழாவான காஞ்சி வரதராஜ பெருமாள் பரிவேட்டை உற்சவத்தைதரிசித்துவிட்டுத் திரும்பி வந்தனர்..
இதற்கிடையில் ஆதி டெக்ஸ்டைல்ஸ், மொத்தம் ஒன்பது வகை புடவைகள் அடங்கிய “சுவர்ணதாரிணி” என்ற திருமண புடவைகளின் கலெக்ஷன்களை அறிமுகப்படுத்த, அவை மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது… மேலும் அவர்களுடைய பெஸ்டிவல் கலெக்ஷன் ஆடைகளின் விற்பனையும் உச்சத்தைத் தொட்டிருக்க… அதனைக் கொண்டாடும் பொருட்டு, டிசைனிங் பிரிவு ஊழியர்கள் அனைவருக்கும், ஆதி டெக்ஸ்டைல்ஸ் சார்பில் ஒரு பார்ட்டி ஏற்பாடுசெய்திருந்தனர்.
“ராயல் அமிர்தாஸ்” என்ற பெயர் கொண்ட நட்சத்திர அந்தஸ்து கொண்ட அந்த ஹோட்டலின் பார்ட்டி ஹால்… மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது… ஆட்டம், பாட்டம் கேளிக்கை என எதற்கும் குறைவில்லாமல் இருந்தது அந்த இடம்.. பழச்சாறு வகைகளும், உயர்தர மதுவகைகளும் இடம்பெற்றிருக்க… சுவை நரம்புகளைத் தூண்டக்கூடிய உணவு வகைகளும் பஃபே முறையில் வைக்கப்பட்டிருந்தது.
அழகிய பூவேலைசெய்யப்ட்ட,இளஞ்சிவப்பில் கருப்பு பார்டருடன் கூடிய ரா சில்க் புடவையும்… கருப்பு பிளவுசும் அணிந்து, புடவையில் இடம்பெற்றிருந்த பூக்களைப்போன்றே வடிவமைக்கப்பட்ட பேஷன் ஜுவெல்லரி அணிந்து, பிஷ் போன் ஸ்டைலில், தளர பின்னலிட்ட சடையை முன்னாலிட்டு, எளிமையான அழகுடன், தன் டீம் தோழர்களை தன் கண்களால் தேடியபடியே… அங்கே நுழைந்தாள் மல்லி.
அங்கே காஞ்சனா மட்டும் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்க, மற்றவர் யாரும் கண்ணில்படவில்லை. மரியாதை நிமித்தம் அவருக்கு ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு, அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் போய் அமர்ந்தாள். அங்கே இரண்டு விழிகள் ஆளை எடைபோடும் பார்வையுடன் அவளையே தொடர்ந்துகொண்டிருந்ததை அவள் அறியவில்லை.
அதே நேரம்”ஹாய்” என்றவாறே அவள் அருகில்வந்து உட்கார்ந்தாள் ஐஸ்வர்யா…
“மணி, மேகலாலாம் எங்கே?” என்று கேட்ட மல்லி அவளை கண்டு ஒரு நிமிடம் திடுக்கிட்டாள்..
அவள் மது அருந்திவிட்டு லேசான போதையுடன் இருந்தது அவளுக்குப் புரிந்தது.
மேலும் அலுவலகத்தில் இருப்பதைவிட ஒரு அலட்டல் தன்மை இருந்தது அவளிடம்.
மல்லியின் எளிமையான அழகு, ஐஸ்வர்யாவின் பொறாமை உணர்ச்சியை தூண்ட… அவளை சற்று கீழே இறக்கிக் காட்ட எண்ணி.. “என்ன மல்லி!! பட்டிக்காடு மாதிரி சாரீல வந்திருக்க… எங்களை மாதிரி பார்ட்டிவார்ஸ்லாம் போடவேணாம்… அட்லீஸ்ட் சல்வாராவது போட்டிருக்கலாமே.. என்றுகேட்க…
அதற்குப் புன்னகையுடன் “பட்டிக்காடு மாத்ரில்லாம் இல்ல ஐஷு … நான் பட்டிக்காடேதான்.. இதுலஎன்ன இருக்கு.. ஐஆம் வெரி மச் கம்பர்ட்டபிள் இன் சாரீ. உங்களுக்கு அது பிடித்த மாதிரி எனக்கு இது பிடிச்சிருக்கு” என்ற மல்லியின் பதிலில் அவள் முகம் கருத்துபோனது…
ஐஸ்வர்யா கல்லூரியில் அவளுக்கு சீனியர்… பொதுவாகவே,அவர்கள் படித்த கல்லூரியின் சார்பில்…ஒவ்வொரு மாணவர்களும் அவர்களுடைய திறமைகளை ஷோகேஸ் செய்ய வாய்ப்புகள் ஏற்படுத்தித்தரும் பொருட்டு… சிறிய அளவிலான பேஷன் ஷோக்கள்நடத்தப்படும்.
அதன் மூலமாகவே அவர்கள் முன்னணி நிறுவனங்களில் வேலையில் நியமிக்கப்படுவார்கள்… அப்படிதான் இவர்களும் ஆதி டெக்ஸ்டைல்ஸில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.
நட்பாகப் பழகுவதுபோல் இருந்தாலும், மல்லியை போன்றகிராமத்துப் பின்னணியில், ஏழ்மைநிலையிலிருந்து வரும் பெண்களிடம் ஒதுக்கம் காண்பிக்கும் மனநிலை பலரிடம் இருந்தது. சிலருடைய நேரடி அவமதிப்புகளையும் தாண்டித்தான் அவள் படித்து வெளியில் வந்ததே… அதனாலேயே இவர்களைப் போன்றோருடன் ஒன்ற முடியாமல் தவிப்பாள் மல்லி. அதற்கு மேகலா, சவிதா போன்றோரும் விதிவிலக்கல்ல.
இதுபோன்ற சமயங்களில் அவளால் அம்முவை நினைக்காமல் இருக்க முடியாது… மூன்று ஆண்டுகள் ஹாஸ்டலில் தனித்திருந்த பொழுது… முழு அன்பையும் அவளுக்கு அளித்து… அரவணைத்தவள் அம்மு…மல்லியைப் பொறுத்தவரை, பலவருடங்கள் கழித்தும் அவளது இடத்தை நிரப்பக்கூடிய ஒருரைக்கூடஅவள் சந்திக்கவில்லை என்பதுதான் உண்மை. பெயரில் கூட அவ்வளவு ஒற்றுமை இருவருக்கும்… நினைக்கும் பொழுதே பெருமூச்சு எழுந்தது மல்லிக்கு…
மல்லீ..என்ற ஐஸ்வர்யாவின் விளிப்பில் நினைவுக்கு வந்தவள் “சவீ, மணி எல்லோரும் எங்கே? நீங்க பார்த்திங்களா ஐஷு” என்று மறுபடியும் கேட்க…
“மணியிடம் எதோ வேலைச் சொல்லி காஞ்சனா மேம் அனுப்பி இருக்காங்க.. சாவியும், மேகலாவும் அதோ இருக்காங்களே” என்று ஐஸ்வர்யா காண்பிக்க.. சற்று தள்ளி நின்றுகொண்டிருந்த அவர்களை அங்கே வருமாறு அழைத்தாள் மல்லி…
பிறகு தனக்கென்று ஆரஞ்சு பழச்சாறு ஒன்றை எடுத்துவந்து அவள் அங்கே அமரவும்… மற்ற இருவரும் அங்கே வந்து அமர்ந்தனர்… அவர்களுடன் பேசியவாறே அதைப் பருகத்தொடங்கியவள்.. அந்த கிளாசை கையில் தூக்கி பார்த்தவாறே. “என்னவோ கொஞ்சம் கசப்பாக இருப்பது போல் இருக்கே” என்றாள் .
அதற்குச் சவிதா “ஏய் லிக்கர் எதாவது மாற்றி எடுத்துண்டு வந்துட்டியா? என்று அவளை டென்ஷன் செய்ய…
“இல்லையே அதோ பிரெஷ் ஜூஸ் இருக்கும் இடத்திலிருந்துதான் எடுத்துவந்தேன்” என்று அங்கே கை காட்டினாள்..
“சில ஆரஞ்சு கசப்பாக இருக்கும்” என்று தன்னை தானே சமதப்படுத்திக்கொண்ட மல்லி முழுவதையுமே குடித்து முடித்தாள்.. ஆனால் அதுதான் தவறாகிப்போனது…
அவர்களது பேச்சு சற்று நேரத்தில் திசை மாறிப்போய், கூடவே வேலை செய்யும் சிலரைப் பற்றிய தனிமனித தாக்குதலில் வந்து நிற்க… அங்கே இருக்கவே பிடிக்கவில்லை மல்லிக்கு.. அந்தச் சூழ்நிலையும் அவளது மனதிற்கு ஓட்டவேயில்லை… பசிக்கவேறு செய்தது…
ஏனோ அங்கே உண்ணவும் அவளுக்குப் பிடிக்கவில்லை… எழுந்துசென்று அங்கே இருந்த கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே பார்க்க… சுற்றி பசுமையான செடிகளுடன் ரம்மியமாக இருந்த ஆளரவமற்ற அந்த ஹோட்டலின் நீச்சல் குளம் கண்ணில் பட்டது..
மெதுவாகயாரும் கவனிக்காதவாறு அங்கிருந்து நழுவி நீச்சல் குளத்தருகே சென்றவள்,சிலுசிலுவென்று அமைதியான.. சூழ்நிலையை ரசித்தவாறேஅங்கே இருந்த (LOUNGE CAHIR) லாஞ்ச் சாரில் சற்று நேரம் கண்மூடி அமர்ந்திருந்தாள். குளத்தைச் சுற்றி நடக்கத் தொடங்கியவளின் கால்கள் மேலே நடக்க இயலாமல்பின்னிக்கொள்ள.. தலை சுற்றி, கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. தள்ளாடி தண்ணீரில் விழவிருந்தவளை… இரு வலியகி கரங்கள் தாங்கிப் பிடித்தது…அடுத்த நொடி அவள் மயங்கிச் சரிந்திருந்தாள்..
******
“ஒன்பது மணிக்கெல்லாம் வந்துவிடுவேன்” என்று சொல்லிச் சென்ற மகள்! மணி பத்தரை ஆகியும் வரவில்லையே எனக் கவலையுடன் அவளுக்காகக்காத்திருந்தனர் பரிமளாவும் ஜெகனும். அவளுடைய போன் வேறு எடுக்கப்படவில்லை…
“அந்த ஹோட்டல் எனக்குத் தெரியும். நான் வேணா போய் அக்காவை அழைத்து வரவா?” என்று தீபன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே பரிமளாவின் போன் ஒலித்தது.
“ஹலோ” என்றவரிடம் ஒரு பெண் குரல், “என் பெயர் சுமதி… நான் மல்லி வேலை செய்யும் நிறுவனத்தில்தான் வேலை செய்கிறேன். அவங்க போன்ல ஐ சி ஈ என்று இந்த நம்பர்தான் இருந்தது ” என்று சொல்லி முடிப்பதற்குள் பரிமளா கலக்கத்துடன் “ஐயோ! என் பொண்ணுக்கு என்ன ஆச்சு?” என்று கேட்க…
“பயன்படும்படி ஒன்றுமில்லைமா.. அவங்க திடீரென்று மயக்கமாகிட்டாங்க. நான்தான் இங்கே இருக்கும், ‘கேர் ஃபார் லைப்’ ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கேன்… இங்க சேஃபாகத்தான் இருகாங்க… எனக்கு வீட்டுக்கு போகணும், நீக்க வந்து கவனித்துக்கொள்ளுங்கள்..” என்று சொல்ல.. “ரொம்ப நன்றிமா… நான் இப்பவே வந்துடறேன்” என்று சொல்லி கட் செய்தார் பரிமளா.
பதறியபடி மருத்துவமனை வந்திருந்தனர் மூவரும். அவள் இருக்கும் அரை எண்ணை கேட்டு அங்கே வந்து பார்க்க.. மல்லிக்கு ட்ரிப்ஸ் போடப்பட்டிருந்தது…
அதே நேரம் அங்கே வந்த ஒரு இளைஞர் “நான் டாக்டர் வினோத்…” என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.
நொடி கூட தாமதிக்காமல் பரிமளா,”என் மகளுக்கு என்ன ஆச்சு டாக்டர்” என்று கேட்க…
“எதோ புட் அல்ர்ஜி ஆகி இருக்கு… வாமிட் பண்ணி இருக்காங்க.. கொஞ்சம் டீஹைடிரேஷன் ஆகியிருக்கு … அதுதான் ட்ரிப்ஸ் போட்ருக்கோம்… பயப்பட வேண்டாம், ட்ரிப்ஸ் முடிஞ்சதும், காலையிலேயே வீட்டுக்கு அழைத்து போகலாம்” என்று சொல்லிவிட்டு போனார் அந்த மருத்துவர்.
பிறகு பரிமளா மட்டும் மகளுடன் தங்கிக் கொள்ள, மற்ற இருவரும் கிளம்பிச் சென்றனர்.
இமைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டதுபோல், கண்களைத் திறக்கவே கடினமாக இருந்தது மல்லிக்கு. தலை வேறு மிகவும் பாரமாக இருக்க.. தான் இருப்பது ஒரு மருத்துவமனை என்பதே புரிய சிறிது நேரம் ஆனது அவளுக்கு… பதறிய படி எழுந்து அமர்ந்தவள், அருகில் வந்த பரிமளாவை கண்டு அமைதி அடைந்தாள்…
முனகலாக, “அம்மா! யாரும்மா என்னை இங்கே சேர்த்தது ?” என்று அன்னையிடம் கேட்க.. இரவு நடந்தது அனைத்தையும் சொல்லி முடித்தார் அவர்.
“இந்த பார்ட்டிலாம் நமக்கு ஒத்துவராது… போகவேண்டாம்னு சொன்னா கேட்டியா நீ? மரியாதையா இருக்காதுன்னுட்டு போன… என்ன ஆச்சு பாரு? வயசு பொண்ணு ராத்திரி வீட்டுக்கு வரலன்னா, எவ்வளவு அசிங்கம்.. நம்ம ஊராக இருந்தா… வெளிய தலை காட்டவே முடியாது.நல்லவேளை இங்கே கொண்டு வந்து சேர்த்ததால.. நம்ம மானம் கப்பலேறாம தப்பிச்சோம்” என மூச்சு விடாமல் அதுவரை அடக்கி வைத்திருந்த ஆற்றாமை அனைத்தையும் கொட்டி தீர்த்தர் பரிமளா.
நல்லவேளையாக தீபன் அங்கு வந்து சேரவே… இத்துடன் அவளை விட்டார் அவர்.
தீபனிடம் திரும்பி “பணம் கட்டியாச்சா தம்பி” என்று கேட்க…
அதற்கு அவன் “பே பண்ணலாம்னு போனேன் மா.. ஆனா இவங்க கம்பனிலேயே பணத்தை கட்டிவிட்டதாக சொல்றாங்க.”என்க..
“என்ன பணம் கட்டிடங்களா? இன்னும் இவளோடவேலை நிரந்தரம் கூட ஆகல.. எப்படி பணம் கட்டினாங்க?” என அவர் அதிசயிக்க..
அதற்கு “அவங்க பார்ட்டில அப்படி ஆனதுனால இருக்கும் மா. ரொம்ப யோசிக்காதீங்க” என்று முடித்தாள் மல்லி.
பிறகு அவளை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கே ஜெகன் இருந்ததால் பரிமளாவிடம் மேலும் மாட்டாமல் தப்பித்தாள் மல்லி..
ஆனால் பல கேள்விகள் அவளை குடைந்துகொண்டிருந்தது அவளுக்குள். “சுமதி யார்?”என்று குழம்பிப்போனாள். ஏனென்றால்… அவளுக்குத் தெரிந்து சுமதி என்ற பெயரில் ஒருவரும் அங்கே வேலை செய்யவில்லை.
மேலும், சனி, ஞாயிறு விடுமுறையானதால் திங்களன்றுதான் எதையும் அறிய முடியும்.
முதல் நாள் நடந்ததை நினைவு படுத்தி பார்த்தாள். நீச்சல் குளம் அருகில் மயங்கியது மட்டுமே நினைவில் இருந்தது..
“கீழே விழாமல் தாங்கியது ஒரு ஆணோ?” என்ற எண்ணம் தோன்ற… உள்ளுக்குள்ளே விதிர்வதிர்த்துப் போனாள் மல்லி.