அத்தியாயம் 13

ஒன்றே உறவென எண்ணிக்கொள்
இன்றே நிஜமென ஏற்றுக்கொள்
அன்பால் இணைத்தது விலகாது
அதுவே நிலை அதை ஒப்புக்கொள்
நினைத்ததை நடத்தி முன்னேறு
நிலைக்கட்டும் நமது வரலாறு
ஏதான போதும் விடிகிற பொழுது மாறுமோ
எல்லோர்க்கும் இங்கே இனி வரும் காலம்
ஆனந்தம் தான் ஆரம்பம்
இது நிரந்தரம்தான்

“அத்தை, எழுந்திருங்க. நான் வேலைக்கு கிளம்புறேன். தருணை கிளப்பி பள்ளிக்கு அனுப்பிட்டேன். உங்களுக்கும், தானுவுக்கும் சாப்பாடு செஞ்சு வச்சிருக்கேன். சாப்பிட்டுட்டு ஓய்வு எடுங்க. எல்லா வேலையையும் இழுத்துப்போட்டுக்கிட்டு செய்யாதீங்க.” என்ற கற்பகம் தோள் மேல் தூங்கி கொண்டிருந்த தானுவை வள்ளியின் படுக்கையில் கிடத்தினார்.

“சாரிம்மா. இன்னிக்கு கொஞ்சம் கண்ணசந்துட்டேன். நீ பார்த்து பத்திரமா போய்ட்டு வாம்மா. பிள்ளைங்களை நான் பார்த்துக்கிறேன். “

“பரவாயில்லை அத்தை. உங்களுக்கும் தான் ஓய்வு ஒளிச்சல் இல்லாத வேலை.” என்றவாறே தோள் பையை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

சுந்தரம் அவர்களை பிரிந்து சென்று இரு மாதம் ஆகியிருந்தது. வாழ்க்கை ஒரு மாதிரியாக ஒழுங்குக்கு வந்திருந்தது.

பேத்தியை எழுப்பி, குளிக்க வைத்து பசியாற குடுத்து அவளுடனே அவரும் உட்கார்ந்து சாப்பிட்டார். பிறகு தொலைக்காட்சி பெட்டியில் கார்ட்டூன் திறந்து விட்டு பேத்தியை உட்காரவைத்தார்.

கிச்சனுக்குள் சென்றவர் ராத்திரி ஊற வைத்திருந்த உளுந்தை கல்லில் இட்டு ஆட்டினார். கார்ட்டுன் பார்ப்பதை விட்டுவிட்டு பாட்டியின் அருகில் வந்து உட்கார்ந்தாள் தானு. அவளை பார்க்க பார்க்க வள்ளிக்கு மனதை பிசைந்தது. எப்படி துறு துறுவென இருந்த குழந்தை, இப்படி பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி ஆகிவிட்டாளே. சிரிப்பில்லை, பேச்சில்லை, விளையாட்டு இல்லை. அவளது அமைதி மட்டும் இல்லை நாளுக்கு நாள் இளைத்து வரும் உடம்பும் வள்ளிக்கு திகிலை வரவைத்தது.

தனது கவலையை சொல்லி கற்பகத்தை பயப்படுத்த விரும்பவில்லை வள்ளி. சுந்தரத்திடம் சவடாலாக பேசி விட்டாலும் குடும்பத்தை எப்படி காப்பாற்ற போகிறோம் என வள்ளி மலைத்து போய்விட்டார். இதுவரை வீட்டு பொருளாதார நிலைமையை அறிந்து வைத்திராத இரு பெண்களும் தவித்து விட்டார்கள். வீட்டு கடன் இல்லாவிடாலும், உணவு செலவு, தண்ணீர் கட்டணம், மின்சார கட்டணம், தருணின் பள்ளி செலவு இப்படி தொட்டதுக்கெல்லாம் பணம் தேவைப் பட்டது. லெட்சுமி பண உதவி செய்ய வந்த போது இருவரும் மறுத்துவிட்டனர். பணம் இல்லாமல் இருக்கலாம், தன்மானம் இருவரிடமும் நிறைந்து இருந்தது. தன் பெற்றவர்களிடம் கூட தனது நிலைமையை மறைத்துவிட்டார் கற்பகம்.

“பணம் ஒன்னும் வேணாம் அக்கா. உங்க வீட்டுக்காரர் கிட்ட சொல்லி எனக்கு வேலை ஏதாச்சும் பார்த்து குடுக்க சொல்லுங்க. ரொம்ப படிக்கல, ஆனா மானமா பொழைக்கிற எந்த வேலையா இருந்தாலும் பரவாயில்லை.”

லெட்சுமி கணவர் மணியம் பார்த்துக் கொடுத்தது தான் இந்த காண்டீன் வேலை. அவர் வேலை செய்யும் கம்பேனியில் இருந்தது இந்த காண்டீன். மற்றவர்கள் சாப்பிட்ட தட்டை எடுப்பது, மேசை துடைப்பது, தட்டுக்களை கழுவுவது, கூட்டுவது என வேலை இருந்து கொண்டே இருக்கும். காலை 6.30 க்கு கம்பேனி வேனில் செல்பவர் இரவு 8.30க்கு தான் வீடு வருவார். ஓரளவு சம்பளம் வந்தது.

களைத்துப்போய் வரும் மருமகளை தாயாய் தாங்குவார் வள்ளி. எவ்வளவு சொல்லியும் காலையில் சீக்கிரமே எழுந்து சமைத்து வைத்துவிட்டு தான் செல்லுவார் கற்பகம். இந்த உடல் உழைப்பினாலே மகளின் மாற்றம் அவர் கண்களுக்கு புலப்படவில்லை.

வள்ளி உளுந்தை ஆட்டிக்கொண்டே பேத்தியிடம் பேச்சு கொடுத்தார்.

“தானு குட்டி”

“ஹ்ம்ம்”

“இன்னிக்கு ராத்திரிக்கு உங்களுக்கு பாட்டி பர்கர் வாங்கி குடுக்கவா?” பர்கர் தானுவின் விருப்பமான உணவு.

“வேணா”

“சரி, இந்த வார கடைசியிலே பார்க்குக்கு போலாமா? உங்களுக்கு ஊஞ்சல் பிடிக்குமே”

வேண்டாம் என்று தலையை ஆட்டினாள் அவள்.

“அப்போ அந்த பூனை படம் போட்டுருக்குமே, என்னமோ கிட்டி அந்த கலர் புக் வாங்கி தரவா?”

ஒன்றுமே சொல்லாது எழுந்து சென்று விட்டாள் தானு.

‘இவள இப்படியே விட கூடாது. தருண் கூடவும் பேசி விளையாட மாட்டிக்கிறா. மனசுல என்ன வாட்டுதுன்னு தெரியலையே. ஹ்ம்ம் எல்லாம் அந்த கடன்கார பாவி நினைப்பா தான் இருக்கும். என் பேத்தியை நடை பிணமா மாத்திட்டானே ‘ என கண்ணீர் உகுத்தார் அவர்.

தருண் பள்ளி விட்டு வந்தவுடன் இருவருக்கும் உணவு கொடுத்தவர், சிறிது நேரம் தூங்க வைத்தார். மூன்று மணியளவில் இருவரையும் எழுப்பி, தருணை மட்டும் லெட்சுமி வீட்டில் பாடம் செய்ய சொல்லி விட்டு வந்தார். பேத்தியை கையில் பிடித்து கொண்டு, மறு கையில் பெரிய கூடையை தூக்கி கொண்டு கடைக்கு நடந்தார்.

அவர்கள் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்காக, நுழைவாயிலில் ஒரு கடை வரிசை இருக்கும். அங்கே பலசரக்கு கடை, சீன உணவகம், டோபி, மலாய் உணவகம் என வரிசையாக இருக்கும். மலாய் உணவகத்தின் முன் பகுதியில் சிறு இடம் ஒதுக்கி வள்ளிக்கு வடை போட இடம் கொடுத்திருந்தார் உரிமையாளர். வடை, உருண்டை, போண்டா என சுட சுட செய்து விற்பார் வள்ளி. ருசியாக இருக்கும் பலகாரங்களை வாங்க பல இன மக்களும் வருவார்கள். வருபவர்கள் அந்த கடையிலே மற்ற உணவு வகைகளும், பானங்களும் வாங்குவதால் கடைக்காரருக்கு நல்ல வருமானம். அதனால், இடத்திற்கு வள்ளியிடம் சொற்ப வாடகையே வாங்குவார்.

தானுவை பக்கத்திலேயே அமர்த்தி கொள்ளுவார் வள்ளி. அவளுக்கு பிடித்த  ஐஸ் போட்ட “மில்லோ” வாங்கி குடுத்துவிடுவார். வள்ளி 6 மணிக்கு வியாபாரத்தை முடிக்கும் வரை அப்படியே அமர்ந்து இருப்பாள் தானு. சில சமயம் நிச்சயம், விருந்து என விசேஷங்களுக்கும் வள்ளியிடம் ஆர்டர் கொடுப்பார்கள். நாட்டு வைத்தியத்துக்கும் அங்குள்ளவர்கள் வள்ளியை நாடி வருவார்கள். கஷ்டப்பட்டாலும் மன வலிமையினாலே இருவரும் தாக்கு பிடித்து குடும்பத்தை நடத்தினார்கள்.

வியாபாரத்தை முடித்து கொண்டு வீட்டுக்கு வந்த வள்ளி, லெட்சுமியை கூப்பிட்டு பேசினார்.

“எம்மா லெட்சுமி, அவங்க அப்பன் போய் ரெண்டு மாசம் ஆகுது. இந்த தானு புள்ள இன்னும் பித்து புடிச்ச மாதிரி இருக்கா மா. எங்கயாச்சும் பூசாரி கிட்ட கூட்டிட்டு போகலாமா?”

“அம்மா, பூசாரி கிட்ட காட்ட அவளுக்கு என்ன காத்து கருப்பா அடிச்சிருக்கு? தகப்பன் ஏக்கம் மா. வேணும்னா நாளைக்கு பிள்ளைங்க பள்ளிக்கு போனதும், நாம குழந்தைகள பாக்குற டாக்டர் கிட்ட போலாம். கவர்மென்ட் மருத்துவமனைதானே அவ்வளவா செலவும் ஆகாது.”

இரவில் வீடு வந்த மருகளிடம் விஷயத்தை பகிர்ந்து கொண்டார் வள்ளி. அப்படியே இடிந்து போய் அமர்ந்து விட்டார் கற்பகம்.

“அத்தை வேலை வேலைன்னு பிள்ளைய கவனிக்காம விட்டுட்டேனே. எனக்கும் அவ அப்பாக்கும் என்ன அத்தை வித்தியாசம்.” என கேட்டவாறே தூங்கி கொண்டிருந்த மகளின் தலையை கோதியபடி கண்ணீர் சிந்தினார் கற்பகம்.

“கற்பு, அப்படி சொல்லாதம்மா. நீ இந்த பாடு படறதெல்லாம் இந்த பிள்ளைங்களுக்கு தானே. நமக்கு இதை எல்லாம் அனுபவிக்கனும்னு எழுதியிருக்கு. மனச மட்டும் தளர விட்டுறாதம்மா. இந்த இக்கட்டுல்ல இருந்தும் கண்டிப்பா நாம வெளி வருவோம். கவலை படாத” என அணைத்துக் கொண்டார். இருவர் பேசுவதையும் கேட்டு கொண்டிருந்த தருணும், ஓடி வந்து அவர்களை அணைத்துக்கொண்டான்.

மறுநாள் லெட்சுமியுடன், வள்ளியும் கற்பகமும் தருணும் சேர்ந்தே தானுவை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றனர். தருண் காலையிலே பள்ளி செல்ல மறுத்துவிட்டான். தங்கையின் உடல்நிலையை பற்றி தனக்கும் தெரிய வேன்டும் என பிடிவாதம் பிடித்து கூட வந்தான்.

தானுவை பரிசோதித்த டாக்டர், அவளின் மாறுதல்கள் எப்பொழுது தொடங்கியது, அதன் பின்புலம் என்ன என அனைத்தையும் அறிந்து கொண்டார்.

“இங்க பாருங்கம்மா,  தான்யாஸ்ரீக்கு உடல் அளவுல எந்த கோளாரும் இல்ல. அவ மன ரீதியா பாதிக்க பட்டுருக்கா.”

“டாக்டர், எங்க புள்ளைக்கு பைத்தியமா?” என பதறிவிட்டார் வள்ளி.

“மன ரீதினா உடனே பைத்தியம்னு ஏன் நினைக்கிறீங்க. இது ரொம்ப தப்பான கண்ணோட்டம். மெடிக்கல் டெர்ம்ல சொல்லனும்னா அவளுக்கு டிப்ரஷன் அதாவது மன அழுத்தம் ஏற்பட்டு இருக்கு. இது பெரியவங்களுக்கு மட்டும் தான் வரும்னு இல்ல குழந்தைகளுக்கும் வரலாம். மனதுக்கு நெருக்கமான ஒரு விஷயத்தை இழந்ததால இது வந்துருக்க சாண்ஸ் இருக்கு. இதில் பாதிக்க பட்ட பிள்ளைகள் சட்டுன்னு கோப படுவாங்க, அழுவாங்க, சாப்பாட்டை குறைச்சுகுவாங்க, யாரோடும் பழக மாட்டாங்க, விட்டத்தை பார்த்து கிட்டு உட்கார்ந்துருப்பாங்க. அப்படியே விட்டுட்டா இந்த மன அழுத்தம் ஆளையே சிதைச்சிடும். நல்ல வேளையா நீங்க சீக்கிரமா கூட்டிட்டு வந்துட்டீங்க.”

“டாக்டர், இது குணமாயிருமா?” என பயத்தை கண்களில் தேக்கியபடி கேட்டார் கற்பகம்.

“கண்டிப்பா குணபடுத்திருலாம். நீங்க கவலையை விடுங்க. நாங்க குடுக்குற அன்டி-டிப்ரசன்ட் மருந்த கரேக்ட குடுங்க. அதோடு குடுக்குற அப்பாயின்ட்மேன்ட் மிஸ் பண்ணாம கவுன்சலிங் கூட்டிட்டு வாங்க. ரொம்ப முக்கியமா உங்க அளவில்லாத அன்பை குடுங்க. அன்பால குணபடுத்த முடியாத மன நோயும் உண்டோ. வீட்டுல ஒருத்தர் கொஞ்சம் கண்டிப்பு காட்டுங்க. சாப்பிட வைக்க, விளையாட வைக்க, மருந்து சாப்பிடன்னு. அண்ணா நீங்க பாப்பாகிட்ட கண்டிப்பு காட்டுறீங்களா?” என தருணை பார்த்து சிரித்தபடி கேட்டார் மருத்துவர். தலையை வேகமாக ஆட்டிய தருண், அந்த இடத்தில் தானுவுக்கு அப்பாவாக மாறினான்.

“சீக்கிரமா கிண்டர்கார்டன்ல சேருங்க. மத்த பிள்ளைகளோட பழகும் போதும் சீக்கிரம் மாற்றம் வரும்” என கூறி அவர்களை வழி அனுப்பினார் அந்த மருத்துவர்.

அன்றிலிருந்து தான்யாஸ்ரீ அவர்களின் கண்ணின் மணி ஆனாள். அவர்கள் மூவரின் உலகமும் அவளை சுற்றி தான் சுழன்றது. அருகிலேயே உள்ள ஒரு அரசாங்க கிண்டர்கார்டனில் சேர்த்தார்கள். காலையில் வள்ளி தானுவை நடத்தியே பள்ளிக்கு அழைத்து செல்வார். பள்ளி முடிந்தவுடன் நடத்தியே வீட்டுக்கு அழைத்து வருவார். கொஞ்சம் கொஞ்சமாக நல்ல மாற்றம் வந்தது தானுவிடம்.

தானுவின் பள்ளிக்கு பக்கத்திலே ஒரு தனியார் பள்ளி இருந்தது. நல்ல தரமான ஆங்கில கல்வி வழங்கப்படும் அந்த பள்ளியில் பணக்கார பிள்ளைகளே பயின்று வந்தார்கள்.

ஒரு நாள் பள்ளி முடிந்து தானுவை அழைக்க வந்திருந்தார் வள்ளி. பேத்தியை அழைத்து கொண்டு வெளியேறும் போது, பக்கத்து பள்ளி மதில் சுவற்றிலிருந்து ஒரு சிறுவன் குதிக்க கண்டார். அவன் வேகமாக சாலையில் வந்து கொண்டிருந்த காரை நோக்கி ஓடினான். அவனின் செய்கை வேண்டுமென்றே விபத்தில் சிக்க விரும்புவது போல இருந்தது. திடீரென்று சிறுவன் ஓடி வரவும், காரை நிறுத்த முடியாத காரோட்டி அவனை இடித்து தள்ளி விட்டு பயத்தில் நிற்காமல் சென்று விட்டான்.

நேரடியாக இதை பார்த்த வள்ளி பதறிவிட்டார். பேத்தியை தூக்கி கொண்டு ஓடியவர் அச்சிறுவனை வேகமாக சாலை ஓரத்துக்கு இழுத்தார். அவனை தொட்டு ஆராய்ந்தவர், தனது கைலியை கிழித்து தலையில் வந்த ரத்தத்துக்கு கட்டுப் போட்டார். கால் எழும்பு முறிந்திருப்பதை உணர்ந்த வள்ளி , பக்கத்தில் கிடந்த குச்சியை ஒடித்து காலை நேராக வைத்து கட்டு போட்டார். அதற்குள் சில கார்கள் அந்த இடத்தில் நின்று விட்டன. அவர்களின் உதவியுடன் ஆம்புலன்சை அழைத்து பேத்தியையும் கூட்டி கொண்டு ஆம்புலன்சில் ஏறிக்கொண்டார். பாதி வழியில் கண் முழித்து பார்த்த அந்த சிறுவன், பக்கத்தில் அமர்ந்திருந்த தான்யாவின் கையை பயத்தில் பற்றி கொண்டான். தான்யாவும் அவன் கையை ஆறுதலாக தட்டிக் கொடுத்தாள். அங்கே ஆரம்பித்தது அவர்கள் நட்பு.

மகனின் விபத்தை கேள்விபட்டு மிஸ்டர் ஓங்கும் அவர் மனைவியும் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். தலையில் சிறிய அடிதான். கால் மட்டும்தான் முறிந்திருந்தது. வள்ளி முதலுதவி செய்திருந்ததால் ரத்த இழப்பு ஏற்படவில்லை.

முழித்திருந்த டேனி, டான்யாவின் கையை விடவேயில்லை. டாக்டர்கள் எந்த ஆபத்தும் இல்லை என்றவுடன் தான் சுற்றுப்புறத்தை கவனித்தார் ஓங். ரத்தக்கறையுடன் நிற்கும் பாட்டியையும் பேத்தியையும் பார்த்தவர், அவர்கள் தான் மகனை காப்பாற்றியவர்கள் என புரிந்து கொண்டார். வள்ளியின் கையைப் பிடித்து கொண்டு அழுதுவிட்டார் ஓங்.

அப்பொழுதுதான் ஓங்கையும் கேத்ரீனையும் பார்த்து டான்யா சொன்னாள்,

“அங்கிள், நீங்க ரெண்டு பேரும் பிரிய போறீங்களாமே. டேனி சொன்னான். அதனால தான் கார்ல அடிப்பட்டு சாமி கிட்ட போக ட்ரை பண்ணானாம். நீங்க வேணும்னா பிரிஞ்சு போங்க. டேனிய நான் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்”

அவளின் வார்த்தையை கேட்டு இருவரும் ஆடி போய் விட்டார்கள். காதலித்து மணந்திருந்தாலும் வேறு கலாச்சாரம், மதம், மொழி என பல மாற்றங்களை அட்ஜஸ்ட் செய்ய முடியாமல் இருவரும் பிரிய முடிவெடுத்திருந்தார்கள். இந்த விஷயம் மகனை சாக தூண்டும் அளவுக்கு பாதிக்கும் என இருவருமே நினைத்து பார்க்கவில்லை.

வள்ளி இருவரின் கரங்களையும் பிடித்துக் கொண்டார்.

“நாங்க இப்பத்தான் எங்க பிள்ளைய மீட்டு கொண்டு வந்திருக்கோம். உங்க மகனுக்கும் அந்த நிலைமை வராம பார்த்துக்குங்க. எந்த பிரச்சனையா இருந்தாலும், புள்ளய நினைச்சு பார்த்து முடிவெடுங்க” என அன்பாக கேட்டுக் கொண்டார்.

டேனி மருத்துவமனையிலிருந்து வெளி வரும் வரைக்கும் அன்றாடம் அவனைப் பார்க்க வருவாள் தான்யா. குணம் அடைந்தும் கூட தான்யாவோடு தான் படிப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்றான் டேனி. பெரும் பணக்காரரான ஓங் மகனின் விருப்பத்திற்காக சாதாரண பள்ளிக்கு அவனை அனுப்பினார். மகனுக்காக கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்தனர்.

டேனியை தான்யா பாதுகாப்பாக பார்த்துக் கொண்டாள். வளர வளர அப்படியே மாறி டேனி அவன் தோழியை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டான். குடும்பமாக பழகினாலும், அவரிடம் இருந்து எந்த பண உதவியையும் பெற்று கொள்ள மாட்டார்கள் கற்பகமும், வள்ளியும்.

ஓங்தான் வற்புறுத்தி கற்பகத்துக்கு அவரின் தொழிற்சாலையிலே சூப்பர்வைசர் வேலை வாங்கி கொடுத்தார். சுந்தரம் இல்லாத அவர்கள் வாழ்க்கை சந்தோஷமாகவே சென்றது.

தான்யாவுக்கு 15 வயது இருக்கும் போது வள்ளி தூக்கத்திலே இயற்கை எய்தினார். இவர்கள் மூவரும் தான் அவர் விருப்பபடி அவருக்கு கொள்ளியிட்டனர். தருண் வேலை செய்ய ஆரம்பித்தவுடன் முதலில் செய்தது, கற்பகத்தை வேலையை விட்டு நிறுத்தியதுதான்.

அம்மாவின் அன்பிலும், அண்ணனின் கண்டிப்பிலும், டேனியின் நட்பிலும் தான்யா நிறைவாகவே இருந்தாள், விபா வந்து தந்தையின் ஞாபகத்தை தூண்டும் வரை.

 

எட்டி நில்லு..

error: Content is protected !!