ENE — epi 20

ENE — epi 20

அத்தியாயம் 20

நீ எங்கே சென்று சேர்ந்தாலும்
உன் நிழல் வழியே வருவேன்
தீயோடு என்னை எரித்தாலும்
நீ தீண்டிவிட்டால் உயிர்ப்பேன்
ஒருமுறை உன்னை பார்க்க துடிக்குது உள்ளம்
காவிரி நதி தாண்டும் கண்களின் வெள்ளம்

தான்யா பினாங்கிலிருந்து வீடு வந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தது. எந்நேரமும் படுத்தே இருந்தாள். சோர்வு வாட்டி எடுத்தது. மனதிலும் ஒரு வகை அமைதியின்மை.

காய்ச்சல் வந்த அந்த ஞாயிற்று கிழமைதான் அவர்கள் கிளம்ப வேண்டிய நாள். இரவு எட்டு மணிக்கு ப்ளைட் புக் செய்திருந்தார்கள். தான்யாவுக்கு காய்ச்சல் விட்டு விட்டு அடித்ததால், டேனி இன்னும் இரண்டு நாள் தங்கி செல்லலாம் என கூறியும் தானு மறுத்து விட்டாள். திரும்பவும் பிளைட் புக் செய்வது, ஹோட்டலில் தங்குவது என ஏன் வீண் செலவு செய்ய வேண்டும் என வாதாடினாள். டேனிதான் அவளை தோள் தாங்கி, மெல்ல நடக்க வைத்து வீடு வரும் வரை கவனமாக பார்த்துக் கொண்டான்.

“தானு, இந்தா கஞ்சி சாப்பிடு. படுத்தே இருந்தா எப்படி மா. கொஞ்சம் எழுந்து நடமாடு”

” போம்மா, காலை எடுத்து கீழ வைக்க முடியலை. நடுங்குது. கிளினிக்ல வாங்குன மருந்து வேற, போட்டவுடனே தூக்கம் தள்ளுது”

“இனிமே இப்படி டிரிப் எல்லாம் போக வேணாம். பாரு உடம்புக்கு இழுத்து வச்சிருக்க. நாலு நாளுலே இப்படி கன்னம் எல்லாம் உள்ள போயிருச்சி. உங்கண்ணன் வந்து கத்த போறான்”

” ம்மா, சீக்கு என்ன சொல்லிட்டா வரும். ஏம்மா நீ வேற டாச்சார் பண்ணுற. நான் படுக்கணும். நீங்க கீழ போங்க. அப்புறமா எழுந்து வரேன்.”

”  உன்னை ரொம்ப தைரியமான பொண்ணா தான் வளர்த்தேன். இருந்தாலும் பெத்த மனசு, இப்படி தூர தொலைவா நீ போகும் போது, கிடந்து அடிச்சுக்கிது. என்ன பண்ணட்டும் சொல்லு?”

“சரி கற்பு செல்லம், இனிமே எங்கேயும் போகல. ஓகேவா? இப்ப கண்ணை கசக்காம சிரிச்ச முகமா போய் கஞ்சி தவிர வேற ஏதாச்சும் சமைக்க தெரிஞ்சா சமைச்சி வைப்பீங்களாம். நான் அப்புறமா வந்து சாப்பிடுவேனாம்” என கொஞ்சி அனுப்பி வைத்தாள் தானு.

மாலையில் மெல்ல நடந்து பிரபுவின் வீட்டுக்கு சென்றாள். ஆவலாக வாலாட்டியபடி வந்த பைரவாவை கொஞ்சி முத்தமிட்டவள் லெட்சுமியை அழைத்தபடியே வீட்டினுள் நுழைந்தாள்.

” வாடி கண்ணு. இப்ப எப்படி இருக்கு உடம்புக்கு. ரொம்ப வாடி போய் தெரியற தானு. உட்காரு. குடிக்க ஏதாவது எடுத்து வரேன்.”

” லெச்சும்மா, பிரபு எங்க? போன் பண்ணாலும் எடுக்க மாட்டிகிறான்”

” அவன் தான் விபா தம்பி கடையைப் பார்த்துக்குறான். அந்த தம்பி தான் திரும்ப சென்னைக்கு போயிருச்சு இல்ல. உன்னை பார்க்க நேத்து நைட் வீட்டுக்கு வந்தான் பிரபு. நீ தூங்குறதா கற்பகம் சொல்லவும் திரும்ப வந்துட்டான்.”

” எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவான்? ”

“ராத்திரி ஒன்பது ஆகும்மா”

“சரி லெச்சும்மா. நீங்களும் வாங்களேன், அவன் என்ன லட்சணத்துல வேலை செய்யுறான்னு பார்த்துட்டு வருவோம்”

” உடம்பு முடியாத பிள்ளை, உனக்கு ஏன்ம்மா அலைச்சல்?”

” வீட்டுக்குள்ளேயே போர் அடிக்குது லெச்சும்மா. கற்பு வேற படுத்தே இருக்கன்னு வையுறாங்க.”

“அவ கிடக்கா. ஏசுனான்னா இங்க வந்து படுத்துக்க. நான் பார்த்துக்கிறேன்”

“என் செல்ல லெச்சும்மா. இப்ப போய் அழகா கிளம்பி வருவீங்களாம். நான் உபேர் புக் பண்ணுறேன்.”

அவர்கள் ‘எலெகண்ட்’ கடையை அடையும்போது மாலை மணி ஐந்தை நெருங்கி இருந்தது. காருக்கு பணம் செலுத்திவிட்டு மெல்ல படியேறி முதல் தளத்துக்கு சென்றனர். அத்தளம் முழுவதும் பெண்கள் அணியும் பல விதமான ஆடைகள் விற்கப்பட்டன. சுடிதார், லேங்கா, மாடர்ன் உடைகள் என எல்லாமே டிசைனர் கலேக்‌ஷன்ஸ். பிரபு இரண்டாவது தளத்தில் இருப்பதாக ப்ளோர் மேனேஜரிடம் அறிந்து கொண்டு அங்கே சென்றார்கள் இருவரும்.

“லெச்சும்மா, அங்க பாருங்க. கடையை பார்த்துக்கறேன்னு கதை விட்டுட்டு, பிரபு சேல்ஸ்கேள் கூட கடலை போட்டுக்கிட்டு இருக்கான்”

“அடப்பாவி. நான் என்னமோ என் மகன் வேலைல சின்சியர் சிகாமணின்னு இல்லை நினைச்சு கிட்டு இருக்கேன். தானு அந்தப் பொண்ணு ஓகேவா? இப்பவே பேசி முடிச்சுரலாம். நானும் எவ்வளவு நாள் தான் இவன் கூடவே சண்டை போடுறது. ஒரு சேஞ் வேணாமா?”

“செம்ம பாஸ்டுதான் நீங்க. உங்க மகன் அழகுக்கு இந்த பொண்ணு டபுள் ஓகே.”

” அப்படிங்கற? சரி வா. கிட்ட போவோம்”

பிரபு வந்தவர்களை கவனிக்காமல் சுவாரசியமாக அந்த பெண்ணிடம் பேசி கொண்டிருந்தான். அவன் பின்னே நின்றவர்கள்,

“சார், இங்க வறுத்த கடலை கிடைக்குமா?” என கேட்டாள் தானு.

“அதெல்லாம் இங்க கிடைக்காதும்மா.” என்றவன் பிறகு தான், கேட்ட குரலாக இருக்கிறதே என திரும்பி பார்த்தான். அவர்கள் இருவரையும் அங்கே எதிர்ப்பார்க்காதவன் அசடு வழிந்தான்.

“மம்மி, தானு.. வாங்க வாங்க. வாட் அ சர்ப்ரைஸ்.” என்று வரவேற்றவன், அந்த பெண்ணிடம் திரும்பி,

“மிஸ் கவி, நான் சொல்லி கொடுத்த மாதிரி தான் கஸ்டமர்ஸ் கிட்ட பேசனும். புரியுதா? இப்ப நீங்க போகலாம்” என அனுப்பிவைத்தான்.

“பிரபு, மருமக நல்லா தான் இருக்கா. வீட்டை விட்டு ஓடி போக போறீங்களா இல்லை நான் கல்யாணம் பண்ணி வைக்கணுமா? சீக்கிரம் சொல்லிட்டனா, அதுக்கு ஏத்த மாதிரி அரெஞ்மெண்ட் பண்ணிருவேன்”

“அம்மா, சும்மா பேசிக்கிட்டு தான் மா இருந்தேன். அதுக்குள்ள புடிச்சி கல்யாண மேடையிலே உட்கார வச்சிருவீங்க போல. முதல்ல நம்ம தருணுக்கு முடிக்கலாம். அப்புறம் நம்ம குட்டிக்கு. அதுக்கு மேல எனக்கு பார்க்கலாம்.” என்றவன் அவர்களுக்கு கடையை சுற்றிக்காட்டினான்.

இரண்டாம் தளம் முழுவது பெண்கள் காலணிகளுக்கும், கை பைகளுக்கும் ஒதுக்க பட்டிருந்தது. மூன்றாம் தளத்தில் பெண்களுக்கான அக்செசோரிஸ் மற்றும் அழகு சாதனங்களாக அடுக்கப்பட்டிருந்தது.

“வித விதமா சோப்பு, சீப்பு, கண்ணாடி விக்கிறீங்க. எல்லாமே பிரேண்டாட்டா இருக்கு. ஆளுங்க வாங்குறாங்களா?” என கேட்டாள் தானு.

“அட நீ வேற தானு. எப்பவும் இங்க கூட்டம்தான். ரீசண்டா இன்னும் பத்து சேல்ஸ்கேள்சை வேலைக்கு எடுத்தேன்னா பார்த்துக்கயேன்”

“நீங்க ரெண்டு பேரும் பேசி கிட்டு இருங்க. நான் போய் ஹீல்ஸ் பார்த்துட்டு வரேன்” என போனார் லெட்சுமி.

“இந்த வயசுல ஹீல்ஸ்? ஏன்மா எங்கயாச்சும் விழுந்து வைக்கவா? ”

” போடா டேய். எனக்கு என்ன வயசாயிருச்சு? ஜஸ்ட் பிப்டி. என்னம்மோ கிழடு ரேஞ்சுக்கு பேசுற” என பிரபுவின் கன்னத்தில் இடித்து விட்டு சென்றார்.

“நீ வா தானு. ஆபீஸ்ல உட்காரலாம். ரொம்ப களைப்பா தெரியற” என தானுவை அழைத்து சென்று விபாவின் கேபினில் அமர வைத்தான். கடை சிப்பந்தியிடம் சொல்லி அவளுக்கு குடிக்க காபியும் வரவழைத்தான்.

விபா, திறப்பு விழா அன்று எடுக்கப்பட்ட போட்டோவை பிரேம் செய்து மேசையில் வைத்திருந்தான். அதில் சிரித்தபடி அவனும், திருதிருவென முழித்தபடி தானுவும் நின்றிருந்தனர். போட்டோவை சிறிது நேரம் வைத்த கண் வாங்காமல் பார்த்தபடியே இருந்தாள் தானு.

“சொல்லு தானு. எதுக்கு என்னை தேடி வந்திருக்க? என்ன விஷயம்?”

“பிரபு, நான் வேணுவ பார்க்கணும்” என மெல்ல சொன்னாள் தான்யா.

“வேணுவா? இது எப்போ இருந்து? ” என கேட்டான் பிரபு.

“அது ரொம்ப முக்கியமா? சொல்லு, உன் மச்சான் திரும்ப எப்ப வருவாரு?”

“எப்படியும் ரெண்டு வாரம் ஆகும்னு சொன்னான்”

“சரி விடு. ரெண்டு வாரம் கழிச்சே பார்த்துக்கிறேன். ”

“ஏண்டா, ஏதாச்சும் அவசரமா சொல்லனுமா?”

“ஒன்னும் இல்லை பிரபு. அவருக்கு திருப்பி குடுக்க வேண்டிய சில சமாச்சாரம் இருக்கு. அவ்வளவுதான்”

“சரி சரி. உங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். அதேல்லாம் கேட்க முடியுமா”

அவனை முறைத்தவள், அறைந்து விடுவேன் என்பதை போல் சைகை செய்தாள்.

“ஏதாவது வாங்கிக்கறியா தானு?”

“இந்த கடையிலயா? அப்புறம் நான் பேன்க்ராப்ட் ஆயிருவேன் பிரபு”

“கடை முதலாளியே உன் போக்கேட்டுல இருக்கான். அப்புறம் என்ன. போ, போய் வாங்கிக்க”

“நீ அடங்க மாட்ட? யாரையும் சார்ந்து நிக்கிற அவசியம் எனக்கு இல்லை. என்னால முடிஞ்சா சொந்த காசை போட்டு வாங்குறேன், இல்லைனா வாயை மூடிக்கிட்டு போறேன். யாரும் எனக்கு பிச்சை போட தேவையில்லை”

“என்ன தானு பிச்சை கிச்சைன்னு பேசுற. அன்பா குடுக்கறது எப்படி பிச்சையாகும்? பேச தெரியும்ன்றதால கண்டதையும் பேச கூடாது” என கண்டித்தான் பிரபு.

“யாரோட அன்பும் எனக்கு தேவையில்லை. நான் கிளம்பறேன். “ என கோபித்துக் கொண்டு கிளம்பினாள் தானு.

“பொசுக்குன்னு கோபம் வந்துரும் உனக்கு. சரி வா. அம்மாவையும் உன்னையும் நம்ப காருலயே அனுப்பி வைக்கிறேன்.” என டிரைவரை அழைத்து அவர்கள் வீடு செல்வதற்கு ஏற்பாடு செய்தான்.

பிறகு போனை எடுத்தவன்,

“மச்சான், உன் ஆள் கடைக்கு வந்திருந்தா. நீ எப்ப வருவன்னு கேட்டா”

“என்னடா பிரபு அதிசயமா இருக்கு. தானு என்னை தேடறாளா? எதுக்குன்னு சொன்னாளா?”

“உனக்கு என்னமோ திருப்பி குடுக்கனுமாம். அப்படி தான் சொன்னா. நீ என்ன குடுத்த? இப்படி துடிக்கிறா திருப்பி குடுக்க”

“ஹ்ம்ம்” சிந்தனைவயப்பட்டான் விபா. ‘பேர்த்டே பிளான் எல்லாம் தெரிஞ்சிருச்சா? சான்ஸ் இல்லையே. எல்லாம் பக்கா பிளான் ஆச்சே. அந்த நைட் நடந்தது ஞாபகம் வந்துருச்சோ. இருக்காதே. டாக்டர் எதுவும் ஞாபகம் இருக்காதுன்னு சொன்னாரே’ என குழம்பினான்.

“நீ இன்னும் ரெண்டு வாரத்துல வருவேன்னு சொல்லியிருக்கேன். “

“இரு மச்சான்.செக்ரட்டரி கிட்ட சொல்லி இன்னிக்கு ப்ளைட் இருக்கான்னு பார்க்க சொல்லுறேன்”

“டேய், உனக்கு அங்க வேலை வெட்டி இல்லையா? இவ கூப்பிட்டான்னு ஓடி வர”

“எனக்கு வேலை செய்ய ஆயிரம் பேர் இருக்காங்க. என் தானுவுக்கு வேலை செய்ய நான் மட்டும் தான் இருக்கேன் பிரபு”

“அட அட அட. இதெல்லாம் நீங்களே சொல்லுறதா? இல்லை காதலிக்கறவங்களுக்குன்னு இப்படி சொல்லி குடுக்க பள்ளிகூடம் ஏதாவது இருக்கா? முடியலைடா சாமி”

“விடு விடு. அதெல்லாம் அப்படி தான் ப்ளோல வரும்,இன்னைக்கு நைட் இல்லன்னா நாளைக்கு காலையில பார்ப்போம். நான் வரது தானுக்கு தெரியவேணாம்.”

“சரி விபா. நேருல பார்க்கலாம். பாய்”

“பாய் மச்சான்”

மறுநாள் காலை மேசேஜ் வரும் சத்தத்தில் தான் கண் விழித்தாள் தான்யா. கையை விட்டு துழாவி கட்டில் கீழே இருந்த போனை எடுத்தாள்.

“குட் மோர்னிங் டியர். இப்பத்தான் லேண்ட் பண்ணேன். சொல்லு, எத்தனை மணிக்கு பார்க்கலாம்?” என விபாவிடம் இருந்து வந்திருந்தது.

மணியைப் பார்த்தாள். காலை ஏழு என காட்டியது.

‘நேற்று தான் கேட்டேன், இன்னிக்கு வந்து நிக்கிறானே. ரிப்ளை பண்ணலாமா வேணாமா? சரி பாவம், பண்ணுவோம். எத்தனை மணிக்கு பிளைட்ட பிடிச்சானோ, இத்தனை காலையில வந்துட்டானே.’

“பதினொரு மணிக்கு பார்க்கலாம். அன்னிக்கு போனோமே அதே லேக் கார்டன்ல வேய்ட் பண்ணுங்க”

“நான் உன்னை பிக் அப் பண்ணவா?”

“வேண்டா. நானே வந்துருவேன். பாய்” என டைப் செய்தவள் வாட்ஸ்ஆப்பை ஆப்லைனில் போட்டாள். எழுந்து குளித்தவள், கீழே இறங்கி வந்தாள்.

தருண் தாய்லண்டிலிருந்து திரும்பி வந்திருந்தான்.

“வாடா தானு,  பசியாறலாம். அம்மா உனக்கு பிடிச்ச பால் அப்பம் செஞ்சிருக்காங்க”

“அண்ணா, இப்பத்தான் வந்தீங்களா?வேலை எல்லாம் எப்படி போச்சு?”

“ப்ராஜக்ட் இன்னும் இழுக்குது. இன்னும் ஒரு வாரத்துல திரும்ப போக வேண்டி வரும். நீ எப்படி இருக்க? ஒரு புல் போடி செக் அப் செஞ்சிரலாமா?”

“போண்ணா. சாதாரண காய்ச்சலுக்கு நீங்க எல்லாம் ஓவரா பில்ட் அப் குடுக்குறீங்க” என சிணுங்கினாள் தானு.

“காய்ச்சல் வந்து படுக்கற ஆளா நீ. அதனால தான் எனக்கு ஆச்சரியமா இருக்கு.”

“அய்யோ இந்த சப்ஜக்ட விடுங்க. எனக்கு கடுப்பு கடுப்பா வருது. “

“சரி சரி”

“தருண்ணா..”

“என்ன குரல்லாம் ஒரே குழைவா வருது?”

“அண்ணா! அது வந்து”

“சொல்லு தானு. என்ன வேணும்?”

“பைக் குடுக்குறியா? நான் பக்கத்துல உள்ள பார்க்குக்கு போறேன். பத்தரமா திருப்பி குடுப்பேன். போன தடவை மாதிரி விழுந்து வாரிக்கிட்டு வர மாட்டேன். பிளீஸ்ண்ணா” என முகத்தை பாவமாக வைத்துக் கொண்டே கேட்டாள்.

“இப்ப எதுக்கு பார்க்குக்கு, அதுவும் பைக்க எடுத்துகிட்டு?” என்றவாரே வந்தார் கற்பகம்.

“விடும்மா போய்ட்டு வரட்டும். நீ எடுத்துட்டு போ. பத்திரமா வரணும். ஓகேவா?”

“தேங்க்ஸ் அண்ணா. கற்புக்கு பைக் ஓட்ட தெரியலைன்னு ஸ்டாமக் பெர்னிங்.” என்றவாரே அழகு காட்டி விட்டு மேல் மாடிக்கு ஓடினாள் கிளம்ப.

“இப்பத்தான்டா தருண் அவ முகத்துல கொஞ்சம் பழைய கலை திரும்பி இருக்கு. ரெண்டு மூனு நாளா பேய் அடிச்ச மாதிரி இருந்தா”

“அதான் சரி ஆயிட்டா இல்லை, இனிமேலாச்சும் நிம்மதியா இருங்க. நீங்க காட்டுன பயத்துல வேலையை கூட பாதியிலே விட்டுட்டு வந்துட்டேன். இது தெரிஞ்சா உங்களை தான் கத்துவா. சரிம்மா நான் போய் கொஞ்ச நேரம் படுக்குறேன். டையர்ட்டா இருக்கு ட்ராவல் பண்ணது “

விபா பத்தரை மணிக்கே அந்த பார்க்கில் வந்து உட்கார்ந்திருந்தான். பார்வை பார்க்கிங் இடத்தை நோக்கியே இருந்தது. கொஞ்ச நேரத்தில் அங்கே வேகமாக ஒரு பைக் வந்து நின்றது.

‘யாருடா இந்த ஸ்பீட்ல வரது? இந்த காலத்து யங்ஸ்டர்க்கு நெஞ்சுல பயமே இல்லை. வீட்டுல யாரும் கண்டிக்க மாட்டாங்களா’ என திட்டியவாரே கவனித்தான். ஹெல்மட்டை கழட்டி தலையை கோதியவாறு இறங்கினாள் தானு.

‘அடிப்பாவி, நீயா? எல்லாத்துலயும் வேகம் தானா தானும்மா உனக்கு. முகத்தை வேற கோபமா வைச்சிருக்காளே. ஹ்ம்ம்ம் சமாளிப்போம்.’

அவனை பார்த்து விட்டாலும் நேரே அவனிடம் வராமல், பக்கத்தில் இருந்த சிறிய கடையில் ஜில்லென மினரல் வாட்டரை வாங்கி வந்தாள். லேக்கை பார்த்தபடி அமர்ந்தவள் சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை. விபாவும் அவளாகவே ஆரம்பிக்கட்டும் என அமைதியாக அமர்ந்திருந்தான்.

“நீ நல்லா பாடுவியா வேணு?” என திடீரென கேட்டாள் தானு.

தூக்கிவாரி போட்டது விபாவுக்கு.

“ஏன் கேட்கிற தானும்மா?”

“ஐ நீட் அன்சர். டேல் மீ வேணு. பாடுவியா?”

“ஓரளவு பாடுவேன் தானு” என மென்று விழுங்கினான் விபா.

“அப்போ தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு பாட்டை பாடு வேணு”

“தானு….” என இழுத்தான் விபாகர்.

“சொல்லுறேன்ல பாடு” என கத்தினாள் தானு.

மெல்ல பாட ஆரம்பித்தான் விபாகர். தான்யா கைகள் இரண்டையும் இருக கோர்த்துக் கொண்டு கீழே குனிந்து கொண்டாள். அவன் பாட பாட அவள் கண்களில் இருந்து கண்ணிர் துளிகள் வெளியேறி கைகளில் பட்டு தெரித்தது. அவளின் கண்ணீரை கண்ட விபா பாடுவதை நிறுத்திவிட்டு வார்த்தைக்கே வலிக்கும் என்பதுபோல மென்மையாக தானு என அழைத்தான்.

“ஜஸ்ட் ஷட் அப் அன்ட் சிங்” தலை குனிந்து தேம்பியவாறே வார்த்தைகளை கடித்துத் துப்பினாள் தானு.

அவன் பாடி முடித்தவுடன், கண்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவள்,

“சொல்லு வேணு, அன்றைக்கு என்ன நடந்தது?”

error: Content is protected !!