Paadal thedal – 20

Paadal thedal – 20

20

ஊடல்

விடிந்ததும் மீனாவும் அன்புவும் இயல்புநிலைக்கு திரும்பிவிடுவார்களா என்று எதிர்பார்த்த ஜானவிக்கு ஏமாற்றமே மிச்சமானது.

எழுந்ததும் மீனா படுக்கையில் அமர்ந்து கொண்டு கன்னத்தில் கை வைத்து கொண்டிருந்தாள்.

“என்னடி? அப்படியே உட்கார்ந்திருக்க… எழுந்திருச்சு போய் பிரெஷ் பண்ணு… ஸ்கூலுக்கு கிளம்பணும்” என்று ஜானவி பரபரப்பாக சொல்ல,

“அம்மம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்ன இல்ல நீ” என்று அவள் இரவு கேட்டதை அப்படியே கேட்க ஜானவி அதிர்ச்சி நிலையில் மகளை பார்த்துவிட்டு

பின் இயல்பு நிலைக்கு திரும்பி, “அதெல்லாம் இப்ப முடியாது… கிளம்பு முதல்ல ஸ்கூலுக்கு” என்றாள் அழுத்தமாக.

ஆனால் மீனாவின் பிடிவாதத்தின் முன்னிலையில் ஜானவியின் வார்த்தைகள் கொஞ்சமும் எடுபடவில்லை.

அதுவும் செழியன் வேறு ஜானவியிடம்  கோபம் கொண்டு மீனாவிடம் குரலை கூட உயர்த்த  கூடாது என்று கண்டிப்போடு கூறியிருந்தான்.

இதனால் ஜானவிக்கு மகளை சமாளிக்க முடியாமல் கடுப்பேற, எத்தனை நேரம்தான் அவள் தன் பொறுமையை இழுத்து பிடித்து கொண்டிருப்பாள்.

ஒரு நிலைக்கு மேல் அவள் எரிச்சலாகி, “நான் சொல்றது கேட்க மாட்ட” என்று கத்த ஆரம்பிக்கும் போதே,

“ஜானவி” என்று செழியன்  அழைத்தான்.

அவள் மகளிடம் சிக்கி தவித்து கொண்டிருந்ததை ஆரம்பத்திலிருந்தே அவனும் பார்த்து கொண்டுதான் இருந்தான். அவளால் சமாளிக்க முடியாத நிலையில் அவனாகவே முன்னே வந்து நின்று,

“அப்பா… நான் உங்களை அம்மம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்” என்றவன் சொல்ல, ஜானவி அவனை முறைத்து பார்த்தாள்.

‘சும்மா’ என்று செழியன் மனைவியிடம் பாவனை செய்துவிட்டு,

“ஆனா  இப்போ போக முடியாது மீனு… ஸ்கூல் இருக்கு… டைமாகுது கிளம்புங்க” என்றான்.

மீனாவோ பிடிவாதமாக,

“உம்ஹும் இப்பவே” என்று மறுப்பாக தலையசைத்தாள்.

“இல்லடா செல்லம்… இன்னைக்கு ஸ்கூல் இருக்கு… போகலன்னா மிஸ் திட்டுவாங்க… நான் உங்களை ஸேட்டர் டே கண்டிப்பா கூட்டிட்டு போறேன்” என்றவன் சொன்ன நொடி மீனா சற்று அமைதியாகி,

“ஸேட்டர் டே எப்போ வரும்?” என்று அவனை கேள்வியோடு பார்த்தாள்.

“இன்னைக்கு தர்ஸ் டேன்னா…  நாளைக்கு ப்ரை டே… நாளன்னைக்கு ஸேட்டர் டே… சீக்கிரம் வந்திரும்… சரியா” என்று அவன் பொறுமையாக தலையசைத்து மகளிடம் சொல்ல,

மீனா தீவிரமாக யோசித்துவிட்டு, “ஹ்ம்ம் சரி” என்று முகத்தை தொங்க போட்டு கொண்டு சம்மதம் தெரிவித்தாள்.

ஜானவியோ மீனாவிடம் செழியன் பேசிய விதத்தை ரசனையோடு கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருக்க,

“ஜானவி” என்று செழியன் அழைக்கவும் அவள் தன்னிலை மீட்டு கொண்டு அவனை பார்க்க,

“நீங்க மீனாவை குளிப்பாட்டி ரெடி பண்ணுங்க” என்றான்.

ஜானவி மகளை அழைத்து கொண்டு குளியலறைக்குள் புகுந்துவிட்டாள்.

செழியன் யோசனையாக அங்கேயே நின்றுவிட்டான்.  மீனா அவனிடம் இயல்பாக பேசியதை போல் இருந்தாலும் ஒரு முறை கூட அவள் அவனை ‘அப்பா’ என்று விளிக்கவே இல்லை. அது அவன் மனதை ரொம்பவும் அறுத்து கொண்டிருந்தது.

அதேநேரம் ஜானவி மீனாவை குளிக்க செய்து பள்ளி சீருடை அணிவித்து தயார் செய்திருந்தாள். இன்னொருபுறம் சந்தானலட்சுமி அன்புவை தயார் செய்தார். பின் அவர் இருவருக்கும் காலை உணவு ஊட்ட,

அன்புவும் மீனாவும் ஆளுக்கொரு மூலையில் முகத்தை தூக்கி வைத்து கொண்டனர்.

“இந்த பெண்டுங்க பொடீஸுங்களுக்கும் அப்படியென்னதான் கோபமோ?!” என்று சந்தானலட்சுமி புலம்பியவர் பாவம்! பாண்டியனையும் விட்டு வைக்காமல்,

“எல்லாம் இந்த மனுஷனால வந்தது” என்று அவரையும் வார்த்தைக்கு வார்த்தை கடிந்து கொண்டிருந்தார்.

“விடுங்க அத்தை” என்று மாமியாரிடம் சொல்லிவிட்டு அவள் மீண்டும் அறைக்கு போக,

செழியன் யோசனையோடு நின்றிருந்தான்.

“செழியன்” என்று அழைக்கவும் அவன் திரும்பி நின்று என்னவென்பது போல் ஒரு பார்வை பார்த்தான்.

“மீனா உங்ககிட்ட பேசும் போது நீங்க அவ பேசனதை கவனிச்சீங்களா செழியன்” என்றவள் மேலும்  தொடர்ந்தாள்.

“ஒரிடத்தில கூட மீனா உங்களை அப்பான்னு கூப்பிட்டு பேசவே இல்ல… எப்படி அவ இப்படி மாறி போனான்னே புரியல… அப்படி என்ன அவளுக்கு உங்க மேல கோபம்” என்று அவள் பேசி கொண்டிருக்கும் போதே,

“அது கோபம் இல்ல ஜானவி… நம்ம அன்புக்குட்டி அவகிட்ட இது உன் வீடில்லைன்னு சொன்னதுல ஏற்பட்ட வருத்தம்… அவ அந்த வார்த்தையில ரொம்பவே ஹார்ட்டாயிருக்கா… அதுவும் மீனா சுயமா யோசிக்கிற குழந்தை… இது அவ வீடில்லைன்னு சொன்னதும் நானும் அவ அப்பா இல்லைன்னு முடிவு பண்ணிட்டா” என்று செழியன் சொன்ன நொடி ஜானவி அதிர்ந்தாள்.

“நம்ம அன்புக்குட்டி போய் அப்படியெல்லாம் பேசுவாளாங்க… என்னால சத்தியமா நம்ப முடியல”

“பேசியருப்பா… ஏன்னா அன்பு அந்தளவுக்கு மீனா மேல பொஸஸ்ஸிவா இருக்கா” என்று செழியன் சொன்ன விதத்தில் ஜானவியின் முகம் இருளடர்ந்து போனது.

அவள் பலமாக மூச்சை இழுந்துவிட்டு, “இந்த பிரச்சனையை எப்படி ஸால்வ் பண்ண போறோம் செழியன்” என்றவள் கேட்டு அவனை வேதனையோடு பார்க்க,

“இந்த விஷயத்தை என்கிட்ட விட்டுடுங்க ஜானவி… நான் பார்த்துக்கிறேன்” என்று அவன் மெதுவாக நடந்து வந்து அவளை அணைத்து சமாதானம் செய்தான்.

அவனின் வார்த்தைகள்தான் இப்போதைக்கு அவளுக்கு ஓரே ஆறுதலாக இருந்தது. அவன் மென்னகையோடு அவள்
நெற்றியில் முத்தமிட்டு, “இந்த செழியன் இருக்கும் போது ஜானு எதுக்காகவும் கவலைபட கூடாது” என்று அவன் சொன்ன விதத்தில்
மிதமாய் ஓர் புன்னகை தவழ்ந்தது அவள் உதட்டில்.

செழியன் அவள் முறுவலை பார்த்து கிறக்கமானான்.

அவன் பார்வை மாறுவதை கண்ட பெண்ணவள் மெல்ல அவன் பிடியிலிருந்து நழுவி கொண்டு,

“டைமாகுது செழியன்… குளிச்சிட்டு கிளம்புங்க” என்றாள்.

“ஜானு” என்று செழியன் ஏக்கமாக தன் கரங்களை நீட்ட,

“உம்ஹும்… லேட்டாகுது” என்றவள் புன்னகையோடு அவனை பார்த்து கொண்டே அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.

பெரிதாக மூச்சை விட்டு கொண்டு குளியலறைக்குள் புகுந்தான் செழியன்.

வாழ்க்கையில் இப்படி ஒரு துணை அமைந்துவிட்டால் எந்த ஒரு பிரச்சனையயும் அசாதாரணமாக சமாளித்துவிடலாம்.

*****

செழியன் தயாராகி மகள்களை பள்ளிக்கு அழைத்து சென்றான். அங்கே அன்பு, மீனாவின்  வகுப்பாசிரியரை தனியாக சென்று சந்தித்து மகள்கள் இருவரும் வகுப்பில் எப்படி நடந்து  கொள்கிறார்கள் என்பது பற்றி  விசாரித்தான்.

அப்போதே அவனுக்கு புரிந்தது. அவர்களின் இந்த மனதாங்கல் இன்று நேற்றானது அல்ல. கிட்டதட்ட ஒரு மாதமாகவே இருந்திருக்கிறது. தியா மீனாவோடு பழக தொடங்கிய நாளிலருந்து அன்புவின் மனதில் ஓர் உரிமை போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்திருக்கிறது.

அதே போல் அன்புவிற்கு மீனா மீது கோபமெல்லாம் இருக்கவில்லை. வருத்தம்தான் என்பதும் புரிந்தது. ஆனால் மீனா அன்புவிடம் ரொம்பவும் கோபமாக இருந்தாள்.

அன்று இரவு  மீனாவும் அன்புவும் படுக்கையில் கூட  அவர்கள் சண்டையை பிராஸ்தாபம் செய்யும் விதமாய் ஆளுக்கொரு தலையணையை நடுவில் போட்டு  பிரிந்து படுத்து கொண்டனர்.

அந்த காட்சியை பார்த்த செழியனுக்கு சிரிப்பு தாங்கவில்லை. அவன் வாயை மூடி உள்ளூர சிரித்து கொண்டிருக்க  ஜானவிக்கோ பதட்டமேறியது.

“என்னங்க… இவளுங்க இப்படி பண்றாளுங்க… எப்பதான் தீரும் இவங்க சண்டை”

“இது ஒன்னும் சண்டை எல்லாம் இல்ல ஜானு… ஊடல்… அன்பு அதிகமாகும் போது வர உணர்வு” என்றான்

ஜானவி அவனை புரியாமல் பார்க்க செழியன் தொடர்ந்தான்.

“காதல்ங்கிற உறவுலதான் ஊடல் வரணுமா என்ன… அழகான நட்புல கூட வரலாம்… அதீதமான அன்பின் வெளிப்பாடு அது” என்று அவன் சொல்லி கொண்டே அவளை நெருங்கி வந்து அணைக்க,

“அய்யோ! குழந்தைங்க” என்று அவனை விலக்கி நிறுத்திவிட்டு முன்னே நடந்தாள்.

செழியன் தன் படுக்கை அருகில் வர, அன்புவும் மீனாவும் அப்படியே உறங்கியிருந்தனர். அவர்கள் இடையில் வைத்திருந்த தலையணையை எடுத்துவிட்டு அவர்களை நெருங்கி படுக்க வைத்தவன்,

“பசங்க நல்லா தூங்கிட்டாங்க ஜானு” என்றவன் தலையணையை சரி செய்து கொண்டு படுக்க வந்த ஜானவியை கரத்தை பற்றி அருகில் இழுத்தான்.

“விடுங்க செழியன்… இந்த களேபரத்திலயும் உங்களுக்கு ரொமேன்ஸ் கேட்குதா?” என்று அவள் கடுப்பாக சொல்லவிட அவன் முகம் கோபமாக மாறியது.

“தப்புதான் சாரி” என்றவன் முதுகை காட்டி திரும்பி படுத்து கொண்டான்.

அவள் தன்னிடத்தில் படுத்து கொண்டு இரக்கமாக, “செழியன்” என்று அவள் மெல்ல அழைக்க அவன் திரும்பி பார்க்க அவள் தன் கரத்தை பிடித்து கொள்ள சொல்லி நீட்டினாள்.

அவனும் திரும்பி படுத்து கொண்டு அவள் விரல்களோடு தம் விரல்களை கோர்த்து அதனோடு விளையாடி கொண்டிருக்க,

அவள் சிறுபுன்னகையோடு அவனையே பார்த்தபடி இருந்தாள்.

வெட்கத்தை தாண்டி அவள் மனம் அவனின் சிறு சிறு தீண்டல்களையும் விரும்பியது.

அவள் பார்வையை ஆழ்ந்து பார்த்தவன்,

“கண்ணாலேயேதான் ரொமன்ஸ் பண்ணனுமா… கொஞ்சம் கிட்ட வந்து பண்ண கூடாதா?!” என்றான் ஏக்கமாக!

“அதில்ல… இந்த பிரச்சனை முடிஞ்சு நம்ம பசங்க நார்மலாகிட்டா” என்று அவள் மேலே சொல்லாமல் நிறுத்தி கொள்ள,

“ஓ! அப்போ இந்த பிரச்சனை முடிஞ்சா காபியோட டிபன் லஞ்செல்லாம் கிடைக்கும்” என்று அவன் கேலியாக சொல்லி அவளை பார்த்து விஷமத்தனமாக புன்னகைத்தான்.

“சீ… போங்க செழியன்” என்று அவள் வெட்கச்சிரிப்போடு திரும்பி படுத்து கொள்ள அவன் கரம் அவளை விடமாட்டான் என்று வீம்போடு அழுந்த பற்றியிருந்தது.

  கடமை முன்னுரிமை பெறும் போது காதலும் தாபமும் காத்திருந்துதான் தீர வேண்டும். அதேநேரம் காதலை காத்திருந்து பெறுவதும் கூட ஒரு சுகம்தானே!

அந்த காத்திருப்பின் சுகத்தை அவர்கள் இருவரும் ரசனையோடு மேற்கொண்டனர்.

இரண்டு நாட்கள் கடந்து சென்றது.

இருப்பினும் அன்புவுக்கும் மீனாவுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் அப்படியேதான் இருந்தது. எந்தவித மாற்றமும் நிகழவில்லை.  எல்லோர் மனதிலும் இதே கவலைதான் ஓடிக்கொண்டிருந்தது.

செழியன் அன்று ஜானவியிடம், “பசங்கள ரெடி பண்ணிட்டு நீங்களும் கிளம்பி ரெடியா இருங்க ஜானவி… ஒரிடத்துக்கு போகணும்” என்றான்.

“எங்கே செழியன்?”

“கிளம்புங்க… சொல்றேன்” என்றவன் மேலும் அவளிடம்,

“அப்புறம் பசங்களுக்கு கொஞ்சம் சிம்பிளாவே டிரஸ் பண்ணிவிடுங்க” என்றான்.

“எங்கேன்னு சொல்லாம…” என்றவள் தயங்க,

“எங்கன்னு சொன்னாதான் வருவீங்களா ஜானவி?” என்று அவன் அழுத்தி முறைப்பாக கேட்டான்.

“சேச்சே அப்படி எல்லாம் இல்ல” என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் அவனிடம் எதுவும் வினவாமல் அந்த வாண்டுகளுக்கு உடை மாற்றினாள்.

“அம்மம்மா வீட்டுக்கு போறோமா?” என்று மீனா ஆர்வமாக கேட்க ஜானவி கடுப்பாக மகளை பார்த்து தலையிலடித்து கொண்டாள்.

அப்போது செழியன் பின்னோடு வந்து,

“இல்ல மீனு… வேறொரு முக்கியமான இடத்துக்கு போறோம்” என்றான்.

“இல்ல நான் வரமாட்டேன்” என்று மீனா பிடிவாதமாக சொல்ல,

“என்னடி ஓவரா பன்ற?” என்று ஜானவி கோபமாக மகளை முறைத்தாள்.

“விடுங்க ஜானவி… நீங்க அன்பு நான் மட்டும் கார்ல ஜாலியா போயிட்டு வரலாம்” என்று செழியன் புன்னகையோடு சொன்ன நொடி மீனாவின் முகம் ஏமாற்றமாக மாறியது. அவர்கள் புறப்படுவதை பார்த்த மீனாவிற்கு மனமெல்லாம் அடித்து கொள்ள,

“ம்மா நானும் வர்றேன்” என்றாள் ஜானவியிடம்!

“நானும் வரேன்னு என்கிட்ட சொன்னா… போய் உங்க அப்பா கிட்ட சொல்லுடி” என்றாள் ஜானவி!

மீனா செழியனை பார்த்து, “நானும் வர்றேனே” என்றதும் அவன் புன்னகையோடு,

“அப்பா! நானும் வர்றேன்னு சொன்னா கூட்டிட்டு போறேன்” என்றான்.

மீனா ஜானவியை பார்த்துவிட்டு சில நொடிகள் தயங்கி, “அப்பா நானும் வர்றேன்” என்றதும் செழியன் அவள்  தலையை தடவி, “சரி போலாம்” என்று  மகளை இழுத்து ஆரதீர அணைத்து கொண்டான்.

ஜானவி அந்த காட்சியை பார்த்து மனம் நெகிழ்ந்தாள். பாண்டியன் சந்தானலட்சுமி முகத்திலும் புன்னகை தவழ்ந்தது.

அதன் பின் ஜானவி அன்புவின் கையை பிடித்து கொண்டு பாண்டியனிடமும் சந்தானலட்சுமியிடம் சொல்லிவிட்டு கிளம்ப, செழியன் கார் அருகே போனதும் அன்புவை மட்டும் தனியாக அழைத்து ஏதோ பேசினான்.

ஜானவி என்னவென்று புரியாமல் புருவத்தை உயர்த்தி கேட்க, அவளை அமைதியாக அமர சொல்லிவிட்டு அவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

ஜானவி அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து கொள்ள, மீனாவும் அன்புவும் பின்னோடு அமர்ந்து கொண்டனர். ஆனால் மீனா அன்புவை விட்டு ரொம்பவும் இடைவெளிவிட்டு தள்ளி அமர்ந்து கொண்டாள்.

அவர்கள் கார் புறப்பட்டதும் அன்பு மீனாவின் அருகே சென்று அமர போக, “போ நான் உன்கிட்ட பேசமாட்டேன்… கா” என்று மீனா இன்னும் தள்ளி அமர்ந்து கொண்டாள்.

ஜானவி உடனே மகளிடம் திரும்பி கண்டிக்க எத்தனிக்கும் போது செழியன் அவளை மௌனமாக இருக்க சொன்னான்.

அன்பு அப்போது மீனாவிடம்,

“நான் இனிமே சண்டை போட மாட்டேன்… என் வீடுன்னெல்லாம் பேச மாட்டேன்… சாரி மீனு” என்று இறங்கி வர,

“போ… நீ என்னை தியா கூட பேச வேணான்னு சொல்ற” என்று மீனா கொஞ்சமும் இறங்கிவரவில்லை.

ஜானவிக்கு கோபம் வர செழியன் அவளை பேச வேண்டாம் என்று செய்கை செய்தான்.

“இனிமே நான் அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன் மீனு… நீ தியா கூட பேசு” என்று அன்பு இறங்கி பேச,

“போ… பொய் சொல்ற நீ” என்றாள் மீனா வீம்பாக!

செழியன் இப்போது ஜானவியை பார்த்து ஏதோ சமிஞ்சை செய்ய அவள் உடனே,

“தப்பு உணர்ந்த சாரி கேட்கிறவங்கதான் குட் கேர்ள்ல்… சாரி கேட்ட என் அன்புக்குட்டி வெரி குட் கேர்ள்” என்று அன்புவின் கன்னத்தை கிள்ளினாள். இதனை பார்த்து மீனாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

அந்த நொடி செழியன் இடையிட்டு, “அப்போ என் மீனா குட் கேர்ள் இல்லைன்னு சொல்றீங்களா?” என்று மனைவியை பார்த்து பொய்யாக முறைக்க,

“ஆமா” என்று ஜானவி தோள்களை குலுக்கினாள்.

“நோ… என் மீனாகுட்டியும் குட் கேர்ள்தான்… அவளுக்கும் சாரி கேட்க தெரியும்… அவளும் அன்புகிட்ட பேசுவா… பேசுவதானே மீனா” என்றான். செழியனின் சூட்சமம் ஓரளவு மீனாவிடம் வேலை செய்தது.

“நானும் குட் கேர்ள்தான்… நான் அன்புகிட்ட சாரி கேட்பேன்” என்று திரும்பி அன்புவிடம்,

“சாரி… இனிமே நான் உன்னை அடிக்க மாட்டேன்… நீயும் தியாகிட்ட பேசறதுக்காக என்கிட்ட சண்டை போட கூடாது” என்ற மீனா தெளிவாக தோழியிடம் டீல் பேசினாள்.

“உம்ஹும்… சண்டை போட மாட்டேன்” என்று அன்பு அவசரமாக தலையசைக்க, “அப்போ பழம்” என்று மீனா கையில் பழ முத்திரை காட்டினாள்.

“சமாதானமாயிட்டா என்ன பண்ணனும்” என்று ஜானவி மகள்களை பார்த்து கேட்க,

“ஹேன்ட் ஷேக் பண்ணிக்கனும்” என்றவர்கள் சிரித்த முகத்தோடு தங்கள் கரங்களை குலுக்கி கொண்டனர்.

ஜானவி விழிகளில் நீர் கோர்த்து நின்றது. இந்த காட்சியை பார்த்த பின்புதான் அவளுக்கு நிம்மதியானது.
இரண்டு நாட்களாக அவர்கள் இருவரும் முகத்தை தூக்கி வைத்து கொண்டிருப்பதை பார்த்து அவள் எந்தளவு தவித்து போனாள் என்று அவளுக்குதான் தெரிந்தது.

செழியனும் புன்னகை ததும்ப,

“என் செல்ல பொண்ணுங்க இரண்டு பேரும் சமாதானமாயிட்டாங்க… ஸோ அதுக்கு டீரிட்டா நான் ஐஸ்கிரீம் வாங்கி தர போறேன்” என்று சொல்ல,

“ஐ! ஜாலி ஐஸ்கிரீம்” என்று அந்த வாண்டுகள் பின்னோடு குதூகலித்தனர்.

“ஆளுக்கு ஒண்ணு ஒண்ணுதான்” என்றாள் ஜானவி கண்டிப்பான பார்வையோடு!

“அப்போ பசங்களுக்கு பர்மிஷன் கிரேட்டெண்டட்… அப்படியே எனக்கும் ஒரு காபி குடிக்க பெர்மிஷன்” என்று செழியன் காரை ஓட்டி கொண்டே ஜானவியை கல்மிஷமாக பார்க்க,

அவள் முகம் சுணங்கி, “காபி காபி காபி… அதே நினைப்பதானா உங்களுக்கு” என்றாள்.

“நான் நார்மல் காபியைதான் கேட்டேன்… நீங்கதான் வேறெ….தோ நினைப்புல பேசறீங்க” என்றவன் இழுக்க,

“சும்மா பேச்சை மாத்தாதீங்க… ஐஸ்கீரிம் பார்லர்ல காபி கிடைக்குமா?” என்று ஜானவி முறைத்தாள்.

“என் பொண்டாட்டி மனசு வைச்சா எங்கே வேணா கிடைக்கும்” என்றவன் இதழோர புன்னகையோடு சொல்ல, “செழியன்” என்று ஜானவி பல்லை கடிக்க,

“வாட் டு டூ… உங்க
காபிக்கு நான் ரொம்ப அடிட்கிட் ஆகிட்டேனே” என்றவன் மயக்கிய புன்னகையோடு உரைக்க அவளின் இதழ்களும் அனிச்சையாக விரிந்தன. வெட்கத்தில் அவள் முகம் சிவக்க அவனை நோக்க முடியாமல் ஜன்னல் புறம் திரும்பி கொண்டாள்.

அவன் சிரித்து கொண்டே காரை ஐஸ்கிரீம் பார்லரில் நிறுத்தினான்.

“ஏ! ஐஸ்கிரீம்” என்று அந்த வாண்டுகள் இன்னும் அதிகமாக கூச்சலிட,

“சரி சரி கத்தாதீங்க… போலாம்”என்று சொல்லிவிட்டு ஜானவி மகள்களை இறக்கிவிட்டு கடைக்குள் சென்றாள்.

செழியன் காரை ஓரம்கட்டி நிறுத்துவிட்டு பின்னோடு வர,

உள்ளே சென்ற ஜானவி மகள்களை அமர்த்திவிட்டு எதிரே இருந்த இருக்கையில் தானும் அமர்ந்து கொண்டு பேரரை அழைத்தான்.

“என்ன வேணும் மேடம்?” என்றவன் கேட்க,

“ரெண்டு காபி” என்று அவள் வாய் தவறி உளற அந்த பேரர் பேந்த பேந்த விழித்தபடி அவளை பார்த்து வைக்க,

செழியன் பின்னோடு வந்து, “ஐஸ்கிரீம் பார்லர்ல காபி கிடைக்குமா ஜானவி” என்று கேலியாக கேட்டு கொண்டே அவள் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

அவள் உதட்டை கடித்தபடி தலையில் அடித்து கொள்ள பேரர் அப்போது,

“சாரி மேடம்…  இங்க காபி எல்லாம் கிடைக்காது… எல்லா ஐஸ்கீரிம் வெரைட்டீஸ்” என்று சொல்லி ஒரு மெனு கார்ட்டை அவளிடம் நீட்டினான்.

அசடு வழிந்தவள் அந்த அட்டையை பார்த்து கொண்டே, “இரண்டு சாக்கோ பார்… ஒரு வெண்ணிலா ஸ்டிராபரி” என்று பட்டியலிட பேரர் ஆர்டரை வாங்கி கொண்டு சென்றுவிட்டான்.

செழியன் அவள் காதோரம் நெருங்கி,

“காபி சாப்பிடணும்னு தோணுச்சுன்னா என்கிட்ட மட்டும்தான் கேட்கணும்” என்றவன் கிசுகிசுக்க

“செழியன் ப்ளீஸ்ஸ்ஸ்” என்று அவனை இறைஞ்சுதலாய்
பார்த்தாள்.

மீனாவும் அன்புவும் சந்தோஷமாக ஐஸ்கீரிம் சாப்பிட்டு கொண்டிருக்க ஜானவி செழியனிடம் ரகசியமாக, “ஆமா… புறப்படும் போது அன்புவை கூப்பிட்டு தனியா என்னவோ பேசனீங்களே… என்னது?” என்று கேட்க,

“நீ மீனாகிட்ட சாரி கேட்கலன்னா… நான் ஜானும்மாவையும் மீனாவையும் அவங்க அம்மம்மா வீட்டில விட்டிருவேன்னு சொன்னேன்” என்றான்.

ஜானவி அவனை உக்கிரமாக முறைக்க,

“அய்யோ! சும்மாதான் சொன்னேன்… அதுக்கு ஏன் இப்படி முறைக்கிறீங்க?” என்று பம்மினான்.

“சும்மா கூட அப்படி எல்லாம் சொல்லாதீங்க” என்று ஜானவி தீவிரமாக சொல்லிவிட்டு எழுந்து கொண்டாள்.

அதற்கு பின் எல்லோரும் ஐஸ்கிரீம் பார்லரிலிருந்து புறப்பட நீண்ட தூரம் பயணித்து கொண்டிருந்தது அந்த கார். மீனாவும் அன்புவும் விளையாட்டும் அரட்டையாகவும் வேடிக்கை பார்த்து கொண்டும் வர,

ஜானவியிடம் வெறும் மௌனம் மட்டுமே சஞ்சரித்தது. தன் அம்மா வீட்டை பற்றி நினைக்க கூட அவள் விரும்பவில்லை. எதுவும் பேசாமல் வந்தவள் அப்படியே இருக்கையில் சாய்ந்து விழிகள் சொருகிய சமயம்,

“ஜானவி” என்ற செழியனின் அழைப்பு கேட்டு விழித்து கொண்டாள்.

அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டிருந்தது.

ஜானவி கண்களை நன்றாக திறந்து அது என்ன இடமென்று பார்க்க அவன்  மெலிதாக புன்னகைத்து, “வாங்க ஜானவி உள்ளே போலாம்” என்று அவளை அழைத்துவிட்டு அவனும் காரை விட்டு இறங்கினான்.

error: Content is protected !!