ENE–EPI 31

ENE–EPI 31

அத்தியாயம் 31

அனிச்ச மலரழகே

அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே
உன் கண்ணுக்குள்ள கூடு கட்டி

 காதுக்குள்ள கூவும் குயிலே
நீ எட்டியெட்டிப் போகயில

விட்டுவிட்டுப் போகும் உயிரே

“அருண் மாமா!! எப்படி இருக்கீங்க? எனக்கு சடங்கு சுத்தனப்போ வந்தது. அதுக்கப்புறம் வரவே இல்லை. போங்க உங்க கிட்ட நான் பேச மாட்டேன்” என அருண்பாண்டியை கட்டிக் கொண்டே கோபத்தை காட்டினாள் தானு.

“அதுதான் வாரா வாரம் ஸ்கைப்ல பேசுறோமே, அப்புறம் இந்த மாமன் மேல என்ன கோபம் என் குட்டிக்கு” என சமாதானப்படுத்தினான் அருண்.

அவர்கள் கட்டிக் கொண்டது மட்டுமே விபா கண்ணுக்கு தெரிந்தது. கொஞ்சம் தூரமாக நின்றிருந்ததால் என்ன பேசி கொள்கிறார்கள் என கேட்கவில்லை.

“அவன் என் தம்பி அருண்பாண்டிப்பா. தானுவோட செல்ல தாய்மாமன். கல்யாணமாகி நாலு வயசுல ஒரு பொண்ணு இருக்கா. அவள பார்த்தவங்க கண்ணுக்கு நாம எல்லாம் தெரியலை பார்த்தியா?” என பக்கத்தில் நின்றிருந்த கற்பகம் தான் விபாவுக்கு விளக்கம் கொடுத்தார்.

பிறகு தான் இழுத்து பிடித்திருந்த மூச்சை நிம்மதியாக விட்டான் விபா.

முத்துப்பாண்டியும் வேலம்மாவும் ஓடி வந்தனர் கற்பகத்தை நோக்கி. இருவருக்குமே கண்கள் கலங்கி இருந்தது.

“என் ராஜாத்தி. வந்துட்டியாமா. எங்கள பார்க்க வந்துட்டியா?” என கற்பகத்தின் கன்னத்தைப் பிடித்து கொண்டு கண்ணீர் விட்டார் முத்துப்பாண்டி.

மகளை கட்டிக் கொண்டு ,

“என்னைப் பெத்த ஆத்தா, இந்த அம்மாவைப் பார்க்க வர உனக்கு இப்பத்தான் மனசு வந்துச்சா? நாங்க செத்தா தான் இந்த ஊரு பக்கம் வருவியோன்னு நினைச்சி நானும் உங்கப்பாவும் அழாத நாளில்லை. நான் தவமா தவமிருந்து பெத்த என் மகளே, இனிமே எங்களை இப்படி ஒதுக்கிபுடாத தாயி.” என கதறிவிட்டார்.

கற்பகமும் தாயையும் தந்தையையும் கட்டி கொண்டு கண்ணீர் உகுத்தார்.

“உங்க எல்லாத்தையும் பிரிஞ்சு இருக்கணும்னு எனக்கு மட்டும் ஆசையாம்மா. என் போதாத காலம், ஏதேதோ ஆகி போச்சு. எந்த முகத்தை வச்சுகிட்டு ஊரு பக்கம் வரது சொல்லுங்க”

அழும் தாயை தானுவும், தருணும் கலக்கமாக பார்த்தனர்.

கண் கலங்கி நின்ற அருண் தான் ஒருவாறாய் சமாளித்துக் கொண்டு,

“அம்மா, நீங்க அழுவுற அழுகையிலே அக்கா மறுபடியும் ப்ளேன் ஏறி திரும்பி போக போகுது. அழுகாச்சிய நிப்பாட்டிட்டு வீட்டுக்கு வந்தவங்கள வாங்கன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க”

கண்களை துடைத்துக் கொண்ட வேலம்மா,

“வாங்க, எல்லாரும் உள்ள வாங்க. வீட்டுக்கு வந்தவங்கள வரவேற்காம நான் அழுதுகிட்டு நிக்குறேன். ஏங்க, கண்ணை துடைச்சுகிட்டு புள்ளய உள்ளாற கூட்டிகிட்டு போங்க. இத்தனை வருஷம் சென்று வந்திருக்கற பிள்ளைகளை வெளிய நிப்பாட்டி வைச்சு சீனை போட்டுகிட்டு இருக்கீங்க” என கணவரை அதட்டியபடியே அனைவரையும் உள்ளே அழைத்து சென்றார்.

‘என்னடா இது. இவளும் தானே சேர்ந்து ஒப்பாரி வச்சா. என்னமோ நான் மட்டும் அழுத மாதிரி திட்டிட்டு போறா. என்னவோ போ, மக வந்த பிறகு தான் இவ பேச்சுல பழைய துடுக்கு திரும்பி இருக்கு.’ என சந்தோஷமாக நினைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தார் முத்துப்பாண்டி.

பிரபுவும் விபாவும் மட்டும் பெட்டிகளை காரிலிரிருந்து எடுப்பதற்காக பின் தங்கினார்கள்.

உள்ளே வந்து அமர்ந்தவுடன்,

“ஏன்டாப்பா அருண், எங்க உன் வீட்டுக்காரியையும் புள்ளையையும் காணோம்?” என கேட்டார் லெட்சுமி.

“பாப்பாவ குளிக்க வைக்க கூட்டி போயிருக்கா. இருங்கக்கா வந்துருவா” என சொல்லி முடிக்கும் போதே அவன் மகள் உடம்பை சுற்றிய துண்டோடு ஓடி வந்தாள். பின்னாலேயே அவன் மனைவியும்.

“வாங்க, வாங்க. எல்லோரும் நலமா இருக்கீங்களா? சட்டை போட்டு விடுறதுகுள்ள ஓடி வந்துட்டா.” என வந்தவர்களை வரவேற்றார் அருணின் மனைவி அல்லி.

கம்யூட்டரில் மட்டுமே பார்த்து பேசி இருந்த மனிதர்களை நேரில் பார்க்கவும், வெட்கத்துடன் தாயின் கால் பின்னே ஒளிந்து கொண்டாள் அருணின் மகள் தான்யலெட்சுமி.

“குட்டி தானு!!அண்ணி கிட்ட வாங்க.” என கை நீட்டி கூப்பிட்டாள் தானு. ஸ்கைப்பில் இருவரும் கொஞ்சி கொள்வது வழக்கம் தான். இருந்தாலும் நேரில் அவளை பார்த்ததும் வெட்கப்பட்டபடி மேலும் அல்லியின் பின் ஒண்டினாள் குட்டி.

“என் கிட்ட என்னடி வெட்கம்? இப்ப கிட்ட வரீயா இல்லையா?” என குட்டியின் கையைப் பிடித்து இழுத்தாள் தானு. கையை உதறிவிட்டு ஓடிய சின்னவள் அந்த நேரம் பார்த்து உள்ளே வந்த விபாவின் காலில் இடித்து கொண்டு நின்றாள். பெட்டிகளை கீழே வைத்துவிட்டு குனிந்து பிள்ளையை தூக்கி கொண்டான் விபா.

“ஹலோ ஸ்வீட்டி. உங்க பேர் என்ன?”

“என் பேரு தானுக்குட்டி. நீங்க யாரு? உங்கள கம்பூட்டர்ல பாக்கலையே?” என கேள்வி கேட்டாள் சின்னவள்.

“இன்னொரு தானுக்குட்டியா. இந்த பூமி தாங்காதே” என குழந்தையை துரத்தி கொண்டு ஓடி வந்திருந்த தானுவின் காதுபட மெல்ல சொன்னான் விபா.

“குட்டி, நான் தானே உன்னோட ப்ரண்ட். என் கிட்ட வராம இவங்க கிட்ட மட்டும் போற. ஒழுங்கா இப்ப என் கிட்ட வர. இல்லைனா பூச்சாண்டி கிட்ட புடிச்சு குடுத்துருவேன்” என பயம் காட்டினாள் தானு.

முகம் கசங்க விபாவின் கழுத்தில் முகம் புதைத்து கொண்டாள் குட்டி.

“பிள்ளைய ஏன் தானும்மா பயங்காட்டுட்ற? உனக்கு ஆசையா இருந்தா நீயும் இந்த பக்க கழுத்தை கட்டி புடிச்சுகிட்டு தொங்கு. நான் வேணான்னா சொல்ல போறேன்” என கிண்டலாக சிரித்தான் விபா.

அல்லியும் அருணும் விபாவை அதிசயமாக பார்த்தனர். தானுக்குட்டி சட்டென்று அந்நிய ஆடவருடன் பழக மாட்டாள். புதிதாக ஆண்கள் யார் வந்தாலும் பாட்டி பின்னாலோ அம்மா பின்னாலோ ஒளிந்து கொள்வாள். அப்படி பட்டவள் பயமில்லாமல் விபாவின் இடுப்பில் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

“தம்பி யாரு, புதுமுகமா இருக்கு?” என முத்துப்பாண்டி தான் கேள்வியை ஆரம்பித்து வைத்தார். தன் இரு பேத்திகளுடனும் சிரித்து பேசி கொண்டிருந்த அந்நிய ஆடவனை முறுக்கு மீசையை நீவி கொண்டே சந்தேக கண்ணுடன்  நோக்கினார் அவர்.

“தம்பி பேரு விபாகர். நம்ப தூரத்து சொந்தம் தான். சென்னைல இருக்காரு. நமக்கு உதவியா தான் வண்டி ஓட்டிக்கிட்டு வந்தாரு” என அறிமுகப்படுத்தினார் லெட்சுமி.

‘பையன் பாக்க ஆபிசரு கணக்கா தான் இருக்கான். இந்த மாதிரி அழக பார்த்துதானே என் மகள ஒரு பாழும் கிணத்துல தள்ளிப்புட்டேன். எதுக்கும் இவன் மேல ஒரு கண்ண இல்ல இல்ல ரெண்டு கண்ணையும் வைக்கணும்.’ என நினைத்துக் கொண்டார் முத்துப்பாண்டி.

அவர் மனைவியோ,

“வாங்க தம்பி. ரொம்ப சந்தோஷம் நீங்களும் வந்தது.” என வரவேற்றார்.

“எல்லோரும் பேசிக்கிட்டு இருங்க. நான் போய் குடிக்க ஏதாவது கொண்டு வரேன். குட்டி வாடி, சட்டை போட்டுகிட்டு வரலாம்.” என அழைத்தார் அல்லி.

“வேணாம்! அப்புறமா வரேன்” என மேலும் விபாவை கட்டிக் கொண்டாள் தானுக்குட்டி. இதைப் பார்த்து கொண்டிருந்த தானுவுக்கு கடுப்பாக வந்தது.

‘எப்படிதான் எல்லாரையும் மயக்கிருறானோ தெரியலை. எல்லாம் அந்த கண்ணு செய்யுற மாயம் தான். ரெண்டு நிமிஷம் அந்த கண்ணை உத்து பார்த்தா எலிசபெத் ம்காராணி கூட இவன் காலடியில சரண்டர் ஆயிருவாங்க.’ உள்ளே இப்படி எண்ணி கொண்டாலும், வெளியே,

“எப்படியோ போங்க” என முணுமுணுத்தவள்,

“பாட்டி, கசகசன்னு இருக்கு. நான் குளிக்கணும். ஹெல்ப் பண்ணுங்க” என வேலம்மாவை கூப்பிட்டு கொண்டே கிச்சனுக்கு சென்றாள்.

“பெரிய தானுக்கு உங்கள பார்த்து பொறாமை. நீங்க ஒன்னும் கோவிச்சுக்காதிங்க செல்லம். இப்ப ஓடி போய் அம்மா கிட்ட சட்டை போட்டுக்குவீங்களாம்” என சின்னவளை கீழே இறக்கிவிட்டான் விபா.

“வேலம்மா, நம்ப பெரிய பாப்பாக்கு வாங்கி வச்சிருக்கற பாவாடை தாவணிய எடுத்து குடு. கிழிஞ்ச பேண்டும் சாயம் போன சொக்காயும் போட்டுகிட்டு திரியுது. ஏம்மா கற்பகம், அந்த ஊருல இப்படி நல்லதா துணி கிடைக்காதாம்மா?  பாவம் புள்ளை இப்படி போட்டுகிட்டு திரியுறா.”என கவலைப்பட்டார் முத்துப்பாண்டி.

“அப்பா, சாயம் போன சொக்கான்னு நீங்க சொன்னத அவ கேட்டுருக்கணும். பெரிய ரணகளமா ஆயிருக்கும்.” என சிரித்தார் கற்பகம்.

“சரிம்மா போய் குளிச்சு போட்டு வாங்க. ராத்திரி சாப்பாடு சாப்புடலாம். ஏண்டா பேராண்டிகளா. நீங்களும் போங்க. பையனுங்க குளிக்க பின்னால கிணறு இருக்கு. சட்டுபுட்டுன்னு குளிச்சுட்டு வாங்க”

கிணறு எனும் வார்த்தையை கேட்டவுடனே விபாவின் முகமே மாறிவிட்டது. பழைய ஞாபகங்கள் கண் முன்னே தோன்றி நாட்டியமாடின. தலையைப் பிடித்து கொண்டவன் அப்படியே சிறிது நேரம் அமர்ந்திருந்தான்.

” இதெல்லாம் நான் போட மாட்டேன் பாட்டி. இப்படி பாவாடையை கட்டிகிட்டு நான் எப்படி வேகமா நடப்பேன்? இடுப்பேல்லாம்  வேற தெரியுது. எனக்கு வேணாம். ” என உள்ளிருந்து உச்சஸ்தாயில் குரல் கேட்டது.

” என் செல்லக்குட்டி இல்ல. போட்டுக்கம்மா. உங்க தாத்தா ஆசையா உனக்காக பார்த்து பார்த்து வாங்குனாரு. தோ பாரு, இடுப்பு தெரியாம பாட்டி பின்னு குத்தி விடறேன். என் பட்டு குட்டி இல்ல” என வேலம்மா சமாதானம் செய்வதும் கேட்டது.

மனதில் உள்ள பயம், சஞ்சலம்  எல்லாம் தானுவின் குரலில் காற்றாக கரைய , எழுந்து பிரபுவை தொடர்ந்து குளிக்க சென்றான் விபா.

குளித்து முடித்து மொட்டை மாடியில் கூடினார்கள் அனைவரும். தானுவின் விருப்பப்படி நிலா சோறு சாப்பிடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார் வேலம்மா. வெள்ளிநிலா காய, குளிர் தென்றல் வீச அந்த இடமே ஏகாந்தமாக இருந்தது. அனைவரும் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். விபாவின் கண்கள் தானுவை காணோமே என்று தேடி கொண்டிருந்தது. தானுக்குட்டியோ முத்துப்பாண்டி பிடியிலிருந்து ஓடி வந்து விபாவின் மடியில் அமர்ந்து கொண்டாள்.

“ஏண்டா விபா, வசிய மருந்த மாத்தி குடுத்துட்டீயா? சின்ன தானு தான் உன்னை சுத்தி சுத்தி வரா. பெரியவ கல்லையும் மண்ணையும் பார்க்கிற மாதிரி உன்னை பார்க்குறா.” என கிண்டலடித்தான் பிரபு.

“டேய் சவுண்ட குறைடா. பெரிய மீசை வந்ததில இருந்து என்னை ஒரு மாதிரியா பார்த்து கிட்டு இருக்காரு. அவரு காதுல விழுந்துற போது”

“அவருக்கு கேட்டுட்டாலும். அவரு மீசையே பாதி காதை மறைச்சுருச்சு. நாம பேசுறதெல்லாம் வெறும் காத்தாதான் அவர் காதுக்கு போகும்”

“எங்கடா இவள இன்னும் காணோம்”

“பாட்டி பாவாடை தாவணி போட்டு விட்டுருக்காங்க. அத போட்டுகிட்டு நடக்க தெரியாம அசைஞ்சி வந்துகிட்டு இருப்பா” என சிரித்தான் பிரபு.

அவர்கள் பேசி கொண்டிருக்கும் போது மெல்லிய கொலுசின் சத்தம் கேட்கவும் நிமிர்ந்து பார்த்தான் விபா.

அங்கே கண்ட காட்சியில் அவன் இதயமே சற்று நேரம் வேலை நிறுத்தம் செய்தது.

சந்தன நிற பாவாடை ரவிக்கைக்கு அடர் பச்சை நிற தாவணி போட்டு அன்னநடையிட்டு வந்தாள் தானு. அவளின் சின்னஞ்சிறு இடுப்புக்கு ஒட்டியாணம் அணிந்து, காதுக்கு ஜிமிக்கி போட்டிருந்தாள். முத்துப்பாண்டியின் முன் வந்து நின்றவள், ஒரு சுற்று சுற்றி,

” நல்லா இருக்கா தாத்தா?”‘என கேட்டாள்.

அவள் சுற்றிய சுற்றில் விபாவின் இதயம் குட்டிகாரணம் அடித்து அவள் காலடியில் விழுந்தது.

வானுலக தேவதை

பூமி வந்தது ஏனோ

காளை எந்தன் மனதை

கவர்ந்து செல்ல தானோ

அவனுக்குள்ளே இருந்த வைரமுத்து சடீரென எழுந்து கவி பாடிவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டார்.

எவ்வளவு நேரம் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தானோ தெரியாது,பிரபு இடுப்பில் ஒரு இடி இடிக்கவும் தான் சுய உணர்வுக்கு வந்தான் விபா.

” டேய் , வாயை மூடுடா. உன் ஜொள்ளு வழிஞ்சு மொட்டை மாடியே வெள்ளக்காடா ஆகிறபோது. தாத்தா பாத்தாரு, மூஞ்சில கீறல் போட்டுருவாரு. ஜாக்கிரதை”

அந்த மிரட்டல் கொஞ்சம் வேலை செய்தது. சிரமப்பட்டு விழியை அவளிடம் இருந்து பிரித்து எடுத்தான் விபா. வேலம்மா சாதத்தைப் பிசைந்து அனைவருக்கும் கொடுத்தார். சிரித்து பேசி கொண்டே அனைவரும் சாப்பிட்டனர். அவர்கள் குடும்பத்தில் தன்னையும் ஒருவனாக பாவித்து சாதம் பிசைந்து கொடுத்த போது கண்கள் கலங்கிவிட்டது விபாவுக்கு. பிரபு தான் அவன் தோளை அணைத்து தட்டிக் கொடுத்தான்.

விபாவின் மடியில் உட்கார்ந்திருந்த தானுக்குட்டி அவன் தேளிலே சாய்ந்து உறங்கிவிட்டாள். அதை கவனித்த அல்லி,

“தானு, என் கையெல்லாம் கறியா இருக்கு. பாப்பாவ தூக்கிட்டு போய் கட்டில்ல படுக்க வச்சிரும்மா” என அனுப்பினார்.

விபாவின் அருகில் வந்து மண்டி இட்ட தானு,

“வேணு, பாப்பாவ தூக்கி என் கையில குடுங்க. படுக்க வைக்கணும்” என்றாள்.

குழந்தையை அவள் தோளில் கிடத்தியவன், கிறக்கமாக,

“இவ்வளவு அழகையும் எங்க ஒளிச்சு வச்சிருந்த தானும்மா? இந்த பௌர்ணமி வெளிச்சத்துல அந்த நிலா மகளே கீழிறங்கி வந்த மாதிரி ஒரு மாயை. இன்னிக்கும் என் தூக்கம் போச்சு”

அவன் பேசியதை கேட்டு, நறுக்கென அவன் கையை கிள்ளினாள் தானு.

“ஆவ்வ்வ். ஏன்டி கிள்ளுன?”

“இப்ப மாயை எல்லாம் ஓடி போச்சா வேணு? ஒழுங்கா கம்முன்னு போய் படு.” என நமட்டு சிரிப்புடன் எழுந்து போனாள் தானு.

ஆண்கள் மூவருக்கும் வீட்டின் முற்றத்திலே பாயை விரித்தார் முத்துப்பாண்டி. அவரும் காவலுக்கு இருப்பது போல் விபாவின் பக்கத்திலேயே இன்னொரு பாயை விரித்துக் கொண்டு படுத்தார்.

தருண் படுத்தவுடன் தூங்கிவிட்டான். விபாதான் இன்னொரு பக்கத்தில் இருந்த பிரபுவிடம் மெதுவான குரலில்,

“டேய், என்னடா இவரு என் பக்கத்துல வந்து படுத்துகிட்டாரு?”

“உன் மேல ஒரு தனி பாசம் தான். கூடிய சீக்கிரம் அவரு பேத்திய கட்டிகிட்டு பேரன் ஆக போறல்ல. அதனால தான்”

“என்னப்பா அங்க சத்தம்?” முத்துப்பாண்டி குரல் கொடுத்தார்.

“ஒன்னும் இல்லை தாத்தா. சும்மா தான் பேசிக்கிட்டு இருந்தோம்” என பதில் கொடுத்தான் பிரபு.

“படுங்கப்பா நாளைக்கு பேசிக்கலாம்” என அதற்கும் ஒரு முற்றுப்புள்ளியை வைத்தார் அவர்.

தூக்கம் வராமால் புரண்டு கொண்டிருந்த விபாவுக்கு உள்ளறையில் நடந்த பேச்சு சத்தம் சிரிப்பை வரவழைத்தது.

“கற்பு, ஒரு நாளைக்கு என் பேத்தி பக்கத்துல நான் படுத்துகிறேன் ஆத்தா.” என கேட்டு கொண்டிருந்தார் வேலம்மா.

“அம்மா, வேணாம்மா. நான் சொல்லுறத சொல்லிபுட்டேன். நாளைக்கு என்னை நொந்துக்காதிங்க” என பதிலளித்தார் கற்பகம்.

“நீங்க வாங்க பாட்டி. என் செல்ல பாட்டி. நாம கட்டி புடிச்சு படுத்துக்கலாம். உங்க மகளுக்கு வயித்தெரிச்சல் உங்க கூட படுக்க முடியலைன்னு.” என பாட்டியின் பக்கத்தில் படுத்துக் கொண்டாள் தானு.

நாளைக்கு பாட்டி என்ன நிலமையில இருப்பாங்களோ என சிரித்தபடியே கண்களை மூடினான் விபா. பஞ்சு மெத்தையில் படுத்தாலும் தூக்கம் வராமல் அவஸ்தை படும் விபா, கட்டாந்தரையில் விரித்த பாயில் சுகமாக தூங்கி போனான்.

error: Content is protected !!