அத்தியாயம் 38

உனக்கென மணி வாசல் போலே
மனதை திறந்தேன்
மனதுக்குள் ஒரு ஊஞ்சல் ஆடி
உலகை மறந்தேன்
வலையோசைகள் உன் வரவை கண்டு
இசை கூட்டிடும் என் தலைவன் என்று
நெடுங்காலங்கள் நம் உறவை கண்டு
நம்மை வாழ்த்திட நல் இதயம் உண்டு
இன்ப ஊர்வலம் இதுவோ

“வேணு! காரை நிறுத்து. ”

“என்ன தானு, என்னாச்சு?” பின்னிருக்கையில் இவ்வளவு நேரம் சுகமாக தூங்கி கொண்டு வந்தவள் திடீரென கத்தவும் கலவரமாகி போனான் விபா. அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த டேனியும் அவளை திரும்பி பார்த்தான்.

“ஊட்டிக்கு தானே கூட்டிட்டு போறேன்னு சொன்ன? சைன்போர்டுல உதகமண்டலம்னு எழுதி இருக்கு? யாரை டபாய்க்க பார்க்குற? நான் மலாய் ஸ்கூல் போனாலும் தமிழ் கிளாஸ் அட்டெண்ட் பண்ணியிருக்கேன். தமிழ் எழுத்துகூட்டி நல்லாவே படிப்பேன்”

‘ப்பூ இவ்வளவுதானா? இதுக்குதான் பீதிய கிளப்புனாளா?’

“ஊட்டிய உதகமண்டலம்னும் சொல்லுவாங்கடா. பூவ புய்ப்பம்னு சொல்லுவாங்கல்ல அந்த மாதிரி” என சிரித்தான் விபா.

“ஹீஹீ! இவ்வளவு சிரிச்சா போதுமா? இவரு பெரிய செந்திலு, ஜோக்கடிக்கிறாரு. எனக்கு குளிருது வேணு. சூடா ஏதாவது வாங்கி குடு”

வேணுவே கார் ஓட்டிக் கொண்டு வந்திருந்தான் இந்த டிரிபுக்கு. அவனுக்கே இந்த ஊட்டி பாதையில் ஓட்டுவது கடினமாக இருந்தது. இந்த லட்சணத்தில் காரை தான் ஓட்டுவதாக அடம் செய்தவளை அதட்டி மிரட்டி அதுவும் செல்லாததால் கெஞ்சி படுக்க சொல்லி இருந்தான். எழுந்தவுடன் மேடத்திற்கு பசியும் எழுந்து விட்டது.

டேனியும் சில நாட்களாக இருவரையும் கவனித்துக் கொண்டுதான் வந்தான். இவள் அடம் பிடித்தாள் அவன் அடங்கி போவதும், அவன் கெஞ்சி கொஞ்சினால் இவள் பணிந்து போவதும். ஒருத்தருடைய வீக் பாயிண்டை மற்றவர் நன்றாக அறிந்து வைத்திருந்தனர்.

நல்ல கடையாக தேடி அவர்களை மதிய உணவுக்கு அழைத்து சென்றான் விபா. இயல்பாக தானு விபாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். டேனி அவள் எதிரே அமர்ந்து கொண்டான். இருவருக்கும் என்ன வேண்டும் என கேட்டு ஆர்டர் செய்து கொடுத்தான் விபா. அவள் தட்டில் குறைவதை விபா நிரப்புவதும், அவன் குவளையில் இவள் தண்ணீர் அருந்துவதும் என அவர்களுக்குள்ளே ஒரு பிணைப்பு அவர்கள் அறியாமலே நிகழ்ந்திருந்தது.

“டேனி, அந்த சட்னி வேணாம்டா. ரொம்ப காரமா இருக்கும். அப்புறம் உன் முகமேல்லாம் சிவந்து போயுரும். இரு நான் வேற கேக்குறேன்” என நண்பனையும் நன்றாக கவனித்துக் கொண்டாள் தான்யா.

“வேணு! அந்த மேஜை பொண்ணை பாரேன். நம்ம டேனிய எப்படி சைட்டடிக்கிறான்னு. இவனையும் பாரேன்! நமக்கு சோறு தான் முக்கியம்கிற மாதிரி அந்த வேலைய மட்டும் பார்க்குறான். ரொம்ப கஸ்டம்”

“எல்லாரும் என்னை மாதிரி இருப்பாங்களா சொல்லு” என கேட்டவனை தீப்பார்வை பார்த்தாள் தானு.

‘இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி பார்க்குறா? ‘ திரும்பி சொன்னதை ரீவைண்ட் செய்து பார்த்தவன்,

“உன்னை சைட் அடிச்சத தான் தானும்மா சொன்னேன். இதுக்கு வேற எந்த அர்த்தமும் இல்ல” என சட்டென சரணடைந்தான்.

“கவலை படாதே! அந்த பொண்ணோட எதிர்த்த சீட்டு பொண்ணு உன்னைத் தான் விழி பிதுங்கற அளவுக்கு பாத்துகிட்டு இருக்கா. நான் வேணா வெளிய நிக்கிறேன். போய் பேசிட்டு வா. ”

“தானும்மா, எவ என்னை பார்த்தாலும் உன் கடை கண் பார்வை மட்டும் எனக்கு போதும்மா. இப்படிலாம் இனிமே பேசாதே ! என் செல்லம் இல்ல”

“ரெண்டு பேரும் மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா? சீக்கிரமா கொஞ்சி, கெஞ்சி சமாதானமாகிட்டு வெளிய வாங்க. நான் கார் கிட்ட வெய்ட் பண்ணுறேன்” என எழுந்து சென்றான் டேனி.

‘வைட்டு, தேறிட்டடா. எப்பப்ப எங்களுக்கு பிரைவசி கொடுக்கணும்னு இப்பவாவது தெரிஞ்சுகிட்டியே. உனக்கு கண்ணம்மா பேட்டையிலே ஒரு சிலை வைக்கிறேண்டா’

டேனி கார் அருகில் நின்றுவாறே ஊட்டி குளிர் காற்றை நன்கு அனுபவித்தான். சென்னையிலேயே குளிருக்கு போட்டு கொள்ள ஸ்டைலிஷாக கார்டிகன் வாங்கி கொடுத்திருந்தாள் தான்யா. அவளுக்கு தேவையானதை விபா அவர்கள் “எலெகண்ட்” கடையிலிருந்து வருவித்து தந்திருந்தான். இந்த குளிருக்கும் சாதாரண உடைகளில் நடந்து செல்லும் மக்களை அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தான் டேனி.

‘இங்கயே உள்ளவங்களுக்கு பழகிரும் போல. இந்த டான்யா தான் என்ன செய்ய போறான்னு தெரியலை. நம்ப ஊரு கேமரன் மலை குளிருக்கே மூக்கை உறிஞ்சுகிட்டு சுத்திகிட்டு இருப்பா. இந்த குளிருக்கு என்ன பண்ண போறாளோ? வேணான்னு சொன்னா கேட்டா தானே. ஒரே அடம். வேணு! இந்த டிரிப் முடியறதுகுள்ள மூக்கு வழிக்குது, முதுகு வலிக்குதுன்னு உன்னை ஒரு வழி பண்ணிருவா. ‘ என மனதிற்குள்ளேயே சிரித்து கொண்டான்.

அதற்குள் சமாதானமாகி விபாவும் தானுவும் சிரித்து பேசியபடியே உணவகத்திலிருந்து வெளியே வந்தனர். பிறகு கார் ஹோட்டலுக்கு மெல்ல பயணித்தது.

விபா மூவருக்கும் தனி தனி ரூம் எடுத்திருந்தான். சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு வெளியே செல்லலாம் என பிளான் செய்திருந்தார்கள். இன்று முழுக்க சுற்றும் இடமெல்லாம் தானுவின் சாய்ஸ். நாளைக்கு டேனியின் சாய்ஸ் என பிரித்திருந்தனர். விபா ஏற்கனவே வந்திருப்பதால் அவனின் சாய்சை டீலில் விட்டிருந்தனர் இருவரும்.

குளித்து முடித்து, ஜீன்சும் டாப்சும் அணிந்து அதற்கு மேலாக மஞ்சள் நிற ஸ்வேட்டரும், மஞ்சளும் பிங்கும் கலந்த குல்லாவும் அணிந்து பார்பி பொம்மை மாதிரி ஹோட்டல் லாபியில் ஆண்கள் இருவரின் வருகைக்காக காத்திருந்தாள் தானு.

‘நானே கிளம்பி வந்துட்டேன். இவனுங்க ரெண்டு பேரையும் இன்னும் காணோம். அப்படி என்னதான் மேக்காப் போடுறானுங்களோ. யாருப்பா அது பொண்ணுங்க கிளம்பி வரதுக்குள்ள ஆம்பிளைங்க எலும்பு கூடா ஆயிருவாங்கன்னு மீம் போடுறவங்க? கொஞ்சம் இங்க வந்து பாருங்க, அப்புறம் தெரியும் செய்தி. எதுக்கு எடுத்தாலும், பொண்ணுங்க ட்ரைவிங் சரியில்ல, டைம் மேனேஜ்மேன்ட் சரியில்ல, மணி மேனேஜ்மன்ட் சரியில்லைன்னு ஜோக்குங்கற பேருல வறுத்து எடுக்கிறது. நாங்களும் உங்கள பத்தி ஜோக் போட்டோம்னா டப்பா டான்ஸ் ஆடிரும். இனிமே பகுதி நேரமா ஆண்களை துப்பி துப்பி மீம் போடலாமா?’ அவர்கள் இருவரையும் மட்டும் இல்லாமல் மொத்த ஆண்குலத்தையும் கருவி கொண்டு அமர்ந்திருந்தாள் அவள். தானுவின் பொறுமையை மேலும் பத்து நிமிடங்கள் சோதித்து விட்டு தான் இருவரும் வந்தார்கள்.

இருவருக்கும் மரண லுக் ஒன்றை கொடுத்தவள், விடுவிடுவென நடந்து சென்று கார் அருகே நின்று கொண்டாள்.

“என்னடா வைட்டு, உன் பிரண்ட் முறைச்சுகிட்டு போறா? என்ன பண்ண நீ?”

“நான் என்ன பண்ணாலும் என்னை ஒன்னும் செய்ய மாட்டா. ஜெல் போட்டு அழகா சீவி வச்சிருக்கிற உன் முடியை தான் புடிச்சு ஆட்ட போறா. 30 நிமிஷம் லேட்டு நீ. அதான் இந்த முறைப்பு.”

“நீயும் தானடா லேட்டா வந்த? “

“மிஸ்டர் வேணு, ப்ரன்ஷிப்ல நேரம் தவறலாம், காதலுல தவறலாமா? என்னவோ போ, இன்னிக்கு உனக்கு நேரம் சரியில்லை” என விசில் அடித்துக் கொண்டே காரை நோக்கி சென்றான் டேனி.

‘காதலில் சொதப்புவது எப்படின்னு படம் எடுத்தாங்களே, சொதப்பாமல் இருப்பது எப்படின்னு எடுத்தாங்களா? ஹ்ம்ம். அப்படி ஒரு படத்தை கூடிய சீக்கிரம் என்னை டைரக்ட் பண்ண வச்சிருவா போல ‘ புலம்பி கொண்டே அவர்களை நோக்கி விரைந்தான் விபா.

காரை ஸ்டார்ட் செய்தவன்,

“சொல்லுமா தானு, முதல் இடம் எங்க போகனும்?”

“தொட்டபேட்டால சூசைட் போய்ன்ட் இருக்காமே? அங்க போ” வார்த்தைகள் சூடாக வந்து விழுந்தது.

டேனி சிரிப்பை அடக்க படாத பாடுபட்டான். அவனை முறைத்த விபா,

“அது இங்க இருந்து 9 கிலோமீட்டர் தூரத்துல இருக்குடா. இன்னொரு நாளைக்கு போகலாம். இப்ப கிட்ட இருக்கிற இடமா பார்த்து கேளுடா குட்டி”

“கவர்மென்ட் மீயூசியம் போ வேணு”

“மீயூசியமா?” டேனி விளக்கெண்ணையை குடித்ததை போல் முகத்தை வைத்துக் கொண்டான்.

“ஏன் மீயூசியத்துக்கு என்ன குறைச்சல்? நீ சொல்லு வேணு?”

“ஆமா ஆமா, அதுக்கு என்ன குறைச்சல். அங்க போனாதான் ஹிஸ்டரி ஜோகிராபி எல்லாம் தெரிஞ்சுக்குலாம். நீ ரொம்ப ஷார்புடா செல்லம்” என அவளுக்கு ஐசை வைத்தான் விபா.

“விபா சொன்னத நல்லா கேட்டுக்க டேனி. புது இடத்துக்கு போகுறப்ப கண்டிப்பா மியூசியம் போய் பாக்கனும். அப்பதான் அந்த ஊரோட பாரம்பரியம், பண்பாடு எல்லாம் தெரிஞ்சுக்கலாம் ”

‘ஹனிமூன் போக இடம் செலக்ட் பண்ணுறப்ப மியூசியம் இல்லாத இடமா பார்க்கணும். என்னடா எனக்கு வந்த சோதனை’ என மனதினில் பேசிக் கொண்டான் விபா.

“சரி வரேன்,என் காதை ஓட்டை போடாத”

சிவப்பு வர்ணத்தில் அழகாக இருந்தது அருங்காட்சியக கட்டிடம். யாரும் இல்லாத கட்டிடத்தில் இவர்கள் மட்டுமே டீ ஆற்றி விட்டு வந்தார்கள்.

“ஏன் வேணு கூட்டத்தையே காணோம்?”

“எல்லாரும் உன்னை மாதிரி புத்திசாலியா இருப்பாங்களா தானும்மா. இந்த மாதிரி இடத்தோட அருமையெல்லாம் அவங்களுக்கு தெரியலை. அற்ப பதர்கள்” என இழுத்து சொன்னான் விபா.

“வேணு உன்னை தான் அற்ப பதர்ன்னு சொல்லுறான் டான்யா. இது கூட புரியலை, நீ என்னதான் டாக்டருக்கு படிக்கிறீயோ போ”

“அய்யோ நான் உன்னை சொல்லல தானு. இவன் சும்மா போட்டு குடுக்குறான்”

“நீ என்னை அப்படி சொல்ல மாட்டேன்னு எனக்கு தெரியாதா.” சொல்லிக் கொண்டே அவன் அருகில் சென்றவள் அவன் கைகளில் தன் கையைக் கோர்த்துக் கொண்டாள்.

“என்ன கை இப்படி ஜில்லுன்னு இருக்கு?” அவள் இரு கைகளையும் பற்றி தேய்த்து விட்டான் விபா.

“ரூமுக்கு போலாமா? அங்க கணப்பு இருக்கு. சாப்பிட்டுட்டு படுத்துக்க தானு”

“அதெல்லாம் முடியாது. போட் ரைடிங் போகலாம் வேணு”

“அங்க இன்னும் குளிரும் தானு. சொன்னா கேளு”

“ஊட்டில கை சில்லுன்னு ஆகாட்டி தான் அதிசயம். இதுக்கு போய் இந்த ஆர்ப்பாட்டம் பண்ணாதே.ப்ளீஸ் வேணு. ஒரே ஒரு ரைட். “

“வேணு தான் சொல்லுறான்ல. அப்புறம் ஏன் இந்த அடம்? முகமே ரத்தப் பசை இல்லாம எப்படி வெள்ளையா ஆயிருச்சு பாரு” என கடிந்து கொண்டான் டேனி.

அதற்கு மேல் அவள் ஒன்றும் பேசவில்லை. காரில் அமைதியாகவே வந்தாள்.

விபா காரை ஓர் இடத்தில் நிறுத்தி,

“இறங்கு தானு” என்றான்.

இறங்கி சுற்றிலும் பார்த்தவள் ஓடி வந்து அவனை கட்டி கொண்டாள். காரை ஊட்டி லேக் அன்ட் போட் ஹவுஸ்சில் நிறுத்தி இருந்தான் விபா.

“தேங்க்ஸ் வேணு”

“ஒரே ஒரு ரைட் தான். அப்புறம் திரும்பி போறோம். ஓகேவா?”

“ஓகே ரைட்”

அவர்களை, இது ரெண்டும் தேறாத கேஸ் என்பதை போல் பார்த்த டேனி, டிக்கட் எடுப்பதற்கு போய் வரிசையில் நின்றான். மூவரும் ஒன்றாக செல்லலாமென பெரிய படகிற்கே டிக்கட் வாங்கினார்கள்.

தானுவின் சேப்டி ஜேக்கேட் சரியாக இருக்கிறதா என விபா ஒரு முறைக்கு இரு முறை செக் செய்து தான் அணிவித்து விட்டான்.

அவர்களோடு படகில் இன்னும் சில குடும்பங்களும் இருந்தார்கள். நீரை கிழித்து கொண்டு செல்லும் படகின் சத்தத்தையும், முகத்தில் அடிக்கும் குளிர் காற்றின் குறும்பையும் ரசித்து அனுபவித்தாள் தானு. ஒன்றும் பேசாமல் விபாவின் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு மோன நிலையில் இருந்தாள் அவள். அவர்களோடு பயணித்த ஒரு குட்டி பாப்பா, டேனியை பார்த்து பார்த்து சிரித்தது. டேனி கை ஆட்டும் போது வெட்கத்தில் முகத்தை அவள் தாயின் மடியில் புதைத்துக் கொண்டாள் அந்த குட்டி. துரு துருவென இருந்த குழந்தையை தானுவும் சிரித்த முகத்துடன் கவனித்துக் கொண்டிருந்தாள்.

பின்னால் அமர்ந்திருந்த தந்தையிடம் செல்வதற்காக ஓடிய அந்த குட்டி தீடீரெனெ படகு ஆடியதில் கால் தவறி ஏறியில் விழுந்திருந்தாள். அவள் பெற்றோர் போட்ட கூச்சலில் என்ன ஏதுவென விபா உணரும் முன்னே தானு குழந்தையை காப்பாற்ற ஏரியில் குதித்து விட்டாள்.

நடந்த விபரீதத்தில் விபாவின் இருதயம் ஒரு நிமிடம் வேலை நிறுத்தம் செய்து மீண்டும் துடித்தது. மறுநொடி யோசிக்காமல் அவனும் ஏரியுள் பாய்ந்திருந்தான். தானு நீந்தி சென்று சேப்டி ஜாக்கேட்டினாள் மிதந்த குழந்தையை கைப்பற்றி இருந்தாள். அவளுக்கு பின்னே நீந்து வந்த வேணு அவர்கள் இருவரையும் பற்றி கொண்டான். டேனி தூக்கி போட்ட மிதவையில் குழந்தையை கிடத்திய விபா, மேலே தூக்குமாறு சைகை செய்தான். அவ்வளவு நேரமும் விபாவின் கழுத்தை இருக்கிப் பிடித்துக்  கொண்டிருந்தாள் தானு. நீச்சல் தெரியும் என்ற தைரியத்தில் குதித்திருந்தாலும், ஏரியின் ஆழமும், ஜில்லேன்ற நீரும் அவளின் சக்தியை குறைத்து பயத்தை கொடுத்திருந்தன.

“கழுத்தை விடு தானு. என்னால மூச்சு விட முடியல. நான் உன்னை பத்திரமா பிடிச்சிருக்கேன். பயப்படாதே” அவள் கழுத்தைப் பிடித்து அமுக்கியதால் இரும்பி கொண்டே பேசினான் விபா.

மெல்ல அவளது கை பிடியை தளர்த்தியது. மிதவையிலிருந்த குழந்தையை டேனியும் படகு ஓட்டுபவரும் மெல்ல மேலே தூக்கினார்கள். அதன் பிறகு தானுவையும் கை கொடுத்து டேனி மேலே இழுத்தான். விபாவை படகு ஓட்டுபவரும் படகில் இருந்த மற்றவர்களும் கை பிடித்து மேலே ஏற்றி விட்டார்கள்.

அந்த குழந்தையின் அம்மா, அழும் குழந்தையை அணைத்தவறே தான்யாவின் கையைப் பற்றி கொண்டார். கண்களில் நீர் வழிய அந்த குடும்பம் இவர்களுக்கு நன்றியை தெரிவித்தது. குளிரில் நடுங்கி கொண்டிருந்த தானுவுக்கு இது எதுவும் கருத்தில் படவில்லை. அவளையே பார்த்தபடி நின்றிருந்த விபா மட்டும் தான் கண்ணில் தெரிந்தான். அவன் பார்வையில் இருந்ததென்ன என புரியாமல் நின்று கொண்டிருந்தாள் அவள். டேனிதான் அவனது கார்டிகனை கழற்றி அவளுக்கு போட்டு விட்டான். அந்த சம்பவத்துக்கு பிறகு படகு கரைக்கு திருப்பப்பட்டது.

காரில் இருந்து ஹோட்டல் வரும் வரை விபா வாயைத் திறக்கவே இல்லை.. இவர்களும் அமைதியாகவே வந்தார்கள். அவளுடனே அவளது ரூமிற்கு வந்தவன், கணப்பை அதிக படுத்திவிட்டு, ரூம் சேர்விசுக்கு போன் செய்தான். சூடாக காப்பியும், இரவு உணவும் அவளுக்கு ஆர்டர் செய்தவன் அவளிடம் எதுவுமே பேசாமல் ரூமை விட்டு வெளியேறிவிட்டான்.

ஏதேதோ நினைத்தபடி படுத்திருந்த விபாவுக்கு இரவு இரண்டு மணிக்கு தானுவிடம் இருந்து போன் வந்தது. சுருட்டிக் கொண்டு எழுந்தவன்,

“சொல்லு தானும்மா. நீ இன்னும் தூங்கலியா?”

“வேணு, எனக்கு ரொம்ப குளிருது. கை கால அசைக்க முடியலை. சீக்கிரம் வா” விட்டு விட்டு பேசினாள்.

“இரு நான் லோபிக்கு போய் இன்னொரு சாவி வாங்கிட்டு ஓடி வரேன்”

“பரவாயில்லை வேணு, மெதுவா நடந்து போய் கதவை திறந்து வைக்கிறேன். இங்க வா”

மூன்று நிமிடத்தில் அவள் ரூமில் இருந்தான் விபா.

“என்ன செய்யுது தானும்மா?”

பற்களேல்லாம் டைப் அடிக்க நின்றிருந்தவளை முதலில் இருக்கமாக அணைத்துக் கொண்டவன் ரிஷப்சனுக்கு போன் செய்து பேசினான். சில நிமிடங்களில் கதவு தட்டப்படும் ஓசையில் அவளை நாற்காலியில் அமர வைத்துவிட்டு கதவை சென்று திறந்தான். அவன் திரும்ப வரும் போது கையில் ஒரு தட்டு இருந்தது. அதில் சூடான காப்பி, சூட்டு தைலம் மற்றும் சில மாத்திரைகள் இருந்தன.

அதிலிருந்த மாத்திரையை  சூடான காப்பியில் கலந்து  அவளுக்கு மெல்ல புகட்டினான் விபா.

“எவ்வளவு நேரமா இப்படி இருக்கு?”

“ரொம்ப நேரமா வேணு”

“ஏன் என்னை கூப்பிடல?”

“நீ என் கிட்ட கோபமா இருக்கிற மாதிரி இருந்தது. இதான் முத தடவை உன்னை இப்படி கோபமா பார்க்கிறேன். அதான் பயமா இருந்தது உன்னை கூப்பிட. நல்லா போயிரும்னு நினைச்சேன். அதுக்குள்ள ரொம்ப நடுங்க ஆரம்பிச்சுருச்சு” பற்கள் டைப் அடிக்க நிறுத்தி நிறுத்தி பேசினாள் தானு.

அவள் பேசுவதை கேட்டபடியே அவளது பேக்கை திறந்து மேலும் ஒரு ஸ்வேட்டரை எடுத்து அவளுக்கு அணிவித்தான். மெல்ல நடத்தி சென்று கட்டிலில் படுக்க வைத்தவன், கை கால்களில் சூடு வர தைலத்தை தேய்த்து விட்டான். அவளை திருப்பி முதுகிலும் தேய்த்துவிட்டவன், பின்பு அவள் கைகளில் கொஞ்சம் கொட்டி நெஞ்சில் தேய்த்துகொள்ளுமாறு சைகை செய்தான். அவன் சொன்னதை செய்தவள், கவலையுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“என் மேல கோபமா வேணு? பாப்பா பாவம்னுதான் சட்டுன்னு குதிச்சுட்டேன்”

பேச வேண்டாமென சைகை செய்தவன், கனமான போர்வையை அவளுக்குப் போர்த்தி விட்டான். பின்பு அவன் திரும்பி கதவு அருகே செல்லவும், கண்ணீர் வழிய கண்களை மூடிக் கொண்டாள் தானு. கதவு லாக் ஆகும் சத்தம் கேட்டது. மெல்ல தேம்பியவள் கண்களின் கண்ணீரை சூடான கரங்கள் துடைக்கும் உணர்வில் கண் திறந்து பார்த்தாள் தானு.

“நீ போய்ட்டன்னு நினைச்சேன்”

“நீ இப்படி இருக்கறப்ப எப்படி விட்டுட்டு போவேன்?”

கட்டிலில் ஏறி அவள் அருகே படுத்துக் கொண்டவன், அவளை இழுத்து தன் நெஞ்சில் போட்டுக் கொண்டான். குழந்தையை தூங்க வைப்பதுபோல் முதுகில் தட்டி கொடுத்தவன்,

“உன் மேல கோபம் இல்ல தானும்மா. ஆனா திடீருன்னு எனக்குள்ள ஒரு பயம். எங்க உன்னையும் நான் இழந்துருவனோன்னு. தண்ணியில மிதக்குற உன்னை பார்த்ததும் என் உயிரே என் கிட்ட இல்ல தானு. “அவன் அணைப்பு இறுகியது.

“இனிமே இந்த மாதிரி உன் உயிரோட விளையாடுற காரியம் எதையும் செய்யாதே தானு. நான் எதுக்கு இருக்கேன்? நான் காப்பாத்தி இருக்க மாட்டேனா அந்த பாப்பாவ? உனக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சுனா நான் எப்படி தாங்கிக்குவேன்? எனக்குன்னு இந்த உலகத்துல நீ மட்டும் தான் இருக்க. நீ இல்லாம என்னால இருக்க முடியாதும்மா. “ குரல் கரகரப்பாக வந்தது.

அவன் நெஞ்சில் இன்னும் ஒண்டி கொண்டவள்,

“இனிமே இப்படி செய்ய மாட்டேன் வேணு”

“தானும்மா, இன்னிக்கு நடந்த சம்பவத்துக்கு அப்புறம் என் மனசுல உள்ளதெல்லாம் உன் கூட ஷேர் பண்ணிக்கனும்கிற முடிவுக்கு வந்துட்டேன். என் லவ்வ உன் கிட்ட சொல்லி இருக்கேனே தவிர என் கடந்த காலத்தைப் பத்தி நான் உன் கிட்ட எதுவுமே சொன்னதில்ல”

“வேணு, கடந்தது கடந்ததாகவே இருக்கட்டும். எதுக்கு அதை இப்ப போட்டு குழப்பிக்கணும்? எனக்கு ஓரளவு உன் கடந்த காலத்தைப் பத்தி தெரியும். நீ அனாதைன்னு சொன்னல்ல, அதுக்கு அப்புறம் பிரபுகிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டேன்”

“எப்படி தானும்மா? என்னை பெத்தவங்க கதைய கேட்டதுக்கு அப்புறமும் உன்னால என்னை நேசிக்க முடிஞ்சது?”

“அவங்க பண்ண தப்புக்கு நீ என்ன பண்ணுவ வேணு? உன் கதைய கேட்டதுக்கு அப்புறம்தான் உன்னைய எனக்கு இன்னும் பிடிச்சது. உனக்கு கிடைக்காத அன்பை நான் மட்டுமே கொட்டி குடுக்கணும்னு ஒரு வேகமே வந்தது. “

“எங்க அப்பா மாதிரியோ எங்க அம்மா மாதிரியோ நான் இருந்துருவேனோன்னு உனக்கு பயமா இல்லையா தானு?”

“எதுக்கு பயம்? நம்பிக்கை தானே வாழ்க்கை. உன் மேல நான் முழு நம்பிக்கை வச்சிருக்கேன் வேணு. தமிழ்ல எனக்கு புடிக்காத ரெண்டே வார்த்தை நம்பிக்கை துரோகம். நீ எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணேன்னு தெரிஞ்சா என் ட்ரீட்மென்ட வேற மாதிரி இருக்கும். ” என செல்லமாக மிரட்டினாள்.

கொஞ்ச நேரம் திரு திருவென முழித்தவன்,

“இப்ப எதுக்கு அதைப் பத்தி பேச்சு? என் கதைய நான் இன்னும் முடிக்கல.”

“சரி சொல்லு, என் கிட்ட சொன்னாதான் உனக்கு ரீலீப்பா இருக்கும்னா, கோ அஹேட் வேணு”

சொல்ல ஆரம்பித்தவனின் பார்வை அவள் முகத்திலேயே நிலைத்திருந்தது.

“சின்ன வயசுல அம்மா மடியில சாஞ்சுக்கனும், அவங்க கையால ஒரு வாய் சாப்பிடனும், அப்பா முதுகுல ஏறி விளையாடனும் இப்படி சின்ன சின்ன ஆசைகளுக்கு ரொம்ப ஏங்கியிருகேன் தானும்மா. யாராச்சும் நம்ப கூட உட்கார்ந்து பேசமாட்டாங்களா, சாப்பிட்டியான்னு கேட்க மாட்டாங்களான்னு தவிச்சிருக்கேன். சிவாஜியும் கேஆர் விஜயாவும் நடிச்ச ஒரு படம். பேரு எனக்கு ஞாபகம் இல்ல. அதுல அவங்க பிள்ளைய அவ்வளவு அன்பா பாத்துக்குவாங்க. தூங்குறப்ப அவங்க ரெண்டு பேர் தான் என் நிஜமான அம்மா அப்பான்னு கற்பனை பண்ணி சந்தோஷபட்டுக்குவேன். என்னை பெத்தவங்க இறந்தப்ப கூட நான் கவலை படல தானு. அந்த சம்பவத்த பார்த்த பயம் மட்டும் தான் என் கிட்ட இருந்தது. தூங்க முடியாம எத்தனயோ ராத்திரி தவிச்சிருக்கேன். கெட்ட கனவா வந்து பயமுறுத்தும். பயத்துல கத்துனா எங்க பாட்டி ஐஸ் தண்ணிய மேல ஊத்திருவாங்க. அவங்க கூட இருந்தப்ப வாய்ல இருக்கமா துணிய கட்டிகிட்டு தான் நைட் தூங்குவேன். “

விபா மனம் திறந்து பேசுவதை கேட்டு தானுவுக்கு கண்ணில் நீர் வழிந்தது. அவன் வாயில் கை வைத்தவள்,

“போதும் வேணு. என்னால தாங்க முடியல”

“சொல்லி முடிச்சிருறேன் தானு. அப்பத்தான் நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு உனக்கு புரியும். ஹோஸ்டல்ல சேர்ந்தவுடன் தான் எனக்கு ஒரு நல்ல காலம் பொறந்தது. அங்க பாசம் இல்லாட்டியும், யார் நம்ம என்ன செஞ்சிருவாங்களோன்னு பயம் இல்லாம இருந்தேன். நல்லா படிச்சேன். அப்புறம் என் 18வது வயசுல சொத்து எல்லாம் என் கைக்கு வந்தவுடன் நான் செஞ்ச முத காரியம், அந்த வீட்டை வித்ததுதான். அவங்க ஞாபகம் அறவே வேணாம்னு அவங்க பிஸ்னசையும் வித்தேன். நானா சொந்தமா தொடங்கினது தான் ‘எலெகண்ட்’. அதுக்கு அப்புறம் தொட்டது எல்லாம் வெற்றிதான். வெற்றிக்கு பின்னால என்னோட வெறித்தனமான உழைப்பும் இருக்கு. அப்பவும் என்னால நைட்டு தூங்க முடியாது. ஒரு வாரம் ஸ்ட்ரேய்டா தூங்காம கூட இருந்துருக்கேன். கவுன்சலிங் போனேன் தானும்மா. டாக்டர் தான் எனக்கு பிடிச்ச விஷயத்துல மனச திருப்ப சொன்னாங்க.”

சற்று நேரம் அவனிடத்தில் சத்தம் இல்லை. அடுத்து என்ன வருகிறது என தானுவுக்கு புரிந்தது. சொல்லி முடிக்கட்டும் என அமைதியாகவே இருந்தாள்.

“எனக்கு எப்படி உன் கிட்ட இந்த விஷயத்த சொல்லறதுன்னு தெரியலை தானும்மா. ரொம்ப வெட்கமா இருக்கு. விவரம் தெரிஞ்சும் தெரியாத வயசுல பல கெட்ட பழக்கங்களும் பழகி இருந்தேன் ட்ரக்ஸ், தண்ணி, இப்படி. எதுவும் எனக்கு பிடிக்கல. பெண்கள் எனக்கு குடுக்கிற அட்டேன்ஷன் மட்டும் தான் ஒரு போதை மாதிரி எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. அவங்க பணத்துக்காக தான் என் கிட்ட பழகறாங்கன்னு தெரிஞ்சும் ஏனோ அந்த போதையில இருந்து மீண்டு வர முடியலை. உனக்கு புரியலைல? பேஸ்புக்ல ஒரு போஸ்ட் போட்டா, எப்ப லைக் வரும்னு நாம காத்திருப்போம். லைக் அள்ளும்போது வாவ் இது செம்ம போஸ்ட்தான்னு ஒரு பீல் வரும் பாரு, அந்த மாதிரி தான் இந்த போதையும். லைக் கிடைக்கிற மாதிரி நான் ஏங்கி தவிச்ச அட்டேன்ஷன் எனக்கு கிடச்சது. மறைச்சு, ஒளிஞ்சு எதுவும் செய்யலையே. அதுல என்ன தப்புன்னு ஒரு சப்பகட்டு நானே கட்டிக்கிட்டேன்.  அப்புறம் தான் ஒரு நாள் உன்னை சந்தித்தேன். உன் சிரிப்பு சத்ததை கேட்டு தான் நான் உன்னை திரும்பி பார்த்தேன். நமக்குள்ள கெமிஸ்ட்ரி இருக்குங்கற மாதிரி கெமிஸ்ட்ரி புக்க தூக்கி பிடிச்சுக்கிட்டு இருந்த. நீ திடீர்ன்னு எழுந்து வெளிய போகும்போது என்னைத் திரும்பி பார்த்த. ஞாபகம் இருக்கா? அப்போ தான் உன்னை நல்லா பார்த்தேன்.  உன் கண்களில் இருந்த வெறுமை என்னை புரட்டி போட்டுருச்சு. என்னையே நான் பாத்துகிட்ட மாதிரி இருந்தது. அதுக்கு அப்புறம் அடிக்கடி அங்க வந்தேன் உன்னை தேடி. ஆனா கண்டு பிடிக்க முடியலை. அப்புறம் தான் உங்க வீட்டுல உன்னைப் பார்த்தேன். என் கண்ணீரை துடைச்ச நீ என் மனசையும் துடைச்சு எடுத்துகிட்ட. நமக்கு ஒன்பது வயசு வித்தியாசம்கிறது என்னை உறுத்திக் கிட்டே இருந்தது. ஆனாலும் உன்னை விட முடியலை. உனக்காக எதுவும் செய்யலாம்னு தோணுச்சு. நீ எனக்கு மட்டும்தான், எனக்கே எனக்கு மட்டும்தான் தானும்மா. இனிமே இந்த மாதிரி அதிர்ச்சி எல்லாம் எனக்கு குடுக்காதடா. என் சின்ன ஹார்ட் வெடிச்சு சிதறிரும்.”

விபாவை இருக்கி கட்டிக் கொண்டவள்,

“வேணு, நீ சொன்ன பேஸ்புக், போதை கதைய என்னால ஏத்துக்கவே முடியலை. தப்பு செய்யுற ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம். காரணம் இருக்குங்கறதுனால தப்பு ரைட்டா ஆகிறாது. நீ செஞ்சது தப்புதான். ஆனா என்னால மன்னிக்க முடியாத தப்பு இல்ல. இந்த ஊருல யாரும் புத்தனில்ல, தப்பே செய்யாம வாழறதுக்கு. என்னை கேட்டா புத்தரும் தப்பு செஞ்சவருதான். மனைவிய தவிக்க விட்டு போனது தப்பு இல்லையா? இத நான் கேட்டா சின்ன புள்ள மாதிரியா பேசுற, வாயிலயே போட்டுருவேன்னு கற்பு சத்தம் போடுவாங்க. அதனால நான் சொல்ல வரது என்னன்னா பழச மறந்துட்டு புதுசா என்னை மட்டும் நினை வேணு. ரூட்டு மாறி வேற பாதையில போச்சு, தாத்தாவை விட்டு உன்னை பேன் பார்க்க சொல்லிருவேன்” என கை நீட்டி மிரட்டினாள். அவளது கையைப் பிடித்து முத்தமிட்டவன்,

“எவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு சாதாரணமா சொல்லிட்ட தானு. உன் மனசு யாருக்கும் வராது தானும்மா. இந்த கணப்பு சாட்சியாக, இந்த கட்டில் சாட்சியாக, இந்த காத்தாடி சாட்சியாக, இந்த லைட் சாட்சியாக”

“முடிச்சிட்டியா இல்ல இன்னும் இருக்கா? சீக்கிரம் சொல்லி தொலை வேணு. எனக்கு கண்ணை கட்டுது”

இன்னும் ஒன்னுதான்டா. நம் அணைப்பின் சாட்சியாக இந்த ஜென்மத்துக்கு நீ மட்டும் தான் என் லவ்வர், டாவு, மனைவி, பொண்டாட்டி,பார்யா, பத்னி எல்லாமே. தானு? தானும்மா? அடிப்பாவி கஸ்டப்பட்டு வசனம் பேசுனா, இவ இப்படி தூங்கிட்டாளே. “ சிரித்தபடியே அவளை அணைத்து கொண்டு அவனும் தூங்கி போனான்.

error: Content is protected !!