MMV 2

MMV 2

அத்தியாயம் – 2
ரயில் நிலையம் தாண்டி கொஞ்சதூரம் நடந்தால் இரண்டு நிறைய தெருக்கள் மற்றும் காம்பவுண்ட் வீடுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தாள்.தார் சாலையின் இருபுறமும் வீடுகளுடன் காணப்பட்டது. அவளின் கவனத்தை வெகுவாகத் தன் ஈர்த்தது.

ஒரு சாதாரணமான ஓட்டுவீடு பார்க்கவே ரொம்ப அழகாக இருந்தது.வீட்டின் முன்னாடி ரோஜா, முல்லை, மல்லிகை செடிகள் இருக்க ஜாதி முல்லை கொடி மட்டும் வீட்டிற்கு மேல் படர விடப்பட்டிருந்தது. அந்த வீட்டை அழகை மனதிற்குள் ரசிக்க அவர் கதவைத்திறந்து உள்ளே நுழைந்தவர், “வாம்மா..” அவளை அழைத்து சென்றார்.

நிலா அவரைப் பின்தொடர்ந்து செல்ல, “ரித்திகா..” பேத்தியை அழைக்கவே, “தாத்தா..” என்ற அழைப்புடன் வாசலை எட்டிப்பார்த்தாள் அந்த பெண்.

அவர் நடக்க முடியாமல் வருவதைக் கவனித்தவள், “தாத்தா என்னாச்சு?”அவரின் பேத்தி வாசலுக்கு ஓடிவரவே, “இவர் மயங்கி விழுந்துவிட்டார்” என்றாள் நிலா.

“ஐயோ தாத்தா உங்களுக்கு ஏற்கனவே பிரஷர் இருக்கு. இந்த நேரத்தில் எதற்கு தாத்தா வெளியே போறீங்க..” அவரின் கையைப்பிடித்து வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றாள்.

“நீ காலேஜ் கிளம்புவதற்குள் வாக்கிங் போயிட்டு வரலாம் என்று
போனேன்..” அவரின் பின்னோடு செல்லாமல் வாசலோடு கிளம்ப நினைத்த நிலா, “சரிங்க நான் கிளம்பறேன்..” என்று திரும்பி இரண்டடி எடுத்து வைத்தாள்.

அவளை சேலையில் பார்த்தும், ‘என்னோட ரொம்ப பெரிவாங்க போல..’என்ற நினைவில், “அக்கா வாங்க காபி சாப்பிட்டுட்டு போலாம்..” என அழைத்த ரித்திகாவிடம், “இல்லங்க வேண்டாம். நான் கிளம்பறேன்..” அவள் மறுத்தாள்.

“ரித்து நீ போய் அந்த பெண்ணைக் கூட்டிட்டு வாம்மா..” பேத்தியை அனுப்பி வைத்தார்..

“எங்க வீட்டில் வேற யாரும் இல்ல. நானும் தாத்தாவும் மட்டும்தான்..” என்றவளை வீட்டின் உள்ளே அழைத்து சென்றாள்..

ரித்துவின் தாத்தாவும், நிலாவும் ஹாலில் அமர, “இருங்க நான் போய் காபி எடுத்துட்டு வருகிறேன்” சமையலறைக்குள் ரித்திகா நுழைந்தாள். அந்த பெரியவரின் பார்வை அவளின் மீது படிந்தது.

“ஊருக்கு புதுசாம்மா”அவளின் கவனம் கலைத்துவிட, “ம்ம்..” என்றவள் மீண்டும் மெளனமானாள்.

அதற்குள் காபி எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்த ரித்திகா, “அக்கா உங்க பேரு?” என்று புன்னகையுடன் கேட்க, “கலைநிலா..” என்றாள்.

“சூப்பர் நேம் அக்கா..” என்றவள் தொடர்ந்து, “இவர் என்னோட தாத்தா ரகுராம். நான் ரித்திகா காலேஜ் ஃபைனல் இயர் படிக்கிறேன்..” என்றதும், “என்னது!” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் நிலா.

“இதற்கு எதற்கு நீங்க அதிர்ச்சி ஆகிறீங்க?” அவள் புரியாமல் கேட்க அவளை நிமிர்ந்து பார்த்தாள் நிலா.

“நீங்க என்னோட பெரியவங்க. எனக்கு இப்பொழுது தான் பதினேழு வயது தொடங்கி இருக்கிறது..” எனப் புன்னகைத்த ரித்திகா, “அதுக்கு இந்த அதிர்ச்சி தேவையா நிலா?” அவளோ அமைதியாக இருக்க அவரின் பார்வை அவள்மீது கேள்வியாக படிந்தது.

‘யாரோ செய்யும் தவறுக்கு நான் மற்றவர்கள் முன்னாள் கூனிக்குறுகிப்போய் நிற்க வேண்டியதாக இருக்கிறதே..’ அவள் மனதிற்குள் நொந்துபோனவள்,“இந்த வயசில்..” பெரியவர் ஏதோ தொடங்கினார்.

ரித்திகா அவரை தடுப்பதற்குள், “ப்ளீஸ் என்னோட பாஸ்ட் உங்களுக்கு வேண்டாமே..” அந்த பேச்சிற்கு மென்மையாக முற்றுபுள்ளி வைத்துவிட்டாள் நிலா.

அவளின் சாதுரியமான பேச்சு அவரை கவர்ந்துவிடவே, “அடுத்து என்னம்மா பண்ணப் போகிற..” விசாரிக்க நிமிர்ந்து ஒருநொடி அவரைப் பார்த்தாள்.

“வீடு வாடகைக்கு எடுத்து தங்கணும். அடுத்து இங்கே ஏதாவது ஜவுளிக்கடை இருந்தால் அங்கே வேலைக்கு கேட்டுட்டு போகலாம் என்று இருக்கிறேன்..”என்றாள் நிமிர்வாகவே..

அவளின் அந்த துணிச்சல் ரித்திகாவிற்கு பிடித்துவிட, “அப்போ படிப்பு..”என்றதும், “எனக்கு படிக்க இஷ்டம் இல்லக்கா..” என்றவள் கசந்த புன்னகையுடன்..

அவளின் முகம் பார்த்து எதையோ யோசித்த பெரியவர், “ரித்துமா இந்த பொண்ணு முன்னாடியே வந்திருந்தால் பின்னாடி இருந்த வீட்டை நம்ம நிலாவிற்கு கொடுத்திருக்கலாம்..” என்றார் மனிதாபிமானத்துடன்.

“நான் வேற இடம் பார்க்கிறேன்..” என்று எழுந்தாள் நிலா.

ஆனால் அவளை அனுப்பிவைக்க ரித்துவிற்கு மனமே இல்லை. “ஒரு நிமிஷம் இரு நிலா..” என்றவளோ தன் தாத்தாவிடம், “தாத்தா அந்த அம்மாவிடமே கேட்கலாம். நிலா பாவம் சின்ன பொண்ணு. இந்த ஊரில் இவளுக்கு பாதுகாப்பு இருக்காது..” என்று யோசனை கூறினாள்.

அவரும் சிறிதுநேரம் சிந்தனைக்கு பிறகு, “சரிம்மா அந்த அம்மா
வந்தாங்களா?” பேத்தியிடம் விவரம் கேட்க, “ம்ம் இப்பொழுதுதான் வந்தாங்க தாத்தா. பின்னாடி ரூமில்  இருப்பாங்க..” என்றாள் ரித்திகா.

சோபாவில் இருந்த எழுந்த பெரியவர், “சரி நிலா வாம்மா. அந்த அம்மாவிடம் பேசலாம்..” அவளின் விருப்பத்தைக் கேட்காமல் அவளை அழைத்துச் சென்றவர், “சுமித்ராம்மா..” என்று அழைக்க, “யாரது..” என்ற கேள்வியுடன் வெளியே வந்தார் சுமிம்மா

ரித்திகாவின் அருகில் நின்றிருந்த நிலாவைப் பார்த்துமே அவரின் மனதில் பொறிதட்டியது.

“சொல்லுங்க அண்ணா..” என்றவரின் பார்வை நிலாவின் மீது நிலைத்திட நிமிர்ந்து சுமிம்மாவை பார்த்த நிலா நாக்கை கடித்துக்கொண்டு, ‘ஐயோ நிலா அம்மாவிடம் மாட்டிகிட்டியே..’ மனதிற்குள் நினைத்தாள்.

“இந்த வீட்டில் நீங்க ஒருத்தார் தானே தங்க போறீங்க. அப்படியே இந்த பெண்ணையும் உங்களோட தங்க வைக்க முடியுமா என்று கேட்க வந்தேன்..” ரகுராம் தன்மையுடன் கேட்டார்.

அவர்கள் மூவரையும் ஒரு முறை பார்த்த சுமிம்மா, “அந்த பொண்ணை இங்கே தங்கவைக்க வேண்டும் என்றால் எனக்கு சில கண்டிஷன் இருக்கு..” என்றார் திமிராகவே..

“என்ன கண்டிஷன்” ரித்திகா வேகமாகக் கேட்க, “ரித்து..” என்று அவளின் கைகளை பயத்துடன் பற்றினாள் நிலா.

“முதல் கண்டிஷன் மாதத்தின் முதல் தேதியில் என் கைக்கு வாடகை வந்துவிட வேண்டும், இரவு பத்து மணிக்கு மேல் கரண்ட் யூஸ் பண்ண கூடாது, நைட் லேட்டாக வந்து கதவைத் தட்டக்கூடாது, தண்ணீர் பத்து குடம்தான் கொடுப்பேன்..” என்றவர் தொடர்ந்து,

“நான் சமையல் பண்ண மாட்டேன் நீ செய்தால் எனக்கும் சேர்த்து செய்துவிடவிட வேண்டும். கரண்ட் பில் ஆளுக்கு பாதி பாதி. அதே மாதிரிதான் எல்லாமே..” என்று அவர் கண்டிஷன் போட நிலாவிற்கு ஒருபக்கம் தலையே சுற்றியது..

ஆனால் ரித்துவோ தன் தாத்தாவின் முகம் போன போக்கைப் பார்த்து வாய்மூடி சிரிக்கவே, “எதுக்கு இப்போ சிரிக்கிறீங்க..” நிலா ரகசியமாக அவளிடம் கேட்க, “அங்கே என்னோட தாத்தா முகத்தை பாரேன்..”என்றாள் ரித்திகா. அவள் திரும்பிப் பார்க்க ரகுராம் ருத்திர மூர்த்தியாக நின்றிருந்தார்..

சுமிம்மாவோ, ‘இனிமேல் வாடகைக்கு வீடு விடும் பொழுது யாரையாவது கேள்வி கேட்ப நீ..’ என்று மனதிற்கு புன்னகைக்க, “இங்கே நான் வீட்டுக்காரனா? இல்ல நீங்க வீட்டுக்காரங்களா?” கோபத்துடன் கேட்க இடைமறித்தார் சுமிம்மா.

“அட்வான்ஸ் கொடுக்கும் வரை நீங்க வீட்டுகாரர். அட்வான்ஸ் கொடுத்த பிறகு நான்தான் வீட்டிற்கு சொந்தக்காரி..” என்றதும் நிலாவும், ரித்திகாவும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

சுமிம்மாவிற்கு கூட சிரிப்பு வந்தது ஆனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “ஏய் உஸ்.. மூச்சு..” என்று அவரின் பிரஷரை ஏற்றிவிட்டார்.

அவர் கோபத்துடன் ஏதோ பேசவரவே, “தாத்தா நீங்க போட்ட கண்டிஷன் அவங்க மனசை ரொம்ப பாதிச்சிருக்கு போல.. அதனால் அப்படி பேசறாங்க தாத்தா..” என்று அவரை அமைதிப்படுத்தினாள் ரித்திகா.

“அதுக்காக..” என்று அவர் மீண்டும் தொடங்க, “தாத்தா..” என அதட்டினாள் ரித்திகா

“அம்மா இவளை உங்களோட தங்க வெச்சுகோங்க..” என்றவள் நிலாவின் பக்கம் திரும்பி, “நீ இவங்களோட பேசிட்டு இரு வருகிறேன்..” என்று தாத்தாவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

“அவங்க அப்படியெல்லாம் பேசறாங்க, நீ என்னை அதட்டுகிற..” என்றவர் புலம்பியபடியே வீட்டிற்குள் நுழைய மீண்டும் ஓடிவந்த ரித்திகா, “சூப்பர் சுமிம்மா..” என்று கட்டியணைத்து அவரின் கன்னத்தில் முத்தம் பதித்துவிட்டு சிட்டென்று பறந்துவிட்டாள்..

நிலா அவளைத் திகைப்புடன் பார்க்க, “வா நிலா..” என்று வீட்டிற்குள் அழைத்துச் சென்ற சுமிம்மாவை அவள் பயத்துடன் பார்த்துவிட்டு தலைகுனிந்து நின்றவளோ, “அம்மா நான் வேண்டும் என்று பொய் சொல்லல.. என்னைப்பற்றி சொல்ல விரும்பல அவ்வளவுதான்..” என்றாள்..

“நான் உன்னை எதுவுமே கேட்க மாட்டேன்..” என்றார் சுமிம்மா.

அவள் நிமிர்ந்து புன்னகைக்க, “ஏன்ம்மா வெளியே அவரிடம் அப்படி பேசினீங்க..” சந்தேகத்துடன் இழுத்தாள்.

“நான் வீடு கேட்க வந்த பொழுது மனுஷன் கண்டிஷன் போட்டே என்னோட உயிரை வாங்கிட்டான். அந்த கணக்கைத் தீர்க்க வழி தேடிட்டே இருந்தேன். அந்த கணக்கு இப்போ நீ வந்து முடிச்சு வைத்துவிட்டாய்..” என்று புன்னகைத்தார்.

பிறகு அவளின் பக்கம் திரும்பிய சுமிம்மா, “நான் வெளியே சொன்ன கண்டிஷன் எல்லாம் சும்மாடா.அதை மனசில் போட்டு
குழப்பிக்கொள்ளாதே..” என்றதும் சரியென தலையசைத்தாள் நிலா.

“இங்கே நீ உன்னோட வீட்டில் இருப்பது போல சுதந்திரமாக இருக்கலாம்.. ஆனால் நான் அடிக்கடி ஏதாவது சேட்டை செய்வேன்.. நீ கொஞ்சம் பொறுத்துக்கணும்..” என்றார் அவர் தன்மையாக..

அதற்குள் மழை பிடித்துவிட குளிர்காற்று ஜன்னல் வழியாக வந்து இருவரின் முகத்திலும் மோதிட, “ம்ம் குளிருக்கு ஒரு ஸ்ராங் டீ, ஒரு மெதுவடை சாப்பிட்டால் சும்மா சூப்பராக இருக்கு..” என்றவர் சமையறைக்குள் நுழைந்தார்..

அவர் சென்ற பின்னர் அங்கிருந்த தரையில் அமர்ந்த நிலாவின் நினைவுகள் எங்கோ சென்று திரும்பிட, “நிலா போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடு.. நீயும் நானும் வெளியே போகலாம்..” என்றார்..

அவளோ அதிர்வுடன் நிமிர்ந்து, “எதற்கும்மா..” என்று கேட்க, “நம்ம இருவரும் ஊருக்கு புதுசு.. அதனால ஊர் சுத்தி பார்க்கலாம் வா.. இங்கேதான் பல்லவர்கள் கட்டிய கோவில் எல்லாம் இருக்கிறது என்று புக்கில் படித்த ஞாபகம் அப்படியே போய் ஊர் சுத்திட்டு வரலாம்..” என்றார்..

“ஐயோ அம்மா நான் வரல..” என்றாள் நிலா வேகமாக..

“இந்த கதையெல்லாம் என்னிடம் நடக்காதுங்க மேடம்..” என்றவர் சமையலறைக்குள் இருந்து வெளியே வந்தார்..

அவர் கையில் தோசை கரண்டியுடன் நிற்க, “அம்மா” என்று பயத்துடன் அழைத்தாள் நிலா..

“ஏய் இங்கே பாரு.. எனக்கு இந்த கண்ணைக் கசக்கிட்டு மூலையில் உட்கார்ந்து அழுகிற பொண்ணுங்கள பிடிக்காது. நீ அந்த மாதிரி இருக்காதே..” என்று அவளை மிரட்ட, “நீங்க கண்டிஷன் சொல்லவே இல்ல சுமிம்மா..” என்றாள் நிலா பாவமாக..

அவளின் முகபாவனை அவரின் முகத்தில் புன்னகையை வரவழைக்க, “நான் மற்ற அம்மா மாதிரி இல்ல நிலா. நீ இங்கே சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் அந்த சுதந்திரத்தை நீ எப்படி பயன்படுத்த போகிற? அதை பொறுத்துதான் எல்லாமே இருக்கு..” என்றவரை அவளுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது..

ரித்திகா அவர்களிடம் சொல்லிவிட்டு கல்லூரி கிளம்பிச் சென்ற பின்னர் இருவரும் சேர்ந்து வீட்டை சுத்தம் பண்ணிவிட்டு, குளித்துவிட்டு வந்து சாப்பிட அமர்ந்தனர். கொஞ்சநேரம் பேசினாலும் நிலாவின் மென்மையான மனதை மேலோட்டமாக புரிந்து கொண்டார் சுமிம்மா..

சுமிம்மா வெளியே அழைத்ததற்கு அவளோ, ‘இல்லம்மா நான் வரல..’ என்று மறுத்துவிட, அதன்பிறகு அவர்கள் இருவரும் பொழுது சாயும் வரை ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர்.

இரவு நிலா முற்றத்தில், ‘ஒரு படத்தின் பாடல்கல்’ என்ற தொகுப்பில் வெள்ளிவிழா படத்தின் பாடல்கள் வரிசையாக ஒலித்தது..

“காதோடுதான் நான் பாடுவேன்..” என்ற பாடலை அவள் அதே குரலில் மெல்ல பாடி முடித்தும் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்த சுமிம்மா, “அடுத்த பாட்டு என்னோடது..” என்றார் குஷியாக..

அவளும் ஆர்வமாக கவனிக்க, “நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்.. உன்னை சந்தித்தேதான் தீருவேன்..” என்றவரின் கத்தல் குரல்கேட்டு, “அம்மா மெதுவாக பாடுங்க..” அரண்டு கத்தியே விட்டாள்.

அந்த பாடல் முடியும் வரை அவரும் கொஞ்சம் வாணிஸ்ரீயாக மாறிவிட பாட்டு முடிந்தும், “ஐயோ சாமி.. என்னம்மா இப்படி எல்லாம் பண்றீங்க..” பதட்டம் குறையாமல் கேட்டாள் நிலா.

உடனே தன் முகபாவனையை மாற்றிக்கொண்ட சுமிம்மா, “நான் நைட்ல தான் கொஞ்சம் சத்தம் கம்மியாக பாடுவேன்.. என்னோட வாய்ஸ் வெளியே கேட்கவே கேட்காது நிலா..” என்றார். நிலாவின் நிலையோ மயக்கம் போடாத குறைதான்..

“நிலா எப்படி அம்மாவோட பாட்டு..” என்றதும் ரேடியோவில், “அத்தைமடி மெத்தையடி..” என்ற பாடல் இனிமையாக ஒலிக்க, “அன்னைமடி மெத்தையடி. சுமிம்மா குரல் அடுத்த தெரு வரை கேட்குதடி..” குறும்பு மின்னும் விழிகளுடன் அவள் பாடினாள்

“அடிப்பாவி.. என்னையே கேலி செய்யற..” என்றவர் அவளின்
காதைபிடித்து திருகிட, “அம்மா வலிக்குதும்மா.. சும்மா விளையாட்டு தான் பாட்டை மாற்றி பாடினேன்..” என்று அவரிடம் சரணடைந்தாள்.

அதன்பிறகு சுமிம்மா படுத்தும் உறங்கிவிட, ‘வாழ்க்கை இப்படி எல்லாம் இருக்குமா?’ கேள்வி மனதில் எழுந்தது. ஞ்சநேரத்தில் அவளையும் மறந்து உறங்கிவிட்டாள் நிலா.

அவள் உறங்கிய பிறகு கண்விழித்த சுமிம்மா, ‘இந்த பொண்ணுக்கு இந்த வயதில் அப்படி என்ன பிரச்சனை..’ என்ற கேள்வியுடன் விடியலை எதிர்பார்த்து காத்திருந்தார் சுமிம்மா.

இருவரின் மனநிலையும் ஒத்துப்போக அன்றைய பொழுது அவர்களுக்கு மிகவும் இனிமையாக கழிந்தது.. இனிவரும் நாட்களில் சுமிம்மா இன்னும் என்ன என்ன அலம்பல் எல்லாம் பண்ண போறாங்களோ?

மொட்டு வளரும்..

error: Content is protected !!