ENE–EPI 39

அத்தியாயம் 39

கோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லையென்றால் கண்ணகி ஏது இன்று
மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவரும் நெஞ்சிலே
எது கூடுமோ எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

“வேணு”

“சொல்லுடா வைட்டு. உன் பிரெண்டு இப்பத்தான் நீ கிளம்ப போறேன்னு கண்ணை கசக்கிட்டு போனா. சமாதானம் பண்ணி படுக்க வச்சிருக்கேன்.  இப்ப நீ வந்து நிக்கிற. நாளைக்கு கிளம்புற ஐடியா இருக்கா இல்லையா?”

இரவில் ஆபிஸ் ரூமில் கொஞ்சம் கணக்கு வழக்குகளைப் பார்த்து கொண்டிருந்த விபாவை தேடி வந்திருந்தான் டேனி.

“ஏன் கிளம்பாட்டி கழுத்தப் புடிச்சு தள்ளிருவியா?”

“தள்ளனும்னு ஆசைதான். அதுக்கு அப்புறம் நடக்கிற பின்விளைவுகள் பயங்கரமா இருக்குமே. அதை நினைச்சுதான் பேசாம இருக்கேன்.”

“அப்போ டான்யாவுக்காக என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்க முடிவு பண்ணிட்ட?”

அவள் பெயரை கேட்டதும் முகம் மிருதுவாக, புன்னகையுடன்,

“அவளுக்காக எதையும் செய்வேன். உன் முகரைய சகிச்சுக்க மாட்டேனா?”

“குட் டிசிஷன் வேணு. ஏன்னா இனிமே இந்த முகரைய நீ அடிக்கடி பார்க்க நேரும்.”

“உன் கிட்ட சொல்லுறதுக்கு என்னடா. முதல்ல அவ மட்டும் தான் வேணும்னு நினைச்சேன். எங்க நடுவுல யாரும் இருக்க கூடாதுன்னு ஒரு வெறியே இருந்தது. அவ குடும்பத்தோட பழகும் போதுதான், அவளோட சேர்த்து அவங்களும் எனக்கு வேணும்னு தோணுது. பரிவா பார்த்துக்கிற அவ அம்மா, சந்தேக கண்ணோட பார்க்கிற அவ அண்ணன், முறைச்சு முறைச்சு பார்க்கிற அவ தாத்தா, அன்பை அள்ளி குடுக்குற பாட்டி, அவ மாமா, அத்தை என் செல்லக்குட்டி தானு, என் நண்பன் பிரபு, லெச்சும்மா எல்லாரும் எனக்கு வேணும்டா. குடும்ப அமைப்பை அனுபவிச்சி பார்த்திராத எனக்கு இனி தானு குடும்பம்தான் என் குடும்பம்.”

“பாட்டி வீட்டுல இருக்குற ஆடு மாடேல்லாம் லிஸ்டுல காணோம்?”

“அடங்குடா வைட்டு. நக்கல் பண்ணாலும் உனக்கும் உள்ளுக்குள்ள என்னை பிடிக்கும்னு தெரியும். சரி சொல்லு. என்ன விஷயம்?”

“ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆவாது வேணு சார். என் டான்யாவ பத்தி கொஞ்சம் பேசனும்”

“டேய்! எத்தனை தடவை சொல்லுறது என் தான்யான்னு சொல்லாதேன்னு? ஒரு நேரம் மாதிரி இருக்க மாட்டேன்டா. அடிச்சு வச்சிர போறேன்”

கோபத்துடன் இரைந்தவனைப் பார்த்து புன்னகைத்த டேனி,

“இப்பத்தான் எல்லோரும் வேணும்னு சொன்ன, அதுக்குள்ள என் கிட்ட சண்டை பிடிக்கிற. நான் சொந்தம் கொண்டாடுறதையே உன்னால தாங்கிக்க முடியலை. நாளைக்கு அவ பேமிலி அவளை சொந்தம் கொண்டாட விடுவியா? இல்ல கைப்பிடியிலே இருக்கி வச்சுக்குவியா? கயிற்றை இருக்கி பிடிக்கிறப்ப அது நம்ம கைய வெட்டிரும் வேணு. அந்த கயிறு மாதிரிதான் டான்யா. அவளை நீ பொத்தி வைக்க முடியாது. அவளுக்கு மூச்சு முட்டிரும். எல்லாத்தையும் சுயமா செஞ்சி பழகனவ அவ. காதல்கிற பேருல அவளை உன் பிடியில இருக்காத. வெட்டிட்டு போயிருவா”

நாற்காலியில் இருந்து எழுந்த விபா, தலையைக் கோதியவாறே ஜன்னல் ஓரம் போய் நின்று இருட்டை வெறித்தான்.

“உன் போஸ்சேசிவ்னஸ என்னால புரிஞ்சுக்க முடியுது வேணு. ஆனா அது அளவு கடந்து கொஞ்சம் ஓவரா போகுதோன்னு ஒரு டவுட்டு. நீ டான்யாவை எங்க எல்லாரையும் விட நல்லா பாத்துக்குவன்னு இங்க இருந்த ரெண்டு வாரத்துல தெரிஞ்சுகிட்டேன். அவ உன் மேல எவ்வளவு உயிரா இருக்கான்னும் புரிஞ்சுகிட்டேன். உங்க காதல் இதே மாதிரி எப்பவும் நிலைச்சு இருக்கனும்கிறது தான் என்னோட ஆசை. அவ சந்தோஷம் உன் கிட்ட தான் இருக்கு, அதை நீயே கெடுத்துக்காத. கிவ் ஹெர் சம் ஸ்பேஸ்”

“என்னை என்னடா செய்ய சொல்லுற?” குரல் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் வந்தது.

“கோபப்படாம கேளு,அப்பத்தான் எனக்கு தெரிஞ்ச சில டிப்ஸ குடுத்துட்டு போவேன். உன்னைவிட எனக்கு தான் அவளை பத்தி நல்லா தெரியும்”

“சரி சொல்லு”

“சொல்லுங்க டேனி சார்ன்னு கேளு”

“வைட்டு, பிரிச்சு மேஞ்சிருவேன் பாத்துக்க. என் பேபிக்காக பொறுத்து போனா என்னையே சீண்டி பார்க்கறீயா?”

“யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும் வேணு டியர். சரி, பாவம் பொழச்சு போ. டிப்ஸ் நம்பர் ஓன், அவ எங்க போனாலும் முந்திரி கொட்டை மாதிரி பின்னால போய் நிக்காத. சரி தெரியாம தான் கேக்குறேன், எப்படி கரேக்டா மோப்பம் பிடிச்சு போற? ஸ்பை வச்சிருக்கியா?”

“அது உனக்கு தேவை இல்லாத விஷயம்”

“சரி விடு. டிப்ஸ் நம்பர் டூ, அவ பழக்க வழக்கங்களை மாத்த நினைக்காத. அப்புறம் உன்னை மாத்து மாத்துன்னு மாத்திருவா. நம்பர் த்ரீ, ஆடம்பர செலவு செய்யாதே. கஸ்டப்பட்டு வளர்ந்ததனாலே பணக்கணக்கு ரொம்ப பார்ப்பா. என் கிட்ட தான் இருக்கே, நான் செலவு செய்வேன்னு ஆடுனினா, அப்புறம் உன்னைப் பிடிச்சு ஆட்டிருவா. நம்பர் போர், சுய மரியாதை ரொம்ப பார்ப்பா.அதுக்கு மதிப்பு குடு. அவ சுயமரியாதை சீண்டப்பட்டா சிங்கமா மாறிருவா. லாஸ்ட் டிப்ஸ் ரொம்ப இம்போர்டன்ட் டிப்ஸ், எவ்வளவு அடிச்சாலும் சத்தம் போடாம வாங்கிக்க. அப்புறம் அவளே சமாதானம் ஆகி ஒத்தடம் குடுப்பா. ஊடல்ல தானே காதல் ஸ்ட்ரோங்கா ஆகும். எனிவே பெஸ்ட் ஆப் லக் வேணு”

டேனியை அணைத்துக் கொண்ட விபா,

“தேங்க்ஸ்டா வைட்டு. உன் டிப்ஸ கண்டிப்பா போலோ பண்ணுறேன்.”

“வேணு, கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன். அவள கண் கலங்க வச்ச, அப்புறம் என் கூடவே கூட்டிட்டு போயிருவேன். அதுக்கு அப்புறம் உன் கண்ணுலயே பட விடமாட்டேன். பார்த்து ஜாக்கிரதையா நடந்துக்க.”

“அதையே உன் பிரெண்டு கிட்ட சொல்லிட்டு போடா,என்னை கண் கலங்காம பாத்துக்க சொல்லி. நீ சொன்ன எல்லாம் ஓகே. கடைசியா என் கிட்ட இருந்து கூட்டிட்டு போயிருவேன்னு சொன்ன பாத்தியா? அது என் பிணம் இந்த மண்ணுல விழறப்ப மட்டும்தான் நடக்கும். அதையும் நீ நல்லா ஞாபகம் வச்சுக்க”

“உன்னை திருத்தவே முடியாதுடா. சரி நான் போய் படுக்கிறேன். என்னை பேக்காப் பண்ண காலங்காத்தாலயே ப்ளைட் புக் பண்ணதெல்லாம் ரொம்ப ஓவரு வேணு.”

பலமாக சிரித்த விபா,

“டேனி, உன் கம்பேனி ஷேர்லாம்”

“என்ன? திரும்பவும் எனக்கு பிச்சையா போட போறியா? அது உன் கிட்டயே இருக்கட்டும். என் சொந்த காலுல நிக்கிறப்ப காச குடுத்து திரும்ப வாங்கிக்கிறேன். அப்ப மட்டும் ஏதாச்சும் ஆட்டம் காட்டுன, டான்யாவ விட்டு அடி பின்னிருவேன். குட் நைட் வேணு”

“குட் நைட் வைட்டு”

டேனி ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி ஒரு மாதம் ஆகியிருந்தது. தான்யா மறுபடியும் படிப்பு, வீடு, ஊர் சுற்றல் என பிசியாகி இருந்தாள்.

அன்று வழக்கத்திற்கு மாறாக விபா அவளுக்காக காலேஜ் வாசலில் காத்திருந்தான்.

“என்ன வேணு? இங்க வந்துருக்க? “

“காருக்குள்ள வா தானு. வீட்டுல ட்ரோப் பண்ணிருறேன். கொஞ்சம் பேசனும்”

கார் பயணத்தின் போது விபா கொஞ்சம் அமைதியற்று இருப்பது போல் இருந்தது தானுவுக்கு. அவன் வாயிலிருந்தே வரட்டும் என காத்திருந்தாள்.

“வீட்டுல இருந்து சாப்பாடு எடுத்து வந்திருக்கேன். அபார்ட்மென்ட் போய் சாப்பிட்டுகிட்டே பேசலாம் தானு”

“சரி வேணு”

வீட்டில் நுழைந்தவுடன்,

“வேணு, நான் போய் குளிச்சிட்டு வரேன். ஒரே டேர்ட்டியா இருக்கேன். இன்னிக்கு ஒரு பொணத்தை அறுத்து உள்ளுக்கு என்ன என்ன இருக்குன்னு காட்டுனாங்க. ஆவ்சம் தெரியுமா. குடல் அப்படியே பாம்பு மாதிரி சுத்தி சுத்தி இருக்கு. நான் தொட்டு கூட பார்த்தேன். அப்புறம் அந்த வயித்த வெட்டி காட்டுனாங்க பாரு. பென்டாஸ்டிக்!”

வாந்தி வருவது போல் சைகை செய்தவன், அவளைப் பிடித்து பாத்ரூமுக்குள் தள்ளி விட்டான்.

‘இன்னிக்கு நான் சாப்பிட்ட மாதிரி தான். ஒரு லவ்வரு வீட்டுக்கு வந்தா காதல பத்தி பேசுவாங்க. இவ குடலை பத்தில்ல பேசுறா. ஷப்பா, மத்தியானம் சாப்பிட்டதெல்லாம் வெளிய வந்துரும் போல. இதுல ஆவ்சம், பென்டாஸ்டிக் வேற’

தானு குளித்து விட்டு வருவதற்குள் மேசையை செட் செய்து மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருந்தான் விபா.

“வாவ், செம்ம லவ் மூட் போல. கேன்டல்லிட் டின்னரெல்லாம் அமர்க்களப்படுது” என தலையை துவட்டியவாறே வந்தாள் தானு.

கவர்ச்சியாக சிரித்தவன், அவள் கைப்பற்றி அழைத்து வந்து நாற்காலியில் அமர வைத்தான். தட்டை எடுத்து வைத்து உணவை பரிமாறியவன், அவள் எதிரே தானும் அமர்ந்தான். போனில் வையலின் இசையை ஒலிக்க விட்டவன், கிளாசில் ஊற்றி வைத்திருந்த லெமன் ஜீசை தூக்கி,

“சியர்ஸ் தானும்மா” என்றான்.

“வேணு கலக்கறப்போ” என சிரித்தவள் அவளது கிளாசை தூக்கி சியர்ஸ் செய்தாள்.

பின்பு அமைதியாகவே சாப்பிட்டார்கள் இருவரும். சாப்பிட்டு முடித்து ஒன்றாக மேசையை சுத்தம் செய்து, பாத்திரங்களை கழுவிவிட்டு ஹால் சோபாவில் வந்து அமர்ந்தார்கள்.

அவன் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்ட தானு, அவன் கையை அடுத்து தன் கையினுள் அடக்கி கொண்டாள்.

“ஏன் வேணு, ஒரு மாதிரியா இருக்க? என்ன விஷயம் சொல்லு”

“தானும்மா” மற்றொரு கையால் அவளது தலையை வருடி கொடுத்தவன்,

“உன் கிட்ட சொல்லி இருக்கேன்ல, அந்த சிங்கப்பூர் பிரான்ச் ஓபேனிங்? அதோட ஆரம்ப கட்ட வேலையெல்லாம் முடிஞ்சது. “

“அது சந்தோஷமான விஷயம் தானே? அதுக்கு ஏன் உம்முன்னு இருக்க?”

“எதுடி சந்தோஷமான விஷயம்? உன்னை விட்டுட்டு ஒரு மாசம் அங்க இருக்கனும். அது எனக்கு சந்தோஷமான விஷயமா?”

“இதுக்குதான் முகத்தை இப்படி வச்சிருக்கியா? ப்ரோஜேக்ட் ஆரம்பிக்கும்போதே தெரியும் தானே, எப்படியும் இது நடக்கும்னு? அப்புறம் என்ன திடீர் பீலிங்சு இப்போ?”

“இது நீ வரதுக்கு முன்ன நான் ஆரம்பிச்சது தானு. பேச்சுவார்த்தை இழுத்துருச்சு. இப்பத்தான் கூடி வந்துருக்கு. இப்ப என்னால உன்னை விட்டுட்டு போக முடியாது” சின்ன குழந்தை மாதிரி அடம் பிடித்தான் விபா.

திரும்பி அவன் முகத்தைப் பார்க்கும் மாதிரி அமர்ந்த தானு,

“இங்க பாரு வேணு, நான் உன் வாழ்க்கையில வந்த பிறகு உனக்கு முன்னேற்றம் தான் இருக்கனும். என்னால பின்னடைவு ஏற்பட்டுச்சுன்னா அது எனக்கு தான் கேவலம். அதனால நல்ல பையனா கிளம்பி போயிட்டு , நல்லபடி முடிச்சுட்டு வா. என்னிக்கு கிளம்பனும்?”

“இன்னும் ரெண்டு நாளுல. நீயும் வரியாடா?”

“உதை வாங்குவ. எனக்கு எக்சாம் இருக்கு அடுத்த வாரம். தினமும் நாம வீடியோ சாட் பண்ணலாம் வேணு. நினச்சப்ப மேசெஜ் பண்ணு. ஓகேவா? இப்ப சிரிச்ச மாதிரி முகத்தை வச்சிக்க பிளீஸ்”

“போடி! நான் தான் உன்னை விட்டுட்டு போறோம்னு கவலை படுறேன். உனக்கு கொஞ்சம் கூட கவலையே இல்ல”

அவன் முகத்தைப் பிடித்து தன் புறம் திருப்பியவள்,

“கவலை இல்லைன்னு யாரு சொன்னா? எனக்கும் உள்ளுக்குள்ள இருக்கு தான். அதை காட்டினா நீ என்ன செய்வ? கடையும் வேணாம் மண்ணும் வேணாம்னு இங்கயே இருந்துருவ. அதுக்கு தான் என் மனச கல்லாக்கி வச்சிருக்கேன். ஒரு குடும்பத்துல ரெண்டு பேரும் இமோஷனலா இருக்க கூடாது வேணு. ஒருத்தர் கொஞ்சம் கண்டிப்பா இருக்கனும். புரியுதா? இங்க வா” என அவனை ஒரு அன்னையைப் போல அணைத்து ஆறுதல் படுத்தினாள் அவள்.

“வேணு, அப்படியே தூங்கிட்டியா?”

“இல்ல, உன்னை வாசம் பிடிச்சிகிட்டு இருக்கேன். ஒரு மாசம் பார்க்க முடியாதே, அதான் உன் வாசத்தை எனக்குள்ள நிரப்பிக்கிறேன்.”

“போதும்டா வாசம் பிடிச்சது. பாவமா இருக்கியேன்னு கட்டிப்புடிச்சா அப்படியே உடும்பு பிடியா பிடிச்சுக்கிறது. இப்ப விட போறியா இல்லையா?”

“இருடி. இன்னும் கொஞ்ச நேரம் கட்டிப்பிடிச்சுக்கிறேன். ஒரு மாசம், முப்பது நாள், எழுநூத்தி முப்பது மணி நேரம் வேற யாரை கட்டிப்பிடிப்பேன் சொல்லு.”

கொஞ்ச நேரம் அவளிடம் சத்தமே இல்லை. முகத்தை நிமிர்த்தி அவளைப் பார்த்தவன்,

“ஏன்டி, இப்படி முறைக்கிற?”

“யாரை கட்டிப் பிடிப்பேன்னு என் கிட்டயே கேக்குறியா? ஏன் அங்க எவளாச்சும் அழகா இருக்காளோ ஐயா கட்டிப்பிடிக்க?”

“ஐயோ இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் வரும்னு எனக்கு தெரியலை தானுக்குட்டி. நான் பேசறதுக்கேல்லாம் மடக்கி மடக்கி கேள்வி கேட்டா எப்படிடா?”

“சரி மடக்கி மடக்கி கேள்வி கேக்கல. கைய மடக்கி நாலு குத்து அப்படி பேசுற வாயில மட்டும் குடுக்குறேன். இதுக்கு மேலயாச்சும் ஒழுங்கா பேசுறியான்னு பார்ப்போம்.”

அடிதடியில் ஆரம்பித்து சிரிப்பில் முடிந்தது அவர்களின் செல்லச் சண்டை. வயலின் இசையோடு அவர்களின் சிரிப்பு சத்தமும் அந்த வீட்டுன் மூலை முடுக்குகளை நிறைத்தது.

கோலாலம்பூர், மலேசியா.

அழைப்பு மணி சத்ததில் மதிய உறக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்தார் கற்பகம். கடிகாரம் மாலை மணி நான்கை காட்டியது.

‘யாரு இந்த நேரத்துல’

அவசரமாக முகத்தைக் கழுவி துடைத்தவர் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தார். கேட் வெளியே நின்றவரைப் பார்த்த கற்பகம் கால்கள் வேரோடி போனவராக அப்படியே சமைந்து நின்றார்.

“அத்தான்” வாய் மெல்ல முணுமுணுத்தது. இத்தனை வருடம் கழித்து அவரைப் பார்த்ததும் கண்களில் கண்ணீர் வரவா வரவா என மிரட்டியது. கண்களை சிமிட்டி சமாளித்தவர், நிமிர்வோடு கேட்டை நோக்கி சென்றார்.

“கற்பகம்”

“எப்படி இருக்கீங்க?” மெதுவாக என்றாலும் தெளிவாக வந்தது குரல்.

“உள்ளுக்கு வாங்கன்னு கூப்பிட மாட்டியா கற்பகம்?”

“என்னை மன்னிச்சிருங்க. அத்தை நம்ம கூட இல்லாட்டியும், அவங்க ஆன்மா இங்கதான் சுத்திகிட்டு இருக்கிறதா நான் நம்புறேன். அவங்க இந்த வாசப்படிய நீங்க மிதிக்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. அவங்க வாக்கை ஏன் மீறனும்? நீங்க லெச்சு வீட்டுல வெய்ட் பண்ணுங்க. நான் வரேன்.” லெட்சுமியை கூப்பிட்டு அவரை உள்ளே உட்கார வைக்க சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்ற கற்பகம், மகனுக்கு அழைத்தார்.

“தருண்”

“என்னம்மா? பதட்டமா இருக்கீங்க?”

“அவரு வந்து நிக்கிறாருடா”

“எவருமா?”

“அவருதான் உங்க அப்பா?”

“அந்த ஆளு ஏம்மா தீடீருன்னு வந்துருக்காரு? குடும்பமே சிங்கப்பூருல செட்டில் ஆகிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்”

“எனக்கு எப்படிடா தெரியும்? படபடன்னு வருதுடா”

“அம்மா! ரிலேக்ஸ். மூச்சை நல்லா இழுந்து மூனு தடவை விடுங்க.”

சொன்னதை செய்தார் கற்பகம்.

“இப்ப போய் பயப்படாம, பதட்டப்படாம பேசுங்க. நீங்க ஒன்னும் பழைய கற்பகம் இல்ல. எங்க அம்மா பாரதி கண்ட புதுமைப் பெண். ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே, ஓ ஒரு தெய்வம் படி தாண்டி வருதேன்னு பாடிகிட்டே போங்க. பயமெல்லாம் ஓடி போயிரும்”

மகன் பாடியதை கேட்டு சிரித்தவர்,

“திடீருன்னு பார்க்கவும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். இனிமே சமாளிச்சுக்குவேன். சரிடா, அப்புறம் பேசறேன்”

“சரிமா.”

கற்பகம் பக்கத்து வீட்டை அடைந்த போது, அவருக்கு காப்பி கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்தார் லெட்சுமி.

“நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க. என்னோட ஹிந்தி சீரியல் போடற டைம் ஆச்சு. கற்பு உன் வீட்டுல பார்த்துகிட்டு இருக்கேன். ஏதாச்சும் வேணுன்னா ஒரு குரலு குடு. ஓடி வந்திருறேன்” என வெளியேறினார் அவர்.

தலை குனிந்து விரல் நகத்தை ஆராய்வது போல் அமர்ந்திருந்தார் சுந்தரம்.

“சொல்லுங்க, என்ன விஷயமா வந்தீங்க?”

நிமிர்ந்து கற்பகத்தின் முகத்தை ஏறிட்டவர்,

“பிள்ளைங்க படிப்பு விஷயமா, இங்க கொஞ்சம் சர்டிபிகேட் கலேக்ட் பண்ணற வேலை இருந்துச்சு. அப்படியே உன்னையும் தானுவையும் பார்த்துட்டு போலாம்னு வந்தேன். வரணும் வரணும்னு நினைப்பேன், ஆனா எந்த முகத்தை வச்சுகிட்டு வரதுன்னு முடிவை மாத்திக்குவேன். இன்னிக்கு தான் கொஞ்சம் தைரியத்தை வரவைச்சு கிட்டு வந்தேன்”

‘இப்ப கூட மகனை பார்க்க வந்தேன்னு வாயில ஒரு வார்த்தை வரல பாரு’ எரிச்சல் வந்தது கற்பகத்துக்கு.

“பார்த்துட்டீங்கல்ல? கிளம்புங்க”

“என்ன கற்பகம் இப்படி பேசற?”

“வேற எப்படி பேசனும்னு நினைக்கறீங்க? நீங்க யாரு எனக்கு? டைவர்ஸ் ஆனவுடனே நமக்குள்ள பந்தம் விட்டு போச்சு. நீங்க கட்டுன தாலிய கூட கழட்டி சாமி படத்துல வச்சிட்டேன்”

அதிர்ச்சியாக பார்த்தார் சுந்தரம்.

“எதுக்கு இந்த அதிர்ச்சி? எப்படி இருந்தாலும் நீங்க இன்னொருத்தி புருஷனா ஆகிட்டீங்க. இன்னொருத்தி புருஷனோட தாலிய நான் ஏன் சுமக்கனும்? ரொம்ப படிச்சவராச்சே ,நீங்களே சொல்லுங்க? அது எனக்கு அவமானம் இல்லையா?”

சுந்தரம் வாயடைத்துப் போனார். பழைய வாயில்லா பூச்சி கற்பகத்தை எதிர்ப்பார்த்து வந்தவருக்கு இந்த கற்பகம் புதுமையாக தெரிந்தார். நன்றாக நிமிர்ந்து தன் முன்னாள் மனைவியை ஆராய்ச்சி பார்வைப் பார்த்தார். முடி அங்கங்கே நரைத்திருந்தாலும், முகத்தில் எந்த சுருக்கமும் இல்லாமல், அதே உடற்கட்டுடன் இருந்த கற்பகம் இப்பொழுதுதான் இவர் கண்களுக்கு தேவதையாக தெரிந்தார். உடல் ஊதி, முகத்தில் சுருக்கம் விழுந்து, முதுமையாக தெரிந்த மோனாவையும் கற்பகத்தையும் ஒப்பிட்டு பார்த்தது அவர் மனம். விட்டில் பூச்சிக்கு ஆசைப்பட்டு அழகிய கிளியின் சிறகை உடைச்சுட்டமே என மனம் வருந்தினார்.

“கற்பகம், உங்களை எல்லாம் விட்டுட்டு போய் நான் சந்தோஷமா இல்லம்மா. ரொம்ப மனக் கஸ்டத்தை அனுபவிச்சுட்டேன். எங்கம்மா சொன்ன மாதிரி அவளுக்கு நான் சம்பாரிச்சு போடும் மிசினா மட்டும் தான் இருக்கேன். ஒரு பாசம் இல்ல, ஒரு பரிவு இல்ல. நான் ரொம்ப நொந்து போயிட்டன்மா”

“உங்களுக்கு அவ கூட பிறந்தது எத்தனை பிள்ளைங்க?”

“மூனு பேர்”

‘நொந்து போனவருதான் மூனு பெத்துக்கிட்டீங்களாக்கும்’ மனதில் நினைத்தவர் வெளியே சொல்லவில்லை.

“இந்த கதையெல்லாம் இப்ப எதுக்கு என் கிட்ட சொல்லுறீங்க?”

“உன் கிட்ட சொல்லாம வேற யாருகிட்ட சொல்லுவேன் கற்பகம்? தானுவை விட்டுட்டு போன எனக்கு அதுக்கு பிறகு பிறந்த பிள்ளைங்ககிட்டயும் ஒட்ட முடியலை. ரெண்டுங்கெட்டானா தான் வாழ்ந்தேன்”

அதை சொல்லி முடிக்கும் போது, கற்பகம் எழுந்து நின்றிருந்தார். அவரின் முகத்தில் அப்படி ஒரு அருவருப்பு.

“இதை சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்ல? ரெண்டு பிள்ளைங்கல இங்க கதற விட்டவரு, அந்த பிள்ளைங்களையாச்சும் தாங்கி இருக்கனும். இங்கயும் ஒட்டாம இங்கயும் ஒட்டாம இதெல்லாம் என்னய்யா வாழ்க்கை? இப்படி பெத்த பிள்ளைங்களுக்கு பாசம் காட்டாம உங்க மனநிலைய மட்டும் பெருசா நினைச்சு சுயநலமா வாழ்ந்திருக்கீங்களே? இதெல்லாம் ஒரு பொழப்பா? உங்க மூஞ்ச பாக்கவே பிடிக்கல. தயவு செஞ்சு வெளிய போங்க.”

“கற்பகம், நான் செஞ்சதெல்லாம் தப்பா இருக்கட்டும். இப்ப திருந்தி வந்துருக்கேன். என்னை ஏத்துக்க கூடாதா? நாளைக்கு பிள்ளைங்களுக்கு கல்யாணம் காட்சின்னு வரும் போது ஒரு தகப்பனா நான் முன்னுக்கு வேணும்ல?”

“அடச்சீ! ஒரு மனஷனா உன்னையும் நினைச்சு இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தேன் பாரு. என் புத்திய செருப்பால அடிக்கனும். புருசன் செத்துப் போன பொம்பளைங்க எல்லாம் சபையில நின்னு பிள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கல? நானும் அதே போல அவங்களுக்கு பண்ணி வைக்கிறேன். இப்ப வெளிய போடா நாயேன்னு நான் சொல்லுறதுக்கு முன்னாடி, மரியாதையா வெளிய போயிருங்க.”

“கற்பகம்!!” குரல் உயர்ந்திருந்தது அவருக்கு.

“என்ன? கத்தி பேசற வேலை எல்லாம் என் கிட்ட வச்சிக்காதிங்க. போலிஸ கூப்பிட்டு ‘ஹாராஸ்மேன்ட்’ கேசுல புக் பண்ணுறதுகுள்ள கிளம்பிருங்க” ஒரே போடாக போட்டவர் கதவைத் திறந்து வீர நடை போட்டு வெளியேறினார்.

அவருக்குப் பின்னால் தலையை தொங்க போட்டுக் கொண்டு கிளம்பி சென்றார் சுந்தரம்.

error: Content is protected !!