ENE — epi 6
ENE — epi 6
அத்தியாயம் 6
ஓர விழி பார்வை தீபங்களை ஏற்றி
வைத்தது நெஞ்சோடு இன்று
தென்றல் என வந்து தொட்டு சென்ற காதல்
கலந்தது மூச்சோடு இன்று
இன்று மாலை ஆசையாக பக்கத்து வீட்டிற்கு சென்றபோது அவள் அண்ணன் தருண் தான் இருந்தான். அவன் வீட்டினுள் வருவதை மாடி அறை ஜன்னல் திரையை விலக்கி பார்த்தவள், தனது அறையைவிட்டு கீழே வரவேயில்லை.
வீக்கம் நன்றாக வற்றிவிட்டதாகவும், இனி மெதுவாக நடக்கலாம் என தருண் சொன்னவுடனே இன்று அவளை எப்படியாவது சந்நித்துவிட வேண்டும் என முடிவு செய்தான் விபாகர். அவளை பற்றி பிரபு வாயிலாக அறிந்ததிலிருந்து ஒரு தாக்கம், அவளை பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று. சந்தித்து என்ன பேசுவது, ஏது பேசுவது என்று அவன் ஒரு முடிவும் எடுக்கவில்லை. அதுவாகவே ப்ளோல வரும் என்று விட்டுவிட்டான்.
பிரபுவிடம் கொஞ்சம் வெளி வேலை இருப்பதாக சொல்லி விட்டு கிளம்ப தயாரானான் விபா. அவனிடம் இதை பற்றி சொல்ல மனம் வரவில்லை விபாவுக்கு .’அவள பற்றி அவ்வளவு சொல்லியும் நீ அடங்க மாட்டியாடா’ என அவன் கேட்டு விட்டால் முகத்தை எங்கு சென்று வைத்து கொள்வது. மெதுவாக சொல்லி கொள்ளலாம் என விட்டு விட்டான்.
“இருடா விபா, நானே உன்னை ட்ரோப் பண்ணுறேன்”
“இல்லடா பிரபு, எனக்கு ஒரு டாக்சி மட்டும் சொல்லு போதும். நாளைக்கு நான் எப்பவும் வாடகைக்கு எடுக்கிற இடத்துல கார் அனுப்ப சொல்லிட்டேன். இந்த ஒரு வாரம் உன் கூட தங்கறதுல ஆட்சேபணை இல்ல தானே? இருந்தா சொல்லிரு, நான் திரும்பவும் ஹோட்டேல் புக் பண்ணிடறேன்”
“டேய், என் வாய கிண்டாதடா. நீ எவ்வளவு நாள் வேணும்னாலும் இங்க இருக்கலாம். எங்கம்மா சமைக்கிறத மட்டும் கொஞ்சம் ஆஹா ஓஹோனு புகழ்ந்திரு. அப்புறம் பாரு, மேல இருக்கிற அறையை உனக்கே எழுதி குடுத்துருவாங்க”
“ஏன்டா சொல்லமாட்ட. ஆசையா சமைச்சி, அன்பா பரிமாற ஒரு அம்மா இருக்கிறது எவ்வளவு பெரிய பாக்கியம் தெரியுமா? அவங்க கையால விஷம் குடுத்தாலும், ரசம்னு நெனச்சிக்கிட்டே குடிச்சிருவேன்டா.”
“யப்பா சாமி, எங்கம்மா வைக்கிற ரசமே விஷம் மாதிரி தான் இருக்கும். கண்ண மூடிட்டு சாப்பிட்டடனும். இந்த ரிஸ்க் எடுக்க ரெடினா, ரூம் குடுக்க நானும் ரெடி ”
வாசலில் டாக்சி ஹான் அடிக்கும் சத்தத்தில் தான் இருவரும் அரட்டையை நிறுத்தினர்.
“சரி, சரி பார்த்து போய்ட்டு வா விபா.” என அவனை வழி அனுப்பினான் பிரபு.
KLCC மாலின் பயணிகளை இறக்கும் இடத்தில் நின்றது டாக்சி. இறங்கியவுடன், நேரே தகவல் மையத்துக்கு சென்றான் விபாகர். ஸ்டார்பக்ஸ் கபே எங்கே இருக்கிறது என விசாரித்து , அவர்கள் சொன்ன இரண்டாம் தளத்துக்கு சென்றான். கபே உள்ளே நுழையும் முன்னே அவளை கவனித்துவிட்டான் விபாகர். சிரித்த முகமாக ஆர்டர் எடுத்து, பேப்பர் கப்பில் அவர்களின் பெயர் எழுதி, பணத்தை பெற்று கொண்டிருந்தாள். அவள் அருகில் உள்ள மற்றொரு சீன பெண் பானத்தை தயார் செய்து , கப்பில் உள்ள பெயரை அழைத்து அவர்களிடம் கொடுத்து கொண்டிருந்தாள்.
மெதுவாக நடந்து அவள் முன்னே சென்று நின்றான் விபாகர். சிரித்தபடியே நிமிர்ந்து பார்த்தவள், அப்படியே சில கணங்கள் உறைந்து நின்றாள். சட்டென்று தன்னை சமாளித்தவள், மீண்டும் முகத்தில் புன்னகையை பூசிக்கொண்டே,
“குட் ஈவ்னிங் சார். உங்களுக்கு என்ன பானம் வேணும்னு சொல்லுங்க ப்லீஸ்.”
“ஒரு காபே லாட்டே குடுங்க மிஸ்’ என்றவாறே அவளது பெயர் அட்டையைப் பார்த்து விட்டு “மிஸ் டான்யா” என சேர்த்துச் சொன்னான்.
“கேக், மப்பின் ஏதாவது வேணுமா சார்?” என கஸ்டப்பட்டு சிரித்து கொண்டே கேட்டாள் தான்யா. சிரிக்கலைனா அவ சூப்பேர்வைசர் அரை மணி நேரம் நிக்க வச்சி கஸ்டமர் சர்விஸ் சரியில்லைன்னு காதை ஓட்டை போட்டுருவான்.
“மிஸ் நீங்க எது நல்லா இருக்குன்னு சொன்னாலும் நான் சாப்பிடுவேன்”
‘எலிக்கு வைக்கிற விஷம் இருக்கு அதை சாப்பிடுறியா’ என மனதினில் திட்டிக் கொண்டே,
“இங்க மப்பின் நல்லா இருக்கும் சார். ஒன்னு தரவா?”
“ஒன்னு தர போறிங்களா? ஒன்னு என்ன ஒன்பது கொடுத்தலும் நான் வாங்கிக்குவேன். அது என் பாக்கியம்” என கண்களால் சிரித்தான் விபாகர்.
‘உங்கப்பன் மவனே. என்னால இப்ப ஒன்னும் பேச முடியாதுன்னு கலாய்ச்சி பார்க்கிறியா. இருடா!!! ஒட்டகச்சிவிங்கிக்கு ஒரு காலம் வந்தா, இந்த பெண் சிங்கத்துக்கும் ஒரு காலம் வரும்.’ என நினைத்த தானுவின் மைன்டில் சிங்கம், சிங்கம்னு சூரியா பாடல் ஒலித்தது.
“சார் உங்களுக்கு எங்க ஸ்பெசல் வெனிலா மப்பின் குடுக்கிறேன். ஓகேவா? அப்படியே உங்க ஷோர்ட் நேம் ப்லீஸ்” என கேட்டாள் தான்யா.
“ஒரு வெனிலாவே, வெனிலா மப்பின் குடுக்கிறதே. ஆச்சிரியகுறி. எப்படிங்க இருக்கு கவிதை? செம்ம இல்ல. ஹிஹிஹி. கப்புல விபானு எழுதிடுங்க.” என வசீகரமாக சிரித்தவாறே பணத்தை நீட்டினான் விபாகர்.
‘இதெல்லாம் ஒரு கவிதையாடா. இப்ப நான் ஒரு கவிதை சொல்லுறேன் கேக்குறியா? ஒரு மாங்கா மடையனே, மாங்காய் சாப்பிடுகிறானே.அடடே ஆச்சரியகுறி. எப்புடி நாங்களும் சம்பந்தா சம்பந்தம் இல்லாம கவிதை சொல்லுவோம்ல’ என மனதிலே கவுண்டர் கொடுத்துக் கொண்டாள் அவள்.
பெயரை எழுதும் போது அவள் உதட்டில் ஒரு விஷம புன்னகை பூத்ததைக் கண்டான் விபா. ‘எதுக்கு சிரிக்கிறா’ என எண்ணியவாறே மப்பினை மட்டும் முதலில் பெற்று கொண்டு அவளை பார்க்குமாறு ஒரு இருக்கையை தேடி அமர்ந்து கொண்டான்.
மப்பினை மெதுவாக சாப்பிட்டு கொண்டே தன் மனதிற்கினியளை நோட்டம் விட்டு கொண்டிருந்தான். அவள் அவனை கண்டு கொள்ளவே இல்லை. சில நிமிடங்களில் “பாவி, பாவி” என யாரையோ அழைக்கும் சத்தம் கேட்டது.
‘பாவின்னு இந்த சீன பொண்ணு யார கூப்பிடுது. இந்த நாட்டுல அனைத்து இனத்தினருக்கும் தமிழ் தெரியுமோ. பரவாயில்லையே, செந்தமிழ் கொடி கட்டி பறக்குதே’ என மனதினுள் பாராட்டியவாறே தன் சைட்டை தொடர்ந்து கொண்டிருந்தான் விபா. ‘இப்ப எதுக்கு நம்ப ஆளு இப்படி வாயை மூடிகிட்டே சிரிக்கிறா’ என முன்னும் பின்னும் திரும்பி பார்த்தான் விபா.
“பாவி சார் , உங்க ட்ரிங்க் ரெடி ஆயிருச்சு” என அந்த சீன பெண் இவனை பார்த்து தான் சொல்லி கொண்டிருந்தாள்.
“பாவியா? நானா?” என அதிர்ந்து நின்றான் விபா.
“ஆமாம் சார், உங்க ஷோர்ட் நேம் தானே பாவி? நீங்க தானே காபே லாட்டே ஓர்டர் பண்ணீங்க” என கேட்டவாறே நடந்து வந்து பானத்தை அவன் இடத்தில் வைத்தவள், “என்ஜோய் யுவர் ட்ரிங்க் மிஸ்டர் பாவி” என்று சொல்லிவிட்டு திரும்பி சென்றாள்.
“ஆமா, பாவி சார் நல்லா என்ஜோய் பண்ணி குடிங்க “ என பக்கத்தில் வந்து அமர்ந்தான் பிரபு.
“நீ எப்படிடா இங்கே” என அசடு வழிந்த படியே கேட்டான் விபாகர்.
“எல்லாம் ஒரு அனுமானம் தான். கழுதை கெட்டா குட்டி சுவர். உன் குட்டி சுவரு இங்கதானே இருக்கு. அப்படி நீ இங்க இல்லைனாலும், பாப்பா பேர சொல்லி ஒரு ஓசி டீ குடிச்சிட்டு போலாம்னு வந்தேன். வந்ததுக்கு ஒரு காமடி சீன் ப்ரீயா பார்க்க முடிஞ்சது. உன்னோட கப்பை இங்க குடு. பார்த்தியா, இந்த குட்டி பிசாசு, விபான்ற உன் பெயர பாவின்னு திருப்பி எழுதி வைச்சிருக்கா.”
‘ஓஹோ, அதனால தான் மேடம் என்னை பார்த்து பார்த்து சிரிச்சாங்களோ. கொஞ்ச நேரத்தில சந்தோஷப்பட்டுட்டேனே. இவன் வேற மோப்பம் பிடிச்சிகிட்டே வந்துட்டான். அவளோட இனி எப்படி தனியா பேசறது’ என நொந்துக்கொண்டான் விபாகர்.
“பாப்பா, அண்ணனுக்கு உன் அக்கவுன்ல ஒரு டீ சொல்லு ராஜாத்தி. அதை அப்படியே உன் தோழி அந்த காந்த கண்ணழகி கிட்ட குடுத்து விடுடா”
“டேய் பிரபு, போன தடவை மாதிரி அவ கிட்டே ஓவரா வழிஞ்சி வைக்காதே. நீ போன உடனே என்னை அடி பின்னி எடுத்துட்டா. வந்தமா, குடிச்சமா, கிளம்பினமானு இரு “
“அப்படில்லாம் சொல்லப்படாது. இன்னிக்கு இந்த அண்ணனே உன்னை வீட்டுல ட்ரோப் பண்ணுறேன். உன் செக்குரிட்டி சர்வீஸ், அதான்மா அந்த டேனிகிட்ட சொல்லிரு வரவேணாம்னு. நீ வேலை முடிக்கிற வரைக்கும் நாங்க அப்படியே போய் கண்ணை கழுவிட்டு வரோம்”
“போ, போ. வந்த வேலைய போய் பாரு. சரியா பன்னிரண்டு மணிக்கு வந்துரு “ என சொல்லியபடியே தன் வேலையை கவனித்தாள் தான்யாஸ்ரீ.
அவளது வேலை முடிந்தவுடன் மூவரும் அமைதியாகவே பார்க்கிங் வளாகத்துக்கு நடந்து சென்றார்கள். பிரபு கார் திறக்கும் பட்டனை அழுத்துவதற்கு காத்திருந்ததை போல குடுகுடுவென ஓடி சென்று ஓட்டுனர் இடத்தில் அமர்ந்து கொண்டாள் தான்யாஶ்ரீ.
“விளையாடாத பாப்பா. ஒழுங்கா இறங்கு. போன தடவை ஓட்டுறன்னு சொல்லி காருல கீறல் போட்டுட்ட. “என சொல்லியவாறே அவளை கைப் பிடித்து வெளியே இழுக்க முயற்சித்தான் பிரபு. சட்டமாக அமர்ந்து கொண்டு நகர மாட்டேன் என சண்டித்தணம் செய்தாள் அவள்.
“கீய குடு பிரபு. இப்போ நல்லா ஓட்ட கத்துக்கிட்டேன். டேனி பயப்படாம அவன் கேம்ரியே குடுக்குறான். இந்த டப்பா காரை வெச்சிக்கிட்டு நீ ஓவரா சீன் போடற” என கையை நீட்டினாள்.
“குடுடா பிரபு. எவ்வளவு நேரம் தான் இப்படியே நிக்கிறது” என அவளுக்கு சிபாரிசுக்கு வந்தான் விபாகர்.
” டேய், அவளுக்கு சப்போர்ட் பண்ணாத. அப்புறம் வருத்த படுவ. எனக்கு என்ன. நீயே அவ பக்கத்துல உட்காரு. நான் பின்னால போறேன். சீட் பெல்ட்ட கண்டிப்பா போட்டுக்கடா. அவ அடிக்கிற பிரேக்குக்கு , உடம்புல உள்ள பார்ட்ஸ்லாம் பிரேக் டான்ஸ் ஆடிரும்” என புலம்பியவாறே பின்னால் அமர்ந்தான் பிரபு.
அவளருகில் அமர வைத்த பிரபுவை மனதிற்குள் வாழ்த்தியபடியே அமர்ந்தான் விபாகர்.’நீ அதிர்ஷ்டகாரண்டா விபா. அழகான ராத்திரி நேரம், பக்கத்துல உன்னோட ரசகுல்லா. கலக்குறடா’ என மகிழ்ந்து கொண்டான் . அது அதிர்ஷ்டமில்லை கூர் தீட்டிய ஆப்பு என பிறகு தான் உணர்ந்தான் அவன்.
பார்க்கிங் இடத்திலிருந்து வெளி வரும் வரை கார் ஆமை வேகத்தில் நகர்ந்தது. சாலையை அடைந்தவுடன், அவள் எண்ணெயை அழுத்திய வேகத்திற்கு கார் சீறி கொண்டு பாய்ந்தது. லேன் மாற்றி லேன் மற்ற கார்களை வெட்டிக்கொண்டே சென்றாள். அந்த சாலையின் முச்சந்தியில் இருந்த ட்ராபிக் லைட் மஞ்சள் வர்ண சமிக்ஜையை காட்டிய போது கூட வேகத்தை அவள் குறைக்கவில்லை.
“தானு!!!!!! மெதுவாடி. சிவப்பு லைட் வர போகுது வேகத்தைக் குறைடி. தானூ” என பிரபு கத்திக் கொண்டே வந்தான். சிவப்பு லைட் வந்ததும் படீரென ப்ரேக் அடித்து காரை நிறுத்தினாள். கார் டயர் க்றீச்சென்ற சத்தத்துடன் இழுத்துகொண்டு நின்றது. விபா டேஸ்போர்டில் கையை முட்டு கொடுத்து வைத்து கொண்டதால், தலையை முன்னே இடிக்காமல் காப்பாற்றி கொள்ள முடிந்தது.
பிரபு பல்லி போல் விபாகரின் முன் சீட்டை கட்டிப்பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். மற்ற கார்காரர்கள் எல்லாம் கண்டணமாக கார் ஹாரனை அழுத்தி கத்திவிட்டு சென்றார்கள்.
“நீ ஒட்டுனது போதும், இறங்கி பின்னே வா தானு. வரமாட்டேன்னு சொன்ன, உங்க அண்ணனுக்கு கோல் பண்ணிருவேன். ஓகேவா?” என மிரட்டினான் பிரபு.
“இப்ப என்ன நடந்து போச்சுன்னு அவனுக்கு கோல் பண்ண போறீங்க பிரபு அண்ணா.. பின்னால வான்னு சொன்னா வந்துட்டு போறேன் அண்ணா. இந்த பச்சா மேட்டருக்கு எல்லாம் கோச்சிக்கலாமா அண்ணா.” என பல அண்ணாக்களை போட்டு பம்மியவாறே பின்னால் சென்றாள் அவள்.
ட்ராபிக் லைட் பச்சைக்கு வருவதற்குள் சுற்றி வந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான் பிரபு. அதற்கு பிறகும் வள வள வென்று பிரபுவிடம் பேசி கொண்டே வந்தாள் தானு. பின்னால் இருந்தவாறே எக்கி வானொலியை திறந்தவள், பாடலோடு சேர்ந்து கத்தி பாடிக்கொண்டே வந்தாள். ஒரு பாடல் முடிவதற்குள் அடுத்த வானொலி நிலையத்தை மாற்றினாள். சிறிது நேரத்தில் சிடியை போட்டாள்.
“குட்டி பிசாசே. கொஞ்ச நேரம் உன் வாலை சுருட்டிகிட்டு இருக்கியா? வீட்டுக்குப் போற அரை மணி நேரத்துக்குள்ள என்னைய பைத்தியக்காரனா மாத்திராதே.” என கடிந்தவாறே வந்தான் பிரபு.
அவள் செய்யும் சேட்டைகளை பார்த்தும் பார்க்காத மாதிரி வந்தான் விபாகர். ‘இவளுக்கு இருபத்தியொரு வயது ஆக போகுதுன்னு சொன்னானே பிரபு. இன்னும் விளையாட்டுத்தனமா இருக்காளே. இவ செய்யுறத விளையாட்டுன்னு எடுத்துகிறதா, விபரீதம்னு எடுத்துகிறதா. இவள சமாளிக்கவே நான் இன்னும் ரெண்டு மடங்கா சாப்பிடனும் போல’ என எண்ணிக்கொண்டான்.
வீட்டை அடைந்தவுடன் காரை உள்ளே பார்க் செய்துவிட்டு கதவை திறக்க சென்றான் பிரபு.
“என்ன பாஸ், பயந்துட்டிங்களா? என்னை நெருங்கி வந்தா என்ன நடக்கும்னு ஒரு சின்ன சாம்பிள தான் இன்னிக்கு காட்டினேன். என் கிட்டே இருந்து எப்பவும் எட்டியே நிக்கிறது தான் உங்களுக்கு நல்லது. வரட்டா” என ஒரு சல்யூட்டை வைத்துவிட்டு பிரபு வீட்டு மதில் மேல் ஏறி அவள் வீட்டுக்கு குதித்தாள் தான்யாஸ்ரீ.
‘இனிமே தான் என் வாழ்க்கை சுவாரசியமா போக போகுது’ என என்ணியவாரே புன்னகையுடன் அவள் செல்வதை பார்த்து கொண்டிருந்தான் விபாகர்.
எட்டி நில்லு…..